இவ்வுரையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாடு (AI skill development) மற்றும் போட்டித் தேர்வுப் பயிற்சி (coaching for competitive exams) உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டன. முக்கிய அறிவிப்புகள் மற்றும் அவை குறித்த தற்போதைய தகவல்களை குறித்து கீழே குறிப்பிட்டுள்ளது.
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI), குறைமின்கடத்திகள், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் தொடர் நடவடிக்கைகளை அறிவித்தார். இவற்றில் பல நடவடிக்கைகள் ஏற்கனவே உள்ள அரசுத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்லது முன்னரே அறிவிக்கப்பட்ட இலக்குகளை மீண்டும் வலியுறுத்துபவை ஆகும்.
இந்த உரை முழுவதும் இளைஞர்கள் குறித்த கவனம் தொடர்ந்து இடம்பெற்றது. செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாடு, போட்டித் தேர்வுப் பயிற்சி மற்றும் விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
"அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், 'சப்ததாரா' (Saptadhara), அதாவது ஏழு நீரோட்டங்கள் அல்லது ஏழு முக்கியப் பாதைகள் என்ற சிந்தனையுடன் முன்னேற வேண்டும்," என்று கூறிய மோடி, கவனம் செலுத்த வேண்டிய துறைகளாக உற்பத்துறை (Manufacturing), வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தி (Agriculture and Food Production), தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் (Technology and Innovation), உள்கட்டமைப்பு (infrastructure), பாதுகாப்பு (defence), பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் (green and blue economy) மற்றும் மென்ஆற்றல் (soft power) ஆகியவற்றை முக்கியக் கவனத்திற்குரிய துறைகளாகக் குறிப்பிட்டார்.
சப்ததாரா (Saptadhara)
பிரதமர் மோடி, அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் அரசின் தற்போதைய பல கொள்கை முன்னுரிமைகளை ஒன்றிணைக்கும் ஒரு கட்டமைப்பாக, 'சப்ததாரா' அல்லது வளர்ச்சியின் ஏழு நீரோட்டங்கள் என்று அவர் குறிப்பிட்டதை கோடிட்டுக் காட்டினார். அவையாவன : உற்பத்தித் துறை, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் மென்ஆற்றல் ஆகும்.
உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, செலவு, தரம் மற்றும் உற்பத்தி அளவு (scale) ஆகியவற்றிற்குப் பிரதமர் முக்கியத்துவம் அளித்தார். தொழில்நுட்பத் துறையின்கீழ், விண்வெளி (space), குவாண்டம் (quantum), ரோபோடிக்ஸ் (robotics) மற்றும் 6ஜி உள்ளிட்ட துறைகளை அவர் குறிப்பிட்டார். அதேசமயம், உள்கட்டமைப்புத் துறையில் அதிவேக இரயில், நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் துறைமுகங்களை மையமாகக் கொண்ட மேம்பாடு ஆகியவை அடங்கும்.
ஆளில்லா விமானங்கள், அதிவேக தொழில்நுட்பங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு (cybersecurity) உள்ளிட்ட பாதுகாப்புத் தற்சார்பு, மற்றும் பசுமை உற்பத்தி, மீன்வளம், கடலோரச் சுற்றுலா உள்ளிட்ட பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றை அந்த ஏழு முக்கியத் துறைகளில் அவர் அடையாளம் காட்டினார்.
போட்டித் தேர்வுகளுக்கான இலவச இணையவழிப் பயிற்சி
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அரசு இலவச இணையவழிப் பயிற்சி வழங்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். எந்தெந்தத் தேர்வுகள் உள்ளடக்கப்படும், தகுதி மற்றும் பயிற்சி எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தனியார் பயிற்சி மையங்களைச் சார்ந்திருப்பது அதிகரித்துவரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அரசாங்கக் கணக்கெடுப்பில், இந்தியா முழுவதும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களில் 37% பேர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்ததாகவும், நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 44.6%-ஆக உயர்ந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டது. நகர்ப்புற மாணவர்கள் பயிற்சி மையங்களுக்காக ஆண்டுக்குச் சராசரியாக ரூ.9,950 செலவிடுகின்றனர். இது கிராமப்புற மாணவர்கள் செலவிடும் ரூ.4,548-ஐவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். இந்த வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் ஆண்டு நுகர்வுச் செலவில் இது 9 முதல் 12% வரை இருக்கலாம் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சகமும், ஐஐடி கான்பூரும் (IIT Kanpur) இணைந்து 2023-ல் தொடங்கிய 'SATHEE' திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே நடத்தி வருகிறது. இத்திட்டம் JEE, NEET, CUET மற்றும் SSC உள்ளிட்ட தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சியையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
நீட்-யுஜி 2026 தேர்வுத்தாள் கசிவு எனக் கூறப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள், போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு எதிரான ஒரு பரந்த போராட்டமாக உருவெடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி
அடுத்த ஆண்டுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதன் மூலம் அவர்கள் பின்தங்கிவிடக் கூடாது என்றும் பிரதமர் கூறினார்.
அரசு தற்போது பள்ளிகள், உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்தி வருகிறது. இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் (IndiaAI Mission) கீழ், இந்தியாAI ஃபியூச்சர்ஸ்கில்ஸ் (IndiaAI FutureSkills) திட்டமானது, செயற்கை நுண்ணறிவுப் படிப்புகள், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான ஆய்வு உதவித்தொகைகள், அத்துடன் சிறிய நகரங்களில் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களையும் வழங்குகிறது.
2025 நவம்பரில், செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படைப் புரிதலை வழங்கும் நோக்கில், 'அனைவருக்குமான யுவா செயற்கை நுண்ணறிவு' (YUVA AI for ALL) என்ற இலவச அடிப்படைப் பாடத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டமே ஒரு கோடி குடிமக்களைச் சென்றடைவதை இலக்காக நிர்ணயித்திருந்ததால், இந்த ஒரு கோடி என்ற எண்ணிக்கை முற்றிலும் புதியதல்ல.
குறைமின்கடத்தி (Semiconductor) ஆலைகள்
மத்திய அரசு ஆறு மாநிலங்களில் ரூ. 1.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டில் 12 குறைமின்கடத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் உற்பத்தி வசதிகள் மற்றும் குறைமின்கடத்தி ஒருங்கிணைப்பு, சோதனை, பேக்கேஜிங் (packaging) ஆகியவற்றுக்கான அலகு நிலையங்கள் அடங்கும். இவற்றில் மூன்று திட்டங்கள் வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
"வரும் ஆண்டுகளில்" ஐந்து முதல் எட்டு குறைமின்கடத்தி ஆலைகள் செயல்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி சனிக்கிழமை தெரிவித்தார். இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல திட்டங்கள் உற்பத்தியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பிரதமர் குறிப்பிட்ட ஆலைகள், புதிய ஒப்புதல்களைவிட, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களாகவே தெரிகின்றன.
விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறியும் முயற்சி
பல்வேறு விளையாட்டுத் துறைகளில் உள்ள இளம் வீரர்களைக் கண்டறியும் நோக்கில், ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நாடு தழுவிய திறமையாளர் கண்டறியும் முயற்சியை பிரதமர் அறிவித்துள்ளார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்கத் தயாராகி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக்கில் நடைபெறும் 300-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை என்றும், 2036-ம் ஆண்டுக்குள் இந்தப் பிரிவுகளில் பங்கேற்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மத்திய அரசு ஏற்கனவே கேலோ இந்தியா (Khelo India) திட்டத்தின்கீழ் திறமையாளர்களைக் கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், ஆற்றல் மிக்கவர்கள் என அடையாளம் காணப்பட்ட விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியும் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்தத் திறமை புதிய திறமையாளர் கண்டறியும் முயற்சி எவ்வாறு செயல்படும் என்பது குறித்தும், அது தற்போதுள்ள கேலோ இந்தியா கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்குமா என்பது குறித்தும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு : சுய விவரப் பதிவு
தற்போது நடைபெற்றுவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், குறிப்பாக மக்கள் தங்கள் குடும்ப விவரங்களை இணையவழியில் பூர்த்தி செய்ய அனுமதிக்கும் சுய கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தி, தங்கள் குடும்பத்தினர் பங்கேற்க இளைஞர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
2027-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு, 15 நாட்களுக்குத் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமான, வீடுகளின் பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும்.
தற்போது, அசாமில் ஆகஸ்ட் 2 முதல் 16 வரை சுய கணக்கெடுப்பும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17 முதல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் ஆகஸ்ட் 17 அன்று சுய கணக்கெடுப்பு (self-enumeration) தொடங்கும்.
இரண்டாம் கட்டமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பிப்ரவரி 2027-ல் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதில் சாதிவாரியான கணக்கெடுப்பும் அடங்கும்.