அடுத்த இந்தியா-வங்கதேச கங்கை நதிநீர் ஒப்பந்தம், கங்கையை பாதுகாப்பதாகவும் அமைய வேண்டும். - முகமது சர்வார் ஹொசைன்

அவ்வாறு செய்யத் தவறினால், இந்தப் புனித நதியைத் தங்களின் வாழ்வாதாரமாகக் நம்பியிருக்கும் அனைவருக்கும் போதுமான தூய்மையான நீர் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படும்.


1996-ஆம் ஆண்டின் கங்கை நீர் ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இது இந்தியா-வங்கதேச உறவுகள் தொடர்பான விஷயம் மட்டுமல்ல.  தெற்காசியாவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் எல்லை தாண்டிய நதிநீர் நிர்வாகம் குறித்தான பரந்த விவாதங்களுக்குரிய பொருளாகவும் மாறியுள்ளது. இருநாடுகளுக்கிடையே அரசியல் பதற்றங்களும், கங்கைப் படுகையில் சுற்றுச்சூழல் அழுத்தங்களும் அதிகரித்துவரும் சூழலில் இந்த ஒப்பந்த காலம் முடிவடைகிறது. காலநிலை மாற்றம் தீவிரமடைந்து நீர் தேவைகளும் அதிகரித்து வருவதால், கோடைக்காலங்களில் நதியின் நீர்வரத்து குறித்து எல்லைக்கு இருபுறமும் மீண்டும் கவலைகள் எழுந்துள்ளன.


இந்தியாவுடனான தங்களின் எதிர்கால உறவு கங்கை நீர் ஒப்பந்தத்தை மட்டுமே பொறுத்தது என்று வங்கதேச தேசியக் கட்சி அண்மையில் அறிவித்துள்ளது. இதிலிருந்து இருநாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவில் இது எவ்வளவு முக்கியமான தருணம் என்பது தெளிவாகிறது. இருப்பினும், நதிநீர் பங்கீடு மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மீது மட்டுமே முழுக்கவனமும் செலுத்தப்படுவதால், "நதியின் ஆரோக்கியம்" என்ற மற்றொரு முக்கியமான விஷயம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தற்போதுள்ள பல நீர்-பகிர்வு ஒப்பந்தங்களின் அடிப்படை சூழல்களே மாறி வருகின்றன. மேலும், கங்கை நதி அமைப்பால் இன்னும் எவ்வளவு சூழலியல் அழுத்தத்தைத் தாங்க முடியும் என்கிற கேள்விய எழுந்துள்ளது. 





புவிவெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தெற்காசியாவும் ஒன்று என்று காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC)) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது. விரைவான மக்கள்தொகை பெருக்கம், வறுமை, நீர் பற்றாக்குறை, பலவீனமான நிர்வாகம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான எல்லைத் தாண்டி பாயும் ஆறுகள் குறித்த அதிகரிக்கும் பதற்றங்கள் ஆகியவை இந்த நிலையை மேலும் தீவிரமாக்குகின்றன. தெற்காசியாவைப் போல ஆறுகளால் இவ்வளவு ஆழமாக வடிவமைக்கப்பட்ட பிராந்தியங்கள் உலகில் மிகக் குறைவு. கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா ஆகிய அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக இங்குள்ள நாகரிகங்கள், பொருளாதாரங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஆதரித்து வருகின்றன.


காலநிலை மாற்றம் ஏற்கனவே இமயமலைப் பனிப்பாறைகள், பருவமழையின் போக்குகள் மற்றும் பிராந்தியத்தின் நதிநீரோட்டத்தைப் பாதித்து வருகிறது. அதேவேளையில், மீன்பிடித்தல், வெள்ளப்பெருக்கு, உவர்நீர் பிரச்சனை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நதி வடிநிலப் பகுதியிலும் சுற்றுச்சூழல் சார்ந்த அழுத்தங்கள் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடைக்காலத்தில் பாயும் கங்கை நதி உட்பட இப்பகுதியில் உள்ள பல முக்கிய ஆறுகள், அபாயகரமான சுற்றுச்சூழல் எல்லைகளை நெருங்கி வருவதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. காலநிலை அழுத்தம், நதிநீரியல் மாற்றம் மற்றும் நதியின் மேல்பகுதியில் நீரை வேறு திசைக்கு திருப்புதல் ஆகியவற்றின் காரணமாக நதிகளின் நீர்வரத்து குறைந்துள்ளது. இது நீர்நிலைகளில் உப்புத்தன்மை அதிகரிப்பதற்கும், வேளாண்துறை அழுத்தத்திற்கும், நீர்வாழ் சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் மற்றும் நதியைச் சார்ந்த மீன்பிடித்தல் குறைவதற்கும் வழிவகுத்துள்ளது.


ஆறுகள் எல்லைகளைத் தாண்டிப் பாய்வதால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் நீர் நெருக்கடி என்பது விரைவில் ஒரு பிராந்திய பிரச்சனையாக மாறிவிடுகிறது. கங்கை-பிரம்மபுத்திரா-மேக்னா வடிநிலப் பகுதி முழுவதிலும், குறையும் நதி நீர்வரத்தும் மற்றும் அதிகரிக்கும் உப்புத்தன்மையும் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கதேசத்தின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வங்காள விரிகுடாவில் இருந்து வரும் கடல்மட்ட உயர்வை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்தியா மற்றும் வங்கதேசம் இணைந்து பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடான சுந்தரவனக் காடுகளைப் பாதுகாப்பதற்கும், நதிகளில் தொடர்ந்து நன்னீர் பாய்வது மிகவும் அவசியமாகும்.


அதேவேளையில், தொழிற்சாலைக் கழிவுகள், கழிவுநீர் மற்றும் வேளாண் கழிவுநீரால் ஏற்படும் மாசுபாடு தெற்காசியா முழுவதிலும் உள்ள நதி அமைப்புகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. இது நதி மேலாண்மையில் வலுவான பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. நதி நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், நதிகளுக்கும் அருகிலுள்ள சதுப்பு நிலங்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைத்துள்ளன. பருவகால வெள்ளப்பெருக்கு குறைவதால் ஊட்டச்சத்துக்களின் பரிமாற்றம் மற்றும் உயிரினங்களுக்கான வாழிடங்களின் கிடைக்கும் தன்மை கட்டுப்படுத்தப்படுகின்றன. இது பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிப்பதுடன், கார்பனைச் சேமித்து வைத்து பருவநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்கும் சதுப்பு நிலங்களையும் பலவீனப்படுத்துகிறது.


நதி அமைப்புகளில் ஏற்படும் இத்தகைய பாதிப்புகள் இந்தியாவிற்குள்ளும் தெளிவாகத் தெரிகின்றன. பாட்னா மற்றும் பாகல்பூர் இடையே நதியின் மேல் பகுதியில் வண்டல் மண் படிவதால், பீகாரின் சில பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிப்பதற்கு ஃபராக்கா தடுப்பணையே (Farakka Barrage) காரணம் என்று இந்திய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மண் படிவு நதியின் நீர்க் கொள்ளளவைக் குறைத்து, பலத்த மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கை மேலும் தீவிரமாக்குகிறது. கங்கை நதி ஒரு காலத்தில் அதிக அளவில் வண்டல் மண்ணைக் கொண்டு வந்து, வெள்ளச் சமவெளிகளை பராமரிக்க உதவியது. ஆனால், இப்போது ஃபராக்கா தடுப்பணை இந்த வண்டல் மண்ணில் பெரும்பகுதியை மேல் பகுதியிலேயே தேக்கிவைத்து, ஒரு பெரிய சமநிலையின்மையை உருவாக்கியுள்ளது. மேல் பகுதியில் வண்டல் மண் படிவது வெள்ள அபாயத்தை அதிகரிக்கும் வேளையில், கீழ்ப் பகுதியில் வண்டல் மண் பற்றாக்குறை ஏற்படுவது டெல்டா பகுதியைப் பலவீனப்படுத்தி, அரிப்பு மற்றும் கடல்மட்ட உயர்வால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றுகிறது. அதிகரித்துவரும் ஆற்றங்கரை அரிப்பு, நிலச்சரிவு மற்றும் வாழிட இழப்பு ஆகியவை இப்போது நதியின் நீண்டகால நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

மேற்கு வங்கத்தில், மீன் வளம் — குறிப்பாக 'ஹில்சா' (Hilsa) மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, துர்க்கா பூஜை மற்றும் ஜமாய் சஷ்டி போன்ற பண்டிகைகள் உட்பட மக்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சார பாரம்பரியத்தையும் தொடர்ந்து பாதித்து வருகிறது. ஃபராக்கா தடுப்பணை மீன்களின் இயற்கை புலம்பெயர்வுப் பாதைகளைத் தடுக்கிறது. ஒரு காலத்தில் கங்கைச் சமவெளி முழுவதிலும் பொதுவாகக் காணப்பட்ட ஹில்சா மீன்களின் இடப்பெயர்வு குறைந்துபோனது, சூழலியல் மற்றும் மீன்வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவைக் காட்டுகிறது. ஃபராக்கா தடுப்பணை கங்கை டால்பின், முதலை மற்றும் பல மீன் இனங்களின் வாழிடங்களையும் சூழலியல் தொடர்பையும் சீர்குலைத்துள்ளதால், பல்லுயிர் இழப்பு மற்றும் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துள்ளது.


கங்கை என்பது ஒரு வெறும் நதி மட்டுமல்ல; அது பல லட்சக்கணக்கான மக்களுக்கும், எண்ணற்ற உயிரினங்களுக்கும் வாழ்வாதாரம் அளிக்கும் ஒரு வாழும் அமைப்பாகும். அதன் சூழலியல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு, அறிவியல்ரீதியான கொள்கைகள், பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, மற்றும் நிலையான நதி மேலாண்மைக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவை அவசியமாகின்றன.


ஆற்றுநீர்ப் பயன்பாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு "பாதுகாப்பான செயல்பாட்டுத் தளம்" (Safe Operating Space) என்ற புதிய கருத்தை அறிமுகப்படுத்துவது ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கும். வங்கதேச தொழில்சார் பல்கலைக்கழகம், பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் 'Riverine People' அமைப்பினருடன் சேர்ந்து நான் தலைமை தாங்கிய ஒரு சர்வதேச ஆய்வே, கங்கை டெல்டாவில் உள்ள முக்கிய ஆறுகளுக்கான 'பாதுகாப்பான செயல்பாட்டுத் தளத்தை' முதன்முதலில் வரையறுத்த ஆய்வாகும். எங்களுடைய ஆய்வில், வங்கதேச டெல்டாவில் உள்ள பத்து முக்கிய ஆறுகளில் நான்கு ஆறுகள் இந்த எல்லைப் பாதுகாப்பைத் தாண்டிவிட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆறுகளின் நீர்வரத்து கணிசமாக மாற்றமடைந்துள்ளது. மீதமுள்ள ஆறு நதிகள் எச்சரிக்கையான நிலையில் உள்ளன. எல்லை தாண்டிய நீர் மேலாண்மைக் கொள்கைகளை உருவாக்குவதற்கும், வங்கதேசம் மற்றும் தெற்காசியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளைத் தாங்குவதற்கும் தேவையான முக்கிய அறிவியல் ஆதாரங்களை இந்த ஆய்வு வழங்குகிறது. நீர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யும்போது கருத்தில்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.


இறுதியாக, நீர் பயன்பாட்டுக்காக பகிர்ந்து கொள்ளப்படும் ஆறுகள் புவிசார் அரசியல் பதற்றங்களுக்குக் காரணமாக மாறாமல், பிராந்திய அமைதிக்கான ஆதாரமாக இருப்பதை உறுதிசெய்வது முக்கியமாகும். அதேவேளையில், வரும் ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ஆற்றின் இயற்கை வளத்தை வலுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், தங்கள் வாழ்வாதாரத்திற்காக நதியை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சுத்தமான நீரின் அளவு குறைந்துபோகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். 


முகமது சர்வர் ஹொசைன், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Original Link:  The next India-Bangladesh Ganges treaty must also protect the river.

Share:

2030-ஆம் ஆண்டுக்குள் 'கார்பன் உமிழ்வில்லா நிலை' என்கிற இலக்கை நோக்கி இந்திய இரயில்வேதுறை எவ்வாறு முன்னேறி வருகிறது? -கண்ணன் கே

இரயில்வேதுறையின் கார்பன் உமிழ்வைக் குறைப்பது இந்தியாவின் காலநிலை இலக்குகள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். கார்பன் உமிழ்வைக் குறைக்கப் பின்பற்றப்படும் முதன்மை உத்திகள் யாவை? மேலும், இந்த மாற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடிய சவால்கள் என்னென்ன?


இந்திய இரயில்வே நாட்டின் மிகப்பெரிய மின்சார நுகர்வோரில் ஒன்றாகும்.  இது நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் சுமார் 2 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. எனவே, இந்திய ரயில்வேயின் கார்பன் உமிழ்வைக் குறைப்பது, இந்தியாவின் காலநிலை மாற்ற இலக்குகள், நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் பரந்த அளவிலான வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய இரயில்வே தனது பரந்த இரயில்பாதை (Broad-gauge) வலைப்பின்னலில் 99.6 சதவீதத்தைப் மின்மயமாக்கி, 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில்லா நிலை (Net-zero carbon emitter) என்ற இலக்கை அடையத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், டீசல் மற்றும் பிற பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து முழுமையாக மின்சார இயங்குவிசைக்கு மாறுவது என்பது, உட்கட்டமைப்பு, மின்சாரம் கொள்முதல் செய்தல், இரயில் இயக்க முறைகள், நிதி மேலாண்மை மற்றும் பிற துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.






இந்திய இரயில்வேயின் 'கார்பன் உமிழ்வில்லா நிலை' இலக்கின் உத்திசார்ந்த முக்கியத்துவம் என்ன? கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முக்கிய உத்திகள் யாவை, மேலும் இந்த மாற்றத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன?


ரயில்வேயின் '’உமிழ்வில்லா' இலக்கினால் கிடைக்கும் நன்மைகள்


2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவரும் நிலையில், இந்திய இரயில்வேதுறை மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது. 68,000 கிலோமீட்டருக்கும் அதிகமான இரயில் பாதைகளைக் கொண்டுள்ள இந்திய இரயில்வே, நாட்டின் சரக்குப் போக்குவரத்து வலையமைப்புகளின் அடித்தளமாகத் திகழ்வதோடு, கோடிக்கணக்கான மக்களுக்குப் பாதுகாப்பான, நம்பகமான பயண வசதியையும் வழங்கி வருகிறது.


வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள், ரயில் சேவைகளையும் பயண அனுபவத்தையும் மேம்படுத்தி வருகின்றன. அதேவேளையில், சரக்குகளுக்கெனத் தனியாக அமைக்கப்பட்ட விரைவுப் பாதைகள் (Dedicated Freight Corridors (DFCs)) பொருட்கள் விரைவாக சென்றுசேர உதவுகின்றன. இந்த மேம்பாடுகளுடன் இணைந்து, இந்திய ரயில்வே 2030-ஆம் ஆண்டிற்குள் 'கார்பன் உமிழ்வில்லா நிலை' (Net-zero carbon emissions) என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கானது இரயில்வேதுறைக்கு மட்டுமின்றி, இதர விஷயங்களிலும் பல நன்மைகளைத் தரக்கூடியது.


காலநிலை உறுதிமொழிகள்: இரயில்வேதுறையின் கார்பன் உமிழ்வைக் குறைப்பது, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் இந்தியா புதுப்பித்துள்ள தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கு ஆதரவாக அமையும். இதன்படி, 2005-ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடும்போது, 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு செறிவை (Emission intensity) 45 சதவீதம் அளவிற்கு குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் உமிழ்வு செறிவு என்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒவ்வொரு அலகு மதிப்பிற்கும் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறிப்பதாகும்.

எரிசக்திப் பாதுகாப்பு: டீசல் இரயில்களில் இருந்து மின்சார இரயில்களுக்கு மாறுவது, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலையை இந்தியாவுக்குக் குறைக்கும். மேலும், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கம் போன்ற சர்வதேச மோதல்களால் ஏற்படும் உலகளாவிய எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகளில் இருந்து நாட்டிற்குப் பாதுகாப்பையும் அளிக்கும். இரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதிக விலையுள்ள இறக்குமதி டீசலுக்குப் பதிலாக உள்நாட்டு மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்திய இரயில்வேதுறைக்கு எரிபொருள் செலவில் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் முதல் 15,000 கோடி ரூபாய் வரை குறையும் என்றும் கூறப்படுகிறது.


சுற்றுச்சூழல் நன்மைகள்: சரக்கு இரயில்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்வதில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் நன்மைகள் உள்ளன. லாரிகள் போன்ற சாலைப் போக்குவரத்து மூலம் பொருட்களை எடுத்துச் செல்வதைவிட, இரயில் மூலம் எடுத்துச் செல்லும்போது கார்பன் உமிழ்வு 89 சதவீதம் அளவுக்குக் குறைகிறது. எனவே, தொழிற்துறை விநியோகச் சங்கிலிகளில் இரயில் மூலமாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, இந்தியா தனது கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைய முடியும்.


உள்கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மையை நவீனமயமாக்குதல்


இருப்பினும், 'உமிழ்வில்லா' நிலையை அடைவதற்கு, இந்திய இரயில்வே சிறிய அளவிலான செயல்திறன் மேம்பாடுகளுடன் நின்றுவிடாமல், அதன் கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். இரயில் பாதைகளில் ஏறக்குறைய 99.6 சதவீதம் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டதால், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை, மின்சாரத்திற்குத் தூய்மையான எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துவதாகும்.


மிக முக்கியமான உட்கட்டமைப்பு மாற்றம் என்பது, தூய்மையான எரிசக்தியை இரயில்வே செயல்பாடுகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதாகும். இந்திய இரயில்வே தரையில் அமைக்கப்படும் மற்றும் கூரைகளில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்உற்பத்தி வசதிகளை மேம்படுத்தி வருகிறது. மேலும், அதிக திறன் கொண்ட மேல்நிலை மின்சாரக் கம்பிகளை நிறுவுதல், இரயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகளைப் பசுமைக் கட்டிடங்களாக மாற்றுதல், மற்றும் நிலையான கழிவு மற்றும் நீர் மேலாண்மை முறைகளைப் பின்பற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.


இரயில்வேயின் அன்றாட இயக்கத்தில், டீசல் மின்னாக்கிகளைப் (ஜெனெரேட்டர்) பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் 'End-on-Generation' (EoG) ஆற்றல் பெட்டிகளுக்குப் பதிலாக, மேல்நிலை மின்சாரக் கம்பிகளிலிருந்தே நேரடியாக மின்சாரத்தை இழுத்துப் பயன்படுத்தும் 'Head-on-Generation' (HoG) அமைப்புகள் மாற்றப்பட்டு வருகின்றன. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ மற்றும் வந்தே பாரத் போன்ற முக்கிய  இரயில்கள் ஏற்கனவே முழுமையாக இந்த 'Head-on-Generation' (HoG) முறைக்கு மாறிவிட்டன. அதேநேரத்தில் பிற விரைவு மற்றும் அஞ்சல் இரயில்களிலும் இத்தொழில்நுட்பம் மாற்றப்பட்டு வருகிறது.


EoG (End-on-Generation): ரயிலின் கடைசியில் தனிப் பெட்டியில் (Power Car) பெரிய டீசல் மின்னாக்கிகளை வைத்து, ரயில் பெட்டிகளுக்கு (ஏசி, விளக்குகள், மின்விசிறிகள்) மின்சாரம் தயாரிக்கும் பழைய முறை.


HoG (Head-on-Generation): ரயிலை இழுக்கும் என்ஜினே மேலிருக்கும் மின்சாரக் கம்பியிலிருந்து (Overhead Wires) மின்சாரத்தை நேரடியாகப் பெற்று, ரயில் பெட்டிகளுக்கும் பகிர்ந்து அளிக்கும் புதிய, மாசு ஏற்படுத்தாத முறை.


இந்த மாற்றமானது பெருமளவிலான எரிபொருளைச் சேமிப்பதுடன், அதற்கான செலவுகளையும் வெகுவாகக் குறைக்கிறது. மேலும், ரயிலின் இரு முனைகளிலும் டீசல் ஜெனரேட்டர் பெட்டிகள் தேவையில்லை என்பதால், 'Head on Generation' (HoG) முறை பயணியர் இருக்கைகளின் எண்ணிக்கையையும் உயர்த்துகிறது. அதுமட்டுமன்றி, அதிக எடையுள்ள சரக்குகளை அதிவேகத்தில் கொண்டு செல்ல உதவும் பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் மூலம் இந்திய இரயில்வேயின் ஒட்டுமொத்தச் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.


நிதி ஆதாரங்களைப் பொறுத்தவரையில், இந்திய இரயில்வேத் துறை வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட சந்தைக் கடன்கள் (Off-budget market borrowings), இரயில்வே ஆற்றல் மேலாண்மை நிறுவனம் (Railway Energy Management Company Limited (REMC Ltd)) மூலமாகத் தனியார் துறையின் பங்களிப்பு, மற்றும் பசுமைப் பத்திரங்கள் (Green bonds), சர்வதேச நிதி நிறுவனங்களுடனான கலப்பு நிதிப் பங்குகள் போன்ற நிதியியல் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறது. இரயில்வேயின் செயல்பாடுகளை நிதிரீதியாக மேலும் திறம்படச் செய்வதையே இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முக்கிய உத்திகள் யாவை?


இந்திய இரயில்வே கார்பன் உமிழ்வில்லா நிலை இலக்கை அடைவதற்கான உத்தி, ஒன்றோடொன்று தொடர்புடைய, தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது:


1. முழுமையான மின்மயமாக்கல், இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவைக் குறைக்கிறது, தொடர்வண்டிகளின் போக்குவரத்துத் திறனை உயர்த்துகிறது மற்றும் நச்சு வாயு உமிழ்வை முற்றிலுமாகக் ஒழிக்கிறது. இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் தங்களின் இரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்கியுள்ளன. வணிகப் பயன்பாட்டில் உள்ள பிற இரயில் பாதைகள் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கும் அகலப் பாதைகளாக (BG) மாற்றப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பாரம்பரியச் சிறப்புமிக்க இரயில் பாதைகள் ஹைட்ரஜன் எரிபொருள் அல்லது மின்கலன் மூலம் இயங்கும் அமைப்புகளாக மாற்றப்படுகின்றன.


2. இந்திய இரயில்வேக்கு 2029–30-ஆம் ஆண்டிற்குள் சுமார் 8,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேவையைச் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் பூர்த்தி செய்ய, 2030-ஆம் ஆண்டிற்குள் 30,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. நிலப்பரப்பில் அமைக்கப்படும் சூரியஒளி மின் நிலையங்கள், இரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரியஒளி மின்தகடுகள் மற்றும் கடலோரக் காற்றாலைகள் மூலம் இந்த ஆற்றல் பெறப்படும்.


3. மின்மயமாக்கல் சாத்தியமில்லாத வழித்தடங்களான சில கிளை ரயில் பாதைகள் (Spur lines) மற்றும் பாரம்பரிய வரலாற்று வழித்தடங்கள் (Heritage routes) போன்ற இடங்களில் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தப்படும். 'பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்' (Hydrogen for Heritage) என்ற புதிய முயற்சியின்கீழ், டீசல் இரயில்கள் எரிபொருள் கலன்களைக் (Fuel cells) கொண்டு பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மின்கம்பிகளை அமைக்க முடியாத இடங்களில் பெட்ரோலிய எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், இந்திய ரயில்வே 5 சதவீதம் உயிரி டீசல் கலவைகளை (B5) பயன்படுத்தி வருகிறது.


4. 100-க்கும் மேற்பட்ட முக்கிய இரயில் நிலையங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் இயற்கை வழி குளிர்ச்சி முறை (Passive cooling) போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக, இந்தியப் பசுமைக்கட்டிடக் குழுமம் - இந்தியத் தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry-Indian Green Building Council (CII-IGBC)) அல்லது ஆற்றல் திறன் பணியகத்தின் (Bureau of Energy Efficiency (BEE)) தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளன. மேலும், இரயில்வே உற்பத்தி பிரிவுகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தியை ஊக்குவிக்கும் ‘GreenCo’ மதிப்பீட்டு அமைப்பின்கீழ் கொண்டு வரப்படுகின்றன.


5. இந்திய இரயில்வே நிதிக் கழகம் (Indian Railway Finance Corporation (IRFC)), இரயில் பாதை மின்மயமாக்கல் மற்றும் இரயில் வழித்தடங்களைப் புதுப்பித்தல்  ஆகிய திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட பசுமை நிதி வசதிகளைப் பயன்படுத்தி வருகிறது. இதற்காக சர்வதேச சந்தைகளில் வழக்கமான பசுமைப் பத்திரங்களையும் வெளியிடுகிறது. மேலும், நிலையான மற்றும் சாதகமான விலையில் பசுமை மின்சாரத்தைப் பெறுவதற்காக, நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களையும் பயன்படுத்தி வருகிறது.


செயல்திறன்மிக்க அமலாக்கத்திற்கான கொள்கை கட்டமைப்பு


கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இந்த முயற்சியானது, அதைச் திறம்படச் செயல்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்டக் கொள்கைக் கட்டமைப்பின்மூலம் ஆதரிக்கப்படுகிறது. தேசிய இரயில் திட்டம் 2030 (National Rail Plan (NRP)), சரக்கு போக்குவரத்தில் இரயில்வேயின் பங்கினை சுமார் 27 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்த்துவதற்கான ஒரு முக்கிய உத்திசார் திட்டத்தை வழங்குகிறது. சரக்குகளை மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதைகளுக்கு மாற்றுவதன் மூலம், நெடுஞ்சாலைச் சரக்குப் போக்குவரத்தால் ஏற்படும் அதிகப்படியான கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


‘Perform, Achieve and Trade’ திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட நுகர்வோர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இரயில்வே மண்டலங்களிலும் தவறாமல் ஆற்றல் தணிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஆற்றல் பாதுகாப்புச் சட்டமானது சட்டப்பூர்வ விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்கிறது. இது தொடர்ச்சியான ஆற்றல் செயல்திறன் தரநிலைகளைப் பராமாரிக்க உதவுகிறது.


இந்திய இரயில்வே தனது பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்காக, சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று வருகிறது. உதாரணமாக, கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கு (Eastern Dedicated Freight Corridor) ஆதரவளிக்கும் இரயில்வே தளவாட திட்டத்திற்காக உலக வங்கி 24.5 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டாண்மைகள் கனரக சரக்கு ரயில் இயக்கங்களை மேம்படுத்தவும், சூரிய ஆற்றல்மயமாக்கல் (Solarisation) மற்றும் கார்பன் கண்காணிப்பு அமைப்புகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் உதவுகின்றன.


கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் உள்ள நடைமுறைச் சவால்கள்


வேகமான கட்டமைப்பு முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், முழுமையான கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கை நடைமுறையில் செயல்படுத்துவதில் சில முக்கியமான சவால்கள் உள்ளன.


முதலில், இரயில்வே பாதைகளை மின்மயமாக்குவது இரயில்களிலிருந்து நேரடியாக வெளியேறும் புகையை முற்றிலுமாகத் தடுத்தாலும், இதன்மூலம் கிடைக்கும் கார்பன் உமிழ்வு குறைப்பு என்பது நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தி முறையையே சார்ந்துள்ளது. நாட்டின் மின் உற்பத்தியானது பெருமளவில் நிலக்கரியை மையமாகக் கொண்டே இயங்குகிறது. மாநில மின்விநியோக நிறுவனங்கள் இன்னும் நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்களையே அதிகம் நம்பியிருப்பதால், இரயில்வே மின்மயமாக்கலானது தற்போதைக்கு இரயில்கள் இயங்கும் இடத்தில் வெளியாகும் புகையை, மின்சாரம் உற்பத்தியாகும் அனல்மின் நிலையங்களுக்கு மட்டுமே இடமாற்றம் செய்கிறது. எனவே, இந்திய இரயில்வேயின் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சி வெற்றி பெற்றாலும், அது உண்மையிலேயே பருவநிலை மாற்றத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்திக் கட்டமைப்பும் கார்பன் உமிழ்வற்றதாக மாற வேண்டும்.


இரண்டாவதாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் நிலையற்றத்தன்மை மற்றும் சேமிப்புச் செலவுகள் ஆகியவை பெரிய சவாலாக உள்ளன. இரயில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் தேவைப்படும் அதிகப்படியான மின்சார ஈர்ப்பு விசை (Traction power surges), பகல் நேரத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சூரிய மின் உற்பத்தி போதுமானதாக இல்லை. ஆற்றல் உற்பத்தியில் ஏற்படும் இந்த மாறுபாடுகளைச் சமநிலைப்படுத்தத் தேவைப்படும் மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems (BESS)) போன்ற சேமிப்புத் தொழில்நுட்பங்களை நிறுவுவதற்கு, தற்போதைய சூழலில் மிக அதிக மூலதனம் தேவைப்படுகிறது.


வணிகரீதியாக பயன்பாட்டிற்கு வரக்கூடிய மாற்று எரிபொருள்கள் இல்லாதது மற்றொரு பெரிய சவாலாகும். பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் கலன் (Green Hydrogen Fuel Cell) மூலம் இயங்கும் இரயில்களை தயாரிப்பதற்கான செலவு, அவற்றைச் சேமித்து வைப்பதற்கான செலவு மற்றும் விநியோகச் சங்கிலி பராமரிப்புச் செலவு ஆகியவை சாதாரண மின்கம்பி அமைப்பைக் கொண்டு இயங்கும் இரயில்களைவிட மிகவும் அதிகமாக உள்ளன. இதனால், மின்மயமாக்கப்படாத இரயில் பாதைகளை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாததாக மாற்றுவது அதிக செலவு ஏற்படுத்துபவையாக உள்ளன.


முன்னோக்கிச் செல்லும் வழி


எனவே, முழுமையாகக் கார்பன் உமிழ்வற்ற இரயில்வே அமைப்பை உருவாக்குவதற்கு மூன்று முக்கியமான தேவைகள் உள்ளன. முதலாவதாக, இரயில்வே துறையானது சாதாரண புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்முதல் ஒப்பந்தங்களில் இருந்து மாறி, ஆற்றல் சேமிப்பு வசதிகளுடன் (Energy storage infrastructure) 24 மணி நேரமும் தொடர்ச்சியாகக் கிடைக்கும் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலைக்கு நகர வேண்டும். இரண்டாவதாக, இறுதி-கட்ட இரயில் பெட்டிகளை நகர்த்தும் பணிகளுக்கும் மற்றும் பழமையான பாரம்பரிய இரயில் பாதைகளுக்கும் பிரத்யேகமாக ஹைட்ரஜன் மற்றும் மின்கலன் மூலம் இயங்கும் இரயில்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.


இந்தத் தொழில்நுட்பங்களைச் சிக்கனமான முறையில் பயன்படுத்துவதற்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பயனுள்ள முதலீடுகள் தேவைப்படுகின்றன. மேலும், இந்திய மின்சாரத் துறையில் ஒட்டுமொத்த அளவிலான கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், இரயில்வேயின் மின்மயமாக்கல் முயற்சிகள் பெட்ரோலிய எரிபொருட்களைச் சார்ந்து வாழும் தன்மையை இரயில்வேயிலிருந்து மின்விநியோகக் கட்டமைப்பிற்கு மாற்றுமே தவிர, உண்மையான பூஜ்ஜியக் கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைய உதவாது என்றும் தெரிவிக்கின்றனர்.


Original Link: How the Indian Railways moves closer to becoming net-zero carbon emitter by 2030.

Share:

கேரளாவிலிருந்து கேரளம் : மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்த நிலையில், மாநிலம் ஏன் அந்த பெயர்மாற்ற கோரிக்கை விடுத்தது?

அரசியலமைப்பில் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு வழிவகுக்கும் 2026-ஆம் ஆண்டு 'கேரள (பெயர் மாற்றம்) மசோதாவை,   மக்களவை ஆகஸ்ட் 11 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.


ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே 2026-ஆம் ஆண்டு “கேரளா (பெயர் மாற்றம்) மசோதாவை, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள மாநிலத்தின் “கேரளா” என்ற பெயரை “கேரளம்” என மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.


இந்த மசோதா, கேரள சட்டப்பேரவையில் 2023 ஆகஸ்ட் மற்றும் 2024 ஜூன் மாதங்களில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டது. இந்தப் பெயர் மாற்ற முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர், மசோதா மாநில சட்டப்பேரவைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சட்டப்பேரவையும் அதனை ஒருமனதாக ஆதரவளித்தது.


கேரளா  இந்தப் பெயரை மாற்ற கோரிக்கை விடுத்தது, ஏன்?


2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை மாநில சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட முந்தைய தீர்மானத்திற்குப் பிறகு, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானம் இதுவாகும்.



மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ என்றும், ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் "கேரளா", அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்டமன்றம் வாதிட்டது.


‘கேரளா’ மற்றும் ‘கேரளம்’ ஆகிய பெயர்கள் எங்கிருந்து வந்தன?


கேரளம் என்ற சொல்லின் வேர்ச்சொல் தோற்றம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன.


இந்தச் சொல்லின் ஆரம்பகால பயன்பாடுகளில் ஒன்று கி.மு.257-ஆம் ஆண்டைச் சேர்ந்த பேரரசர் அசோகரின் பாறைக்கல்வெட்டு II-ல் காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டில், “சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள்,  கேரளபுத்திரர்கள்” போன்ற தெற்கு எல்லைப் பகுதிகளை ஆட்சி செய்த அரசர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கல்வெட்டியல் அறிஞர் டி. ஆர். பண்டார்கர் மொழிபெயர்த்துள்ளார்.


“கேரளபுத்திரர்” என்பது சமஸ்கிருதத்தில் “கேரளத்தின் மகன்” ஆகும். தென்னிந்தியாவின் மூன்று முக்கிய அரசுகளில் ஒன்றான சேரர்களின் வம்சத்தை இந்த சொல் குறிக்கிறது.


ஆரம்பகால மலையாள-ஆங்கில அகராதியைத் தொகுத்த ஜெர்மானிய சமயப் பரப்புரையாளரும் மொழியியலாளருமான ஹெர்மன் குண்டர்ட், கன்னட வார்த்தையான “கேரம்” (keram) என்பதற்கும், கர்நாடகாவில் உள்ள கோகர்ணாவிற்கும், இந்தியாவின் தென்கோடி முனையான தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கும் இடையேயான கடலோர நிலத்தைக் குறிக்கும் “சேரம்” (cheram) என்பதற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதைக் குறிப்பிட்டார். மற்றொரு கருத்தின்படி, இது “சேர்” (cher) என்ற பழைய தமிழ் வேர்ச்சொல்லிலிருந்தும், “ஆலம்” (alam) என்றால் பகுதி அல்லது நிலம் என்ற பொருள்படும் சொல்லிலிருந்தும் உருவானதாகக் கூறப்படுகிறது.




நவீன கேரள மாநிலம் எவ்வாறு உருவானது?


மலையாளம் பேசும் மக்கள் வரலாற்றுரீதியாக பல்வேறு அரசியல் அமைப்புகளின்கீழ் வாழ்ந்து வந்தனர். அவற்றில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களும், மெட்ராஸ் பிரசிடென்சியின் மலபார் மாவட்டமும் அடங்கும்.


மலையாளம் பேசும் பகுதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1920-களில் நடைபெற்ற “ஐக்கிய கேரளா” (Aikya Kerala – United Kerala) இயக்கத்தின் மூலம் வலுப்பெற்றது.


இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் 1949-ஆம் ஆண்டு ஒன்றிணைக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சி மாநிலம் உருவாக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, மொழிவாரி மாநில மறுசீரமைப்பு (States Reorganisation Commission) மலையாளம் பேசும் தனி மாநிலம் உருவாக வழிவகுத்தது. சியத் ஃபஸல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, 1956 நவம்பர் 1-ஆம் தேதி நவீன கேரள மாநிலம் உருவானது.


மலபார் மாவட்டமும் காசர்கோடு தாலுக்கும் புதிய மாநிலத்தில் இணைக்கப்பட்டன. அதேவேளையில், திருவிதாங்கூரின் தெற்குப்பகுதிகளில் இருந்த தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுக்குகளும், செங்கோட்டை பகுதியின் சில பகுதிகளும் புதிய கேரள மாநிலத்தில் சேர்க்கப்படாமல், பின்னர் தமிழ்நாட்டின் பகுதிகளாக இணைந்தன.


மலையாள மொழியில் புதிய மாநிலம் “கேரளம்” (Keralam) என்று அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் அரசியலமைப்பிலும் அதன் பெயர் “கேரளா” என்றே தொடர்ந்தது.


ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது?



ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான அதிகாரத்தை இந்திய நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு தெளிவாக வழங்கியுள்ளது.


அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ், மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதா குடியரசுத்தலைவரின் பரிந்துரையின் பேரிலேயே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட முடியும். அந்த முன்மொழிவு ஒரு மாநிலத்தின் பரப்பளவு, எல்லைகள் அல்லது பெயரை பாதிக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை சம்பந்தப்பட்ட மாநில சட்டப்பேரவைக்கு அனுப்பி, மாநில சட்டப்பேரவையின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறார். இருப்பினும், மாநில சட்டமன்றத்தின் கருத்து நாடாளுமன்றத்தைக்கட்டுப்படுத்தாது.


கேரளாவைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சரவை முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர், குடியரசுத் தலைவர் கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, (Kerala (Alteration of Name) Bill, 2026) மசோதாவை கேரள சட்டப்பேரவைக்கு அனுப்பினார். சட்டப்பேரவையும் மசோதாவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.


இந்த மசோதா பின்னர் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இனி இந்த மசோதா மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னரே “கேரளா” என்பதிலிருந்து “கேரளம்” என்ற பெயர் மாற்றம் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.


Original Link: Kerala to Keralam: As Lok Sabha clears Bill, why the state sought the change.

Share:

இந்தியாவின் நீதித்துறை அமைப்பில் தீர்ப்பாயங்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை? -ரவீணா பனேட்டா

நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் 2026-ஆம் ஆண்டு 'தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா (Tribunals Reforms Bill) நிறைவேறியது. தீர்ப்பாயங்கள் என்றால் என்ன, அவை நீதிமன்றங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?


தற்போதைய செய்தி :


பல்வேறு தீர்ப்பாயங்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 'தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையம்' (National Tribunals Commission) ஒன்றை அமைப்பதற்கு 2026-ஆம் ஆண்டு 'தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, திங்களன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு (voice vote) மூலம் நிறைவேற்றப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், ஆயுதப் படைத் தீர்ப்பாயம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாய ஆணையம் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு  இந்த முன்வரைவு வழிவகை செய்கிறது.


2. தீர்ப்பாயங்களைச் சீரமைக்கும் செயல்முறையை அரசு 2015-ஆம் ஆண்டில் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தில் 2026-ஆம் ஆண்டு 'தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா (Tribunals Reforms Bill) நிறைவேறியது. இந்தச்சட்டத்தின் சில விதிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டுச் சட்டத்திற்கு மாற்றாக அரசு இந்த புதிய முன்வரைவைக் கொண்டுவந்துள்ளது என்று மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் இந்த முன்வரைவின் 'நோக்கங்கள் மற்றும் காரணங்கள்' குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


3. இந்த முன்வரைவின் முக்கிய அம்சமாக 'தேசியத் தீர்ப்பாயங்கள் ஆணையம்' (NTC) அமைப்பதற்கான முன்மொழிவு உள்ளது. 'தேசியத் தீர்ப்பாயங்கள் ஆணையமானது 16 தீர்ப்பாயங்களை தனது வரம்பிற்குள் கொண்டுவந்து, அவற்றின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டிற்கான ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவரால் இந்த ஆணையம் வழிநடத்தப்படும் என்றும், அவருக்குத் உதவியாக இரண்டு நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களும் இரண்டு தொழில்நுட்பத்துறை சார்ந்த உறுப்பினர்களும் இருப்பார்கள் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.


தீர்ப்பாயங்கள் என்றால் என்ன?


4. வரிவிதிப்பு மற்றும் பெருநிறுவனச் சட்டம் முதல் நிர்வாக விவகாரங்கள் வரையிலான பல்வேறு துறைகளில் எழும் சிக்கல்களுக்கு விரைவான மற்றும் சிறந்தத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரை-நீதித்துறை அமைப்புகளே தீர்ப்பாயங்கள் ஆகும். இவை பிற நீதிமன்றங்களின் மீதான வழக்குகளின்  சுமையைக் குறைக்கின்றன.


தீர்ப்பாயங்களின் (Tribunals) அரசியலமைப்பு நிலை என்ன?


5.  அரசியலமைப்பில் தீர்ப்பாயங்கள் தொடர்பான எந்தவொரு விதிகளும் இடம்பெறவில்லை. இருப்பினும், 1976-ஆம் ஆண்டின் 42-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்தத்திருத்தம் 'பகுதி XIV-A - தீர்ப்பாயங்கள்' என்பதைச் சேர்த்து, 323A மற்றும் 323B ஆகிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியது.


6. சிறப்பு வழிமுறைகளின்  முக்கியதுவத்தை உணர்ந்து, பணி தொடர்பான விவகாரங்களைக் கையாளும் நிர்வாகத் தீர்ப்பாயங்கள் மற்றும் குறிப்பிட்ட சில விவகாரங்களைக் கையாளும் பிற தீர்ப்பாயங்களை அமைப்பதற்கான அடித்தளத்தை இது அமைத்தது.


7. ஒன்றியத்தின் அல்லது எந்தவொரு மாநிலத்தின் நிர்வாகத்துடனும் தொடர்புடைய பொது சேவைகள் மற்றும் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பணிச்சேவை நிபந்தனைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புகார்களை நிர்வாகத் தீர்ப்பாயங்கள் மூலம் விசாரித்து தீர்ப்பளிப்பதற்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அல்லது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்பு அல்லது பிற அதிகார அமைப்பு அல்லது அரசுக்குச்சொந்தமான அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு அமைப்பின் சேவைகள் மற்றும் பதவிகளும் இதன் கட்டுப்பாட்டில் வரும் என்று பிரிவு 323 A (1) சுட்டிக்காட்டுகிறது. 


8. பிரிவு 323B பிற விவகாரங்களுக்கான தீர்ப்பாயங்களைப் பற்றி: சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்ற சட்டமன்றம், உட்பிரிவு (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அல்லது ஏதேனும் ஒரு விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், புகார்கள் அல்லது குற்றங்களைத் தீர்ப்பதற்காக அல்லது விசாரிப்பதற்காக தீர்ப்பாயங்களை அமைப்பதற்கு சட்டம் இயற்றலாம்.



9. இந்த விவகாரங்கள் எந்தவொரு வரியையும் விதித்தல், மதிப்பீடு செய்தல், வசூலித்தல் மற்றும் அமல்படுத்துதல், அந்நிய செலாவணி, சுங்க எல்லைகள் வழியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, தொழில்துறை மற்றும் தொழிலாளர் தகராறுகள், பிரிவு 31A-ல் வரையறுக்கப்பட்டுள்ள எந்தவொரு நிலப்பகுதியையும் அரசால் கையகப்படுத்துதல், அதிலுள்ள உரிமைகளை நீக்குதல் அல்லது மாற்றுதல், வேளாண் நிலங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் அல்லது வேறு எந்த முறையிலும் நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நகர்ப்புற சொத்துக்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல் போன்றவை அடங்கும்.


தீர்ப்பாயங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?


10. தீர்ப்பாயங்கள் வரிவிதிப்பு, நிறுவனச் சட்டம், பத்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கியத்துறைகளைக் கையாளுகின்றன. அவற்றின் நோக்கம் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்குப் பதிலாக அமைவதல்ல. மாறாக, முக்கியத்துறை சார்ந்த தீர்ப்புகளை வழங்குவதன் மூலமும், விரைவான மற்றும் பயனுள்ள நீதியை வழங்குவதன் மூலமும் நீதித்துறை அமைப்புக்கு துணையாக இருப்பதே அவற்றின் நோக்கமாகும்.


11. வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் ஏற்படும் ஒரு சிக்கல் என்பது அரிதாகவே கணக்கியல் பிரச்சினையாகவோ அல்லது ஒரு சட்ட முரண்பாடாகவோ இருக்கும். அதன் பின்னால் ஒரு தொழில்முனைவோரின் நம்பிக்கை, ஒரு தொழில்துறையின் முதலீடு, ஒரு வணிகத்தின் எதிர்காலம், வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் தொடர்ச்சி ஆகியவை இடம்பெற்று இருக்கலாம்.


12. சிக்கல்கள் சரியான நேரத்தில் மற்றும் நியாயமான முறையில் தீர்க்கப்படும்போது, ​​முதலீடுகள் மீண்டும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரச் சுழற்சிக்குள் திரும்ப முடியும். மேலும், அமைப்பின் மீதான நம்பிக்கையும் வலுப்பெறும். நீதியை எளிதாகப்பெறும் வாய்ப்பும் (Ease of Justice), தொழில் செய்வதை எளிதாக்கும் சூழலும் ஒன்றோடொன்று ஆழமாகத் தொடர்புடையவை.




தீர்ப்பாயங்களின் சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் எவ்வாறு நிலைநாட்டியுள்ளது?


13.  30 ஆண்டுகளுக்கும் மேலாக, 1987-ஆம் ஆண்டின் எஸ்.பி. சம்பத் குமார் வழக்கில் தொடங்கி, 2021-ஆம் ஆண்டில் நடந்த மெட்ராஸ் பார் அசோசியேஷன் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கு வரை, தீர்ப்பாயங்களின் சுதந்திரம் குறித்த வலுவான சட்டக் கோட்பாடுகளை உருவாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் 9 முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.


14. 1997-ஆம் ஆண்டு எல். சந்திர குமார் vs இந்திய யூனியன் வழக்கில், உயர்நீதிமன்றங்களின் நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைத் தவிர்த்து நிர்வாகத் தீர்ப்பாயங்களை அமைத்த 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஒரு பகுதியை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.


15. நீதிமன்றம் தனது தீர்ப்புகளின் மூலம், கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு கோட்பாடுகளின் நெறிமுறைகளை நிலைநாட்டியுள்ளது:


(i) தீர்ப்பாயங்கள் தங்களை அமைக்கும் துறைகளிலிருந்து தனித்து சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்,


(ii) நிர்வாகத்திடமிருந்து சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக,   தேர்வுக்குழுக்களில் நீதித்துறைக்கு முக்கியப்பங்கு இருக்க வேண்டும்.


(iii) தீர்ப்பாயயத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தேவையான நீண்ட பதவிக்காலம், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும்.


(iv) தீர்ப்பாயங்களின் செயல்பாடுகள் மீது உயர் நீதிமன்றங்களுக்கு உள்ள நீதித்துறை மறுஆய்வு அதிகாரம், அரசியலமைப்பில் உள்ள அடிப்படைக் கோட்பாட்டின் (Basic Structure) ஒரு பகுதியாகும்.


16. இருப்பினும், இந்த அரசியலமைப்பு கோட்பாடுகள், தீர்ப்பாய அமைப்பை மறுசீரமைப்பதற்கான முயற்சிகளுடன் அடிக்கடி முரண்பட்டுள்ளன. குறிப்பாக, நியமன நடைமுறை, பதவிக்காலம் மற்றும் பணிச்சேவை நிபந்தனைகள் ஆகியவற்றில் நிர்வாகத்திற்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குவதாகக் கருதப்பட்ட சீர்திருத்தங்கள் இதுபோன்ற முரண்பாடுகளை ஏற்படுத்தின.


17. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உருவாகி, நடைமுறைகளில் வேறுபாடுகளும், பல்வேறு செயல்முறைகளும் காணப்பட்டதால், அவற்றை சீரமைத்து ஒருங்கிணைக்க அரசு முயற்சி மேற்கொண்டது. 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின், (Finance Act) மூலம் ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்ட தீர்ப்பாயங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை 26-லிருந்து 19-ஆகக் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் அவற்றின் நிர்வாகம் மற்றும் சேவை நிபந்தனைகள் தொடர்பான விதிகளையும் வகுத்தது.


18. இந்த விதிகள், 2019-ஆம் ஆண்டு ரோஜர் மேத்யூ vs சவுத் இந்தியன் வங்கி   வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டன. அதில், தீர்ப்பாயத்தின் சுதந்திரம் குறித்த தனது முந்தைய சட்டக்கோட்பாடுகளுடன் பல்வேறு விதிகள் முரண்படுவதாக நீதிமன்றம் கண்டறிந்தது.


19. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு தீர்ப்பாய விதிகள், 2020-ஆம் ஆண்டு விதிகளை அறிவித்தது. இவை மீண்டும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் மூலம் உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டன. 2021-ஆம் ஆண்டு, தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் என நிர்ணயித்த விதிகளை உச்சநீதிமன்றம் செல்லாது என்றுத் தீர்ப்பளித்தது. மேலும், குறுகிய பதவிக்காலம் தீர்ப்பாயங்களின் சுதந்திரத்தையும் நிறுவனரீதியான அனுபவத்தையும் பாதிக்கக்கூடும் என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது.


20. பின்னர், 2021-ஆம் ஆண்டு தீர்ப்பாயங்கள் சீர்திருத்த அவசரச் சட்டம் மற்றும் 2021-ஆம் ஆண்டு தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டம், ஆகியவை தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை 19-லிருந்து 16-ஆகக் குறைத்தன. இருப்பினும், நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகாரப்  பகிர்வுக்கு முரணானது என்றுக் கூறி, சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் vs யூனியன் ஆஃப் இந்தியா நவம்பர் 2025-ஆம் ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் பல சட்டப்பிரிவுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டன.


21. நீதிமன்றத்தின் கருத்துப்படி, இந்தச் சட்டம் “முந்தைய தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நீக்கத்தவறியதுடன், அவற்றையே புதிய பெயரில் மீண்டும் கொண்டுவருகிறது. இதனால் அது “அரசியலமைப்பின் மேலாதிக்கக் கோட்பாட்டிற்கு (Doctrine of Constitutional Supremacy) முரணாகிறது” என்று நீதிமன்றம் கூறியது. இதன் விளைவாக, தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் வழங்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களுக்கான 50 வயது குறைந்தபட்ச வயது வரம்பை செல்லாது என்றுக் கருத வேண்டும் என்றும் முந்தைய தீர்ப்புகளில் வகுக்கப்பட்ட கொள்கைகள் தொடர்ந்து அனைத்து நியமனங்களுக்கும் பொருந்தும்  என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


22. மேலும், தீர்ப்பாயங்களின் நியமனங்கள் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக, பல ஆண்டுகளாக நீதிமன்றம் பரிந்துரைத்து வரும் ஒரு சுதந்திரமான அமைப்பான தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்தை 4 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் அது மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


அகில இந்திய நீதித்துறை சேவை


1. தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பு (National Judicial Data Grid (NJDG)) வழங்கும் தரவுகள், இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மிகப்பெரிய இடைவெளியை வெளிப்படுத்துகின்றன. 2026-ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில், நாட்டின் நீதித்துறையில் மொத்தம் 5.06 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதில் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் மட்டும் 64,73,252 வழக்குகள் நிலுவையில் இருந்தன.


2. இந்திய நீதி அறிக்கை (India Justice Report (IJR)) 2025-ன் படி, உயர் நீதிமன்றங்களில் சராசரியாக 33 சதவிகித நீதிபதி காலிப்பணியிடங்களும், கீழ்நிலை நீதிமன்றங்களில் சராசரியாக 21 சதவிகித காலிப்பணியிடங்களும் உள்ளன. அதே சமயம், ஒவ்வொரு 10 லட்சம் இந்தியர்களுக்கும் 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இது, 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்ற 1987-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்தின் (Law Commission) அறிக்கை பரிந்துரைத்த எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியாகும்.


3. இந்தச் சூழலில், முன்மொழியப்பட்ட அகில இந்திய நீதித்துறை சேவை (All India Judicial Services (AIJS)), ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. மத்திய குடிமைப் பணிகளைப் (Central Civil Services) போலவே, அகில இந்திய நீதித்துறை சேவையை உருவாக்குவதற்கான ஏற்பாட்டை அரசியலமைப்பின் 312-வது பிரிவு வழங்குகிறது.


4. மாநிலங்களவையின் தற்போதைய மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன், ஒரு தீர்மானத்தின் மூலம், “தேசிய நலன் கருதி” (national interest) ஒரு சேவையை உருவாக்குவது அவசியம் அல்லது உகந்தது என்று மாநிலங்களவை அறிவித்தால், நாடாளுமன்றம் “ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அகில இந்திய சேவைகளை (அகில இந்திய நீதித்துறை சேவை உட்பட) உருவாக்குவதற்கு சட்டத்தின் மூலம் வழிவகை செய்யலாம்” மற்றும் அது போன்ற எந்தவொரு சேவைக்கும் நியமிக்கப்படும் நபர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை முறைப்படுத்தலாம்.



5. இருப்பினும், பிரிவு 312 (2)-ன்படி, பிரிவு 236-ல் வரையறுக்கப்பட்டுள்ள மாவட்ட நீதிபதி பதவியைவிட கீழ்நிலையில் உள்ள எந்த ஒரு பதவியும் அகில இந்திய நீதித்துறை சேவையில் சேர்க்கப்பட முடியாது. மாவட்ட நீதிபதி என்ற பதவியில் நகர குடிமையியல் நீதிமன்ற நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதி, இணை மாவட்ட நீதிபதி, உதவி மாவட்ட நீதிபதி, சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பெருநகரப் பகுதியில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிபதி, கூடுதல் தலைமை  குற்றவியல் நீதிபதி, அமர்வு நீதிபதி, கூடுதல் அமர்வு நீதிபதி மற்றும் உதவி அமர்வு நீதிபதி ஆகிய பதவிகள் அடங்கும்.

Original Link: Why Tribunals matter in India’s justice system.


Share:

VB-G RAM G -ன் கட்டுக்கதைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஏற்பட்ட துயரமான மனித இழப்பு. -நிகில் டே, அருணா ராய்

VB-G RAM G - Viksit Bharat–Guarantee for Rozgar and Ajeevika Mission, Gramin : வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்) 


VB-G RAM G திட்டமானது, இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளித்த ஒரே அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தால் யாருக்குப் பலன் என்பது, இந்தியாவின் ஒருங்கிணைந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆளும் வர்க்கத்தினர் பதிலளிக்க வேண்டிய ஒரு கேள்வியாகும்.


பாஜக அரசின் முதன்மைத் திட்டமான 'வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்)' (VB-G RAM G) குறித்த அரசின் பிரச்சாரத்தை அல்லது பிம்பத்தை கேள்விக்குள்ளாக்க, தெளிவான உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரே ஒரு செய்தித்தாள் அறிக்கை போதுமானதாக இருந்தது.


தற்போது ரத்து செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) மேம்படுத்தப்பட்ட பதிப்பே 'வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்)' (VB-G RAM G) என்று மத்திய அரசு கூறுகிறது. 'உத்தரவாத வேலை' (guaranteed work) நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற இந்தியா முழுவதும் இது பரவலாகச் செயல்படுத்தப்படும் என்றும், மத்திய அரசால் 'இதுவரை இல்லாத அதிகபட்ச' நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மாநிலங்களிடமிருந்து கூடுதலாக 40 சதவீத நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாகவும் அரசு கூறுகிறது. இந்தக் கூற்றுகளின் அடிப்படையில், தொழிலாளர்கள் தங்கள் முழுமையான 125 நாள் உத்தரவாத வேலையைப் பெறுவதற்காகப் பெருமளவில் பணித்தளங்களுக்கு வருவார்கள் என்று கருதுவது இயல்பானதுதான். ஆனால், யதார்த்தம் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.


VB-G RAM G திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, வழங்கப்படும் வேலையின் அளவில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவாக உள்ளதாகவும் அரசின் சொந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை ('ஆகஸ்ட் 10 வெளியான, அதன் முதல் மாதத்தில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் கிராமப்புற வேலைகளில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 50% சரிவு') வெளிப்படுத்துகிறது.


டிசம்பர் 19 அன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA) ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக VB-G RAM G திட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து, மாதந்தோறும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு என்ற முக்கிய அளவீடு உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் சங்கர்ஷ் மோர்ச்சா (NREGA Sangharsh Morcha), விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் உரிமை அமைப்புகள் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், 2025-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2026-ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட மொத்த வேலை நாட்கள் சுமார் 335.4 மில்லியனிலிருந்து 215.2 மில்லியனாக, அதாவது 35.8% சரிந்துள்ளது என்பதைத் துறைசார் புள்ளிவிவரங்கள் மூலம் காட்டப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடும்போதும் இதேபோன்ற சரிவைக் காண முடிகிறது.


இந்த சரிவு சுட்டிக்காட்டப்பட்டபோது, ​​ஜூலை 1 முதல் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று அரசாங்கம் உறுதியளித்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை காட்டுவது போல, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வழங்கப்பட்ட வேலை நாட்கள் மேலும் குறைந்து, கிட்டத்தட்ட 50 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கையும் 50 சதவீதம் குறைந்துள்ளது. பரவலான வேலையின்மை மற்றும் வறட்சியால் ஏற்பட்ட துயரத்தால் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இது நிகழ்ந்துள்ளது.


125 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பு என்ற கருத்தே ஒரு வெற்று வாக்குறுதி. இந்த இழப்பினால் மக்களுக்கும் கிராமப்புறக் குடும்பங்களுக்கும் ஏற்படும் மனித இழப்பைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினம். ஒவ்வொரு வேலை நாளும் முக்கியமானது. வேலை கோரும் ஒவ்வொரு குடும்பமும் முக்கியமானது. இந்த யதார்த்தத்தை லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செல்லும் தரவுகளாகவும் புள்ளிவிவரங்களாகவும் மாற்றுவது, மக்களின் உண்மையான வலியையும் துயரத்தையும் மறைத்துவிடக்கூடும்.


ஆளும் கட்சியைத் தவிர வேறு யாரும் இந்தப் புதிய சட்டத்தை வரவேற்கவில்லை. தொழிலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அல்லது நாடாளுமன்றத்திற்குள்ளேயேகூட எந்தவித ஆலோசனையும் இன்றி இது அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள், சட்டத்தைத் திரும்பப் பெற முடியாவிட்டாலும், ஆலோசனை மற்றும் மறுபரிசீலனைக்கு வேண்டுகோள் விடுத்தபோதிலும், இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. இது உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்று வலுவாக வலியுறுத்திய அதே வேளையில், அரசாங்கம் தனது பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புகளை மீறிச் செயல்பட்டது. விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G) திட்டமானது, மேம்படுத்தப்பட்ட ஊதியத்துடன் 125 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பையும், சிறந்த டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் விநியோகத்தையும் வழங்கும். தொழிலாளர் குழுக்கள், குடிமைச் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து தொடர்ந்து வலுவான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், மத்திய அரசு இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தில் விடாப்பிடியாக இருந்து, ஜூலை 1 அன்று இத்திட்டத்தை அமல்படுத்தியது.


இந்தியாவின் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு ஒரு முழுமையற்ற ஆனால் மிக முக்கியமான வாழ்வாதாரத்திற்காக விளங்கிய 20 ஆண்டு கால வேலைவாய்ப்பு உத்தரவாதத்தைச் சீர்குலைக்கும் வகையில் பரப்பப்படும் கட்டுக்கதைகளைப் புரிந்துகொள்ள, புதிய சட்டத்தின் விதிகளையும் அதன் அமலாக்க விவரங்களையும் ஆராய்வது அவசியமாகும். அரசாங்கத்தால் பரப்பப்பட்ட குறைந்தது ஐந்து கட்டுக்கதைகள் உள்ளன. அவை, வேலைவாய்ப்பு உரிமையை வேண்டுமென்றே மற்றும் வஞ்சகமாகப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும்போதே, அதை வலுப்படுத்துவதாக பாஜக வாதிட உதவுகின்றன.


125 நாள் குறித்த கருத்து : நாடு முழுவதும், VB-G RAM G திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கூடுதல் வேலை நாட்களை அரசு விளம்பரப்படுத்தியுள்ளது. விளம்பரப் பலகைகள், ரயில் நிலைய அறிவிப்புகள், வானொலி விளம்பரங்கள், பஞ்சாயத்துக் கூட்டங்கள், அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகள் மற்றும் முழுப் பக்க விளம்பரங்கள் இந்த அதிகரிப்பை மிகத் தீவிரமாக அறிவித்தன. இருப்பினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மக்கள் வேலையிலிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மேலும் உத்தரவாதமான வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன. மாநில அரசு 125 நாட்கள் வேலைக்கு "உத்தரவாதம்" அளிப்பதை கட்டாயமாக்கும் ஒரு சட்டத்தை மத்திய அரசு சாமர்த்தியமாக நிறைவேற்றியுள்ளது. ஆனால், தனக்கு வசதியாக வரையறுக்கப்பட்ட "நெறிமுறை ஒதுக்கீட்டிற்கு" (normative allocation) அப்பால் தேவைப்படும் பெரும் நிதி ஆதாரங்களை வழங்குவதற்கும், அதன் மூலம் "உத்தரவாதம்" என்று அழைக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அது தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.


போதுமான ஒதுக்கீடு குறித்த கருத்து : இந்த ஆண்டு ரூ.95,000 கோடி என்ற மிகப்பெரிய ஒதுக்கீட்டைச் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மாநிலங்களின் கட்டாயப் பங்களிப்பான 40 சதவீத ஒதுக்கீட்டையும் சேர்த்தால், கிடைக்கும் மொத்த நிதி ரூ.1,55,000 கோடியாக இருக்கும். ஆனால், இது வெறும் கோட்பாட்டு அளவிலான ஒரு கணக்கு மட்டுமே. முதலில் வேலை வழங்கப்படாவிட்டாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படாவிட்டாலும், ஒதுக்கப்பட்ட நிதி காகித அளவில் மட்டுமே இருக்கும். இந்த ஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள சிக்கலான மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத செலவுப் பகிர்வு ஏற்பாடுகளுக்கு ஒரு நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, மாநில அரசுகளுக்கோ அல்லது மக்களுக்கோ இத்திட்டம் தேவையில்லை என்ற பிம்பத்தை மத்திய அரசு உருவாக்கக்கூடும்.


அதிக ஊதியம் குறித்த கருத்து : மத்திய அரசு ஒரு நாளைக்கு ரூ.300 என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குறைந்தபட்ச ஊதியம் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாக இருப்பதுடன், ஜூன் 2018 விலை நிலவரப்படி ஒரு நாளைக்கு ரூ.375 என்ற பாஜக நியமித்த சத்பதி குழுவின் (Satpathy Committee) பரிந்துரையை விடவும் மிகவும் குறைவாக உள்ளது.


டிஜிட்டல் செயல்திறன் குறித்த கருத்து : தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் VB-G RAM G செயல்படுத்தும் முறையானது, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்குப் பெரும் புறக்கணிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மின்னணு-வாடிக்கையாளர் விவர சரிபார்ப்பு (E-KYC) தேவைகளால் கோடிக்கணக்கான வேலை அட்டைகள் (job cards) நீக்கப்பட்டுள்ளன. இதுவே, வேலைக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கை ஏன் இவ்வளவு வியத்தகு முறையில் குறைந்துள்ளது என்பதை ஓரளவு விளக்கக்கூடும். மேலும், தேசிய நடமாடும் கண்காணிப்பு முறைமை (National Mobile Monitoring System(NMMS)) எனப்படும் முக அங்கீகார முறையானது, அனைத்து தடைகளையும் மீறி எப்படியாவது வேலை பெறுபவர்களுக்கும்கூட தொடர்ச்சியான புறக்கணிப்பை ஏற்படுத்துகிறது. ஏறக்குறைய 11 கோடி பதிவுசெய்யப்பட்ட, சுறுசுறுப்பான தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் புகைப்படத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு "புவிசார் குறியீடு (geotagged) மற்றும் புவிசார் எல்லை" (geofenced) ஒரு நாளைக்கு இருமுறை எடுப்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அதிக கற்பனைத் திறன் தேவையில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGA) தொழிலாளர்களே கோரியுள்ளபடி, இந்த கண்காணிப்பு மற்றும் வருகைப் பதிவு முறை ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், ஒருவரின் சம்பளத்தையும் ஊதியத்தையும் திருடும் தொழில்நுட்பத் தீர்வுகளால் துன்புறுத்தப்படுவது என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடியும்.


புதிய வளர்ந்த இந்தியா குறித்த கருத்து : VB-G RAM G திட்டத்திற்கு மாநிலங்களின் 40 சதவீதப் பங்களிப்பைக் கட்டாயமாக்குவதன் மூலம், கூட்டுறவு கூட்டாட்சியின் ஒரு புதிய காலகட்டத்தை அரசு கொண்டு வந்துவிட்டதாகக் கூறுகிறது. உண்மையில், மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல், VB-G RAM G திட்டத்தின்கீழ் திணிக்கப்பட்ட இந்த நிதி வழங்கும் முறையானது, இந்திய அரசியலமைப்பின் 258-வது பிரிவை மீறுவதாகும். ஒரு மத்திய சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்கள் ஏற்க வேண்டிய எந்தவொரு நிதிச் சுமையையும் மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று இந்தப் பிரிவு வலியுறுத்துகிறது. ஆரம்பத்தில் எதிர்க்கட்சி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தற்போது அவை அனைத்தும் இணங்கிவிட்டதாகத் தெரிகிறது.


இத்தகைய அரசியல் பிம்பங்களை உருவாக்கும் நடவடிக்கைகளால் துயரமான மனித இழப்புகள் ஏற்படுகின்றன. அரசியல் எதிர்க்கட்சியும், உழைக்கும் ஏழைகளுடன் துணை நிற்கவேண்டிய தனது தார்மீகக் கடமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும், வெறும் சத்தம் போடுவதைத் தவிர, வருந்தத்தக்க வகையில் பெரிதாக எதையும் செய்யவில்லை. மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவை 'வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டத்தை (கிராமப்புறம்)' (VB-G RAM G) சட்டப்பூர்வமாக எதிர்க்கவும் இல்லை, தங்கள் மாநிலங்களில் வேலைவாய்ப்பை உத்தரவாதம் அளிக்கும் ஒரு மாற்றுச் சட்டத்தை இயற்றவும் முயற்சிக்கவில்லை. இதற்கிடையில், இந்தியாவின் மிகவும் கீழ்நிலை தொழிலாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், இதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், முழுமையற்ற ஆனால் மிக முக்கியமான உயிர்நாடியாக விளங்கும் வேலை செய்வதற்கான உரிமையையும் இழந்து வருகிறார்கள். தெருக்களில் இறங்கிய இளைஞர்களின் போராட்டத்திற்குப் பின்னால், அவர்களுக்கு வேலையும் வேலைவாய்ப்பும் தேவை என்பதை ஆளும் கட்சி நினைவில் கொள்வது நல்லது. 'வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்)' (VB-G RAM G), இந்தியா கொண்டிருந்த ஒரே உத்தரவாத வேலைவாய்ப்புக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டது. இதனால் யார் பயனடைகிறார்கள் என்பது, இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரரீதியாக ஒருங்கிணைந்த ஆளும் வர்க்கத்தினர் பதிலளிக்க வேண்டிய ஒரு கேள்வியாகும்.


டே (Dey) மற்றும் ராய் (Roy) ஆகியோர் சமூக ஆர்வலர்கள் மற்றும் 'மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன்' (MKSS) அமைப்பின் நிறுவன உறுப்பினர்கள் ஆவர்.


Original Link: Between the myth and reality of VB-G RAM G, the tragic human cost.

Share:

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் கீழ் பிணை காவலில் (police custody) வைப்பது தொடர்பான விதிகளை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது - ஆர்.கே. விஜ்

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) இன் பிரிவு 187(2), பிணைக் காவலைக் (police custody) கோருவதற்கான கால அவகாசத்தை விரிவுபடுத்துகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தற்போதைய நிகழ்வு :


'ஆந்திரப் பிரதேச மாநிலம் vs சுதா சுரேஷ் வீர வெங்கட நாக ராஜு' (The State of Andhra Pradesh vs Suda Suresh Veera Venkata Naga Raju) வழக்கில், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) இன் பிரிவு 187(2), புலனாய்வு முகமை (investigating agency) பிணைக் காவலைக் கோருவதற்கான கால அவகாசத்தை விரிவுபடுத்துகிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் கீழ், பிணைக் காவலில் (police custody) வைக்கும் உரிமையானது, நீதிமன்றக் காவலில் (remand) வைக்கப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் மட்டுமே என்ற கட்டுப்பாடு இல்லாமல், அனுமதிக்கப்பட்ட மொத்தக் காவல் காலத்தின் முதல் 40 அல்லது 60 நாட்களுக்குள், பல்வேறு கட்டங்களாக இந்த பிணை வரம்பை மாற்றப்பட்டுள்ளது (மொத்தக் காலம் 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்).


மேலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் பிரிவு 38-ன் கீழ் தங்களுக்கு விருப்பமான வழக்கறிஞரைச் சந்திக்கும் உரிமை உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு விசாரணை அமர்வின் போதும் வழக்கறிஞர் தொடர்ந்து நேரில் இருக்க வேண்டும் என்பதை அது எந்த வகையிலும் குறிப்பிடவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள வழக்கு


காவல் விசாரணையின்போது நிகழ்ந்த மரணம் தொடர்பான ஒரு வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டறியப்படாத நிலையிலும், சிசிடிவி (CCTV) அமைப்பின் உண்மையான ஹார்ட் டிஸ்க்குகள் (original hard disks) இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் மற்றும் பாரதிய சாக்ஸிய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA))-ன்கீழ் முக்கியத் தகவல்கள்/பொருட்கள் கண்டறியப்படவிருந்த நிலையிலும், நீதித்துறை நடுவர் எட்டு நாட்கள் பிணைக் காவலை (கோரப்பட்ட 12 நாட்களுக்குப் பதிலாக) அனுமதித்தார். மேலும், பிணைக் காவலில் (police custody) இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு விருப்பமான இரண்டு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளவும் அனுமதித்தார். இந்த இரண்டு வழக்கறிஞர்களில் ஒருவர் மட்டுமே விசாரணையின் எந்தவொரு கட்டத்திலும் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டார். "இந்த உத்தரவின்கீழ் வழங்கப்பட்ட பிணைக் காவல் (police custody) காலத்தை எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கக்கூடாது" என்று இந்த உத்தரவு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.


மேல்முறையீட்டின் போது, பிணைக் காவலின் (police custody) காலம் மற்றும் விசாரணை முழுவதும் வழக்கறிஞரின் இருப்பு தொடர்பான சில நிபந்தனைகளை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது. எனவே, தடையின்றி விசாரணை நடத்துவதற்கான புலனாய்வு அதிகாரியின் உரிமைகளை இந்த நிபந்தனைகள் நேரடியாகப் பாதிக்கின்றன என்ற அடிப்படையில், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் அவற்றை எதிர்த்து முறையிட்டது.

புலனாய்வு முகமை (investigating agency) வெளிப்படுத்திய அச்சங்கள் யதார்த்தமானவை மற்றும் நியாயமானவை என்றும், பிணைக் காவல் (police custody) காலத்தை விரிவுபடுத்தும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் சட்டரீதியான கட்டமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு மாஜிஸ்திரேட்டோ அல்லது நீதிமன்றமோ தனது மேற்பார்வை அதிகாரத்தைச் செயல்படுத்தும்போது, பிணைக் ​​காவலில் வைப்பதற்கான கால அளவிற்கு முழுமையான மற்றும் நீட்டிக்க முடியாத ஒரு உச்ச வரம்பை நிர்ணயிக்க முடியாது. ஏனெனில், விசாரணை மூலம் இனி என்ன தெரியவரக்கூடும் என்பதைப் பொருட்படுத்தாமல், இத்தகைய வரம்பு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் பிரிவு 187(2)-ன்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை முற்றிலுமாகத் தடுத்துவிடும்.


எனவே, கீழ்-நீதிமன்றங்கள் (lower courts) வழங்கிய பிணைக் காவல் (police custody) காலத்தையும் சேர்த்து மொத்த பிணைக் காவல் (police custody) காலம் 15 நாட்களுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், நீதிமன்றம் மேலும் 7 நாட்கள் கூடுதல் பிணைக் காவல் வழங்க அனுமதித்தது.


Police Remand/Judicial Custody :  நீதித்துறை காவல் -  கைது செய்யப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தும்போது, விசாரணை முடியும் வரை அல்லது வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவரைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவது ரிமாண்ட் எனப்படும்.


Police Custody/police remand : பிணைக் காவல் -  குற்றத்தின் உண்மைகளைக் கண்டறிய அல்லது மேலும் தகவல்களைப் பெற, நீதிமன்றத்தின் அனுமதியுடன் கைதியைத் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து காவலர்கள் விசாரிப்பது பிணைக் காவல் எனப்படும்.


பிணைக் காவல் (police remand) தொடர்பான தற்போதைய சட்டம்




பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) இன் பிரிவு 58-ன் படி, பிடியாணை (warrant) இல்லாமல் காவல்துறையினரால் கைது செய்யப்படும் ஒருவரை, பிரிவு 187-ன் கீழ் மாஜிஸ்திரேட் (நீதிபதி) அனுமதித்தாலன்றி, 24 மணி நேரத்திற்கு பிணைக் காவலில் வைக்க முடியாது.


பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS)-ன் பிரிவு 187(2)-ன் படி, விசாரணை அதிகாரிக்கு (investigating officer) 24 மணி நேரத்திற்குள் விசாரணையை முடிக்க முடியாது என்று தோன்றினால் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான காரணங்கள் இருப்பதாக நம்பினால், மாஜிஸ்திரேட் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க அனுமதிக்கலாம். இந்த பிணைக் காலம் மொத்தம் 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், வழக்கின் தன்மையைப் பொறுத்து மொத்த பிணைக் காவல் காலமான 60 அல்லது 90 நாட்களுக்குள், ஆரம்பக்கட்ட 40 அல்லது 60 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த பிணைக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.


பிரிவு 187(3)-ன் படி, போதுமான காரணங்கள் இருப்பதாக மாஜிஸ்திரேட் கருதினால், 15 நாட்களுக்குப் பிறகும் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றக் காவலில் (judicial detention) வைக்க அனுமதிக்கலாம். இந்த நீதிமன்றக் காவல் காலம் பின்வருமாறு அமையலாம், (i) மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்கள் தொடர்பான விசாரணையாக இருந்தால் 90 நாட்களுக்கு மேல்; (ii) வேறு ஏதேனும் குற்றம் தொடர்பான விசாரணையாக இருந்தால் 60 நாட்களுக்கு மேல் அனுமதிக்கலாம். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படலாம். இது பரவலாக 'இயல்பு பிணை' (default bail) என்று அழைக்கப்படுகிறது.


'சுதா சுரேஷ்' (Suda Suresh) வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை முன்வைத்தது. அதன்படி, விசாரணையின்போது புதிய உண்மைகள், கண்டுபிடிப்புகள் அல்லது துப்புக்கள் கிடைக்கப்பெறும் சூழல்களைக் கையாள்வதற்காகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே, ஆரம்பக்கட்ட 15 நாட்கள் என்ற வரம்பைத் தாண்டி, விசாரணை காலத்தின் அளவு 40 அல்லது 60 நாட்கள் வரை இந்தக் காவல் நிலை நீட்டிக்கப்படலாம்.


முன்பு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 167-ன் படி, குற்றம் சாட்டப்பட்டவரை பிணைக் காவலில் (police custody) வைப்பதற்கான அனுமதி, ஆரம்பக்கட்ட நிலையில் 15 நாட்களுக்கு மேல் வழங்கப்பட முடியாது. இருப்பினும், அந்த முதல் 15 நாள் காலத்திற்குள், மாஜிஸ்திரேட்டினால் நீதிமன்றக் காவலில் (judicial custody) இருந்து பிணைக் காவலிற்கு அல்லது பிணைக் காவலில் இருந்து நீதிமன்றக் காவலிற்கு என காவலின் தன்மையை மாற்றியமைக்க முடிந்தது. 


வழக்கறிஞர் முன்னிலை குறித்து


பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) இன் பிரிவு 38-ன் படி, "ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும்போது, ​​விசாரணை நடைபெறும் முழு நேரத்திலும் இல்லாவிட்டாலும், விசாரணையின் ஒரு பகுதியின்போது அவர் தனக்கு விருப்பமான வழக்கறிஞரைச் சந்திக்கும் உரிமை பெற்றுள்ளார்." இந்தப் பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 41-D-க்கு இணையானதாகும்.


இந்தப் பிரிவை மேலோட்டமாகப் படித்தாலே, ஒவ்வொரு விசாரணை அமர்வின்போதும் வழக்கறிஞர் தொடர்ந்து நேரில் உடனிருக்க இது அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது. வழக்கறிஞர் எவ்வளவு அருகிலோ அல்லது கேட்கக்கூடிய தொலைவிலோ இருந்தாலும் சரி, முழு நேரமும் உடனிருப்பது கட்டாயமாக்கப்படவில்லை. தொடர்ந்து உடனிருப்பதற்கான நிபந்தனையற்ற உரிமை என்பது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 38-இல் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளை மீறுவதாகும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. எனவே, உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மாற்றியமைத்த உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்க்கக்கூடிய வகையிலான விசாரணை நடைபெறும் இடத்திற்குள் மட்டுமே வழக்கறிஞர் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், எந்தச் சூழலிலும் விசாரணை நடவடிக்கைகளில் அந்த வழக்கறிஞர் தலையிட அனுமதிக்கப்படக்கூடாது.




காணொளிப் பதிவு மற்றும் சிசிடிவி (CCTV) ஆவணப்படுத்தல் குறித்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் பயணத்தை இடைவிடாமல் காணொளிப் பதிவு செய்வதற்குப் பதிலாக, உண்மையான விசாரணை அமர்வு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருடன் மேற்கொள்ளப்படும் தகவல் கண்டுபிடிப்பு அல்லது சான்றுப் பொருட்கள் மீட்பு நடவடிக்கைகள் (discovery or recovery proceedings) ஆகியவற்றை ஒலி-ஒளிப் பதிவு (audio-visually recorded) செய்வதே சட்டத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் நீதிமன்றம் கூறியது.


ஆர்.கே. விஜ் ஒரு முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.


Original Link: Supreme Court clarifies scope of police custody under BNSS.

Share: