2030-ஆம் ஆண்டுக்குள் 'கார்பன் உமிழ்வில்லா நிலை' என்கிற இலக்கை நோக்கி இந்திய இரயில்வேதுறை எவ்வாறு முன்னேறி வருகிறது? -கண்ணன் கே

இரயில்வேதுறையின் கார்பன் உமிழ்வைக் குறைப்பது இந்தியாவின் காலநிலை இலக்குகள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். கார்பன் உமிழ்வைக் குறைக்கப் பின்பற்றப்படும் முதன்மை உத்திகள் யாவை? மேலும், இந்த மாற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடிய சவால்கள் என்னென்ன?


இந்திய இரயில்வே நாட்டின் மிகப்பெரிய மின்சார நுகர்வோரில் ஒன்றாகும்.  இது நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் சுமார் 2 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. எனவே, இந்திய ரயில்வேயின் கார்பன் உமிழ்வைக் குறைப்பது, இந்தியாவின் காலநிலை மாற்ற இலக்குகள், நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் பரந்த அளவிலான வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய இரயில்வே தனது பரந்த இரயில்பாதை (Broad-gauge) வலைப்பின்னலில் 99.6 சதவீதத்தைப் மின்மயமாக்கி, 2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில்லா நிலை (Net-zero carbon emitter) என்ற இலக்கை அடையத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், டீசல் மற்றும் பிற பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து முழுமையாக மின்சார இயங்குவிசைக்கு மாறுவது என்பது, உட்கட்டமைப்பு, மின்சாரம் கொள்முதல் செய்தல், இரயில் இயக்க முறைகள், நிதி மேலாண்மை மற்றும் பிற துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.






இந்திய இரயில்வேயின் 'கார்பன் உமிழ்வில்லா நிலை' இலக்கின் உத்திசார்ந்த முக்கியத்துவம் என்ன? கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முக்கிய உத்திகள் யாவை, மேலும் இந்த மாற்றத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன?


ரயில்வேயின் '’உமிழ்வில்லா' இலக்கினால் கிடைக்கும் நன்மைகள்


2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவரும் நிலையில், இந்திய இரயில்வேதுறை மிகப்பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது. 68,000 கிலோமீட்டருக்கும் அதிகமான இரயில் பாதைகளைக் கொண்டுள்ள இந்திய இரயில்வே, நாட்டின் சரக்குப் போக்குவரத்து வலையமைப்புகளின் அடித்தளமாகத் திகழ்வதோடு, கோடிக்கணக்கான மக்களுக்குப் பாதுகாப்பான, நம்பகமான பயண வசதியையும் வழங்கி வருகிறது.


வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள், ரயில் சேவைகளையும் பயண அனுபவத்தையும் மேம்படுத்தி வருகின்றன. அதேவேளையில், சரக்குகளுக்கெனத் தனியாக அமைக்கப்பட்ட விரைவுப் பாதைகள் (Dedicated Freight Corridors (DFCs)) பொருட்கள் விரைவாக சென்றுசேர உதவுகின்றன. இந்த மேம்பாடுகளுடன் இணைந்து, இந்திய ரயில்வே 2030-ஆம் ஆண்டிற்குள் 'கார்பன் உமிழ்வில்லா நிலை' (Net-zero carbon emissions) என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கானது இரயில்வேதுறைக்கு மட்டுமின்றி, இதர விஷயங்களிலும் பல நன்மைகளைத் தரக்கூடியது.


காலநிலை உறுதிமொழிகள்: இரயில்வேதுறையின் கார்பன் உமிழ்வைக் குறைப்பது, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் இந்தியா புதுப்பித்துள்ள தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கு ஆதரவாக அமையும். இதன்படி, 2005-ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடும்போது, 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு செறிவை (Emission intensity) 45 சதவீதம் அளவிற்கு குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் உமிழ்வு செறிவு என்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒவ்வொரு அலகு மதிப்பிற்கும் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறிப்பதாகும்.

எரிசக்திப் பாதுகாப்பு: டீசல் இரயில்களில் இருந்து மின்சார இரயில்களுக்கு மாறுவது, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் நிலையை இந்தியாவுக்குக் குறைக்கும். மேலும், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கம் போன்ற சர்வதேச மோதல்களால் ஏற்படும் உலகளாவிய எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகளில் இருந்து நாட்டிற்குப் பாதுகாப்பையும் அளிக்கும். இரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதிக விலையுள்ள இறக்குமதி டீசலுக்குப் பதிலாக உள்நாட்டு மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்திய இரயில்வேதுறைக்கு எரிபொருள் செலவில் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் முதல் 15,000 கோடி ரூபாய் வரை குறையும் என்றும் கூறப்படுகிறது.


சுற்றுச்சூழல் நன்மைகள்: சரக்கு இரயில்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்வதில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் நன்மைகள் உள்ளன. லாரிகள் போன்ற சாலைப் போக்குவரத்து மூலம் பொருட்களை எடுத்துச் செல்வதைவிட, இரயில் மூலம் எடுத்துச் செல்லும்போது கார்பன் உமிழ்வு 89 சதவீதம் அளவுக்குக் குறைகிறது. எனவே, தொழிற்துறை விநியோகச் சங்கிலிகளில் இரயில் மூலமாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, இந்தியா தனது கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அடைய முடியும்.


உள்கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மையை நவீனமயமாக்குதல்


இருப்பினும், 'உமிழ்வில்லா' நிலையை அடைவதற்கு, இந்திய இரயில்வே சிறிய அளவிலான செயல்திறன் மேம்பாடுகளுடன் நின்றுவிடாமல், அதன் கட்டமைப்பு, செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகும். இரயில் பாதைகளில் ஏறக்குறைய 99.6 சதவீதம் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டதால், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை, மின்சாரத்திற்குத் தூய்மையான எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துவதாகும்.


மிக முக்கியமான உட்கட்டமைப்பு மாற்றம் என்பது, தூய்மையான எரிசக்தியை இரயில்வே செயல்பாடுகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதாகும். இந்திய இரயில்வே தரையில் அமைக்கப்படும் மற்றும் கூரைகளில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்உற்பத்தி வசதிகளை மேம்படுத்தி வருகிறது. மேலும், அதிக திறன் கொண்ட மேல்நிலை மின்சாரக் கம்பிகளை நிறுவுதல், இரயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகளைப் பசுமைக் கட்டிடங்களாக மாற்றுதல், மற்றும் நிலையான கழிவு மற்றும் நீர் மேலாண்மை முறைகளைப் பின்பற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.


இரயில்வேயின் அன்றாட இயக்கத்தில், டீசல் மின்னாக்கிகளைப் (ஜெனெரேட்டர்) பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் 'End-on-Generation' (EoG) ஆற்றல் பெட்டிகளுக்குப் பதிலாக, மேல்நிலை மின்சாரக் கம்பிகளிலிருந்தே நேரடியாக மின்சாரத்தை இழுத்துப் பயன்படுத்தும் 'Head-on-Generation' (HoG) அமைப்புகள் மாற்றப்பட்டு வருகின்றன. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ மற்றும் வந்தே பாரத் போன்ற முக்கிய  இரயில்கள் ஏற்கனவே முழுமையாக இந்த 'Head-on-Generation' (HoG) முறைக்கு மாறிவிட்டன. அதேநேரத்தில் பிற விரைவு மற்றும் அஞ்சல் இரயில்களிலும் இத்தொழில்நுட்பம் மாற்றப்பட்டு வருகிறது.


EoG (End-on-Generation): ரயிலின் கடைசியில் தனிப் பெட்டியில் (Power Car) பெரிய டீசல் மின்னாக்கிகளை வைத்து, ரயில் பெட்டிகளுக்கு (ஏசி, விளக்குகள், மின்விசிறிகள்) மின்சாரம் தயாரிக்கும் பழைய முறை.


HoG (Head-on-Generation): ரயிலை இழுக்கும் என்ஜினே மேலிருக்கும் மின்சாரக் கம்பியிலிருந்து (Overhead Wires) மின்சாரத்தை நேரடியாகப் பெற்று, ரயில் பெட்டிகளுக்கும் பகிர்ந்து அளிக்கும் புதிய, மாசு ஏற்படுத்தாத முறை.


இந்த மாற்றமானது பெருமளவிலான எரிபொருளைச் சேமிப்பதுடன், அதற்கான செலவுகளையும் வெகுவாகக் குறைக்கிறது. மேலும், ரயிலின் இரு முனைகளிலும் டீசல் ஜெனரேட்டர் பெட்டிகள் தேவையில்லை என்பதால், 'Head on Generation' (HoG) முறை பயணியர் இருக்கைகளின் எண்ணிக்கையையும் உயர்த்துகிறது. அதுமட்டுமன்றி, அதிக எடையுள்ள சரக்குகளை அதிவேகத்தில் கொண்டு செல்ல உதவும் பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் மூலம் இந்திய இரயில்வேயின் ஒட்டுமொத்தச் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.


நிதி ஆதாரங்களைப் பொறுத்தவரையில், இந்திய இரயில்வேத் துறை வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட சந்தைக் கடன்கள் (Off-budget market borrowings), இரயில்வே ஆற்றல் மேலாண்மை நிறுவனம் (Railway Energy Management Company Limited (REMC Ltd)) மூலமாகத் தனியார் துறையின் பங்களிப்பு, மற்றும் பசுமைப் பத்திரங்கள் (Green bonds), சர்வதேச நிதி நிறுவனங்களுடனான கலப்பு நிதிப் பங்குகள் போன்ற நிதியியல் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறது. இரயில்வேயின் செயல்பாடுகளை நிதிரீதியாக மேலும் திறம்படச் செய்வதையே இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முக்கிய உத்திகள் யாவை?


இந்திய இரயில்வே கார்பன் உமிழ்வில்லா நிலை இலக்கை அடைவதற்கான உத்தி, ஒன்றோடொன்று தொடர்புடைய, தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது:


1. முழுமையான மின்மயமாக்கல், இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவைக் குறைக்கிறது, தொடர்வண்டிகளின் போக்குவரத்துத் திறனை உயர்த்துகிறது மற்றும் நச்சு வாயு உமிழ்வை முற்றிலுமாகக் ஒழிக்கிறது. இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் தங்களின் இரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்கியுள்ளன. வணிகப் பயன்பாட்டில் உள்ள பிற இரயில் பாதைகள் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கும் அகலப் பாதைகளாக (BG) மாற்றப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பாரம்பரியச் சிறப்புமிக்க இரயில் பாதைகள் ஹைட்ரஜன் எரிபொருள் அல்லது மின்கலன் மூலம் இயங்கும் அமைப்புகளாக மாற்றப்படுகின்றன.


2. இந்திய இரயில்வேக்கு 2029–30-ஆம் ஆண்டிற்குள் சுமார் 8,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேவையைச் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் பூர்த்தி செய்ய, 2030-ஆம் ஆண்டிற்குள் 30,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. நிலப்பரப்பில் அமைக்கப்படும் சூரியஒளி மின் நிலையங்கள், இரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரியஒளி மின்தகடுகள் மற்றும் கடலோரக் காற்றாலைகள் மூலம் இந்த ஆற்றல் பெறப்படும்.


3. மின்மயமாக்கல் சாத்தியமில்லாத வழித்தடங்களான சில கிளை ரயில் பாதைகள் (Spur lines) மற்றும் பாரம்பரிய வரலாற்று வழித்தடங்கள் (Heritage routes) போன்ற இடங்களில் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தப்படும். 'பாரம்பரியத்திற்கான ஹைட்ரஜன்' (Hydrogen for Heritage) என்ற புதிய முயற்சியின்கீழ், டீசல் இரயில்கள் எரிபொருள் கலன்களைக் (Fuel cells) கொண்டு பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மின்கம்பிகளை அமைக்க முடியாத இடங்களில் பெட்ரோலிய எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், இந்திய ரயில்வே 5 சதவீதம் உயிரி டீசல் கலவைகளை (B5) பயன்படுத்தி வருகிறது.


4. 100-க்கும் மேற்பட்ட முக்கிய இரயில் நிலையங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் இயற்கை வழி குளிர்ச்சி முறை (Passive cooling) போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக, இந்தியப் பசுமைக்கட்டிடக் குழுமம் - இந்தியத் தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry-Indian Green Building Council (CII-IGBC)) அல்லது ஆற்றல் திறன் பணியகத்தின் (Bureau of Energy Efficiency (BEE)) தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளன. மேலும், இரயில்வே உற்பத்தி பிரிவுகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தியை ஊக்குவிக்கும் ‘GreenCo’ மதிப்பீட்டு அமைப்பின்கீழ் கொண்டு வரப்படுகின்றன.


5. இந்திய இரயில்வே நிதிக் கழகம் (Indian Railway Finance Corporation (IRFC)), இரயில் பாதை மின்மயமாக்கல் மற்றும் இரயில் வழித்தடங்களைப் புதுப்பித்தல்  ஆகிய திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட பசுமை நிதி வசதிகளைப் பயன்படுத்தி வருகிறது. இதற்காக சர்வதேச சந்தைகளில் வழக்கமான பசுமைப் பத்திரங்களையும் வெளியிடுகிறது. மேலும், நிலையான மற்றும் சாதகமான விலையில் பசுமை மின்சாரத்தைப் பெறுவதற்காக, நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களையும் பயன்படுத்தி வருகிறது.


செயல்திறன்மிக்க அமலாக்கத்திற்கான கொள்கை கட்டமைப்பு


கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இந்த முயற்சியானது, அதைச் திறம்படச் செயல்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்டக் கொள்கைக் கட்டமைப்பின்மூலம் ஆதரிக்கப்படுகிறது. தேசிய இரயில் திட்டம் 2030 (National Rail Plan (NRP)), சரக்கு போக்குவரத்தில் இரயில்வேயின் பங்கினை சுமார் 27 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்த்துவதற்கான ஒரு முக்கிய உத்திசார் திட்டத்தை வழங்குகிறது. சரக்குகளை மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதைகளுக்கு மாற்றுவதன் மூலம், நெடுஞ்சாலைச் சரக்குப் போக்குவரத்தால் ஏற்படும் அதிகப்படியான கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


‘Perform, Achieve and Trade’ திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட நுகர்வோர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இரயில்வே மண்டலங்களிலும் தவறாமல் ஆற்றல் தணிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஆற்றல் பாதுகாப்புச் சட்டமானது சட்டப்பூர்வ விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்கிறது. இது தொடர்ச்சியான ஆற்றல் செயல்திறன் தரநிலைகளைப் பராமாரிக்க உதவுகிறது.


இந்திய இரயில்வே தனது பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்காக, சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று வருகிறது. உதாரணமாக, கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கு (Eastern Dedicated Freight Corridor) ஆதரவளிக்கும் இரயில்வே தளவாட திட்டத்திற்காக உலக வங்கி 24.5 கோடி அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டாண்மைகள் கனரக சரக்கு ரயில் இயக்கங்களை மேம்படுத்தவும், சூரிய ஆற்றல்மயமாக்கல் (Solarisation) மற்றும் கார்பன் கண்காணிப்பு அமைப்புகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் உதவுகின்றன.


கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் உள்ள நடைமுறைச் சவால்கள்


வேகமான கட்டமைப்பு முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், முழுமையான கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கை நடைமுறையில் செயல்படுத்துவதில் சில முக்கியமான சவால்கள் உள்ளன.


முதலில், இரயில்வே பாதைகளை மின்மயமாக்குவது இரயில்களிலிருந்து நேரடியாக வெளியேறும் புகையை முற்றிலுமாகத் தடுத்தாலும், இதன்மூலம் கிடைக்கும் கார்பன் உமிழ்வு குறைப்பு என்பது நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தி முறையையே சார்ந்துள்ளது. நாட்டின் மின் உற்பத்தியானது பெருமளவில் நிலக்கரியை மையமாகக் கொண்டே இயங்குகிறது. மாநில மின்விநியோக நிறுவனங்கள் இன்னும் நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்களையே அதிகம் நம்பியிருப்பதால், இரயில்வே மின்மயமாக்கலானது தற்போதைக்கு இரயில்கள் இயங்கும் இடத்தில் வெளியாகும் புகையை, மின்சாரம் உற்பத்தியாகும் அனல்மின் நிலையங்களுக்கு மட்டுமே இடமாற்றம் செய்கிறது. எனவே, இந்திய இரயில்வேயின் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சி வெற்றி பெற்றாலும், அது உண்மையிலேயே பருவநிலை மாற்றத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்திக் கட்டமைப்பும் கார்பன் உமிழ்வற்றதாக மாற வேண்டும்.


இரண்டாவதாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் நிலையற்றத்தன்மை மற்றும் சேமிப்புச் செலவுகள் ஆகியவை பெரிய சவாலாக உள்ளன. இரயில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் தேவைப்படும் அதிகப்படியான மின்சார ஈர்ப்பு விசை (Traction power surges), பகல் நேரத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சூரிய மின் உற்பத்தி போதுமானதாக இல்லை. ஆற்றல் உற்பத்தியில் ஏற்படும் இந்த மாறுபாடுகளைச் சமநிலைப்படுத்தத் தேவைப்படும் மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems (BESS)) போன்ற சேமிப்புத் தொழில்நுட்பங்களை நிறுவுவதற்கு, தற்போதைய சூழலில் மிக அதிக மூலதனம் தேவைப்படுகிறது.


வணிகரீதியாக பயன்பாட்டிற்கு வரக்கூடிய மாற்று எரிபொருள்கள் இல்லாதது மற்றொரு பெரிய சவாலாகும். பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் கலன் (Green Hydrogen Fuel Cell) மூலம் இயங்கும் இரயில்களை தயாரிப்பதற்கான செலவு, அவற்றைச் சேமித்து வைப்பதற்கான செலவு மற்றும் விநியோகச் சங்கிலி பராமரிப்புச் செலவு ஆகியவை சாதாரண மின்கம்பி அமைப்பைக் கொண்டு இயங்கும் இரயில்களைவிட மிகவும் அதிகமாக உள்ளன. இதனால், மின்மயமாக்கப்படாத இரயில் பாதைகளை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாததாக மாற்றுவது அதிக செலவு ஏற்படுத்துபவையாக உள்ளன.


முன்னோக்கிச் செல்லும் வழி


எனவே, முழுமையாகக் கார்பன் உமிழ்வற்ற இரயில்வே அமைப்பை உருவாக்குவதற்கு மூன்று முக்கியமான தேவைகள் உள்ளன. முதலாவதாக, இரயில்வே துறையானது சாதாரண புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்முதல் ஒப்பந்தங்களில் இருந்து மாறி, ஆற்றல் சேமிப்பு வசதிகளுடன் (Energy storage infrastructure) 24 மணி நேரமும் தொடர்ச்சியாகக் கிடைக்கும் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலைக்கு நகர வேண்டும். இரண்டாவதாக, இறுதி-கட்ட இரயில் பெட்டிகளை நகர்த்தும் பணிகளுக்கும் மற்றும் பழமையான பாரம்பரிய இரயில் பாதைகளுக்கும் பிரத்யேகமாக ஹைட்ரஜன் மற்றும் மின்கலன் மூலம் இயங்கும் இரயில்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.


இந்தத் தொழில்நுட்பங்களைச் சிக்கனமான முறையில் பயன்படுத்துவதற்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பயனுள்ள முதலீடுகள் தேவைப்படுகின்றன. மேலும், இந்திய மின்சாரத் துறையில் ஒட்டுமொத்த அளவிலான கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், இரயில்வேயின் மின்மயமாக்கல் முயற்சிகள் பெட்ரோலிய எரிபொருட்களைச் சார்ந்து வாழும் தன்மையை இரயில்வேயிலிருந்து மின்விநியோகக் கட்டமைப்பிற்கு மாற்றுமே தவிர, உண்மையான பூஜ்ஜியக் கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைய உதவாது என்றும் தெரிவிக்கின்றனர்.


Original Link: How the Indian Railways moves closer to becoming net-zero carbon emitter by 2030.

Share: