இதற்கு முன்பு, இந்தூரில் (Indore) அசுத்தமான குழாய் நீரால் 10 பேர் உயிரிழந்தனர். சிறந்த பொறியியல் நடைமுறைகளுக்கும் கள யதார்த்தங்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளிதான் இப்பிரச்சனையின் ஒரு பகுதி என்று நிபுணர் ஒருவர் விளக்குகிறார்.
தெற்கு டெல்லியின் வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியான குல்மோஹர் பூங்காவில் (Gulmohar Park), கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய்கள் மூலம் கழிவுநீர் கலந்த தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை, மாசடைந்த நீர் எந்தப் பகுதியில் இருந்து குழாய்க்குள் நுழைகிறது என்பதை டெல்லி குடிநீர் வாரியத்தால் (Delhi Jal Board (DJB)) இன்னும் திட்டவட்டமாகக் கண்டறிய முடியவில்லை. இந்த துர்நாற்றமடித்த நீரால் பல குடியிருப்பாளர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு தண்ணீர் லாரிகளையும் (Water tankers) மற்றும் பாட்டில் தண்ணீரையும் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இந்தூர், காந்திநகர், புனே, நொய்டா, குர்கான் மற்றும் பெங்களூரு போன்ற பிற நகரங்களிலும் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. சமீபத்தில் இந்தூரில் நடந்த சம்பவத்தில், நீர் மாசுபட்டதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இது இந்தத் தீவிரப் பிரச்சனை குறித்து நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
குடிநீருடன் கழிவுநீர் கலப்பதற்குப் பல முறையான அமைப்புக் காரணங்கள் உள்ளன. பொறியியல்ரீதியாகக் கூறினால், குடிநீர் குழாய்களில் எப்போதும் மாசு ஏற்படுவதற்கான சில அபாயங்கள் இருக்கவே செய்கின்றன. குழாய்களில் ஏற்படும் மிகச்சிறிய கசிவுகள் அல்லது துளைகள் வழியாகக் கூட கழிவுநீர் உள்ளே நுழைந்துவிட முடியும். குறிப்பாக, நீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, குழாய்களுக்குள் இருக்கும் நீரின் அழுத்தம் குறையும் போது குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.
குடிநீர் குழாய்கள் மிகவும் பழமையாகி, துருப்பிடித்துப் போகும் போதும், ஏதேனும் கட்டுமானப் பணிகளின் போது அவை சேதமடையும் போதும், அல்லது அவற்றைச் சுற்றி கழிவுநீரும் இதர அசுத்தங்களும் தேங்கி நிற்கும் போதும் இப்பிரச்சனை இன்னும் மோசமாகிறது.
இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான கொள்கை முடிவுகள் உள்ளன. முதலாவதாக, குடிநீர் மாசடைவதற்கான அபாயம் எப்போதும் இருக்கவே செய்கிறது. இதை நம்மால் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் மட்டுமே முடியுமே தவிர, முற்றிலும் இல்லாமல் செய்ய முடியாது. இரண்டாவதாக, கழிவுநீர் குழாய்களும் குடிநீர் குழாய்களும் மிக அருகருகே இருப்பதால்தான் இந்த நீர் மாசுபடுதல் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், குடிநீர் விநியோகக் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமைப்பு ஆகிய இரண்டு விஷயங்களிலுமே சமமாக கவனம் செலுத்த வேண்டும்.
குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை
குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளில் உள்ளூர் அளவில் பல தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை எப்போதும் சரியான பொறியியல் தரநிலைகளைப் பின்பற்றி அமைப்பதில்லை. தினமும் சில மணிநேரங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால், மற்ற நேரங்களில் குழாய்கள் காலியாகவே இருக்கின்றன. இதனால், குழாய்களுக்குள் கழிவுநீர் எளிதாக நுழைந்து விடுகிறது.
பொறியாளர்கள் 24 மணி நேரத் தண்ணீர் விநியோக முறையே சிறந்தது எனக் கருதுகின்றனர். ஏனெனில், அப்படிச் செய்யும்போது குழாய்களுக்குள் எப்போதும் அழுத்தம் இருக்கும். இதனால் வெளிப்புற அசுத்தங்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படும். இருப்பினும், இந்த முறைக்கு அதிக தண்ணீரும், விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதியும் தேவைப்படும்.
மேலும், தரைக்கு அடியில் இருக்கும் குழாய்கள் மற்றும் விநியோக அமைப்புகளின் துல்லியமான நிலைமை என்னவென்று முழுமையாகத் தெரிவதில்லை. சில மாதிரித் திட்டங்களைத் தவிர, இந்திய நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளின் முழுமையான டிஜிட்டல் வரைபடங்கள் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வேலை செய்யும் உள்ளூர் களப் பணியாளர்கள், தங்களின் அனுபவத்தின் மூலம் அந்த அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்திருக்கலாம். ஆனால், உள்ளூர் அளவில் இருக்கும் ஆபத்துகள் பற்றிய அவர்களின் இந்த அனுபவ அறிவு, அதிகாரப்பூர்வ திட்டமிடலிலோ அல்லது அரசு முடிவெடுக்கும் செயல்முறைகளிலோ சரியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.
கழிவுநீர் மேலாண்மை (Sewage management) என்பது இன்னும் சிக்கலான ஒன்றாகும். மேலும், இது ஒரு பகுதியாக அரசு அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு வெளியேயும் உள்ளது. வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில்கூட, கழிவுநீர் பாதைகளில் அடைப்பு ஏற்படும்போதோ அல்லது கழிவுநீர் பாதைகளே இல்லாதபோதோ, அவை மழைநீர் வடிகால்களிலும் மற்றும் இயற்கை நீர்நிலைகளிலும் திருப்பிவிடப்படுகின்றன. நகர்ப்புற மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு முறையான கழிவுநீர் கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதற்குப் பதிலாக அவர்கள் கழிவுநீர்த் தொட்டிகளையும் மற்றும் கழிவுக்குழிகளையும் நம்பியிருக்கிறார்கள். இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக அகற்றுவதற்கு நடைமுறையில் வேறு வழிகள் இல்லாததால், அவை திறந்தவெளி வடிகால்களிலும் நீர்நிலைகளிலும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
குடிசைப் பகுதிகள், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் நகர்ப்புறக் கிராமங்கள் ஆகியவை இந்தப் பிரச்சனைக்கு மேலும் பல சிக்கலான சவால்களைக் கொண்டுவருகின்றன. முதலாவதாக, சட்டரீதியான விதிகள் நகர்ப்புற அரசு அமைப்புகள் இப்பகுதிகளுக்கு முழுமையான குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை வழங்குவதைத் தடுக்கின்றன (இப்படியான சட்டவிரோத குடியிருப்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விதிகள் உள்ளன). இரண்டாவதாக, இந்த இடங்களின் குறுகலான, வளைந்து நெளிந்த மற்றும் சமமற்ற தெருக்களின் அமைப்பால் அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மிகவும் கடினமாக உள்ளது.
பல நகரங்களில், ஒரே ஒரு பிரச்சனையின் வெவ்வேறு பகுதிகளைக் கையாள்வதற்கு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் பொறுப்பாக உள்ளன. உதாரணமாக டெல்லியில், டெல்லி குடிநீர் வாரியத்தின் (DJB) உள்கட்டமைப்பு வசதிகளோடு, மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத் துறை மற்றும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. ஆனால், களத்தில் இவர்களுக்கு இடையே ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.
நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் உள்ள நிறுவனக் குறைபாடுகள் மற்றும் சவால்கள்
தேசிய சுற்றுச்சூழல் சட்டங்கள், பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றிற்கான தரநிலைகளை வகுத்துள்ளன. ஆனால், இந்தச் சேவைகளை மக்களுக்குச் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரிய இடைவெளிகள் உள்ளன.
பாதுகாப்பான குடிநீர் பெறுவதற்கான உரிமை, இந்திய அரசியலமைப்பின்கீழ் "வாழ்வுரிமை" (Right to life) என்பதோடு பரவலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உரிமை மக்களுக்கு எப்படிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான விதிகள் ஏதும் இல்லை.
கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகள் என்பவை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (Sewage Treatment Plants (STP)) இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேறும் இடத்தில் மட்டுமே பொருந்தும். இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைவதற்கு முன்பு, அது எப்படி மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்பதை இந்த விதிகள் விளக்குவதில்லை. மேலும், பொதுவான கழிவுநீர் குழாய் இணைப்புகளுடன் இணைக்கப்படாத கழிவுநீர் அமைப்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விதிகளும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
குடிநீரின் தரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கும் (Environmental laws), நகர அமைப்புகளின் சேவை மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை வழிநடத்தும் நிறுவன விதிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.
இந்த நிறுவனக் கட்டமைப்பானது இந்தியாவில் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. அரசு நிறுவனங்கள் பல வழிகாட்டுதல்களையும் தரநிலைகளையும் வெளியிட்டிருந்தாலும், அவை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல. மேலும், அவை பெரும்பாலும் கள நிலவரங்களைப் பிரதிபலிப்பதில்லை. நாட்டின் நிலைமைகள் ஒவ்வொரு நகரத்திற்கும், ஏன் ஒரே நகரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் மாறுபடுவதால், அனைத்து இடங்களுக்கும் ஒரே மாதிரியான விதியைப் பயன்படுத்துவது பலனளிக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைச் சேவைகளை டெல்லி குடிநீர் வாரியம் (DJB) போன்ற ஒரு சட்டப்பூர்வ அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா, அல்லது பிரஹன்மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation (BMC)) போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. பெரிய அளவில் உள்கட்டமைப்பு பணிகளைச் செய்யும்போது செலவுகளைக் குறைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் திட்டங்களைப் பாதுகாக்கவும் 1970 மற்றும் 1980-களில் பல பெரிய நகரங்களில் இத்தகைய சட்டப்பூர்வ குடிநீர் வாரியங்கள் அமைக்கப்பட்டன. இதற்கு முதன்முதலாக 1964-ஆம் ஆண்டில் பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (Bengaluru Water Supply and Sewerage Board (BWSSB)) நிறுவப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட நிர்வாக அமைப்பு மற்றொன்றைவிட சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மும்பை அல்லது கொல்கத்தாவின் நகராட்சி குடிநீர் விநியோக ஏற்பாடுகள், பெங்களூரு அல்லது சென்னையின் குடிநீர் வாரியங்கள் வழங்கும் சேவையைவிட சிறந்ததாகவோ அல்லது மோசமானதாகவோ இருக்க வேண்டியதில்லை. இதற்கான முடிவுகள் பெரும்பாலும் அந்த அமைப்பின் செயல்பாட்டு கலாச்சாரம் மற்றும் அதன் நிர்வாக மற்றும் அரசியல் தலைமையின் தரத்தைப் பொறுத்தே அமைகின்றன. நடைமுறையில், உள்ளூர் அதிகார அமைப்புகளின் முயற்சிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் மாநில அரசாங்கங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
பாதுகாப்பான குடிநீரை வழங்குவது என்பது வெறும் ஒரேயொரு திட்டத்தாலோ அல்லது அரசாங்க விதிகளாலோ மட்டும் சாத்தியமாகிவிடாது. அதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் விதிகளுடனும் திட்டங்களுடனும் சேர்த்து, பொது நிர்வாக அமைப்புகளையும் மேம்படுத்தும் ஒரு முறையான அணுகுமுறை தேவைப்படுகிறது. நமது நகரங்களில் இருக்கும் தற்போதைய நிலைமைக்கும், சிறந்த பொறியியல் நடைமுறைகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு எது மிக முக்கியமோ, அதற்கு முன்னுரிமை அளித்துச் செயல்படும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த இடைவெளியைக் குறைக்க முடியும்.
மேலும், பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள், இந்தச் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவை பிரம்மாண்டமான உள்கட்டமைப்புகளையும், அந்தந்தப் பகுதியின் சிக்கலான உள்ளூர் சூழ்நிலைகளையும் சார்ந்தது என்பதால், இந்த அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதோ அல்லது முழுக்க முழுக்க ஒரேயொரு அமைப்பை மட்டுமே நம்பியிருப்பதோ சாத்தியமற்றது ஆகும்.
தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள், டிஜிட்டல் கண்காணிப்பு, நீரின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnerships) ஆகியவை அனைத்தும் இதற்கு உதவக்கூடும். ஆனால், இவை வலுவான பொது நிர்வாகம், அதிகாரம் மற்றும் அரசின் நேரடிக் கண்காணிப்பு இருக்கும்போது மட்டுமே முழுமையாகச் செயல்படும் என்கின்றனர்.
நீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பை நிர்வகிப்பதற்கு, அரசு அதிகாரிகள் நேரடியாகக் களத்திற்குச் செல்ல வேண்டும். இந்த உள்கட்டமைப்புகள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறுகிய தெருக்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வது அவசியமாகும். நிறுவன சீர்திருத்தங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், உள்ளூர் அளவில் மக்கள், அரசு மற்றும் இந்த உள்கட்டமைப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்துவதாகவும் முறைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
மேலும், நீர் மாசுபடுவதற்கான ஆபத்தை எப்போதும் முழுமையாக நீக்க முடியாது என்பதால், வரவிருக்கும் அபாயங்களை முன்கூட்டியே கணித்து, அவற்றை விரைவாகக் கண்டறிந்து, உடனடியாகவும் திறம்படவும் செயல்படக்கூடிய அமைப்புகளை உருவாக்குவதுதான் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சவாலாகும்.
அர்கஜா சிங், புது டெல்லியில் உள்ள Centre for Policy Research (CPR) அமைப்பில் ஓர் ஆய்வாளர் ஆவார்.
Original article : Posh Delhi colony gets sewage in taps: How urban water systems fail, what needs to change. -Arkaja Singh