அந்தமான் தீவு ஏன் இந்தியாவின் அடுத்த ஹைட்ரோகார்பன் களமாகப் பார்க்கப்படுகிறது? இந்தத் தீவு ஏன் இவ்வளவு நம்பிக்கைக்குரியதாகக் கருதப்படுகிறது? சமீபத்திய கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள புவியியல், புவிநிலவியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே.
தற்போதைய செய்தி :
அரசுக்குச் சொந்தமான இந்தியா ஆயில் நிறுவனம் (Oil India Ltd (OIL)), அந்தமான் கடலில் தனது இரண்டாவது புதிய இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக்கண்டுபிடிப்பு, இந்தப்பகுதி வரும் ஆண்டுகளில் ஒரு முக்கிய ஹைட்ரோகார்பன் உற்பத்தி மண்டலமாக உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்தச் சூழலில், இந்தக் புதிய கண்டுபிடிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. சில நாட்களுக்கு முன்னர், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், 355 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள விஜயபுரம்-3 ஆய்வு கிணற்றில் மேற்கொள்ளப்பட்டது என்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார்.
2. செப்டம்பர் 2025-ல் விஜயபுரம்-2 கிணற்றில் OIL நிறுவனம் முன்னதாக எரிவாயுவைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இதன் மூலம், இந்தத் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 2-வது எரிவாயு வளம் கொண்ட கிணறு இதுவாகும்.
3. அந்தமானில் நடைபெற்றுவரும் ஆய்வுத் திட்டத்தின்கீழ் இதுவரை தோண்டப்பட்ட மூன்று ஆய்வு கிணறுகளில் இரண்டு கிணறுகளில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது அந்தப்பகுதியில் ஆய்வுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மற்றொரு ஊக்கமளிக்கும் படியாக இதைக் குறிப்பிட்ட ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தக் கண்டுபிடிப்பு கடலோர ஆய்வு முயற்சிகளின் மூலம் ஏற்படும் வெற்றியைக் காட்டுகிறது என்று கூறினார். X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், இயோசீன் பாறை அடுக்கில் 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனையில், தொடர்ச்சியான எரிப்பு நடவடிக்கைகள் மூலம் இயற்கை எரிவாயு இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
5. 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட உற்பத்திச் சோதனைகள் சாதகமான முடிவுகளைக் காட்டியதாக எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. துளையிட்ட (perforation) பிறகு, கிணற்றில் அழுத்தம் வேகமாக அதிகரித்து, இயற்கை எரிவாயு (gas) உற்பத்தி தொடங்கியது. இது அந்த நீர்த்தேக்கப் பாறை (reservoir) நல்ல உற்பத்தித் திறனும் நல்ல பண்புகளையும் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
6. அடுத்தடுத்து நிகழும் இது போன்ற கண்டுபிடிப்புகள், இந்தியாவின் கடல்சார் எரிவாயுத் துறைக்கு, குறிப்பாக இதுவரை அதிகம் ஆராயப்படாத அந்தமான் பகுதிக்கு ஒரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகின்றன.
7. விஜயபுரம்-3 பகுதியில் கண்டறியப்பட்ட இந்த வளம், அங்கு செயல்படும் ஒரு பெட்ரோலிய அமைப்பு இருப்பதற்கான கூடுதல் சான்றை அளிப்பதாகவும், அந்தப்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பதைக் காட்டலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
8.மூன்று ஆய்வுக்கிணறுகளில் இருந்து இரண்டு எரிவாயுக் கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளதால், அந்தமான் கடலோரப் பகுதியானது, எதிர்கால எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்கான இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
9. குறிப்பாக, நாட்டின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பிற்குப் முக்கியத்துவம் அளிக்கவும், இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அந்தமான்-நிக்கோபார் தீவில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன் இருப்புகளைக் கண்டறிந்து ஆய்வுசெய்ய அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
10. ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (Hydrocarbon Exploration and Licensing Policy (HELP)) அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தமான்-நிக்கோபார் தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்விற்காக அரசாங்கம் நான்கு பகுதிகளை ஒதுக்கியது இது தோராயமாக 23,261 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
புவியியல் இருப்பிடம்
1. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், 150 கி.மீ அகலமுள்ள பத்தாவது அட்சரேகை கால்வாய்' (Ten Degree Channel) வடக்கே அந்தமான் தீவுகள் மற்றும் தெற்கே நிக்கோபார் தீவுகள் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 836 தீவுகளின் ஒரு தொகுப்பாகும்.
2. அந்தமான்-நிக்கோபார் தீவானது வங்காள-அரக்கான் படிவு (Bengal-Arakan sedimentary system) அமைப்பின் ஒரு பகுதியாக அமைகிறது. இந்திய மற்றும் பர்மியத் தட்டுகளுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ள அதன் புவிமேலோட்டு அமைப்பானது, ஹைட்ரோகார்பன் தொகுப்பிற்கு ஏற்ற அடுக்கு முறைகளை உருவாக்கியுள்ளது.
3. மியான்மர் மற்றும் வடக்கு சுமாத்திராவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட பெட்ரோலிய அமைப்புகளுக்கு அருகில் இருப்பதால், இந்த தீவில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கின்றன.
4. இந்தோனேசியாவின் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கண்டறியப்பட்ட புதிய எரிவாயு கண்டுபிடிப்புகளால், அந்தப்பகுதியில் உள்ள புவியியல் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்தமான்-நிகோபார் தீவின் மீது உலக நாடுகளின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
சமுத்திர மந்தன் (Samudra Manthan Mission) பணி மற்றும் ஆழ்கடல் பணி (Deep Ocean Mission)
1. 2025-ஆம் ஆண்டு சமுத்திர மந்தன் திட்டம் அல்லது தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டம், சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.
2. உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நாட்டின் பல பில்லியன் டாலர் இறக்குமதிச் செலவைக் குறைப்பதற்கும், கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைக் கண்டறிவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
3. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஹைட்ரோகார்பன் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தும் வகையில், பல ஆழ்கடல் ஆய்வுக் கிணறுகள் தோண்டத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆழ்கடல் திட்டம் (Deep Ocean Mission)
1. ஆழ்கடலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களை ஆராய்வதற்கும், அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்குமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கத்துடன், புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) செப்டம்பர் 2021-ல் 'ஆழ்கடல் திட்டத்தை' (Deep Ocean Mission) தொடங்கியது.
2. ஆழ்கடல் திட்டம் பின்வரும் ஆறு கூறுகளைக் கொண்டுள்ளது: அவை,
(i) ஆழ்கடல் சுரங்கத் தொழில்நுட்பம், கடலுக்கு அடியில் பயணம் செய்யக் கூடிய வாகனங்கள், ரோபோடிக்ஸ் மற்றும் மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய நீர்மூழ்கிக் கலன் (Crewed Submersible) ஆகியவற்றை உருவாக்குதல்.
(ii) காலநிலை மாறுபாடுகளை கண்காணித்து, எதிர்கால காலநிலை தொடர்பான மாற்றங்களை முன்னறிவிக்கும் கடல் காலநிலை மாற்ற ஆலோசனை சேவையை (Ocean Climate Change Advisory Service) உருவாக்குதல்.
(iii) ஆழ்கடலில் உள்ள பல்லுயிர்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தொழில்நுட்பப் புதுமைகளைத் தேடுதல்.
(iv) ஆழ்கடலில் உள்ள கனிம வளங்களை கண்டறிய கடலுக்கு அடியில் ஆய்வுகளை நடத்தப்படுகின்றன. குறிப்பாக, நிக்கல், கோபால்ட் மற்றும் அரிய பூமித் தனிமங்கள் போன்ற மதிப்புமிக்க உலோகங்களைக் கொண்டுள்ள இரும்பு மற்றும் மாங்கனீசு ஹைட்ராக்சைடு அடுக்குகளால் ஆன பாலிமெட்டாலிக் முடிச்சுகளைக் (polymetallic nodules) கண்டறிவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
(v) கடலில் இருந்து ஆற்றலையும் நன்னீரையும் பெறுவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்.
(vi) கடல் உயிரியல் மற்றும் பொறியியல் துறைகளில் திறன்களை மேம்படுத்துவதற்காக ஒரு மேம்பட்ட கடல்சார் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்ற பணிகளாகும்.
Original article : Why is natural gas discovery in Andaman basin making headlines? -Roshni Yadav