இந்தக் கூட்டமைப்பு வெறும் கலோரி நிறைந்த உணவுகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், அனைவருக்கும் பல்வேறு வகையான சத்துமிக்க உணவுகள் எளிதாகவும் நியாயமான முறையிலும் கிடைப்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் (Brazil, Russia, India, China, South Africa (BRICS)) அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்த நேரத்தில், இந்தக் கூட்டமைப்பு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. மேற்கத்திய அமைப்புகளுக்கு வெறும் ஒரு பொருளாதார மாற்றாக மட்டும் இல்லாமல், பிரிக்ஸ் அமைப்பை இன்னும் மக்கள் நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பாக மாற்றுவதை இந்தியாவின் "மனிதநேயத்திற்கு முதலிடம்" (Humanity First) என்ற அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் விரிவாக்கத்திற்குப் பிறகு, பிரிக்ஸ் அமைப்பு தனது புவியியல் எல்லை, மக்கள்தொகை மற்றும் வேளாண் திறனைப் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன் உறுப்பு நாடுகள் உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும், இவற்றில் அதிக வேளாண் உற்பத்தித் திறன் கொண்ட பிராந்தியங்களும், அதேநேரத்தில் உணவுப் பாதுகாப்பற்ற, உணவுப் பற்றாக்குறை உள்ள பொருளாதாரங்களும் அடங்கியுள்ளன.
உலகளாவிய வேளாண் உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் பெரும் பங்கைக் கொண்டிருந்தாலும், உலகின் பசியால் வாடும் மக்கள்தொகையிலும் அவை கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. இந்த சமமற்ற நிலையை மாற்றுவதற்கு கடுமையான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
வெவ்வேறு நாடுகளை உற்று நோக்கும்போது இந்த முரண்பாடு இன்னும் தெளிவாகப் புரிகிறது. பிரேசில் (Brazil) உலக அளவில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாகும், இருப்பினும் அங்குள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னமும் பட்டினியை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு உணவுக் பற்றாக்குறை காரணம் அல்ல; மாறாக வருமான சமத்துவமின்மை, நிலையற்ற சமூக நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒட்டுமொத்த வேளாண் வணிகத்துறையின் கட்டமைப்பு ஆகியவை ஏழை மக்கள் நாட்டின் உணவு உபரியின் பலனைப் பெறுவதைத் தடுக்கின்றன.
இந்தச் சிக்கலுக்கு இந்தியாவும் ஒரு முக்கிய உதாரணத்தையும், யதார்த்தமான ஒரு பிரதிபலிப்பையும் வழங்குகிறது. இந்தியா ஒரு நிகர உணவு ஏற்றுமதி நாடாகவும் (Net food exporter), பஞ்சத்தை முழுமையாக வென்ற நாடாகவும் இருந்தாலும், அது இன்னும் ஊட்டச்சத்து நெருக்கடியை எதிர்கொண்டே வருகிறது. இந்தியா போதுமான அளவு உணவை உற்பத்தி செய்து, ஒவ்வொரு மாதமும் பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)) மூலம் 80 கோடி மக்களுக்கு வழங்கி வந்தாலும், பலரது உணவுமுறைகள் அதிக கலோரிகளையும், மிகக் குறைந்த அளவிலான புரதம் மற்றும் அத்தியாவசிய நுண் ஊட்டச்சத்துக்களையுமே கொண்டுள்ளன. ஐந்து வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் வளர்ச்சி குன்றி இருக்கும் நிலையில், போதுமான கலோரிகள் கிடைப்பது என்பது சரியான ஊட்டச்சத்து கிடைத்துவிட்டது என்று அர்த்தமாகாது என்பதை இந்தியா உணர்த்துகிறது.
உணவுப் பற்றாக்குறை அதிகம் உள்ள நாடான எத்தியோப்பியா, இந்தப் பட்டியலின் மிகக் கடைசியில் இருக்கிறது.
தெற்கத்திய நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவைப் பற்றிப் பேசினாலும், பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பிடம் உணவுப் பாதுகாப்பிற்கான வலுவான பொதுவான கட்டமைப்பு எதுவும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பொது வேளாண் கொள்கை அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations (ASEAN)) அவசரகால உணவு இருப்புத் திட்டம் போன்ற முறையான அமைப்புகள் ஏதுமின்றி, பிரிக்ஸ் நாடுகள் பெரும்பாலும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (Bilateral agreements) மூலமாகவே செயல்படுகின்றன. ‘New Development Bank’ (பிரிக்ஸ் நாடுகளால் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி) உள்கட்டமைப்பு வசதிகளில் பெருமளவில் முதலீடு செய்திருந்தாலும், ஊரகப்புற உணவு முறைகள் மற்றும் அவற்றுக்கான மீள்திறனை பெருமளவில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இந்த பிரிக்ஸ் நாடுகளால் தொடங்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank), போதிய நிதி மற்றும் தெளிவான இலக்குகளுடன் கூடிய பிரத்யேக உணவு முறைத் திட்டம் ஒன்றை உருவாக்கும் வரை, இந்த வாய்ப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கும். இவற்றுடன், ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து பல சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, 2023-ஆம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடையும், ரஷ்யா-உக்ரைன் போரும் பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சந்தைகளில் கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தின.
இந்த அரசியல் மற்றும் பொருளாதாரக் குறைபாடுகளுக்கு இடையில், நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறும் ஒரு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நெருக்கடி உள்ளது. பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உணவு ஒத்துழைப்புக் கட்டமைப்பு முக்கியமாக 'கலோரி விநியோகத்தை' (Calorie supply) மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனால் உணவு கிடைப்பது, விலை நிலைத்தன்மை மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை ஊட்டச்சத்து சார்ந்த முழுப்பிரச்சனையையும் தீர்க்காது. ஏனெனில், பிரிக்ஸ் நாடுகள் தற்போது ஒரே நேரத்தில் மூன்று விதமான ஊட்டச்சத்து குறைபாடு சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றன: அவை போதிய ஊட்டச்சத்தின்மை, பரவலான நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் (வைட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு) மற்றும் வேகமாக அதிகரித்துவரும் உடல் பருமன் மற்றும் இதர தொற்றா நோய்கள் ஆகியனவாகும்.
இந்தக் குறைபாடுகளால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா, எத்தியோப்பியா மற்றும் சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் பெண்களிடம் காணப்படும் அதிக அளவிலான இரத்த சோகை, தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளின் போதிய வளர்ச்சியின்மை மற்றும் பலவீனமான அறிவாற்றல் வளர்ச்சி போன்ற மோசமான சூழற்சிக் குறைபாடுகளுக்கு காரணமாக அமைகிறது.
உத்திசார் கொள்கை மாற்றங்கள்
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் எந்தவொரு தீவிரமான திட்டமும், வெறும் போதுமான உணவை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், பெண்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பலவகைப்பட்ட உணவுகள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியா பிரிக்ஸ் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும்போது சில முக்கியமான கொள்கை மாற்றங்களை ஊக்குவிக்க முடியும். முதலாவதாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊட்டச்சத்து ஆகியவை பிரிக்ஸ் நாடுகளின் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மாற வேண்டும். இதற்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றைத் தடுப்பதற்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும், உணவு ஏற்றுமதி தடைகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவசரகால உணவு இருப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்குள் வேளாண் துறைசார்அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். இதில் சீனாவின் துல்லியப் பண்ணை முறைகள் (Precision farming), இந்தியாவின் பெரிய அளவிலான பொது விநியோகத் திட்டம் (PDS) சார்ந்த அனுபவங்கள், சிறு வேளாண் தொழிலாளர்களுக்கான பிரேசிலின் ஆதரவுத் திட்டங்கள் மற்றும் பாலைவன வேளாண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates (UAE)) நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவை அடங்கும்.
மூன்றாவதாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் வேளாண் கொள்கைகளில் சிறு வேளாண் தொழிலாளர்களுக்கும் பெண் உற்பத்தியாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏற்றுமதியை மட்டுமே மையமாகக் கொண்ட கொள்கைகளில் இருந்து மாறுபட, நில உரிமைகளில் சீர்திருத்தங்கள், பெண்களுக்கு அதிக சொத்துரிமை மற்றும் கடன் வசதிகள், மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமானது பெரிய வேளாண் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி வேளாண் தொழிலை நம்பியுள்ள குடும்பங்களுக்குப் பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இறுதியில், பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலருக்கு சவால் விடுகிறதா அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (United Nations Security Council (UNSC)) சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறதா என்பதை வைத்து மதிப்பிடப்பட மாட்டாது. மாறாக, அது பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்வாதார நிலைகளையும் மேம்படுத்துகிறதா என்பதை வைத்தே மதிப்பிடப்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜெயா ஜும்ரானி மற்றும் ஷிவ் குமார், புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR) தேசிய வேளாண் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIAP) மூத்த விஞ்ஞானி மற்றும் (பொறுப்பு) இயக்குநர் ஆவர்.
Original article : BRICS needs to prioritise food security. -Jaya Jumrani and Shiv Kumar