நிலையான வேளாண்மையில் கவனம் செலுத்துவதற்கு இதுவே சரியான தருணம். -ஏ அமரேந்தர் ரெட்டி மற்றும் துளசி லிங்கரெட்டி

 இந்த ஆண்டு குறைவான பருவமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, பயிர் காப்பீடு மற்றும் சிறந்த போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.



இந்திய வேளாண்மை, காலநிலைக்கேற்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இருப்பினும், பருவமழையை மட்டுமே பெரிதும் நம்பியே இருக்கிறது. ஏனெனில், பயிரிடப்படும் நிலங்களில் பெரும்பாலான நிலங்கள் மழைப்பொழிவை மட்டுமே நம்பியிருக்கும் நிலங்களாக (Rainfed) உள்ளன. மேலும், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்கள், பயிர் விளைச்சலையும் வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தின் (Centre for Science and Environment (CSE)) அறிக்கையின்படி, இந்தியாவில் தீவிர வானிலை நிலவிய நாட்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 292 நாட்களிலிருந்து 295 நாட்களாக அதிகரித்தது. மேலும், 2025-ஆம் ஆண்டில் இது 331 நாட்களாக மேலும் உயர்ந்தது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய 2026-ஆம் ஆண்டிற்கான மழைப்பொழிவு, நீண்டகால சராசரியில் (Long-Period Average (LPA)) 90 சதவீதமாக, வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய ஒரு வலுவான வேளாண் உற்பத்தி முறையை உருவாக்குவது அவசியமாகிறது.


1960-களிலிருந்து, வேளாண் ஆதரவுக் கொள்கைகள் முக்கியமாக நெல், கோதுமை மற்றும் கரும்பு போன்ற அதிக அளவில் தண்ணீர், உரம் தேவைப்படும் பயிர்களின் சாகுபடியையே ஊக்குவித்து வந்துள்ளன. இதற்கு அரசின் உறுதி அளிக்கப்பட்ட கொள்முதல் மற்றும் இலவச மின்சாரம் போன்ற மானியங்கள் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. உதாரணமாக, வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என்ற வானிலை முன்னறிவிப்பு மற்றும் தற்போதைய உர விநியோகத் தட்டுப்பாடுகளுக்கு இடையிலும், 2026-ஆம் ஆண்டின் குறுவை (Kharif) பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) சுமார் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.                   பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உயர்வு நெல்லைவிட அதிகமாக இருந்தபோதிலும், அரசிடம் இவற்றின் கொள்முதல் குறைவாக இருப்பதாலும், மகசூல் குறைவாக இருப்பதாலும், வேளாண் தொழிலாளர்கள் நெல் சாகுபடியில் இருந்து மற்ற பயிர்களுக்கு மாறுவதற்குத் தயங்குகின்றனர். எனவே, இயற்கை வளங்கள் அழிவதற்குக் காரணமான இந்தக் கொள்கை சமநிலையின்மைகளை உடனடியாகச் சரிசெய்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவுக் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்யவேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.


மற்றொரு முக்கியமான முன்னுரிமை என்னவென்றால், வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயனுள்ள தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிப்பதாகும். பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற குறைந்த தண்ணீர் தேவைப்படும் பயிர்களின் விளைச்சல் பல ஆண்டுகளாக ஒரே அளவிலேயே உள்ளது. இது வேளாண் தொழிலாளர்களுக்கு அவற்றை வளர்ப்பதில் உள்ள ஆர்வத்தைக் குறைக்கிறது. இவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக, பூச்சிகள், நோய்கள் அல்லது வறட்சி, வெப்பம் போன்ற பாதிப்புகளைத் தாங்கி வளரக்கூடிய 2,661 புதிய பயிர் வகைகள் 2014 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடையில் வெளியிடப்பட்டதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Council of Agricultural Research (ICAR)) தெரிவித்துள்ளது. மாறிவரும் காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


நிதி உதவியை அதிகரித்தல் 


பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் புதிய ரகப் பயிர்களை உருவாக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வேளாண் முறைகளை மேம்படுத்தவும், இந்தத் நவீனக் கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களிலிருந்து வேளாண் நிலங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதியுதவியை அதிகரிக்க வேண்டும். அரசாங்க நிதியுதவியுடன் சேர்த்து, தனியார் நிறுவனங்கள், குறிப்பாக உணவு மற்றும் வேளாண் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு போன்ற முயற்சிகள் மூலம் வேளாண் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்க அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.


வேளாண் துறையை பாதிப்புகளைத் தாங்கி மீளும்திறன் கொண்டதாக  மாற்றுவதற்கு, மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு அமைப்புகளுடன் கூடிய நிகழ்நேரப் பயிர் ஆலோசனைகள் இன்றியமையாதவை ஆகும். வானிலை மற்றும் பருவமழைப் பொழிவு ஆகியவை கணிக்க முடியாததாக மாறி வருவதால், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வானிலை மாதிரி அமைப்புகள் வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கவும், வேளாண் தொழிலாளர்களுக்குச் சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனைகளை வழங்கவும் உதவும். வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தைப் பாதுகாப்பதற்கான மற்றொரு முக்கியமான கருவி, பயிர்க் காப்பீடு ஆகும். 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)), 2018-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 25 முதல் 31 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவின் மொத்தப் பயிர் சாகுபடி பரப்பளவு சுமார் 220 மில்லியன் ஹெக்டேராக இருப்பதால், இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்களின் வரம்பை இன்னும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


வேளாண் தொழிலாளர்கள் தங்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெறுவதற்காக, அவர்களை நேரடியாக நுகர்வோர் மற்றும் சந்தைகளுடன் (Value chains) இணைப்பது மற்றொரு முக்கியமான உத்தியாகும்.   இது பற்றி பரவலாகப் பேசப்பட்டாலும் இதுவரை குறைந்த அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் துறையினருக்குக் கிடைக்கும் ஆதரவைப் போலவே, தற்போது வேகமாக வளர்ந்து வரும் மின்-வணிகம் (e-commerce), கிடங்கு வசதிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த இணைப்பை மேலும் வலுப்படுத்த முடியும். வேளாண் சில்லறை வர்த்தகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களும் வேளாண் தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆதரவையும் சந்தை வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் உதவ முடியும். இயற்கை வேளாண் விளைப் பொருட்களின் மதிப்புத் தொடர்கள் பெற்று வரும் தொடர் வெற்றி, வேளாண் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தைகளுடன் ஒருங்கிணைப்பது சாத்தியமானது மற்றும் பயனுள்ளது என்பதை நிரூபிக்கிறது.


எனவே, அதிகரித்து வரும் மக்கள்தொகையின் உணவு மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இயற்கை வளங்களைத் திறம்படவும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு வலுவான, மீள்திறன் கொண்ட வேளாண் அமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது.



ரெட்டி, ராய்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின்-தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனத்தில் கொள்கை ஆதரவு ஆராய்ச்சிக்கான இணை இயக்குநராக உள்ளார். லிங்காரெட்டி, மும்பையில் உள்ள நிலையான நிதி மற்றும் வேளாண் துறையின் மூத்த பொருளாதார நிபுணராக உள்ளார்.


Original article : Right time to focus on sustainable agriculture. -A Amarender Reddy and Tulsi Lingareddy

Share: