சிறிய மட்டு அணு உலைகள் இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்து வருகின்றன. ஆனால், வழக்கமான அணு உலைகளிலிருந்து சிறிய மட்டு அணு உலைகளை வேறுபடுத்துவது எது? சாந்தி சட்டம் ஏன் ஒரு திருப்புமுனை (game-changer) என்று அழைக்கப்படுகிறது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
தற்போதைய செய்தி :
பாரம்பரிய அணு உலைகளுக்குப் பாதுகாப்பான மாற்றாகச் சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) முன்னிறுத்தப்பட்டு வரும் சூழலிலும், பெரிய அணு உலைகளுக்குப் பொருந்தும் அதே கடுமையான பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுதல் விதிமுறைகளையே இதற்கும் அந்த நாட்டின் முதன்மை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அணுசக்தித் துறையில் தனியார்துறை பங்கேற்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'இந்தியாவை மாற்றியமைப்பதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு' (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) சட்டம், 2025-ன் கீழ் இதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், சிறிய மட்டு அணு உலைகள் மற்றும் சாந்தி சட்டம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. இந்தியாவின் அணுசக்தித் திட்டம் இதுவரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அழுத்தப்பட்ட கனநீர் உலைகளை' (pressurised heavy water reactors (PHWRs)) அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை கனநீரை குளிர்விப்பானாகவும் நியூட்ரான் வேகத்தைக் குறைப்பையாகவும் (moderator), இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றன. நாட்டின் அணுசக்தி விரிவாக்கத் திட்டங்களில் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றினாலும், தொழில்துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் (decarbonisation) உதவக்கூடிய ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக சிறிய மட்டு அணு உலைகள் பார்க்கப்படுகின்றன.
2. இந்திய அரசு சிறிய மட்டு அணு உலைகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இவற்றை அவ்வப்போது 'பாரத் சிறிய மட்டு அணு உலைகள்' என்றும் அழைக்கிறது. இந்தத்துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ₹20,000 கோடி மதிப்பிலான ஒரு சிறப்புத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
3. தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றும் ஒரு வழியாகவும், தொழில்நுட்பம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை முன்மொழிவாக சிறு அணு உலைகளை இணைத்து அவற்றை முன்வைப்பதன் மூலமாகவும், இந்தியா இந்த சிறு அணு உலைத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க இந்தியா முயற்சித்து வருகிறது.
4. சிறிய மட்டு அணு உலைகள் என்பவை அடிப்படையில், ஓர் அலகுக்கு 30MWe முதல் 300 மெகாவாட் மின்சாரம் வரையிலான மின் உற்பத்தித் திறன் கொண்ட மேம்பட்ட சிறிய அணு உலைகள் ஆகும். தற்போது இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் நிறுவப்பட்டுள்ள வழக்கமான அணு உலைகள், 500 மெகாவாட் அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன.
5. சிறிய மட்டு அணு உலைகள் எளிமையான மற்றும் தொகுதி அளவு வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இதனால், அவற்றின் கூறுகளை நேரடியாக தளத்தில் கட்டுவதற்குப் பதிலாக தொழிற்சாலைகளில் தயாரித்து பின்னர் ஒன்றுசேர்க்க முடியும். இதன் மூலம் கட்டுமானச் செலவு குறைவதுடன், தேவைக்கேற்ப நெகிழ்வான முறையில் நிறுவவும் முடிவதால், கடந்த சில ஆண்டுகளில் இவை மிகவும் முக்கியமான மாற்றாகக் கருதப்படுகின்றன.
6. எஃகு, அலுமினியம் மற்றும் சிமெண்ட் போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் துறைகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, சிறிய மட்டு அணு உலைகள் ஒரு நம்பிக்கைக்குரிய தேர்வாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை 24 மணி நேரமும் அதிக அளவில், குறைந்த கார்பன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளன.
7. பல்வேறு வகையான சிறிய மட்டு அணு உலைகள் உருவாக்கப்பட்டு வந்தாலும், தற்போது நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அணுப் பிளவு வினையின் அதீத வெப்பத்தைச் சமாளிக்க, லேசான நீர், அதிகமான வெப்பநிலை கொண்ட வாயு, திரவ உலோகம் மற்றும் உருகிய உப்பு ஆகிய வெவ்வேறு குளிரூட்டிகளைப் பயன்படுத்துகின்றன.
8. இருப்பினும், இவற்றில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இலகு நீர் அணு உலைகள் (Light Water Reactors) ஆகும். இவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் பாரம்பரிய அணுமின் நிலையங்களைப் போலவே நீரால் குளிர்விக்கப்படுகின்றன. இதனால், மற்ற வகைகளைவிட இலகு நீர் சிறிய மட்டு அணு உலைகளை வடிவமைப்பது மிகவும் எளிதாக உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
வளர்ந்த இந்தியா அணுசக்தித் திட்டத்தின்கீழ், 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.
சாந்தி சட்டம் (SHANTI Act) என்றால் என்ன?
1. ஷாந்தி சட்டம், டிசம்பர் 21, 2025 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது, அணு மின் நிலையத்தை அமைப்பதற்கு அல்லது அணு ஆற்றலின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் அகற்றல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தனியார் துறையின் பங்கேற்பை, மத்திய அரசின் உரிமத்தின் கீழும், நாட்டின் அணு ஒழுங்குமுறை அமைப்பான அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் பாதுகாப்பு அங்கீகாரத்தின் கீழும் திறம்பட அனுமதிக்கிறது.
2. சாந்தி சட்டம் என்பது உலகளாவிய அணுசக்தி வர்த்தகத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப ஒரு முயற்சியாகும். இது 1962-ஆம் ஆண்டின் அணுசக்திச் (Atomic Energy Act) சட்டம் மற்றும் 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான குடிமைப் பொறுப்புச் (Civil Liability for Nuclear Damage Act) சட்டம் ஆகியவற்றை ஒரே சட்டமாக செயல்படுகிறது.
3. புதிய சட்டத்தின்படி, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை அமைக்கவும், அணு எரிபொருள், தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் கனிமங்களின் போக்குவரத்து, சேமிப்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை, இந்த நடவடிக்கைகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் மூன்றுகட்ட அணுசக்தித் திட்டம் என்பது என்ன?
1. இந்தியாவின் அணுசக்திப் பயணம், சுதந்திரத்திற்குப் பிறகு 1948-ல் அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) அமைக்கப்பட்டதுடன் தொடங்கியது. 1956-ல், மும்பை டிராம்பேயில் உள்ள (Bhabha Atomic Research Centre (BARC)) ஆசியாவின் முதல் ஆராய்ச்சி அணு உலை Apsara செயல்பாட்டுக்கு வந்தது.
2. 1969-ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவின் தாராப்பூரில் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்டது. ஜப்பானுக்கு அடுத்தபடியாக அணுமின் நிலையத்தை நிறுவிய இரண்டாவது ஆசிய நாடு இந்தியா ஆகும். சீனாவை விட பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னேற்றம் கண்டது. 1950 மற்றும் 1960-களில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இந்தியா வலுவான அணு ஆராய்ச்சி தொடர்பான அடித்தளத்தை உருவாக்கியது.
3. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணுசக்தித் துறையின் மூன்று கட்டத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தியா, இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜே. பாபா மற்றும் 'வேகப் பெருக்கி அணு உலைகளின்' (Fast Breeder Reactor (FBR)) முக்கியத்துவத்தை உணர்ந்த டாக்டர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில், இது போன்ற அணு உலைகள், வளமான ஐசோடோப்புகளை (fertile isotopes) பிளவுபடக்கூடிய பொருளாக (fissile material) பயனுள்ள வகையில் மாற்றுவதன் மூலம், இந்த வேகப் பெருக்கி உலைகள் பயன்படுத்தும் அணு எரிபொருளைவிட அதிக அளவு அணு எரிபொருளை உருவாக்குகின்றன. அவை அதிக எரிபொருள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
மூன்று கட்ட அணுசக்தி திட்டம்
→ நிலை 1: அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWRs)), மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயற்கை யுரேனியம் அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிரித்தெடுக்கக்கூடிய பிளவுபடும் புளூட்டோனியத்தையும் (Pu239) உற்பத்தி செய்கின்றன. இது கனநீரை (deuterium oxide) குளிர்விப்பானாகவும் குறைப்படுத்தியாகவும் பயன்படுத்துகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலகுநீர் அணு உலைகளின் (Light Water Reactors (LWRs)) கட்டுமானத்தின் மூலம் இந்தத் திட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
→ நிலை 2: கல்பாக்கத்தில் உள்ளதைப் போன்ற வேகப் பெருக்கி அணு உலைகளை (Fast Breeder Reactors - FBRs) புளூட்டோனியம் அடிப்படையிலான எரிபொருளைப் பயன்படுத்தி அமைப்பது இதில் அடங்கும். இத்தகைய உலைகள் அணுசக்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு, வளமான தோரியத்தை (Thorium) பிளவுறும் தன்மை கொண்ட யுரேனியம்-233 (U-233) ஆக மாற்றும் திறனையும் கொண்டுள்ளன. புளூட்டோனியம் இருப்பைத் திறமையாகப் பயன்படுத்துவதற்கு, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வது முக்கியமானதாகும்..
→ நிலை 3: மூன்றாவது கட்டம் ThU233 சுழற்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். நீண்ட கால எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேம்பட்ட வெப்ப நியூட்ரான் உலைகள் (advanced thermal reactors) மற்றும் அதிவேக உற்பத்தி உலைகளை (fast breeder reactors) உள்ளடக்கிய மின் உற்பத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு, இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் U233-ஐப் பயன்படுத்தலாம். இதற்காக 'மேம்பட்ட கனநீர் உலை' (Advanced Heavy Water Reactor (AHWR)) முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, உருகிய உப்பை பயன்படுத்தும் அணு உலைகளின் (Molten Salt Reactors) பயன்பாடும் ஒரு மாற்று வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
கல்பாக்கம் வேக இனப்பெருக்க அணு உலை நிலைமாறு நிலையை அடைந்தது
1. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor (FBR)) முக்கிய நிலையை அடைந்தது.
2. நிலைமாறுநிலையை அடைதல் அல்லது நிலைமாறுநிலையை எட்டுதல் என்பது, அணு பிளவு (Nuclear Fission) வினை தானாகவே தொடர்ந்து நடைபெறும் நிலையை குறிக்கிறது. இந்த தன்னிறைவு பெற்ற அணுப் பிளவு வினை, பின்னர் 500 மெகாவாட் மின்சார திறன் கொண்ட வேகப் பெருக்கி அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வழிவகுக்கும்.
3. முழு அளவிலான மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முந்தைய ஒரு முக்கிய சாதனை என்ற நிலையை அடைவதாகும். இந்நிலை, அணு உலைக்கருவானது வடிவமைக்கப்பட்டபடியே செயல்படுவதையும், தொடர்ச்சியான வினைகளை நிலைநிறுத்துவதற்குத் தேவையான எண்ணிக்கையிலான நியூட்ரான்களை அணுக்கருப் பிளவு நிகழ்வுகள் (fission event) வெளியிடுவதையும் உறுதிப்படுத்துகிறது. இது இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் மிக முக்கியமான இரண்டாவது கட்டமாகும்.