'பாரத்நெட்' (BharatNet) என்ற அரசாங்கத்தின் பிரம்மாண்ட கிராமப்புற இணைய சேவை (Broadband) இணைப்புத் திட்டத்தின்கீழ், மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இணைப்புகளில் பாதியைவிடக் குறைவான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தச் சேவையைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய வாடிக்கையாளர்களின் சேர்க்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்துள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (Right to Information Act (RTI Act)) பெற்ற தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
— இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, 'பாரத்நெட்' (BharatNet) திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட 18 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு, மொத்தம் 13.23 லட்சம் (துல்லியமாக 13,22,842) நிலையான இணைய இணைப்புகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றில் சுமார் 8.01 லட்சம் இணைப்புகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) தரவுகள் தெரிவிக்கின்றன.
— அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் பல அளவுகோல்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. குறிப்பாகச் செயல்பாட்டில் உள்ள இணைப்புகள், பயன்பாட்டில் இருக்கும் இணைய இணைப்பு பகிர்வுகள் (Wi-Fi hotspots), கடைசி எல்லை வரையிலான இணைப்பு வசதி, நிதி கசிவுகள் மற்றும் குழப்பமான கட்டண முறைகள் போன்றவற்றில் பல சிக்கல்கள் இருந்தன.
— உலகிலேயே மிகப்பெரிய கிராமப்புற ஒளியிழை கேபிள் தொழில்நுட்ப (Fiber optic) வலைப்பின்னலாகக் கருதப்படும் 'பாரத்நெட்' (BharatNet), ஒன்றிய அரசின் மிக முக்கியமான கிராமப்புற அதிவேக இணைய சேவைத் திட்டமாகும். இத்திட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதன் மூலம், டிஜிட்டல் உலகிற்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், தொலைதூரக் கிராமப்புற மக்களை டிஜிட்டல் பொதுச் சேவைகள், கல்வி, மருத்துவம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளுடன் இணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
— கிராமப்புறங்களுக்கு அதிகத் திறன் கொண்ட, தடையற்ற நிலையான கேபிள் வழி இணைய சேவையை வழங்குவதற்குப் 'பாரத்நெட்' (BharatNet) திட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இது இணையப் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, அதிக அளவிலான தரவுப் பயன்பாடு, கிராமப்புற மின்-ஆளுகை (e-governance) மற்றும் தடையற்ற டிஜிட்டல் மருத்துவச் சேவைகளுக்குத் தேவையான ஒரு வலுவான டிஜிட்டல் அடித்தளமாக செயல்பட முடியும். மொபைல் இணையம் (Mobile internet) என்பது பொதுவாக இதுபோன்ற அதிகத் தரவு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு முழுமையாகப் பொருத்தமானதாக இருப்பதில்லை.
— தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முந்தைய மார்ச் மாத 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டு வரை 'பாரத்நெட்' (BharatNet) திட்டத்தின்கீழ் 12.24 லட்சம் நிலையான இணைய இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பெற்ற புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதற்கு அடுத்த 14 மாதங்களில் (மார்ச் 2026 வரை) வெறும் 98,842 புதிய இணைப்புகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன (இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 13.23 லட்சமாக உயர்ந்துள்ளது) என்பது தெரியவருகிறது. அதாவது, ஒரு மாதத்திற்குச் சராசரியாக 7,000-க்கும் அதிகமான புதிய இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இணையச் சேவையைப் பொதுமக்கள் எந்தளவுக்குத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விஷயத்தில்தான், இந்த மாபெரும் திட்டத்தின் நோக்கம் மேலும் பின்னடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
— அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இருந்தபோதிலும், இந்த இணைய இணைப்பின் பயன்பாடு எதிர்பார்த்த அளவைவிட மிகக் குறைவாகவே உள்ளது என்று நாடாளுமன்றக் குழு குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான நிதி சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, 2024-25-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட நிதி மதிப்பீடு 6,500 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் அதில் வெறும் 48% அதாவது 3,145 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
— தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட தரவுகள், கடந்த மூன்று ஆண்டுகளில் பாரத்நெட் (BharatNet) திட்டத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதைக் காட்டுகின்றன. இது இந்த பிரம்மாண்டமான இணைய இணைப்புத் திட்டத்திற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
— பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற அரசாங்கத்தின் தரவுகளின்படி, பாரத்நெட் திட்டத்தின்கீழ் 1.04 லட்சம் பொது இணைய இணைப்பு பகிர்வு அமைப்புகள் (Wi-Fi) நிறுவப்பட்டன. ஆனால் இதில் செப்டம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி வெறும் 0.7% அதாவது 766 மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. இந்த இணைய இணைப்பு பகிர்வுச் சேவைதான், இணைய இணைப்புத் திட்டத்தின் பயனை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான மிக முக்கிய வழியாகும்.
— இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் கிராம ஊராட்சிகளுக்கும் ஒளியிழை கேபிள்கள் மூலம் அதிவேக இணைய வசதியைக் கொண்டு செல்வதற்காக, கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய ஒளியிழை கேபிள் வலையமைப்புத் (National Optical Fibre Network (NOFN)) திட்டம் தொடங்கப்பட்டது; இத்திட்டமே பின்னாளில் 'பாரத்நெட்' திட்டமாக மாற்றமடைந்தது.
— இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்காக, 2012-ஆம் ஆண்டில் ‘Bharat Broadband Network Limited’ (BBNL) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. மேலும், இத்திட்டம் தொடக்கத்தில் 2014-ஆம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, இது 2015-ஆம் ஆண்டில் 'பாரத்நெட்' (BharatNet) என்ற பெயரில் மறுவடிவம் பெற்றது. இதன் முதற்கட்ட திட்ட இலக்குகள் 2017-ஆம் ஆண்டில்தான் முடிக்கப்பட்டன. அதேபோல மாற்றி அமைக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் இரண்டாம் கட்ட பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர், ஜூன் மாதம் 2021-ஆம் ஆண்டில், இத்திட்டம் மூன்றாம் கட்டத்தின்கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்ட வலையமைப்புகள் மற்றும் கிராமங்களின் கடைசி வீடு வரையிலும் இணைய இணைப்புகள் மூலமாக 2025-ஆம் ஆண்டிற்குள் 6.5 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, பாரத்நெட் திட்டப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, ‘Bharat Broadband Network Limited’ (BBNL) நிறுவனத்தை ‘Bharat Sanchar Nigam Limited’ (BSNL) நிறுவனத்துடன் இணைப்பதற்கு 2022-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
— ஓராண்டுக்குப் பிறகு 2023-ஆம் ஆண்டில், அரசாங்கம் 1.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தைத் தொடங்கியது. இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், ஐந்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் உள்ள கிராமப்புற வீடுகள், நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளுக்கு 1.5 கோடி நிலையான இணைய இணைப்புகளை வழங்க உறுதியளிக்கிறது.
— பிரதமர்-வாணி (Prime Minister’s Wi-Fi Access Network Interface (PM-WANI)) திட்டத்தின்கீழ் பொது இணையப் பகிர்வு சேவை அமைப்புகளை அதிகரிப்பது குறித்து, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI)) சமீபத்தில் வெளியிட்ட கலந்தாய்வு அறிக்கையில், நாட்டில் இத்தகைய சேவையை வழங்குவதற்கு பாரத்நெட் (BharatNet) திட்டத்தின்கீழ் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்த அறிக்கைக்கான பதிலில், சில பங்குதாரர்கள் பாரத்நெட் திட்டத்தின் இறுதிப் பயனரைச் சென்றடைவதில் உள்ள சவால் உள்ளிட்ட சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Original Link: What is the PM-WANI scheme?