கவலையும், சர்ச்சையும் : கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் காவிரி விவகாரம் குறித்து . . .

 கர்நாடகாவும் தமிழ்நாடும் தண்ணீர் பற்றாக்குறையைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்.


தென்மேற்குப் பருவமழையின் முதல் பாதியில், அதன் அழுத்தம் குறைவாக இருந்ததால், காவிரிப் படுகையில் மீண்டும் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. காவிரிப் படுகையைப் பகிர்ந்து கொள்ளும் மிக முக்கிய மாநிலங்களான கர்நாடகா (மேல்மடை) மற்றும் தமிழ்நாடு (கீழ்மடை) ஆகியவை, இந்த நீண்டகாலச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் நீர்ப் பற்றாக்குறையைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குவதில் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை. இருப்பினும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை மீண்டும் ஒருமுறை இரு மாநிலங்களுக்கும் கைகொடுத்துள்ளது. இது பதற்றத்தைத் தணிக்குமா அல்லது மாநிலங்களுக்கிடையிலான மோதல்களைத் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 13 அன்று 'கர்நாடகா பந்த்' (மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம்) நடத்த கன்னட ஆதரவு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாலும், காவிரி கரையில் 'ஆடிப் பெருக்கு' (Aadi Perukku) விழா நடைபெறும் நாளான ஆகஸ்ட் 3 அன்று தஞ்சாவூரில் போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதால், அரசியல் பதற்றம் அதிகரித்து வருகிறது. காவிரிப் படுகையில் உள்ள கர்நாடகாவின் நான்கு முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தாலும், இரு மாநில விவசாயிகளையும் பாதித்துள்ள தண்ணீர் பற்றாக்குறை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறுவதற்கு இது இன்னும் மிக ஆரம்ப நிலையாகவே உள்ளது. பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டாம் என்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் முடிவானது, நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இருப்பினும், இதற்கு முன்பும் திட்டமிடப்பட்டபடி தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகா மறுத்திருக்கிறது. இதன் விளைவாக, மாநிலங்களுக்கிடையிலான எல்லை அளவீட்டு மையமாக பிலிகுண்டுலுவில், அதிக மழை பொழியும் மாதமான ஜூலையில் நிர்ணயிக்கப்பட்ட 31 டி.எம்.சி (tmc ft) அளவுக்குப் பதிலாக, வெறும் 1,000 மில்லியன் கன அடி (1 டி.எம்.சி) நீர் மட்டுமே வந்து சேர்ந்தது.


நீரின் அளவைக் குறிக்க பயன்படும் டி.எம்.சி (TMC) என்பது ஆயிரம் மில்லியன் கன அடி (Thousand Million Cubic Feet) அல்லது நூறு கோடி கன அடி நீரைக் குறிக்கும்.


1 டி.எம்.சி : தோராயமாக 2,830 கோடி லிட்டர் தண்ணீர்


1 கன அடி : தோராயமாக 28.3 லிட்டர் தண்ணீர்


பருவமழை பொய்க்கக்கூடும் என்ற கணிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு கர்நாடக முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். இருப்பினும், இது தமிழ்நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை இறுதி வரை தமிழ்நாட்டிற்கு சுமார் 3.6 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்தது. இது காவிரி நீர் தகராறு தீர்ப்பாயம் (Cauvery Water Disputes Tribunal) மற்றும் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த சுமார் 40 டி.எம்.சி தண்ணீரில் வெறும் 10% மட்டுமே ஆகும். ஜூலை 30 அன்று நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority (CWMA)), ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி (cusecs) நீரைப் பிலிகுண்டுலுவிற்குத் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (Cauvery Water Regulation Committee (CWRC)) உத்தரவை உறுதிப்படுத்தியது. இந்த அளவு நீர் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியின் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், அப்பகுதியின் சூழலியல் அமைப்புக்குச் சிறிதளவேனும் உதவியாக இருந்திருக்கும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) முடிவு கர்நாடக விவசாயிகளையும் அரசியல் தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும், இயற்கை ஓரளவு பலன்களை அளித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (CWRC) ஆகிய தற்போதைய வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்று கர்நாடகா கருதினால், அது மாற்று வழிகளைப் பரிந்துரைக்கலாம். ஆனால், தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் நதிநீர் உரிமையுள்ள மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்புகளின் முடிவுகளுக்கு அது முதலில் கட்டுப்பட வேண்டும். தற்போது, தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரைத் தொடர்புகொண்டார். ஆனால், ஆகஸ்ட் 3 அன்று பெங்களூருவில் நடைபெறவிருந்த வருகையை ஒத்திவைக்குமாறு கர்நாடக முதல்வர் சிவகுமார் முதல்வர் விஜயிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக முயற்சிக்கப்பட்ட 'பற்றாக்குறை கால நீர் பகிர்வு முறை'யை (distress-sharing formula) உருவாக்குவதற்கான புதிய முயற்சியை மேற்கொள்வதிலிருந்து இந்த நிகழ்வு இரு மாநிலங்களையும் தடுத்துவிடக் கூடாது. காவிரி விவகாரத்தைக் கையாள்வதில், தனது மாநிலத்திலுள்ள பிற அரசியல் தரப்பினரையும் ஒன்றிணைப்பதன் மூலம் கர்நாடக முதல்வரிடமிருந்து தமிழ்நாடு முதல்வர் விஜய் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.


Original Link :Distress and dispute: On Karnataka, Tamil Nadu and the Cauvery

Share:

சிறந்த பொதுச் செலவினங்கள் மூலம், அனைவருக்கும் வலுவான சுகாதார அமைப்புகள் - நளினி குலாட்டி, விகாஸ் டிம்பிள்

 வெளிநாட்டு உதவிகள் குறைந்து வரும் சூழல் மற்றும் உள்நாட்டு நிதிநிலை அறிக்கை நெருக்கடிக்கு மத்தியில், இருக்கும் நிதியைச் சிறப்பாகப் பயன்படுத்துவதே முன்னேற்றத்திற்கான வழியாக அமையலாம்.


வலுவான பொது சுகாதார அமைப்புகளை உருவாக்குவது குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நிதியளிப்பு பற்றியே தொடங்குகின்றன. உண்மையில், உலக வங்கியின் தரவுகளின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (low- and middle-income countries (LMIC)) அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு (universal health coverage (UHC)) அளிப்பதற்கான தனிநபர் பொதுச் செலவினம், (per capita public spending) தேவைப்படும் குறைந்தபட்ச அளவுகோலில் பாதியாக மட்டுமே உள்ளது. இந்தச் செலவினத்தில் அரசாங்கச் செலவு மற்றும் நிதிநிலை அறிக்கைக்கு அப்பாற்பட்ட மேம்பாட்டு உதவிகள் ஆகிய இரண்டும் அடங்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுகாதாரச் செலவினத்தைப் பொறுத்தவரை, குறைந்த/நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி 2000-ல் 2.05 சதவீத புள்ளிகளாக இருந்தது, 2023-ல் அது 1.68 சதவீத புள்ளிகளாகக் குறைந்துள்ளது. குறைந்த/நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இடைவெளியைக் குறைத்து வருவதாகத் தோன்றினாலும், உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகள், தனிநபர் அடிப்படையில் இந்த இடைவெளி உண்மையில் இக்காலகட்டத்தில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன.


அரசின் சுகாதாரச் செலவினம் அதிகரித்தாலும், குடும்பங்களின் மீதான நிதிச்சுமை மற்றும் சொந்தப் பணத்தில் மேற்கொள்ளப்படும் மருத்துவச் செலவுகள் (out-of-pocket spending) பல குடும்பங்களுக்குத் தொடர்ந்து ஒரு பெரும் சுமையாகவே உள்ளது.




நெருக்கடியில் சுகாதார உதவி


பல ஆண்டுகளாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (LMICs) தேசிய சுகாதார நிதிநிலைத் திட்டங்களுக்கு (பட்ஜெட்டுகளுக்கு) ஆதரவளிப்பதில் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு உதவி (Development Assistance for Health (DAH)) முக்கிய பங்காற்றியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின்போது, ​​2021-ல் சுகாதார உதவித் தொகை அதன் உச்ச அளவை எட்டியது. இருப்பினும், பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த உதவித் தொகை அதிகரிக்கும் போக்கு வெகுவாக மாறியது. மேலும், 2025-ன் தொடக்கத்தில், உலகளாவிய சுகாதாரத்திற்கான மேம்பாட்டு உதவியில் (DAH) ஆண்டுதோறும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகப் பங்களித்து வந்த அமெரிக்கா, தனது வெளிநாட்டு உதவித் திட்டத்தில் 67% குறைப்பை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் முறையே 39%, 35% மற்றும் 12% குறைப்புகளை அறிவித்தன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development (OECD)) கூற்றுப்படி, சுகாதார நிதியுதவி 2022-ல் இருந்த உச்ச அளவிலிருந்து 60% வரை குறையக்கூடும்.


அதேவேளையில், பொதுக் கடன் மற்றும் அதற்கான செலவுகள் அதிகரிப்பதால் தேசிய நிதிநிலை அறிகைத் திட்டங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. 2024-ல் உலகளாவிய பொதுக் கடன் 102 டிரில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியது. இதில் வளரும் நாடுகள் 31 டிரில்லியன் டாலர் பங்களிப்பைக் கொண்டுள்ளன. 2010-ம் ஆண்டிலிருந்து, வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகளின் பொதுக் கடன் இரண்டு மடங்கு வேகத்தில் வளர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (United Nations Trade and Development (UNCTAD)) தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் வளரும் நாடுகள் பொதுக் கடனுக்கான நிகர வட்டித் தொகையாக 921 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவைச் செலுத்தியுள்ளன. இதனால் சுகாதாரம் உள்ளிட்ட பிற அத்தியாவசியத் துறைகளுக்குச் செலவிட அவர்களிடம் குறைந்த அளவே நிதி இருந்தது.



பொது நிதி ஆதாரங்கள் குறைந்து வருவதால், சுகாதார அமைப்புகளுக்குக் கூடுதல் நிதி விரைவில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, தற்போதுள்ள நிதியைச் சிறப்பாகச் செலவிடுவதே இதற்கான தீர்வாக அமையலாம். பொது சுகாதாரச் செலவினங்களின் பலனை அதிகரிக்க மூன்று முக்கிய வழிகள் உள்ளன.


முதலாவது, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவிடுவது ஆகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (LMICs) சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் 85% முதல் 90% வரையிலான தொகையே செலவிடப்படுவதாக உலக வங்கி தெரிவிக்கிறது. இந்தச் செயல்படுத்தும் விகிதமானது, ஒட்டுமொத்த அரசு நிதிநிலை மற்றும் கல்வித் துறைக்கான விகிதங்களை விடக் குறைவாகும். நடைமுறையில், அரசு நிதிநிலை அறிக்கை செயலாக்கக் கட்டத்தில் சுகாதாரத் துறைக்குக் குறைந்த முன்னுரிமையே அளிக்கப்படுவதையே இது காட்டுகிறது. இந்தியாவில், முக்கிய சுகாதாரக் கட்டமைப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே 2024-25-ஆம் ஆண்டில் செலவிடப்பட்டதாக நாடாளுமன்றக் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் (NHM) நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. 2024–25 ஆம் ஆண்டில், தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 26% மட்டுமே உண்மையில் செலவிடப்பட்டது.


இந்தியா தனது சுகாதாரச் செலவினங்களை எவ்வாறு கணக்கிடுகிறது?


சரியான சுகாதார முதலீடுகள்


இரண்டாவது, சரியான சுகாதார சேவைகளுக்காக பொதுப் பணத்தைச் செலவிடுவது ஆகும். செலவினப் பிரிவுகளைப் பொறுத்து நிதிநிலை அறிக்கைத் திட்டச் செயலாக்கம் மாறுபடுகிறது. ஊதியங்கள் மற்றும் சம்பளங்களுக்கான நிதிநிலை அறிக்கைத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் அதேவேளையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் பெரும்பாலும் முழுமையாகச் செலவிடப்படுவதில்லை. இதன் விளைவாக, சுகாதாரப் பணியாளர்களுக்குத் தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்கத் தேவையான உபகரணங்களும் வளங்களும் கிடைப்பதில்லை. இன்னும் பரந்த அளவில் பார்த்தால், பொதுச் செலவினங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் சுகாதாரப் பராமரிப்பின் எந்தெந்த நிலைகள் தொடர்பாக ஒரு தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. தடுப்பு மற்றும் முதன்மை சுகாதாரப் பராமரிப்பின் இழப்பில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் உள்ள குணப்படுத்தும் சிகிச்சைக்கே அதிகப் பணம் செல்கிறது. லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியின் மதிப்பீடுகளின்படி, இந்தியா தனது பொது சுகாதாரப் பணத்தில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே தடுப்புப் பராமரிப்புக்காகச் செலவிடுகிறது.


தற்போது, பொது சுகாதாரத் தாக்கத்தின் அடிப்படையில் மட்டும் பார்த்தால், தொற்றுநோய் கட்டுப்பாடு அல்லது சுகாதாரம் (sanitation) போன்றவற்றில் 'சந்தை தோல்வி' (market failure) நிலவும் பொதுநலச் சேவைகளில் பொது சுகாதார நிதியைச் செலவிடுவது மிகவும் சிறந்தது. இதற்குமாறாக, தனியார் துறை போட்டித்தன்மையுடன் வழங்கிவரும் நிலையில், இதன் ஒப்பீட்டளவில் மலிவான சிகிச்சை சேவைகளை (எ.கா., சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை அளித்தல்) விரிவுபடுத்துவதில் செலவிடுவதைவிட இதுவே சிறந்தது. சமீபத்திய சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. பொது சுகாதாரச் செலவினங்கள், மேம்பட்ட அணுகல், தடுப்பூசி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மூலம் தொற்று நோய்களின் கட்டுப்பாட்டை கணிசமாக மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், இதே செலவினம் தாய் மற்றும் குழந்தை நலன் அல்லது தொற்றா நோய்கள் மீது மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. பொது சுகாதார நிதிகள் மேலும் உத்திசார்ந்து  ஒதுக்கப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது. மக்கள் விகிதம் வயதாகும்போது, நாள்பட்ட நோய்களுக்கான ஆபத்துக் காரணிகளைக் கையாளுதல், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் அதிகமாகச் செய்யப்பட வேண்டும்.


மத்திய அரசின் சுகாதாரச் செலவினங்கள் அதிகரித்துள்ளனவா?


சிறந்த நிர்வாகம், சிறந்த சுகாதாரம்


மூன்றாவது, நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது ஆகும். சிறந்த நிர்வாகம் மிக முக்கியமானது. ஊழல் குறைக்கப்பட்டால் அல்லது அதிகாரத்துவத்தின் தரம் மேம்பட்டால், குழந்தை இறப்பு போன்ற விரும்பத்தக்க சுகாதார விளைவுகளில் பொது சுகாதாரச் செலவினங்களின் பெரும் நேர்மறையான விளைவுகளை நாடுகள் காண்கின்றன. இதற்கு நேர்மாறான நிலையும் உண்மையானதே. நிர்வாகம் பலவீனமாக உள்ள இடங்களில் செலவினங்களை வெறுமனே அதிகரிப்பது விளைவுகளை மேம்படுத்த வாய்ப்பில்லை. மேலும், பொதுச் சேவை வழங்கலின் பரவலாக்கம் அதிகரித்து வருவதால், துணை-தேசியளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.


சிறந்த நிர்வாகத்தில் பொது நிதி மேலாண்மைக்கு முக்கியப் பங்கு உண்டு. நன்கு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைத் திட்டம் (பட்ஜெட்) ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், அந்த நிதிநிலை அறிக்கைத் திட்டம் திறமையாகச் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நிதிநிலை அறிக்கைத் திட்டத்தின் நம்பகத்தன்மையையும் பண விநியோகத்தையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நிதிநிலை அறிக்கைத் திட்டச் செயல்பாட்டில் பொது சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்துவது அவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தும். அத்துடன் அவர்களின் ஊக்கத்தையும் அதிகரிக்கும். கொள்முதல் நடைமுறைகளை மேம்படுத்துவது, சுகாதாரத் துறை செலவிடும் பணத்திற்குச் சிறந்த மதிப்பைப் பெற உதவும். பெருந்தொற்று நமக்குக் கற்பித்தது போல, எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கைகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும்.


இருப்பினும், பொது சுகாதாரச் செலவினத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சுகாதார விளைவுகள் மிகவும் பின்தங்கியுள்ள இடங்களிலேயே கூடுதல் செலவினத்தின் பலன்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. எனவே, சுகாதாரச் செலவினம் முறையாகத் திட்டமிடப்பட்டுத் திறம்படப் பயன்படுத்தப்பட்டால், அது சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதோடு, நாடுகளுக்கு இடையிலான சுகாதார விளைவுகளின் இடைவெளியையும் குறைக்க உதவும்.


நளினி குலாட்டி ‘ஐடியாஸ் ஃபார் இந்தியா’வின் (Ideas for India) தலையங்க ஆலோசகர் ஆவார். விகாஸ் டிம்பிள், அசோகா பல்கலைக்கழகத்தின் ஐசக் பொதுக் கொள்கை மையத்தில் (ICPP) பணியாற்றுகிறார். இவ்விரு எழுத்தாளர்களும் இணைந்து ‘தி கேர் கேப்’ (The Care Gap) என்ற தொடர் இலக்கிய மதிப்பாய்வை எழுதியுள்ளனர். இது கோஎஃபிஷியன்ட் கிவிங் (Coefficient Giving) ஆதரவுடன் வெளியிடப்படுகிறது.


Original Link : Strong health systems for all with better public spending -Nalini Gulati, Vikas Dimble

Share:

இந்தியாவில் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் குறைந்துள்ளதற்கான காரணங்கள் : NFHS-6 தரும் தகவல்கள் - சோனாலி மிஸ்ரா, கரண் பப்பர்

 

NFHS :  தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு - National Family Health Survey


பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகளின் விகிதம், NFHS-4-ல் 54.9%-லிருந்து NFHS-5-ல் 63.7%-ஆக உயர்ந்ததுள்ளது. இருப்பினும், NFHS-6-ல் அது மீண்டும் 55.8%-ஆகக் குறைந்தது. இந்த மாற்றம், வெறும் மூன்றாண்டுகளிலேயே நம்மை ஏறக்குறைய ஒரு பத்தாண்டு காலத்திற்கு முந்தைய நிலைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தாய்மார்களுக்கான சுகாதாரக் குறியீடுகள் (Maternal healthcare indicators) தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளன. மருத்துவமனைகளில் பிரசவம் செய்துகொள்ளும் பெண்களின் சதவீதம் அதிகரித்தது மட்டுமல்லாமல், பிரசவத்திற்குப் பிறகு இரண்டு நாட்களுக்குள் பரிசோதனை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், அறுவை சிகிச்சை (C-section) மூலம் நடைபெறும் பிரசவங்களின் விகிதமும் உயர்ந்துள்ளது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பிலும் (NFHS-6, 2023–24) இந்த நிலை தொடர்ந்தது. இதில் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 90.6%-ஐயும், பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு 82.8%-ஐயும் எட்டியுள்ளன.


ஆனால், தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் விகிதம் இந்தப்பாதையைப் பின்பற்றவில்லை. பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகளின் விகிதம், NFHS-4-ல் 54.9%-லிருந்து NFHS-5-ல் 63.7%-ஆக உயர்ந்தது. ஆனால், NFHS-6-ல் மீண்டும் 55.8%-ஆகக் குறைந்தது. இந்த மாற்றம், வெறும் மூன்றாண்டுகளிலேயே நம்மை ஏறக்குறைய ஒரு பத்தாண்டு காலத்திற்கு முந்தைய நிலைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.


மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும், தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவுக்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாட்டை ஆராய மாநில அளவிலான NFHS தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.


கணக்கெடுப்புப் பிழைக்கான வாய்ப்பை நிராகரித்தல்


இதற்கான முதல் சாத்தியமான காரணமாகக் கருதப்பட்டது கணக்கெடுப்பு முறையே ஆகும். பெருந்தொற்று காரணமாக NFHS-5-ன் கணக்கெடுப்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. முதல் கட்டத்தில் (நிலை-1) உள்ள 22 மாநிலங்களில் கணக்கெடுப்புப் பணிகள் கோவிட்-19 பரவத் தொடங்குவதற்கு முன்பே நிறைவடைந்தன. ஆனால், இரண்டாம் கட்டத்தில் (Phase-II) உள்ள 14 மாநிலங்களில், மார்ச் 2020-ல் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கத்தால் (lockdown) கணக்கெடுப்புப் பணிகள் தடைபட்டு, டிசம்பர் மாதத்தில்தான் மீண்டும் தொடங்கியது. கணக்கெடுப்பு நடத்தப்பட்ட விதத்தால் NFHS-5-ல் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் செயற்கையாக அதிகமாகக் காட்டப்பட்டிருந்தால், அந்த ஒரு காரணமே பிற்காலத்தில் ஏற்பட்ட 'சரிவின்' ஒரு பகுதியை விளக்கியிருக்கக்கூடும்.


இருப்பினும், தரவுகள் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தவில்லை. NFHS-4 மற்றும் NFHS-5 ஆகிய ஆய்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான இரண்டாம் கட்ட (Phase-II) மாநிலங்களில் தாய்ப்பால் ஊட்டுதல் விகிதம் (சராசரியாக 10.5 சதவீதப் புள்ளிகள்) முதல் கட்ட (Phase-I) மாநிலங்களை (1.6 புள்ளிகள் உயர்வு) விட அதிகமாகவே மேம்பட்டிருந்தது. இது, களப்பணியின் போது ஏற்பட்ட குறைபாடுகளே இதற்குக் காரணம் என்ற வாதம் முன்வைக்கும் கணிப்புக்கு முற்றிலும் முரணானதாகும். இதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், அவை NFHS-5 ஆய்வுக்குப் பின்னரே நிகழ்ந்தனவே தவிர, அந்த கணக்கெடுப்பின் காரணமாக நிகழவில்லை.


மாநிலங்களில் என்ன நடக்கிறது?


நாடு முழுவதும் ஒரே சீரான சரிவு ஏற்படவில்லை என்பதையும், மாநிலத்திற்கு மாநிலம் இதில் மாறுபாடுகள் உள்ளன என்பதையும் தரவுகள் காட்டுகின்றன.


NFHS-5 முதல் NFHS-6 வரை மிகப்பெரிய மாற்றங்கள் (சதவீதப் புள்ளிகள்)

அதிகம் முன்னேறியவை

மாற்றம்

அதிகம் சரிவு கண்டவை

மாற்றம்

சிக்கிம்

+21.3

ஹரியானா

−28.3

கேரளா

+17.2

உத்தரப்பிரதேசம்

−25.1

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

+17.2

லடாக்

−18.8

புதுச்சேரி

+8.3

மத்திய பிரதேசம்

−17.6

குஜராத்

+6.4

ராஜஸ்தான்

−16.1



டெல்லி

−16.0


உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய சரிவுகள் ஏற்பட்டன. அந்த மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. அவை அனைத்தும் சேர்ந்து இந்தியாவில் நிகழும் மொத்தப் பிறப்புகளில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்பட்ட சரிவு மட்டுமே தேசிய அளவிலான தாய்ப்பால் கொடுக்கும் விகிதத்தைக் குறைப்பதற்குப் போதுமானதாக இருந்தது.

கிடைக்கப்பெற்ற தரவுகள் ஒரு தெளிவான மற்றும் தற்செயலற்ற (non-random) போக்கை வெளிப்படுத்துகின்றன. NFHS-4 மற்றும் NFHS-5 ஆகிய ஆய்வுக் காலகட்டங்களுக்கு இடையே 'முழுமையான தாய்ப்பால் ஊட்டுதலில்' (exclusive breastfeeding) மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்த மாநிலங்கள், NFHS-5 மற்றும் NFHS-6 காலகட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. இந்தப் போக்கு, முந்தைய முன்னேற்றங்கள் வலுவானதாகவோ அல்லது நீண்டகாலம் நீடிக்கக்கூடியதாகவோ இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகியவை இந்தப் போக்கை வெளிப்படையாகப் பின்பற்றுகின்றன. முந்தைய முன்னேற்றங்கள் மிகக் கடுமையான சரிவுகளால் பெருமளவில் ஈடுசெய்யப்பட்டுள்ளன. முன்னேற்றங்களுக்கும் சரிவுகளுக்கும் இடையிலான எதிர்மறைத் தொடர்பு, தரவுகள் கிடைக்கப்பெற்ற அனைத்து 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் புள்ளிவிவரப்படி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இருப்பினும் சில விதிவிலக்குகளும் உள்ளன. உதாரணமாக, கேரளா, புதுச்சேரி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இரண்டு காலகட்டங்களிலும் முன்னேற்றம் கண்டன. அதேசமயம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆரம்பத்தில் சரிந்து பின்னர் மீண்டன. சிக்கிம் சரிவிலிருந்து மீண்டு, தேசிய அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்ட மாநிலமாக மாறியது. தற்போதைய தரவுகள் இந்த விதிவிலக்குகளை விளக்கவில்லை.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

கிடைக்கப்பெற்ற தரவுகளைக் கொண்டு நேரடியான 'காரண-காரியத் தொடர்பை' (cause-and-effect relationship) உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும், இவை மேலும் ஆராயப்பட வேண்டிய காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் காரணிகளை ஆய்வு செய்வது நாடு முழுவதும் தாய்ப்பால் ஊட்டும் விகிதங்களை மேம்படுத்த உதவும்.


பொது ஊரடங்குகள் நீக்கப்பட்ட பிறகு, சுகாதார சேவைக்கான அணுகல் மீட்டெடுக்கப்பட்ட வேகத்திற்கு ஏற்ப அதற்கான துணை சேவைகள் வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். செய்தித்தாள் அறிக்கைகளிலிருந்து கிடைக்கும் அனுபவச் சான்றுகள், மருத்துவமனைகள் மீண்டும் திறக்கப்பட்டதையும், பிரசவங்களின் எண்ணிக்கை பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியதையும் காட்டுகின்றன. இருப்பினும், தாய்ப்பால் குறித்த ஆலோசனை, ஆரம்பகால தோல்-தொடர்பு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்ப்பால் ஆதரவு ஆகியவை குறைவாகவே இருந்திருக்கலாம். இது, பெருந்தொற்றின்போது இந்திய சுகாதார நிலையங்களில் தாய்-குழந்தை பிரிப்பு மற்றும் தாய்ப்பால் ஆதரவிற்கான பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்த முந்தைய அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டதும் மற்றொரு காரணமாக இருக்கலாம். முறைசாரா துறையில் பணிபுரியும் பெண்களும், மகப்பேறு உதவித்தொகை இல்லாதவர்களும், முன்கூட்டியே ஊதியம் பெறும் வேலைக்குத் திரும்ப முடியும். இதன் விளைவாக, பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கும் காலம் குறைந்திருக்கலாம்.

NFHS-5 மற்றும் NFHS-6-க்கு இடையில், தேசிய அளவில் அறுவை சிகிச்சை (C-section) பிரசவங்கள் 17.2%-இலிருந்து 27.2%-ஆகப் பெருமளவில் அதிகரித்ததும் ஒரு காரணியாக இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு வலுவான ஆதரவு வழங்கப்படாத பட்சத்தில், அறுவை சிகிச்சை (C-section) பிரசவங்கள் தாய்ப்பால் கொடுப்பதை ஆரம்பிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

புள்ளிவிவரங்களால் உணர்த்தாத உண்மைகள்

இந்தக் கணக்கெடுப்பு தனிநபர் அளவிலான தரவுகளுக்குப் பதிலாக, மாநில வாரியாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இதற்கான காரணங்களில் எது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றோ அல்லது சில மாநிலங்கள் மட்டும் ஏன் இந்த பொதுவான போக்குக்கு மாறாகச் செயல்பட்டன என்றோ உறுதியாகக் கூற முடியவில்லை. இதை தெரிந்துகொள்ள, வரும் மாதங்களில் நடக்கவிருக்கும் கணக்கெடுப்புகளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படும் NFHS-6-ன் தனிநபர் அளவிலான (unit-level) தரவுகள் தேவைப்படும்.

ஆனால், தேசிய சராசரி அளவீடுகளைக் கொண்டு மட்டும் இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. ஒரு நாடு தாய்மார்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்ப்பதில் சிறந்து விளங்கலாம். அதே சமயம், அவர்கள் பச்சிளம் குழந்தையுடன் வீடு திரும்பிய பிறகு அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதில் பின்தங்கியிருக்கலாம். இந்தியாவில் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான தாய்மார்களின் விஷயத்தில் இதுதான் சரியாக நடந்திருப்பதாகத் தெரிகிறது.

சோனாலி மிஸ்ரா ஐஐடி பம்பாயில் முனைவர் பட்ட மாணவர். கரண் பப்பர் எக்ஸ்எல்ஆர்ஐ ஜாம்ஷெட்பூரில் பொருளியல் உதவிப் பேராசிரியர் ஆவர்.


Original Link : Why breastfeeding rates have dropped in India: insights from NFHS-6. -Sonali Mishra, Karan Babbar

Share:

ஆர்க்டிக் சபை (Arctic Council) என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலப்பரப்பைக் கொண்ட 8 நாடுகளை உள்ளடக்கிய 'ஆர்க்டிக் சபையின்' (Arctic Council) 13 பார்வையாளர் நாடுகளில் (observer countries) இந்தியாவும் ஒன்றாகும். பார்வையாளர் நாடுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. மேலும், அவை நிதிப் பங்களிப்பை வழங்கவோ அல்லது ஆர்க்டிக் பகுதியில் நேரடியாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ ​​முடியாது.


• அந்தக் குழு தனது பரிந்துரைகளில் பின்வருமாறு கூறியுள்ளது: "துருவப் பகுதிகளுக்கென பிரத்யேக தூதர்களை நியமித்துள்ள பிற நாடுகளைப் போல, இந்தியாவும் துருவப் பகுதிகளுக்கு எனத் தனி 'தூதரை' (Ambassador) நியமிக்க வேண்டும். இது, தனது வெளியுறவுக் கொள்கையில் துருவப் பகுதிகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுவதுடன், சர்வதேச அளவில் நாட்டின் கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கவும், துருவப் பகுதிகள் சார்ந்த இலக்குகளைப் பின்தொடரவும் உதவும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 


• வளரும் நாடுகளின் பிரதிநிதியாக இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த, அரசு ஒரு வலுவான உத்தியைக் கையாள வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், ஆர்க்டிக் சபையில் (Arctic Council) பார்வையாளர்களாக இருக்கும் ஆசிய நாடுகளான இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இணைந்து ஒரு நான்கு முனை கூட்டாண்மை (Quadrilateral partnership) மூலம் தங்களுக்குள் கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்தக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• ஆர்க்டிக் சபையில் 'பார்வையாளர்' தகுதி பெற்றுள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த சபையில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் போன்ற 13 அரசுக்களுக்கிடையேயான இடையேயான அமைப்புகளும், 12 அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பார்வையாளர்களாகச் செயல்பட்டு வருகின்றன.


• பார்வையாளர்கள் (Observers) முடிவெடுக்கும் செயல்பாடுகளில் பங்குபெற முடியாது. ஆனால், ஆர்க்டிக் கவுன்சிலின் கூட்டங்களில், குறிப்பாக அதன் செயற்குழுக்களின் கூட்டங்களில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.


• ஆர்க்டிக் சபையின் நோக்கங்களை ஆதரிக்கும் மற்றும் நிதியுதவி உட்படப் பல்வேறு வழிகளில் பங்களிப்பை வழங்கக்கூடிய திறனை நிரூபித்த நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு மட்டுமே பார்வையாளர் தகுதிநிலை வழங்கப்படுகிறது. இந்த தகுதிநிலை ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால், அது பொதுவாகத் தானாகவே புதுப்பிக்கப்படும். பார்வையாளராக உள்ள நாடு ஆர்க்டிக் சபையின் நோக்கங்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது என அதன் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.


• சீனா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்து, இந்தியா 2013-ஆம் ஆண்டில் பார்வையாளர் தகுதிநிலையைப் பெற்றது. இதற்கு முன்பு, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு மட்டுமே பார்வையாளர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்து நாடு 2017-ஆம் ஆண்டில் பார்வையாளர் நாடாக இணைந்தது.


• அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஆர்க்டிக் (Arctic) பகுதியில் நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வளிமண்டலம் மற்றும் காலநிலை அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை வேறு எங்கும் செய்ய முடியாத வகையில், துருவப் பகுதிகள் மிக தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகின்றன.


• வடதுருவத்திற்குத் தெற்கே சுமார் 1,200 கி.மீ தொலைவில் உள்ள நார்வே நாட்டின் ஸ்வல்பார்ட் (Svalbard) தீவில் அமைந்துள்ள 'நை அலெசுண்ட்' (Ny-Alesund) என்ற இடத்தில் 'இமாத்ரி' (Himadri) ஆராய்ச்சி நிலையம் ஜூலை மாதம் 2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கோவாவை தளமாகக் கொண்ட தேசிய அண்டார்டிக் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (National Centre for Antarctic and Ocean Research (NCOAR)) இந்த நிலையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முதன்மை அமைப்பாகச் செயல்படுகிறது.


• கடந்த பத்தாண்டுகளில், உயிரியல், பனிப்பாறை ஆய்வு (glaciology), வளிமண்டல மற்றும் காலநிலை அறிவியல் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிலையம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்த வசதிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.


• 1981-ஆம் ஆண்டில் தொடங்கிய அண்டார்டிகாவிற்கான இந்தியாவின் 30 ஆண்டுகால அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகே 'ஹிமாத்ரி' (Himadri) ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. இந்தியா 1983-ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் தனது முதல் நிரந்தர ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தது. 2010-ஆம் ஆண்டில் இந்திய விஞ்ஞானிகள் தென்துருவத்திற்கும் ஒரு அறிவியல் பயணத்தை மேற்கொண்டனர். இன்று, அண்டார்டிகாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிலையங்களைக் கொண்டுள்ள மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.


• ஆர்க்டிக் பகுதி கனிமங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். உலக வெப்பமயமாதல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால், பயணத் தூரத்தைக் குறைக்கும் புதிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகள் உருவாகி வருகின்றன. எனவே, ஆர்க்டிக் பகுதியில் ஏற்கனவே தீவிரமாகச் செயல்பட்டு வரும் நாடுகள், அங்குள்ள இயற்கை வளங்களை வணிகரீதியாகப் பயன்படுத்துவதில் தங்களது பங்கைப் உறுதிசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.


Original Link : What is the Arctic Council? -Priya Kumari Shukla

Share:

தென்சீனக் கடல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது: அங்கு என்ன நடக்கிறது, அது ஏன் முக்கியமானது? -ரோஷ்னி யாதவ்

தென்சீனக் கடல் தொடர்பான சீனாவின் புதிய விதிகள், நீண்டகாலமாக நிலவி வரும் கடல்சார் எல்லைச் சிக்கலை மீண்டும் உலகளவில் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளன. இந்தப் புதிய நடவடிக்கைகள் எதைக் குறிக்கின்றன? தென்சீனக் கடல் இராஜதந்திரரீதியாக ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஒன்பது கோடுகள் எல்லை (Nine-Dash Line), கடல்சார் எல்லைப் பிரச்சனை மற்றும் இந்தியாவின் 'சாகர்' (Security and Growth for All in the Region (SAGAR)) மற்றும் 'மகாசாகர்' (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions (MAHASAGAR)) கோட்பாடுகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு: 


ஒன்பது கோடுகள் எல்லை (Nine-Dash Line) : 


  • 1947-இல் சீனக் குடியரசு (Republic of China) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் 11 கோடுகள் கொண்ட எல்லையை வெளியிட்டது.


  • பின்னர் 1950-களில் மக்கள் சீனக் குடியரசு (PRC) அதை 9 கோடுகளாக குறைத்தது (வியட்நாமுடன் டோன்கின் வளைகுடா தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பிறகு).


  • அன்று முதல் சீனா இந்த “ஒன்பது கோடுகள் எல்லையை” தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தைவான் இன்னும் 11 கோடுகளைக் குறிப்பிடுகிறது.


கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி, சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் அமைந்துள்ள 'ஹுவாங்யான் தீவு தேசிய இயற்கை சரணாலயத்திற்காக' (Huangyan Dao National Nature Reserve) சீனா புதிய நிர்வாக விதிமுறைகளை வெளியிட்டது. இந்தத் தீவுக்குச் சொந்தம் கொண்டாடும் பிலிப்பைன்ஸ் நாட்டுடன், சீனாவிற்கு இருக்கும் பதற்றத்தை இந்த நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், தென்னசீனக் கடலின் இந்த மணல் திட்டின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தச் சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகள் என்ன என்பதையும், பரந்த தென்சீனக் கடல் பிரச்சனை குறித்தும் அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. ஹுவாங்யான் தீவின் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் பன்முகத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த நடவடிக்கைகள் ஒரு முக்கியப் படியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. இந்த விதிகளின்கீழ், சட்டவிரோதச் செயல்கள் மற்றும் விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து, விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கமான கண்காணிப்பு அமைப்பு முறை ஒன்று உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


3. இன்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இயற்கை வளங்கள் அமைச்சகம், தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம், சீனா கடலோரக் காவல் படை மற்றும் ஹைனான் மாகாண அரசாங்கம் ஆகியவை இணைந்து வெளியிட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளின்கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது .


4. முன்அனுமதி இல்லாமல், மீன்பிடித்தல், சுரங்கத் தொழில் செய்தல் அல்லது அரிதான கடல்வாழ் உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழல் அமைப்பிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பவளப்பாறைகள் (Corals and Coral reefs) மற்றும் ராட்சத சிப்பிகளைச் சேகரித்தல் போன்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


5. சட்ட விதிமுறைகளின்படி அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பணிகளுக்காக வருபவர்களைத் தவிர, வேறு எந்த நபரோ அல்லது அமைப்போ இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை என்றும் கூறப்படுள்ளது.


தென்சீனக் கடல் என்பது என்ன?


1. தென்சீனக் கடல், சீனப் பெருநிலப்பரப்பிற்குத் தெற்கே அமைந்துள்ளது. பிரூனை, சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இந்தக் கடலின் பல்வேறு பகுதிகளைத் தங்கள் சொந்தப் பகுதி என உரிமை கொண்டாடுவதில் இந்த நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக மோதல்கள் நிலவி வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


2. தென்சீனக் கடல் உலகிலேயே மிக முக்கிய கடல்சார் பிராந்தியங்களில் ஒன்றாகும். இந்தப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்த சீனா இதன் மீது முழுஅதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது. 1947-ஆம் ஆண்டு, 'Kuomintang' என்ற தேசியவாத ஆட்சியின்கீழ், சீனா "ஒன்பது கோடுகள் எல்லை வரைபடத்தை" (Nine-dash line) வெளியிட்டது.


3. ஒன்பது கோடுகள் எல்லை வரைபடம், தெற்கு சீனக் கடலில் பெய்ஜிங் (சீனா) உரிமை கோரும் நீர்நிலைகளையும் தீவுகளையும் சூழ்ந்துள்ளது. இது தெற்கு சீனக் கடலின் ஏறக்குறைய 90 சதவீதப் பகுதியை உள்ளடக்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகும், இந்த உரிமை கோரல் தொடர்ந்து சீனாவின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் இடம்பெற்று வருகிறது.


4. சமீபத்திய ஆண்டுகளில், தெற்கு சீனக் கடல் பகுதி தனது பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் (Exclusive Economic Zone (EEZ)) ஒரு பகுதி என்ற வாதத்தை முன்வைக்கும் சீனா, தனது அனுமதியின்றி மற்ற நாடுகள் அப்பகுதியில் ராணுவ அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.


5. இருப்பினும், தெற்கு சீனக் கடற்பகுதியில் சீனாவின் பரந்த உரிமை கோரல்களை மற்ற நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதற்குப் பதிலாக, தெற்கு சீனக் கடலில் ஏற்கனவே உள்ள தீவுகளை விரிவுபடுத்தியும், புதிய செயற்கைத் தீவுகளை உருவாக்கியும் சீனா தனது ஆதிக்கத்தைப் பெருக்கி வருகிறது என்று வெளியுறவுத் தொடர்புகளுக்கான அமைப்பு (Council on Foreign Relations (CFR)) தெரிவிக்கிறது.

'ஒன்பது கோடுகள் எல்லை' (Nine-dash line) என்றால் என்ன?


Knowledge Nugget | China tightens grip on the South China Sea: What’s happening and why it matters1. 'ஒன்பது கோடுகள் எல்லை' என்பது தென் சீனக் கடலில் உள்ள பகுதிகளைத் தனக்குச் சொந்தமானது எனக் கோருவதற்காகச் சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடங்களில் வரைந்துள்ள எல்லைக் கோடாகும். இது ஆரம்பத்தில் 'பதினொரு கோடுகள் எல்லை' (Eleven-dash line) என்று அழைக்கப்பட்டது. ஆனால், 1953-ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் 'டாங்கின் வளைகுடா' (Gulf of Tonkin) பகுதியை இதில் இருந்து நீக்கியதால், இது ஒன்பது கோடுகளாகக் குறைந்தது.

2. இந்தக் கோடு சீனாவின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் வரை நீண்டு, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் எல்லைக்கு சில நூறு கிலோமீட்டர் வரை நீள்கிறது. வரலாற்றுரீதியான கடல்சார் உரிமைகளின் அடிப்படையில் இந்த எல்லைக்கோட்டுக்குள் இருக்கும் நீர்ப்பரப்புகளும் தீவுகளும் தனக்கே சொந்தம் என்று சீனா உரிமை கோருகிறது. இருப்பினும், இந்த எல்லைக் கோட்டிற்கான துல்லியமான புவியியல் ஆயத்தொலைவுகளை சீனா இதுவரை தெளிவாக வரையறுக்கவில்லை. மேலும், சீனா 'ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்டங்களுக்கான ஒப்பந்தத்தில்' (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) கையெழுத்திட்டுள்ள ஒரு நாடாக இருந்தபோதிலும், இந்த எல்லைக்கோடானது அந்த ஒப்பந்தம் அனுமதிக்கும் கடல்சார் எல்லைகளைத் தாண்டி மிக அதிக தூரம் நீண்டுள்ளது.

தென்சீனக் கடலின் முக்கியத்துவம் என்ன?




1. தென்சீனக் கடல் பகுதியானது உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும். இது இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 22 சதவீதமும், கடல் வழியிலான வர்த்தகத்தில் 60 சதவீதமும் இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகின்றன.


2. கடல் மீன்பிடித்தலுக்கு மிகவும் முக்கியமானது; மேலும் இதில் அதிக அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் இது பொருளாதாரரீதியாகவும், பாதுகாப்புரீதியாகவும் மிக மதிப்பமிக்கதாகக் கருதப்படுகிறது.


3. அமெரிக்க எரிசக்தி தகவல் முகமையின் (EIA) தரவுகளின்படி, தென்சீனக் கடலின் அடிவாரத்தில் சுமார் 1,100 கோடி கொள்கலன் எண்ணெயும், 190 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


4. மேலும், தென்சீனக் கடல் வளமான மீன்பிடிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இது அப்பகுதியில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. ‘BBC’ செய்தி நிறுவனத்தின் தரவுகளின்படி, உலகின் மொத்த மீன்பிடிப் படகுகளில் பாதியளவுக்கும் அதிகமானவை இந்தப் பகுதியில்தான் இயங்கி வருகின்றன.

தென்சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுகள் யாவை?


1. தென்சீனக் கடலில் தனது எல்லைக் கோரிக்கைகளை விரிவுபடுத்த சீனா எடுத்து வரும் முயற்சிகள், எல்லைப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளன. புரூனை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய பல நாடுகள் தென்சீனக் கடலின் பல்வேறு பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.


2. ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal), 'ஹுவாங்யான் தீவு' (Huangyan Island) என்றும் அழைக்கப்படுகிறது. இது தெற்காசியாவின் தென்சீனக் கடலில், பிலிப்பைன்ஸின் லூசான் (Luzon) தீவிற்கு மேற்கே சுமார் 120 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாறை நிறைந்த பகுதியாகும். 2012-ஆம் Knowledge Nugget | China tightens grip on the South China Sea: What’s happening and why it mattersஆண்டிலிருந்து சீனாவும் பிலிப்பைன்ஸும் இந்த பாறைப் பகுதிக்கு உரிமைகோரி எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றன.


— இந்த மணல் திட்டு (Shoal) பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்துள்ளது. இருப்பினும், சீனா தனது மாலுமிகள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த 'ஹுவாங்யான் தீவை' (Huangyan Island) கண்டுபிடித்ததாக உரிமை கோருகிறது. மேலும், தனது இந்த உரிமைகோரலுக்கு ஆதரவாக, சாங் வம்சத்தின் (கி.பி. 960–1279) ஆட்சிக்காலம் முதல் இன்று வரை அங்கு மேற்கொண்ட பயணங்கள், நிலப்பரப்பு வரைபடங்களை உருவாக்கியது மற்றும் அந்த மணல் திட்டைப் பயன்படுத்தியது குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் சீனா சுட்டிக்காட்டுகிறது.


இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சி 


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஸ்கார்பாரோ ஷோல் (Scarborough Shoal) கடல் பகுதிக்கு அருகில் இரண்டு நாள் இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியை நடத்தின. மேலும், இது எதிர்காலக் கூட்டாண்மைக்கான மிக முக்கியக் களமாகவும் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு இந்தியா தனது பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணை அமைப்பின் முதல் தொகுதியை பிலிப்பைன்ஸுக்கு வழங்கியது. இதன் மூலம் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பைப் பெற்ற முதல் வெளிநாடு என்ற பெருமையை பிலிப்பைன்ஸ் பெற்றது.




— 2016-ஆம் ஆண்டில், ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) எல்லைப் பிரச்சனை தொடர்பாகப் பிலிப்பைன்ஸ் நாடு சீனாவிற்கு எதிராகச் சர்வதேச தீர்ப்பாயத்தை அணுகியது. தென்சீனக் கடலின் பெரும்பகுதிக்கு உரிமை கோரும் சீனா வைத்திருந்த 'ஒன்பது கோடுகள் எல்லை' (Nine-dash line) வாதத்தை அந்தத் தீர்ப்பாயம் நிராகரித்தது. மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாலும், கடல்சார் சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தியதாலும் சீனா சர்வதேசச் சட்டங்களை மீறியுள்ளது என்றும் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.


— இந்தத் தீர்ப்பு சட்டப்படிப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக இருந்தபோதிலும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் எதுவும் அங்கு இல்லை. இந்த வழக்கின் விசாரணைகளைச் சீனா புறக்கணித்ததுடன், இந்த வழக்கை விசாரிக்கத் தீர்ப்பாயத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், இந்தத் தீர்ப்பை தான் ஏற்கவோ அல்லது பின்பற்றவோ போவதில்லை என்றும் சீனா கூறியது.


3. ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) மற்றும் அதனை சுற்றியுள்ள பவளப்பாறைகள், மணல் திட்டுகள் மற்றும் சிறிய நிலப்பரப்புகளின் உரிமையைக் கோருவதில் சீனா, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலப்பரப்புச் சார்ந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.


— 1968-ஆம் ஆண்டு முதல், இந்த நாடுகள் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு தீவுகளையும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆக்கிரமித்துள்ளன. இதில் புரூனே (Brunei) நாடு மட்டுமே ஒரே விதிவிலக்காகும். அது தன் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வணிகரீதியான மீன்பிடித்தலுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


— ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) பெரும்பாலானவை மனிதர்கள் வாழாத தீவுகளாக இருந்தபோதிலும், அவற்றில் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய இயற்கை வளங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


4. பாராசெல் தீவுகள் (Paracel Islands) தொடர்பான பிரச்சனை மிகவும் சிக்கலானது. இந்த தீவுகள் தென்சீனக் கடலில், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இருநாடுகளுக்கும் இடையே சுமார் 130 தீவுகள் அமைந்துள்ளன.

— 14-ஆம் நூற்றாண்டின் சாங் வம்ச ஆவணங்கள், பாராசெல் தீவுகள் (Paracel Islands) தங்களின் பகுதியாக இருந்ததைக் காட்டுகின்றன என்று சீனா கூறுகிறது. இருப்பினும், 15-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பதிவுகள் அந்தத் தீவுகள் வியட்நாமுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிப்பதாக வியட்நாம் கூறுகிறது.


— ஜனவரி மாதம் 1974-ஆம் ஆண்டில், இந்தத் தீவுகளுக்காக சீனாவிற்கும் வியட்நாமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சீனா தீவுகளைத் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதற்குப் பதிலடியாக, 1982-ஆம் ஆண்டில் அந்தத் தீவுகள் மீதான தனது நிர்வாக அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதாக வியட்நாம் அறிவித்தது. இதற்கிடையே, 1999-ஆம் ஆண்டில் தைவானும் பாராசெல் தீவுகள் முழுவதற்கும் உரிமை கோரியது.


— 2012-ஆம் ஆண்டு முதல் சீனா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய மூன்று நாடுகளும் அரசு அலுவலகங்களைக் கட்டுதல், சுற்றுலாவை ஊக்குவித்தல், நிலச் சீரமைப்புத் திட்டங்களைச் செய்தல் மற்றும் தீவுகளில் தங்கள் ராணுவப் பலத்தை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் உரிமைக் கோரல்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

சாகர் மற்றும் மகாசாகர் கோட்பாடுகள்

1. சாகர்: 'இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி' (Security and Growth for All in the Region (SAGAR)) என்ற கொள்கையை இந்தியப் பிரதமர் முதன்முதலில் 2015-ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினார். இக்கொள்கையின்கீழ், சுதந்திரமான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஆட்சிமுறை, நிலையான மற்றும் வெளிப்படையான உள்கட்டமைப்பு வளர்ச்சி, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சுதந்திரம், தடையில்லாத சட்டபூர்வமான வர்த்தகம், அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளித்தல், தகராறுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுதல் மற்றும் அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.



2. மகாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றம்): இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மொரிஷியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டபோது, இருநாடுகளுக்கு இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதோடு, 'சாகர்' (SAGAR) திட்டத்தை 'மஹாசாகர்' (MAHASAGAR) திட்டமாக மேம்படுத்துவதாகவும் அறிவித்தார். 


3. மகாசாகர் (MAHASAGAR) கோட்பாடானது, இந்தியாவின் பழைய சாகர் (SAGAR) திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, இந்தியாவின் கடல்சார் உறவுகளைப் பலப்படுத்துகிறது. இது இந்தியாவின் அண்டை நாடுகளை மட்டுமன்றி, பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்குகிறது. மேலும், இது (Quadrilateral Security Dialogue) அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய ‘QUAD’ கூட்டமைப்புடன் இந்தியாவின் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது.

 

Original Link : South China Sea back in spotlight: What’s happening and why it matters. -Roshni Yadav

Share:

'சமுத்ரா மந்தன்' (Samudra Manthan) திட்டம் என்பது என்ன? - சப்தபர்ணோ கோஷ்

 'சமுத்ர மந்தன்' திட்டம், ₹84,084 கோடி முதலீட்டின் மூலம் இந்தியாவின் ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் ஆய்வு (deepwater hydrocarbon exploration ) மற்றும் எரிசக்திப்பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


தற்போதைய செய்தி:


ஜூலை 31, 2026-ஆம் தேதி அன்று  பெட்ரோலிய அமைச்சகத்தின், 'தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு (National Offshore Exploration Scheme) ₹84,084 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


'சமுத்திர மந்தன்' திட்டம், ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன் வளங்களை ஆய்வு செய்து கண்டறியும் இந்தியாவின் இலக்குகளுக்கு வலுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடல்சார் ஆய்வுகளில் உள்ள ஆபத்துகளைக் குறைப்பதற்கும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிவகை செய்யும் வகையில் இந்தத்திட்டத்தின்கீழ், ஒதுக்கப்பட்ட நிதியை 2030-31 நிதியாண்டு வரை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.


₹84,084 கோடி ஒதுக்கீடு எதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது?


ஹைட்ரோகார்பன் ஆய்வு என்பது இயல்பாகவே சிக்கலான மற்றும் அதிக மூலதனம் தேவைப்படும் ஒரு ஆய்வாகும். மேலும், இதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படுகிறது. பொதுவாக, ஒரு ஆய்விற்கு ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து, வணிகரீதியான உற்பத்தி (Commercial Production) தொடங்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.




கடலுக்கு அடியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுப்பதை நோக்கமாக கொண்ட ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஆய்வுகளுக்கு, தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பமும் கூடுதல் முதலீடுகளும் தேவைப்படுகின்றன.


கிருஷ்ணா-கோதாவரி, காவிரி, மகாநதி மற்றும் அந்தமான் தீவுப்பகுதி போன்ற இந்தியாவின் ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல்ப்பகுதிகளில் எதிர்கால ஹைட்ரோகார்பன் வளங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் கருதுகிறது.


அரசின் மதிப்பீடுகளின்படி, இது போன்ற புதிய எல்லைப்பகுதிகளில் (frontier areas) அமைக்கப்படும் ஒரு ஆழ்கடல் ஆய்வு கிணற்றுக்குத் தோராயமாக $125 மில்லியன் முதல் $150 மில்லியன்  வரை  தேவைப்படலாம்


எனவே, ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையுடன் கூடிய இந்த ஆய்வுப்பணிகள், அதிக ஆபத்து மற்றும் அதிக செலவு கொண்ட ஒரு முயற்சியாக அமைகின்றன.  இதில் உள்ள ஆபத்தைக் குறைப்பதையே அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.


"இது போன்ற ஆய்வுகளில் உள்ள அதிக சிக்கல் மற்றும் அதிக செலவு போன்றவற்றை உணர்ந்து, தொடர்ச்சியான முதலீட்டை ஊக்குவிக்கவும், ஆய்வை விரைவுபடுத்தவும், இந்தியாவின் கடல்சார் ஹைட்ரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் அரசு 'அபாயப் பகிர்வு அணுகுமுறையை' (risk-sharing approach) மேற்கொள்கிறது என்று அறிக்கை மூலம் தெரிவிதுள்ளது.


ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான சுழலும் மற்றொரு முக்கியக் காரணமாகும். தற்போது பயன்பாட்டில் உள்ள, காலப்போக்கில் உற்பத்தித் திறன் குறைந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலையைத் தவிர்ப்பதாகும்.



அரசு மதிப்பீடுகளின்படி, தற்போதுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் ஆண்டுதோறும் 6–7% உற்பத்தி சரிவு ஏற்பட்டு வருகிறது.


நிதி ஒதுக்கீட்டின் முக்கிய கூறுகள் என்ன?


மொத்தச் செலவினத் திட்டம் நான்கு முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


முதலாவது, நில அதிர்வுத் தரவு சேகரிப்பு (seismic data acquisition) ஆகும்.   இதன் நோக்கம், கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களின் இருப்பிடம் மற்றும் அவற்றின் புவியியல் பண்புகளை வரைபடமிடுவது ஆகும். இந்த திட்டத்திற்காக ₹28,534 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.


மற்றொரு முக்கிய அம்சம், கண்டறியப்பட்ட வளங்களை வணிகமயமாக்குவதை எளிதாக்கும் வகையில் பொதுவான கடல்சார் உள்கட்டமைப்புடன் கூடிய மையங்களை உருவாக்குவதாகும். இதற்கு ₹10,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


மூன்றாவது அம்சம், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்களை நிறுவுவதாகும். இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதையும், முக்கியமான உபகரணங்கள் மற்றும் சேவைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான செலவு ₹2,000 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


இறுதியாக, மிக முக்கியமான அம்சம் 60 ஆழ்கடல் ஆய்வு கிணறுகளைத் துளையிடுவதாகும். இதற்காக மத்திய அமைச்சரவை ₹43,200 கோடியை ஒதுக்கியுள்ளது.


இந்தத்தொகையில், ஒவ்வொரு ஆய்வுக்கணற்றிற்கும் தகுதியான துளையிடும் செலவில் 50% அல்லது ₹675 கோடி வரை மத்திய அரசு நிதியுதவி வழங்கும்   திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.


தற்போது இந்தியாவின் ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஆய்வுகள் எந்த நிலையில் உள்ளன?


இந்தியாவின் இரண்டு முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு–உற்பத்தி நிறுவனங்களான அரசுத் துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited (OIL)) மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (Oil and Natural Gas Corporation  (ONGC)) ஆகியவை, ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் ஆய்வுத்துறையில் முக்கிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன.


அடுத்த 7 ஆண்டுகளில் 150 ஆழ்கடல் கிணறுகளைத்தோண்டவும், 5,600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சமமான (metric tonnes of oil equivalent (MMTOE)) அளவுள்ள ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் வளங்களை கண்டறிந்து பயன்படுத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (Oil and Natural Gas Corporation  (ONGC)) திட்டமிட்டுள்ளது.


அதன் துணை நிறுவனமான 'ஆயில் இந்தியா', ஏற்கனவே அந்தமான் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், 'விஜயபுரம்-2' மற்றும் 'விஜயபுரம்-3' ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு இருப்பதையும் அது உறுதிப்படுத்தியுள்ளது.


மேலும், பெட்ரோலிய அமைச்சகத்தின் 'திறந்த பரப்பளவு உரிமக் கொள்கை'யின் (Oil Ministry’s Open Acreage Licensing Policy (OALP)) 10-வது சுற்றில், ஏலத்திற்காக ஒரு ஆழ்கடல் பகுதியும், 12  மிகவும் ஆழமான ஆழ்கடல் பகுதிகளும் (blocks) சேர்க்கப்பட்டன.


  11-வது சுற்றில், ஒரு ஆழமான ஆழ்கடல் பகுதியும் நான்கு மிக முக்கியமான ஆழ்கடல் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.


ஆய்வுப்பணிகள் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், 'சமுத்ரா மந்தன்' (Samudra Manthan) திட்டம் நாட்டின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஆண்டுக்கு  62 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சமமான (MMTOE) அளவிலிருந்து 80 MMTOE-ஆக அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது. மேலும், நாட்டின் ஹைட்ரோகார்பன் வளத்தை, தற்போதைய 1.6 பில்லியன் டன் எண்ணெய்  மதிப்பு அளவிலிருந்து 2.2 பில்லியன் டன் எண்ணெய் மதிப்பு அளவிற்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் உற்பத்தியானது, கச்சா எண்ணெய் இறக்குமதியை ஆண்டுக்கு ஏறக்குறைய ₹1 லட்சம் கோடி வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இறக்குமதியை சார்ந்திருப்பதையும் குறைக்கும்  என்று அரசு குறிப்பிட்டது.


Original Link : What is the Samudra Manthan scheme all about? -Saptaparno Ghosh

Share: