'சமுத்ர மந்தன்' திட்டம், ₹84,084 கோடி முதலீட்டின் மூலம் இந்தியாவின் ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் ஆய்வு (deepwater hydrocarbon exploration ) மற்றும் எரிசக்திப்பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதைய செய்தி:
ஜூலை 31, 2026-ஆம் தேதி அன்று பெட்ரோலிய அமைச்சகத்தின், 'தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு (National Offshore Exploration Scheme) ₹84,084 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
'சமுத்திர மந்தன்' திட்டம், ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன் வளங்களை ஆய்வு செய்து கண்டறியும் இந்தியாவின் இலக்குகளுக்கு வலுசேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடல்சார் ஆய்வுகளில் உள்ள ஆபத்துகளைக் குறைப்பதற்கும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிவகை செய்யும் வகையில் இந்தத்திட்டத்தின்கீழ், ஒதுக்கப்பட்ட நிதியை 2030-31 நிதியாண்டு வரை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
₹84,084 கோடி ஒதுக்கீடு எதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது?
ஹைட்ரோகார்பன் ஆய்வு என்பது இயல்பாகவே சிக்கலான மற்றும் அதிக மூலதனம் தேவைப்படும் ஒரு ஆய்வாகும். மேலும், இதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படுகிறது. பொதுவாக, ஒரு ஆய்விற்கு ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து, வணிகரீதியான உற்பத்தி (Commercial Production) தொடங்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
கடலுக்கு அடியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுப்பதை நோக்கமாக கொண்ட ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஆய்வுகளுக்கு, தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பமும் கூடுதல் முதலீடுகளும் தேவைப்படுகின்றன.
கிருஷ்ணா-கோதாவரி, காவிரி, மகாநதி மற்றும் அந்தமான் தீவுப்பகுதி போன்ற இந்தியாவின் ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல்ப்பகுதிகளில் எதிர்கால ஹைட்ரோகார்பன் வளங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் கருதுகிறது.
அரசின் மதிப்பீடுகளின்படி, இது போன்ற புதிய எல்லைப்பகுதிகளில் (frontier areas) அமைக்கப்படும் ஒரு ஆழ்கடல் ஆய்வு கிணற்றுக்குத் தோராயமாக $125 மில்லியன் முதல் $150 மில்லியன் வரை தேவைப்படலாம்
எனவே, ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையுடன் கூடிய இந்த ஆய்வுப்பணிகள், அதிக ஆபத்து மற்றும் அதிக செலவு கொண்ட ஒரு முயற்சியாக அமைகின்றன. இதில் உள்ள ஆபத்தைக் குறைப்பதையே அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
"இது போன்ற ஆய்வுகளில் உள்ள அதிக சிக்கல் மற்றும் அதிக செலவு போன்றவற்றை உணர்ந்து, தொடர்ச்சியான முதலீட்டை ஊக்குவிக்கவும், ஆய்வை விரைவுபடுத்தவும், இந்தியாவின் கடல்சார் ஹைட்ரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் அரசு 'அபாயப் பகிர்வு அணுகுமுறையை' (risk-sharing approach) மேற்கொள்கிறது என்று அறிக்கை மூலம் தெரிவிதுள்ளது.
ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான சுழலும் மற்றொரு முக்கியக் காரணமாகும். தற்போது பயன்பாட்டில் உள்ள, காலப்போக்கில் உற்பத்தித் திறன் குறைந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலையைத் தவிர்ப்பதாகும்.
அரசு மதிப்பீடுகளின்படி, தற்போதுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் ஆண்டுதோறும் 6–7% உற்பத்தி சரிவு ஏற்பட்டு வருகிறது.
நிதி ஒதுக்கீட்டின் முக்கிய கூறுகள் என்ன?
மொத்தச் செலவினத் திட்டம் நான்கு முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது, நில அதிர்வுத் தரவு சேகரிப்பு (seismic data acquisition) ஆகும். இதன் நோக்கம், கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களின் இருப்பிடம் மற்றும் அவற்றின் புவியியல் பண்புகளை வரைபடமிடுவது ஆகும். இந்த திட்டத்திற்காக ₹28,534 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கிய அம்சம், கண்டறியப்பட்ட வளங்களை வணிகமயமாக்குவதை எளிதாக்கும் வகையில் பொதுவான கடல்சார் உள்கட்டமைப்புடன் கூடிய மையங்களை உருவாக்குவதாகும். இதற்கு ₹10,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது அம்சம், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்களை நிறுவுவதாகும். இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதையும், முக்கியமான உபகரணங்கள் மற்றும் சேவைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான செலவு ₹2,000 கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக, மிக முக்கியமான அம்சம் 60 ஆழ்கடல் ஆய்வு கிணறுகளைத் துளையிடுவதாகும். இதற்காக மத்திய அமைச்சரவை ₹43,200 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தத்தொகையில், ஒவ்வொரு ஆய்வுக்கணற்றிற்கும் தகுதியான துளையிடும் செலவில் 50% அல்லது ₹675 கோடி வரை மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.
தற்போது இந்தியாவின் ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஆய்வுகள் எந்த நிலையில் உள்ளன?
இந்தியாவின் இரண்டு முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு–உற்பத்தி நிறுவனங்களான அரசுத் துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited (OIL)) மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (Oil and Natural Gas Corporation (ONGC)) ஆகியவை, ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் ஆய்வுத்துறையில் முக்கிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன.
அடுத்த 7 ஆண்டுகளில் 150 ஆழ்கடல் கிணறுகளைத்தோண்டவும், 5,600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சமமான (metric tonnes of oil equivalent (MMTOE)) அளவுள்ள ஆழ்கடல் மற்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் வளங்களை கண்டறிந்து பயன்படுத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (Oil and Natural Gas Corporation (ONGC)) திட்டமிட்டுள்ளது.
அதன் துணை நிறுவனமான 'ஆயில் இந்தியா', ஏற்கனவே அந்தமான் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், 'விஜயபுரம்-2' மற்றும் 'விஜயபுரம்-3' ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு இருப்பதையும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், பெட்ரோலிய அமைச்சகத்தின் 'திறந்த பரப்பளவு உரிமக் கொள்கை'யின் (Oil Ministry’s Open Acreage Licensing Policy (OALP)) 10-வது சுற்றில், ஏலத்திற்காக ஒரு ஆழ்கடல் பகுதியும், 12 மிகவும் ஆழமான ஆழ்கடல் பகுதிகளும் (blocks) சேர்க்கப்பட்டன.
11-வது சுற்றில், ஒரு ஆழமான ஆழ்கடல் பகுதியும் நான்கு மிக முக்கியமான ஆழ்கடல் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆய்வுப்பணிகள் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், 'சமுத்ரா மந்தன்' (Samudra Manthan) திட்டம் நாட்டின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஆண்டுக்கு 62 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் சமமான (MMTOE) அளவிலிருந்து 80 MMTOE-ஆக அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது. மேலும், நாட்டின் ஹைட்ரோகார்பன் வளத்தை, தற்போதைய 1.6 பில்லியன் டன் எண்ணெய் மதிப்பு அளவிலிருந்து 2.2 பில்லியன் டன் எண்ணெய் மதிப்பு அளவிற்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் உற்பத்தியானது, கச்சா எண்ணெய் இறக்குமதியை ஆண்டுக்கு ஏறக்குறைய ₹1 லட்சம் கோடி வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இறக்குமதியை சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்று அரசு குறிப்பிட்டது.
Original Link : What is the Samudra Manthan scheme all about? -Saptaparno Ghosh