பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பாலின விளைவு.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதைப் பொறுத்தே உள்ளது. நாட்டில் 79 சதவீதம் பெண் தொழிலாளர்கள் கிராமப்புறங்களிலேயே உள்ளனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவு (Entrepreneurship) ஒரு முக்கியமான முன்னேற்றப் பாதையை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள 63 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (Micro, Small & Medium Enterprises (MSMEs)) 20 சதவீதம் பெண்களின் வசம் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புற மற்றும் மிகச் சிறிய அளவிலான நிறுவனங்களாகும். பெண் தொழில்முனைவோருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்பட்டால், அவர்களால் 2030ஆம் ஆண்டுக்குள் 170 மில்லியன் வேலைவாய்ப்புகள் வரை உருவாக்க முடியும்.
கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரமளிப்பது சமூக சமத்துவத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது என்பதை அரசாங்கம் நீண்ட காலமாகவே அங்கீகரித்து வருகிறது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (National Rural Livelihood Mission (NRLM)) போன்ற முக்கியத் திட்டங்கள், உலகின் மிகப்பெரிய பெண்கள் கூட்டு அமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது 10 கோடி கிராமப்புறக் குடும்பங்களை 90.9 லட்சம் சுய உதவிக் குழுக்களாக (Self-Help Groups (SHGs)) ஒன்றிணைத்து, தொழில் மற்றும் கடன் அணுகலுக்கான தளங்களை உருவாக்கியுள்ளது. 'இலட்சாதிபதி தீதி யோஜனா' (Lakhpati Didi Yojana) என்ற மற்றொரு திட்டமானது, அதிக வருமானம் தரக்கூடிய தொழில்கள் மூலம் பெண்களின் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் தனியாகச் செயல்படுவது இல்லை. பிற அமைச்சகங்கள் மற்றும் தனியார் துறையின் துணைக் கூட்டு முயற்சிகளை முயற்சிகளை இணைக்க உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (National Rural Livelihood Mission (NRLM)) ஆதரவு பெற்ற நிறுவனங்களுக்கு பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Distributed Renewable Energy (DRE)) தீர்வுகளைச் சேர்ப்பது உற்பத்தித்திறன் சிக்கல்களைத் தீர்க்கவும், செலவுகளைக் குறைக்கவும், அவற்றை மேலும் நிலையானதாகவும் மாற்றும். ஊரக வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகளுக்கு இடையேயான இந்தக் கூட்டு அணுகுமுறை, மீள்திறன் கொண்ட, பெண்களால் நடத்தப்படும் ஊரக நிறுவனங்களை உருவாக்க ஒரு பெரும் மாற்றத்திற்கான வாய்ப்பை வழங்குகிறது.
பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (DRE) ஒரு சக்திவாய்ந்த தீர்வாக இருக்கலாம். அவை உழவர்களுக்கு சூரியசக்தி குளிர் சேமிப்பு அலகுகள் (solar cold storage units) முதல் சூரிய சக்தியால் இயங்கும் தறிகள் (solar-powered looms) மற்றும் நீர்ப்பாசன குழாய்கள் (irrigation pumps) வரை அவற்றின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன, பணிச்சுமையைக் குறைக்கின்றன மற்றும் புதிய சந்தைகளை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Decentralized Renewable Energy for Women’s Economic Empowerment (DEWEE)) போன்ற திட்டங்களால், உத்திரப்பிரதேச மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (Uttar Pradesh State Rural Livelihood Mission (UPSRLM)) வாயிலாக 1,000 பெண்கள் ஏற்கெனவே சூரிய சக்தியைப் பயன்படுத்தி தங்கள் வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவில், ரெஷம் சூத்ராவின் (Resham Sutra) சூரிய சக்தி மூலம் இயங்கும் பட்டு நூற்பு இயந்திரங்கள் (solar reeling machines) பட்டுத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனையும் ஆரோக்கியத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளன. கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் தூய்மையான ஆற்றலைக் கொண்டு தங்கள் தொழில்களை எவ்வாறு மாற்றியமைக்கிறார்கள் என்பதை இந்தத் திட்டங்கள் காட்டுகின்றன.
தடைகளை உடைத்தல்
பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களைப் பெருமளவில் ஏற்றுக்கொள்வதில் பெண்கள் தொடர்ந்து பல தடைகளைச் சந்தித்து வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாமை, சமூக-பண்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவான நிதி ஆகியவை அடிப்படை சவால்களாக அமைகின்றன. பெண்களுக்குச் சொந்தமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) கடன் இடைவெளி ₹20 முதல் 25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வணிக மாதிரிகள் (business models), முதலீட்டைத் திரும்பப் பெறும் காலங்கள் (payback periods) மற்றும் நீண்ட கால நிதியியல் வருமானங்கள் (long-term financial returns) குறித்த போதிய புரிதல் இல்லாததால், தொழில்நுட்பங்களின் செயல்திறனை மதிப்பிடுவதில் பெண்கள் பெரும்பாலும் சிரமப்படுகின்றனர். இந்தத் தொழில்நுட்பங்களை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய பயிற்சி இல்லாததும் அவற்றின் பயன்பாட்டிற்குத் தடையாக உள்ளது.
கூடுதலாக, உபகரண வழங்குநர்கள் (equipment suppliers), நிதியளிப்பவர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தனித்தனி குழுக்களாகச் (silos) செயல்படுவதால், பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Distributed Renewable Energy) விநியோகச் சங்கிலிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது சந்தை இணைப்புகள் மற்றும் தேவை வழிகளை (demand channels) மட்டுப்படுத்துவதோடு, அதிகரித்த உற்பத்தியின் முழுப் பயன்பாட்டிற்குத் (underutilisation) தடையாகவும் இருக்கிறது.
பரவலாக்கப்பட்ட ஆற்றலானது (DRE) கிராமப்புற வாழ்வாதாரங்களை மறுவரையறை செய்து, பொருளாதார வளர்ச்சிக்கும் ஆற்றல் மாற்றத்திற்கும் உந்துசக்தியாக மாறும் மீள்தன்மை கொண்ட தொழில்முனைவோராகப் பெண்களை மாற்றும். இதற்கு அரசாங்கத் திட்டங்கள் (Government programmes), தனியார் கூட்டாண்மைகள் (Private partnerships) மற்றும் தொண்டு நிறுவன ஆதரவு (Philanthropic support) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. இந்தக் கூட்டு முயற்சி பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொழில்சார்ந்த உறவுகளையும் பலப்படுத்தும். பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (DEWEE) போன்ற திட்டங்கள், களத்தில் எப்படி செயல்படுகின்றன என்பதை ஏற்கனவே நிரூபித்து வருகின்றன.
இந்தியா இன்று பெண்களை மையமாகக் கொண்ட எரிசக்தி அமைப்புகளில் முதலீடு செய்தால், அது மில்லியன் கணக்கான சிறு வணிகங்கள் வளரவும், சமூகங்களை மேம்படுத்தவும், நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவும்.
ஜெத்தானி, இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (Ministry of New and Renewable Energy (MNRE), Government of India) மூத்த இயக்குநர் மற்றும் விஞ்ஞானி (Scientist-F) ஆவார்; சௌபே, Demand, Jobs & Livelihood, Global Energy Alliance for People and Planet அமைப்பின் இயக்குநர் ஆவார்.