சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா எவ்வாறு அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய ஒற்றுமையை அடைந்தது? -திலீப் பி சந்திரன்

 சுதந்திரத்திற்குப் பிறகு, ஜனநாயகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பி தேசிய ஒருங்கிணைப்பை நிறைவு செய்தல், இறையாண்மை கொண்ட அரசியலமைப்பை உருவாக்குதல், கல்வியை மறுவடிவமைத்தல் மற்றும் வெளிநாட்டு உறவுகளை மறுவரையறை செய்தல் வரை இந்தியா நீண்ட தூரம் வந்துவிட்டது. ஆனால் இந்தப் பயணம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது, சுதந்திர இந்தியா வழியில் என்ன தடைகளைத் தாண்டி வந்தது?


1947ஆம் ஆண்டு, பல நூற்றாண்டுகளாக பொருளாதார தேக்கநிலை, பலவீனமான அரசியல் அமைப்புகள், ஜனநாயகமின்மை, பிளவுபட்ட அரசியல், பரவலான கல்வியறிவின்மை, மேற்கத்தியமயமாக்கப்பட்ட கல்வி, சமூக சமத்துவமின்மை மற்றும் பரவலான வறுமை போன்ற காலனித்துவ ஆட்சியின் மரபுகளை வெல்ல இந்தியா தனது நீண்ட பயணத்தைத் தொடங்கியது.

கூடுதலாக, பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினை மற்றும் காலனித்துவ நீக்கத்துடன் ஏற்பட்ட வகுப்புவாத பதட்டங்கள், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களை மேலும் அதிகப்படுத்தியது. அத்துடன் சுதந்திரப் போராட்டத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்தியது.


சுதந்திர இந்தியாவின் தலைவர்களின் முதல் மற்றும் முக்கிய பணி, அதன் பரந்த மக்கள்தொகையின் பிராந்திய, மொழி, கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலமும், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் ஒற்றுமைக்கு நாட்டை தயார்படுத்துவதன் மூலமும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்துவதாகும்.


அவ்வாறு செய்வதன் மூலம், தேசிய ஒருங்கிணைப்புக்கான வலுவான நிறுவனங்களுடன் கூடிய ஜனநாயகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவது அவசர கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சுதந்திர இந்தியா விரைவில் அல்லது பின்னர் சரிந்து சிதைந்துவிடும் என்று கணித்த சந்தேகவாதிகளின் அவநம்பிக்கையை இது நிராகரித்தது.


ஒரு இறையாண்மை கொண்ட அரசியலமைப்பை (sovereign Constitution) உருவாக்குதல்

சுதந்திர இந்தியாவிற்கு அதன் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, வெளிப்புறத் தலையீடு இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பு தேவைப்பட்டது. காலனித்துவ காலத்தில் கூட இந்தியத் தலைவர்கள் இதை ஆங்கிலேயர்களிடமிருந்து கோரினர். 1921ஆம் ஆண்டிலேயே, மகாத்மா காந்தி உண்மையான சுயராஜ்யம் மக்களின் விருப்பத்திலிருந்து வர வேண்டும், அது அவர்களின் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

1934-ல், M N. ராய் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை வரைவதற்கு ஒரு அரசியலமைப்புச் சபை (Constituent Assembly) தேவை என்று கோரிய முதல் தேசிய தலைவர் ஆவார். அடுத்த ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் இதை தனது அதிகாரப்பூர்வ கோரிக்கைகளில் சேர்த்தது. விவரங்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அமைச்சரவை திட்டத்தின் (Cabinet Mission Plan) கீழ் 1946-ல் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. சில உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், சிலர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த சபை தனது முதல் கூட்டத்தை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது. இதில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 389 உறுப்பினர்களில் 207 பேர் கலந்து கொண்டனர். அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் வரை நீடித்தது. பி.ஆர் அம்பேத்கர் தலைமையில் தயாரிக்கப்பட்ட வரைவு அரசியலமைப்பு, இறுதியாக நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு அரசியலமைப்புச் சபையில் 114 நாட்கள் விவாதிக்கப்பட்டது.

முகவுரை (Preamble) மற்றும் 395 விதிகளை கொண்ட உண்மையான அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. இது ஜனவரி 26, 1930 அன்று முதன்முதலாகக் கடைபிடிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம்  (Purna Swaraj) நாளை நினைவுகூரும் வகையில் அமைந்தது. இந்த நீண்ட மற்றும் நுணுக்கமான செயல்முறையின் மூலம், அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயக குடியரசாக கற்பனை செய்தனர். கூட்டாட்சி கட்டமைப்பிற்குள் (federal structure) ஒரு நாடாளுமன்ற அரசாங்க மாதிரியை ஏற்றுக்கொண்டனர்.

துண்டு துண்டாக இருந்த இந்தியாவை படேலும் மேனனும் எவ்வாறு ஒருங்கிணைத்தனர்


அரசியலமைப்பு வரைவோடு சேர்த்து, பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர் 500 மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய சுதேச அரசுகளை (princely states) கொண்ட பகுதி பகுதியாக பிளவுபட்டு இருந்த  அரசியல் அமைப்பை ஒன்றிணைப்பது சுதந்திர இந்தியா தலைவர்களின் அரசியல் ஞானத்தின் மற்றொரு சோதனையாக இருந்தது.


பல பெரிய மாகணங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பின. சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கீழ் இருந்த தங்கள் ஆட்சியை இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ மாற்ற முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி இந்த யோசனையை ஆதரித்து, சுதந்திர நாடுகளாக மாற அனுமதித்தார். இந்தப் பகுதிகள் அனைத்தையும் இந்திய ஒன்றியத்திற்குள் கொண்டுவரும் பொறுப்பு சர்தார் வல்லபாய் படேலுக்கும் வி.பி. மேனனுக்கும் வழங்கப்பட்டது.


நிலைமை ஆபத்தானது என்றும், விரைவாகவும் சிறப்பாகவும் கையாளப்படாவிட்டால், இந்தியாவின் கடின உழைப்பால் வென்ற சுதந்திரம் மாநிலங்களால் இழக்கப்படலாம் என்றும் படேல் மேனனை எச்சரித்தார். மேலும், சுதேச அரசுகளின் ஆட்சியாளர்கள் ஒன்றியத்துடன் இணைந்தால் அவர்களுக்குப் பணம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.


பட்டேல் மற்றும் மேனனின் அரசியல் உத்திகளும் இராஜதந்திரமும் ஹைதராபாத், ஜுனாகத் மற்றும் ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்தையும் ஆகஸ்ட் 14, 1947ஆம் ஆண்டுக்குள் இந்திய ஒன்றியத்துடன் இணைய ஒப்புக்கொள்ள செய்தனர். அதன் பின்னர், ஜுனாகத் மக்கள் வாக்கெடுப்பு (plebiscite) மூலம் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது. ஹைதராபாத் இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் இணைப்புக் கருவி (Instrument of Accession) மூலம் இந்தியாவுடன் இணைந்தது.


இந்தியாவின் பிராந்திய ஒருங்கிணைப்பு முடிந்தது.


1954ஆம் ஆண்டு பிரெஞ்சு அதிகாரிகள் பாண்டிச்சேரியை ஒப்படைத்தபோது பிராந்திய ஒருங்கிணைப்பு செயல்முறை (territorial integration) நிறைவடைந்தது. மேலும், 1961ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவிட்ட இராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து கோவா போர்ச்சுகலிடமிருந்து விடுவிக்கப்பட்டது.


ஒருங்கிணைப்பு செயல்முறையைச் சுற்றியுள்ள அரசியல் கொந்தளிப்பு, தேசிய சுதந்திரப் போராட்டத்தின் போது வாக்களிக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்களை (linguistic states) உருவாக்குவதை ஒதுக்கி வைக்க சுதந்திர இந்தியாவின் தலைவர்களை கட்டாயப்படுத்தியது. இருப்பினும், தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 58 நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு பொட்டி ஸ்ரீராமுலு உயிரிழப்பு பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில் 1952-ல் ஆந்திரப் பிரதேசம் உருவாக்கத்தை அறிவிக்க நேருவை நிர்பந்தித்தது.


பசல் அலி ஆணையத்தின் (Fazl Ali Commission) பரிந்துரைகளைத் தொடர்ந்து, அரசாங்கம் 1956ஆம் ஆண்டு மாநில அமைப்புச் சட்டத்தை (State Organisation Act) இயற்றியது. இது 14 மாநிலங்களையும் 6 யூனியன் பிரதேசங்களையும் (Union Territories) நிறுவியது. இந்த மறுசீரமைப்பு நாடு பிளவுபடுவதைத் தடுக்கவும், அதை ஒற்றுமையாக வைத்திருக்கவும் உதவியது.


அரசியல் அறிஞர் ரஜினி கோத்தாரி, தலைவர்களுக்கு சந்தேகங்கள் இருந்தபோதிலும், சிலர் இது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று கவலைப்பட்டாலும், மறுசீரமைப்பு இந்தியாவின் அரசியல் வரைபடத்தை அதன் ஒற்றுமைக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்காமல் காலத்திற்கு ஏற்றதாக மாறியதை கவனித்தார்.


எதிர்கால கல்வியின் அடித்தளத்தை உருவாக்குதல்


அரசியலமைப்பு வரைவு மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பு செயல்முறையோடு சேர்த்து, இந்தியாவின் கல்வி முறையிலும் கவனம் செலுத்தப்பட்டது. காலனித்துவக் கல்வி இந்தியாவின் பாரம்பரியக் கற்றலைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், இது முதன்மையாக கிழக்கிந்திய கம்பெனியின் வணிக நலன்களையும் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மதகுருமார்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


காலனித்துவக் கல்வி பெரும்பாலும் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளித்தது. எழுத்தாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தியது. இது பொது மக்களுக்கு பலவீனமடைந்த கல்வியாக இருந்தது மற்றும் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சியை புறக்கணித்தது.


கல்வி மற்றும் ஆராய்ச்சியில் போதுமான முதலீடு செய்யாததற்காக ஆங்கிலேயர்களை இந்தியத் தலைவர்கள் விமர்சித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா வலுவான தலைமையை உருவாக்குவதன்மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது பிரிவின் கீழ், 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை சீர்திருத்துதல்


1948-49ஆம் ஆண்டில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையிலான பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் (University Education Commission) சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி ஆணையம் ஆகும். இது பல்கலைக்கழகக் கல்வி முறையின் விரிவான மறுகட்டமைப்பை பரிந்துரைத்தது. அதேபோல, 1952ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலியார் ஆணையம் (Mudaliar Commission) இடைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்றங்களைப் பரிந்துரைத்தது.


1953ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) நிறுவப்பட்டது.  இந்த விவகாரத்தில் இது முக்கிய சாதனையாக அமைந்தது. 1956ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அமைப்பாக மாறியதிலிருந்து, இந்தியா முழுவதும் பல்கலைக்கழகக் கல்வியின் ஒருங்கிணைப்பு, தீர்மானித்தல் மற்றும் தரங்களைப் பராமரித்தல் ஆகியவற்றிற்கு பல்கலைக்கழக மானியக் குழு பொறுப்பு வகித்து வருகிறது.


தொழில்நுட்பக் கல்வியில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்ய, நேரு இந்திய தொழில்நுட்பக் கழகங்களை (Indian Institutes of Technology (IIT)) நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தார். 1950-ல் கரக்பூரில் இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் நான்கு நிறுவப்பட்டன. அவை, 1958ஆம் ஆண்டில் பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகம், 1959ஆம் ஆண்டில் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம், 1959ஆம் ஆண்டில் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் 1961ஆம் ஆண்டில் டெல்லியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்டது. இந்த கழகங்கள் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டன.


வெளிநாட்டு உறவுகளின் உருவாக்க கட்டம்


வலுவான உள்நாட்டு அடித்தளங்களை உருவாக்குவதோடு, இந்தியத் தலைவர்கள் சர்வதேச உறவுகளிலும் கவனம் செலுத்தினர். குறிப்பாக, முதலாம் உலகப் போரின் போது, ​​பிரிட்டிஷ் இந்தியாவின் பிற நாடுகளுடனான உறவுகளில் இந்தியா தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது.  உலக நாடுகளின் சங்க (League of Nations) உறுப்பினராக இருந்தது மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labor Organisation (ILO)) நிர்வாகக் குழுவில் தீவிரப் பங்காற்றியது. 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு தீர்மானத்தின் மூலம் சர்வதேச உறவுகளுக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியது. இது பின்னர் சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளாக மாறியது.


1920ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், நேரு தலைமையில் காங்கிரசுக்கு ஒரு தனி வெளியுறவுக் கொள்கைத் துறை (foreign policy department) இருந்தது. அவரது விரிவான வெளிநாட்டுப் பயணங்களும் சர்வதேச அரசியலில் மிகுந்த ஆர்வமும் இந்தியாவின் எதிர்கால வெளி உறவுகளின் போக்கை கணிசமாக வடிவமைத்தன. ஆப்பிரிக்க-ஆசிய மாநாடுகளிலும், அணிசேரா இயக்கத்திலும் (Non-Aligned Movement (NAM)) அவர் ஆற்றிய பங்கு, உலக அரசியலில் இந்தியாவை ஒரு முக்கியக் குரலாக மாற்றியது.


இந்த வரலாற்று மரபின் மீது கட்டமைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள், காலனித்துவ எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு, அணிசேராமை, ஆப்பிரிக்க-ஆசிய ஒற்றுமை, அமைதி, அகிம்சை, ஆயுதக் குறைப்பு, ஜனநாயக உரையாடல், சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முக்கியத்துவம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டன.


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51, அரசாங்கம் மற்ற நாடுகளுடன் அமைதி, பாதுகாப்பு மற்றும் நியாயமான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. 1954ஆம் ஆண்டு சீனாவுடனான பஞ்சசீல ஒப்பந்தமும் (Panchsheel Agreement) இந்தியா மற்ற நாடுகளுடன் அமைதியாக வாழ வழிகாட்டியது.



Original article:

Share: