இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட கடற்கரை நீளம், அதன் நிலம் மற்றும் கடல் எல்லைகளுக்கு இடையிலான இடைவெளி முன்னர் நினைத்ததை விடக் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.
இந்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் இந்தியாவின் கடற்கரை நீளத்தில் கணிசமான அதிகரிப்பு தெரிய வந்துள்ளது. இப்போது அது 11098.81 கிலோமீட்டர் என்று அளவிடப்பட்டுள்ளது. இது முன்னர் மதிப்பிடப்பட்ட 7561.50 கிலோமீட்டரை விட அதிகமாகும். இந்த அதிகரிப்பு கடற்கரை அளவிடப்பட்ட விதத்திலும் பயன்படுத்தப்பட்ட அளவிலும் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்டது. இது 1970ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டது.
இந்தியாவின் கடற்கரை நீளத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளை வடிவமைக்கும் சூழலில் இந்தியாவின் கடல் எல்லைகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சிந்தனை அதன் நிலப்பரப்பு எல்லைகளிலிருந்து உருவாகும் அச்சுறுத்தல்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகத் தெரிந்தாலும், அதன் கடல் எல்லைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு, இந்தியாவை ஒரு கடல்சார் நாடாக மறுசிந்தனை செய்வது அவசியம். இந்த நோக்கில், இந்தியாவின் திருத்தப்பட்ட கடற்கரை நீளம், இந்தியாவின் புவியியலின் பல்வேறு எல்லைகள் எவ்வாறு தொடர்ந்து ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக அமைகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நீண்ட கால எல்லை ஆக்கிரமிப்பு வரலாறு இந்தியாவின் பாதுகாப்பு சிந்தனையை வடிவமைப்பதில் பெரிதும் உதவியாக உள்ளது. இது தவிர, இந்தியாவின் பாதுகாப்பு எந்திரம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் நீடித்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்திய பஹல்காமில் தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சவால் மீண்டும் எழுந்துள்ளது.
இருப்பினும், இந்தியாவின் புவியியலின் கடல்சார் தன்மையைக் கருத்தில் கொண்டு, பல முக்கியமான கடல்சார் பாதுகாப்பு கவலைகள் அதன் தேசிய பாதுகாப்பு சிந்தனையை வழிநடத்துவதில் முக்கியமாக இடம்பெற வேண்டும். கடந்த கால அனுபவங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தயார்நிலையில் கடல் எல்லைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளன. 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் கடலில் இருந்து உருவாகும் அச்சுறுத்தல்கள் நிலப்பரப்பு அல்லது நாட்டின் பாதுகாப்புடன் எவ்வாறு ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றன.
கூடுதலாக, பல பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்கள் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு சிந்தனைக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் மோசமான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள், சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகள், சட்டவிரோதமான, அறிவிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (Illegal, Unreported and Unregulated (IUU)) மீன்பிடித்தல், கடற்கொள்ளை, கடல் பயங்கரவாதம், மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்கள், அத்துடன் நாட்டிற்குள் சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தல் ஆகியவை அடங்கும்.
கடல் எல்லைகளில் இருந்து எழும் இந்தப் பன்முகச் சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது கடலோரப் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்த வேண்டிய முக்கியமான தேவை உள்ளது. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புக்கு ஒரு பெரிய ஊக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, கடலோரப் பாதுகாப்பு சேவையான இந்திய கடலோரக் காவல்படை, இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியாவின் கடல்சார் சேவைகளின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஒத்திசைவு (synchronisation) மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இது செய்யப்பட்டது.
இது பரந்த செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவியது என்றாலும், இந்தியாவின் புவியியலின் பல எல்லைகளை தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சியையும் இது குறிக்கிறது. இந்தியாவின் கடல்சார் மற்றும் பிராந்திய உள்நாட்டுப் பாதுகாப்பு நேரடியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால், இரண்டு எல்லைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாகக் கருதப்படக்கூடாது. எனவே, இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. மேலும் இதற்க ஒரு தீவிரமான, முறையான மற்றும் ஒருங்கிணைந்த உத்தி தேவை.
இந்தியப் பெருங்கடலில் அதிகார சமநிலை மாறி வருகிறது. ஏனெனில், சீனா இந்தப் பிராந்தியத்தில் அதிக ஈடுபாடு கொண்டு வருகிறது. இந்தியப் பெருங்கடல் கடற்கரை நாடுகளிடையே சீனாவின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கு இந்தியாவிற்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சீனா தனது ஆராய்ச்சிக் கப்பல்களை இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் அனுப்ப முயன்று வருகிறது. இதனால் சீனா தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தக்கூடும் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஒட்டுமொத்த நிலைமை மேலும் பதட்டமாகி வருவதால், இந்தியா தனது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கலாம்.
சுவாரஸ்யமாக, இந்தியாவின் கடற்கரையின் திருத்தப்பட்ட நீளம், இந்தியாவின் பிராந்திய மற்றும் கடல் எல்லைகளின் குறைந்த வேறுபாட்டின் ஒரு முக்கியமான யதார்த்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் நில எல்லைகள் சுமார் 15,106.7 கி.மீ நீளம் கொண்டவை. முன்னதாக, கடல் எல்லைகள் அந்த அளவில் பாதி மட்டுமே இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இப்போது புதுப்பிக்கப்பட்ட நீளம் 11,098.81 கி.மீ. உள்ளது. திருத்தப்பட்ட நீளம் அதன் கடல் எல்லைக்கு இதே போன்ற முக்கியத்துவத்தை வழங்க வேண்டிய நேரம் இது என்பதைக் குறிக்கிறது.
இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் மாறுபட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், தேசிய பாதுகாப்புக்கான அதன் அணுகுமுறை காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். இந்தியா தனது பாதுகாப்பைத் திட்டமிடும்போது கடலின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கக்கூடாது என்பது முக்கியம். இந்தியாவின் கடற்கரையின் புதுப்பிக்கப்பட்ட அளவீடு, கடல் எல்லைகள் ஏன் முக்கியம் என்பதையும், அவை தேசிய பாதுகாப்புத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
சயந்தன் ஹல்தார் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் கடல்சார் ஆய்வுகளில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிகிறார்.