தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது -ஆபிரகாம் தாமஸ்

 தேசிய கல்விக் கொள்கையை (NEP) பின்பற்ற மறுத்ததால், சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிறுத்தப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.


கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ₹2,151 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு  உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


செவ்வாயன்று, 2024–25 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSS) கீழ் நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்க மறுத்ததாலும், இந்தி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததாலும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியது.


நிதியை வழங்காததன் மூலம், மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி (co-operative federalism)  என்ற கருத்தை புறக்கணிக்கிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கல்வி குறித்து மாநிலங்கள் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்க அரசியலமைப்பு அனுமதித்திருந்தாலும், மத்திய அரசு அதன் அதிகாரங்களை மீறி, தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாகப் பின்பற்றும்படி மாநிலத்தை கட்டாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான  அரசாங்கம், ஒன்றிய அரசு நிதி விடுவிப்பை தேசிய கல்விக் கொள்கை மற்றும் மற்றொரு ஒன்றிய திட்டமான PM SHRI பள்ளிகளை ஏற்றுக்கொள்வதோடு இணைக்க முயன்றதாக தெரிவித்துள்ளது.


ஏப்ரல் 8-ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என். ரவியின் 10 மாநில மசோதாக்களை கையெழுத்திடாமல் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பும் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர், குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மசோதாக்களில் செயல்பட ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டுமா என்பது குறித்து ஒரு புதிய கேள்வி எழுப்பப்பட்டது.


தமிழ்நாடு அரசு தனது புதிய சட்ட வழக்கில், எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டம் (Prime Minister's Schools for Rising India (PM SHRI)) பள்ளிகளுக்கான ஒப்பந்தம் மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறது என்று கூறியது. ஆனால், தமிழ்நாடு அரசு இதை ஏற்கவில்லை. குறிப்பாக, இது மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையின் பிரிவு 4.13 க்கு எதிரானது என்பதால் மாநிலம் அதன் இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) விரும்புகிறது. மேலும், இந்த வகையான அழுத்தம் சட்டப்பூர்வமானது அல்லது மாநில சட்டங்களுக்கு எதிரினது என்றும் கூறியது.


ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கும் அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது. சமக்ர சிக்ஷா திட்டத்தின் (Samagra Shiksha Scheme (SSS)) கீழ் ஒன்றிய அரசு தனது "கட்டாயப் பங்கை" (obligatory share) நிறுத்தி வைப்பது, குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், (Right of Children to Free and Compulsory Education Act, 2009) செயல்படுத்துவதை முடக்கியுள்ளது மற்றும் 4.39 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள், 221,000 ஆசிரியர்கள் மற்றும் 32,701 பள்ளி ஊழியர்களைப் பாதித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு கூறியது.


2024–25 நிதியாண்டிற்கு, திட்ட ஒப்புதல் வாரியம், தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து விதிகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்த பிறகு, பிப்ரவரி 2024-ல் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.3,585.99 கோடியை வழங்க அனுமதித்தது. 60:40 செலவுப் பகிர்வு விதியின்படி, ஏப்ரல் 1, 2024 முதல் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 2,151.59 கோடியை வழங்க வேண்டும்.


சமக்ர சிக்ஷா திட்டம் மற்றும் PM SHRI பள்ளிகள் திட்டங்களை இணைக்கும் ஒன்றிய அரசின் முயற்சி தவறானது என்று தமிழ்நாடு அரசு கூறியது. ஏனெனில், இரண்டு திட்டங்களும் முற்றிலும் வேறுபட்டவை மற்றும் தொடர்பில்லாதவை. இந்தத் திட்டங்கள் மூலம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயப்படுத்துவது சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநிலத்தின் சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. மேலும், அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலத்தின் சொந்த சட்டங்களுக்கு எதிரானது.


தேசிய கல்விக் கொள்கையின் கொள்கை நிலையை எப்போதும் எதிர்ப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக, ஒன்றிய அரசு அதை கட்டாயப்படுத்தாமல் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு  செயல்பட அனுமதி அளித்தது.


1968ஆம் ஆண்டு ஜனவரியில் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தையும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டது. இது 1967-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் (திருத்தம்) சட்டம் (Official Languages (Amendment) Act) மற்றும் தொடர்புடைய நாடாளுமன்றத் தீர்மானத்தை நிராகரித்தது. அந்தத் தீர்மானம் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்றும், இந்தி சேர்க்கப்படக்கூடாது என்றும் கூறியது. 1976-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விதிகளின்படி, 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தைப் பின்பற்றுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


ஒன்றிய அரசு நிதி உதவியைப் பயன்படுத்தி, மாநில அரசு தனது கொள்கையை செயல்படுத்துமாறு ஒன்றிய அரசு கட்டாயப்படுத்த முடியாது என்றும், அத்தகைய திணிப்பு மாநிலத்தின் சுயாட்சி மற்றும் அதன் கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதற்கான அரசியலமைப்பு உரிமையை மீறுவதாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன் மற்றும் சபரிஷ் சுப்பிரமணியன் உச்ச நீதிமன்றத்த்தில்  வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.


Original article:
Share: