கடந்த வாரம், “தமிழ்நாடு மாநிலம் VS தமிழ்நாடு ஆளுநர் மற்றும் ஒருவர்” வழக்கில், ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் அதிகாரத்திற்கான வரம்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. இதன் மூலம் நீதிமன்றம், ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் கைப்பாவையோ அல்லது வரம்பற்ற அதிகாரம் கொண்ட தனி அதிகாரியோ அல்ல எனும் ஒரு அரசியலமைப்பு உண்மையை நமக்கு நினைவூட்டியது. அவர் சட்டத்தைப் பின்பற்றி ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்த வேண்டும்.
ஜனநாயக பொறுப்புகளை மதிக்க வேண்டிய ஒரு தேவை
மாநில சட்டமன்றம் முறையாக நிறைவேற்றிய ஒரு மசோதாவின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க மறுத்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த வழக்கின் முக்கியப் பிரச்சினை. நீதிமன்றத்தின் பதில் இரண்டு விஷயங்களைச் செய்தது. முதலாவதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் இல்லாமல் காத்திருக்கும் பல மசோதாக்களின் செல்லுபடியை அது உறுதிப்படுத்தியது. இரண்டாவதாக, ஆளுநரின் பங்கு முக்கியமானது. ஆளுநர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கடமைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. காரணமின்றி, மசோதாக்களைப் நிறுத்திவைப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான சமநிலையைப் பாதிக்கிறது.
முதலில், 12 மசோதாக்கள் கேள்விக்குரியதாக இருந்தன. சில மசோதாக்கள் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. அவற்றில் இரண்டு முந்தைய அதிமுக அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களில் ஒரு முக்கிய பிரச்சினை பொதுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கு மாற்றுவதாகும். இந்த மசோதாக்கள் முக்கியமான நிறுவனங்களை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆளுநர் அலுவலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாகும்.
பல ஆண்டுகளாக, ஆளுநர் இந்த மசோதாக்கள் மீது தெளிவான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால், மாநில அரசு நவம்பர் 2023-ல் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அவர் இரண்டு மசோதாக்களை விரைவாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாநில சட்டமன்றம் ஒரு சிறப்புக் கூட்டத்தொடரை நடத்தி, மற்ற 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது. இருப்பினும், ஆளுநர் அவற்றையும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார். இதுவரை, குடியரசுத்தலைவர் ஒரு மசோதாவுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளார். 7 மசோதாக்களை நிராகரித்துள்ளார். மேலும், இரண்டு மசோதாக்களை இன்னும் நிலுவையில் வைத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, மாநில அரசு இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. ஆளுநரின் நடவடிக்கைகள் சட்டம் இயற்றும் செயல்முறையைத் தடுத்துவிட்டதாகவும், மக்களின் விருப்பத்தை அவமதிப்பதாகவும் அரசு வாதிட்டது. எனவே, அவரது நீண்டகால செயலற்ற தன்மை மற்றும் இறுதியில் தாமதமான பரிந்துரை, நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தது.
இந்தியாவின் கூட்டாட்சி வடிவமைப்பு ஒரு நுட்பமான சமநிலையில் உள்ளது. அரசியலமைப்பு ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான சட்டமன்ற அதிகாரத்தை கவனமாக வரையறுக்கிறது. பிரிவு 245 சட்டங்களை எங்கு இயற்றலாம் என்பதை விளக்குகிறது. நாடாளுமன்றம் முழு நாட்டிற்கும் அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் சட்டங்களை இயற்ற முடியும் என்றும், மாநில சட்டமன்றங்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும் என்றும் கூறுகிறது.
அரசியலமைப்பு சட்டம் இயற்றும் அதிகாரங்களை மூன்று பட்டியல்களாகப் பிரிக்கிறது:
பட்டியல் I (ஒன்றிய பட்டியல்) - இந்த தலைப்புகளில் ஒன்றிய அரசு மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்.
பட்டியல் II (மாநில பட்டியல்) - இந்த தலைப்புகளில் மாநில அரசுகள் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்.
பட்டியல் III (பொதுப்பட்டியல்) - ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் இங்கு சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், ஒரு மாநில சட்டம் ஒரு மத்திய சட்டத்துடன் மோதல் ஏற்பட்டால், மாநில சட்டம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அது நிலைத்திருக்கும். இருப்பினும், மாநில மற்றும் ஒன்றிய சட்டங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், ஒன்றிய சட்டமே முன்னுரிமை பெறும்.
இந்தத் திட்டத்தில், ஆளுநர், குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டாலும், மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராகச் (constitutional head) செயல்படுகிறார். அரசியலமைப்பு வெளிப்படையாக விருப்புரிமையை அனுமதிக்கும் குறிப்பிட்ட நிகழ்வுகளைத் தவிர, அவர் மாநில அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்படக் கடமைப்பட்டுள்ளார்.
பிரிவு 200-ன் வாசிப்பு
இந்தச் சூழலில்தான், ஒரு மசோதாவுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதைக் கையாளும் அரசியலமைப்பின் பிரிவு 200, நீதிமன்றத்தின் முன் முக்கியத்துவம் பெற்றது. பிரிவு 200-ன் படி, ஆளுநர் ஒரு மசோதாவை அங்கீகரிக்கலாம். அதை அங்கீகரிக்க மறுத்து, அதை மறுபரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம் அல்லது ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பலாம்.
தமிழ்நாடு மனுவுக்கு பதிலளித்த இந்திய ஒன்றியம், பிரிவு 200-ன் முதல் சட்டப்பிரிவு ஆளுநருக்கு ஒரு தன்னிச்சையான, நான்காவது நடவடிக்கையை வழங்குகிறது என்று வாதிட்டது: அவர் ஒரு மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பாமல், அதற்கு தனது ஒப்புதலை நிறுத்திவைக்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மசோதாவின் மீது முழுமையான வீட்டோ (absolute veto ) மூலம் அவர் தனது நிராகரிப்பை முத்திரையிட முடியும்.
ஆனால், 2023-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் vs பஞ்சாப் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வழக்கில் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. ஒப்புதலை நிறுத்தி வைப்பது பற்றிய பிரிவு 200-ன் பகுதி ஆளுநருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்காது என்று தீர்ப்பளித்தது. ஒரு மசோதா சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டவுடன், ஆளுநர் மூன்று விஷயங்களில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். மசோதாவிற்க்கு ஒப்புதல் அளிப்பது அல்லது அதை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்குவது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது அல்லது இந்த விவகாரத்தில், ஆளுநர் அதை மறுபரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
ஒரு மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு ஒதுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில், ஆளுநர் ஒரு தன்னாட்சி விருப்பத்தைப் (autonomous discretion) பயன்படுத்தலாம் என்பதும் யூனியன் வழக்காகும். எந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரமான திறனை அவர் கொண்டிருந்தார். இந்த வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அரசியலமைப்பு சபையில் நடந்த விவாதங்களை நீதிமன்றம் எழுப்பியது. பிரிவு 200 (அப்போது பிரிவு 175)-ன் வரைவு பதிப்பு, ஆளுநர் "தனது விருப்பப்படி" (in his discretion) ஒரு மசோதாவை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கலாம் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பில் இந்த சொற்றொடர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆலோசனையை ஆளுநர் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் வேண்டுமென்றே செய்யப்பட்டதாக நீதிமன்றம் கூறியது.
உண்மையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆலோசனை இல்லாமல் ஆளுநர் மூன்று குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே செயல்பட முடியும் என்று நீதிமன்றம் கூறியது. முதலாவதாக, பிரிவு 200-ன் இரண்டாம் பகுதியில் கூறப்பட்டுள்ளபடி, ஒரு மசோதா உயர்நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்தாலும், இரண்டாவதாக, ஒரு மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதல் வெளிப்படையாகக் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு வகைக்குள் வந்தது. உதாரணமாக பிரிவு 31C-ன் கீழ் ஒரு சட்டம் நீதித்துறை மறுஆய்விலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. மூன்றாவதாக, ஒரு மசோதா குடியரசுத்தலைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசியலமைப்பு மதிப்புகளை மிகவும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.
இந்த முடிவு ஒரு முக்கியமான எச்சரிக்கையுடன் வந்தது. ஆளுநர் விருப்புரிமையை பயன்படுத்தும் இடத்திலும்கூட, அந்த செயல் இன்னும் நீதிமன்ற மறுஆய்விற்கு உட்பட்டதாகும். ராமேஷ்வர் பிரசாத் VS இந்திய யூனியன் (2006) என்ற வழக்கில் அதன் முந்தைய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, சட்டப்பிரிவு 361 ஆளுநருர்களுக்கு தனிப்பட்ட விலக்கு அளித்தாலும், அது அவர்களின் செயல்களை சட்ட ஆய்விலிருந்து பாதுகாக்காது என்று நீதிமன்றம் கண்டறிந்தது. மாற்றுவழியைக் கவனியுங்கள் : ஒரு ஆளுநர், மசோதாக்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்து, அவற்றின் நிலையை ஒரு காரணமாக பயன்படுத்தி, முழு சட்டமியற்றும் செயல்முறையையும் தாமதப்படுத்தலாம். மேலும், அவ்வாறு செய்வதன் மூலம், மாநில அரசு சரியாக செயல்படுவதைத் தடுக்கலாம்.
எப்படியிருந்தாலும், இந்த வழக்கில், ஆளுநருக்கு எந்த விருப்புரிமையும் இல்லை என்று நீதிமன்றம் கண்டறிந்தது. ஒப்புதலைத் தடுத்து நிறுத்தத் தேர்ந்தெடுத்ததால், மசோதாக்கள் மீண்டும் அவருக்கு சமர்ப்பிக்கப்படும்போது, அவர் அவற்றை குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்திருக்க முடியாது. அவரது முடிவுகளை ஆதரிக்கும் நிர்வாக ஆலோசனையின் எந்த தடயமும் இல்லை. மேலும், அவரது செயல்கள் அடையாளம் காணக்கூடிய, பாதுகாக்கக்கூடிய, அரசியலமைப்பு பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் கண்டறிந்து, மசோதாக்களை அங்கீகரிக்க உத்தரவிட்டிருக்கலாம். இருப்பினும், நிறைய நேரம் கடந்துவிட்டதாலும், முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் புறக்கணிக்கப்பட்டதாலும், நீதிமன்றம் வலுவான அணுகுமுறையை எடுத்தது. முழுமையான நீதியை உறுதி செய்வதற்காக, பிரிவு 142-ன் கீழ் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்கள் ஆளுநருக்கு திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்று முடிவு செய்தது.
சிலர் இதை நீதித்துறையின் அத்துமீறலாகக் கருதலாம். ஆனால், ஒரு உத்தரவு பிறப்பிப்பது மிகவும் சாத்தியமற்றதாக இருந்திருக்கலாம். ஆளுநர் உத்தரவைப் புறக்கணித்திருந்தால், நீதிமன்றம் அவரை அவமதிப்புக்கு ஆளாக்க முடியாது. எனவே, மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டவுடன், ஆளுநருக்கு அவற்றை அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நீதிமன்றத்தின் முடிவு ஒரு தீர்க்கமான முடிவாகும்.
பெரிய செய்தி
சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட மசோதாக்களுக்கு இந்தத் தீர்ப்பு முக்கியமானது. ஆனால், இந்தத் தீர்ப்பு அதனுடன் ஒரு பெரிய செய்தியையும் கொண்டுள்ளது. இது நமது குடியரசு பற்றிய ஒரு முக்கியமான உண்மையை உறுதிப்படுத்துகிறது: ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் மாநில அரசின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆளுநரின் பங்கு அரசியல் மோதலை உருவாக்குவது அல்ல, மாறாக பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மதிப்புகளைப் பாதுகாப்பதாகும்.
சுஹ்ரித் பார்த்தசாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெறுகிறார்.
Original article: