பொருளாதாரம் இன்னும் வலுவாக உள்ளது. இருப்பினும், அது வளர்ச்சிக்கான இலக்கைத் தவறவிட்டுள்ளது.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி பிப்ரவரியில் 2.9% ஆகக் குறைந்துள்ளது. இது ஆறு மாதங்களில் மிகக் குறைவு. ஜனவரியில் (திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பிறகு) 5.2% ஆகவும், கடந்த பிப்ரவரியில் 5.6% ஆகவும் இருந்தது. மின்சார உற்பத்தியைத் தவிர பெரும்பாலான துறைகளில் சரிவு காணப்பட்டது. ஜனவரியில் 3.4%-ஆக இருந்த மின் உற்பத்தி பிப்ரவரியில் 3.6%-ஆக சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், இது கடந்த பிப்ரவரி மாதத்தின் 7.6%-ல் பாதிக்கும் குறைவாகும்.
சுரங்கத் துறை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. கடந்த ஆண்டு 8.1%-ஆக இருந்த நிலையில், பிப்ரவரியில் 1.6%-ஆகக் குறைந்தது. உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டு 4.9%-ஆக இருந்த நிலையில், கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து 2.9%-ஆகக் குறைந்தது. பயன்பாட்டைப் பொறுத்தவரை, நுகர்வோர் நீடித்து உழைக்கும் பொருட்களின் உற்பத்தியில் பெரிய சரிவு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரியில் 12.6%-ஆக இருந்த நிலையில், இது 3.8%-ஆகக் குறைந்தது. நுகர்வோர் நீடித்து உழைக்காத பொருட்களும் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக சுருங்கியது. ஜனவரியில் 3.2% சரிவுக்குப் பிறகு மீண்டும் 2.1% சரிந்தது. இது ஒட்டுமொத்த நுகர்வுத் தேவையில் குறிப்பிடத்தக்க சரிவை சுட்டிக்காட்டுகிறது.
சில்லறை பணவீக்கத்தில் (retail inflation) கடுமையான சரிவு இருந்தபோதிலும், இது ஒரு வருடம் முன்பு 5.09%-ஆக இருந்த பிப்ரவரியில் 3.61%-ஆகக் குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கமும் 3.75%-ஆகக் குறைவாக இருந்தது. இது இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவு. இதன் விளைவாக, மகா கும்பமேளா காரணமாக நுகர்வு அதிகரிக்கும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. இது, 2025 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் 6.5% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை தவறவிடக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
பிப்ரவரி மாத தொழில்துறை உற்பத்தித் தரவு, உற்பத்தி கொள்முதல் மேலாளர் குறியீட்டு (Purchasing Manager’s Index (PMI)) கணக்கெடுப்பில் 56.3 என்ற குறைந்த அளவோடு ஒத்துப்போகிறது, இது 14 மாதங்களில் மிகக் குறைவு.
இது இரண்டு விஷயங்களை எடுத்துக்காட்டுகிறது. அவை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக உற்பத்தியாளர்கள் கவலைப்படுகிறார்கள். அதே நேரத்தில், பலர் தங்கள் சொத்துக்களின் மதிப்பு வீழ்ச்சியைக் கண்டதால் நுகர்வோர் தயங்குகிறார்கள். இது உலகளாவிய சந்தை போக்குகளைப் பின்பற்றி வரும் இந்திய பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாகும்.
இருப்பினும், சில நேர்மறையான அறிகுறிகள் உள்ளன. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (Index of Industrial Production (IIP)) சுமார் 77% பங்களிக்கும் உற்பத்தித் துறையில், 23 தொழில் குழுக்களில் 14, கடந்த ஆண்டைவிட பிப்ரவரியில் வளர்ச்சியைக் காட்டின. வளர்ச்சி மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் அரை டிரெய்லர்கள் (8.9%), உலோகம் அல்லாத கனிம பொருட்கள் (8%) மற்றும் அடிப்படை உலோகங்கள் (5.8%) ஆகியவற்றால் உந்தப்பட்டது.
மூலதனப் பொருட்களின் உற்பத்தி கடந்த ஆண்டு 1.7%-ஆக இருந்த நிலையில், 8.2% அதிகரித்துள்ளது. அரசாங்க செலவினம் அதிகரித்ததன் காரணமாக முதலீட்டுத் தேவை வலுவாக உள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் வங்கி அமைப்பில் ₹1.7 டிரில்லியன் பணப்புழக்கப் பற்றாக்குறை இருந்தபோதிலும் இது நிகழ்ந்தது. பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் பலவீனமடைந்து வரும் ரூபாயிலிருந்து பாதுகாக்கும் வழிகளைத் தேடும் வெளிநாட்டு மூலதனம் பெருமளவில் வெளியேறியதால் இது ஏற்பட்டது. இதை நிவர்த்தி செய்ய, மார்ச் 24 அன்று முடிவடைந்த ரூபாய்/டாலர் பரிமாற்ற ஏற்பாடுகள் மூலம் மத்திய வங்கி, வங்கி அமைப்பில் சுமார் ₹2.18 டிரில்லியன் நிதியைச் செலுத்தியது. கடந்த நிதியாண்டிற்கான அதன் வளர்ச்சிக்கான இலக்கு தவறவிட்டாலும், இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாகவே உள்ளது என்பதில் அரசாங்கம் ஓரளவு ஆறுதல் காணலாம்.