கார்பன் வரிவிதிப்பை ஆதரிப்பது என்பது அனைத்து நாடுகளுக்கும் சிறந்த அணுகுமுறையாக இருக்காது என்பதை அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள தனித்துவமான சூழ்நிலைகளை கவனிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம்.
2023 இல், ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (United Nations Climate Change Conference (COP28)) துபாயில் நடந்தது. புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அறிக்கையுடன் அது முடிந்தது. 2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை உலகம் அடையும் என்ற நம்பிக்கையை இது அளித்தது. இருப்பினும், உலகின் மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் இந்தியா, விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டில் உலகின் 7.6% பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு இந்தியா காரணமாக இருந்தது, அதே நேரத்தில் சீனா 30.7% மற்றும் அமெரிக்கா 13.6% பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான லட்சிய இலக்குகளை இந்தியா நிர்ணயித்துள்ளது மற்றும் உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவுக்கு அரசியல் சவால்கள் உள்ளன, அவை நாட்டின் முக்கியமான காலநிலை இலக்குகளை அடைவதை கடினமாக்கும்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு இந்தியாவில் தனித்துவமான வரிவிதிப்பு முறை உள்ளது. உலக விலைகள் உயரும்போது வரிகளைக் குறைத்து, விலை குறையும் போது அதிகரிக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் உக்ரைன் நெருக்கடியின் காரணமாக எரிவாயு விலைகள் அதிகரித்தபோது நுகர்வோருக்கு உதவுவதற்காக செப்டம்பர் 2021 முதல் ஜனவரி 2023 வரை €650 பில்லியனுக்கும் ($712 பில்லியன்) அதிகமான மானியங்களை வழங்கின.
இந்தியாவில், 2021 இல் பயனுறு கார்பன் விலை (effective carbon price) டன் ஒன்றுக்கு €14 மட்டுமே. இந்தியாவில் மின்சாரம் அதிக மானியங்களைப் பெறுகிறது, பல குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் இலவச அல்லது மலிவான மின்சாரத்தைப் பெறுகிறார்கள். இந்தியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 34% மின்சாரம் பங்களிப்பதால், உமிழ்வு-குறைப்பு இலக்குகளை அடைவதற்கு மின்சார விலையை மாற்றுவது இன்றியமையாதது. இருப்பினும், இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொன்றும் மின்சார விலையை நிர்ணயிக்கிறது. ஒரு மத்திய அதிகாரம் இல்லை என்பதால் இது சவாலானது.
சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய வரலாற்றில், கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் மானியங்கள் மூலம் மின்சார விலையை மலிவாக ஆக்கியுள்ளன. இது, இலவச அல்லது குறைந்த விலை மின்சாரத்தை மக்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்த மானியங்கள் அதிகமான மக்கள் மின்சாரம் பெற உதவினாலும், அவை மாநில அரசுகளுக்கு நிதி அழுத்தத்தை ஏற்படுத்தி தூய்மையான எரிசக்தியில் முதலீடு செய்வதை கடினமாக்குகின்றன. விவசாயத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில், இலவச மின்சாரம் நீர் ஆதாரங்களை பாதிக்கிறது. கூடுதலாக, மின்சாரத்திற்காக நிலக்கரியைப் பயன்படுத்துவது மாசு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது மற்றும் அதிக கார்பன் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இந்திய அரசியலில், அரசியல்வாதிகள் பிரபலமடைவதற்காக, இலவச அல்லது மலிவான மின்சாரம் வழங்குவதாக அடிக்கடி வாக்குறுதி அளிக்கின்றனர். இந்த அணுகுமுறை சமீபத்திய தேர்தல்களில் வேலை செய்தது, மின்சாரத்திற்கு அதிக மானியங்கள் மற்றும் கார்பனுக்கு குறைவான வரிக்கு வழிவகுத்தது. இந்தியாவில், மத்திய அரசு நியாயமான மின்சார விலையை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளை ஊக்குவிக்க முயன்றது. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் ( Carbon Border Adjustment Mechanism) அல்லது உமிழ்வு அறிக்கை விதிகள் (emission reporting requirements) போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த நடவடிக்கைகள் வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துகின்றன, இவற்றிற்கு இந்தியாவில் அதிக மானியம் வழங்கப்படவில்லை. இந்தத் துறைகளுக்கான தொப்பி மற்றும் வர்த்தக அமைப்பை (cap-and-trade system) ஏற்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. தொப்பி மற்றும் வர்த்தக அமைப்பு என்பது பசுமை இல்ல வாயு உமிழ்வை ஒழுங்குபடுத்தும் மற்றும் குறைக்கும் ஒரு முறையாகும், இது மொத்த உமிழ்வுகளின் மீது ஒரு வரம்பை அமைப்பதன் மூலம் மற்றும் நிறுவனங்களுக்கு அனுமதிகளை வர்த்தகம் செய்ய அனுமதித்து, உமிழ்வு குறைப்புகளை ஊக்குவிக்கிறது.
இந்தியாவில் மின்சார மானியங்களுக்கான பேராதரவு மற்றும் மின் கட்டண மாற்றத்திற்கான எதிர்ப்பு ஆகியவற்றினால் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடையும் என்று அர்த்தமல்ல. இந்தியா மின்சார விலையை மாற்றாமல் இருக்கலாம். ஆனால் உற்பத்தி செய்யும் முறையை மாற்ற முடியும். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாறுவது மலிவான மின்சாரத்தை வழங்குவதோடு உமிழ்வைக் குறைக்கும். இந்த மாற்றத்தை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக மாற்ற, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சேமிப்பு மிகவும் மலிவு விலையில் இருக்க வேண்டும். அமெரிக்க அதிபரின் பணவீக்கக் குறைப்புச் சட்டம் போன்ற கொள்கைகள், அவற்றின் பாதுகாப்புத் தன்மை இருந்தபோதிலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உதவலாம்.
ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளாததால், கார்பன் வரிவிதிப்புக்கு (carbon taxation) அழுத்தம் கொடுப்பது வேலை செய்யாது என்று இந்தியாவின் அனுபவம் கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொருளாதார நிபுணர்களுக்கும் கற்பிக்கிறது. இந்தியாவின் 36 பிராந்தியங்கள் (jurisdictions) மின்சாரத்தில் மறைமுக கார்பன் மானியத்தை (indirect carbon subsidies) அகற்ற வாய்ப்பில்லை. எனவே, இந்த அரசியல் தடைகளுக்குள் நடைமுறை தீர்வுகளை காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச நிதி ஆதரவு வளரும் நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ஏற்படும் அபாயங்களைக் குறைத்து தனியார் முதலீட்டை ஈர்க்கும். பாடப்புத்தகத் தீர்வுகளைப் பயன்படுத்துவது மட்டும் சிக்கலைத் தீர்க்காது என்பது தெளிவாகிறது.
எழுத்தாளர்கள் முறையே பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸில் (Peterson Institute for International Economics) ஆய்வறிஞர் மற்றும் எரிசக்தி பொருளாதார நிபுணர் (energy economist) . ©2024 Project Syndicate