ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய நிதிநிலை அறிக்கையால் அரசாங்கம் அதன் முன்னுரிமைகளை அமைக்க அனுமதிக்கிறது. இது வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் முக்கிய துறைகளில் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிக்க உதவுகிறது. வரவிருக்கும் பட்ஜெட்டில், கோவிட்-க்குப் பிறகு நிதி ஒருங்கிணைப்பில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை சமநிலைப்படுத்துவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில், அரசாங்கம் பசுமை மாற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும். இந்த சீரமைப்பு மிக முக்கியமானது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது போன்ற நிலையான முயற்சிகள், காலநிலை இலக்குகளை அடைய உதவுகின்றன. அவை, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகின்றன மற்றும் வேலைகளை உருவாக்குகின்றன. இது நிதிப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகள் ஒன்றையொன்று ஆதரிக்கும் ஒரு சுழற்சியை உருவாக்குகிறது.
தற்போதைய நிதி மேலாண்மை உத்தியை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் : கோவிட்-19க்குப் பிறகு, அரசாங்கம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்திற்குள் பட்ஜெட் செய்யப்பட்ட மூலதனச் செலவினத்தில் (மூலதனம்) சுமார் 60% ஐப் பயன்படுத்துகிறது. இருப்பினும், இந்த ஆண்டு, பட்ஜெட் செய்யப்பட்ட மூலதனத்தில் 46.2% மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூலதன இலக்குகள் குறைக்கப்பட்டுள்ளன. உண்மையான செலவு, திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் பட்ஜெட் செய்யப்பட்ட மதிப்பீடுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
வரவுகள் பக்கத்தில், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஈவுத்தொகை மற்றும் இலாபங்களில் 97% ஏற்கனவே அடையப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மேல்நோக்கிய சரிசெய்தலுடன் ஒப்பிடும்போது இது 144% உடன் குறைவாக உள்ளது. வருவாய் ரசீதுகள் தொடர்ந்து வருவாய் செலவினங்களை ஈடுகட்டியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பர் மாதத்திற்குள் செலவினங்களில் சுமார் 60% அடையப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட சந்தை கடன்களில் 29% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்திற்குள் கடன் வாங்கப்படுகின்றன.
இந்தப் போக்குகளின் விளைவாக, நிதித் திட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், பற்றாக்குறையான இலக்குகளை அடைய அரசாங்கம் போதுமான நிதிக்கான இடத்தைப் பராமரித்து வருகிறது. எதிர்காலத்தில், அரசாங்கம் அதன் நிதிக்கான உத்தியை மறுபரிசீலனை செய்யலாம், மூலதனத்தை முன்கூட்டியே பயன்படுத்துவதில் கவனம் செலுத்தலாம். இது ஆண்டின் முதல் காலாண்டுகளில் சிறந்தது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தகாலப் போக்குகள் மற்றும் மூலதனச் செலவினங்களில் கவனம் செலுத்துவதன் அடிப்படையில், அரசாங்கம் முக்கியமான துறைகளில் முன்னேற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். இதனால், இதன் அணுகுமுறையையும் செம்மைப்படுத்தும். உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production-Linked Incentive (PLI)) திட்டம் போன்ற சில திட்டங்கள், அவற்றின் இலக்குகள் அடையப்பட்டால் முடிவடையக்கூடும். தற்போது, இந்தியா நிலையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இந்த உறுதிப்பாடு அதன் தற்போதைய நிதி மற்றும் பசுமை முயற்சிகளிலும், பிற பகுதிகளிலும் பிரதிபலிக்கிறது.
தேசிய மின்சாரத் திட்டம் (National Electricity Plan (NEP)) 2023, 2032ஆம் ஆண்டுக்குள் 570 GW புதுப்பிக்கத்தக்க திறனை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய 200 GW இலிருந்து அதிகமாகும். இது சுத்தமான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. புதிய திறன் வளர்ந்து வரும் உள்நாட்டு எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய முடியும் மற்றும் புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் இந்தியாவை ஒரு தலைமைத்துவமாக மாற்ற முடியும். இருப்பினும், இந்த மாற்றத்தை ஆதரிக்க நிதி திரட்டுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்திய வங்கி அமைப்பு மின் துறைக்கு 200 பில்லியன் டாலர் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. அதன் இலக்குகளை அடைய இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் $50-60 பில்லியன் தேவைப்படுகிறது. இந்த முதலீடுகளின் நீண்டகால தன்மையைக் கருத்தில் கொண்டு, நிதி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வங்கிகள் போராடக்கூடும். NaBFID போன்ற ஒரு சிறப்பு நிதி நிறுவனத்தை உருவாக்குவது இந்த சவால்களை எதிர்கொள்ள உதவும். பசுமை எரிசக்திக்கான வழித்தடங்கள் போன்ற முயற்சிகளுக்கான நிதியையும் பட்ஜெட் சரிசெய்யக்கூடும்.
பிரதமர் ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) திட்டத்தின் மூலம் கணிசமான ஒன்றிய அரசு உதவியுடன் மூன்று கோடிக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீட்டுவசதி இலக்கு, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க உந்துதலாக செயல்படக்கூடும். இந்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், வெப்ப மேலாண்மை மற்றும் ஆற்றல் திறன் கொண்ட அம்சங்கள் இருக்கும். வளத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சுழற்சியை ஊக்குவிப்பதற்கும் காலநிலை-எதிர்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அவை முக்கியம். வீட்டுவசதியில் இந்த நிலைத்தன்மை இலக்குகளை அடைய, பெரியளவிலான பட்ஜெட் ஒதுக்கீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
போக்குவரத்து மற்றும் மின்சார வாகனத் (EV) துறை : பாரத்மாலா (Bharatmala) மற்றும் PM கிராம் சதக் யோஜனா திட்டங்கள் (PM Gram Sadak Yojana programs) உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க வலையமைப்புகளை விரிவுபடுத்துகின்றன. பசுமை பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் நிலையான உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றை இன்னும் வலுப்படுத்த முடியும். பசுமை எஃகு வகைபிரித்தல் அறிமுகம் ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும்.
PM-EDRIVE திட்டம் மற்றும் GST தொடர்பான நன்மைகள் போன்ற முன்முயற்சிகள் காரணமாக இந்தியாவின் மின்சார வாகன (EV) துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது. மின்கல (பேட்டரி) செலவுகள் குறைந்து வருகின்றன. மேலும், அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (original equipment manufacturers (OEM)) போட்டித்தன்மை வாய்ந்த வாகனங்களை வழங்குகிறார்கள். இதன் விளைவாக, மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உந்துதலைத் தக்கவைக்க, ஊக்கத்தொகைகளை வழங்குவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் மின்சார வாகனங்களுக்கு (EVகள்) பிரத்யேக நிதி விருப்பங்களை வழங்குவது முக்கியம். பொதுப் போக்குவரத்தின் மின்மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும் சரக்கு தளவாடங்களில் உமிழ்வைக் குறைப்பதற்கும் இது மிகவும் அவசியம். இத்தகைய ஆதரவை வழங்குவது நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பெரிதும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் பசுமைப் பத்திர வெளியீட்டு இலக்குகளில் (green bond issuance targets) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படலாம். இது சந்தை வளர்ச்சியை ஆதரிக்கவும் பல்வேறு துறைகளில் பசுமை முயற்சிகளுக்கு நிதியளிக்கவும் உதவும். இதில் திடக்கழிவு மேலாண்மை, நிலையான வீட்டுவசதி மற்றும் பிற அடங்கும். காலநிலை நிதி வகைப்பாடு பற்றிய கூடுதல் விவரங்களையும் பட்ஜெட் வழங்கக்கூடும். இது காலநிலை தழுவல் மற்றும் தணிப்புக்கான நேரடி முதலீடுகளுக்கு உதவும். இது நாட்டின் நிகர பூஜ்ஜிய இலக்குகளுடன் நிதி ஓட்டங்களை சீரமைப்பதற்கும் உதவும்.
2025-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்குகளுடன் நிதி முன்னுரிமைகளை இணைப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது மின்சாரம், வீட்டுவசதி, மின்சார வாகனங்கள் மற்றும் MSME-களில் உள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்ள முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், அரசாங்கம் பசுமையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும்.
இந்தக் கட்டுரையை, நிர்வாக இயக்குநர் வைபவ் பிரதாப் சிங் மற்றும் காலநிலை மற்றும் நிலைத்தன்மை முன்முயற்சியின் பொருளாதார நிபுணர் ஹனி கருண் ஆகியோர் எழுதியுள்ளனர்.