இந்தியாவின் பொருளாதாரம், குறிப்பாக அதன் மின் துறை, நிலக்கரியை பெரிதும் நம்பியுள்ளது. நிலக்கரிக்கு டிரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.
எரிசக்தித் துறையிலிருந்து நிலக்கரியை அகற்றுவதற்கான காலநிலை ஆதரவாளர்களின் எந்தவொரு முயற்சியும் குறைந்தபட்சம் இப்போதைக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும்.
இதன் அடிப்படையில் டிரம்ப் பதிவில் குறிப்பிட்டதாவது, “சீனா போன்ற நாடுகள் பல நிலக்கரி எரிமின் உற்பத்தி நிலையங்களைத் திறப்பதன் மூலம் பொருளாதார நன்மையைப் பெற அனுமதித்த சுற்றுச்சூழல் தீவிர ஆதரவாளர்கள் (Environmental Extremists), பைத்தியக்காரர்கள் (Lunatics), தீவிரவாதிகள் (Radicals) மற்றும் குண்டர்களால் (Thugs) பல ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, அழகான, சுத்தமான நிலக்கரியுடன் எரிசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்க எனது நிர்வாகத்தை நான் அங்கீகரிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
— @TrumpDailyPosts.
டிரம்பின் முடிவுகளானவை, நிலக்கரி உற்பத்தியாளர்களுக்கும் காலநிலை ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு விவாதத்தைத் தூண்டின. இந்தியாவும் அமெரிக்காவும் வரிச் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நிலக்கரி என்பது இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு பகுதி உள்ளது.
நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்கவும், அனல் ஆலைகளை மறுபரிசீலனை செய்யவும் அழுத்தம் கொடுக்கும் இந்தியாவுக்கு டிரம்பின் நிலைப்பாடு பலனளிக்குமா? இந்தியா நிலக்கரியை ஆதரிக்கிறது, ஆனால் அதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்?
"இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தக் கொள்கை அமெரிக்காவிலிருந்து ஒரு சிறிய அளவு நிலக்கரியை மட்டுமே இறக்குமதி செய்வதால் வரையறுக்கப்பட்ட நேரடி தாக்கத்தையே கொண்டுள்ளது" என்று NT-Live/NinjaTrader Group, LLC-ன் மூத்த பொருளாதார நிபுணர் டிரேசி ஷுசார்ட் கூறுகிறார். இருப்பினும், அமெரிக்க கொள்கைகள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் எரிசக்தி உத்தியைப் பாதிக்கலாம். இந்தியா அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுடன் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை சமநிலைப்படுத்த வேண்டும்.
நிலக்கரித் துறைக்கான கண்ணோட்டம்
2025-ம் ஆண்டில் நிலக்கரித் துறைக்கான S&P குளோபல் கமாடிட்டி இன்சைட்ஸின் கண்ணோட்டத்தின்படி, "சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான தீவிரமுனைப்பு மற்றும் புவிசார் அரசியல் போட்டி மிகவும் கவனிக்கத்தக்கதாகி வருகிறது. சீனா உலகளாவிய செல்வாக்கைப் பெற சுத்தமான தொழில்நுட்பத்தில் அதன் முன்னணியைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க கட்டணங்களை அதிகரித்து வருகின்றன."
2025-ம் ஆண்டில், சீனாவின் புதுப்பிக்கத்தக்க நிலையங்கள் சற்று குறையும். ஆனால், இன்னும் 250 GW-க்கு மேல் இருக்கும் என்று S&P குளோபல் எதிர்பார்க்கிறது. கூடுதலாக, சீனாவில் நிலக்கரி எரியும் உற்பத்தி ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்து புதிய சாதனையை எட்டும்.
பல வளரும் பொருளாதாரங்களில், நிலக்கரி தேவை 2025-ல் தொடர்ந்து உயரும் என்று S&P குளோபல் கமாடிட்டி இன்சைட்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சி அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைவிட மிகவும் மெதுவாக இருக்கும் இந்தியாவில் மிக முக்கியமான அதிகரிப்பு இருக்கும்.
பிற எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற அழுத்தம் இருந்தபோதிலும், நிலக்கரி இந்தியாவின் மின்சார உற்பத்திக்கான முதன்மை எரிபொருளாக உள்ளது.
மார்ச் 19 அன்று, நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மக்களவையில், 2024-25 நிதியாண்டில் (பிப்ரவரி 2025 வரை) 764.56 மில்லியன் டன் நிலக்கரி (தற்காலிகமாக) மின்துறைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். அதே காலகட்டத்தில், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் 757.70 மில்லியன் டன் (தற்காலிகமாக) பயன்படுத்தியுள்ளன.
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நிதியாண்டு 2025-ம் ஆண்டில், நாடு ஏற்கனவே 1 பில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது. இதில், முக்கியமாக வணிகச் சுரங்கங்களில் இருந்து அதிக உற்பத்தி காரணமாக இதன் செயல்பாடு அமைந்துள்ளது. கோல் இந்தியா லிமிடெட் (Coal India Ltd (CIL)) இந்த உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, சமீபத்திய மாதங்களில் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. வலுவான உள்ளூர் விநியோகம், நாணய மதிப்பு தேய்மானத்துடன் இணைந்து, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வாங்குபவர்களுக்கு குறைந்த ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நிலக்கரி அமைச்சகம் 'திட்டம் கோக்கிங் நிலக்கரி'யை (Mission Coking Coal) அறிமுகப்படுத்தியுள்ளது.
எஃகுத் தொழிலுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்த, கோல் இந்தியா லிமிடெட் அதன் சுத்திகரிப்புக்கான திறனை விரிவுபடுத்துகிறது. இந்த புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலமும், ஏற்கனவே உள்ள சிலவற்றை மேம்படுத்துவதன் மூலமும், பழையவற்றிலிருந்து பணமாக்குவதன் மூலமும் இதைச் மேற்கொள்கிறது.
2030 நிதியாண்டில், தற்போதைய திறன் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 18 என்ற சாம்பல் சதவீதத்தில் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன்கள் சுத்திகரிக்கப்பட்ட கோக்கிங் நிலக்கரியை CIL உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்பட்ட 11 புதிய கோக்கிங் நிலக்கரி சுத்திகரிக்கப்பட்ட நிலையங்களில், மூன்று ஏற்கனவே இயக்கப்பட்டுள்ளன. மேலும், எட்டு செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் இரண்டு கட்டுமானத்தில் உள்ளன. மீதமுள்ளவை வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.
சுத்தமான நிலக்கரி ஆராய்ச்சி
சமீபத்தில், கோல் இந்தியா லிமிடெட் (CIL) ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (IIT-H) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. அவர்கள் ஹைதராபாத்தில் சுத்தமான நிலக்கரி ஆற்றல் மற்றும் நிகர பூஜ்ஜிய மையத்தை (Centre of Clean Coal Energy and Net Zero (CLEANZ)) நிறுவுவார்கள். சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பங்களை உருவாக்குவதும் நிலக்கரி பயன்பாட்டை பல்வகைப்படுத்துவதும் இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். நிலக்கரித் துறையில் ஆராய்ச்சி மேம்பாட்டை நிலக்கரி அமைச்சகம் ஆதரிக்கிறது.
குறைந்த தர மற்றும் நிராகரிக்கப்பட்ட நிலக்கரியில் கவனம் செலுத்தி நிகர பூஜ்ஜிய பயன்பாட்டை அடைவதை CLEANZ நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலக்கரி படுகை மீத்தேன் மற்றும் நிலக்கரி சுரங்க மீத்தேன் மீட்பு (coal mine methane recovery), கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்கள் (carbon capture technologies), நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் சின்கேஸ் பயன்பாடு (coal gasification and syngas use), ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு (energy efficiency and conservation), மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மற்றும் இயந்திர கற்றல் (machine learning) போன்ற பகுதிகளில் CLEANZ செயல்படும்.
டிரம்பின் அறிக்கையானது காலநிலை ஆதரவாளர்களை தெளிவாகக் குறிக்கிறது. இருப்பினும், இந்த திட்டங்களுக்கு நிதியளிப்பது குறித்து, குறிப்பாக வளரும் நாடுகளுக்கு, சில நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில், அது போதுமான நிலக்கரி இருப்புகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஒரு சுரங்கத்தை உருவாக்குவதில் எந்தவொரு முதலீடும் நீண்ட காலமாகும். மேலும் இந்தியாவின் மின்சாரத் துறை நிலக்கரியை பெரிதும் சார்ந்துள்ளது.
இப்போது டிரம்ப் நிலக்கரியை வலியுறுத்தியதால், இந்தியா இதை தனது நன்மைக்காகப் பயன்படுத்தலாம். இது, ஏற்கனவே உள்ள பரிமாற்ற நெட்வொர்க்குகளை மற்ற எரிசக்தி ஆதாரங்களுடன் ஒருங்கிணைத்து சேமிப்புக்கான வசதிகளை உருவாக்க முடியும்.