இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்களில் என்ன குறை இருக்கிறது? -அலிந்த் சவுகான்

 நீண்டகாலத் திட்டங்கள் இல்லாமை, வெப்ப அலைகள் மோசமடைவதால் வெப்பம் தொடர்பான இறப்புகளை அதிகரிக்கலாம்.


பெரும்பாலான இந்திய நகரங்களின் வெப்ப செயல் திட்டங்கள் (heat action plans (HAPs)) கடுமையான வெப்பத்தைக் கையாள நீண்டகால உத்திகளைக் கொண்டிருக்கவில்லை என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. திட்டங்களைக் கொண்ட நகரங்கள்கூட அவற்றை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அது கூறியது.


திட்டமிடுதலில் இத்தகைய இடைவெளிகள் வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் அடிக்கடி, தீவிரமாக மற்றும் நீண்டதாக மாறும்போது அதிகமான வெப்பம் தொடர்பான இறப்புகள் ஏற்படக்கூடும்  என்று பகுப்பாய்வு கூறுகிறது.


"வெப்பமயமாதல் உலகத்திற்கு இந்தியா தயாரா?" என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, அதிக ஆபத்துள்ள இந்திய நகரங்களில் வெப்ப அலைகளுக்கான எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தது. இது நகர்ப்புற மக்கள்தொகையில் 11%-ஐ உள்ளடக்கியது. இது புது டெல்லியில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழுவான நிலையான எதிர்கால கூட்டுப்பணியால் (Sustainable Futures Collaborative (SFC)) நடத்தப்பட்டது. லண்டன் கிங்ஸ் கல்லூரி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டது.


இந்த கண்டுபிடிப்புகள் வரவிருக்கும் விஷயங்களின் வடிவம் பற்றிய எச்சரிக்கையாகும். தொடர்ச்சியான வெப்ப அலைகளுக்கு அமைப்புகளில் முன்னேற்றம் அவசியமானது மற்றும் அவசரமானது என்றாலும், எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதிலும் சமமான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று SFC-ன் வருகை பேராசிரியர் ஆதித்ய வலியாதன் பிள்ளை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


முதலில், வெப்ப செயல் திட்டம் என்றால் என்ன?


வெப்ப செயல் திட்டம் என்பது கடுமையான வெப்பத்தை எச்சரிக்கவும், தயார்படுத்தவும் ஒரு அமைப்பாகும். வெப்பம் தொடர்பான உடல்நல அபாயங்களிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க, தயார்நிலையை மேம்படுத்துதல், தகவல்களைப் பகிர்தல் மற்றும் பதில்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை இது உள்ளடக்கியது என்று அரசாங்க ஆவணம் கூறுகிறது.


ஜூலை 2024-ல் மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) வெப்ப அலை நிலைமைகளுக்கு ஆளாகக்கூடிய 23 மாநிலங்களில் மாநில அதிகாரிகளுடன் இணைந்து வெப்ப செயல் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறியிருந்தார்.


இந்தியாவில் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 530-ஆக இருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் இது 730-ஆக உயர்ந்தது. இருப்பினும், 2024-ஆம் ஆண்டில், வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இறப்புகள் 269 ஆகவும், வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்ட இறப்புகள் 161 ஆகவும் குறைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், இலாப நோக்கற்ற அமைப்பான ஹீட்வாட்ச் 2024-ஆம் ஆண்டு அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் இடையே இந்தியாவில் 17 மாநிலங்களில் வெப்ப பக்கவாதம் (heatstroke) காரணமாக 733 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியது.


புதிய ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?


1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) உள்ள நகரங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர், அவை கடந்த கால சராசரிகளுடன் ஒப்பிடும்போது ஆபத்தான வெப்ப அளவுகளில் (வெப்பநிலை + ஈரப்பதம்) மிகப்பெரிய உயர்வைக் காணக்கூடும்.


இந்த நகரங்கள் பெங்களூரு, டெல்லி, ஃபரிதாபாத், குவாலியர், கோட்டா, லூதியானா, மீரட், மும்பை மற்றும் சூரத் ஆகும். இந்த ஒன்பது நகரங்களில் வெப்ப நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகரம், மாவட்டம் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆராய்ச்சியாளர்கள் 88 நேர்காணல்களை நடத்தினர். பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், நகரத் திட்டமிடல், தொழிலாளர் துறைகள் மற்றும் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் பிரதிநிதிகளையும் அவர்கள் நேர்காணல் செய்தனர்.


ஆய்வில் என்ன கண்டறியப்பட்டது?


இந்த ஆய்வில், ஒன்பது நகரங்களிலும் குடிநீர் வசதி, சரிசெய்யப்பட்ட பணி அட்டவணைகள் போன்ற குறுகியகால அவசர நடவடிக்கைகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும், நீண்டகால தீர்வுகள் காணவில்லை அல்லது மோசமாக செய்யப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.


வீடு அல்லது தொழில்சார் குளிர்ச்சியை அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடைக்கச் செய்தல், இழந்த வேலைக்கான காப்பீட்டுத் தொகையை உருவாக்குதல், வெப்ப அலைகளுக்கான தீ மேலாண்மை சேவைகளை விரிவுபடுத்துதல், பரிமாற்ற நம்பகத்தன்மை மற்றும் விநியோக பாதுகாப்பை மேம்படுத்த மின்சார கட்ட மறுசீரமைப்புகள் போன்ற நீண்டகால நடவடிக்கைகள் அனைத்து நகரங்களிலும் இல்லை என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


பகுப்பாய்வின்படி, நகரங்கள் நகர்ப்புற நிழல் மற்றும் பசுமைப் போர்வையை விரிவுபடுத்துதல் மற்றும் அதிக வெப்ப ஆபத்தை அனுபவிக்கும் மக்கள் தொகை மற்றும் பகுதிகள் மீது கவனம் செலுத்தாமல் திறந்தவெளிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தின.


நீண்டகால உத்திகள் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றன என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. நீண்டகால தீர்வுகளை ஆதரிக்க அதிக நிதி தேவை என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.


நிறுவன வரம்புகள் நீண்ட கால நடவடிக்கைக்கு தடையாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, உள்ளூர், மாவட்ட மற்றும் மாநில அளவில் அரசாங்கத் துறைகளுக்கு இடையேயான மோசமான ஒருங்கிணைப்பு.



Original article:

Share: