அனைத்து அபாயகரமான, கூடுதல் பட்ஜெட் நடைமுறைகளையும் வெளியிடுமாறு மாநில அரசுகளை கட்டாயப்படுத்த CAG அதன் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு என்பது பயனாளிகளுக்கு நேரடியாகப் பணம் வழங்குவதாகக் கருதப்படுகிறது. சமீபத்திய மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் NDA பெற்ற பெரிய வெற்றி, முக்கியமாக அதன் லட்கி பஹின் யோஜ்னா திட்டத்தின் கவரக் கூடிய கொள்கைகள் இப்போது தேர்தல் அரசியலின் முக்கிய பகுதியாக இருப்பதைக் காட்டுகிறது.
இந்த யோஜனா திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ₹45,000 கோடி ரூபாய் செலவாகிறது. இது மகாராஷ்டிராவில் சுமார் 2.5 கோடி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ₹1,500 ரூபாய் வழங்குகிறது. முன்னதாக, பாஜக தனது திட்டங்களின் சாதனைகள் மூலம் வாக்குகளைப் பெறலாம் என்று நம்பியது. அதனால், இலவசங்கள் வழங்குவதைத் தவிர்த்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, தற்போது இலவசங்களை வழங்கும் நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஒடிசாவில், ஐந்து ஆண்டுகளில் ₹55,825 கோடி செலவில் ஒரு கோடி பெண்களுக்கு நேரடியாக ₹50,000 நிதியுதவி வழங்கும் சுபத்ரா திட்டத்தை பாஜக செயல்படுத்தியது.
2.2 கோடி பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் ₹1,200 அல்லது ₹1,000 பெறுகிறார்கள்.
கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும், அதற்கு முன் பஞ்சாப் மாநிலத்திலும் இதுபோன்ற பல உத்தரவாதங்களை அளித்து எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. டிஜிட்டல் ஜன்-தன் இணைப்பு, நேரடிப் பலன் பரிமாற்றம் உள்ளிட்ட இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது தடையற்ற செயல்முறையாக மாற்றியுள்ளது. மேலும், கடந்த காலத்தில் இருந்ததைப் போலல்லாமல், கட்சிகள் இப்போது அவற்றைச் செயல்படுத்தும் என்பதை வாக்காளர்கள் அறிந்து வைத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதைவிட, பல குறைபாடுகளைச் சரிசெய்து, மக்களுக்கு அவற்றின் பலன்களை வழங்குவதை விட, பணப் பரிமாற்றம் மிகவும் எளிதான செயலாக உள்ளது.
ஆதாரங்களைக் கண்டுபிடிக்க போராடுகிறது
இந்நிலை, பொதுக் கடனைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளுகின்றன. GSDPயில் கடன் விகிதம் 42 சதவீதமாக உயர்ந்துள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தைப் போல, பல மாநிலங்கள் இப்போது தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட நிதி ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன.
கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முதல்வர் சித்தராமையா நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததற்காக சமீபத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கர்நாடகாவின் நிதிப்பற்றாக்குறை ₹46,622 கோடி ரூபாயிலிருந்து ₹82,980 கோடி ரூபாயாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிக நிதிப்பற்றாக்குறை என்பது தனியார் கடன் வாங்குபவர்களுக்கு மூலதனத்தின் அதிக செலவு ஆகும். இது தவிர்க்க முடியாமல் மூலதனத்தை வெளியேற்ற வழிவகுக்கிறது.
மாநிலத்தின் மொத்த அன்னிய நேரடி முதலீடு 2021-22 நிதியாண்டில் 22 பில்லியன் டாலரிலிருந்து 2023-24 நிதியாண்டில் 6.57 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. அதிக கடன் வாங்குதல், அதிக வட்டி செலுத்துதல் போன்ற செயல்முறைகள் வளர்ச்சிக்கான நிதிகளை குறைத்தல் மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுத்தது. இந்த காரணிகள் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. மேலும், 2024 நிதியாண்டில் , கர்நாடகாவின் உண்மையான வளர்ச்சி 6.6% தேசிய வளர்ச்சி விகிதமான 7.2% ஐ விட குறைவாக இருந்தது.
அதிக பணத்தின் தேவை சில மாநிலங்களை பொது நிதிக்கு ஆபத்தான நடைமுறைகளை நாட வைக்கிறது. சில சமயங்களில் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்க உத்திரவாதத்தின் அடிப்படையில் கடன்களை உயர்த்தும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.
சில சமயங்களில், ஆந்திரப் பிரதேசம், கேரளா அல்லது மத்தியப் பிரதேசம் போன்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒரு எஸ்க்ரோ கணக்கில் (escrow account) எதிர்கால வருவாய்கள் ஒதுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்புக்கு எதிரான நடைமுறையாகும். ஏனெனில், இது பொதுமக்களிடமிருந்து இத்தகைய கடன்களை மறைக்கிறது. சில மாநிலங்களும் சிறப்பு வரிகளை (செஸ்) வசூலித்து, இந்தக் கடன்களைச் செலுத்த பணத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அத்தகைய வரிகளை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அரசியல்வாதிகள் தங்கள் வாக்குறுதிகளை கட்டுப்படுத்துவார்கள் அல்லது வாக்காளர்கள் பொறுப்பின்மைக்காக அவர்களை தண்டிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகள் செயல்படவில்லை. அரசியலமைப்பின் 150வது பிரிவின் கீழ், கட்டாய வெளிப்படுத்தல்களை உள்ளடக்கிய அரசாங்க கணக்குகளின் வடிவமைப்பை பரிந்துரைப்பதற்கு CAG மட்டுமே முழு பொறுப்பாகும். CAG தனது பரிந்துரைகளில், கூடுதல் பட்ஜெட் நடைமுறைகளை வெளிப்படுத்துமாறு அரசாங்கங்களை கட்டாயப்படுத்தலாம். இது ஒரு சிறிய முன்னேற்றமாக இருக்கலாம்.
கோவிந்த் பட்டாச்சார்ஜி, எழுத்தாளர், இந்தியாவின் CAG-ன் முன்னாள் இயக்குநர் ஜெனரல். தற்போது அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சிப் பேராசிரியராக உள்ளார்.