முன்மொழியப்பட்ட திட்டம் சுற்றுசூழலை பாதிக்கும் என்பதன் காரணமாக எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது பற்றிய கவலையையும் எழுப்புகிறது. கூடுதலாக, இது கூட்டாட்சி பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை வழங்க ஒன்றிய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்புக்கு வழிவகுத்தது. ஒன்றிய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு ராஜதந்திர திட்டம்
நவம்பர் 7-ஆம் தேதி, ஒன்றிய சுரங்க அமைச்சகம் 8 முக்கியமான கனிமத் தொகுதிகளை ஏலம் விடுவதாக அறிவித்தது. மதுரை மேலூர் தாலுக்காவில் உள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியும் இதில் அடங்கும். இந்த தொகுதிகள் முக்கியமான மற்றும் ராஜதந்திர கனிம தொகுதிகள் ஏலத்தின் 4வது பகுதியின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் கூறியது. இந்த ஏலத்தின் நோக்கமானது, உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு தன்னை சார்ந்து இருக்கும் இந்தியாவின் திறனை வலுப்படுத்துவதாகும்.
நாயக்கர்பட்டி பகுதி 2,015.51 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இது டங்ஸ்டனின் முக்கிய தாதுவான ஷீலைட் (scheelite) நிறைந்தது. விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கு டங்ஸ்டன் இன்றியமையாதது. மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் என்ற அரசு நிறுவனம், இந்தப் பகுதியை டங்ஸ்டன் பிரித்தெடுப்பதற்கு ஏற்றதாகக் கண்டறிந்தது.
தொகுதிக்கான ஏலத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் வெற்றி பெற்றது. இது வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
தமிழ்நாட்டில் எதிர்ப்பு
நாயக்கர்பட்டி பகுதியை நாட்டின் மதிப்புமிக்க சொத்தாக ஒன்றிய அரசு பாராட்டியது. ஆனால், இந்தப் பகுதியில் நடைபெறும் சுரங்கப் பணிகளுக்கு தமிழ்நாட்டிற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பரபம்பரியத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.
முன்மொழியப்பட்ட சுரங்கத் தளத்தில் அரிட்டாபட்டி, பல்லுயிர் வளம் நிறைந்த பகுதி. இது பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தின்படி அரிட்டாபட்டியில் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. குகைக் கோயில்கள், ஜெயின் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் படுக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். அரியவகை உயிரினங்களின் இருப்பிடமாகவும் இப்பகுதி விளங்குகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகிய அனைவரும் சுரங்கம் பிராந்தியத்தின் சூழலியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நிரந்தரமாக பாதிக்கும் என்று அஞ்சுகின்றனர்.
பூவுலகின் நன்பர்கள் போன்ற சுற்றுச்சூழல் குழுக்கள், சுரங்கத்திலிருந்து கனிம நுண்கசடு (tailings) எனப்படும் கழிவுப் பொருட்கள் ஆர்சனிக், காட்மியம் மற்றும் ஈயம் போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்களை வெளியிடக்கூடும் என்று எச்சரித்தனர். இந்த உலோகங்கள் மண்ணையும் நீரையும் மாசுபடுத்தும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உட்பட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய வேதாந்தாவின் வரலாற்றின் காரணமாக இந்த கவலைகள் அதிகரித்தன.
சுரங்கப் பகுதியில் அமைந்துள்ள தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி, கிடாரிப்பட்டி போன்ற கிராமங்களில் சுரங்கம் தோண்டுவதால் சுற்றுச்சூழலுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், 20.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1.93 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுச் சின்னம் உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த பகுதி நவம்பர் 2022-ல் பல்லுயிர் மரபுச் சின்னமாக தமிழ்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய -மாநில அரசு மோதல்
இந்த சர்ச்சை மீண்டும் கூட்டாட்சி மற்றும் வள மேலாண்மை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
2023 அக்டோபரில் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தமிழ்நாடு அரசு கூறியது. அந்த பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு மேற்கோள் காட்டியது. எவ்வாறாயினும், ஏலத்தை எதிர்க்கும் முறையான தகவல் எதுவும் செயல்முறையின் போது பெறப்படவில்லை என்று ஒன்றிய அரசு கூறுகிறது.
தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாநிலங்களவையில் தீர்மானத்தை தாக்கல் செய்தபோது, மாநிலத்தின் எதிர்ப்புகளை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார். அக்டோபர் 3, 2023 அன்று தமிழ்நாடு தனது கவலைகளை தெரிவித்தபோதிலும், ஒன்றிய அரசு அவற்றைப் புறக்கணித்து ஏலத்தில் இறங்கியது கண்டிக்கத்தக்கது என்று தனது கவலைகளை வெளிப்படுத்தினர்.
டிசம்பர் 9, 2024 அன்று, நாயக்கர்பட்டி பகுதிக்கான சுரங்க உரிமையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. டங்ஸ்டன் சுரங்கத்தை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம், அப்படி நடந்தால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சுரங்கத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு மாநில அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீர்மானத்தில், “மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமமும் வழங்கக்கூடாது” என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியது.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.