ஹைதராபாத் பல்கலைக்கழகத்தை ஒட்டிய 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியளவில் மரங்கள் வெட்டப்படுவதற்கு தெலுங்கானா அரசு நியாயம் கூறியதை கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், "சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வழக்கமான வழிக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம்" என்று கூறியுள்ளது.
மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம், தானாகவே முன்வந்து (suo motu cognizance), ஏப்ரல் 3 அன்று ஹைதராபாத்தின் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் மரங்களை வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தியது. மேலும், மரங்களை அகற்றுவதற்கான "தவிர்க்க முடியாத அவசரம்" (compelling urgency) என்ன என்பதை விளக்குமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டது.
இந்த சம்பவம், மும்பையின் ஆரே (Aarey) காடுகளில் காடழிப்பு மற்றும் ஒடிசாவில் நியாம்கிரி மலைகளில் ஏற்பட்ட முரண்பாடு போன்ற கடந்தகால சர்ச்சைகளை நினைவூட்டியது. இந்த நிகழ்வுகள் வளர்ச்சி ஆர்வங்களுக்கும் காடுகளைப் பாதுகாப்பதற்கும் இடையேயான மீண்டும் மீண்டும் ஏற்படும் மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மேலும், நகர்ப்புறப் பகுதிகளில் வேகமாகச் சுருங்கிவரும் பசுமைப் போர்வையின் மீது கவனத்தை ஈர்க்கின்றன.
இந்தியாவில் உள்ள காடுகளின் அளவையும், காடுகளைப் பாதுகாக்க உள்ள சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பையும் ஆராய்வோம்.
இந்தியா காடுகளின் அளவு
இந்தியாவில் காடுகள் வெறும் மரங்கள் மட்டுமல்ல. அவை லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன. அவை சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், நாட்டின் சூழலியல் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டிகளில் ஒன்றாகும். இதனால்தான் நாட்டின் புவியியல் பரப்பில் 33% காடுகளின் கீழ் பராமரிப்பது இந்தியாவில் நீண்ட காலமாக ஒரு முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது.
இருப்பினும், இந்திய காடுகள் நிலை அறிக்கை (Indian State of Forest Report (ISFR)), 2023-ன் படி, நாட்டின் மொத்த காடுகள் மற்றும் மர அளவு 8,27,356.95 கி.மீ², இது நாட்டின் புவியியல் பரப்பளவில் சுமார் 24% ஆகும். கடந்த ISFR உடன் ஒப்பிடும்போது பசுமைப் போர்வையில் சிறிய அதிகரிப்பு இருந்தாலும், சூழல்-உணர்திறன் மண்டலங்கள் (eco-sensitive zones), சதுப்பு நிலக் காடுகள் (mangroves), மற்றும் இயற்கைக் காடுகளில் வீழ்ச்சியைக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது
. இயற்கைக் காடுகள் அதிகரித்து வரும் அளவில் ஒற்றை வகை பயிர்த் தோட்டங்களால் (monoculture plantations) மாற்றப்படுகின்றன. இது பலவீனமான சூழலியல் நெகிழ்திறன் மற்றும் உயிரினப் பன்முகத்தன்மை இழப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. இருப்பினும், நாட்டில் காடுகளின் நிலை குறித்த இரண்டாண்டுக்கு ஒரு முறை மதிப்பீடான ISFR அறிக்கை, காப்பி, தேயிலை மற்றும் தென்னந்தோப்புகளை காடுகளாக சேர்த்ததால் அதன் முறைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
காடழிப்பிற்கு எது காரணமாக உள்ளது
துரிதப்படுத்தப்பட்ட தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி எவ்வளவு வேகமாக நிகழ்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தப் பிரச்சினை இன்னும் மோசமாகத் தெரிகிறது. இவைதான் காடுகள் இழப்புக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. 2014-15 மற்றும் 2023-24-க்கு இடையில், இந்தியா வளர்ச்சித் திட்டங்களுக்காக சுமார் 1,73,300 ஹெக்டேர் காடுகளை இழந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற கனிமங்கள் நிறைந்த மாநிலங்களில், சுரங்கம் காடுகள் இழப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும். 2018-ஆம் ஆண்டுக்குள் சுமார் 500 சுரங்கத் திட்டங்களுக்காக 1 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன.
வடகிழக்கின் மலைப்பாங்கான பகுதிகளில், மாறி மாறி பயிரிடும் முறை (ஜூம்), விவசாய விரிவாக்கம், மற்றும் பரந்த அளவிலான மரம் வெட்டுதல் ஆகியவை பசுமைப் போர்வை இழப்புக்கான முதன்மை காரணிகளாகும். இதனால் 2021-2023 காலப்பகுதியில் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய காடு இழப்பை சந்தித்த மாநிலங்களாக மாறின.
இதைத் தவிர, பெரும்பாலும் மனித செயல்பாடுகளாலும் நீண்ட வறட்சி காலங்களாலும் அதிகரித்து வரும் காட்டுத் தீ, மேலும் காடுகள் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. காலநிலை மாற்றம் வெப்பமான மற்றும் வறண்ட நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் இந்த ஆபத்தை தீவிரப்படுத்துகிறது. நவம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலத்தில், இந்திய காடு கணக்கெடுப்பு (Forest Survey of India) 2,03,544 காட்டுத் தீ சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. இத்தகைய அச்சுறுத்தும் போக்குகள் காடு சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வலுவான மற்றும் பதிலளிக்கும் சட்டக் கட்டமைப்பின் அவசர தேவையை வலியுறுத்துகின்றன.
காடுகள் பாதுகாப்புக்கான சட்டக் கட்டமைப்பு
இந்தியாவில் காடுகள் பாதுகாப்பு குறித்த சட்டக் கட்டமைப்பு சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய சட்டங்களிலிருந்து உருவாகியுள்ளது. 1927-ஆம் ஆண்டின் இந்திய காடுகள் சட்டம் (Indian Forest Act of 1927) காடுகளை வரையறுக்காமல் அவற்றை வகைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் அடிப்படை சட்டமாகும். இது காட்டு நிலத்தின் பதிவைத் தயாரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
இது இந்திய காடுகளின்மீது காலனித்துவ அதிகாரத்தை வலுப்படுத்த, பழங்குடியினரின் உரிமைகளைக் கட்டுப்படுத்தி, காடு நிர்வாகத்தின் பாதுகாப்பு அம்சத்தைப் புறக்கணித்து இயற்றப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின், காடுகள் தொடர்பான விவகாரங்கள் அரசியலமைப்பின் மாநில பட்டியலில் (State List) சேர்க்கப்பட்டது. இது மாநிலத்தால் காடுகளின் அளவுக்கு மீறிய சுரண்டலுக்கும், வேகமாக குறைந்து வரும் காடுகளின் அளவுக்கும் வழிவகுத்தது.
நிலைமையைக் கட்டுப்படுத்த, 1976-ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 42-வது திருத்தம் காடுகளை மாநில பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு (Concurrent list) மாற்றியது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை 1980-ஆம் ஆண்டின் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தால் (Forest Conservation Act - FCA) (2023-ல் திருத்தப்பட்டு வன ஸன்ரக்ஷன் ஏவம் ஸம்வர்தன் அதினியம், (Van (Sanrakshan Evam Samvardhan) Adhiniyam, 1980) என மறுபெயரிடப்பட்டது. இது காட்டு நிலத்தை காடல்லாத நோக்கங்களுக்காக மாற்றுவதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலை கட்டாயமாக்கியது.
1973-ன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1986-ன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 2002-ன் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2006-ம் ஆண்டின் வன உரிமைகள் சட்டம் மற்றும் 2006-ம் ஆண்டின் இழப்பீட்டு காடு வளர்ப்புச் சட்டம் போன்ற பிற சட்டங்களால் FCA கூடுதலாக வழங்கப்பட்டது.
காடுகள் கொள்கையின் பரிணாமம்
முதல் காடுகள் கொள்கை முயற்சி 1894-ஆம் ஆண்டின் தேசிய காடுகள் கொள்கை (National Forest Policy of 1894) ஆகும். இதன் அடிப்படை நோக்கம் காடுகளின் மீதான அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதாகும். சுதந்திரத்திற்குப் பின், 1952-ஆம் ஆண்டின் தேசிய காடுகள் கொள்கை (National Forest Policy of 1952) சூழலியல் சமநிலை மற்றும் காட்டைச் சார்ந்திருக்கும் சமூகங்களின் நலன் மீது கவனத்தை மறுசீரமைத்தது. இது நாட்டின் நிலப்பரப்பில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கை காடுகளாக வைத்திருப்பதை வலியுறுத்தியது.
1952-ஆம் ஆண்டின் கொள்கை 1988-ஆம் ஆண்டின் தேசிய காடுகள் கொள்கையால் (National Forest Policy of 1988) மாற்றப்பட்டது. இந்தப் புதிய கொள்கை காடுகளைப் பயன்படுத்துவதைவிட அவற்றைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தியது. இந்தியாவின் மொத்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்காக வனப்பகுதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் கூட்டு வன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் காடுகளை நிர்வகிக்க உள்ளூர் சமூகங்களை ஊக்குவித்தது.
தேசிய வனக் கொள்கையின் (National Forest Policy (NFP)) இலக்குகளை அடைய, அரசாங்கம் தேசிய காடு வளர்ப்புத் திட்டம், காட்டுத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம், பசுமை இந்தியாவிற்கான தேசிய திட்டம் மற்றும் தேசிய வேளாண் வனவியல் கொள்கை (2014) போன்ற பல திட்டங்களைத் தொடங்கியது.
இந்திய உச்சநீதிமன்றமும் இந்தியாவில் காடுகள் ஆளுமை சட்ட வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அதன் மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு “காடு” என்ற வரையறையை விரிவுபடுத்தியதாகும். டி.என். கோதாவர்மன் திருமுல்பாட் VS இந்திய ஒன்றியம், 1996 காடுகள் பாதுகாப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், “காடு” என்ற வார்த்தையை அதன் அகராதி அர்த்தத்திற்கு ஏற்ப புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, அந்த வார்த்தையின் பரந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.
இந்த விரிவான வரையறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து காடுகளையும் உள்ளடக்கியது. அவை காப்புக்காடுகள் (reserved), பாதுகாக்கப்பட்ட காடுகள் (protected) அல்லது வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டவை. டூன் பள்ளத்தாக்கு வழக்கு (Doon Valley case, 1988), சரிஸ்கா புலிகள் காப்பகம் வழக்கு (Sariska Tiger Reserve case, 1993), நியாம்கிரி வழக்கு (Niyamgiri case, 2013) போன்ற வழக்குகளில் தனது தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பிரிவு 21 மற்றும் பிரிவு 48A-ன் கீழ் வனப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை உச்சநீதிமன்றம் வலுப்படுத்தியது மற்றும் வனப் பாதுகாப்பை அடிப்படை உரிமை மற்றும் மாநில கடமையாக உயர்த்தியது.
சவால்கள் மற்றும் முன்னோக்கிய பாதை
இந்தியாவில் காடுகளைப் பாதுகாப்பதில் ஒரு பெரிய சவால் என்னவென்றால், “காடு” என்றால் என்ன என்பதற்கு தெளிவான மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை. எந்த காடு சட்டமும் இந்த வார்த்தையை தெளிவாக வரையறுக்கவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த தெளிவின்மை, பாதுகாப்புச் சட்டம் மற்றும் கொள்கை செயல்படுத்தலில் தடைகளை உருவாக்கும் பல்வேறு அதிகாரிகளின் சீரற்ற விளக்கங்களுக்கு வழிவகுத்தது.
காடுகள் பாதுகாப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் காடுகள் பாதுகாப்புச் சட்டம், 1980-ன் கீழ் “காடு” என்ற சொல்லை மறுவரையறை செய்தது. ஆனால், 2023-ஆம் ஆண்டு அதற்கான திருத்தம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்தது. இது நீதிமன்றத்தில் திருத்தத்தை சவால் செய்ய வழிவகுத்தது. மற்றொரு தடையாக நம்பகமான தரவு இல்லாதது சூழ்நிலையைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தி, “பசுமைக் கண்துடைப்பு” (greenwash) ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பைத் தடுக்கிறது.
மேலும், காடுகளைப் பாதுகாக்கும் கொள்கைகளின் அடித்தளமாக இருந்தபோதிலும், சமூகப் பங்களிப்பு வரம்புக்குட்பட்டதாகவே உள்ளது. அதுமட்டுமின்றி, நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைவிட வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது.
இந்தியாவில் காடுகள் அதன் சூழலியல் சமநிலை, காலநிலை நெகிழ்திறன் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் சமூக-பொருளாதார வாழ்வாதாரத்திற்கு முக்கியமானவை. இந்தியாவில் பசுமைப் போர்வையின் தரத்தையும் அளவையும் மேம்படுத்துவது முக்கியமானது. ஆகையால், காடுகளுக்கு தெளிவான மற்றும் உள்ளடக்கிய வரையறையை வழங்குவது முக்கியமானதாகும்.
அதே நேரத்தில், சமூகப் பங்களிப்பை அதிகரிப்பதற்கும், காடு வளர்ப்பு நோக்கங்களுக்காக உள்ளூர் தாவர இனங்களை ஊக்குவிப்பதற்கும் முயற்சிகள் பயனுள்ளதாக இருக்கலாம். மேலும், இந்தியாவின் நிலையான வளர்ச்சியில் காடுகளைப் பாதுகாப்பதன் மையத்தன்மை சூழலியல் சமநிலை மற்றும் மனித நலன் ஆகிய இரண்டையும் உறுதி செய்ய உதவும்.
Original article: