ஆரம்ப சுகாதாரத்தை அனைவருக்கும் அறியும்படி செய்தல், அணுகக்கூடிய மற்றும் மலிவுக் கட்டணத்தில் சுகாதார சேவையை வழங்குதல் -இர்பான் ஷகீர், ஜனேன் எஸ்.

 உள்ளூர் அரசாங்கங்கள் பொது சுகாதார வசதிகளை முன்னுரிமைப்படுத்தி, பொதுப் போக்குவரத்து வசதிகள் எளிதில் அணுகக்கூடிய வசதியான இடங்களில் அமைத்து, அவற்றின் தெரிவுநிலையை அதிகரிக்க வேண்டும்.


மாற்றம் தவிர்க்க முடியாதது, அதற்கு ஆரோக்கியம் ஏதேனும் விதிவிலக்கா? தொடர்ந்து விரிவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் நவீன வாழ்க்கை முறைகளுடன் இணைந்து உலகளவில் பொது சுகாதாரத்தின் தன்மை மாறிவிட்டது. சில நவீன பொது சுகாதார சவால்களில் - நுண்ணுயிர் எதிர்ப்பு, நாள்பட்ட தொற்றா நோய்கள் (non-communicable diseases (NCDs)), விலங்குகளால் பரவும் நோய்கள் மற்றும் மனநல நோய்கள் ஆகியவை அடங்கும். உலகளவில் 60%-க்கும் அதிகமான இறப்புகளுக்கு தொற்று அல்லாத நோய்கள் (NCDs) காரணமாகின்றன. மேலும், இந்த எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 17% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் சிக்கலானவை மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தப் புதிய அமைப்பு, சுற்றுச்சூழல், சமூகப் பொருளாதார நிர்ணயிப்பாளர்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தைத் தேடும் நடத்தை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்ச்சியான தொடர்புகளின் விளைவாக பொது சுகாதாரத்தைப் பார்க்க வேண்டும்.


இந்தியாவின் சமீபத்திய சாதனைகள்


2018-ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில், இந்திய அரசு சுமார் $8.4 பில்லியன் வரவு செலவு அறிக்கையுடன் “ஆயுஷ்மான் பாரத்” (Ayushman Bharat) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் பொது சுகாதார அமைப்பை மாற்றியமைத்து வலுப்படுத்தும் ஒரு லட்சிய திட்டமாகும். இதில் பின்தங்கிய குழுக்களின் சுகாதாரப் பராமரிப்புக்கான பொது நிதியுதவியும் அடங்கும். தேசிய அளவில் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டம் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: பிரதம மந்திரி - ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri - Jan Arogya Yojana (PM-JAY)), ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (Ayushman Arogya Mandir (AAM)), பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் (Pradhan Mantri Ayushman Bharat Health Infrastructure Mission (PM-ABHIM))  ஆகும்.


பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY), அரசால் மிகப்பெரிய நிதியளிக்கப்படும் சுகாதாரக் காப்பீடாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் ₹5 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. மறுபுறம், ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் (Ayushman Arogya Mandir) ஆரோக்கிய மற்றும் நல மையங்கள் (Health and Wellness Centres  (HWCs)) மூலம் ஆரம்ப சுகாதார சேவையை முழுமையாக மாற்றியமைத்து வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் தொடர்ச்சியான முழுமையான பராமரிப்பு (தடுப்பு, ஊக்குவிப்பு, குணப்படுத்தும், மறுவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு) முறையில் பொது சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. இது தொற்றா நோய்கள் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் முன்னுரிமை புற்றுநோய்கள்), காது, மூக்கு, தொண்டை, மன நலம், வாய் நலம், முதியோர் பராமரிப்பு மற்றும் ஆறுதல் பராமரிப்பு, ஆரோக்கிய மேம்பாடு மற்றும் நல நடவடிக்கைகள் போன்ற சேவைகளை பொது மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மிஷன் (PM-ABHIM) திட்டம் ₹64,180 கோடி நிதியுடன், அக்டோபர் 2021-ல் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் முழுமையான பராமரிப்பு அமைப்புக்கு தேவையான சுகாதார உட்கட்டமைப்பை வழங்கி நாட்டிற்குள் உயர்தர சேவைகளை நிலைநிறுத்த உதவுகிறது.


இது போன்ற பொது நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் உயிர்வாழ்வையும் நல்வாழ்வையும் மேம்படுத்தவும், பேரழிவு தரும் சுகாதார செலவினங்களிலிருந்து (catastrophic healthcare expenditure (CHO)) சமூகத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனம் பேரழிவு சுகாதார செலவை “சுகாதார பராமரிப்புக்கான செலுத்தும் திறனில் 40%-க்கும் அதிகமான சுய செலவு” என வரையறுக்கிறது.


முழுமையான எண்கள் வேறொரு கதையைச் சொல்கின்றன


ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நவம்பர் 2024 வரை, மொத்தம் 1,75,338 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்கள் (AAMs) நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் 350 கோடி ஆலோசனைகள் பதிவாகியுள்ளன. தேசிய சுகாதார கணக்குகள் அறிக்கை  (National Health Accounts report) 2021-2022-ஐ நாம் ஆராய்ந்தால், சுகாதார அமைச்சகம் சமீப ஆண்டுகளில் சுகாதார செலவினத்தை சிறிதளவு அதிகரித்துள்ளதைக் காணலாம். அறிக்கை நாட்டில் வரவுக்கு மீறிய செலவின் (Out-of-Pocket Health Expenditure - (OOPHE)) குறைந்து வரும் போக்கையும் காட்டுகிறது (2013-14: 64.2%; 2014-15: 62.6%; 2015-16: 60.6%; 2016-17: 58.7%; 2017-18: 48.8%; 2018-19: 48.2%; 2019-20: 47.1%; 2020-21: 44.4%; 2021-22: 39.4%) ஆகும். மாநிலங்களின் அர்ப்பணிக்கப்பட்ட நிதிகளுடன், ஒன்றிய அரசு தேசிய சுகாதாரத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மூலம் மாநிலத்தின் பொது சுகாதார உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. இந்த கணிசமான நிதியுதவியுடன், இந்தியா தனது மக்களின் சராசரி ஆயுளை அதிகரித்து சுகாதார விளைவுகளை மேம்படுத்த முடிந்தது. ஆனால், உண்மையான கேள்வி என்னவென்றால், நமது பொது சுகாதார அமைப்பு நமது மக்களுக்கு எந்த அளவிற்கு தெரிகிறது?


நமது பொது சுகாதார அமைப்பு எவ்வளவு தெரிகிறது?


இந்தியாவில், பயனர் அனுபவம், மற்றும் மக்களின் நம்பிக்கை மற்றும் அமைப்பின் மீதான நம்பிக்கை போன்ற சில பார்வைக்கு தெரியாத புள்ளிகள் பொது சுகாதார அமைப்பில் உள்ளன. பொது சுகாதாரம் அல்லது சுகாதார பராமரிப்பில் மக்களின் “நம்பிக்கை” எப்போதும் தெளிவற்றதாக இருந்துள்ளது. இருப்பினும், இது சுகாதாரத்தை நாடும் நடைமுறை, சுகாதார பராமரிப்பு பயன்பாடு மற்றும் பராமரிப்பின் தொடர்ச்சி மற்றும் சுய திருப்தி போன்ற பல சுகாதார விளைவுகளுடன் தொடர்புடையதாக இருந்து வருகிறது. “சுகாதார பராமரிப்பில் நம்பிக்கை” (Trust in healthcare) என்பது நம்பிக்கை வைப்பவர் (நோயாளிகள்) தங்கள் கவலை அல்லது ஆர்வத்தைப் பற்றி அக்கறை கொள்வார்கள் என்று நம்பும் ஒரு உதவியற்ற சூழ்நிலையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது என்று வரையறுக்கப்படுகிறது. இந்தியா உட்பட பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள், தங்கள் பொது சுகாதார அமைப்புகளில் மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதில் இன்னும் போராடுகின்றன.


ஒவ்வொரு நாட்டின் பொது சுகாதார அமைப்பும் சுகாதார சேவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நம்பிக்கை மக்களை பொது நிதியுதவி அமைப்புக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது மற்றும் தனியார் துறையில் இருந்து பேரழிவு சுகாதார செலவுகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கிறது. இந்தியாவில், தனியார் சுகாதார துறை இன்னும் சுகாதார செலவில் பெரும்பங்கு வகிக்கிறது, முன்பு குறிப்பிடப்பட்ட வரவுக்கு மீறிய செலவின் (Out-of-Pocket Health Expenditure (OOPHE)) சதவீதங்கள் அரசாங்கம் ஆண்டுகளாக தனிநபர் OOPHE-ஐ எவ்வாறு குறைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், சதவீதங்களுக்குப் பதிலாக முழு எண்களைப் பார்க்கும்போது, அது முற்றிலும் வேறுபட்ட கதையைச் சொல்கிறது. அதே அறிக்கையின்படி, இந்தியாவில் OOPHE (2017-18: ₹2,097; 2018-19: ₹2,155; 2019-20: ₹2,289; 2020-21: ₹2,415; 2021-22: ₹2,600) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


மருத்துவர்களின் “அறநெறி சார்ந்த துயரம்” சுகாதார பராமரிப்பில் குறைந்து வரும் நம்பிக்கையைப் பற்றி என்ன சொல்கிறது


மக்கள் பெரும்பாலும் தொடர்ச்சியான பராமரிப்பு, சரியான நேரத்தில் அணுகல் மற்றும் சுத்தமான உட்கட்டமைப்புக்காக தனியார் துறையை நாடுகிறார்கள். இந்தியாவில் மதிப்பிற்குரிய பொது சுகாதார அமைப்பு உள்ளது. இது காலப்போக்கில் படிப்படியாக மேம்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரம்ப நிலையில். பொது நிதியுதவி பெற்ற துணை மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களின் பொது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆரம்ப நிலையில் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்ப சுகாதார சேவைகளை வழங்குகிறது.


ஆயுஷ்மான் பாரத் மற்றும் தேசிய சுகாதாரத் திட்டம் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) பொது சுகாதார அணுகல் மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், இந்திய அரசாங்கம் தேசிய தர உறுதிப்பாட்டு தரநிலைகளை (National Quality Assurance Standards (NQAS)) அறிமுகப்படுத்தியது. இது பொது சுகாதார வசதிகளை உலகளாவிய தரத்திற்கு உயர்த்த உதவுகிறது. இந்த தரநிலைகள் தி இன்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் குவாலிட்டி இன் ஹெல்த்கேர்  (International Society for Quality in Healthcare (ISQua)) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. சேவை, நோயாளி உரிமைகள், உள்ளீடுகள், ஆதரவு சேவைகள், மருத்துவ பராமரிப்பு, தொற்று கட்டுப்பாடு, தர மேலாண்மை மற்றும் விளைவுகள் போன்ற 8 கவலைக்குரிய பகுதிகளில் தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, நவம்பர் 2024 வரை 17,017 பொது சுகாதார வசதிகள் NQAS சான்றளிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் பற்றிய அறிவு இல்லாதது மக்கள் இந்தியாவின் பொது சுகாதார வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. தனியார் சுகாதாரத் துறையின் அதிகரித்த வெளிப்படைத் தன்மை காரணமாக, மக்களில் பெரும்பகுதியினர் இன்னும் தங்கள் அருகாமையில் உள்ள குறிப்பிட்ட பொது சுகாதார நிறுவனத்தைப் பார்க்கவில்லை அல்லது அது இருப்பதை அறியவில்லை.


முன்னோக்கிய பாதை


இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDG) 2030 உறுதிப்பாடுகள் உயர்தர பொது சுகாதார அமைப்பை கோருகின்றன. உயர்தர சுகாதார அமைப்புகளுக்கான லான்செட் உலகளாவிய சுகாதாரக் குழுவின் கூற்றுப்படி, உயர் செயல்திறன் கொண்ட சுகாதார அமைப்பு என்பது அடிப்படை உட்கட்டமைப்பின் (மனித வளங்கள், மருந்துகள், நீர், மின்சாரம் போன்றவை) வெறும் இருப்பால் மட்டுமே குறிக்கப்படுவதில்லை. மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது பராமரிக்கும், அனைவராலும் நம்பப்படும், மற்றும் மக்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய பராமரிப்பு முறையாக வழங்குவதே ஒரு நல்ல சுகாதார அமைப்பு என்று ஆணையம் கூறுகிறது.


இந்தியா 2007-ஆம் ஆண்டு இந்திய பொது சுகாதார தரநிலைகளை (Indian Public Health Standards (IPHS)) அறிமுகப்படுத்தியது. ஆனால், அவை அரசாங்க சுகாதார வசதிகளுக்கான அடிப்படை விதிகளை மட்டுமே அமைக்கின்றன. இப்போது, ​​சுகாதாரம் சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் தேசிய தர உறுதி தரநிலைகள் (NQAS) மீது கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களில் செயல்படுத்துவது கடினமானது என்பதால், புதிதாக கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இவை கட்டாயமாக்கப்பட வேண்டும்.


சேவை மேலாண்மை மற்றும் பயன்பாடு பற்றிய அளவிடக்கூடிய தரவுகளை இந்த அமைப்பு உருவாக்கினாலும், மக்கள் மிகவும் கவலைப்படும் சில அளவுருக்களை இது தவறவிடுகிறது. பயனர் அனுபவத்தைக் கைப்பற்றி கண்டுபிடிப்புகளை பொதுவாகக் கிடைக்கச் செய்வதன் மூலம், நமது பொது சுகாதார அமைப்பில் மக்களின் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை நாம் அதிகரிக்க முடியும். இந்த வகையான மறு சிந்தனை, பல வருகைகள் மற்றும் விரிவான பராமரிப்பு தேவைப்படும் நாள்பட்ட மற்றும் சிக்கலான நோய்கள் போன்ற நவீன பொது சுகாதார பிரச்சினைகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.


உள்ளூர் அரசாங்கங்கள், பொது சுகாதார மையங்கள் எளிதில் சென்றடையக்கூடிய இடங்களில், குறிப்பாக பொதுப் போக்குவரத்து மூலம், அதிகமான மக்கள் அவற்றைக் கண்டுபிடித்து பயன்படுத்தக்கூடிய வகையில் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நகரங்களில் இதைச் செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால், இது சுகாதார மற்றும் பொருளாதார நன்மைகளைத் தருகிறது. தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் (National Digital Health Mission) கீழ், அருகிலுள்ள பொது சுகாதார வசதிகளைக் கண்டறிய மக்கள் இடமறியும் (Global Positioning System (GPS)) கருவிகளைப் பயன்படுத்தலாம். இது அணுகலை இன்னும் எளிதாக்கும். சுருக்கமாக, இன்றைய பொது சுகாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய, பராமரிப்புக்கான அணுகலை வழங்குவது மட்டும் போதாது. அதற்கு பதிலாக, பேரழிவு தரும் சுகாதார செலவினங்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க, அரசாங்க சுகாதார சேவைகளில் நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு உயர்தர பொது சுகாதார அமைப்பு இலக்காக இருக்க வேண்டும்.


இர்ஃபான் ஷகீர் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தொற்றுநோயியல் நிபுணர். டாக்டர் ஜனேன் எஸ் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு தொற்றுநோயியல் நிபுணர்.


Original article:
Share: