விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) என்பது என்ன? --குஷ்பு குமாரி மற்றும் ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


— ஆனால் லட்சியத்தின் அளவைப் பற்றி இரு தரப்பிலும் வேறுபாடுகள் இருந்தன — இந்தியத் தரப்பு 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிப்பதாகக் கூறியது. அதே நேரத்தில், கனடாத் தரப்பு அதே ஆண்டுக்குள் 70 பில்லியன் டாலர் என்ற இலக்கை நிர்ணயித்தது. — 2024-ஆம் ஆண்டில், இந்தியா-கனடா இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகளின் இருதரப்பு வர்த்தகம் சுமார் 22.6 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 


தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் உள்ள வேறுபாடு, கனடிய வணிகங்களால் இந்தியச் சந்தையின் ஆற்றல் குறித்த மிகவும் நம்பிக்கையான (bullish) மதிப்பீட்டைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கின்றனர். 


— இத்தகைய வர்த்தக ஒப்பந்தத்திற்காகக் கனடாவும் இந்தியாவும் 15 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. ஆனால், அது குறிப்பிட்ட தொழில்துறைகளை மட்டுமே உள்ளடக்கும் ஒரு துறைசார் ஒப்பந்தமாகத் தரம் குறைக்கப்பட்டது.


— 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை மையமாகக் கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஒட்டாவா (Ottawa) வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா "அபத்தமானது" என்று நிராகரித்தது.


மார்ச் மாதம் ஒட்டாவாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இரு நாடுகளும் தங்கள் உறவை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கின.


தென் ஆப்பிரிக்காவில் நடந்த சந்திப்பில், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடியின் அழைப்பை கார்னியும் ஏற்றுக்கொண்டார்.


— வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பற்றி, கனடாவின் ஊடகமான கனடா ஒலிபரப்புக் கழகத்திடம் (Canadian Broadcasting Corporation (CBC)), கனடாவுக்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் கூறியது: 'இந்த முழு விஷயத்திலும், இரு நாடுகளும் பொது வெளிகளில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டிய ஒரு உறவை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு முதிர்ச்சி பெற்றவை,' என்று அவர் கூறினார்.


— வெளியுறவுத் துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் கூறியதாவது: 'இரு நாடுகளின் தலைவர்களும், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை $50 பில்லியனாக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட, உயர் இலக்குடைய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (Comprehensive Economic Partnership Agreement (CEPA)) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டனர்.


— பிரதமர் மோடியும், கார்னியும் கடந்த ஜூன் மாதம் நடந்த G7 உச்சி மாநாட்டிற்குப் பிறகு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தையும், அக்டோபர் மாதத்தில் அவர்களது வெளியுறவு அமைச்சர்களால் அறிவிக்கப்பட்ட இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய செயல் திட்டத்தையும் வரவேற்றனர் என்று கனடா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


— கடந்த ஆகஸ்ட் மாதம் 2025-ஆம் ஆண்டு  உயர் ஆணையர்கள் திரும்பிய பிறகு, இரு பிரதமர்களும் வெளியுறவு குறித்த இராஜதந்திர ஊழியர்களை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். வெளியுறவுத் துறை அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) யுரேனியம் வர்த்தகம் குறித்தும் குறிப்பிட்டது. இரு நாடுகளும் தங்கள் நீண்டகால சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியதுடன், நீண்டகால யுரேனியம் விநியோக ஒப்பந்தங்கள் உட்பட அதை விரிவாக்குவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்து வருவதாகவும் குறிப்பிட்டன.


உங்களுக்குத் தெரியுமா?


— உலகின் மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கையில் இந்தியர்கள் கனடாவில் புலம்பெயர்ந்து உள்ளனர்.  ஏறக்குறைய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். மொத்த கனடிய மக்கள்தொகையில் 3 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் 700,000 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உள்ளனர். 2022-ஆம் ஆண்டு தரவுகளின்படி, கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2.3 லட்சம் பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 


— 2021-22-ஆம் ஆண்டில், கனடாவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் 11.68 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது எதிர்பார்த்த அளவில் இருக்க வேண்டியதைவிட மிகக் குறைவாகும். இருப்பினும், இந்தியாவின் பருப்பு வகைகள் இறக்குமதியில் ஏறக்குறைய 30 சதவீதம் இன்னும் கனடாவிலிருந்தே வருகிறது.


— கனடாவின் 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் சீக்கியர்கள் 2.1 சதவீதம் பேர் உள்ளனர். மேலும், அவர்கள் கனடா நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் மதக் குழுவாகவும் இருக்கிறார்கள். இந்தியாவிற்கு அடுத்தபடியாக, உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சீக்கியர்கள் கனடாவில் இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 


Original Article: What is the Comprehensive Economic Partnership Agreement (CEPA)?

Share:

இந்திய அரசியலமைப்பு மேற்கத்திய கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது. இதனால்தான் இது இவ்வளவு காலமாக நிலைத்து நிற்கிறது. -ரோச்சனா பாஜ்பாய், மனஸ் ரதுரி

அதன் உருவாக்குநர்கள், மேற்கத்திய தாராளவாத அரசியலமைப்புவாதத்தின் வரையறுக்கப்பட்ட கற்பனையால் கட்டுப்படுத்தப்படவில்லை, அதன் முக்கியத்துவம் அரசு கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. மாறாக சமூகத்தில், குழுக்கள் மற்றும் சமூகங்கள் அரசிலிருந்து தனித்தனியாக அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை அங்கீகரித்தன.


இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 76வது ஆண்டு நிறைவை இன்று குறிக்கிறது. ரத்தம் சொட்டச் சொட்டப் பிரிவினையும், காலனிய ஆட்சியிலிருந்து அதிகார மாற்றமும் நிகழ்ந்த சூழலில் பிறந்தது இந்திய அரசியலமைப்புச் சட்டம், அது காலத்திற்கு முந்தையது. மேற்கத்திய அரசியலமைப்புகளிலிருந்து இது பல விவகாரங்களில் விலகிச் செல்கிறது. அதிலிருந்து பல கருத்துக்களை கடன் வாங்குவதாக நமது அரசியலமைப்பு குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியாவில் அரசியலமைப்பு உரிமைகள் தனிநபர் குடிமை மற்றும் அரசியல் சுதந்திரங்களைப் பாதுகாப்பது குறித்த மேற்கத்திய கருத்தை உள்ளடக்கியது, ஆனால், அதை தாண்டியும் செல்கிறது. இவை சமூக வாழ்வில் உள்ள சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கும் குழுவால்-வேறுபடுத்தப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதற்கு அரசு மேற்கொள்ள நடவடிக்கையை முன்வைக்கின்றன.


முதலாவதாக, இந்திய அரசியலமைப்பு சமத்துவத்திற்கான உரிமையை வலியுறுத்துகிறது. மேலும், மேற்கத்திய அரசியலமைப்புகளைப் போல் இல்லாமல், ஆழ்ந்த சமத்துவமற்ற சமூகத்தில் அதன் தாக்கங்களை விரிவுபடுத்துகிறது. பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சட்டங்களின் சமமான பாதுகாப்பு- மற்றும் பிரிவு 15 - குடிமக்களுக்கு எதிராக அரசு பாகுபாடு காட்டுவதைத் தடை செய்தல் - போன்ற விதிகள் ஒரு புதிய சமூக உருவாக்கத்தைக் குறிக்கின்றன. சாதி தொடர்பாக, மேற்கத்திய அரசியலமைப்புகளைப் போல் இல்லாமல், அதன் சமத்துவ விதிகள் தனிநபர்களுக்கு எதிரான பாகுபாட்டின் சமூக ஆதாரங்களை அடையாளம் காண்கின்றன. எனவே, பிரிவு 15 (2)-ன் கீழ், குடிமக்கள் பொது இடங்களை அணுகுவதில் அரசிடமிருந்து மட்டுமல்ல, தனியார் மக்களிடமிருந்தும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவு 17 தீண்டாமையை சட்டவிரோதமாக்குகிறது. அதேபோல், சாதி மற்றும் நிலப்பிரபுத்துவத்துடன் பிணைக்கப்பட்ட கடன் அடிமைத்தன நிலைமைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரிவு 23 மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை தடை (human trafficking and forced labour) செய்கிறது. எனவே, இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மேற்கத்திய தாராளவாத அரசியலமைப்புவாதத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. அதன் முக்கியத்துவம் மாநிலக் கட்டுப்பாட்டில் இருந்தது, அதற்குப் பதிலாக சமூகத்தில், குழுக்கள் மற்றும் சமூகங்கள் மாநிலத்திலிருந்து தனித்தனியாக அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை அங்கீகரித்தன.


இரண்டாவதாக, மேற்கத்திய தாராளமய ஜனநாயக நாடுகளில் அனுமதிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலமைப்பு, குழு-வேறுபடுத்தப்பட்ட உரிமைகளை பரந்த அளவில் சமத்துவ தாராளமய கட்டமைப்பிற்குள் அங்கீகரித்தது. மத சிறுபான்மையினர் மற்றும் வரலாற்றுரீதியாக ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கான பாதுகாப்புகள் குறித்து அரசியலமைப்பு சபையில் சூடான விவாதங்கள் நடந்தன, அவை அரசியலமைப்பின் முதல் வரைவிலிருந்து இறுதிவரை ஓரளவு குறைக்கப்பட்டன. குறிப்பாக, மத சிறுபான்மையினருக்கான சட்டமன்ற ஒதுக்கீடுகள் (legislative quotas) 1949-ல் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், பி.ஆர். அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உத்தரவின் பேரில், கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய மாறுபட்ட அணுகுமுறை தேவை என்பதை அரசியலமைப்பு அங்கீகரித்தது. குடிமை-உரிமைகள் சட்டத்தில் (civil-rights legislation) அமெரிக்கா முன்னேறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரே, 1950-ல் உறுதியான நடவடிக்கையை அரசியலமைப்புமயமாக்குவதில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருந்தது.


அரசியலமைப்பு மத பன்முகத்தன்மைக்கு ஒரு நுட்பமான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது. இது ஒரு மதச்சார்பற்ற அரசை நிறுவியது. இந்தச் சொல் 1976-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


பிரிவுகள்

முக்கியத்துவம்

பிரிவு 25

தனிநபர்களுக்கான மத சுதந்திரங்களைப் பாதுகாக்கிறது.

பிரிவு 26

குழுக்களுக்கான மத சுதந்திரங்களைப் பாதுகாக்கிறது மற்றும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் போன்ற சிறுபான்மையினர் இந்தப் பிரிவின் கீழ் தங்கள் மத குடும்பச் சட்டங்களைத் (religious family laws) தக்க வைத்துக் கொண்டனர்.

பிரிவு 27

எந்தவொரு மதத்திற்கும் கட்டாய வரி விதிப்பை தடை செய்கிறது. 

பிரிவு 28

அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கட்டாய மத போதனையைத் தடை செய்கிறது.

பிரிவு 29 மற்றும் 30

மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு தங்கள் மொழி, எழுத்து, பண்பாட்டைப் பாதுகாப்பதற்கும், கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பதற்குமான உரிமைகள் இந்தப்பிரிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.


அரசியலமைப்பில் சில பலவீனங்கள் உள்ளன. அது தனிப்பட்ட சுதந்திரங்களையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கிறது. ஆனால், இந்த உரிமைகள் பல சூழ்நிலைகளில் பலவீனமாக உணரப்படலாம். குறிப்பாக, காலனித்துவ சட்டங்களைச் செயல்படுத்தும் அவசரகால விதிகள் உட்பட பல்வேறு சூழ்நிலைகளில் உரிமைகள் மற்றும் தீர்வுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற மறுஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், அன்றைய அரசாங்கத்தால்

தீர்மானிக்கப்படும் உரிமைகளின் விதிவிலக்குகள் மற்றும் இடைநீக்கங்களுடன், அரசியலமைப்பு பரந்த விருப்புரிமை அதிகாரங்களைக் (discretionary powers) கொண்ட ஒரு சக்திவாய்ந்த நிர்வாகத்தை உருவாக்கியது.


இருந்தபோதிலும், அரசியலமைப்பு 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மகத்தான, பன்முகத்தன்மை கொண்ட அரசியலுக்கான வழிகாட்டியாக நிலைத்து நிற்கிறது. மேலும், ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய புத்தகமாக உள்ளது. இது உலகளாவிய அடிப்படையில் ஒரு சாதனையாகும். அரசியலமைப்புகள் சட்ட நூல்கள் மட்டுமல்ல. இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் நாட்டினர்கள் பற்றிய கதையை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. தேசிய ஒற்றுமைக்கு ஒரே மாதிரியான தன்மை (uniformity) தேவையில்லை என்பதையும், ஆழமான ஏற்றத்தாழ்வுகளும் சமூக வேறுபாடுகளும் நிறைந்த சூழல்களில் சமத்துவம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான நடத்தை என்று பொருள்படாது என்பதையும் அரசியலமைப்பு  உணர்த்துகிறது.


பாஜ்பாய் லண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS-ல் அரசியல் பேராசிரியராகவும், ரதுரி O P ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.

Original Article: Indian Constitution went beyond Western notions. This is why it has endured


Share:

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை -ரோஷ்னி யாதவ்

இந்தோ-திபெத்திய எல்லைக் பாதுகாப்புப் படை (Indo-Tibetan Border Police (ITBP)), 3,488 கி.மீ. இந்தியா-சீனா எல்லையில் 10 இடங்களில் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயங்கும் முன்களப் பணிமனைகளை நிறுவ உள்ளது. இந்தோ-திபெத்திய எல்லைக் பாதுகாப்புப் படை என்றால் என்ன, அது என்ன பணிகளைச் செய்கிறது? மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces (CAPFs)) என்றால் என்ன? 


தற்போதைய செய்தி?


இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (Indo-Tibetan Border Police (ITBP)), லடாக்கின் கரகோரம் கணவாய்க்கும் (Karakoram Pass) அருணாச்சலப் பிரதேசத்தின் திப்பு லாவிற்கும் இடையே 3,488 கி.மீ நீளமுள்ள இந்தியா-சீன எல்லையில் 10 இடங்களில் பெண்களால் மட்டுமே இயங்கும் முன்களப் படை நிலைகளை உருவாக்க உள்ளது. சனிக்கிழமை உதம்பூரில் நடைபெற்ற இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் 64-வது எழுச்சி நாள் அணிவகுப்பில் உரையாற்றிய இயக்குநர் ஜெனரல் பிரவீன் குமார், பெண்களால் மட்டுமே இயங்கும் எல்லை நிலைகள் முதலில் லடாக்கின் லுகுங் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தாங்கியில் நிறுவப்படும் என்றார். இந்தச் சூழலில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தோ-திபெத்திய எல்லையில், எல்லைப்புற உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்க இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை அக்டோபர் 24, 1962 அன்று நிறுவப்பட்டது. தொடக்கத்தில் நான்கு பட்டாலியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை ஆரம்பத்தில் மத்திய ஆயுதக் காவல் படை சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. இருப்பினும், 1992-ல், நாடாளுமன்றம் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை சட்டத்தை இயற்றியது மற்றும் அதற்கான விதிகள் 1994-ல் உருவாக்கப்பட்டன.


2. எல்லைப் பாதுகாப்புப்படை, கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கூடுதல் பொறுப்புகள் காரணமாக, காலப்போக்கில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை பட்டாலியன்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்தோ-திபெத்திய எல்லைக் பாதுகாப்புப்படை 60 சேவை பட்டாலியன்கள், 4 சிறப்பு பட்டாலியன்கள், 17 பயிற்சி மையங்கள் மற்றும் 7 தளவாட நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மொத்தம் சுமார் 88,432 பணியாளர்களைக் கொண்டுள்ளது.


3. 2004-ஆம் ஆண்டில், "ஒரு எல்லை ஒரு படைக்கான” (One Border One Force) அரசாங்க பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படையிடம் (ITBP) 3,488 கி.மீ நீளமுள்ள இந்தியா-சீன எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் பணிகளுக்காக அசாம் ரைபிள்ஸ்க்கு மாற்றாக மாற்ற இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை உருவாக்கப்பட்டது.


4. இந்தப் படையின் குறிக்கோள் தைரியம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு (Shaurya-Dridhata-Karma Nishtha) ஆகும். இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படையின் சின்னத்தில் அசோகரின் சிங்கத் தலைநகரம் இரண்டு துப்பாக்கிகளுடன் ஒரு சக்கரத்தில் இடம்பெற்றுள்ளது. இது படையின் துணிச்சலையும் தயார்நிலையையும் குறிக்கிறது.


5. தற்போது ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் ஜம்மு காஷ்மீரில் உள்ள காரகோரம் கணவாய் முதல் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜெச்சப் லா (Jechap La) கணவாய் வரை உள்ள இந்திய-சீன எல்லையை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை பாதுகாத்து வருகிறது. இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை எல்லைச் சாவடிகள் 9,000 அடி முதல் 18,750 அடி வரை உயரத்தில் அமைந்துள்ளன. அங்கு வெப்பநிலை -45°C வரை குறையக்கூடும்.


6. நாடு முழுவதும் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிறுவல்களுக்கு இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை பட்டாலியன்கள் பாதுகாப்பை வழங்குகின்றன. இதில் குடியரசுத் தலைவர் மாளிகை, துணை குடியரசுத் தலைவர் மாளிகை, ரும்தேக் மடாலயம் (சிக்கிம்), திஹார் சிறை (வட டெல்லி), லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம் (உத்தரகண்ட்) மற்றும் சண்டிகர் (பஞ்சாப்) மற்றும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள பிற முக்கிய இடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பை வழங்குகின்றன.


7. ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளிலும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை சிறந்து விளங்குகிறது. அங்கோலா, நமீபியா, கம்போடியா, போஸ்னியா ஹெர்சகோவினா, மொசாம்பிக் மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக இந்தப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.


8. 1981-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் மருத்துவ காப்பீட்டை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை வழங்கி வருகிறது. வெளியுறவு அமைச்சகம் மற்றும் குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து கஞ்சியிலிருந்து லிபுலேக் கணவாய் வரையிலான புனிதப் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டைஇந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை வழங்குகிறது. 2015ஆம் ஆண்டு முதல், கைலாஷ் மானசரோவர் புனித பயணம் நாதுலா பாதையிலிருந்து நடத்தப்படுகிறது. மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள புனித பயணிகளுக்கு இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை இதேபோன்ற உதவியை வழங்கி வருகிறது.


9. இமயமலையில் இயற்கை பேரிடர்களுக்கு முதலுதவி செய்பவராக, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை உள்ளது. அவசர காலங்களில் விரைவாக உதவ 7 பிராந்திய மீட்பு மையங்களை அமைத்த முதல் படை இதுவாகும். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை அதன் ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


10. இமயமலை சுற்றுச்சூழல் சூழலியலைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை  முன்னணியில் உள்ளது.


இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப்படையின் செயல்பாடுகள் மற்றும் பணிகள்


1. நமது நாட்டின் வடக்கு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு, எல்லை மீறல்களைக் கண்டறிதல் மற்றும் தடுத்தல், உள்ளூர் மக்களிடையே பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துகிறது.


2. சட்டவிரோத குடியேற்றம், எல்லை தாண்டிய கடத்தல் மற்றும் குற்றங்களை சரிபார்க்கிறது.


3. உணர்திறன் வாய்ந்த நிறுவல்கள், வங்கிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு பாதுகாக்கிறது.


4. இடையூறு ஏற்படும் போதெல்லாம் சட்ட ஒழுங்கைப் பராமரித்து பாதுகாக்கிறது.



உங்களுக்குத் தெரியுமா?

முதன்முறையாக, இராணுவம் தனது பிராந்திய இராணுவ (Territorial Army (TA)) பட்டாலியன்களில் பெண்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இது படையில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.

மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces (CAPFs))


1. மத்திய ஆயுதக் காவல் படைகள் ((Central Armed Police Forces (CAPFs))) என்று குறிப்பிடப்படும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படை அமைப்புகள், அசாம் ரைபிள்ஸ் (Assam Rifles (AR)), எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force (CISF)), மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force (CRPF)), இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை (Indo Tibetan Border Police (ITBP)), தேசியப் பாதுகாப்புப் படை (National Security Guard (NSG)) மற்றும் சஷாஸ்திர சீமா பால் (Sashastra Seema Bal (SSB)) போன்றவை, புது டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.


2. அசாம் ரைபிள்ஸ் உள்ள உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டாலும், அதன் செயல்பாடுகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் (Ministry of Defence) உள்ளது.


3. மத்திய ஆயுதக் காவல் படைகளில், அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் சஷாஸ்திர சீமா பால் ஆகியவை எல்லைப் பாதுகாப்புப் படைகள் ஆகும்.


4. தேசியப் பாதுகாப்புப் படை என்பது இந்தியாவில் கமாண்டோ பயிற்சி பெற்ற படை அமைப்பாகும். இது சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிறுவல்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

Original Article: Indo-Tibetan Border Police:

 

Share:

‘வளர்ச்சியடைந்த இந்தியா’ நோக்கிய பயணத்தில், நமது சிறந்த வழிகாட்டி அரசியலமைப்புச் சட்டமே ஆகும். -ஓம் பிர்லா

950ஆம் ஆண்டு முதல், அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு வயது வந்தவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதன் மூலமும், நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும், பின்தங்கிய குழுக்களை ஆதரிப்பதன் மூலமும், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் ஒரு சிறந்த வழிகாட்டியாக  இருந்து வருகிறது.


2015-ஆம் ஆண்டு, பி.ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்தநாளின்போது, நமது அரசியலமைப்புச் சட்டம் ஆதரிக்கும் மற்றும் நிலைநிறுத்த முயலும் நிர்வாகக் கொள்கைகளைக் கொண்டாடவும், அதன் பிரிவுகளில் உள்ள மதிப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகளை மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளவும், இந்திய அரசு நவம்பர் 26ஆம் தேதியை  அரசியலமைப்பு  தினமாக (Samvidhan Divas) அறிவித்தது.


1949ஆம் ஆண்டு இந்த நாளில் அரசியலமைப்புச் சட்டம் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாகவும், வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்புச் சபையின் அனைத்து உறுப்பினர்களான அம்பேத்கரின் பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாகவும் அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு  தினம் கொண்டாடப்படுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சபை டிசம்பர் 9, 1946 அன்று இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்கும் முக்கிய பணியைத் தொடங்கியது. மைய மண்டபத்தில் தீவிரமான ஆலோசனைகள் மற்றும் அற்புதமான விவாதங்களுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் நீடித்த ஏராளமான குழுக்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு, மிகவும் முற்போக்கானதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் கருதப்படும் ஒரு அரசியலமைப்பை, அந்தச் சபை  நாட்டிற்கு வழங்கியது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் மைய மண்டபத்திற்குள் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள், பிற ஜனநாயக நாடுகளிலிருந்துவரும் கருத்துக்களை வரவேற்கும் அளவுக்கு புத்திசாலிகளாகவும், அரசியலமைப்பை எழுதுவதில் பங்கேற்க விரும்பிய பல இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்கும் அளவுக்கும் சிறந்தவர்களாகவும் இருந்தனர். இவ்வாறு, அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. அதேபோல் லட்சக்கணக்கான குடிமக்களின் தொடர்ச்சியான பங்கேற்பாலும், அவர்களின் மனுக்கள், கடிதங்கள், குறிப்புகள், சட்டமன்றத்தில் உரையாற்றப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான வெளியீடுகள் மூலம், அவர்கள் தங்கள் சொந்தமாகக் கருதிய ஒரு பயிற்சியில் பங்கேற்க முயன்றனர். இதன்மூலம் ஏற்படும் விளைவுகள் தாங்கள் விரும்பிய திசையில் இருக்க வேண்டும் வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.


நமது நவீன அரசியலமைப்பு வரலாற்றின் ஆரம்பக்கட்டத்திலியே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு சமூக-பொருளாதார சூழ்நிலைகளிலும் வாழ்ந்த நமது நாட்டின் மக்கள், ஒரு நவீன ஜனநாயக தேசத்தின் முக்கிய வழிகாட்டும் ஆவணமாக மாறுவதை வடிவமைப்பதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தினர். அதன் உருவாக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த பாராட்டு, நமது அரசியலமைப்பின் நிலைத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம். காலனித்துவத்திற்குப் பிந்தைய உலகில் வளர்ந்துவரும் தேசமாக எதிர்கொள்ள வேண்டியிருந்த ஏற்ற இறக்கங்களுக்கு இடையே, அரசியலமைப்பு நிலைத்திருப்பது மட்டுமல்லாமல், காலப்போக்கில் தொடர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.


நமது அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரப் போராட்டத்தின் உணர்வையும், நமது நாட்டின் வரலாறு மற்றும் நெறிமுறைகள் பற்றிய நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களிடையே உள்ள ஆழமான புரிதலையும் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மற்ற ஜனநாயக நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், இந்தியாவிற்கு மிகவும் தேவையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதையும்  காட்டுகிறது.


நமது அரசியலமைப்புச் சட்டத்தில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உலகளாவிய கொள்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்தக் கொள்கைகள் இந்த ஆவணத்தின் முழு உரையிலும் உள்ளது. உலகின் மிக விரிவான எழுதப்பட்ட அரசியலமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நமது அரசியலமைப்பு, முதலில் 395 பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவை 22 பகுதிகளாகவும் எட்டு அட்டவணைகளாகவும் பிரிக்கப்பட்டன; இது இப்போது 472 பிரிவுகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகளாக விரிவடைந்துள்ளது.


ஒவ்வொரு குடிமகனுக்கும் முழுமையான மற்றும் நியாயமான நீதியை உறுதியளிப்பதால் நமது அரசியலமைப்பு மதிக்கப்படுகிறது. இது நமது நிலத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு கொண்டாடியுள்ளது, அனைவருக்கும் கண்ணியத்தை வழங்குகிறது, மேலும் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சொந்த கனவுகளை நனவாக்க தன்னம்பிக்கையை அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக நமது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் எதிர்கொண்ட குறைபாடுகளை அரசியலமைப்பு அங்கீகரித்து, வரலாற்று அநீதிகளை நிவர்த்திசெய்ய சிறப்பு பிரிவுகளை உருவாக்கியுள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் பல பழங்குடி சமூகங்களுக்கு சிறப்பு சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் அவர்கள் தங்கள்

தனித்துவமான கலாச்சாரங்களையும் சமூக அமைப்புகளையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறார்கள். தேவைப்படும்போது அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யவும், அதன் முக்கிய மதிப்புகளை இழக்காமல் செய்யவும் இது அனுமதிக்கிறது. நமது அரசியலமைப்பில் செய்யப்பட்ட 106 திருத்தங்கள், நமது தேசம் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்கும் திறனுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.


1950ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், வயது வந்த அனைவருக்கும், அவர்களின் பின்னணி எதுவாக இருந்தாலும், வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. நமது அரசியலமைப்பு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஆதரிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குழுக்களையும் உள்ளடக்க உதவுகிறது. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தை ஊக்குவிக்கிறது. மக்களை ஒரே தேசமாக ஒன்றிணைக்க மொழிகள், கலாச்சார மற்றும் மதப் பாதுகாப்புகளை வழங்குவது சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளை சேர்ந்த மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய நாடாளுமன்றம் கடினமாக உழைத்து வருகிறது. இது சமூக பொறியியலின் (social engineering) ஒரு இயக்கியாகவும், சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டத்தை இயற்றியும் வருகிறது. எனவே, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு தற்சார்பு (atmanirbhar) மற்றும் தன்னம்பிக்கை கொண்ட வளர்ந்த நாடக முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது.


இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வளர்ந்து வருகிறது. மேலும், எதிர்காலத்தில் உலகின் 3வது பெரிய நாடாக மாறத் தயாராக உள்ளது. சட்டத்தின் ஆட்சி நமது தேசத்தில் வாழ்வதற்கு அடிப்படையானது மற்றும் நிலையான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது; இது நமது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இயற்றும் ஒவ்வொரு சட்டத்தையும் அறிவுறுத்துகிறது. இதை ஒவ்வொரு சிந்தனைமிக்க அரசாங்கக் கொள்கையிலும், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய நமது நீதித்துறையின் ஒவ்வொரு புத்திசாலித்தனமான முடிவிலும் காணலாம்.


எனவே அரசியலமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை வழிநடத்தும் நிர்வாகத்திற்கான ஒரு பொறுப்பான கட்டமைப்பாகும். அரசியலமைப்பு மதிப்புகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற புனிதமான கடமையை அரசின் அனைத்து நிர்வாக பிரிவுகளும்  விதிக்கிறது. மக்களின் நலன்கள் மற்றும் தேவைகளுக்கு உணர்திறன் கொண்டதாக இருக்க சக்தியை அரசியலமைப்பு நமக்கு வழங்குகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, நான் ஒரு புனித ஆவணமாக மதிக்கும் நமது நாட்டு மக்களுடன் சேர்ந்து மதிக்கிறேன். அரசியலின் குறுகிய பார்வையில் இருந்து மட்டும் நமது அரசியலமைப்பு பார்க்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டம், சாதி, மதம், பாலினம், பிராந்தியம் அல்லது மொழி வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. நாம் தொடர்ந்து நீதியான, சமத்துவமான, முற்போக்கான மற்றும் ஒரு வளர்ந்த நாடக மாற முயற்சித்து வருவதால், இந்த நாளில், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது நிலைநிறுத்திய மதிப்புகளைப் பற்றிச் சிந்திப்பதும், அதன் முக்கியக் கொள்கைகளை இன்னும் அதிக வீரியத்துடன் நிலைநிறுத்துவதற்கு நம்மை அர்ப்பணிப்பதன்மூலம் அதன் வடிவமைப்பாளர்களின் முயற்சிகளை மதிக்க வேண்டியதும் கட்டாயமாகிறது.


எழுத்தாளர், மக்களவை சபாநாயகர்


Original Article: On the journey to Viksit Bharat, our ideal guide is the Constitution.



Share:

விதை வரைவு மசோதா எதைக் குறிக்கிறது? -ஏ.எம். ஜிகேஷ்

விதை தொழில் 1966-ஆம் ஆண்டின் விதைச் சட்டத்தில் ஏன் சீர்திருத்தம் கோரி வருகிறது? இந்த மசோதாவின்கீழ் விதிகளை மீறுபவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனைகள் என்ன? புதிய வரைவு மசோதா குறித்து விவசாயிகள் குழுக்கள் ஏன் கவலை கொள்கின்றனர்? மத்திய மற்றும் மாநில விதை குழுக்களின் பங்குகள் என்னவாக இருக்கும்?


மத்திய வேளாண் அமைச்சகம் நவம்பர் மாதம்  12-ஆம் தேதி  வரைவு விதை மசோதாவை (Seeds Bill) வெளியிட்டது. மேலும், இது குறித்து டிசம்பர் மாதம்  11 வரை பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விதை மசோதா, வேளாண் தொழிலாளர்களுக்கு விற்கப்படும் மற்றும் வழங்கப்படும் விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்கான ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இது "வணிகம் செய்வதை எளிதாக்குதல்" மற்றும் இணக்கச் சுமையைக் குறைத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் கடுமையான விதிமீறல்களைத் தண்டிக்க வலுவான விதிகளைப் பேணுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. 1966-ஆம் ஆண்டின் விதைச் சட்டம் (Seeds Act) மற்றும் 1983-ஆம் ஆண்டின் விதை (கட்டுப்பாடு) சட்டம் ஆணை ஆகியவற்றைத் திருத்துவதற்கான அதன் நோக்கம் குறித்து அரசு வெளிப்படையாக உள்ளது.


வரலாறு என்னவாக இருந்துள்ளது?


மத்திய வேளாண்மை அமைச்சகத்தின்படி, 2023-24-ஆம் ஆண்டில், பல்வேறு பயிர்களுக்கான மொத்த விதைத் தேவை 462.31 லட்சம் குவிண்டாலாக இருந்தது. அதே சமயம், 508.60 லட்சம் குவிண்டால் விதைகள் கிடைத்தன. இதன் காரணமாக 46.29 லட்சம் குவிண்டால் விதைகள் உபரியாக இருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் வர்த்தக மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், 1966-ஆம் ஆண்டின் சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று விதைக் கழகத்தின் தலைவர் அஜய் ராணா விரும்புகிறார். இந்தியாவின் விதைச் சட்டங்களை நவீனமயமாக்குவதற்கு வரைவு வெளியிடப்பட்டது ஒரு சரியான கால நடவடிக்கை என்றும் அவர் கூறினார். ஆனால், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) என்ற விவசாயிகள் குழு, "விவசாயிகளுக்கு எதிரான" எந்தவொரு மாற்றத்தையும் தொடர்ந்து எதிர்ப்போம் என்று கூறியுள்ளது.


புதிய விதிகள் என்னென்ன?


தரமான விதைகளை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல் ஆகிய துறைகளில் ஒழுங்குமுறை வழிமுறையை இந்த மசோதா வழங்குகிறது. ஒரு விவசாயி தனது பண்ணை விதைகளை வர்த்தகப் பெயரின் (brand name) கீழ் விற்கும்போது தவிர, அவற்றை வளர்க்கவோ, விதைக்கவோ, மீண்டும் விதைக்கவோ, சேமிக்கவோ, பயன்படுத்தவோ, பரிமாறிக்கொள்ளவோ, பகிரவோ அல்லது விற்கவோ உள்ள வேளாண் தொழிலாளர்களின் உரிமையை இந்த மசோதா கட்டுப்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. இந்த மசோதா வேளாண் தொழிலாளர், வியாபாரி, விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தியாளர் ஆகியோரை விதை உற்பத்தி, விநியோகம், வர்த்தகம் மற்றும் பயன்பாட்டைக் கையாளும் தனித்தனி அமைப்புகளாக வரையறுக்கிறது. மேலும், 27 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய விதைக் குழு மற்றும் 15 உறுப்பினர்களைக் கொண்ட மாநில விதைக் குழுவை நிறுவுவதற்கும் இது வழிவகை செய்கிறது. மத்திய விதைக் குழுவானது  முளைப்புத்திறன் (germination), மரபணு (genetic) மற்றும் உருவத் தூய்மை (physical purity), பண்புகள் (traits), விதை ஆரோக்கியம் (seed health) மற்றும் கூடுதல் விதை தரங்களுக்கான குறைந்தபட்ச வரம்புகளை ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்கலாம். மாநில விதை குழுவானது விதை உற்பத்தியாளர்கள், விதை பதப்படுத்தும் அலகுகள் (seed processing units), விதை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நாற்றங்கால்கள் (plant nurseries) ஆகியவற்றின் பதிவு குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


மசோதாவின்படி, முன்மொழியப்பட்ட சட்டத்தில் உள்ள விதிகளின் அடிப்படையில், அனைத்து விதை பதப்படுத்தும் மையங்களும் மாநில அரசுகளிடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், பல மாநிலங்களில் இயங்கும் நிறுவனங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், ஒன்றிய அரசு, தகுதி அடிப்படையிலான மற்றும் வெளிப்படையான மத்திய அங்கீகார அமைப்பை (Central Accreditation System) நிறுவலாம் என்று இந்த மசோதா கூறுகிறது.


மத்திய விதைக் குழுவின்கீழ் விதை வகைகளுக்கான தேசியப் பதிவேட்டைப் பராமரிப்பதற்காக ஒரு பதிவாளர் அலுவலகத்தை உருவாக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது. எந்தவொரு வகை அல்லது இரகத்தின் பயிர்செய்கை மற்றும் பயன்பாட்டிற்கான மதிப்பை மதிப்பிடுவதற்கான களச்சோதனைகளை நடத்துவதற்கான நடைமுறையும் இந்த வரைவு மசோதாவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.


இந்த மசோதா, எந்த வகையான விதைகளையும் பகுப்பாய்வு செய்ய, மத்திய மற்றும் மாநில விதை பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க வழிவகை செய்கிறது. இது, பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் (Bharatiya Nagarik Suraksha Sanhita) கீழ் விதை தேடுதல் மற்றும் பறிமுதல் செய்யக்கூடிய ஆய்வாளர்களின் பங்கு மற்றும் அதிகாரங்களையும் வரையறுக்கிறது. இந்த மசோதா, சிறிய மற்றும் பெரிய விதிமீறல்களுக்கான தண்டனைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்தத் தண்டனைகள் ₹50,000 முதல் ₹30 லட்சம் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைவரை விதிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


2019-ஆம் ஆண்டின் வரைவில் இருந்து என்னென்ன மாற்றங்கள்?


முக்கிய மாற்றங்களில் ஒன்று குற்றங்கள் மற்றும் தண்டனைகள் பிரிவில் உள்ளது. முந்தைய வரைவில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் குற்றங்கள் இடம்பெற்றிருந்தன, மேலும் அபராதம் ₹25,000 முதல் ₹5 லட்சம் வரையிலும், ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போதைய புதிய வரைவில், இந்தப் பிரிவில் கணிசமான மாற்றங்கள் உள்ளன.


வேளாண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, புதிய வரைவு இந்த விஷயத்தை தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைக்கிறது. தர நிர்ணயங்களைப் பொறுத்தவரை, தரநிலைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. புதிய மசோதா விதைகளின் இறக்குமதியை மிகவும் தாராளமாகப் பார்க்கிறது என்கின்றனர்.


விவசாயிகளின் கவலை என்ன?


ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (Samyukt Kisan Morcha) ஓர் அங்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கம் (All India Kisan Sabha), நிறுவனங்கள் விதைகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ய அனுமதிப்பதால், வேளாண் செலவுகளை இந்த மசோதா அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இந்த மசோதா, சிறு வேளாண் தொழிலாளர்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து, விதைகளின் கட்டுப்பாட்டை ஒரு சில பெரிய நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கான ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் திட்டத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் நம்புகிறார்கள்.


புதிய வரைவு, 2001-ஆம் ஆண்டின் பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் வேளாண் தொழிலாளர்கள் உரிமைகள் சட்டத்தின் கீழ் (Protection of Plant Varieties and Farmers’ Rights Act of 2001) இருக்கும் சட்டப் பாதுகாப்புகளுக்கும், அத்துடன் பல்லுயிர்த் தன்மை குறித்த இந்தியாவின் சர்வதேச கடமைகளுக்கும் முரண்படாமல், மாறாக ஆதரவாக இருக்க வேண்டும் என்கின்றனர். இந்த வரைவு விதை மசோதா (Draft Seeds Bill), மிகவும் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிறுவனங்களை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குகிறது. இது விவசாயிகளின் பாதுகாப்பைக் குறைத்து, பல்லுயிர்த் தன்மை மற்றும் விவசாயிகளின் உரிமைகள் குறித்த இந்தியாவின் சட்டங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் சங்கம் (All India Kisan Sabha) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Original Article: What does the draft Seeds Bill entail? 


Share:

இந்திய மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர்களின் கருணை அதிகாரம் எவ்வாறு வேறுபடுகிறது? -திலீப் பி சந்திரன்

இந்தியாவில், குடியரசுத் தலைவரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் ஓரளவுக்கு மட்டுமே ஆய்வு செய்ய முடியும். ஆனால், அமெரிக்காவில், மன்னிப்பு வழங்க அதிபருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் முறைமை இந்த ஜனாதிபதி கருணை அதிகாரங்கள் எவ்வளவு பரந்ததாக அல்லது குறைவாக வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றன என்பதை எவ்வாறு வடிவமைக்கின்றன?


கேஹர் சிங் vs இந்திய யூனியன் வழக்கில் (1988), உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்பின் 72-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம் என்பது ஒரு நீதித்துறை சார்ந்த விஷயம் என்றும், அதை நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய முடியும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அதிகாரம் வரையறுக்கப்பட்ட நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அதிகாரத்தையும் அது அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரத்துடன் எவ்வாறு ஒப்பிடுகிறது என்பதையும் ஆராய்வோம்.


இந்தியாவில் குடியரசுத் தலைவரின் மன்னிப்பு அதிகாரம்


இந்தியாவில், மன்னிக்கும் அதிகாரம் காலனித்துவ காலத்தில் இருந்து வந்தது. அப்போது பிரிட்டிஷ் மன்னருக்கோ அல்லது ராணிக்கோ முழுமையான மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இருந்தது. இது மன்னரின் கருணை சிறப்புரிமை (royal prerogative of mercy) என்று அழைக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் வரம்பற்றதாக இருந்தாலும், இப்போது அரசியலமைப்பு விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


1. மன்னர் இப்போது அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டியுள்ளது.


2. அதிகாரமானது வரையறுக்கப்பட்ட நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது.


இருப்பினும், காலனித்துவ ஆட்சி காலத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலுக்கு பிரிட்டிஷ் மன்னருக்கு இருந்தது போன்ற அதிகாரங்கள் இருந்தன. அவரால் தண்டனைகளை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ முடியும். இந்த அதிகாரங்கள் இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ன் பிரிவு 295(1)-ல் குறிப்பிடப்பட்டிருந்தன.


இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், சில சமயம், நீதிமன்றத்தின் தவறுகளைச் சரிசெய்யும் வகையில், குடியரசுத் தலைவருக்கு மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கினர். இந்த அதிகாரம் நீதிமன்றங்களிடமிருந்து தன்னிச்சையாகச் செயல்படுகிறது. இது அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மன்னிக்கும் அதிகாரத்துடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?


இந்தியா மற்றும் அமெரிக்காவில் அரசியலமைப்பு விதிகள்


இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அமெரிக்க அரசியலமைப்பும் அந்தந்த குடியரசுத் தலைவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் கருணை அதிகாரத்தை வழங்குகின்றன.


இந்தியாவின் நிலை


இந்தியாவில், சட்டப்பிரிவு 72-ஆனது, மத்திய சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டவர்கள், இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை மன்னிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.


சட்டப்பிரிவு 72(1) ஆனது, குற்றத்திற்காக எவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை மன்னிக்கவோ, குறைக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் பொருள், குடியரசுத் தலைவர் பின்வருவனவற்றைச் செய்யலாம்:


மன்னிப்பு - தண்டனை மற்றும் குற்றவாளி என்ற நிலையையும் நீக்குவது.


குறைத்தல் - ஒரு தண்டனையை அதற்குக் குறைவான மற்றொரு தண்டனையாக மாற்றுவது.


தண்டனைக் காலக்குறைவு - ஒரு தண்டனையின் கால அளவைக் குறைப்பது..

தண்டனைத் தற்காலிக குறைப்பு - உடல் ஊனம் போன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைப்பது.


தண்டனை நிறைவேற்றத் தாமதம் - தண்டனையை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்துவது.


மன்னிப்பு அளிக்கும்போது, குடியரசுத் தலைவர் ஒரு நீதிமன்றத்தைப் போலச் செயல்படுவதில்லை, மேலும் வாய்வழி விசாரணை எதுவும் கிடையாது. மன்னிப்பு ஏன் வழங்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது என்று குடியரசுத் தலைவர் விளக்க வேண்டியதில்லை, இருப்பினும் நடைமுறைச் சிக்கல்களுக்காக இந்த செயல்முறையை நீதிமன்றங்களால் ஆய்வு செய்ய முடியும் என்று கூறுகின்றனர். 


உதாரணமாக, 2006-ஆம் ஆண்டில் நடந்த எபுரு சுதாகர் வழக்கில் உச்சநீதிமன்றம், மன்னிக்கும் அதிகாரம் தன்னிச்சையாக இருந்தால், தவறான எண்ணத்துடன் செய்யப்பட்டிருந்தால், அல்லது சட்டத்திற்க்குப் பொருத்தமற்ற வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.


அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், ஜனாதிபதிக்கு மாநில குற்றங்களுக்கோ அல்லது பதவி நீக்க வழக்குகளுக்கோ அல்லாமல், ஒன்றியக் குற்றங்களுக்கு (federal crimes) மட்டுமே மன்னிப்பு வழங்க அனுமதிக்கிறது. அரசியலமைப்பின் இரண்டாம் பிரிவில், பிரிவு 2, ஜனாதிபதிக்கு “ஐக்கிய நாடுகளுக்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்க வழக்குகளைத் தவிர, மன்னிப்புகளையும் விடுவிப்புகளையும்  வழங்குவதற்கான அதிகாரம் உண்டு” என்றும் கூறுகிறது.


இதன் பொருள், அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம் மத்திய அதிகார வரம்பிற்கு உட்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் மாநில ஆளுநர்களுக்கு அந்தந்த மாநிலச் சட்டங்களின் கீழ் மட்டுமே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய குடியரசுத் தலைவரைப் போன்று, அமெரிக்க ஜனாதிபதிக்கு மாநிலச் சட்டத்தின்கீழ் உள்ள குற்றங்கள்மீது அதிகாரம் இல்லை என்கின்றனர். 



இருப்பினும், அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் பிரிவில் (Article II) உள்ள பரந்த மொழியானது, முன்கூட்டியே மன்னிப்பு வழங்குவதற்கு (pre-emptive pardons) வழிவகுக்கும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், ஒரு நபர் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்படுவதற்கு, தண்டிக்கப்படுவதற்கு, அல்லது விசாரிக்கப்படுவதற்கு முன்பேகூட அவருக்கு மன்னிப்பு வழங்க முடியும். உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு சற்று முன்பு, அவருக்கு அடுத்து வரும் அரசாங்கத்தின் மூலம் ஏற்படக்கூடிய பழிவாங்கலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க சிலருக்கு முன்கூட்டியே மன்னிப்பு வழங்கினார். இதற்கு மாறாக, இந்தியாவில் இத்தகைய முன்கூட்டிய மன்னிப்புக்கு அரசியலமைப்பு ரீதியான அடிப்படை இல்லை என்று தெரிவிக்கின்றனர். 


தன்னிச்சையான அதிகாரங்கள்


அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இறுதியானது. ஒருமுறை மன்னிப்பு வழங்கப்பட்டால், அதை காங்கிரஸ் சபையால் மறுபரிசீலனை செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்கின்றனர். மேலும் வழக்கமாக, எந்தவொரு பிற்கால ஜனாதிபதியாலும் அதை ரத்து செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. 


அரசியலமைப்பு வரம்புகள் என்னவென்றால், ஜனாதிபதி பதவி நீக்க வழக்குகளிலோ அல்லது மாநிலச் சட்டக் குற்றங்களுக்கோ மன்னிக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது. இதற்கு மாறாக, இந்தியக் குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்கும் போது தனிப்பட்ட விருப்பம் மிகக் குறைவாகவே உள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டும். இது மரு ராம் (1980) மற்றும் தனஞ்சோய் சட்டர்ஜி (1994) வழக்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கருணை மனுக்கள் குறித்து முடிவெடுப்பதில் நியாயமற்ற முறையில் அமைச்சரவை தாமதம் செய்யும்பட்சத்தில், குடியரசுத் தலைவர் தமது சொந்த விருப்புரிமையைப் பயன்படுத்தலாம் என்றும் வரையறுக்கப்படுகிறது. 


அமைச்சகத்தால் ஏற்படும் நியாயமற்ற தாமதங்கள் சில சமயங்களில் நீதிமன்றங்கள் தலையிட வழிவகுத்துள்ளன. உதாரணமாக, 2022-ஆம் ஆண்டு ஏ.ஜி. பேரறிவாளன் வழக்கில், தமிழக ஆளுநர் கருணை மனு முடிவை தாமதப்படுத்தியதால் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்திய குடியரசுத் தலைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிபருக்கும் தண்டனை குறைப்பு அதிகாரத்தில் வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் இந்தியாவில் பாராளுமன்ற ஆட்சிமுறை (Parliamentary system) உள்ளது, அதேசமயம் அமெரிக்காவில் அதிபர் ஆட்சிமுறை (Presidential system) உள்ளது. இந்த இரு நாடுகளிலும் இந்த அதிகாரங்களை மறுபரிசீலனை செய்வதில் நீதிமன்றங்களின் பங்கும் வேறுபடுகிறது.


நீதித்துறை தலையீடு


இந்தியாவில், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என்று கேஹர் சிங் vs இந்திய யூனியன் (1988) வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியலமைப்பின் 72-வது பிரிவின்கீழ் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை நீதித்துறை மறுஆய்வு மூலம் பரிசோதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 


இருப்பினும், நடைமுறை நியாயம் பூர்த்தி செய்யப்படாத இடங்களில் தலையிட அதிகாரங்கள் இருந்தபோதிலும், நீதிமன்றங்கள், வழக்குகளின் தகுதிகளை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதையும் அது தெளிவுபடுத்தியது. மரு ராம் vs இந்திய ஒன்றியம் (1980) மன்னிப்பு விஷயங்களில் நீதிமன்றத் தலையீட்டுக்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளது. 

அமெரிக்க அதிபரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றங்கள் மறுஆய்வு செய்ய முடியாது. அமெரிக்க அதிபர்கள் மன்னிப்பு வழங்க முழு அரசியலமைப்பு அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். மேலும், அதிகாரப் பிரிவினை நீதித்துறையின் தலையீட்டைத் தடுக்கிறது. இருப்பினும், இந்தியாவில், பொறுப்புடைமையை உறுதிப்படுத்த, மன்னிப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் இன்னும் மேற்பார்வையிடுகின்றன.


இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மத்திய சட்டத்திற்கு அப்பாற்பட்ட பரந்த மன்னிப்பு வழங்கும் அதிகாரங்கள் உள்ளன. ஆளுநர்களுக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 161-ன் கீழ் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் உள்ளது. இது சில சமயங்களில் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துடன் ஒன்றுடன் ஒன்று சேரும். இருப்பினும், குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனுவை ஏற்கெனவே நிராகரித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


ஆளுநர்களின் அதிகாரம் தனித்துவமானது மற்றும் சுதந்திரமானது, மேலும் குடியரசுத் தலைவரின் மன்னிக்கும் அதிகாரம் ஆளுநரின் அதிகாரத்தைவிட மேலானது அல்ல. எனினும், ஆளுநர்களின் அதிகாரத்திற்கு இரண்டு வரம்புகள் உள்ளன. அவை: 


1.  ஒரு ஆளுநர் மரண தண்டனைகளை மன்னிக்க முடியாது.


2. நீதிமன்றத் தீர்ப்பாயங்களால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஒரு ஆளுநருக்கு மன்னிக்கும் அதிகாரம் இல்லை.


3. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஒரு கூட்டாட்சிக்கும் - மாநில அரசுக்கும் இடையே தெளிவான பிரிவு உள்ளது.


மேலும், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தலைவர்கள் மன்னிப்பு வழங்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துவது ஒவ்வொரு அமைப்பின் அரசியல் தன்மையைக் காட்டுகிறது. அமெரிக்காவில், அதிபரின் கருணை பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் மன்னிக்கும் அதிகாரம் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது, மேலும் பொதுவாக பெரிய சர்ச்சைகள் இன்றி இருக்கும். அவர்களின் முடிவுகள் வரையறுக்கப்பட்ட நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை. வரையறுக்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களும் மற்றும் தெளிவான அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பும், மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன.


சுருக்கமாக, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மன்னிப்பு அதிகாரம் செயல்படும் விதத்தில் உள்ள வேறுபாடுகள், அமெரிக்காவில் உள்ள அதிபர் முறை மற்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற முறை போன்ற வெவ்வேறு அரசாங்க அமைப்புகளிலிருந்து வருகின்றன.


Original Article: How the pardoning power of the Indian and US Presidents differs

Share: