வேலைவாய்ப்பு, தொழில் உறவுகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை வணிக மற்றும் முதலீட்டு சமூகம் ஒரு முக்கிய சீர்திருத்தமாகப் பார்க்கிறது. நாடாளுமன்றம் இந்தச் சட்டங்களை 2019-2020-ஆம் ஆண்டில் நிறைவேற்றினாலும், பல்வேறு காரணங்களால் இந்தச் சட்ட அமலாக்கம் தாமதமானது என்கின்றனர். இந்தச் சட்டங்கள் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்து, நிறுவனங்களின் வருடாந்திர இணக்கச் சுமையை வெகுவாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் தேவையான விதிகளை வகுக்கவும், ஏற்றுக்கொள்ளவும் ஒன்றிய அரசு உதவும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்கனவே தங்கள் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளன. இந்தியா, அதன் பழைய தொழிலாளர் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதாக, தாராளமய சந்தையின் ஆதரவாளர்கள் (Free market advocates) நீண்ட காலமாகக் கருதுகின்றனர். புதிய சட்டங்கள் முதலாளி-தொழிலாளர் உறவுகள், சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஊதியக் கட்டமைப்புகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 மில்லியன் மக்கள் பணிபுரியும் வயதை அடைவதால், வளர்ந்துவரும் தனது இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இந்தியா ஏராளமான வேலைகளை உருவாக்க வேண்டும். இந்தப் போக்கு பல ஆண்டுகளுக்குப் பயனளிக்கும் என்று தெரிவிக்கின்றனர். இந்த உயர்ந்துவரும் பணியாளர்களை ஈர்க்க, 2030-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 78.5 லட்சம் வேளாண் அல்லாத வேலை வாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்று 2023-24 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு தெரிவிக்கின்றது.
தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்படுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்ட போதிலும், தொழிற்சங்கங்களால் எழுப்பப்பட்ட கவலைகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படவில்லை. தொழிலாளர் பிரதிநிதிகள், இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையத்தின் (2002-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது) தொழிலாளர்களுக்கு ஆதரவான பரிந்துரைகளை அரசாங்கம் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக, முதலாளிகளுக்குச் சாதகமான அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சட்டங்களின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர். அந்தப் பிரச்சினைகள் இப்போது காலாவதியாகிவிட்டன. ஆனால், வேலையின் தன்மை அதிவேகமாக மாற்றமடைந்து வருகிறது. போர்கள், வர்த்தகத் தடைகள் மற்றும் காலநிலைப் பிரச்சினைகளால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை மற்றும் தொழில்துறை உற்பத்தித்திறன் இரண்டையும் மேம்படுத்துவது அவசியமாகும். மேலும், தொழிலாளி-முதலாளி இடையிலான ஆரோக்கியமான உறவை உறுதி செய்வது இதற்கு முக்கியமாகும். கிக் பணி (ஊதியத்திற்காகச் செய்யப்படும் எந்தவொரு குறுகிய கால முறைசாரா வேலை) மற்றும் இயங்குதள வேலைகள் (ஒரு டிஜிட்டல் செயலி அல்லது இணையதளம் (உதாரணமாக, uber அல்லது swiggy போன்றவை) மூலம் ஏற்பாடு செய்யப்படும் வேலை) வேலைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை வேலை, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு பற்றிய வழக்கமான வரையறைகளை சீர்குலைத்து வரும் நிலையில், தொழிலாளர் துறையை புத்திசாலித்தனமாகச் சீர்திருத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். 1940-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 46 முறை கூடிய இந்தியத் தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference (ILC)) அதன் பிறகு நடத்தப்படவில்லை. விரிவான முத்தரப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு மட்டுமே தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். எனவே, இந்தத் தொழிலாளர் சட்டங்களைச் சீராக அமல்படுத்துவதை உறுதிசெய்ய, இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 47-வது அமர்வை அரசாங்கம் நடத்துவது தற்போது அவசியமாகிறது. இந்தச் செயல்பாட்டில், முதலாளிகள் மற்றும் ஊழியர்களுடன் சேர்த்து மாநில அரசுகளும் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Original Article: Labour and honour: On the four Labour Codes, the path ahead.