950ஆம் ஆண்டு முதல், அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு வயது வந்தவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதன் மூலமும், நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும், பின்தங்கிய குழுக்களை ஆதரிப்பதன் மூலமும், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.
2015-ஆம் ஆண்டு, பி.ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்தநாளின்போது, நமது அரசியலமைப்புச் சட்டம் ஆதரிக்கும் மற்றும் நிலைநிறுத்த முயலும் நிர்வாகக் கொள்கைகளைக் கொண்டாடவும், அதன் பிரிவுகளில் உள்ள மதிப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகளை மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளவும், இந்திய அரசு நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக (Samvidhan Divas) அறிவித்தது.
1949ஆம் ஆண்டு இந்த நாளில் அரசியலமைப்புச் சட்டம் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாகவும், வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்புச் சபையின் அனைத்து உறுப்பினர்களான அம்பேத்கரின் பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாகவும் அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சபை டிசம்பர் 9, 1946 அன்று இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்கும் முக்கிய பணியைத் தொடங்கியது. மைய மண்டபத்தில் தீவிரமான ஆலோசனைகள் மற்றும் அற்புதமான விவாதங்களுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் நீடித்த ஏராளமான குழுக்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு, மிகவும் முற்போக்கானதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் கருதப்படும் ஒரு அரசியலமைப்பை, அந்தச் சபை நாட்டிற்கு வழங்கியது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மைய மண்டபத்திற்குள் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள், பிற ஜனநாயக நாடுகளிலிருந்துவரும் கருத்துக்களை வரவேற்கும் அளவுக்கு புத்திசாலிகளாகவும், அரசியலமைப்பை எழுதுவதில் பங்கேற்க விரும்பிய பல இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்கும் அளவுக்கும் சிறந்தவர்களாகவும் இருந்தனர். இவ்வாறு, அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. அதேபோல் லட்சக்கணக்கான குடிமக்களின் தொடர்ச்சியான பங்கேற்பாலும், அவர்களின் மனுக்கள், கடிதங்கள், குறிப்புகள், சட்டமன்றத்தில் உரையாற்றப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான வெளியீடுகள் மூலம், அவர்கள் தங்கள் சொந்தமாகக் கருதிய ஒரு பயிற்சியில் பங்கேற்க முயன்றனர். இதன்மூலம் ஏற்படும் விளைவுகள் தாங்கள் விரும்பிய திசையில் இருக்க வேண்டும் வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.
நமது நவீன அரசியலமைப்பு வரலாற்றின் ஆரம்பக்கட்டத்திலியே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு சமூக-பொருளாதார சூழ்நிலைகளிலும் வாழ்ந்த நமது நாட்டின் மக்கள், ஒரு நவீன ஜனநாயக தேசத்தின் முக்கிய வழிகாட்டும் ஆவணமாக மாறுவதை வடிவமைப்பதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தினர். அதன் உருவாக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த பாராட்டு, நமது அரசியலமைப்பின் நிலைத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம். காலனித்துவத்திற்குப் பிந்தைய உலகில் வளர்ந்துவரும் தேசமாக எதிர்கொள்ள வேண்டியிருந்த ஏற்ற இறக்கங்களுக்கு இடையே, அரசியலமைப்பு நிலைத்திருப்பது மட்டுமல்லாமல், காலப்போக்கில் தொடர்ந்து வளர்ந்து வரும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
நமது அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரப் போராட்டத்தின் உணர்வையும், நமது நாட்டின் வரலாறு மற்றும் நெறிமுறைகள் பற்றிய நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களிடையே உள்ள ஆழமான புரிதலையும் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மற்ற ஜனநாயக நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், இந்தியாவிற்கு மிகவும் தேவையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதையும் காட்டுகிறது.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உலகளாவிய கொள்கைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்தக் கொள்கைகள் இந்த ஆவணத்தின் முழு உரையிலும் உள்ளது. உலகின் மிக விரிவான எழுதப்பட்ட அரசியலமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நமது அரசியலமைப்பு, முதலில் 395 பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவை 22 பகுதிகளாகவும் எட்டு அட்டவணைகளாகவும் பிரிக்கப்பட்டன; இது இப்போது 472 பிரிவுகள், 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகளாக விரிவடைந்துள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் முழுமையான மற்றும் நியாயமான நீதியை உறுதியளிப்பதால் நமது அரசியலமைப்பு மதிக்கப்படுகிறது. இது நமது நிலத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு கொண்டாடியுள்ளது, அனைவருக்கும் கண்ணியத்தை வழங்குகிறது, மேலும் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சொந்த கனவுகளை நனவாக்க தன்னம்பிக்கையை அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக நமது மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் எதிர்கொண்ட குறைபாடுகளை அரசியலமைப்பு அங்கீகரித்து, வரலாற்று அநீதிகளை நிவர்த்திசெய்ய சிறப்பு பிரிவுகளை உருவாக்கியுள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் பல பழங்குடி சமூகங்களுக்கு சிறப்பு சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் அவர்கள் தங்கள்
தனித்துவமான கலாச்சாரங்களையும் சமூக அமைப்புகளையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறார்கள். தேவைப்படும்போது அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யவும், அதன் முக்கிய மதிப்புகளை இழக்காமல் செய்யவும் இது அனுமதிக்கிறது. நமது அரசியலமைப்பில் செய்யப்பட்ட 106 திருத்தங்கள், நமது தேசம் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்கும் திறனுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
1950ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், வயது வந்த அனைவருக்கும், அவர்களின் பின்னணி எதுவாக இருந்தாலும், வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. நமது அரசியலமைப்பு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஆதரிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குழுக்களையும் உள்ளடக்க உதவுகிறது. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தை ஊக்குவிக்கிறது. மக்களை ஒரே தேசமாக ஒன்றிணைக்க மொழிகள், கலாச்சார மற்றும் மதப் பாதுகாப்புகளை வழங்குவது சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளை சேர்ந்த மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய நாடாளுமன்றம் கடினமாக உழைத்து வருகிறது. இது சமூக பொறியியலின் (social engineering) ஒரு இயக்கியாகவும், சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டத்தை இயற்றியும் வருகிறது. எனவே, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு தற்சார்பு (atmanirbhar) மற்றும் தன்னம்பிக்கை கொண்ட வளர்ந்த நாடக முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வளர்ந்து வருகிறது. மேலும், எதிர்காலத்தில் உலகின் 3வது பெரிய நாடாக மாறத் தயாராக உள்ளது. சட்டத்தின் ஆட்சி நமது தேசத்தில் வாழ்வதற்கு அடிப்படையானது மற்றும் நிலையான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது; இது நமது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இயற்றும் ஒவ்வொரு சட்டத்தையும் அறிவுறுத்துகிறது. இதை ஒவ்வொரு சிந்தனைமிக்க அரசாங்கக் கொள்கையிலும், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய நமது நீதித்துறையின் ஒவ்வொரு புத்திசாலித்தனமான முடிவிலும் காணலாம்.
எனவே அரசியலமைப்பு என்பது வெறும் சட்ட ஆவணம் மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை வழிநடத்தும் நிர்வாகத்திற்கான ஒரு பொறுப்பான கட்டமைப்பாகும். அரசியலமைப்பு மதிப்புகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற புனிதமான கடமையை அரசின் அனைத்து நிர்வாக பிரிவுகளும் விதிக்கிறது. மக்களின் நலன்கள் மற்றும் தேவைகளுக்கு உணர்திறன் கொண்டதாக இருக்க சக்தியை அரசியலமைப்பு நமக்கு வழங்குகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, நான் ஒரு புனித ஆவணமாக மதிக்கும் நமது நாட்டு மக்களுடன் சேர்ந்து மதிக்கிறேன். அரசியலின் குறுகிய பார்வையில் இருந்து மட்டும் நமது அரசியலமைப்பு பார்க்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டம், சாதி, மதம், பாலினம், பிராந்தியம் அல்லது மொழி வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. நாம் தொடர்ந்து நீதியான, சமத்துவமான, முற்போக்கான மற்றும் ஒரு வளர்ந்த நாடக மாற முயற்சித்து வருவதால், இந்த நாளில், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது நிலைநிறுத்திய மதிப்புகளைப் பற்றிச் சிந்திப்பதும், அதன் முக்கியக் கொள்கைகளை இன்னும் அதிக வீரியத்துடன் நிலைநிறுத்துவதற்கு நம்மை அர்ப்பணிப்பதன்மூலம் அதன் வடிவமைப்பாளர்களின் முயற்சிகளை மதிக்க வேண்டியதும் கட்டாயமாகிறது.
எழுத்தாளர், மக்களவை சபாநாயகர்
Original Article: On the journey to Viksit Bharat, our ideal guide is the Constitution.