ஆசியாவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியை இந்தியா முன்னெடுக்க வேண்டும். அந்த அமைப்பு மூன்று முக்கிய இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.
சர்வதேச எரிசக்தி முகமையின் (International Energy Agency (IEA)) தலைவர் பாத்திஹ் பிரோல், உலகம் தற்போது இதுவரை கண்டிராத மிகப்பெரிய எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக சமீபத்தில் எச்சரித்துள்ளார். இது யோம் கிப்பூர் போர், ஈரானிய புரட்சி மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் ஆகியவற்றின் கூட்டு விளைவுகளைவிட மோசமானது என்று குறிப்பிட்டுள்ளார். 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகுதான் சர்வதேச எரிசக்தி முகமை உருவாக்கப்பட்டது. அந்தப் போர், எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தியதுடன் உலகளாவிய பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடியாக, எண்ணெய் விநியோகத் தடைகளையும், அரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (Organisation of Arab Petroleum Exporting Countries (OAPEC)) ஆதிக்கத்தையும் எதிர்கொள்வதற்கான ஒரு அமைப்பை உருவாக்க, 1974-ஆம் ஆண்டில் ஹென்றி கிஸிஞ்சர் மேற்கத்திய நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இதன் விளைவாகவே சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உருவானதாகக் கூறப்படுகிறது.
ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான அமைப்பை இந்தியா உருவாக்க வேண்டும். இந்த அமைப்பு மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்: முதலாவதாக, ஆசிய கடல்வழிப் பாதை வழியாக உறுப்பு நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்கும் உரிமையைப் பாதுகாப்பது; இரண்டாவதாக, உறுப்பு நாடுகளின் கூட்டு கொள்முதல் வலிமையைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கு ஏற்றுமதியாளர்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் குறைப்பது; மூன்றாவதாக, உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட தொழில்நுட்ப, நிதி மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி பசுமை ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துவது. இந்த அமைப்பிற்கு, ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் Asian Energy Collaborative Compact (AECC)) என்று பெயரிடலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது, எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருக்கும் ஆசிய நாடுகளுக்கு இரண்டு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கியதுடன், கடல்வழிப் போக்குவரத்து நெரிசல் புள்ளிகளை மட்டுமே நம்பியிருப்பதிலுள்ள அபாயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஏறத்தாழ 1.3 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இந்த கடல்வழிப் பாதையில் சிக்கியுள்ளன. இதில் சுமார் 85% ஆசிய சந்தைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவை ஆகும். இதன் விளைவாக, பல ஆசிய நாடுகள் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாடு 'தேசிய எரிசக்தி அவசரநிலையை' பிரகடனப்படுத்தியுள்ளது, ஜப்பான் தனது படகு மற்றும் பேருந்து சேவைகளைக் குறைத்துள்ளது, மற்றும் இந்தியா வணிகரீதியான பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. சீனா தனது உள்நாட்டு பயன்பாட்டைக் குறைத்துள்ளது, இருப்பினும் ரஷ்யாவிலிருந்து வரும் விநியோகம் மற்றும் அதன் எண்ணெய் இருப்பு காரணமாக அந்நாட்டின் பாதிப்பு ஓரளவுக்குக் குறைந்துள்ளது.
இந்தக் கடல்வழிப் பாதை முடக்கம், மற்ற முக்கிய கடல்வழிப் பாதைகள் மூலமாகத் தங்களுக்கு எவ்வளவு ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மட்டுமின்றி, எரிசக்தி விநியோகங்கள் மலாக்கா ஜலசந்தி (Strait of Malacca) மற்றும் கிழக்கே உள்ள தைவான் ஜலசந்தி (Taiwan Strait) மற்றும் தென் சீனக் கடல் (South China Sea) வழியாகவும் செல்ல வேண்டியுள்ளது. சர்வதேச கடல் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையின்கீழ் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), சர்வதேச எல்லைக்குட்பட்ட இந்த நீர்வழிப் பாதைகளில் அனைத்துக் கப்பல்களுக்கும் "தடையற்ற மற்றும் அமைதியான முறையில் கடந்து செல்லும் உரிமை" உண்டு. ஈரானின் இந்த நடவடிக்கை, அந்த உரிமையை மீறியுள்ளதுடன், ஒரு முக்கியமான கவலையையும் எழுப்பியுள்ளது: மற்ற முக்கிய பாதைகளும் இதேபோல் முடக்கப்பட்டால் என்ன நடக்கும்? உதாரணமாக, கிழக்கு ஆசியாவின் கடல்வழி வர்த்தகத்தில் 60% பங்கைக் கொண்டுள்ள மலாக்கா ஜலசந்தி பாதிக்கப்பட்டால் அல்லது தைவான் ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடலில் போக்குவரத்து விதிமுறைகள் அல்லது சுங்கக் கட்டணங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க, நிலத்தின் வழியாகவோ அல்லது கடலுக்கு அடியிலோ குழாய்கள் அமைப்பது போன்ற மாற்று விநியோகப் பாதைகளை ஆராய வேண்டிய அவசியத்தை இந்தச் சூழல் ஏற்படுத்துகிறது.
அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பெரும்பாலான ஆசிய நாடுகள் இத்தகைய பொதுவான கவலைகளைக் கொண்டுள்ளன. எனவே, இவை குறித்து அனைவரும் ஒன்றிணைந்து விவாதிக்க வேண்டும். ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் (AECC) இத்தகைய விவாதங்களை நடத்துவதற்கான ஒரு சிறந்த தளமாகச் செயல்பட முடியும் என்கின்றனர்.
முன்பு, ஆசிய நாடுகள் கச்சா எண்ணெய்க்கு வழங்கும் கூடுதல் விலை ‘North Sea benchmark’ எனப்படும் உலகளாவிய விலையைவிட ஆசிய நாடுகள் கூடுதலாகச் செலுத்தும் தொகை) ஒரு பேரலுக்கு சுமார் 3 முதல் 6 டாலர் வரை இருந்தது. இது "ஆசிய பிரீமியம்" (Asian Premium) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு, இந்த விலை ஒரு பேரலுக்கு 60 டாலராக உயர்ந்தது. தற்போது இந்த விலை சற்று குறைந்திருந்தாலும், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இந்த விலையேற்றம் குறைந்த விநியோகம் மற்றும் நிலையான தேவை காரணமாக மட்டுமே ஏற்பட்டதா? அல்லது ஆசிய நாடுகள் தங்களின் கூட்டுப் பேச்சுவார்த்தை சக்தியை சரியாகப் பயன்படுத்தாததால் ஏற்பட்டதா?
ஜனவரி மாதம் 1974-ஆம் ஆண்டில், ஹென்றி கிசிஞ்சர் என்பவர் அரபு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிற்கு (OAPEC) எதிராகப் போராட மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்தார். அதேபோன்று, ஒரு ஒப்பீட்டளவிலான இலக்கை அடைய ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் (AECC) உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு நாடுகள் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்; அதே நேரத்தில், சிறந்த விநியோக நிபந்தனைகள், குறைந்த சரக்கு போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளுக்காக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தவும் உதவ வேண்டும். மேலும், விநியோகத் தடைகள், உள்கட்டமைப்பு சிக்கல்கள் மற்றும் புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் குறித்த உடனுக்குடனான தகவல்களை ஆசிய எரிசக்தி ஒத்துழைப்புக் கழகம் (AECC) வழங்க வேண்டும். தற்போது, இந்தப் பணியைச் சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)) செய்து வருகிறது, ஆனால் ஆசியாவுக்கு என்று ஒரு சிறப்பு முகமை தேவைப்படுகிறது. ஏனெனில், சர்வதேச எரிசக்தி முகமை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்போடு (Organization for Economic Co-operation and Development (OECD)) தொடர்பு கொண்டிருப்பதால் மேற்கத்திய நாடுகளுக்குச் சார்பாகச் செயல்படும் போக்கைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிலிருந்து (OPEC) வெளியேறியிருப்பது, வளைகுடா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளையும், உலகளாவிய எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மையையும் காட்டுகிறது. இது ஆசிய நாடுகள் பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை அதிகப்படுத்தியுள்ளது. பெரும்பாலான ஆசிய நாடுகள் ஏற்கனவே பசுமை ஆற்றல் திட்டங்களைக் கொண்டுள்ளன, சில நாடுகள் இதில் நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளன. இருப்பினும், எந்தவொரு நாடும் இதுவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தனது முதன்மை ஆற்றல் மூலமாக மாற்றவில்லை. எனவே, இந்த மாற்றத்தை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. இது முதலில் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும், ஆசிய நாடுகள் தங்களிடம் உள்ள தொழில்நுட்பம், நிதி, இயற்கை வளங்கள் மற்றும் திறமையான பணியாளர்கள் போன்ற பலத்தைப் பயன்படுத்தி, பசுமை ஆற்றல் மாற்றத்தில் பொதுவான இலக்குகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படலாம். சர்வதேச எரிசக்தி முகமை (IEA) நாடுகளைப் போலன்றி, ஆசிய நாடுகளிடையே பொதுவான அரசியல் அமைப்போ அல்லது கொள்கையோ இல்லாததால் இந்த யோசனை கடினமாகத் தோன்றலாம். இருப்பினும், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பொதுவான இலக்குகளை கொண்டுள்ளன. எனவே, ஒரு எரிசக்தி ஆராய்ச்சி அமைப்பாக, ஆசிய எரிசக்தி ஒத்துழைப்பு மையம் (AECC) உறுப்பு நாடுகள் எவ்வாறு தங்களின் பலத்தை ஒருங்கிணைத்து, அனைவருக்கும் பயனளிக்கும் பசுமை விளைவுகளை அடையலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
விக்ரம் எஸ் மேத்தா, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மைய (CSEP) ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் மற்றும் சிறந்த ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார்.
Original article : After the Hormuz disruption, Asia should build an energy security alliance