தற்போதைய செய்தி
அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) தனது ஆண்டு அறிக்கையின் படி, கடந்த 7 ஆண்டுகளில் தொழிலதிபர்கள் நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுத ஆலோசகர் சஞ்சய் பண்டாரி, மற்றும் தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான மறைந்த இக்பால் மிர்ச்சியின் மனைவி ஹஜ்ரா இக்பால் மேமன் உட்பட 21 பேரைத் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளாக (fugitive economic offenders (FEOs)) அறிவித்துள்ளது.
இருப்பினும், வைர வியாபாரி மெஹுல் சோக்சி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் மகாதேவ் செயலியின் விளம்பரதாரர்களான சௌரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோரைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் (Fugitive Economic Offenders Act (FEOA)) கீழ் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்கும் முடிவுகள் நீதிமன்றங்களில் இன்னும் பரிசீலனையில் உள்ளன என்று அந்த அறிக்கை கூறியது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒன்றிய முகமையின் வருடாந்திர அறிக்கையானது, இதுவரை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், 54 நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 21 பேர் 'வெளிநாட்டுத் தப்பியோடிய குற்றவாளிகள்' (FEOs) என அறிவிக்கப்பட்டு, ரூ. 2,178.34 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
இந்த 21 பேரில், ஒன்பது நபர்கள் 2025-26-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகளாக (FEOs) அறிவிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அறிக்கையின்படி, 2024-25 மற்றும் 2025-26 இரண்டு நிதியாண்டுகளில், பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்கீழ் அமலாக்க இயக்குநரகத்தின் செயல்திறன் கணிசமான சொத்து மீட்பையும், தப்பிச் சென்ற குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுகிறது. வழக்குகளைத் தவிர்க்க இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும் நபர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்க இயக்குநரகம் உறுதியாக செயல்படுகிறது என்பதைக் இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பண்டாரியை வழக்கை உதாரணமாகக் காட்டி, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்கீழ், 2019 டிசம்பர் 13 அன்று அளித்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் ஒரு சிறப்பு நீதிமன்றம் (PMLA) அவரை வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவித்ததாகக் குறிப்பிட்டது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆயுத வியாபாரியான பண்டாரி, 2016-ஆம் ஆண்டு வருமான வரி சோதனைகளுக்குப் பிறகு லண்டனுக்குத் தப்பிச் சென்றார். அவர் 2016-ல் நேபாளம் வழியாக இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். மேலும், 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
விசாரணையில், கணக்கில் காட்டப்படாத ரூ.655 கோடி வெளிநாட்டு வருமானமும், ரூ.100 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சொத்துக்களும் தெரியவந்துள்ளன. 2009 முதல் 2016 வரை, அவர் வெளிநாட்டு போலி நிறுவனக் கணக்குகளில் பெரும் தொகையை வைப்புச் செய்துள்ளார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை 2020-ல் அவருக்கு எதிராக ஒரு குற்றவியல் புகாரையும், 2023-ல் ஒரு துணை குற்றவியல் புகாரையும் தாக்கல் செய்தது. தற்போது அமலாக்கத்துறை, ரவுஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரியுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்தச் சூழலில், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தை (FEOA) மீண்டும் ஆராய்வோம்.
முக்கிய அம்சங்கள்:
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (fugitive economic offenders (FEOs)) என்பவர் யார்?
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி (FEO) என்பவர், இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு நீதிமன்றத்தால், அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றம் அல்லது குற்றங்கள் தொடர்பாக, ரூ. 100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த மதிப்புடைய வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறியவரோ அல்லது வெளிநாட்டில் இருந்துகொண்டே குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்தியாவுக்குத் திரும்ப மறுப்பவரோ தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளி ஆவார்.
அந்த அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள சில முக்கியக் குற்றங்கள் பின்வருமாறு: அவை (i) அரசு முத்திரைகள் அல்லது நாணயங்களை போலியாக அச்சிடுதல், (ii) காசோலைகள் வங்கியில் நிராகரிக்கப்படுதல் (Cheque dishonour), (iii) பணமோசடி (Money laundering) மற்றும் (iv) கடனாளிகளை ஏமாற்றும் வகையிலான பரிவர்த்தனைகள் ஆகும்.
விண்ணப்பிப்பதற்கான நடைமுறை என்ன?
2002-ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட இயக்குநர் அல்லது துணை இயக்குநர், அந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ஒருவரை தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்க கோரிக்கை வைக்கலாம்.
விண்ணப்பத்தில் என்ன இருக்கும்?
(அ) ஒரு தனிநபர் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளி என்று நம்புவதற்கான காரணங்கள், அவை,
(ஆ) அவர் இருக்கும் இடம் குறித்த ஏதேனும் தகவல்,
(இ) பறிமுதல் செய்யப்படும் குற்றச்செயல் மூலம் கிடைத்த வருமானம் என நம்பப்படும் சொத்துக்களின் பட்டியல்,
(ஈ) பறிமுதல் செய்யக் கோரப்படும் பினாமி சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு சொத்துக்களின் பட்டியல்,
(இ) இந்தச் சொத்துக்களில் ஆர்வம் கொண்ட நபர்களின் பட்டியல் ஆகும்.
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?
ஒரு விண்ணப்பத்தைப் பெற்றவுடன், சிறப்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆஜராகுமாறு ஓர் அறிவிப்பை அனுப்புகிறது.
ஒருவர் ஆஜராகத் தவறினால், அவர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்.
இயக்குநர் அல்லது துணை இயக்குநர், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு சொத்தையும் ஜப்தி செய்யலாம்.
சிறப்பு நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் விண்ணப்பம் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எந்தவொரு சொத்தையும் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யலாம். சிறப்பு நீதிமன்றத்தால் நீட்டிக்கப்படாவிட்டால், இந்தப் பறிமுதல் 180 நாட்களுக்குத் தொடரும்.
விண்ணப்பத்தை விசாரித்த பிறகு, சிறப்பு நீதிமன்றம் ஒரு தனிநபரைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கலாம்.
எது போன்ற சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம்?
(அ) குற்றச்செயல் மூலம் கிடைத்த சொத்துக்கள்,
(ஆ) இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள பினாமி சொத்துக்கள், மற்றும்
(இ) இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள வேறு ஏதேனும் ஒரு சொத்தாகும்.
வேறு என்ன?
— தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒரு நபர், எந்தவொரு உரிமையியல் வழக்கையும் தாக்கல் செய்வதிலிருந்தோ அல்லது அதில் வாதாடுவதிலிருந்தோ எந்தவொரு உரிமையியல் நீதிமன்றமோ அல்லது நீதிமன்றம் தீர்ப்பாயமோ தடை செய்வதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
— அந்த நபர் பெரும்பான்மைப் பங்குதாரராகவோ, நிறுவனராகவோ, அல்லது ஒரு முக்கிய நிர்வாகப் பொறுப்பாளராகவோ (நிர்வாக இயக்குநர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி போன்ற) இருக்கும் எந்தவொரு நிறுவனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மையும் உரிமையியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதிலிருந்தோ அல்லது அதில் வாதாடுவதிலிருந்தோ தடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஒரு தனிநபர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்ற நம்பிக்கையின் பேரில் ஒரு இடத்திற்குள் நுழைவது, ஒரு கட்டிடத்தைச் சோதனையிட உத்தரவிடுவது அல்லது ஆவணங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடுவது உள்ளிட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள் இயக்குநர் அல்லது துணை இயக்குநருக்கு உண்டு.
— சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அமலாக்க இயக்குநரகம் (Directorate of Enforcement (ED))
அமலாக்க இயக்குநரகம் 1956-ல் நிறுவப்பட்டு, அந்நியச் செலாவணி மேலாண்மை மற்றும் பணமோசடி தடுப்பு (foreign exchange management and anti–money laundering) தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது
பல ஆண்டுகளாக, அமலாக்க இயக்குநரகம் இந்தியாவின் பொருளாதார, சட்ட மற்றும் ஒழுங்குமுறைச் சூழலுக்கு ஏற்ப சீராகப் பரிணமித்து, அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FERA)). நிர்வாகத்திலிருந்து அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்திற்கு (Foreign Exchange Management Act (FEMA)) மாறியுள்ளது.
இன்று இது பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA) ஆகியவற்றை அமல்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.
1999-ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)), அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனைகள், எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு முக்கிய இந்தியச் சட்டமாகும். வெளிநாட்டு வர்த்தகத்தை எளிதாக்கவும், அந்நியச் செலாவணிச் சந்தையை நிர்வகிக்கவும் இயற்றப்பட்ட இந்தச்சட்டம், கட்டுப்பாடான அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்திற்குப் (FERA) பதிலாக, மீறல்களைக் குற்றமாக்குவதிலிருந்து பண அபராதங்களை விதிக்கும் ஒரு தாராளமயமான கட்டமைப்பைக் கொண்டுவந்தது.
2002-ஆம் ஆண்டின் பணமோசடித் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)), பணமோசடியைத் தடுக்கவும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடவும், குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் இயற்றப்பட்ட ஒரு இந்தியச் சட்டமாகும். ஜூலை 1, 2005 முதல் அமலில் உள்ள இந்தச்சட்டம், அமலாக்க இயக்குநரகத்திற்கு விசாரணை நடத்தவும், சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யவும் அதிகாரம் அளிக்கிறது. 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத் தண்டனைகளை விதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. சில குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீட்டிக்கப்படலாம்.
Original article : Nirav Modi, Vijay Mallya among 21 FEOs: What is a Fugitive Economic Offender?