நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் -அலோக் மிட்டல்

உலகளவில் போட்டியை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கு,            குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (Micro, Small and Medium Enterprises (MSMEs)) உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனைப் பெரிய அளவில் உயர்த்துவது மிகவும் இன்றியமையாததாகும்.


இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs), சவால்களைத் தாங்கி மீண்டுவரும் திறனுக்காக நீண்டகாலமாக அறியப்படுபவை. அவற்றின் அடுத்தகட்ட வளர்ச்சியானது, தங்களது தொழில் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் பெரிய அளவிற்கு விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.


சமீபத்திய ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs), கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் ஏற்பட்ட வர்த்தகப் வழித்தடப் பிரச்சினைகள் போன்ற பல சவால்களை எதிர்கொண்டன. இத்தகைய கடுமையான சூழ்நிலைகளிலும், சிறு வணிகங்கள் புதிய சந்தைகளுக்குள் நுழைந்தும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டும் தங்களை மாற்றியமைத்துக் கொண்டன. இவர்களது இந்த அனுபவம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தருகிறது: கடந்த பத்து ஆண்டுகால சவால்களைத் தாங்கி மீண்டு எழுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்றால், அடுத்த பத்தாண்டு காலம் தொழிலை வளர்ப்பதையும் அதன் அளவை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்க வேண்டும்.



பொருளாதார ஆய்வறிக்கை 2025-26-ன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) இந்தியப் பொருளாதாரத்தின் மிக முக்கியத் தூணாக விளங்குகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 31.1 விழுக்காடும், ஏற்றுமதியில் 48.58 விழுக்காடும் பங்களிப்பதோடு, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் 35.4 விழுக்காட்டையும் இந்த நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் 7.47 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) உள்ளன. இவை சுமார் 32.8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இதன்மூலம் வேளாண்மைக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையாக இத்துறை திகழ்கிறது. இருப்பினும், இவ்வளவு பெரிய பங்களிப்பையும் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே மிகச் சிறிய தொழில்களில் இருந்து நிலையான, நடுத்தர அளவிலான நிறுவனங்களாக வளர்ச்சி பெறுகின்றன. இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி என்பது, இன்னும் கூடுதலான குறு மற்றும் சிறு நிறுவனங்கள் இத்தகைய பெரிய வளர்ச்சியை அடைவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதில்தான் அடங்கியுள்ளது என்கின்றனர்.


விடுபட்ட நடுப்பகுதியை இணைத்தல்


இந்தியாவில் தொழில்முனைவோர் எண்ணிக்கையில் குறை எதுவும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நிலைகளுக்குப் பெரிதாக வளரும் தொழில்கள்தான் இந்தியாவில் குறைவாக உள்ளன. நமது நாட்டில் லட்சக்கணக்கான மிகச்சிறு நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் ஒரு சில மட்டுமே தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, உற்பத்தித் திறனை மேம்படுத்தக்கூடிய நடுத்தர அளவிலான வணிகங்களாக வளர்ச்சி பெறுகின்றன.


பல வணிக நிறுவனங்கள் தங்களது ஆரம்பக் காலக் கட்டங்களில் தொடர்ந்து நிலைத்து நிற்கவே பெரிதும் போராடுகின்றன. இதனால் அவை தங்களின் முழுத்திறனையும் எட்டாமலேயே போய்விடுகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த ஆலோசனைச் சேவைகள், வழிகாட்டல், தொழிலை முறைப்படுத்துவதற்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான மூலதனம் ஆகியவை எளிதாகக் கிடைக்க வேண்டும். குறிப்பாக, விற்பனையாளர் நிதியுதவி திட்டங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதுதான், ஒரு நிறுவனம் பெரிய பணி ஆணைகளை பெற்று பூர்த்தி செய்யவும், தாமதமாகும் பணப் பரிவர்த்தனைகளைச் சமாளிக்கவும் மற்றும் நிலையான முறையில் வளர்ச்சி அடையவும் முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது.


வெறும் கூடுதலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSMEs) உருவாக்குவது மட்டுமே நமது நோக்கமாக இருக்கக் கூடாது.                      மாறாக, உருவாக்கப்படும் அந்த நிறுவனங்கள் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வலுவான அமைப்புகளாக மாறுவதற்கு வழிவகை செய்வதே உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.


டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடுத்த எல்லை


இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பானது (Digital Public Infrastructure (DPI)), தனிநபர் அடையாளம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, இதேபோன்றதொரு நவீன கண்டுபிடிப்பை வணிகம் மற்றும் கடன் வழங்கும் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். வர்த்தக வரவு தள்ளுபடி முறைமை (Trade Receivables Discounting System (TReDS)) போன்ற தளங்கள், இன்வாய்ஸ் (invoice) அடிப்படையிலான நிதியுதவியை மேம்படுத்தி, வெளிப்படைத்தன்மையையும் அதிகரித்துள்ளன. இருப்பினும், இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) பலதரப்பட்டவையாக வளர்ந்து வருவதாலும், அவற்றின் விநியோகச் சங்கிலிகள் பரந்து விரிந்து கிடப்பதாலும், அவற்றுக்கு ஆதரவளிக்கும் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்கான தேவை இப்போது அதிகரித்துள்ளது.


விற்பனையாளர் நிதியுதவி (Seller financing) என்பது தனித்துவமான கவனத்திற்குரிய ஒன்றாகும். இன்வாய்ஸ் நிதியுதவி (Invoice financing) முறை தற்போது பரவலாகிவிட்டாலும், விற்பனையாளர்களுக்கான செயல்பாட்டு மூலதன வாய்ப்புகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். இது வணிகங்கள் தங்களின் பணப்புழக்கத்தை மேலாண்மை செய்யவும், பெரிய ஆர்டர்களைப் பெற்று பூர்த்தி செய்யவும், மற்றும் நிலையான முறையில் வளர்ச்சியடையவும் உதவும். வணிகங்களுக்கு இடையேயான (B2B) தனித்துவமான தளங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதன் மூலம், தாமதங்களை மேலும் குறைத்து செயல்திறனை மேம்படுத்த முடியும். இது வணிகங்கள் மிக எளிதாகவும் சீராகவும் வர்த்தகம் செய்யவும், தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.


இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடுத்த கட்டமானது, வர்த்தகத்தை எளிதாக்குதல், சந்தை இணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மூலதனம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


ஒரு ஆற்றல் பெருக்கியாக செயற்கை நுண்ணறிவு


செயற்கை நுண்ணறிவு (AI) என்பது சிறு வணிகங்களுக்கு வேலைத்திறனைப் பல மடங்கு அதிகரிக்கும் ஒரு காரணியாக மாறுவதற்கான முழுத் திறனைக் கொண்டுள்ளது. இருப்பு மேலாண்மை (Inventory management) மற்றும் வணிகக் கணிப்புகள் முதல் வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுதல் வரை, சிறு வணிகங்கள் பெரிய அளவில் முதலீடு செய்யாமலேயே தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்திக்கொள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெரிதும் உதவக்கூடும். பெருநகரங்களைத் தாண்டி, இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள சிறிய நிறுவனங்களுக்கு இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களை மலிவான விலையிலும், எளிதாகவும் கிடைக்கச் செய்வதில்தான் உண்மையான வாய்ப்புகள் உள்ளன. இந்த உற்பத்தித் திறன் மேம்பாடும் பலன்களும் ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடந்தால், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாடு என்பது முழுமையடையாத ஒன்றாகவே இருக்கும்.


பயன்படுத்தப்படாத ஒரு வளர்ச்சி இயந்திரத்தை இயக்குதல்


பெண்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள், இந்தியாவின் பயன்படுத்தப்படாத மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளில் ஒன்றாக விளங்குகின்றன. அரசாங்கத் தரவுகளின்படி, உத்யம் (Udyam) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் (MSMEs) ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை பெண்களால் நடத்தப்படுபவை ஆகும். இருப்பினும், அவர்களுக்கான முதலீடு, வணிகத் தொடர்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவை இன்னும் சமமற்ற நிலையிலேயே உள்ளன.

பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் பெண்களின் பங்களிப்பை விரிவாக்குவது இன்றியமையாத ஒன்றாகும். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தொழில்முனைவோர் தளம் உருவாவது, இறுதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுவானதாக மாற்றும் என்கின்றனர்.


வாழ்வாதாரத்தைத் தாண்டி


உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் தொடர்ந்து பலதரப்பட்டதாக மாறி வருவதால், இந்தியா ஒரு வலுவான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுப்பதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 2025-26-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, உலகளாவிய உற்பத்தி மதிப்பு கூட்டலில் இந்தியா தற்போது சுமார் 2.9 சதவீதத்தையும், உலகளாவிய பொருட்கள் ஏற்றுமதியில் 1.8 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், வளர்வதற்கும் இந்தியாவிற்கு இன்னும் எவ்வளவு பெரிய வாய்ப்பு உள்ளது என்பதை காட்டுகிறது.


ஆனால், இந்த வாய்ப்பு வெறும் உலகளாவிய பெருநிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. இது, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் அடுத்த கட்டமாகப் பெரிய தொழில்களாக மாற முடிகிறதா என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) வரலாறு என்பது தொழில்முனைவு மற்றும் சவால்களைத் தாங்கி மீண்டெழும் திறனைப் பற்றியதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகள் என்பது அவற்றின் வளர்ச்சி மற்றும் அளவை பெரியதாக்குவதைப் பற்றியதாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் லட்சியம் என்பது எத்தனை சிறிய தொழில்களை உருவாக்குகிறது என்பதில் இல்லை; மாறாக, அவற்றில் எத்தனை தொழில்கள் உலக அளவில் போட்டியிடக்கூடிய, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடுத்தர அளவிலான நிறுவனங்களாக மாறுகின்றன என்பதைப் பொறுத்தே அளவிடப்பட வேண்டும்.


அவ்வாறு செய்யும்போதுதான், இந்தியா வெறும் எண்ணிக்கையிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSMEs) மட்டும் உருவாக்காமல்; இன்னும் பெரிய, வலுவான மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய நிறுவனங்களை உருவாக்க முடியும்.


அலோக் மிட்டல், ‘Indifi Technologies’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  ஆவார்.        


Original Link: Time to step up  

Share:

குழந்தையின் பாதுகாவலர் உரிமை யாருக்குக் கிடைக்கும்? பெற்றோரின் நடத்தை குறித்த புனே நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? -அமால் ஷேக்

தாயின் நடத்தையைச் சுட்டிக்காட்டி, 10 வயதுக் குழந்தையின் இடைக்கால பாதுகாப்பை மீண்டும் அவரது தந்தையிடமே புனே குடும்ப நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. குழந்தை யாருடைய பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்மானிக்கும்போது, ஒரு பெற்றோரின் "நடத்தை" என்பதை அவை எவ்வாறு வரையறுக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.


ஒரு 10 வயது சிறுவனின் இடைக்கால பாதுகாப்பை மீண்டும் குழந்தையின் தந்தையிடமே ஒப்படைத்த குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, அந்தப் பெற்றோரின் கணவன்/மனைவி என்ற முறையிலான நடத்தையையோ அல்லது ஒரு மருமகளாக அவர் நடந்துகொண்ட விதத்தையோ தகுதியாகப் பயன்படுத்த முடியுமா?


ஒருபுறம், ஒரு பெற்றோரின் "மோசமான நடத்தை" அல்லது ஒழுக்கக் குறைபாடுகள் மட்டுமே அவர்களுக்குக் குழந்தையின் பாதுகாவலர் உரிமையை மறுப்பதற்கான காரணியாக மாறிவிடாது என்ற நிலைநாட்டப்பட்ட சட்டக் கொள்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பெற்றோர் ஒருவரின் தனிப்பட்ட ஒழுக்கத்தைவிட, குழந்தையின் உணர்வுப்பூர்வமான, கல்விசார்ந்த மற்றும் உடல்நலன் சார்ந்த நல்வாழ்வு உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்ப நலனுக்கே நீதிமன்றங்கள் எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.


மற்றொருபுறம், குழந்தையைத் தந்தையின் பொறுப்பில் ஒப்படைத்து உத்தரவிட்ட நீதிமன்றம், அந்தத் தாய் "ஒரு கணவனுக்கு மனைவியாகச் செய்ய வேண்டிய புனிதமான கடமைகளைச் செய்யத் தவறிவிட்டார்" என்று குறிப்பிட்டது. மேலும் "குடும்பத்தைப் பேணிக் காப்பது, மரியாதையைக் காப்பாற்றுவது மற்றும் உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்குவது" போன்ற விஷயங்கள் அந்தப் பெண்ணுக்கு முற்றிலும் தொடர்பில்லாத வார்த்தைகளாக தோன்றுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இறுதியாக, இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் நிழலில் வளர்ந்தால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது என்றும் நீதிமன்றம் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.


இந்த வழக்கு எதைப் பற்றியது?


குடும்பப் பணிப்பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய சில நாட்களிலேயே, கணவர் வேலை விஷயமாகப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், தாய் குழந்தையுடன் சிங்கப்பூரிலிருந்து புனேவிற்குத் திரும்பியதைத் தொடர்ந்து இந்தத் தகராறு ஏற்பட்டது. குழந்தையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் குடும்ப நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, தந்தை குழந்தையின் பாதுகாவலர் உரிமையை மீண்டும் கோரினார்.


இறுதியில், குடும்ப நீதிமன்றம் குழந்தையைத் தற்காலிகமாகத் தந்தையின் பொறுப்பில்) ஒப்படைக்க உத்தரவிட்டது. இதற்கு நீதிமன்றம் பல காரணங்களைக் குறிப்பிட்டது – சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை யாரும் எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஒரு காரணம்; மேலும், அந்தக் குழந்தை தனது வளரும் பருவத்தின் மிக முக்கியமான முதல் மூன்று ஆண்டுகளைச் சிங்கப்பூரிலேயே கழித்திருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன், தாய் தன் குழந்தையைத் தந்தையிடமிருந்து பிரிக்க அல்லது அவரிடமிருந்து விலக்கி வைக்க முயற்சி செய்துள்ளார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


நீதிமன்றங்கள் எவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது? 


இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டத்தின் 13-வது பிரிவின்கீழ் (Hindu Minority and Guardianship Act (HMGA)), குழந்தைக்கு எது நல்லது மற்றும் அவசியமோ அதற்கே மிக முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒருவருக்குக் குழந்தையின் பாதுகாவலர் (Guardianship) உரிமையை வழங்குவது அக்குழந்தையின் நலனுக்கு ஏற்றதல்ல என்று நீதிமன்றம் கருதினால்,                          இந்தச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்தவொரு இந்து பாதுகாவலர் சட்டத்தின் கீழோ எந்தவொரு நபரும் அக்குழந்தைக்குப் பாதுகாவலராகத் தங்களை உரிமை கொண்டாட முடியாது என்று இந்தச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

காப்பாளர்கள் மற்றும் காப்பாள் சட்டத்தின் (Guardians and Wards Act)     பிரிவு-17, ஒரு குழந்தையின் நலனை நீதிமன்றம் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது. இதன்படி, குழந்தையின் வயது, பாலினம், மதம், பரிந்துரைக்கப்படும் பாதுகாவலரின் குணம் மற்றும் அவரது தகுதி,                           அந்தப் பாதுகாவலருக்கும் குழந்தைக்குமான உறவு முறை, மறைந்த பெற்றோரின் விருப்பங்கள், மற்றும் பாதுகாவலருக்குக் குழந்தையுடனோ அல்லது குழந்தையின் சொத்துக்களுடனோ கடந்த காலத்தில் இருந்த அல்லது தற்போது இருக்கும் தொடர்பு ஆகியவற்றை நீதிமன்றம் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இப்பிரிவு தெளிவாகக் கூறுகிறது.


இந்த இரண்டு சட்டங்களும் ஒன்றிணைத்தே பயன்படுத்தப்படுகின்றன.           இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம் (HMGA) 'குழந்தையின் நலன்' என்ற அடிப்படைக் கொள்கையை விவரிக்கும் வேளையில், பாதுகாவலர் மற்றும் வார்ட்ஸ் சட்டம் (GWA) குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கான நடைமுறைகளை வழங்குகிறது.


ரோஸி ஜேக்கப் vs ஜேக்கப் ஏ. சக்ரமாக்கல் (Rosy Jacob v Jacob A. Chakramakkal (1973) வழக்கின் போது, உச்சநீதிமன்றம் ஒரு முக்கியக் கருத்தைப் பதிவு செய்தது. "குழந்தைகள் வெறும் அசையும் சொத்துகளோ, அல்லது தங்களின் பெற்றோர்கள் விளையாடுவதற்கான வெறும் பொம்மைகளோ அல்ல."                   மேலும், இன்றைய நவீன சமுதாயத்தில், பெற்றோர்களின் முழுமையான மற்றும் வரம்பற்ற உரிமைகளைவிட, குழந்தையின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம் (HMGA) அல்லது காப்பாளர்கள் மற்றும் காப்பாள் சட்டம் (Guardians and Wards Act) ஆகிய இரண்டுமே, தம்பதியினருக்கு இடையே உள்ள திருமணக் கடமைகளை ஒரு பெற்றோர் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை மட்டும் குழந்தையின் பாதுகாப்பு உரிமையைத் தீர்மானிப்பதற்கான ஒரு காரணமாகக் கருதுவதில்லை. மாறாக, உச்சநீதிமன்றம் அது குழந்தையின் நலனை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்துகிறது.


மௌசாமி மைத்ரா கங்குலி vs ஜெயந்த் கங்குலி (Mausami Moitra Ganguli vs Jayant Ganguli (2008)) வழக்கில் உச்சநீதிமன்றம், தந்தை என்ற முறையில் அவருக்கு இருக்கும் 'இயற்கையான பாதுகாவலர்' என்ற சட்டப்பூர்வ தகுதிநிலையோ அல்லது குழந்தையின் மீது இரு பெற்றோர்களில் யாருக்கு இருக்கும் பாசமோ மட்டுமே குழந்தையின் பாதுகாப்பு மீதான உரிமையைத் தீர்மானிக்கும் ஒரே காரணியாக இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.


நடைமுறையில், ஒரு குழந்தையின் நலன் என்பது பெற்றோரின் தனிப்பட்ட குணங்களை வைத்து மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அந்தக் குழந்தையின் அன்றாட வாழ்க்கையை வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் வழக்கமான பள்ளிப்படிப்புத் தொடர்ச்சி, தினசரி நடைமுறைகள் மாறுமால் இருப்பது, மனரீதியான நிலைத்தன்மை, குழந்தையின் அன்றாடக் காரியங்களில் ஒவ்வொரு பெற்றோரின் ஈடுபாடு மற்றும் குழந்தையின் சொந்த விருப்பம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்கின்றன. இருப்பினும், குழந்தையின் சொந்த விருப்பங்கள் மிகவும் கவனமாக ஆராயப்படுமே தவிர, அதுவே இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.


பெற்றோரின் நடத்தை எப்போது பொருத்தமானதாகிறது?


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் குழந்தை பாதுகாப்பு தொடர்பான சட்ட நெறிமுறைகளை பரந்த அளவில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று உணர்த்துகின்றன. முதலாவது வகை நேரடியாகக் குழந்தையைப் பற்றியது; ஏனெனில், குழந்தையைப் புறக்கணிப்பது, அவர்களுக்கு நிலையற்ற சூழலை உருவாக்குவது போன்ற விஷயங்கள் அவர்களின் வாழ்வில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புனே நீதிமன்றம் இந்த 'பாசப் பிரிவினை' (Alienation) என்ற அம்சத்தை சுட்டிக்காட்டி, தந்தைக்கு எதிராக "விஷமத்தனமான கருத்துக்கள்"  குழந்தைக்கு புகட்டப்படுவதாகக் கூறியுள்ளது. இது நேரடியாக அந்தக் குழந்தையின் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வோடு தொடர்புடையதாக அமைகிறது.


இரண்டாவது, குழந்தையைப் பராமரிப்பதற்கான பெற்றோரின் திறனைப் பொறுத்தது ஆகும். இதில் குடும்ப வன்முறை அல்லது பராமரிப்பைப் பாதிக்கக்கூடிய மற்ற சூழல்கள் போன்ற காரணிகலும் அடங்கும். இங்கு, பெற்றோரின் தனிப்பட்ட குணநலன்களை ஆராய்வதைவிட, அவர்களின் நடத்தை குழந்தையின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்பதில்தான் முழுக் கவனமும் செலுத்தப்படுகிறது.                      லஹரி சகமூரி vs சோபன் கோதாலி (Lahari Sakhamuri vs Sobhan Kodali (2019)) வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, குழந்தைக்குப் பொறுப்பேற்க முன்வரும் பாதுகாவலரின் "நெறிமுறை சார்ந்த குணம்" என்பது ஒரு முக்கியமான காரணியாகும்; அதோடு, பெற்றோர் ஒரு தனிமனிதராக எப்படிப்பட்டவர் என்பதைப் பார்ப்பதைவிட, குழந்தையுடன் அவர்களுக்கு இருக்கும் உறவுமுறை எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்பதே முக்கியம என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


மூன்றாவது விஷயம், திருமண வாழ்க்கைக்குள் கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் நடத்தைகளைப் பொறுத்தது ஆகும். அதாவது கொடுமைப்படுத்துதல், துரோகம் செய்தல் (infidelity) அல்லது திருமணப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுதல் போன்ற, குழந்தையை நேரடியாகப் பாதிக்காத குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். 'ரோஸி ஜேக்கப்' (Rosy Jacob) வழக்கின் தீர்ப்பில், நீதிமன்றம் ஒரு மனைவியின் ஒழுக்கம் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, "குழந்தையின் பாதுகாப்பு சார்ந்த உரிமையை யாருக்கு வழங்குவது என்று தீர்மானிக்கும்போது முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டது. மேலும், முழுக் கவனமும் எப்போதுமே குழந்தையின் நலனில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.


மனைவியின் புகார்களை விசாரித்த புனே நீதிமன்றம், தந்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கையாளும்போது இந்தக் கொள்கையையே பின்பற்றியது.             வீட்டுவேலை செய்யும் பணிப்பெண் சம்பந்தமாக மனைவி சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த நீதிமன்றம், அதனை நிராகரித்தது. ஒருவேளை இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாகவே இருந்தாலும்கூட, ஒழுக்கக்கேடான குணம் கொண்ட ஒரு கணவர், கண்டிப்பாக ஒரு மோசமான தந்தையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, குழந்தையின் பாதுக்காப்பு சார்ந்த உரிமையைத் தீர்மானிக்கும் இந்த வழக்கின் ஆரம்ப நிலையில், இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை வழக்கின் இறுதி விசாரணையின்போது முடிவு செய்துகொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Original Link: Who gets child’s custody? Pune court order puts focus on parental conduct.

Share:

இந்தியாவின் வளர்ச்சி ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஓர் இடம் கோருகிறது. -பிமல் என் படேல்

பொருளாதார மற்றும் ராணுவரீதியான பலத்தைத் தாண்டி,                        சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக இந்தியா வழங்கும் நெறிமுறை சார்ந்த மற்றும் நடைமுறை ரீதியான பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் (United Nations Security Council (UNSC)) இந்தியா நிரந்தர உறுப்பினராவது என்பது இனி வெறும் ஒரு லட்சியம் மட்டுமல்ல. அது, இன்றைய மாறிவரும் உலகளாவிய அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப இந்த உலகம் தன்னை மாற்றியமைக்கத் தயாராக இருக்கிறதா என்பதற்கான ஒரு சோதனையாக மாறியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் ஒட்டுமொத்தமாகப் பெரிய அளவில் மாறிவிட்ட போதிலும், உலக அமைதியைக் கண்காணிக்கும் இந்த மிக முக்கிய அமைப்பு மட்டும் இன்னும் பழைய நிலையிலேயேதான் நீடிக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கைக் (1/6) கொண்டிருக்கிறது. எனவே, இந்தியாவிற்கு அதற்குரிய தகுதியான இடத்தை வழங்குவது மட்டுமே, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும்.


வாங்கும் திறன் சமநிலை (Purchasing Power Parity (PPP)) அடிப்படையில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும், 2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி                      20 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தகம், தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள், எரிசக்தி சந்தைகள் மற்றும் வளர்ச்சி நிதியுதவி ஆகியவற்றில் இந்தியா மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், உலகிலேயே மிகப்பெரிய ஆயுதப் படைகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியா, பாதுகாப்புத் துறைக்காக அதிக அளவில் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலிலும் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்பு நிதிநிலைத் திட்டம் சாதனை அளவாக 86 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. நிலம், நீர், ஆகாயம் ஆகிய மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருந்தாலும், அதன் உத்திசார் அணுகுமுறையானது சர்வதேச ஒழுங்கை மாற்றுவதை நோக்கமாகக் கொள்ளாமல், நாட்டின் தற்காப்பு அரணை வலுப்படுத்துவதிலும் பிராந்திய நிலைத்தன்மையை வலுப்படுத்துவதிலுமே கவனம் செலுத்தி வருகிறது.


பொருளாதார மற்றும் ராணுவ பலத்தைத் தாண்டி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா மிக முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைப் பணிகளில் ஈடுபட்டு அதிக அளவில் உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளுள் ஒன்றாக இருந்தபோதிலும், 1948-ஆம் ஆண்டு முதல் இன்று வரை அந்தப் பணிகளுக்கு உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அனுப்பும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இது பலதரப்பு நாடுகள் உடனான உறவுகள் (Multilateralism) மீதான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பையும், ஐநா அமைதிப்படைப் பணிகளுக்கு ஆதரவளிப்பதில் உள்ள அதன் தீவிர விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.


எரிசக்தி மாற்றம், பசுமை நிதியுதவி மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் போன்ற மிக முக்கிய உலகளாவிய விவகாரங்களில் இந்தியா ஒரு முதன்மைப் பங்களிப்பை வழங்கும் நாடாக விளங்கி வருகிறது. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், சர்வதேச சூரியசக்திக் கூட்டணி (International Solar Alliance (ISA)) மற்றும் "உலகமே ஒரு குடும்பம்" (Vasudhaiva Kutumbakam) என்ற கருப்பொருளின்கீழ் தன் ஜி20 (G20) தலைமைத்துவத்தின் மூலமாகவும் இந்தியா தனது உலகளாவிய ஆளுமையை நிரூபித்துள்ளது. மேலும், தொழில்நுட்ப நிர்வாகத்திற்கான ஒரு முக்கிய மையமாகவும் இந்தியா உருவெடுத்து வருகிறது. கடல்சார் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செயல்பாடு என்பது, கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கும் மற்றும் கடல் சட்டத்திற்கான ஐநா உடன்படிக்கை (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயம் (International Tribunal for the Law of the Sea (ITLOS)) போன்ற சர்வதேச அமைப்புகளின் சட்டங்களுக்கும் இந்தியா வழங்கும் முக்கியத்துவத்தையும், அதன் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.




ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது (UNSC) எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று, உலக நாடுகளுக்குச் சமமான பிரதிநிதித்துவம் இல்லாததுதான். உலக மக்கள்தொகையில் 60% ஆசியாவில் வாழ்ந்த போதிலும், ஒரே ஒரு ஆசிய நாட்டிற்கு (சீனா) மட்டுமே இதில் நிரந்தர இடம் கிடைத்துள்ளது. இந்தச் சபையை விரிவுபடுத்துவது, ஆசிய நாடுகளை நேரடியாகப் பாதிக்கும், ஆனால் பொதுவாகக் குறைந்த கவனத்தைப் பெறும் முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும். அதோடு, ஏதேனும் ஒரு நாடு தங்களின் சுயநலமான குறுகிய நோக்கங்களுக்காக இந்தச் சபையைப் பயன்படுத்துவதையும் குறைக்கும்.                     இதன் காரணமாகவே இந்தியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய 'ஜி-4' (G4) கூட்டமைப்பு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு தலா இரண்டு இடங்கள் உட்பட, மொத்தம் ஆறு புதிய நிரந்தர இடங்களைச் சேர்த்து இந்த பாதுகாப்புச் சபையை (UNSC) விரிவுபடுத்த வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) நிரந்தர உறுப்பினர் தகுதிநிலை என்பது 'தடையுரிமை' (Veto) அதிகாரத்துடன் வருகிறது. ஆனால், இந்தச் சிறப்பு உரிமையை வெறும் ஐந்து நாடுகளுக்குள் மட்டுமே சுருக்கி வைத்திருப்பது, சபையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பெரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது. 1960-களில், நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல், தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் 10-ஆக உயர்த்தப்பட்டது.                             இதன் விளைவாக, காலப்போக்கில் அந்த ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் ஆதிக்கம் மேலும் அதிகரித்தது. இதுமட்டுமல்லாமல், அனைத்து நாடுகளும் ஒருமனதாகச் சம்மதிக்க வேண்டும் என்ற தற்போதைய முடிவெடுக்கும் முறை, நடைமுறையில் ஒரு மறைமுக தடையுரிமை அதிகாரத்தை (De facto veto) உருவாக்கியுள்ளது. சபையின் தலைவரின் அறிக்கைகள், பத்திரிகை அறிக்கைகள் மற்றும் தடைக் குழுக்களின் முடிவுகள் போன்றவற்றுக்கு அனைத்து உறுப்பினர்களின் முழுச் சம்மதமும் தேவைப்படுவதால், நிரந்தர அல்லது தற்காலிக உறுப்பினர்களில் எந்தவொரு நாடும் ஒரு முடிவைத் தடுத்து நிறுத்தவோ அல்லது தாமதப்படுத்தவோ முடிகிறது. பாதுகாப்புச் சபை விரிவடையும்போது, எல்லாரும் ஒருமனதாக முடிவெடுப்பது இன்னும் கடினமாகிறது. இது, தனிப்பட்ட நாடுகள் தங்களின் சுயநலத்திற்காக இந்த மறைமுக தடையுரிமை (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்த அதிக வாய்ப்புகளைத் தருகிறது. எனவே, ஒரு நியாயமான சீர்திருத்தம் என்பது, அதிகாரப் பகிர்வில் சமநிலையை உறுதி செய்வதற்காக, தடையுரிமை (Veto) அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவிகளை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்துவதாகவே இருக்க வேண்டும்.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் (UNSC) இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைப்பது ஆசியாவிலும் அதைக் கடந்தும் நிலைத்தன்மையை வலுப்படுத்தும்.                இது இன்றைய புவிசார் அரசியல் யதார்த்தங்களை உள்ளடக்கியதாகப் பாதுகாப்புச் சபையை மாற்றுவதோடு, அதன் முடிவுகளுக்கான அங்கீகாரத்தையும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பாதுகாப்புச் சபை தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையும். இன்றைய இந்தியா உலகிற்கு ஒரு நல்ல நண்பனாக (விஸ்வாமித்ரா) திகழ விரும்புவதால்,             ஐநா பாதுகாப்புச் சபை எதிர்கொண்டு வரும் புதிய சவால்களைக் கையாள்வதற்கு உதவக்கூடிய தகுதியான இடத்தில் இந்தியா உள்ளது.


படேல், ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் (RRU) துணைவேந்தராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு (NSAB) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணையம் (UN ILC) ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். அங்கித் கே, ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.


Original Link: India’s rise demands a seat at the UNSC.

Share:

மோசடி இழப்பீட்டிற்கான ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை: என்னென்ன மாற்றங்கள் அதில் இடம்பெற்றுள்ளன, யார் பணம் செலுத்துவது, இழப்பீட்டைப் பெறுவது எப்படி? - ஆகாஷ் மண்டல்

2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கட்டமைப்பின்படி, RBI-யின் டிஜிட்டல் மோசடி இழப்பீட்டு விதிகள், மோசடியான மின்னணு பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் இழந்த தொகையில் ஒரு பகுதியை இழப்பீடாக (Partial Reimbursement) பெற அனுமதிக்கும்.  


டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று  ஆறுதல் அடையாளம். ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட இழப்பீட்டு நடைமுறையின் கீழ், 50,000 ரூபாய் வரையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், இழந்த பணத்தில் பெரும்பகுதியைத் திரும்பப் பெற முடியும்.


புதன்கிழமை அன்று மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டு, 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய அமைப்பு, இதுபோன்ற சூழ்நிலைகளில் வாடிக்கையாளர்களின் பொறுப்பைக் கட்டுப்படுத்தவும் அவர்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்படும் மற்றொரு நடவடிக்கையாகும்.


வங்கி மோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள், ரிசர்வ் வங்கிக்கு வளர்ந்துவரும் கவலையாக மாறியுள்ள சூழலில், மோசடித் தொகையில் கணிசமான பெரும்பகுதியை ஈடுசெய்வதாக ரிசர்வ் வங்கி புதியதொரு கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது. 2025-26-ஆம் ஆண்டு நிதியாண்டில், பதிவான மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து 10,114-ஆக இருந்தபோதிலும், அதில் சம்பந்தப்பட்ட பணத்தின் மதிப்பு 46% அதிகரித்து ரூ.48,021 கோடியாக அதிகாரித்துள்ளது.


என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?


புதிய இழப்பீட்டு வழிகாட்டுதல்களை நுகர்வோருக்கு மிகவும் சாதகமானதாக மாற்ற மத்திய வங்கி முயற்சி செய்து வருகிறது. புதிய கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் பெரும்பகுதியை ரிசர்வ் வங்கி  வழங்கும்.


புதிய வழிமுறையின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்புகளில் 85 சதவீதம் வரை, அதாவது ரூ. 25,000 வரை இழப்பீடு தொகைத் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இதன் மூலம், இதுபோன்ற மோசடிகளால் அவர்கள் சந்திக்கும் பாதிப்பு குறைகிறது. மோசடியான மின்னணு வங்கிப் பரிவர்த்தனை (electronic banking transaction (EBT)) காரணமாக ரூ. 50,000 வரையிலான மொத்த இழப்பு குறித்து புகார் அளிக்கும் ஒரு உண்மையான பாதிக்கப்பட்ட நபருக்கு, அவரது வாழ்நாளில் ஒருமுறை, நிகர இழப்புத் தொகையில் 85 சதவீதம் அல்லது ரூ. 25,000, இதில் எது குறைவோ அது இழப்பீடாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் புதிய கட்டமைப்பு கூறுகிறது.


மோசடியான மின்னணுப் பணப் பரிமாற்றம் (EBT) மூலம் ரூ.29,412-க்கும் குறைவான இழப்பு ஏற்பட்டதாகப் புகார் அளித்தால், வாடிக்கையாளர் அந்தத் தொகையில் 85%-ஐ இழப்பீடாகப் பெறுவார். பாதிக்கப்பட்டவர்கள், மோசடி குறித்து 5  நாட்களுக்குள் புகார் அளித்தால் மட்டுமே இந்த இழப்பீட்டைப் பெறத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். மேலும், பாதிக்கப்பட்ட நபரின் வங்கியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உள்நாட்டு நடைமுறைகளின்படி  ஏற்பட்ட  இழப்பு  உறுதி செய்யப்பட வேண்டும்



இழப்பீட்டை யார் செலுத்துகிறார்கள்?


வங்கியின் கவனக்குறைவால் ஏற்படும் எந்தவொரு மோசடிக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு சமந்தப்பட்ட வங்கியே முழு இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று மத்திய வங்கி கூறுகிறது. இதில், மின்னணுப் பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளுக்குப் தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்யத் தவறுதல், ரூ. 500-க்கு மேற்பட்ட மின்னணுப் பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளுக்குக் கட்டாய அறிவிப்புகளை அனுப்பத் தவறுதல், வாடிக்கையாளர் புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் வழிமுறைகளை வழங்கமால் இருத்தல், கணினிச் செயலிழப்புகள், பாதுகாப்பு மீறல்கள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கத் தவறுதல் போன்றவை கவனக்குறைவாகக் கருதப்படுகின்றன.


உள்நாட்டு மோசடி மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கு 45 நாட்களுக்குள்ளும், எல்லை தாண்டிய மோசடி மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கு 60 நாட்களுக்கு உள்ளும், மோசடி நடைபெற்றது தொடர்பான வாடிக்கையாளர் புகார்களை வங்கிகள் தீர்க்க வேண்டும் என இந்தக் கட்டமைப்பு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.


ரூ.29,412-க்கும் குறைவான மதிப்புள்ள மோசடி நிகழ்வுகளில், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக இழக்கப்பட்ட தொகையில் 85% வழங்கப்படும்போது, ​​அந்தத்தொகையில் 65%-ஐ ரிசர்வ் வங்கியும், 10%-ஐ பாதிக்கப்பட்ட நபரின் வங்கியே ஏற்கும். உள்நாட்டு மின்னணுப் பணப் பரிமாற்ற  மோசடிகளைப் பொறுத்தவரை, மீதமுள்ள 10%-ஐ மோசடி செய்யப்பட்ட பணம் சென்றடைந்த வங்கி ஏற்கும். எல்லை தாண்டிய மின்னணுப் பணப் பரிமாற்ற மோசடிகளைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவரின் வங்கியின் பங்களிப்பு 20%-ஆக உயரும்.


ரூ. 29,412 முதல் ரூ. 50,000 வரையிலான தொகைகள் சம்பந்தப்பட்ட மோசடிப் புகார்களில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்கப்படும். இதில்,  ரிசர்வ் வங்கி ரூ. 19,118 (76.5%)  வரை வழங்கும். அதேசமயம், உள்நாட்டு மின்னணு பணப் பரிமாற்ற (EBT) மோசடிகளின் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் வங்கியும் பயனாளியின் வங்கியும் தலா ரூ.2,941 (12%) வழங்கும். எல்லை தாண்டிய வழக்குகளின் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் வங்கி இழப்பீட்டுத் தொகைக்காக ரூ. 5,882 வழங்கும்.


ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளி வங்கிகள் இருந்தால், ஒவ்வொரு வங்கியும் ஏற்க வேண்டிய இழப்பீடானது, அந்தந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப இருக்கும் என்று கட்டமைப்பு தெளிவுபடுத்தியது.


எனவே, மோசடியால் ஏற்பட்ட இழப்பு ரூ.40,000 ஆகவும், மோசடியிலிருந்து மீட்கப்பட்ட தொகை ரூ. 15,000-ஆகவும் இருந்தால், பாதிக்கப்பட்டவர் ரூ. 21,250 (85%) இழப்பீடு பெறத் தகுதியுடையவர் ஆவார். இதில், இந்திய ரிசர்வ் வங்கி ரூ.16,250-ம், பாதிக்கப்பட்டவரின் மற்றும் பயனாளி வங்கிகள் தலா ரூ.2,500 வரை வழங்கும். இழந்த தொகையில் எந்தப் பகுதியும் மீட்டெடுக்கப்படாத பட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும். மேலும், இதில் தொடர்புடைய தரப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள்.


பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இழப்பீடு கோரலாம்?


மோசடித் தொகை கழிக்கப்பட்டவுடன், பாதிக்கப்பட்டவர்கள் இந்த மோசடியை சம்பந்தப்பட்ட வங்கிக்கும், தேசிய இணையக் குற்றப் புகார் இணையதளம் அல்லது தேசிய இணையக் குற்ற உதவி எண்ணுக்கும் புகாரளிக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஏதேனும் மோசடியான மின்னணு வங்கிப் பரிவர்த்தனை குறித்த புகார் பெறப்பட்டால், வங்கி உடனடியாக நடவடிக்கை எடுத்து, வாடிக்கையாளருக்குத் தெரிவிப்பதோடு, அவரது கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். மேலும், 'தேசிய இணையவழி குற்றப் புகார் இணையதளம்' (National Cyber ​​Crime Reporting Portal) அல்லது 'தேசிய இணையவழி குற்ற உதவி எண்' (1930) ஆகியவற்றில் விரைவாக புகார் அளிக்குமாறும் வங்கி அந்த வாடிக்கையாளருக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று மத்திய வங்கியின் புதிய வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.



இழப்பீடு பெறுவதற்குத் தகுதி பெற, வாடிக்கையாளர் மோசடி நடந்த 5 நாட்களுக்குள் வங்கிக்கு நடந்ததை பற்றி புகாரளிக்க வேண்டும். புகாரைப் பதிவு செய்த பிறகு, தங்கள் தரப்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக மோசடி நிகழவில்லை என்பதை நிரூபிப்பது வங்கியின் பொறுப்பாகும்.


மோசடி விசாரணைக்குக் காலம் தேவைப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகளில் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் எந்தவிதமான வட்டி இழப்பையோ கூடுதல் கட்டணங்களையோ சந்திக்காமல் இருக்க, மீட்டெடுக்கப்படும் மோசடித் தொகையை வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கும் போது, அந்தத் தொகையின் மதிப்பு முதலில் மீட்கப்பட்ட தேதியிலிருந்தே கணக்கிடப்படுவதை பாதிக்கப்பட்டவரின் வங்கி உறுதிசெய்ய வேண்டும். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வட்டி இழப்பைச் சந்திக்காமல் இருப்பதோடு, கூடுதல் கட்டணங்களையும் ஏற்கவேண்டிய சூழல் ஏற்படாது.


கடன் அட்டைகள் மூலமான மோசடி வரவுப் பரிமாற்றங்கள் விவகாரத்தில், புகார் அளிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவரின் வங்கி, அதற்கு இணையான தொகையை அவருக்கு வழங்க வேண்டும். வாடிக்கையாளர் அந்தத் தொகையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார் என்றாலும், அவர் கூடுதல் வட்டி/கட்டணத்தை ஏற்க வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Original Link: RBI’s new fraud compensation mechanism: What’s different, who pays, how to claim compensation.

Share:

அவசரநிலை மீண்டும் கவனம் பெற்றுள்ளது -ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி


சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய வரலாற்றின் மிகவும் கடுமையான காலகட்டங்களில் ஒன்றான 1975-77-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட  அவசரநிலை, முதன்முறையாக 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய ஜனநாயகம் கடந்து வந்த முக்கிய சவால்களில் ஒன்றாக இதனை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (National Council of Educational Research and Training (NCERT)) விளக்கியுள்ளது.


இந்தச் சூழலில், நமது அரசியலமைப்பில் அவசரநிலை தொடர்பாக என்ன விதிகள் உள்ளன என்பதையும், இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட வரலாறு என்ன என்பதையும் அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்திய அரசியலமைப்பின் பகுதி XVIII-ல், அரசியலமைப்புச் சட்டத்தின் 352 முதல் 360 வரை உள்ள பிரிவுகள், மூன்று வகையானஅவசரநிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்த விதிகள் ஜெர்மனியின் வீமர் அரசியலமைப்பிலிருந்து ஈர்க்கப்பட்டவை (German Weimar constitution) ஆகும்.


2. இந்திய அரசியலமைப்பில் அவசரநிலைகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள்


இந்திய அரசியலமைப்பின் 352-வது பிரிவு, “அவசரநிலை பிரகடனம்” (proclamation of emergency) குறித்து விவரிக்கிறது.


பிரிவு 353, “அவசரநிலைப் பிரகடனத்தின் தாக்கம்” (Effect of Proclamation of Emergency) குறித்து விவரிக்கிறது.


பிரிவு 354, “அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருக்கும்போது வருவாய்ப் பகிர்வு தொடர்பான விதிகளைப் பயன்படுத்துதல்” குறித்து விவரிக்கிறது.


பிரிவு 355, “வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களிலிருந்து நாடுகளைப் பாதுகாக்கும் ஒன்றிய அரசின் கடமையை” பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவு 356, “மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்ட அமைப்பு தோல்வி அடையும் சூழலில்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்” பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவு 357, “பிரிவு 356-ன் கீழ் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் சட்டமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்துதல்” பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவு 358 – தேசிய அவசரநிலை   அறிவிக்கப்பட்டவுடன், சட்டப் பிரிவு 19-ன் வழங்கப்பட்டுள்ள "சுதந்திர உரிமைகள்" (Right to Freedom) மீதான அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் அரசுக்கு விலக்கு அளிக்கிறது.


  பிரிவு 359, அவசரநிலைக் காலங்களில் பகுதி III-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளைச் செயல்படுத்துவதை நிறுத்திவைப்பது தொடர்பான விதிகளைப் பற்றி குறிப்பிடுகிறது.


பிரிவின் 360-ன் கீழ் நிதி நெருக்கடி (financial emergency) குறித்த விதிகள்  இடம் பெற்றுள்ளன.


அவசரநிலைகளின் வகைகள் யாவை?


அரசியலமைப்பின் XVIII-வது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விதிகள், மூன்று வகையான அவசரநிலைகளுக்கு வழிவகை செய்கின்றன: அவை தேசிய அவசரநிலை, குடியரசுத் தலைவர் ஆட்சி, நிதி நெருக்கடி நிலை ஆகும்.


தேசிய அவசரநிலை


அரசியலமைப்பின் 352-வது பிரிவின்கீழ், “போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சி” ஆகியவற்றால் இந்தியாவின் அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியின் பாதுகாப்பிறக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் அவசரநிலைப் பிரகடனம் பற்றியை வெளியிடலாம். (குறிப்பு: 1975-ல், ஆயுதக் கிளர்ச்சிக்குப் பதிலாக, “உள்நாட்டுக் குழப்பம்” (internal disturbance) என்ற அடிப்படையில் அரசாங்கம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது. இது போன்ற  அவசரநிலை பொதுவாக “தேசிய அவசரநிலை” (national emergency) என்று குறிப்பிடப்படுகிறது.





உங்களுக்குத் தெரியுமா?


அவசரநிலையின் போது, மக்களவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் ஒவ்வொரு முறையும் ஓராண்டு வீதம் நீட்டிக்கலாம். மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் குறித்துச் சட்டங்களை இயற்றலாம். ஒன்றிய அரசு தனது நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தலாம். ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நிதி வளப் பகிர்வு தொடர்பான அரசியலமைப்பு விதிகளை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் மாற்றியமைக்கலாம்.


குடியரசுத் தலைவர் ஆட்சி


அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356(1)-ன்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநரிடமிருந்து அறிக்கை பெறுவதன் மூலம் அல்லது வேறு எந்த ஒரு நிலையிலும், அந்த மாநிலத்தின் அரசு அரசியலமைப்பின் விதிகளின்படி மாநில  அரசை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திருப்தியடைந்தால், அவர் ஒரு பிரகடனத்தை (Proclamation) வெளியிட்டு:


(அ) மாநில அரசின் அனைத்து அல்லது ஏதேனும் ஒரு பணியையும், மாநிலச் சட்டமன்றத்தைத் தவிர்த்து மாநிலத்திலுள்ள ஆளுநர் அல்லது ஏதேனும் அமைப்பு அல்லது அதிகார அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அல்லது அவர்களால் செயல்படுத்தப்படக்கூடிய அனைத்து அல்லது ஏதேனும் சில அதிகாரங்களையும்  வைத்துக் கொள்ளலாம்.

(ஆ) மாநிலச் சட்டமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழோ செயல்படுத்தலாம் என்று அறிவிக்கலாம்;


(இ) பிரகடனத்தின் நோக்கங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அல்லது தேவை (necessary) என்று குடியரசுத் தலைவருக்குத் தோன்றும் தற்செயலான மற்றும் தொடர்ச்சியான விதிகளை உருவாக்கலாம். இதில் மாநிலத்தில் உள்ள எந்தவொரு அமைப்பு அல்லது அதிகாரம் தொடர்பான இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தவொரு விதிகளையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்துவதற்கான விதிகளும் இடம் பெற்றிருக்கும்


நிதி நெருக்கடி நிலை (Financial Emergency)


இந்திய அரசியலமைப்பின் 360-வது பிரிவு நிதி நெருக்கடி நிலை குறித்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதிலோ அல்லது அதன் எந்தப் பகுதியிலோ நிதி நிலைத்தன்மை (Financial Stability) அல்லது கடன் நம்பகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால், அதனை அறிவிக்கும் வகையில் அவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டு நிதி அவசரநிலையை அறிவிக்கலாம்.


இந்தியாவில் எத்தனை முறை அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது?


இந்தியாவில் இதுவரை மூன்று முறை அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது:


1. முதல் அவசரநிலை, 1962-ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, போர்க் காரணங்களுக்காக அறிவிக்கப்படுத்தப்பட்டது.


2. இரண்டாவது அவசரநிலை 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அப்போதைய போரின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.


3. மூன்றாவது அவசரநிலை ஜூன் 25, 1975 அன்று "உள்நாட்டு அமைதியின்மை" காரணமாக அறிவிக்கப்பட்டது. குறிப்பு: "உள்நாட்டு அமைதியின்மை" (internal disturbance) என்ற வார்த்தை, 1978-ஆம் ஆண்டின் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது.






Original Link: Emergency back in focus


Share:

முன்பக்க முகப்புச் சீட்டில் ‘100%’ எனக் குறிப்பிட்டு, பின்பக்கத்தில் மறுப்பு அறிவிப்புகளை வெளியிட்டதற்காக இரண்டு முன்னணி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஏன் அபராதம் விதித்தது? -வினீத் பல்லா

'Mrs Bectors' நிறுவனத்தின் '100%  கோதுமை மாவு ரொட்டி (Atta Bread) மற்றும் 'Storia' நிறுவனத்தின் '100% தேங்காய் நீர் (coconut water) ஆகிய தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் இருந்ததைக் கண்டறிந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, அந்நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது.


பழச்சாறுகள் முதல் ரொட்டி வகைகள் வரை, ஒரு தயாரிப்பின் கலப்படமற்ற தரத்தை நுகர்வோருக்கு உறுதிப்படுத்தும் நோக்கில் "100%" என்ற குறியீடு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சந்தைப்படுத்தல் உத்தியாக உள்ளது.


இருப்பினும், இந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட இரண்டு தனித்தனி உத்தரவுகளில், 'Mrs. Bectors Food Specialities Ltd' மற்றும் 'Storia Foods and Beverages Pvt Ltd' ஆகிய இரண்டு முக்கிய உணவு மற்றும் பான நிறுவனங்கள் மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)) தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது. இந்நிறுவனங்களின் தயாரிப்புகளின் உறைகள் மற்றும் விளம்பரப் பொருட்களில் "100%" என்ற வாசகத்தை முக்கியமாகப் பயன்படுத்தி, தவறான விளம்பரங்களை வெளியிட்டது மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் (unfair trade practices) ஈடுபட்டது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறும் ஆணையம் உத்தரவிட்டது.


இவ்விரு வழக்குகளிலும் 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019' (Consumer Protection Act) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு தயாரிப்பைப் பற்றித் தவறாக விவரிப்பது, பொய்யான உத்தரவாதம் அளிப்பது அல்லது முக்கியமான தகவல்களை வேண்டுமென்றே மறைப்பது ஆகியவற்றை "தவறாக வழிநடத்தும் விளம்பரம்" (misleading advertisement) என்று வரையறுக்கும் இச்சட்டத்தின் பிரிவு 2(28)-ஐ மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) பயன்படுத்தியது. அதேபோல், பொருட்களின் தரம் அல்லது கலவை குறித்துத் தவறான தகவல்களை அளிப்பதை "நியாயமற்ற வர்த்தக நடைமுறை" (unfair trade practice) என்று வரையறுக்கும் பிரிவு 2(47)-ஐயும் அது அடிப்படையாகக் கொண்டது.


இந்த உத்தரவுகளுக்கான ஒழுங்குமுறைச் சூழலை 'இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்' (Food Safety and Standards Authority of India (FSSAI)) உருவாக்கியிருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட ஓர் அறிவுறுத்தலில், "100%" என்ற சொல்லைப் பயன்படுத்தும் பிராண்டுகளின் போக்கு அதிகரித்து வருவதை உணவு ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது. விளம்பர விதிமுறைகளில் இச்சொல்லுக்கு வரையறை ஏதுமில்லை என்பதையும், இதன் பயன்பாடு "முழுமையான தூய்மை அல்லது மேன்மை குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் சந்தையில் உள்ள மற்ற போட்டித் தயாரிப்புகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்று நுகர்வோர் நம்புவதற்கு வழிவகுக்கலாம்" என்பதையும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வலியுறுத்தியது.


100% கோதுமை மாவு ரொட்டி (Atta Bread)


'English Oven' பிராண்ட் ரொட்டியைத் தயாரிக்கும் 'Mrs. Bectors Food Specialities Ltd' நிறுவனத்திற்கு எதிரான வழக்கில், இத்தகைய 'தூய்மை குறித்த தவறான எண்ணம்' என்பதே முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. அந்நிறுவனத்தின் "100% கோதுமை மாவு ரொட்டி" மற்றும் "100% முழு கோதுமை ரொட்டி" (Whole Wheat Bread) ஆகியவற்றுக்கான விளம்பரங்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தானாக முன்வந்து (suo-motu) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.



விசாரணையின் போது, ​​அந்த ரொட்டியில் இருந்த உண்மையான கோதுமை மாவு (atta) அளவு 87% மட்டுமே என்பதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா) எதுவும் சேர்க்கப்படாமல், கோதுமை மாவு மட்டுமே "ஒரே தானிய மூலமாக" பயன்படுத்தப்பட்டது என்பதை உணர்த்துவதற்காகவே "100%" என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அந்நிறுவனம் அதை நியாயப்படுத்தியது. ஒரு ரொட்டியை "முழு கோதுமை ரொட்டி" (Whole Wheat Bread) என வகைப்படுத்த குறைந்தபட்சம் 75% முழு கோதுமை மாவு இருக்க வேண்டும் என்று கூறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) லேபிளிங் விதிமுறைகளையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது. தங்கள் தயாரிப்பில் 87% கோதுமை மாவு இருந்ததால், அந்தக் குறியீடு நியாயமானதே என்று அவர்கள் வாதிட்டனர்.


இதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நிராகரித்தது. ஒரு தயாரிப்பை 'அட்டா பிரட்' (முழு கோதுமை மாவு ரொட்டி) என வகைப்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) விதிமுறைகள் குறைந்தபட்சம் 75% அளவை நிர்ணயித்திருந்தாலும், அதை '100% அட்டா பிரட்' போன்ற நிபந்தனையற்ற மற்றும் முழுமையான கூற்றை முன்வைப்பதற்கான நியாயமாக மாற்றிக்கொள்ள முடியாது என்று அது குறிப்பிட்டது.


சாதாரண நுகர்வோர் ஒருவர், அக்குறியீட்டைப் பார்த்து, அத்தயாரிப்பு முழுவதுமாக கோதுமை மாவால் (அட்டா) ஆனது என்றுதான் புரிந்துகொள்வார் என்று அது சுட்டிக்காட்டியது. "'100%' என்ற குறியீட்டுச் சொல் முழுமையானது மற்றும் தெளிவானது. இதில் எந்தவிதமான தளர்வுக்கோ அல்லது மாற்று விளக்கத்திற்கோ இடமில்லை" என்று தனது உத்தரவில் கூறிய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), இந்த நேரடி அர்த்தத்திற்குப் பொருந்தாத ஒரு தயாரிப்புக்கு இத்தகைய கூற்றை முன்வைப்பது உண்மையான நிலைக்கு முரணானது என்றும் தெரிவித்தது.


'100% இளநீர்' (Tender Coconut Water)


Storia Foods and Beverages நிறுவனத்திற்கு எதிரான வழக்கிலும் இதே போன்ற சட்டரீதியான அணுகுமுறையே பின்பற்றப்பட்டது. இதில், அந்நிறுவனத்தின் "100% இளநீர்" மற்றும் மாதுளை, கலப்புப் பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு "100% பழச்சாறு" வகைகளை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஆய்வு செய்தது.


ஸ்டோரியா நிறுவனத்தின் இளநீர் பழத்திலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட புதிய இளநீர் அல்ல என்பதையும், அது 9.6% செறிவூட்டப்பட்ட இளநீர் சாற்றிலிருந்து (coconut water concentrate) மீண்டும் தயாரிக்கப்பட்டது என்பதையும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கண்டறிந்தது. அதேபோல, அதன் "100% பழச்சாறு" வகைகளில் பெரும்பகுதி தண்ணீராகவே இருந்தது. பழக்கூழ் அல்லது செறிவூட்டப்பட்ட சாற்றின் அளவு வெறும் 4% முதல் 16% வரை மட்டுமே இருந்தது. மேலும், தங்கள் இளநீர் "வைரஸை எதிர்க்கிறது" (Combats Virus) மற்றும் "சோர்வைப் போக்குகிறது" (Kills Fatigue) என்று கூறி, அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் எந்தவித ஆதாரமும் இன்றி சில உடல்நலம் சார்ந்த கூற்றுகளை வெளியிட்டிருந்தது.


செறிவூட்டப்பட்ட சாறுகளிலிருந்து (concentrates) மீண்டும் திரவமாக்கி (reconstitution) பழச்சாறுகளைத் தயாரிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளிப்பதாக Storia நிறுவனம் வாதிட்டது. தனது உற்பத்தி செயல்முறை சட்டத்திற்கு உட்பட்டது என்றும், தயாரிப்பு "மீண்டும் நீர்த்த நிலையில் தயாரிக்கப்பட்டது” ​​(reconstituted) என்ற குறிப்பை உறையின் பின்புறம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால், முன்புறத்தில் உள்ள "100%" என்ற கூற்று சரியானது என்றும் அந்நிறுவனம் வாதாடியது.


இருப்பினும், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உற்பத்தி முறைக்கும், மக்களைத் தவறாக வழிநடத்தும் சந்தைப்படுத்தல் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தெளிவாகச் சுட்டிக்காட்டியது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மீண்டும் திரவமாக்கும் முறையை அனுமதித்தாலும், நீர்க்கச் செய்யப்பட்டு மீண்டும் திரவமாக்கப்பட்ட ஒரு தயாரிப்பை, நீர்க்கச் செய்யப்படாத இயற்கையான தயாரிப்பாகக் காட்ட உற்பத்தியாளருக்கு அது உரிமை அளிக்கவில்லை என்று ஆணையம் தீர்ப்பளித்தது.




பொருளின் உறையின் பின்புறம் மிகச்சிறிய எழுத்துக்களில் உள்ள குறிப்புகள் குறித்துப் பேசிய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), அவை முன்புறத்தில் உள்ள பெரிய அளவிலான கூற்றுகள் ஏற்படுத்தும் தவறான பிம்பத்தைச் சரிசெய்யாது என்று கூறியது. "இயல்பாகவே தவறான பிம்பத்தை உருவாக்கும் முன்புறக் கூற்றை, மூலப்பொருள் பட்டியலில் மிகச்சிறிய எழுத்துக்களில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்படும் ஒரு தொழில்நுட்பக் குறிப்பு சரிசெய்துவிடாது" என்று அந்த உத்தரவு குறிப்பிட்டது. மேலும், "100% இளநீர்" (Tender Coconut Water) என்று குறிப்பிடப்பட்ட பொருளை வாங்கும் ஒரு சாதாரண நுகர்வோர், அது செறிவூட்டப்படாமலும் மீண்டும் நீர்க்கச் செய்யப்படாமலும் இயற்கையான வடிவிலேயே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அது கூறியது.


தொழில்நுட்பரீதியான விதிமுறை இணக்கம் ஒரு 'பாதுகாப்புக் கவசம்' அல்ல


இரண்டு வழக்குகளிலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளைத் தொழில்நுட்ப ரீதியாகப் பின்பற்றியதை நிறுவனங்கள் ஒரு தற்காப்பு வாதமாகப் பயன்படுத்த முயன்றன. இருப்பினும், Storia நிறுவனத்தின் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், உற்பத்தி விதிகளைப் பின்பற்றுவது என்பது ஏமாற்றும் விளம்பரங்களுக்கு ஒரு "பாதுகாப்புக் கவசமாக" (safe harbour) அமையாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தீர்ப்பளித்தது.


Bectors நிறுவனத்திற்கு எதிரான உத்தரவில், "வாங்குபவரே விழிப்புடன் இருக்க வேண்டும்" (caveat emptor) என்ற பாரம்பரியக் கோட்பாடு, 2019-ம் ஆண்டுச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் "குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது" என்று அது குறிப்பிட்டது. இப்போது பொறுப்பு என்பது "விற்பனையாளரே விழிப்புடன் இருக்க வேண்டும்" (caveat venditor) என்ற கோட்பாட்டை நோக்கி மாறியுள்ளது.



Original Link : ‘100%’ on front label, disclaimers on the back: Why CCPA fined two major brands


Share:

கடவுச்சீட்டு (passport) குடியுரிமைக்கான சான்று இல்லையென்றால், எதுதான் சான்று? இந்தியாவின் பல்வேறு சட்டங்கள் என்ன சொல்கின்றன? -தீப்திமான் திவாரி

குடியுரிமைக்கு சான்றாக கடவுச்சீட்டு (Passport) : தற்போதைய விவாதம் இந்திய அமைப்பின் ஒரு தனித்துவமான நிலையை வெளிப்படுத்துகிறது. பல நாடுகளைப் போலல்லாமல், இந்தியா அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான குடியுரிமைச் சான்றிதழை வழங்குவதில்லை. அப்படியென்றால், குடியுரிமை எவ்வாறு நிறுவப்படுகிறது?


இந்தியக் கடவுச்சீட்டு (Passport) என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் என்றும், அதை குடியுரிமைக்கான (citizenship) ஒரு முழுமையான சான்றாகக் கருதக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) புதன்கிழமை தெளிவுபடுத்தியது. கடவுச்சீட்டு சேவை தினத்தில் (Passport Seva Divas) வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான இந்தியர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகவும் அதிகாரப்பூர்வமான ஆவணமாகக் கடவுச்சீட்டு விளங்குகிறது. இதில் 'இந்தியக் குடியரசு' (Republic of India) என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அரசாங்க அதிகாரிகளின் சரிபார்ப்புக்குப் பிறகே வழங்கப்படுகிறது.


இருப்பினும், வெளியுறவு அமைச்சகத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள ஒரு சட்ட நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்று அரசாங்கம் திருப்தியடைந்த பின்னரே கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால், கடவுச்சீட்டு மட்டுமே ஒருவருக்கான குடியுரிமையை உருவாக்குவதில்லை அல்லது, ஒரு நீதிமன்றத்தில் ஒருவரின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, ​​கடவுச்சீட்டு மட்டுமே குடியுரிமைக்கான இறுதியான அல்லது மறுக்க முடியாத சான்றாகக் கருதப்படுவதில்லை.


இந்த சர்ச்சை, இந்தியா பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஒரு வலுவான கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. கடவுச்சீட்டு குடியுரிமைக்கான சான்று இல்லையென்றால், வேறு எதுதான் சான்று?


குடியுரிமை என்பது ஒரு சட்டப்பூர்வமான தகுதி, ஆவணம் அல்ல.


இதற்கான விடை, இந்தியச் சட்டத்தின் (Indian law) கட்டமைப்பில் அடங்கியுள்ளது. அரசியலமைப்பின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகளும், 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டமும், யார் இந்தியக் குடிமகன் என்பதை வரையறுக்கின்றன. இருப்பினும், அரசியலமைப்போ அல்லது அந்தச் சட்டமோ, குடியுரிமைக்கான சான்றாக எந்தவொரு குறிப்பிட்ட ஆவணத்தையும் அடையாளம் காட்டவில்லை.



மாறாக, பிறப்பு (birth), பெற்றோர் வழி உறவு (parentage), வசிப்பிடம் (domicile) அல்லது இயல்பு குடியுரிமை பெறுதல் (naturalisation) போன்ற உண்மைகளிலிருந்து எழும் ஒரு சட்டப்பூர்வமான தகுதியாகவே குடியுரிமை கருதப்படுகிறது. ஆவணங்கள் அந்த உண்மைகளுக்கான சான்றுகளாகச் செயல்படுகின்றன. இந்தியாவில் பிறந்த ஒருவருக்கு, குடியுரிமையானது அவர் எப்போது பிறந்தார் என்பதையும், சில சமயங்களில், அவரது பெற்றோரின் குடியுரிமை நிலையையும் சார்ந்துள்ளது. இயல்பு குடியுரிமை பெற்ற ஒருவருக்கு, அது சட்டப்பூர்வ நிபந்தனைகளுக்கு இணங்குவதைப் பொறுத்தது.


பிப்ரவரி 2020-ல் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த, பெரிதாகக் கவனிக்கப்படாத ஒரு பதிலில் இந்த வேறுபாடு வெளிப்படுகிறது. ஆதார் அட்டை (Aadhaar card), கடவுச்சீட்டு (passport), வாக்காளர் அடையாள அட்டை (voter ID), பான் அட்டை (PAN card) அல்லது பிறப்புச் சான்றிதழ் (birth certificate) ஆகியவை குடியுரிமைக்கான செல்லுபடியாகும் சான்றுகளா என்று கேட்கப்பட்டபோது, ​​அரசு குறிப்பிட்டதாவது, "இந்தியக் குடியுரிமையைப் பெறுவது என்பது 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. பிறப்பு, வம்சாவளி, பதிவு, இயல்புரிமை (naturalisation) அல்லது ஒரு பகுதி இணைக்கப்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். குடியுரிமையைப் பெறுவதற்கும் தீர்மானிப்பதற்கும் ஆன தகுதி நிலையானது 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் விதிகளின்படியே அமைகின்றன."


முக்கியமாக, கேள்வியில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் எதையும் குடியுரிமைக்கான ஆவணங்களாக அரசாங்கம் அடையாளம் காட்டவில்லை. இருப்பினும், 2003-ம் ஆண்டின் குடியுரிமை விதிகளின்கீழ், சில பிரிவுகளின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையைக் கோருபவர்கள், தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்கத் தங்கள் பெற்றோரின் கடவுச்சீட்டுகளின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.


கடவுச்சீட்டு ஏன் முக்கியமானது? — ஆனால் குடியுரிமைக்கு அது ஏன் முழுமையான சான்றாக அமையாது?


இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படுவதாலும், அது வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும், நடைமுறையில் ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்பதற்கு இது மிக வலுவான சான்றுகளில் ஒன்றாக விளங்குகிறது.


இருப்பினும், சட்டரீதியாகப் பார்க்கும்போது, 'கடவுச்சீட்டுச் சட்டம்' (Passports Act) காரணமாக நிலைமை சற்று சிக்கலானதாக உள்ளது. பொதுநலன் கருதித் தேவை என்று கருதினால், இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவருக்கும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணத்தை வழங்க மத்திய அரசுக்கு இச்சட்டத்தின் பிரிவு 20 அதிகாரம் அளிக்கிறது.


சிறப்புச் சூழல்களில் கடவுச்சீட்டுகளை வழங்க இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சக (MEA) வட்டாரங்கள் தெரிவித்தன. புவிசார் அரசியல் மாற்றங்களால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குடியுரிமையற்றவராக (stateless) மாறும் சூழலில் இது பொருந்தக்கூடும் என்று அதிகாரி ஒருவர் விளக்கினார். அதேபோல, இந்தியாவில் வசிக்கும் ஒருவர் குடியுரிமையற்றவராக இருந்தாலும், அவர் வெளிநாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டிய சூழலிலும் இது பொருந்தலாம்.


வரலாற்றுரீதியாக, இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்திய அதிகாரிகளால் சிறப்புப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2023-ல், கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 20-ன்கீழ் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்குக் கடவுச்சீட்டு வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.


இந்தக் கோட்பாடு அனைத்து ஜனநாயக நாடுகளிலும் பொதுவானது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும், ஒரு நபர் குடிமகன் என்று அரசு ஏற்கனவே தீர்மானித்ததன் அடிப்படையிலேயே கடவுச்சீட்டுகள் (passports) வழங்கப்படுகின்றன. ஒரு கடவுச்சீட்டு ஒருவரை குடிமகனாக மாற்றிவிடாது. அது பயணத்திற்கான ஒரு ஆவணமாக மட்டுமே செயல்படுகிறது. இதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அந்த இரு நாடுகளிலும் மிகவும் வலுவான குடிமக்கள் பதிவு அமைப்புகள் (civil registration system) உள்ளன. மேலும், மேலும், இயல்புரிமை மூலம் குடியுரிமை பெற்றவர்களுக்கு (naturalised citizens), முதன்மைச் சட்டப்பூர்வச் சான்றாகச் செயல்படும் முறையான குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


சட்ட விதிகளுக்கும் பொதுமக்களின் புரிதலுக்கும் இடையே பெரும்பாலும் வேறுபாடுகள் இருப்பதால்தான் இந்தக் சர்ச்சை எழுந்தது என்று முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் கூறினார்.


"கடவுச்சீட்டு குடியுரிமையை உருவாக்குவதில்லை. நீதிமன்றத்தில் குடியுரிமை தொடர்பான விவகாரம் சவால் செய்யப்படும்போது, குடியுரிமையைத் தீர்மானிக்கக்கூடிய சட்டப்பூர்வ ஆவணமும் அதுவல்ல," என்று ராவ் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார். "பல ஜனநாயக நாடுகளைப் போலவே, இந்தியாவும் குடியுரிமைச் சட்டத்திற்கும் கடவுச்சீட்டுச் சட்டத்திற்கும் இடையே வேறுபாடு காட்டுகிறது."


நீதிமன்றங்கள் என்ன கூறியுள்ளன?


நீதிமன்றத் தீர்ப்புகள் இதற்கு எளிய அல்லது ஒரே மாதிரியான பதிலை வழங்குவதில்லை.

கடந்த ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மீதான விசாரணைகளின்போது, நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு பின்வருமாறு குறிப்பிட்டது. அதில், "நீங்கள் இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.... அந்தப் பட்டியலில் உள்ள 11 ஆவணங்களும் வெறும் உதாரணங்கள் மட்டுமே என்று நாங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளோம். அந்த 11 ஆவணங்களைப் பார்த்தால், கடவுச்சீட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களைத் தவிர, மற்றவை எதுவும் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரம் அல்ல" என்று குறிப்பிட்டிருந்தது.


இந்தக் கருத்து, வாக்காளர் சரிபார்ப்புக்காக தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்ற ஆவணங்களைவிட, கடவுச்சீட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களும் அதிக ஆதார மதிப்பைக் கொண்டுள்ளன என்பதை உணர்த்தியது.



இருப்பினும், குடியுரிமை தொடர்பான சர்ச்சைகளை நேரடியாகக் கையாளும் வழக்குகளில், கடவுச்சீட்டுகளுக்கு அப்பாலும் உள்ள ஆதாரங்களை நீதிமன்றங்கள் பெரும்பாலும் பரிசீலித்துள்ளன.


2013-ல், சட்டவிரோதக் குடியேறிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்கள், (பின்னர் ரத்து செய்யப்பட்ட) கடவுச்சீட்டுகள், ஆதார் அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த போதிலும், மும்பை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்தது.


"விண்ணப்பதாரர்களில் ஒருவரின் பிறப்புச் சான்றிதழ் மட்டும் போதுமானதாக இருக்காது. ஏனெனில், அத்தகைய விண்ணப்பதாரர் தனது பெற்றோர் இந்தியக் குடிமக்களாக இருந்தனர் என்பதை நிரூபிப்பது சட்டப்படி அவசியமாகும். அத்தகைய ஆதாரம் எதுவும் இங்கு சமர்ப்பிக்கப்படவில்லை," என்று நீதிபதி கே.யு. சண்டிவால் குறிப்பிட்டார்.


2005-ம் ஆண்டு 'சர்பானந்த சோனோவால் vs இந்திய அரசு' (Sarbananda Sonowal vs Union of India) வழக்கின் தீர்ப்பில், குடியுரிமை கோரும் நபரே அக்குடியுரிமையை நிரூபிப்பதற்கான பொறுப்பைக் கொண்டிருப்பார் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. "ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் என்று உரிமை கோரும் நபர் மீதே நிரூபிக்கும் பொறுப்பைச் சுமத்துவதற்குச் சரியான மற்றும் வலுவான காரணமும் உள்ளது," என்று நீதிமன்றம் கூறியது.


இதற்கு முன்பே, 'ஆந்திரப் பிரதேச மாநிலம் vs அப்துல் காதர்-1962' (Andhra Pradesh vs Abdul Khader) வழக்கில், உச்சநீதிமன்றம் கடவுச்சீட்டை (passport) தேசியத்துக்கான சான்றாகக் கருதினாலும், குடியுரிமையை உறுதி செய்வதற்கு முன் பிறப்பு, நிரந்தர வசிப்பிடம் மற்றும் இடம்பெயர்வு வரலாறு போன்ற அரசியலமைப்பு அளவுகோல்களையும் அது பரிசீலித்தது.





ஒரு பெரிய சிக்கல் : இந்தியாவிடம் அனைவருக்கும் பொதுவான குடியுரிமை ஆவணம் எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.


தற்போதைய விவாதம் இந்திய அமைப்பின் ஒரு தனித்துவமான தன்மையை வெளிப்படுத்துகிறது. பல நாடுகளைப் போலன்றி, இந்தியா தனது அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான குடியுரிமைச் சான்றிதழை வழங்குவதில்லை.


இந்தியாவில் குடியுரிமைச் சான்றிதழ்கள் உள்ளன; ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. அதாவது, குடியுரிமைச் சட்டத்தின் 5 மற்றும் 6-வது பிரிவுகளின் கீழ் பதிவு அல்லது இயல்புரிமை (naturalisation) மூலம் குடியுரிமை பெறுபவர்களுக்கு மட்டுமே இவை வழங்கப்படுகின்றன. அத்தகைய நபர்கள் தாங்கள் குடியுரிமை பெற்றதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ சான்றிதழ்களைப் பெறுகிறார்கள்.


இருப்பினும், பெரும்பான்மையான இந்தியர்கள் பிறப்பாலேயே குடிமக்களாக உள்ளனர். அவர்களுக்கு அதற்கு இணையான குடியுரிமைச் சான்றிதழ் எதுவும் வழங்கப்படுவதில்லை.


இதன் விளைவாக, இந்தியாவில் குடிமக்கள் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒரே குடியுரிமை ஆவணம் எதுவும் இல்லை.


இந்த இடைவெளிக்கு ஒரு காரணம் வரலாற்றுப் பின்னணியாகும். இந்தியாவின் குடிமக்கள் பதிவு முறை பல ஆண்டுகளாகச் சீரற்ற முறையில் வளர்ந்து வந்தது. மேலும், அனைவருக்கும் பிறப்புப் பதிவு என்பது மிகச் சமீபத்திய நிகழ்வாகும். வயதான லட்சக்கணக்கான இந்தியர்களைப் பொறுத்தவரை, குடியுரிமை என்பது ஒரே ஒரு உறுதியான ஆவணத்தின் மூலம் நிறுவப்படுவதற்குப் பதிலாக, வாக்காளர் பட்டியல், பள்ளிச் சான்றிதழ்கள், நில ஆவணங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் தொகுப்பிலிருந்து பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.




தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) : குடியுரிமை ஆவணத்தைத் தேடும் முயற்சி


அத்தகைய ஆவணத்தை உருவாக்குவதற்கு இந்தியா மிக நெருக்கமாகச் சென்ற முயற்சி 'தேசியக் குடிமக்கள் பதிவேடு' (National Register of Citizens (NRC)) ஆகும்.


இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டிற்கான (National Register of Citizens (NRC)) சட்டக் கட்டமைப்பு, வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் 'குடியுரிமை விதிகள்-2003' (Citizenship Rules) மூலம் உருவாக்கப்பட்டது. இந்த விதிகள், உள்ளூர் மற்றும் மாநில அளவிலான பதிவேடுகளுடன் சேர்த்து 'இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேடு' (National Register of Indian Citizens) ஒன்றை உருவாக்கவும், குடியுரிமையுடன் இணைக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கவும் திட்டமிட்டிருந்தன. குடியுரிமைச் சரிபார்ப்புக்கு முன்னதாக அடையாளச் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கும் (UIDAI) இடையே ஏற்பட்ட ஒரு மோதலின்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த யோசனை மீண்டும் வெளிப்பட்டது.


'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுடனான உரையாடலில், முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங், ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்பட முடியாது என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வாதிட்டதை நினைவு கூர்ந்தார்.


அப்போது, "ஆதார் பயன்பாடு பெருமளவிலான ஊடுருவல்காரர்கள் ஆவணங்களைப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் கூறியிருந்தோம். இது குறித்து பிரதமர் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் நந்தன் நிலேகனியும் கலந்துகொண்டார். நாங்கள் எங்கள் தரப்பை முன்வைத்தோம். அது குடியுரிமைக்கான சான்றாக இருக்க முடியாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன். ஆதார் சரிபார்ப்பு என்பது மேலோட்டமான ஒன்றுதான் என்பதை நிலேகனி ஒப்புக்கொண்டார்," என்று சிங் கூறினார்.



"கடவுச்சீட்டைப் பொறுத்தவரை, அதன் சரிபார்ப்பு நிலைகள் வலுவானவை. ஆனால் கடவுச்சீட்டு ஒரு குடியுரிமை ஆவணமாக வடிவமைக்கப்படவில்லை. அது எப்போதும் ஒரு பயண ஆவணமாகவே கருதப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) யோசனை, குடியுரிமைக்கான ஒரு முறையான சான்றை வழங்குவதோடு பிணைக்கப்பட்டிருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.


இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஒருபோதும் நாடுதழுவிய அளவில் செயல்படுத்தப்படவில்லை. இந்த நடவடிக்கை அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரியதாக மாறியதுடன், இறுதியில் குடியுரிமை (திருத்த) சட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை மற்றும் நாடு தழுவிய குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கை குறித்த அச்சங்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.


பெரிய அளவிலான தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடவடிக்கை அசாம் மாநிலத்தில் மட்டுமே 2015 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு விண்ணப்பதாரர்கள், தாங்களோ அல்லது தங்கள் முன்னோர்களோ 1971-ம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்கு முந்தைய அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆவண முரண்பாடுகள், எழுத்துப்பிழை வேறுபாடுகள், காணாமல் போன பதிவுகள் மற்றும் குடும்ப உறவுகளை நிரூபிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக, கிட்டத்தட்ட 19 லட்சம் பேர் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.


"காணாமல் போன அல்லது முரண்பாடான ஆவணங்களால் குடியுரிமை ஒருபோதும் பாதிக்கப்படாத வகையில், வலுவான மற்றும் விரிவான குடிமைப் பதிவு, உலகளாவிய பிறப்புப் பதிவு மற்றும் நம்பகமான காப்பகப் பதிவுகள் தேவை என்பதே இதிலிருந்து கிடைக்கும் பெரிய பாடம்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ராவ் வாதிட்டார்.


கடவுச்சீட்டு சர்ச்சை வெளிப்படுத்திய முக்கியமான முரண்பாடு இதுவாக இருக்கலாம். இந்தியாவில் ஒரு விரிவான குடியுரிமைச் சட்டம் உள்ளது. ஆனால், அதன் பெரும்பாலான குடிமக்களுக்கு, அவர்கள் இந்த நாட்டை சார்ந்தவர்கள் என்பதை உறுதியாக நிரூபிக்கும் ஒரே ஒரு ஆவணம் கூட இல்லை.


Original Link: If passport not a proof of citizenship, what is? What India’s various laws say


Share: