'கிரேட் நிக்கோபார் திட்டம்' என்பது இந்தியாவின் முக்கியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உத்தியா? அல்லது பெரும் சுமையா? -சி பி ராஜேந்திரன்

தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) இந்த கிரேட் நிக்கோபார் திட்டம் குறித்த முடிவு, கட்டுப்பாடற்ற உத்திமுறை காரணங்களுக்காகச் சுற்றுச்சூழலின் சமநிலையைத் தியாகம் செய்யக்கூடிய ஒரு ஆபத்தான எதிர்காலத்திற்கு வழிவகை செய்கிறது.


கிரேட் நிக்கோபார் தீவை இந்தியாவின் சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் போன்ற நாடுகளின் தரத்திற்கு இணையாக மாற்றும் நோக்கில், அங்கு ஒரு சர்வதேச சரக்கு மாற்று முனையம் (International transhipment port), ஒரு விமான நிலையம் மற்றும் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு புதிய நகரத்தை உருவாக்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் அங்குள்ள ஒட்டுமொத்த இயற்கைச் சூழலையும் பேரழிவிற்கு உள்ளாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பிராந்திய அளவிலான போட்டி நாடுகளைவிடச் சிறந்த ஆழ்கடல் துறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் பல்வேறு தளவாடப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது.


கிழக்குக் கடற்கரையில் உள்ள ஏழு வருவாய் கிராமங்களைத் (Revenue villages) தவிர, இந்தத் தீவு முற்றிலும் இரண்டு பூர்வீகப் பழங்குடியின சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வெறும் 229-நபர்களை மட்டுமே கொண்ட, மிகவும் நலிவடைந்த பழங்குடி குழுவான (Particularly Vulnerable Tribal Group (PVTG)) 'Shompen' பழங்குடியினர் மற்றும் சுமார் 1,200 நபர்களைக் கொண்ட பட்டியல் பழங்குடியினரான (Scheduled Tribe) 'தெற்கு நிக்கோபாரிஸ்' (Southern Nicobarese) சமூகத்தினர் ஆவர். இவர்களது முன்னோர்களின் பாரம்பரியக் காடுகளை அழிப்பது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், இவர்களது வாழ்விடம், கலாச்சாரம் மற்றும் எதிர்காலத்தையே முழுமையாக அழித்துவிடும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

கிரேட் நிக்கோபார் தீவு இந்தியாவின் வெறும் நான்கு பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றான 'சுந்தாலாந்து பல்லுயிர் பெருக்க மையத்தின்' (Sundaland Biodiversity Hotspot) ஒரு பகுதியாகும். இது 2013-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) "உயிர்க்கோளக் காப்பகமாக" அறிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்தத் தீவு, பூக்கும் தாவரங்கள், பெரணிகள் (Ferns), பூவா விதைத் தாவரங்கள் (gymnosperms), பாசித் தாவரங்கள் (bryophytes) மற்றும் லைக்கன்கள் என 650-க்கும் மேற்பட்ட தாவர வகைகளின் தாயகமாக விளங்குகிறது. மேலும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய ஆமையான 'லெதர்பேக் கடல் ஆமைகள்' முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மிகப்பெரிய இடங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. தென்மேற்குப் பருவமழைக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த வெப்பமண்டலக் காடுகளில், தற்போது சுமார் பத்து லட்சம் மரங்கள் வெட்டுவதற்காகக் குறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


கிரேட் நிக்கோபார் தீவு உலகின் மிக அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் அமைந்துள்ளது.  ஆனால், அங்கு திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டம் இந்த புவியியல் ஆபத்து குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை. இந்தத் தீவு இந்தோனேசியாவின் பான்டா அச்சே (Banda Aceh) பகுதிக்கு மிக அருகில் உள்ளது.  இங்குதான் சுமத்ராவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. இந்திய புவித்தட்டு (Indian Plate) தென்கிழக்கு ஆசியாவின் கீழ்நோக்கி நகரும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 15 முதல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்து, புவித்தட்டுகளின் எல்லையில் 1,200 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்திற்குப் பிளவை ஏற்படுத்தியதுடன், கடலுக்கு அடியில் பில்லியன் கணக்கான டன் எடையுள்ள பாறைகளையும் நகர்த்தியது. இந்த நகர்வு பெரும் அளவிலான கடல்நீரை இடமாற்றம் செய்து, ஒரு மிகப்பெரிய சுனாமியை (Tsunami) உருவாக்கியது. இதன் விளைவாக, கிரேட் நிக்கோபார் தீவே திடீரென 3 முதல் 4 மீட்டர் வரை கடலுக்குள் மூழ்கியது. இது ஏதோ தற்செயலாக நடந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வு அல்ல, மாறாக புவித்தட்டுகள் நகரும் தொடர்ச்சியான இயற்கை சுழற்சி ஆகும்.


‘Bulletin of the Seismological Society of America’ போன்ற சக விஞ்ஞானிகளால் சரிபார்க்கப்பட்டு புகழ்பெற்ற இதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், இப்பகுதி தொடர்ந்து நில அதிர்வு அழுத்தம் அதிகரிப்பதும், பின்னர் அது வெளியாவதுமான ஒரு நிலையான சுழற்சியைப் பின்பற்றுகிறது என்பதைக் காட்டுகின்றன. புவி நிலைநிறுத்த அமைப்பு (Global Positioning System (GPS)) தரவுகளின்படி, பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் புவித்தட்டுகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது, நிலப்பரப்பு மெதுவாக மேல்நோக்கி உயர்கிறது. இந்த அழுத்தம் பின்னர் பெரிய நிலநடுக்கங்களின் போது ஒரேடியாக வெளிவிடப்படுகிறது. தற்போது நிக்கோபார் பகுதி இரண்டு நிலநடுக்கங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் நுழைந்துள்ளதால், அடுத்த பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வரை நிலமும் கடல் படுக்கையும் மீண்டும் மெதுவாக மேல்நோக்கி உயர்ந்து வருகின்றன.


சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் போன்ற நிலையான புவியியல் அமைப்பைக் கொண்ட நாடுகளைப் போலல்லாமல், கிரேட் நிக்கோபார் பகுதி தொடர்ந்து மெதுவாக உயர்வதும், திடீரென உள்வாங்குவதுமான சுழற்சிகளை எதிர்கொள்கிறது. இத்தகைய நிலையற்ற நிலப்பரப்பில் பெரிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது, வெறும் பொறியியல் தொழில்நுட்பத்தால் மட்டுமே புவித்தட்டுகளின் அசைவுகளை வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரம் கோடி ரூபாயைப் பணயம் வைப்பதற்குச் சமமாகும்.


இந்தப் பிராந்தியத்தில் எதிர்பார்க்கப்படும் பருவநிலை மாற்றம் மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகியவற்றின் காரணமாக, இந்த நிலநடுக்க அபாயம் இன்னும் தீவிரமானதாக மாறுகிறது. முன்மொழியப்பட்டுள்ள இந்த பெரிய அளவிலான திட்டம், கடல்மட்ட உயர்வும் மற்றும் நிலம் உள்வாங்குதலும் சந்திக்கக்கூடிய மிகச்சரியான இடத்தில் அமையவிருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் (Defence Research and Studies (DRaS)) அமைப்பின் கட்டுரையில் சுதிர் பிள்ளை கூறுகையில், நிலவியல் ரீதியாக மிகவும் ஆபத்தான மற்றும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ள இந்தத் தீவில், ஒரு பெரிய துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் அமைப்பது என்பது பொறியியல் ரீதியான ஆபத்து மட்டுமல்ல, அது ஒரு இராணுவத் தந்திரோபாய ரீதியான ஆபத்தும் கூட என்று எச்சரிக்கிறார். ஏனெனில், நிலநடுக்கத்தால் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் போகும் உள்கட்டமைப்புகள், எதிரிகளை எதிர்கொள்ளும் ஒரு பாதுகாப்பு முன்கள தளமாக இருக்காது என்றும் மாறாக, அது சுமையாகவே முடியும் என்று குறிப்பிடுகிறார்.


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) ஒரு தெளிவான பொறுப்பைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை தொடர்பான வழக்குகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்வதே அதுவாகும். ஆனால், கிரேட் நிக்கோபார் தீவு வழக்கில், தீர்ப்பாயம் தன் பொறுப்பிலிருந்து தவறிவிட்டது. கிடைக்கக்கூடிய பெருமளவிலான நிபுணர்களின் ஆய்வுகளைக் கவனமாக ஆராய்வதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் வாதங்களைச் சரியான கேள்விகள் ஏதுமின்றி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) அப்படியே ஏற்றுக் கொண்டது. இந்தத் திட்டத்திற்கு “உத்திமுறையிலான முக்கியத்துவம்" இருப்பதாகவும், "போதிய பாதுகாப்பு வழிமுறைகள்" இருப்பதாகவும் கூறி இதற்கு ஒப்புதல் அளித்தது; ஆனால், இந்த வாதங்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது  பரிசீலிக்கவில்லை.


இதைச் செய்வதன் மூலம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) ஒரு ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில், எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதற்கு, உத்திமுறையிலான முக்கியத்துவம் வாய்ந்தது, நாட்டின் பாதுகாப்பு அல்லது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று பெயரிட்டாலே போதும், அது எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதற்கு நீதிமன்றத்தின் ஆதரவு கிடைத்துவிடும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றமும் இதே காரணத்தைக் காட்டித்தான் உத்தரகாண்டில் உள்ள 'சார் தாம்' (Char Dham) சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அதன் விளைவாக இமயமலைப் பகுதியில் நடந்தவை எதிர்பார்த்த ஒரு சோகமான முடிவுதான்: தொடர் பேரிடர்கள், மனித உயிரிழப்புகள் மற்றும் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய மலைப்பகுதி சுற்றுச்சூழல் அமைப்புகள் மிக வேகமாக அழிந்து வருவதுமே அதன் முடிவாக அமைந்தது.



கிரேட் நிக்கோபார் திட்டம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு, ஆராயப்படாத நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்காக, ஒரு பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பை தியாகம் செய்யக்கூடிய ஒரு மோசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


சி பி ராஜேந்திரன், புவி அறிவியல் விஞ்ஞானி மற்றும் அறிவியல், அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் கல்வி ஆகிய துறைகள் குறித்து பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த அறிவியல் தொடர்பாளர் ஆவார்.       

Original Link: Is the Great Nicobar Project a strategic asset or a liability?


Share:

போஜ்சாலா வளாகம் ஒரு இந்து கோவில் என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் ஏன் தீர்ப்பளித்தது? -ஆனந்த் மோகன் ஜே

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வரலாற்றுப் பதிவுகளும் கட்டிடக்கலை சான்றுகளும் அந்தச் சர்ச்சைக்கரிய வளாகம் பார்மர் வம்சத்தைச் சேர்ந்த ராஜா போஜ் உடன் தொடர்புடையது என்பதையும், அது சமஸ்கிருதம் கற்பிக்கும் ஒரு முக்கிய மையமாக விளங்கியது என்பதையும் காட்டுவதாகக் கூறியுள்ளது.


மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) அன்று வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 'போஜ்சாலா-கமல் மௌலா மசூதி' வளாகத்தின் உண்மையான மத அடையாளம் 'போஜ்சாலா' தான் என்றும், அது வாக்தேவி (சரஸ்வதி)-க்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் என்றும் கூறியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம் தார் நகரில் (Dhar) அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடைக்காலக் கட்டடம், நீண்டகாலமாக இரு தரப்பினரிடையே உரிமை கோரப்பட்டு சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் இந்த வளாகத்தை, இந்துக்கள் 'வாக்தேவி' (சரஸ்வதி)-க்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் என்று நம்புகிறார்கள். அதேவேளையில், முஸ்லிம்கள் இதனை 'கமல் மௌலா மசூதி' (Kamal Maula mosque) என்று கருதுகிறார்கள்.


2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி, இந்துக்கள் செவ்வாய்க்கிழமைகளில் அந்த வளாகத்தில் பூசையும், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைகளில் நமாஸும் (தொழுகை) செய்து வந்தனர்.


கடந்த 2024-ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த வளாகத்தை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (Archaeological Survey of India (ASI)) விரிவான ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த வளாகத்தின் உண்மையான தன்மை மற்றும் அடையாளத்தை எவ்வித குழப்பமும் இன்றி தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) அறிக்கையில், தற்போது அங்குள்ள கட்டட அமைப்பானது, அதற்கு முன்னரே அங்கு இருந்த கோவில்களின் பாகங்களைக்கொண்டே கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


வெள்ளிக்கிழமை அன்று, நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, தனது 242 பக்கத் தீர்ப்பில் ஒரு முக்கிய விவரத்தைக் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களின்படி, சர்ச்சைக்குரிய அந்த இடம் பர்மார வம்சத்தைச் சேர்ந்த ராஜா போஜுடன் தொடர்புடைய சமஸ்கிருதக் கல்வி மையமான 'போஜ்சாலா' (Bhojshala) என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம், மத்தியப் பிரதேசத்தின் தார் (Dhar) மாவட்டத்தில் ஒரு காலத்தில் சரஸ்வதி தேவிக்கான கோவில் ஒன்று இருந்தது என்பதை இந்த ஆதாரங்கள் உணர்த்துகின்றன.


நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை எவ்வாறு வழங்கியது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் பின்வருமாறு.


உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. வரலாற்றுப் பதிவுகள் மற்றும் கட்டடக்கலை சான்றுகளின்படி, சர்ச்சைக்குரிய அந்த வளாகம் பர்மார வம்சத்தைச்ச் சேர்ந்த ராஜா போஜுடன் தொடர்புடையது என்றும், அது சமஸ்கிருதக் கல்விக்கான ஒரு முக்கிய மையமாகச் செயல்பட்டது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


'இந்து முன்னணி நீதிக்கான அமைப்பு' (Hindu Front for Justice) மற்றும் பிறர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) இயக்குநர் வெளியிட்டிருந்த உத்தரவின் சில பகுதிகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் அங்கு தொழுகை (நமாஸ்) நடத்த அனுமதி அளித்த அதே வேளையில், போஜ்சாலா (Bhojshala) வளாகத்திற்குள் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கான உரிமைகளை கட்டுப்படுத்தியிருந்த பகுதியே தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் (Dhar) மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள போஜ்சாலா (Bhojshala) மற்றும் சமஸ்கிருத கற்றல் மையத்தின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்து முடிவுகளை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கும், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) அமைப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 'பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் 1958, சட்டத்தின்கீழ் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act (AMASR Act, 1958), பாதுகாக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) வசம் மட்டுமே இருக்கும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


சொத்தின் மீதான உரிமை குறித்த இறுதி முடிவு அல்ல


தற்போதைய இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய சொத்து யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து தான் எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர்கள் இந்தச் சர்ச்சைக்குரிய பகுதிக்கான உரிமையைக் கோருவது போலவே, பிற எதிர்மனுதாரர்கள் மற்றும் வழக்கில் இடையீடு செய்பவர்களின் பல வாதங்கள் அமைந்திருந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.


அயோத்தி ராம்ஜென்மபூமி-பாப்ரி மஸ்ஜித் (Ayodhya Ramjanmabhoomi-Babri Masjid) வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பானது சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை கோரல்கள் தொடர்பான ஒரு உரிமையியல் வழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய வழக்கில், நீதிமன்றம் அந்தச் சர்ச்சைக்குரிய பகுதியின் தன்மையை வரலாற்று ஆவணங்கள், கட்டிடக்கலை அம்சங்கள், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆய்வறிக்கைகள் (ASI) மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானித்துள்ளது.


முஸ்லிம் தரப்பினர் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டு தேதியிட்ட அரசாணை (Ailan) ஒன்றை சமர்ப்பித்தனர்.  அது சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ஒரு மசூதியாக அங்கீகரித்திருந்தது. இருப்பினும், இது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஒரு அரசியலமைப்பு உத்தரவு அல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதி ஏற்கனவே, பண்டைய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (1904) (Ancient Monuments Preservation Act, (AMPA) 1904) ஒரு பழமையான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது. இது 1904-ஆம் ஆண்டிலிருந்தே பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இருந்ததால், தார் (Dhar) சமஸ்தானத்தின் அன்றைய ஆட்சியாளர், ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டு தேதியிட்ட அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.


முஸ்லிம் தரப்பினர் சமர்ப்பித்த வரலாற்றுச் சான்றுகள் 


முஸ்லிம் தரப்பினர் பல்வேறு வரலாற்று ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஹஸ்ரத் மௌலானா கமாலுத்தீன் சிஷ்டி அவர்கள் கி.பி. 1306-07-ஆம் ஆண்டில் (1306-07 AD) இந்த மசூதிக்கு அடிக்கல் நாட்டினார் என்று வாதிட்டனர்.


இருப்பினும், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும், மசூதி என்று உரிமை கோரப்படும் அந்த சர்ச்சைக்குரிய கட்டடம் கி.பி. 1034-ஆம் ஆண்டுக்கு (1034 AD) முன்பு கட்டப்பட்டது என்பதைக் காட்டவில்லை என்று நீதிமன்றம் கூறியது. மேல்முறையீட்டாளர்கள் சமர்ப்பித்த வரலாற்றுப் பதிவுகள், இலக்கியங்கள் மற்றும் அரசாங்க அறிவிப்புகளே அந்த மசூதி கி.பி. 1034-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கட்டப்பட்டது என்பதை நிரூபிப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


நீதிமன்றம் அந்த சர்ச்சைக்குரிய பகுதி ஆரம்பத்திலிருந்தே ஒரு மசூதியாகத்தான் இருந்தது என்ற வாதத்தையும் நிராகரித்தது. ஏனெனில், அந்த நிலம் ஒரு வக்ஃப் (Waqf) சொத்து (இஸ்லாமிய சட்டத்தின்கீழ் தொண்டு நிறுவனங்களுக்காக அல்லது மதக் காரியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளைச் சொத்து) என்பதைக் நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் அங்கு இல்லை.


வரலாற்று ஆவணங்கள் அந்தச் சொத்து ஒரு கொடையாளருக்குச் (Waqif) சொந்தமானது என்பதைக் காட்டவில்லை. மேலும், அந்தச் சொத்தின் உரிமையாளர் வக்ஃப் (Waqf) அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் மற்றும் அவர் அந்தச் சொத்தை எல்லாம் வல்ல இறைவனுக்காக அர்ப்பணித்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.


நீதிமன்றம் தனது தீர்ப்பில், எங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்களின் மூலம் இங்கு ஒரு 'வக்ஃப்' (Waqf) சொத்து உருவாக்கப்பட்டதற்கான எந்தவொரு நிரூபணமும் கிடைக்கவில்லை. எனவே, சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் ஒரு மசூதி இருந்ததாக ஊகம் செய்யவோ அல்லது அப்படியே ஏற்றுக்கொண்டு விடவோ முடியாது என்றும் கூறியுள்ளது.


இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய ஆய்வின் நம்பகத்தன்மை குறித்த குற்றச்சாட்டுகள்


இந்த அகழ்வாராய்ச்சிப் பணியை மேற்கொள்வதற்காகத் தொல்லியல் துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு முக்கியத் தொழில்நுட்பக் குழு உருவாக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குநர் தலைமையிலான ஏழு மூத்த தொல்லியல் ஆய்வுத்துறை நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த  இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். மேலும், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படும்போது, இந்தத் தொல்லியல் ஆய்வின் முழு செயல்முறையையும் நேரில் கண்காணிக்க, மனுதாரர்கள் தரப்பிலிருந்து நியமிக்கப்பட்ட தலா இரண்டு பிரதிநிதிகள் ஆய்வுக் காலம் முழுவதும் உடனிருந்தனர்.


முஸ்லிம் தரப்பினர் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனது அறிக்கையைத் தயாரிப்பதற்காகப் பின்பற்றிய நடைமுறைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர். ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்துவிட்டது.


இந்த ஆய்வானது அறிவியல் பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி, நேர்மையான மற்றும் நடுநிலையான வழியில் நடத்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம். இதில் நிபுணர்கள் பயன்படுத்திய முறைகள் அவர்களின் தனித்துவமான அனுபவ அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். கார்பன் வயதுக் கணிப்பு முறை (Carbon dating) என்பது அந்தப் பொருளின் வயதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறதே தவிர, அது கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய அல்ல. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள கட்டடக்கலை அமைப்பின் காலத்தைக் கண்டறிவதே ஆகும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. 


பிளாஸ்டிக் பாட்டில்களும் நவீனக் கழிவுகளும் மீட்கப்பட்டதாகவும், இது அந்த இடம் சேதமடைந்திருப்பதைக் காட்டுவதாகவும் முஸ்லிம் தரப்பு முன்வைத்த வாதத்திற்குப் பதிலளித்த நீதிமன்றம், “அத்தகைய பொருட்கள், ஏற்கனவே நவீனக் குப்பைக் கழிவுகள், பாதுகாப்புச் சிதைவுகள், பீங்கான் துண்டுகள், உறைகள் மற்றும் பலதரப்பட்ட கழிவுகளைக் கொண்டிருந்த, மிகவும் மேலுள்ள பலதரப்பட்ட சிதைவு அடுக்குகளில் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன என்றும நீதிமன்றம் கூறியது.


புத்த மதமும் சமண மதமும்


இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) கௌதம புத்தரின் சிலை கண்டெடுக்கப்பட்டதை மறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, நீதிமன்றம் தொல்லியல் துறையின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. தொல்லியல் துறை தனது வாதத்தில், அப்படி எந்தவொரு புத்தர் சிலையும் கண்டெடுக்கப்படவில்லை; எதிர்த்தரப்பினர் குறிப்பிடும் அந்த கலைப்பொருள் உண்மையில் ஒரு சமண (ஜைன) சிலை ஆகும். அது ஏற்கனவே முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.


அங்குள்ள சரஸ்வதி சிலை உண்மையில் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்த அம்பிகா தேவியின் சிலைதான் என்ற சமண சமூகத்தின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்தியாவில், சமண மதமும் (ஜைன மதமும்) இந்து மதமும் தனித்தனி பிரிவுகள் அல்ல என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


நீதிமன்றத்தின் கூற்றுப்படி, சமணம் மற்றும் இந்து ஆகிய இரு மதங்களும் பண்டைய காலத்திலிருந்தே ஒன்றோடொன்று இணைந்தே வளர்ந்துள்ளன.  மேலும், சமண மற்றும் இந்து ஆகிய இருமரபுகளைச் சேர்ந்த சிலைகள் பெரும்பாலும் இரு மதங்களின் கோயில்களிலும் காணப்படுகின்றன. இதற்குச் சட்டப்பூர்வமாக வலுசேர்க்க, நீதிமன்றம் இந்து திருமணச் சட்டம், 1955 (Hindu Marriage Act, 1955) மற்றும் இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 (Hindu Succession Act, 1956) ஆகியவற்றின் விதிகளைக் குறிப்பிட்டுக் காட்டியது. இந்தச் சட்டங்களின்கீழ் சமண மதமும் புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன என்று நீதிமன்றம் விவரித்துள்ளது.


எனவே, அகழ்வாராய்ச்சியின் போது சர்ச்சைக்குரிய இடத்திற்குள் ஒரு சமண தீர்த்தங்கரரின் சிலை கண்டெடுக்கப்பட்டது ஒன்றும் ஆச்சரியமளிக்கும் விஷயம் அல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


Original Link: Why Madhya Pradesh High Court ruled that Bhojshala was a temple.


Share:

ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய டிஜிட்டல் தரவுகள் யாருக்குச் சொந்தம்? -அமால் ஷேக்

டிஜிட்டல் சொத்துக்களின் புதிய எல்லையை நிர்வகிக்க, நீதிமன்றங்கள் வாரிசுரிமைச் சட்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. சமீபத்தில் ஒரு நீதிமன்றம், ஒருவரின் மனைவியும் மகளும் அவரது இணையத் தரவுகளை அணுக அனுமதித்ததற்கான காரணம் இதோ.


இந்த மாதத் தொடக்கத்தில், காந்திநகரில் உள்ள ஒரு உரிமையியல் நீதிமன்றம், iCloud கணக்கில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் தரவுகளை 'சொத்து' என்றும், இறந்த ஒருவரின் சொத்துக்களின் ஒரு பகுதி என்றும் அங்கீகரித்தது.


இறந்தவரின் குடும்பத்தினரால், அவரது ஐபோனையும் அதனுடன் இணைக்கப்பட்ட iCloud கணக்கையும் அணுக இயலாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கு  தொடரப்பட்டது. புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள், குரல் குறிப்புகள் மற்றும் தொடர்புப் பட்டியல்கள் உள்ளிட்ட, தங்களுக்கு உணர்ச்சிபூர்வமான, மனரீதியான மற்றும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புமிக்க தனிப்பட்ட தரவுகள் அதில்  இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தனியுரிமை தொடர்பான சிக்கல்களைக் கையாளும் அதே வேளையில், டிஜிட்டல் சொத்துக்களின் புதிய எல்லையை நிர்வகிப்பதற்காக நீதிமன்றங்கள் வாரிசுரிமைச் சட்டங்களைப் பயன்படுத்தும் ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இதுபோன்ற வழக்குகள்  அதிகமாகி  வருகின்றன.


வழக்கு


அந்த நபரின் கைபேசியை அணுகுவதற்காக, அவரது குடும்பத்தினர் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். 'டிஜிட்டல் மரபு' (Digital Legacy) குறித்த உட்பிரிவு ஒன்றைக் கொண்டுள்ள தனது சேவை விதிமுறைகளின்கீழ்,  ‘Cloud’ சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை மீட்டெடுக்கத் தங்களால் உதவ இயலும் என்று அந்நிறுவனம் அவர்களிடம் தெரிவித்தது.


ஆனால், இறந்தவரின் சார்பாகச் செயல்பட அதிகாரம் பெற்ற ஒரு சட்டப் பிரதிநிதியை, “குறிப்பிட்ட  நிபந்தனைகளைக் கொண்ட நீதிமன்ற உத்தரவு” ஒன்று முறையாக நியமித்தால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.


இறந்தவரின் மனைவியும் மகளும், ஒருவர் உயில் ஏதும் எழுதாமல் இறக்கும்போது நீதிமன்றம் வழங்கும் ‘நிர்வாக உரிமைக் கடிதத்தை’ கோரி, 1925-ஆம் ஆண்டின் இந்திய வாரிசுரிமைச் (Indian Succession Act) சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தை அணுகினர். நீதிபதி ஹிமான்ஷு சௌத்ரி இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, மகளை அவரது சொத்துக்களின் நிர்வாகியாக நியமித்ததுடன், தரவுகளை மீட்டெடுப்பதில் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான அளவிற்கு உதவுமாறு ‘Apple’ நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.


சொத்தாகக் கருதப்படும் டிஜிட்டல் தகவல்


டிஜிட்டல் வாரிசுரிமையை நிர்வகிக்கும் ஒரு சிறப்புச் சட்டம் இல்லாவிட்டாலும், டிஜிட்டல் தரவைச் சொத்தாக அங்கீகரிக்கும் அளவுக்குச் சட்டம் போதுமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்று வாரிசுகள் வாதிட்டனர். நீதிமன்றம் அந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகக் கண்டறிந்து, இறந்தவரின் ‘Apple  Cloud’ கணக்கில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் தரவு, இறந்தவரின் சொத்துக்களின் ஒரு பகுதியாக அமையும் ஒரு மதிப்புமிக்க டிஜிட்டல் சொத்தாகும் என்று கூறியது.

அதனை பெறுவதற்காக, ஏற்கனவே உள்ள சட்டங்கள் "அசையும் சொத்து" (Movable Property) என்பதை எவ்வாறு வரையறுக்கின்றன என்பதை அந்த குடும்பத்தினர் நம்பியிருந்தனர்.  மேலும், அந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் தங்களையும் அதற்குள் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.


பொதுப் பிரிவுகள் சட்டம், அசையும் சொத்து என்பதை "அசையாச் சொத்து தவிர, அனைத்து வகையான சொத்துக்களும்" என வரையறுக்கிறது. இதேபோல், 2023-ஆம் ஆண்டின் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) சட்டமும், அதே போன்று நிலம் மற்றும் அதனுடன் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ள பொருட்களைத் தவிர மற்ற அனைத்தையும் விலக்குகிறது. பணமோசடித் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) ஒரு படி மேலே சென்று, 'சொத்து'   என்பதன் வரையறைக்குள்  கண்ணுக்குப் புலப்படாத  சொத்துக்களையும் வரையறைக்குள் கொண்டுவருகிறது.


இந்தச் சட்டங்கள் எதுவும் 'iCloud' கணக்குகளை மனதில் வைத்து எழுதப்பட்டவை அல்ல; இருப்பினும், நீதிமன்றம் அவற்றின் வரையறைகள் இந்த iCloud கணக்குகளையும் உள்ளடக்கும் அளவுக்குப் பரந்ததாக இருப்பதைக் கண்டறிந்தது. மேலும், வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 2-47A -ன்கீழ் கிரிப்டோகரன்சிகள் (Cryptocurrencies) மற்றும் விற்பனை செய்ய முடியாத பிரத்யேக டிஜிட்டல் சொத்துக்கள் (Non-Fungible Tokens (NFT)) போன்றவற்றை 'மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளாக' (Virtual Digital Assets) ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்படுத்துவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதன் மூலம், பாதுகாப்பிற்குரிய ஒரு 'சொத்தாக' டிஜிட்டல் பொருட்களைச் சட்டம் அமைதியாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது.


இந்த விதிகள், சொத்துரிமையின் கருத்தியல் எல்லைக்குள் டிஜிட்டல் தரவை உள்ளடக்கும் அளவுக்குப் போதுமானவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.





தனியுரிமைக் கோணம்


டிஜிட்டல் வாரிசுரிமையில் மற்றொரு பக்கமும் உள்ளது. இணைய கணக்குகளில் பெரும்பாலும் தனிப்பட்ட உரையாடல்கள், அந்தரங்கக் குறிப்புகள் மற்றும் ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் கூட பகிர்ந்து கொள்ள விரும்பாத அவரது வாழ்க்கையின் சில பகுதிகள் இருக்கலாம். எனவே, இத்தகைய கணக்குகளை பாரம்பரியமாக வரும் சொத்தாகக் கருதுவது, ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகான அவரது அந்தரங்க உரிமை மற்றும் கண்ணியத்துடன் முரண்படலாம்.


எனவே, இங்குள்ள பிரச்சினை, டிஜிட்டல் சொத்துக்களை யார் வாரிசாகப் பெறுகிறார்கள் என்பது மட்டுமல்ல. மாறாக, இறந்த  ஒருவரின் தனிப்பட்ட டிஜிட்டல் வாழ்வை அணுகும் உரிமை எந்த அளவிற்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். தனியுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமைதான் என்றபோதிலும், "அது ஒரு தனிநபருடனேயே பிறந்து, அந்தத் தனிநபருடனேயே முடிவுக்கு வரும், இயல்பாகவே தனிப்பட்ட தன்மையைக் கொண்ட ஒரு உரிமையாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஒரு நபரின் தனிப்பட்ட உரிமை அல்லது சட்ட நடவடிக்கை அந்த நபருடனேயே இறந்துவிடுகிறது (Actio personalis moritur cum persona) என்ற சட்டக் கோட்பாட்டைப் பயன்படுத்தி, மரணமடைந்த நபரின் அந்தரங்க உரிமை தொடர்பாக எந்தவொரு கோரிக்கையையும் தொடர முடியாது என்றும், அவரது டிஜிட்டல் சொத்துக்களை நிர்வகிப்பதில் இருந்து சட்டபூர்வமான வாரிசுகளைத் தடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act) ஒருவர் இறந்த பிறகு அவரது தரவு உரிமைகளைப் பயன்படுத்த ஒருவரை நியமிக்க (nominate) வழிவகை செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த ஒரு நபரும்  நியமிக்கப்படாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி சட்டம் எதையும் குறிப்பிடவில்லை. அந்த சட்ட இடைவெளியில், இந்த உரிமைகள் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அந்த கைபேசி சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளைத் தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான அளவிற்கு மீட்டெடுக்க வாரிசுகளுக்கு உதவுமாறு ‘Apple’ நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


டிஜிட்டல் சொத்துக்கள் மீதான சட்டக் கோட்பாடு


கடந்த ஆண்டு, ரிதிகுமாரி vs  ஜான்மாய் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் (Rhutikumari v. Zanmai Labs Pvt. Ltd.) வழக்கில், கிரிப்டோகரன்சி என்பது உடைமை மற்றும் நன்மை அளிக்கும் வகையில் அனுபவிக்கக்கூடிய ஒரு சொத்து என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


230 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய இணையவழித் தாக்குதலைத் தொடர்ந்து, WazirX தளத்தில் இருந்த கிரிப்டோ கையிருப்புகள் முடக்கப்பட்ட பிறகு அந்த வழக்கு தொடரப்பட்டது. முக்கியமான உரிமைகள் விரிவாக சொத்துகளை வரையறுக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நீதிபதி  ஆய்வு செய்தார். உதாரணமாக, அஹமது ஜி.எச். ஆரிஃப் vs  CWT (1969) (GH Ariff v CWT (1969)) என்ற வழக்கில் நீதிமன்றம், ஒரு நபர் தெளிவாக வைத்திருக்கும் அல்லது அனுபவிக்கக்கூடிய எல்லா சாத்தியமான நிபந்தனைங்களையும் மற்றும் ஜிலுபாய் நன்பாய் கச்சார் vs  குஜராத் மாநிலம் (1995) (Jilubhai Nanbhai Khachar v State of Gujarat (1995)) வழக்கில் கூறியபடி, சட்டத்தால் உத்தரவிடபடும் மற்றும் பாதுகாக்கப்பட கூடிய உரிமைகளின் தொகுப்பாக... பரிமாற்றமுடைய மதிப்பு கொண்டுள்ளவையோ அல்லது செல்வம், சொத்து அல்லது மரியாதையை உருவாக்குகின்றவையோ அனைத்தும்" சொத்துதான் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.


அந்த வாதத்தைப் பயன்படுத்திய மதராஸ் உயர்நீதிமன்றம், “பயனர் செய்யும் முதலீடு கிரிப்டோகரன்சியாக (Crypto currency) மாற்றப்படுகிறது. இதனைச் சேமித்து வைக்கவோ, வர்த்தகம் செய்யவோ மற்றும் விற்கவோ முடியும். கிரிப்டோகரன்சி என்பது ஒரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்தாகக் (Virtual Digital Asset (VDA)) கருதப்படுகிறது. மேலும், இது 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு-2(47A)-ன்கீழ் நிர்வகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டது.



காந்திநகர் வழக்கு மிகவும் சாதாரணமானது. ஏனெனில், அது ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு சாதனங்களில் சேமிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், கிளவுட் காப்புப்பிரதிகள் (Cloud backups) மற்றும் தரவுகள் சம்பந்தப்பட்டது. டிஜிட்டல் சொத்துக்கள் என்ற  வரையறையின்கீழ் நிதி சார்ந்த கருவிகளிலிருந்து தனிப்பட்ட தரவுகளுக்கு மாறும் இந்த மாற்றம் முக்கியத்துவம்  பெற்றது.  ஏனெனில், அதிகரித்து வரும் டிஜிட்டல் சார்பு நிலைக்கு ஏற்ப இந்தியாவின் சட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை.


தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) என்பது  இணைய குற்றங்கள் மற்றும் அங்கீகாரமற்ற அணுகல்களை மட்டுமே கையாள்கிறது, ஆனால் டிஜிட்டல் கணக்குகள் மீதான வாரிசுரிமையை உருவாக்கவில்லை. இந்திய வாரிசுரிமைச் சட்டம் (Indian Succession Act) என்பது இணையம் உருவாவதற்கு முன்பே இயற்றப்பட்ட ஒன்றாகும். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) ஒரு நபர் இறந்த பிறகு அவரது தரவு உரிமைகளைப் பயன்படுத்த மற்றொருவரை நியமிக்கும் யோசனையை அறிமுகப்படுத்தினாலும், அது டிஜிட்டல் வாரிசுரிமையை முழுமையாக முறைப்படுத்தவில்லை.


ஜெர்மனி வழக்கு


காந்திநகர் நீதிமன்றத்தின் முன் வந்துள்ள இந்தச் சட்டப்பூர்வமான கேள்வி, இதற்கு முன்பு ஜெர்மனியின் மிக உயர்ந்த நீதிமன்றத்தாலும்விசாரிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், பெர்லினில் இரயில் மோதியதில் 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதற்காகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக எழுந்த சட்டப்பூர்வமான கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்காகவும், அவரது பெற்றோர் மகளின் முகநூல் கணக்கை அணுக அனுமதி கோரினர். ஆனால், ‘Facebook’ நிறுவனம் பயனரின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் பாதுகாப்பைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தது.


இந்த வழக்கு இறுதியாக ஜெர்மன் கூட்டாட்சி உச்சநீதிமன்றத்தை (German Federal Court of Justice) எட்டியது. அந்த நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஒரு நபர் இறந்த பிறகு அவரது தனிப்பட்ட நாட்குறிப்புகள் அல்லது தனிப்பட்ட கடிதங்கள் எவ்வாறு அவரது வாரிசுகளுக்குச் சொந்தமாகிறதோ, அதே உலகளாவிய வாரிசுரிமைக் கொள்கையின்கீழ் (Universal succession), இறந்த பயனரின் முகநூல் கணக்கு ஒப்பந்தமும் அவரது வாரிசுகளுக்கே சேரும் என்று தீர்ப்பளித்தது. வாரிசுகள் சட்டப்பூர்வமாக இறந்த நபரின் இடத்திற்கு வந்துவிடுவதால், அவர்கள் ரகசியத்தன்மை பாதுகாப்புச் சட்டங்களால் தடுக்கப்படும் "மூன்றாம் தரப்பினர்" அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், உலகிலேயே மிகக் கடுமையான டிஜிட்டல் தனியுரிமைச் சட்டங்களில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (General Data Protection Regulation (GDPR)), இறந்த நபர்களுக்குப் பொருந்தாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத் தரவுப் பாதுகாப்புச் சட்டம் இத்தகைய அனுமதியைத் தடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.


இதன் விளைவாக, பெற்றோரிடம் அந்த முகநூல் கணக்கின் முழுமையான அணுகலை வழங்குமாறு ‘Facebook’ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில், வாரிசுகள் அந்தக் கணக்கை அணுகி அதிலுள்ள விவரங்களைப் படிக்கலாமே தவிர, இறந்த நபர் உயிரோடு இருப்பது போல அதை அவர்களாகத் தொடர்ந்து இயக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டது.


Original Link: Who owns a person’s digital data after their death?


Share:

இந்திய வரலாற்றில் மே மாதத்தில் நிகழ்ந்த 5 முக்கிய நிகழ்வுகள். - குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி?


மே மாதமானது இந்திய வரலாற்றை மாற்றியமைத்த பல முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்துள்ளது. இலக்கியத்திற்கான இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவரான ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் பிறப்பு முதல், 1857-ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் மற்றும் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போர் வரை, இந்த மாதம் வரலாற்றில் நீங்காத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.


இந்திய வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த, மே  மாதத்தில்  நடந்த ஐந்து முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. 1857-ஆம் ஆண்டு கிளர்ச்சி


சிப்பாய் கலகம் அல்லது இந்தியச் சுதந்திரப் போர் (First War of Indian Independence) என அறியப்படும் 1857-ஆம் ஆண்டின் கிளர்ச்சியானது, மே மாதம் 10-ஆம் தேதி, 1857-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கிளர்ச்சியில், இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலேய அதிகாரிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகக் போர் தொடங்கினார். இருதரப்பினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அசாதாரணமான வன்முறைக்கு இந்த வரலாற்றுப் புரட்சி சாட்சியாக அமைந்தது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கியே (Enfield rifle) கிளர்ச்சி வெடிப்பதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. தோட்டாக்கள், விலங்குகளின் (மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி) கொழுப்பால் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது.  தோட்டாக்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தோட்டாக்களை வாயால் கடித்துத் திறக்க வேண்டிய சூழல் இருந்தது


— தங்களது மதத்தை அழித்துவிட்டு, கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காகவே ஆங்கிலேயர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்றும், இது தங்களின் மத நம்பிக்கைகளின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்றும் சிப்பாய்கள் கருதினர்.


கிளர்ச்சி ஏற்பட்டதற்கான  முக்கிய காரணங்கள்


என்ஃபீல்ட் துப்பாக்கி தோட்டாக்கள்


பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டதாக நம்பப்பட்ட தோட்டாக்களை, சிப்பாய்கள் தங்கள் பற்களால் கடித்துத் திறக்க வேண்டியிருந்தது. இது இந்து மற்றும் முஸ்லிம் வீரர்களின் மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் ஒரு செயலாகப் பார்க்கப்பட்டது.


வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse)


தலைமை ஆளுநர் லார்ட் டல்ஹவுசி, வாரிசு இல்லாத இந்திய ஆட்சியாளர்களின் நாடுகளைக் கைப்பற்ற இக்கொள்கையைப் பயன்படுத்தினார். இதன் மூலம் சதாரா (1848), ஜான்சி மற்றும் நாக்பூர் (1854) ஆகிய நாடுகள் ஆங்கிலேயர் ஆட்சியுடன் இணைக்கப்பட்டன.


அவத் இணைப்பு (Annexation of Awadh)


லார்ட் டல்ஹவுசி, அவத் (Awadh) நாட்டின் நிர்வாகம் சரியில்லை என்ற காரணத்தைக் கூறி அந்த நாட்டை ஆங்கிலேய அரசுடன் இணைத்தார். இது பெங்கால் ராணுவத்தில் இருந்த வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, புரட்சி வெடிக்கக் காரணமாக அமைந்தது.


1858-ஆம் ஆண்டு  ராணியின் பிரகடனம்


இந்தப் பெரும் புரட்சியின் முடிவில் இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் சட்டப்படி, இந்தியாவை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் பிரிட்டிஷ் மகாராணியின் (British Crown) நேரடி கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது.


அதிகரிக்கப்பட்ட வாடகை, நிலங்களைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்துதல் மற்றும் பாரம்பரியக் கைத்தொழில்களின் வீழ்ச்சி ஆகிய வடிவங்களிலான பொருளாதாரச் சுரண்டலுடன் சேர்த்து, வேறு பல காரணிகளும் இந்தப்புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.


இந்தியர்களின் உள்விவகாரங்களில் ஆங்கிலேயர்களின் தலையீடு அதிகரித்தது, வாரிசு இழப்புக் கொள்கை, மற்றும் அவத் நாட்டின் தவறான நிர்வாகத்தைக் காரணம் காட்டி லார்ட் டல்ஹவுசி அதை ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் இணைத்தது போன்ற நடவடிக்கைகள் பெங்கால் ராணுவத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியாகப் புரட்சியாக வெடித்தது.


வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse)


‘வாரிசு இழப்புக் கொள்கையை, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக (1848–56) இருந்த டல்ஹவுசி பிரபு அறிமுகப்படுத்தினார். இக்கொள்கையின்படி, ஒரு சுதேச மன்னருக்கு இயற்கையான, ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், அவர் இறந்துவிட்டால், அவரால் தத்தெடுக்கப்பட்ட வாரிசுக்கு அந்த அரசை ஆளும் உரிமை வழங்கப்படாது. மேலும், அந்த நாடு தானாகவே ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப்பட்டுவிடும். இந்த விதியைப் பயன்படுத்தி சதாரா (1848), சம்பல்பூர் (1850), மற்றும் ஜான்சி, நாக்பூர் (1854) ஆகிய பகுதிகள் ஆங்கிலேயப் பேரரசின் எல்லைக்குள் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டன.


1858-ஆம் ஆண்டின் ராணியின் பிரகடனம் என அறியப்படும் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம், இந்தப் புரட்சி இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதன் மூலம், இந்தியப் பேரரசின் ஆட்சி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.


 2. நான்காவது ஆங்கிலோ-மைசூர் போர்


18-ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள்  வீழ்த்தியதைத் தொடர்ந்து, நான்காவது ஆங்கிலோ-மைசூர் போர் 1799-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் போரில் தனது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் பாதுகாப்பதற்காக நடத்திய போரில் திப்பு வீரமரணமடைந்தார் .


திப்புவின் மறைவுக்குப் பிறகு, மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்ட உடையார் மன்னர் மீது வெல்லஸ்லி பிரபு துணைப்படைத் திட்டத்தை (Subsidiary Alliance)  செயல்படுத்தினார். இதன் மூலம் மைசூர், கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு சார்பு நாடாக மாறியது.


துணைப்படைத் திட்டம் (Subsidiary Alliance)


கவர்னர் ஜெனரல் லார்ட் வெல்லெஸ்லி (1798–1805) இந்தத் துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருமைக்குரியவர் ஆவார். இந்த உடன்படிக்கையின் விதிகளின்படி, இந்திய ஆட்சியாளர்கள் தங்களுக்கு என்று சொந்தமாகத் தனிப்படைகளை வைத்திருக்க அனுமதி இல்லை. அவர்களுக்குக் கிழக்கிந்திய நிறுவனம் பாதுகாப்பு வழங்கும்; ஆனால், அந்தப் பாதுகாப்பிற்காக நிறுவனம் பராமரிக்கும் "துணைப் படைகளுக்கான" செலவை இந்திய ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும். ஒருவேளை இந்திய ஆட்சியாளர்கள் அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், அதற்குத் தண்டனையாக அவர்களின் நாட்டின் ஒரு பகுதி பறிமுதல் செய்யப்படும்.


மைசூர் உடையார் மன்னரின் படையில் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் 1761-ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு தொழில்முறைப் போர்வீரரான ஹைதர் அலியின் மகனே திப்பு ஆவார். 1750-ஆம் ஆண்டில் பிறந்த திப்பு, தனது 17-வது வயதில் நடைபெற்ற முதல் ஆங்கிலோ-மைசூர் போரிலும் (1767–69), அதனைத் தொடர்ந்து மராட்டியர்களுக்கு எதிராகவும், இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போரிலும் (1780–84)  பங்கேற்றார். இந்தப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ஹைதர் காலமானார். அவரைத் தொடர்ந்து 1782-ஆம் ஆண்டில் திப்பு ஆட்சிப் பொறுப்பேற்றார்.


திப்பு தனது படையை ஐரோப்பிய நாடுகளின் இராணுவப் பாணியில் மறுசீரமைத்தார். இதற்காக, அவர் உலகின் முதல் போர் ஏவுகணை எனக் கருதப்படும் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினார். விரிவான நில அளவீடுகள் மற்றும் வகைப்பாடுகளின் அடிப்படையில் ஒரு நில வருவாய் முறையை உருவாக்கினார். இந்த முறையின்கீழ், வரி நேரடியாக  உழவர்களின் மீது விதிக்கப்பட்டதுடன், ஊதியம் பெறும் முகவர்கள் வாயிலாகப் பணமாகவே வசூலிக்கப்பட்டது. இது அரசின் வருவாய் ஆதாரத்தை பெருமளவு உயர்த்தியது.


அவர் வேளாண்மையை நவீனப்படுத்தினர். தரிசு நிலங்களை மேம்படுத்துவதற்கு வரிச்சலுகைகள் வழங்கினார். நீர்ப்பாசன உள்கட்டமைப்பை அமைத்து பழைய அணைகளை தூர்வாரினார்.  மேலும், வேளாண் சார்ந்த உற்பத்தித் தொழில்களையும், பட்டுப்புழு வளர்ப்பையும் ஊக்குவித்தார்.


வர்த்தகத்திற்கு ஆதரவாக ஒரு கடற்படையை உருவாக்கினார், மேலும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக ஒரு "அரசு வர்த்தகக் கழகத்தை" உருவாக்க ஆணையிட்டார். மைசூர் அரசு முக்கியமாகச் சந்தனக்கட்டை, பட்டு, மசாலாப் பொருட்கள், அரிசி மற்றும் கந்தகம் (Sulphur) ஆகியவற்றை வர்த்தகம் செய்ததால், திப்புவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் சுமார் 30 வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டன.


3. அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்


மே மாதம் 3-ஆம் தேதி, 1939-ஆம் ஆண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களை ஒன்றிணைப்பதற்காக, கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் (All India Forward Bloc (AIFB)) என்ற புதிய பிரிவைத் தொடங்குவதாக அறிவித்தார். இதற்கான விதை இதற்கு முன்பே விதைக்கப்பட்டுவிட்டது.


1938-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போஸ் முதன்முறையாக இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். ஒரு காங்கிரஸ்காரராக அவரது அரசியல் ஆளுமையை வடிவமைப்பதிலும், காந்தி மற்றும் நேருவுடனான பிளவு  ஏற்பட்டதாலும், இந்தத் தருணம்  முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.


1938-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸின் ஹரிபுரா மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய  முக்கியமான மற்றும் நீண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க உரை, நிபந்தனையற்ற முழுமையான  தன்னாட்சிக்கான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை உலகிற்கு  உணர்த்தியது.


இந்த அமர்வில், போஸ் தன்னாட்சியை  ஒரு “தேசிய கோரிக்கையாக” (National Demand) முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆங்கிலேய ஆட்சியின்கீழ் ஒரு இந்திய கூட்டாட்சி என்ற கருத்தை எதிர்த்தார். அவர் 1939-ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, காந்தியால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளரான டாக்டர் பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்தார்.


போஸ் மற்றொரு செயற்குழுவை அமைக்க முயன்றார். ஆனால், அதில் தோல்வியடைந்ததால், அவர் பதவி விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குள், அவர் “ஃபார்வர்ட் பிளாக்” அமைப்பை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.


காங்கிரஸ் தலைமைக்கு மாற்றாக ஒரு புதிய தலைமையை உருவாக்கும் நோக்கில், மார்ச் மாதம் 1940-ஆம் ஆண்டில் ராம்கர் என்ற இடத்தில் "அகில இந்திய சமரச எதிர்ப்பு மாநாட்டை" (All India Anti-Compise Conference) கூட்டினார். காலம் கடந்து போவதற்குள் மக்கள் விழித்தெழுந்து செயல்பட வேண்டும் என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.


காங்கிரஸை ஒத்துழையாமை இயக்கத்திற்கு (Civil disobedience) சம்மதிக்க வைக்கத் தவறியதால், போஸ் அவர்கள் கல்கத்தாவின் டல்ஹவுசி சதுக்கத்தில் இருந்த 'ஹோல்வெல்' (Holwell monument) நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்காகப் பெரிய அளவிலான மக்கள் போராட்டங்களை நடத்தினார். (இந்தச் சின்னம் கல்கத்தா இருட்டறை துயர சம்பவத்தில் இறந்தவர்களின் நினைவாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது). இந்தப் போராட்டத்திற்காக ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்தது, ஆனால் அவர் மேற்கொண்ட ஏழு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.


1943-ஆம் ஆண்டில் போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் (Indian National Army (INA)) பொறுப்பை ஏற்றார். அந்த இராணுவம், இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக 1944-ஆம் ஆண்டில் “டெல்லி சலோ” (Delhi Chalo) இயக்கத்தைத் தொடங்கியது.

4.ரவீந்திரநாத் தாகூர்


ரவீந்திரநாத் தாகூர், 1861-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி, வங்கத்தைச் சேர்ந்த ஒரு அரச  குடும்பத்தில் கொல்கத்தாவில் பிறந்தார். இந்தியா என்பது வெறும் பாம்பாட்டிகள் மற்றும் மூடநம்பிக்கைகள் நிறைந்த நாடு என்றும், கலாச்சார ரீதியாகப் பின்தங்கிய நாடு என்றும் நிலவிய பொதுவான கருத்தை, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் எதிர்த்த முக்கியப் போராளிகளில் தாகூரும் ஒருவர் ஆவார்.


1913-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் அல்லாதவரும், முதல் ஆசியரும் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். அந்த விருதுச் சான்றிதழ், "அவரது ஆழ்ந்த உணர்வுமிக்க,  புதிய மற்றும் அழகான கவிதைகளின் மூலம், தனது கவித்துவ சிந்தனையைத் தனக்கே உரிய ஆங்கில வார்த்தைகளில் அதிக திறமையுடன் வெளிப்படுத்தி, அதை மேற்கத்திய இலக்கியத்தின் ஒரு அங்கமாக  மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டது.


மகாத்மா காந்திக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் தாகூர் தான். இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் தேசிய கீதங்களின் உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பெருமை இவரையே சேரும்.


ஜாலியன்வாலா பாக் (Jallianwala Bagh massacre) படுகொலைக்குப் பிறகு, ரவீந்திரநாத் தாகூர் தனது 'நைட்ஹுட்' (Knighthood) பட்டத்தைத் துறப்பதன் மூலம் நமது நாட்டின் ஒட்டுமொத்த வலியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.


தாகூரின் முக்கியமான படைப்புகள்: சண்டலிகா (குறுநாடகம்), சார் அத்யாய் (நாவல்), கரே பைரே (நாவல்), கீதாஞ்சலி (கவிதை), போஸ்ட் ஆபீஸ் (நாடகம்) மற்றும் பல படைப்புகள் உள்ளன.


5.மகாராணா பிரதாப்


மேவார் (Mewar) பகுதியின் முடிசூடா மன்னரான மகாராணா பிரதாப் அவர்கள், 1540-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி பிறந்து, 1597-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவர் மிகச்சிறந்த, வீரமிக்க ராஜபுத்திர வீரார்களில் ஒருவராகக் கருதப்பட்டார். குறிப்பாக, முகலாயர்களுக்கு எதிராக அவர் நடத்திய மறக்கமுடியாத போர்களுக்காக அவர் வரலாற்றில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.


‘Cultural India’ ஆய்வறிக்கையின்படி, 1572-ஆம் ஆண்டில் மகாராணா பிரதாப் தனது தந்தையின் அரியணையை ஏற்று மேவாரை ஆட்சி செய்யத் தொடங்கினார். அவருக்கு முன்னிருந்த மற்ற ராஜபுத்திர பேரரசர்களைப் போலல்லாமல், மகாராணா பிரதாப் தனக்கு முன்னால் நின்ற பிரமாண்டமான முகலாயப் படையை எதிர்த்துத் துணிச்சலுடன் நின்றார். மேலும், தனது இறுதி மூச்சு வரை முகலாயர்களை எதிர்த்து மிக வீரமாகப் போரிட்டார்.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Council of Educational Research and Training (NCERT)) வரலாற்றுப் புத்தகத்தின்படி, 1576-ஆம் ஆண்டில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள ஹல்திகாட் கணவாயில் (Haldighati pass) முகலாயர்களுக்கு எதிரான ஒரு புகழ்பெற்ற போர் நடைபெற்றது. இப்போரில் முகலாயப் படையின் கை ஓங்கியிருந்த போதிலும், மகாராணா பிரதாப் அங்கிருந்து தப்பியோடினார். அதன் பிறகு பல ஆண்டுகள் ஆரவல்லி மலைகளிலிருந்து முகலாயர்களுக்கு எதிராகக் கொரில்லா போர்முறையை தொடர்ந்தார். மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வாழ்ந்தபோதிலும், தனது சுதந்திரத்தில் அவர் உறுதியாக இருந்தார்.

தொழிலாளர் தினம் (Labour Day)


1. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் மே மாதம் 1-ஆம் தேதி "மே தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது. இது "சர்வதேச தொழிலாளர் தினம்" (International Workers' Day) மற்றும் "தொழிலாளர் தினம்" (Labour Day) என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்களின் பங்களிப்புகளையும், அவர்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட தொழிலாளர் இயக்கங்களையும் பாராட்டும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.


2. 1886-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி, அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அங்கு காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசப்பட்டதை அடுத்து, இருதரப்பிலும் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டன. தொழிலாளர் உரிமைகளுக்கான உலகளாவிய போராட்டத்தில் இந்தத் துயரச் சம்பவம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் உயிரிழந்த தொழிலாளர்கள் "ஹேமார்க்கெட் தியாகிகள்" (Haymarket Martyrs) என்று போற்றப்பட்டனர்.


3. கடந்த 1889-ஆம் ஆண்டு, சோசலிச மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச கூட்டமைப்பான ‘Second International’ என்ற அமைப்பு, ஹேமார்க்கெட் தியாகிகளையும் தொழிலாளர் இயக்கத்தையும் கௌரவிக்கும் விதமாக மே மாதம் 1-ஆம் தேதியை "சர்வதேச தொழிலாளர் தினமாக" பிரகடனப்படுத்தியது.

4. இந்தியாவில் முதன்முதலாக 1923 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. சாதி ஒழிப்பு இயக்கத்துடன் தொடர்புடைய ஆரம்பகால கம்யூனிசத் தலைவரும், சிறந்த தேசியவாதியுமான         ம. சிங்காரவேலு செட்டியார் அவர்களின் முயற்சியால்தான் இந்தியாவில் இந்தத் தொடக்கம் சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.



Original Link: 5 Important events in Indian history that happened in May.


Share:

உத்தரப் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த சக்திவாய்ந்த இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டதன் காரணம் என்ன? - அமிதாப் சின்ஹா

வட இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய மாதங்களில் இடியுடன் கூடிய கனமழை அடிக்கடி பெய்யும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேரிடரின் அளவு சமீபத்திய ஆண்டுகளை விட மிக அதிகமாக இருந்தது. அதற்கான காரணம் கீழே குறிப்பிட்டுள்ளது.


இந்த வாரத் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தைத் தாக்கிய சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வானிலை ஆய்வுத் துறையின் ஆவணங்களில், இந்த வளிமண்டல நிகழ்வு 'ஆந்தி' (Andhi) என்று குறிப்பிடப்படுகிறது. இப்பிராந்தியத்தில் ஆண்டுதோறும் நிகழும் ஒரு பொதுவான நிகழ்வு இதுவாகும். இருப்பினும், இந்த ஆண்டு ஏற்பட்ட அழிவு மிக அதிக அளவில் பரவலாக இருந்தது. இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமான பிரயாக்ராஜில் 21 பேரும், அதைத் தொடர்ந்து மிர்சாபூரில் 19 பேரும், படோஹியில் 16 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பருவமழைக்கு முந்தைய காலத்தில், குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சில சமயங்களில் ஜூலை மாதம் வரையிலும் நீடிக்கும், வட இந்தியாவின் பல பகுதிகளில் இடி, மின்னல், மழை மற்றும் சில நேரங்களில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய இந்தப் புழுதிப் புயல்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் உலக அளவிலும், குறிப்பாக வறண்ட பகுதிகளில் ஏற்படுகின்றன.


பெரும்பாலான இதுபோன்ற இடியுடன் கூடிய மழைகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அவை, மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இருப்பினும், வலுவான இடியுடன் கூடிய மழைகள் பரவலான அழிவை ஏற்படுத்தக்கூடும். இது மணிக்கு 90 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசும் காற்று பெரிய மரங்களை வேரோடு சாய்த்துவிடும். சுவர்கள் இடிந்து விழலாம், மின் கம்பங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் சரிந்து விழலாம், மேலும் தளர்வான பொருட்கள் காற்றில் பறந்து அபாயகரமான எறிபொருட்களாக மாறக்கூடும். மின்னல் தாக்கியதால் சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.


சமீபத்திய இடியுடன் கூடிய மழை வழக்கத்தைவிட வலுவாகவும் பரவலாகவும் இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, குறைந்தது எட்டு மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ.க்கு மேல் பதிவாகியுள்ளது. சில இடங்களில் இது மணிக்கு 130 கி.மீ. வேகத்தையும் எட்டியுள்ளது.


வட இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய இடியுடன் கூடிய மழையானது, பொதுவாக நிலப்பரப்பு தீவிரமாக வெப்பமடைவதைத் தொடர்ந்து ஏற்படுகிறது. பொதுவாக, வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் ஈரப்பதம் நிறைந்த காற்றே, இதற்குத் தேவையான எரிபொருளை வழங்குகிறது.


ஆனால், வேறு சில வானிலை நிலவரங்களும் ஒன்றுசேர்ந்ததே இந்த சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழைக்கு வழிவகுத்தது. பல பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டியதுடன், வலுவான தென்கிழக்குக் காற்று வங்காள விரிகுடாவிலிருந்து வந்த ஈரப்பதம் வடமேற்கு உத்தரப் பிரதேசம் வரை சென்றடைவதை உறுதி செய்தது. இதன் விளைவாக, தரைக்கு அருகிலுள்ள காற்று வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் மாறியது.


மேற்கத்திய சீர்குலைவுகள் என்பவை ஈரானுக்கு அப்பால் உருவாகி இந்தியாவிற்கு மழையைக் கொண்டுவரும், கிழக்கு நோக்கி நகரும் மழையைக் கொண்டுவரும் காற்று அமைப்புகளாகும். தற்போது நிலவும் மேற்கத்திய சீர்குலைவுகளின் காரணமாக, நிலப்பரப்புக்கு அருகிலுள்ள வெப்பமான காற்றைக் காட்டிலும் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் காற்று குளிர்ச்சியாகவும் வறண்டதாகவும் இருந்தது. "இது வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதோடு, வலுவான இடியுடன் கூடிய மழையைத் தூண்டும் ஒரு முக்கிய காரணியாகவும் அமைகிறது," என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா கூறினார்.


2018-ம் ஆண்டில், கடைசியாக உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற இடியுடன் கூடிய மழை தாக்கியபோது, ​​100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகப் பதிவானது. அந்த ஆண்டில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பல பெரிய இடியுடன் கூடிய மழை நிகழ்வுகள் ஏற்பட்டன. ஒவ்வொரு ஆண்டும், வட இந்தியாவில் பல்வேறு தீவிர நிலைகளைக் கொண்ட இடியுடன் கூடிய மழையால் சுமார் பன்னிரண்டு இறப்புகள் பதிவாகின்றன. இருப்பினும், இந்த இறப்புகள் பொதுவாக காலப்போக்கில் பரவலாக நிகழ்கின்றன.


முன்னறிவிப்பின் துல்லியம்


வானிலை ஆய்வு மையங்களால் இடியுடன் கூடிய மழையை முன்கூட்டியே கணிக்க முடியும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) வானிலை அறிக்கைகளில் இதுபோன்ற முன்னறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுகிறது, இந்த நிகழ்விலும் அவ்வாறே செய்தது. இருப்பினும், மோகபாத்ராவே ஒப்புக்கொண்டபடி, காற்றின் உச்ச வேகம் குறைவாக மதிப்பிடப்பட்டது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) ஆரம்பகட்ட முன்னறிவிப்பு, காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை இருக்கும் எனக் கணித்திருந்தது. பின்னர் அது மணிக்கு 70 கி.மீ. எனத் திருத்தப்பட்டது. நேரடி வானிலை மற்றும் அண்மைக்கால எதிர்காலத்திற்கான முன்னறிவிப்பை விவரிக்கும் அதன் உடனடி முன்னறிவிப்புகளில், காற்றின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ. வரை எட்டக்கூடும் என்று அது கூறியுள்ளது.


அது பெரும்பாலான இடியுடன் கூடிய மழைகளை உள்ளடக்கியிருந்தாலும், சில இடங்களில் காற்றின் வேகம் கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது. “ஆறு-ஏழு மாவட்டங்களில், மணிக்கு 100 கி.மீ.க்கும் அதிகமான காற்றின் வேகம் பதிவு செய்யப்பட்டது. அதை எங்கள் முன்னறிவிப்புகள் இத்தகைய அதிக வேகத்தைக் கணிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக, முன்னறிவிப்பு சரியான நேரத்தில் மற்றும் சிறப்பாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் இப்போது எங்களிடம் சுமார் 2,400 நிலையங்களைக் கொண்ட மிகவும் வலுவான கண்காணிப்பு வலையமைப்பு உள்ளது. இது இதுபோன்ற நிகழ்வுகளை மிகவும் துல்லியமாகக் கணிக்க எங்களுக்கு உதவுகிறது. மேலும், எங்கள் திறன்களை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என்று மோகபாத்ரா கூறினார்.



புயல்களைப் போலல்லாமல், இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்ட பிறகு மக்களை வெளியேற்றுவது நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு வழி அல்ல. ஒரு புயலில், அச்சுறுத்தல் கடலில் இருந்து கடற்கரையை நோக்கி ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்கிறது. எனவே, மக்களைக் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்துவது உயிரிழப்புகளைக் குறைக்க உதவுகிறது. மறுபுறம், இடியுடன்கூடிய மழை என்பது மிகவும் பரவலாக நிகழும் ஒரு நிகழ்வாகும். அருகிலுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் பல இடியுடன் கூடிய மழை நிகழ்வுகள் ஏற்படலாம்.


Original Link: What triggered the powerful thunderstorms in Uttar Pradesh that killed over 100?


Share:

வளர்ந்த இந்தியாவுக்கு (Viksit Bharat) வளர்ச்சி மட்டுமல்ல, உற்பத்தித்திறனும் முக்கியம். -சௌமித்ரா பதுரி

நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க, இந்தியா உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும்.


இந்தியாவின் சமீபத்திய பொருளாதாரச் செயல்பாடு, நம்பிக்கையைத் தூண்டும் அளவுக்கு வலுவாக இருந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில், மிகச் சில பெரியளவிலான பொருளாதாரங்களே வெற்றிபெற்ற நிலையில், இந்தியா ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சியையும், பேரியல் பொருளாதார நிலைத்தன்மையையும் இணைத்துள்ளது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வலுவாக இருந்து, 2024-25 நிதியாண்டில் 6.5%-ஐ எட்டியுள்ளது. இது இந்தியாவை உலகளவில் வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவாக்குகிறது. இந்தச் செயல்பாட்டிற்கு வலுவான உள்நாட்டுத் தேவை, கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம், படிப்படியான நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பரவலாக நிலையான நிதித் துறை ஆகியவை அடித்தளமாக அமைந்துள்ளன.


சமீபத்திய பத்தாண்டுகளில் இந்தியாவின் உற்பத்தித்திறன் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தபோதிலும், அதிக வளர்ச்சியைத் தக்கவைக்க அதை விரைவுபடுத்துவது அவசியமாகும். குறிப்பாக, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா 'வளர்ந்த இந்தியா' ஆக (Viksit Bharat) வேண்டும் என இலக்கு வைத்துள்ள நிலையில் இது அவசியமாகிறது. இந்த மாற்றத்திற்கு, பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைப் பேணுவது மட்டுமல்லாமல், வலுவான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியின் அனைத்து உந்துசக்திகளான உழைப்பு, மூலதனம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் செயல்படுத்துவதும் அவசியமாகிறது.





தீவிரமில்லாத உற்பத்தி நிலை


2025-26-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் பிரதிபலிப்பது போல, இந்த அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உற்பத்தித் துறைதான் அடித்தளமாக அமைய வேண்டும் என்ற அங்கீகாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இருப்பினும், உற்பத்தித் துறையை விரிவுபடுத்துவது மட்டுமல்ல, அதை மேலும் அதிக உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றுவதும் ஒரு சவாலாகும். இந்தியாவின் கட்டமைப்பு மாற்றம், ஒருதலைப்பட்சமாக அமைந்துள்ளது. சேவைத்துறை வளர்ச்சியை ஊக்கமளித்தப் போதிலும், தொழிலாளர்களை உள்வாங்கிக்கொள்ளவோ ​​அல்லது பரந்த அளவிலான உற்பத்தித்திறன் ஆதாயங்களை உருவாக்கவோ உற்பத்தித் துறை போதுமான அளவு விரிவடையவில்லை. பெரும்பாலான வெற்றிகரமான வளர்ச்சி நிலைகளில், குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத்திற்கும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட நவீனத் துறைகளுக்கும் இடையே உற்பத்தித் துறை ஒரு பாலமாகச் செயல்படுகிறது.


பொருளாதார ஆய்வறிக்கை இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது. மேலும் வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கும், பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் உற்பத்தித் துறை முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது. ஒரு வலுவான உற்பத்தித் துறை இல்லாமல், இந்தியா போதுமான அளவு வலுவானதாகவோ அல்லது கட்டமைப்புரீதியாக நிலையானதாகவோ இல்லாத ஒரு வளர்ச்சிப் போக்கை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது. சேவைத்துறையில் உற்பத்தித்திறன் வளர்ச்சி வலுவாக இருந்தபோதிலும், உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறன் அதன் சாத்தியக்கூறுகளையும், அதன் சர்வதேச போட்டி நாடுகளின் உற்பத்தித்திறனையும்விட பின்தங்கியுள்ளது. நிறுவனக் கட்டமைப்பு ஒரு முக்கியப் பிரச்சினையாகும். இந்தியாவின் உற்பத்தித் துறையானது, அதிக எண்ணிக்கையிலான சிறிய, குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட நிறுவனங்களையும், ஒப்பீட்டளவில் சில நடுத்தர அளவிலான, வளர்ச்சிப் பணிகளை விரிவுபடுத்தும் திறன் கொண்ட நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது, வெற்றிகரமாகத் தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரங்களுக்கு, குறிப்பாக கிழக்கு ஆசியாவில் உள்ள பொருளாதாரங்களுக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது. இந்த நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் உற்பத்தித்திறன் வளர்ச்சியை உயர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தன.


எனவே, தற்போதைய கட்டமைப்பு, உற்பத்திக் காரணிகளைத் திறமையாகப் பகிர்ந்தளிப்பதில் ஒரு சவாலை உருவாக்குகிறது. இதன் விளைவாக, உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளைவிட உற்பத்தித்திறன் மிகவும் குறைவாக உள்ள விவசாயத் துறையிலேயே கணிசமான தொழிலாளர் பங்கு தேங்கி நிற்கிறது. மிக முக்கியமாக, குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும், குறிப்பாக உள்கட்டமைப்பில் செயல்திறன் இடைவெளிகள் இன்னும் நீடிக்கின்றன.


செயலற்ற நிறுவனங்களும், தேக்கமடைந்த மறுபகிர்வும்


இந்தக் கட்டமைப்பு சார்ந்த தடைகள் ஒன்றிணைந்து, பலவீனமான வணிக இயக்கவியலில் பிரதிபலிக்கும் ஒரு வலுவான சிக்கலாக உருவெடுக்கின்றன. பொருளாதாரக் கோட்பாட்டின்படி, உற்பத்தித்திறன் வளர்ச்சி என்பது பெரும்பாலும் ஆக்கபூர்வமான அழிவின் மூலம் இயக்கப்படுகிறது. இதில், புதிய மற்றும் அதிகத் திறனுள்ள நிறுவனங்கள், பழைய மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட நிறுவனங்களுக்குப் பதிலாக அமைகின்றன. நடைமுறையில், இந்தியாவில் இந்தச் செயல்முறை மெதுவாகவே உள்ளது. இதன் விளைவாக, சிறிய, குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட "செயலற்ற" நிறுவனங்களின் தொடர்ச்சி, வளங்களைத் திறமையாக மறுபகிர்வு செய்வதைத் தடுக்கிறது. பொருளாதாரரீதியாக இனி சாத்தியமில்லாத, ஆனால் தொடர்ந்து இயங்கும் செயலற்ற நிறுவனங்கள், அதிக உற்பத்தித்திறன் மிக்க பயன்பாடுகளில் பயன்படுத்தப்படக்கூடிய மூலதனத்தையும் உழைப்பையும் முடக்கிவிடுகின்றன.


சமீபத்திய ஆய்வுகளின் சான்றுகள் இந்தக் கவலையை மேலும் வலுப்படுத்துகின்றன. 'வளர்ந்து வரும் சந்தைகளில் செயலற்ற நிறுவனங்கள்: நிலைத்திருத்தல் மற்றும் நிதியளிப்பு வழிமுறைகள்-2025' என்ற தலைப்பிலான ஒரு ஆய்வறிக்கை, செயலற்ற நிறுவனங்கள் மொத்த நிறுவனங்களில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும், அவை மொத்தக் கடன் மற்றும் சொத்துக்களில் விகிதாசாரத்திற்கு அதிகமாகப் பெரும் பங்கைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இது, கணிசமான அளவு மூலதனம் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட பயன்பாடுகளில் முடக்கப்பட்டு, அமைப்புரீதியான திறமையின்மைகளை உருவாக்குகிறது என்பதை உணர்த்துகிறது. செயலற்றதாக மாறுவது ஒரு படிப்படியான செயல்முறை என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது. நிறுவனங்கள் செயலற்றதாக வகைப்படுத்தப்படுவதற்கு முன்பே நிதிச் சரிவு தொடங்குகிறது. மேலும், நிறுவனங்கள் இந்த நிலையை அடைந்தவுடன், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே காட்டும் அதே வேளையில், கடனை அதிகளவில் சார்ந்திருக்கத் தொடங்குகின்றன. இந்தப் பிரச்சினை தொடர்ச்சியானது, சுழற்சி முறையிலானது அல்ல. நிதியளிப்பின் வகையும் முக்கியமானது என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. வங்கிகளால் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் செயலற்றதாக மாறுவதற்கும், நீண்டகாலத்திற்கு நெருக்கடியில் இருப்பதற்கும், மேலும் பகுதி மீட்சிக்குப் பிறகும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதற்கு மாறாக, பங்கு மூலதனத்தால் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் செயலற்றதாக மாறுவதற்கு குறைவான வாய்ப்புள்ளது மற்றும் நிலையான முறையில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


இந்தக் கண்டுபிடிப்புகள் ஒரு வலுவான நிறுவனப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டுகின்றன. நிதி மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள், நிறுவனங்கள் வெளியேறுவதற்கு வழிவகுப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் திறனற்ற நிறுவனங்களைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இது, அதிக உற்பத்தித்திறன் கொண்ட நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பதைத் தடுத்து, மறுஒதுக்கீட்டைப் பலவீனப்படுத்துகிறது. அதன் மூலம், ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் வளர்ச்சியையும் சீர்குலைக்கிறது.


இருமுனை உத்தி


இந்தியாவின் வளர்ந்த இந்தியா (Viksit Bharat) பாதைக்கு, அளவு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்ளும் ஒரு உற்பத்தித் துறை சார்ந்த உத்தி தேவைப்படுகிறது. இந்தியா வேகமாக வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இந்த வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தில் நீடித்த அதிகரிப்புகளாக மாறுவதை உறுதி செய்வதே அடுத்த கட்டமாகும். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உற்பத்தித் துறையே ஒரு பலவீனமான இணைப்பு என்பதையும், உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் வலுவான ஒருங்கிணைப்பு, வர்த்தகத் தடைகளை நிர்வகித்தல் மற்றும் தொடர்ச்சியான உள்கட்டமைப்பு முதலீடு ஆகியவை தேவைப்படும் என்பதையும் மக்கள் மத்தியில் பரவலாக உணரப்பட்டு வருகிறது. வலுவான வணிக ஆற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் பொருள், நிறுவனங்கள் வளர வழிவகுப்பதுடன், திறனற்ற நிறுவனங்கள் வெளியேறவும் அனுமதிப்பதாகும். எனவே, சீர்திருத்தங்கள் விதிமுறைகளை எளிதாக்குதல், தொழிலாளர் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், நிறுவனங்களின் திவால்நிலை செயல்முறைகளை வலுப்படுத்துதல், கடன் ஒதுக்கீட்டை மேம்படுத்துதல் மற்றும் நிதியுதவிக்கான அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


வளர்ந்த இந்தியாவின் (Viksit Bharat) தொலைநோக்குப் பார்வை, இந்தியா இந்த மாற்றத்தை நிறைவு செய்ய முடியுமா என்பதைப் பொறுத்தே இறுதியில் அமையும். வளர்ச்சி அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. ஆனால், மேம்பட்ட உற்பத்தித்திறனும் திறனற்ற நிறுவனங்களின் வெளியேற்றமும்தான், வளர்ந்த இந்தியா நோக்கிய இந்த மாற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பதையும் தீர்மானிக்கும்.


சௌமித்ரா பதுரி மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராக உள்ளார்.


Original Link: Productivity, not just growth, for Viksit Bharat.


Share: