தற்போதைய செய்தி?
மே மாதமானது இந்திய வரலாற்றை மாற்றியமைத்த பல முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்துள்ளது. இலக்கியத்திற்கான இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவரான ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் பிறப்பு முதல், 1857-ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் மற்றும் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போர் வரை, இந்த மாதம் வரலாற்றில் நீங்காத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்திய வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த, மே மாதத்தில் நடந்த ஐந்து முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. 1857-ஆம் ஆண்டு கிளர்ச்சி
சிப்பாய் கலகம் அல்லது இந்தியச் சுதந்திரப் போர் (First War of Indian Independence) என அறியப்படும் 1857-ஆம் ஆண்டின் கிளர்ச்சியானது, மே மாதம் 10-ஆம் தேதி, 1857-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தக் கிளர்ச்சியில், இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆங்கிலேய அதிகாரிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகக் போர் தொடங்கினார். இருதரப்பினராலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட அசாதாரணமான வன்முறைக்கு இந்த வரலாற்றுப் புரட்சி சாட்சியாக அமைந்தது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கியே (Enfield rifle) கிளர்ச்சி வெடிப்பதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. தோட்டாக்கள், விலங்குகளின் (மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி) கொழுப்பால் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. தோட்டாக்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தோட்டாக்களை வாயால் கடித்துத் திறக்க வேண்டிய சூழல் இருந்தது
— தங்களது மதத்தை அழித்துவிட்டு, கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காகவே ஆங்கிலேயர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்றும், இது தங்களின் மத நம்பிக்கைகளின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்றும் சிப்பாய்கள் கருதினர்.
கிளர்ச்சி ஏற்பட்டதற்கான முக்கிய காரணங்கள்
என்ஃபீல்ட் துப்பாக்கி தோட்டாக்கள்
பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டதாக நம்பப்பட்ட தோட்டாக்களை, சிப்பாய்கள் தங்கள் பற்களால் கடித்துத் திறக்க வேண்டியிருந்தது. இது இந்து மற்றும் முஸ்லிம் வீரர்களின் மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் ஒரு செயலாகப் பார்க்கப்பட்டது.
வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse)
தலைமை ஆளுநர் லார்ட் டல்ஹவுசி, வாரிசு இல்லாத இந்திய ஆட்சியாளர்களின் நாடுகளைக் கைப்பற்ற இக்கொள்கையைப் பயன்படுத்தினார். இதன் மூலம் சதாரா (1848), ஜான்சி மற்றும் நாக்பூர் (1854) ஆகிய நாடுகள் ஆங்கிலேயர் ஆட்சியுடன் இணைக்கப்பட்டன.
அவத் இணைப்பு (Annexation of Awadh)
லார்ட் டல்ஹவுசி, அவத் (Awadh) நாட்டின் நிர்வாகம் சரியில்லை என்ற காரணத்தைக் கூறி அந்த நாட்டை ஆங்கிலேய அரசுடன் இணைத்தார். இது பெங்கால் ராணுவத்தில் இருந்த வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி, புரட்சி வெடிக்கக் காரணமாக அமைந்தது.
1858-ஆம் ஆண்டு ராணியின் பிரகடனம்
இந்தப் பெரும் புரட்சியின் முடிவில் இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் சட்டப்படி, இந்தியாவை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் பிரிட்டிஷ் மகாராணியின் (British Crown) நேரடி கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது.
அதிகரிக்கப்பட்ட வாடகை, நிலங்களைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்துதல் மற்றும் பாரம்பரியக் கைத்தொழில்களின் வீழ்ச்சி ஆகிய வடிவங்களிலான பொருளாதாரச் சுரண்டலுடன் சேர்த்து, வேறு பல காரணிகளும் இந்தப்புரட்சி வெடிப்பதற்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.
இந்தியர்களின் உள்விவகாரங்களில் ஆங்கிலேயர்களின் தலையீடு அதிகரித்தது, வாரிசு இழப்புக் கொள்கை, மற்றும் அவத் நாட்டின் தவறான நிர்வாகத்தைக் காரணம் காட்டி லார்ட் டல்ஹவுசி அதை ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் இணைத்தது போன்ற நடவடிக்கைகள் பெங்கால் ராணுவத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியாகப் புரட்சியாக வெடித்தது.
வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse)
‘வாரிசு இழப்புக் கொள்கையை, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக (1848–56) இருந்த டல்ஹவுசி பிரபு அறிமுகப்படுத்தினார். இக்கொள்கையின்படி, ஒரு சுதேச மன்னருக்கு இயற்கையான, ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், அவர் இறந்துவிட்டால், அவரால் தத்தெடுக்கப்பட்ட வாரிசுக்கு அந்த அரசை ஆளும் உரிமை வழங்கப்படாது. மேலும், அந்த நாடு தானாகவே ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப்பட்டுவிடும். இந்த விதியைப் பயன்படுத்தி சதாரா (1848), சம்பல்பூர் (1850), மற்றும் ஜான்சி, நாக்பூர் (1854) ஆகிய பகுதிகள் ஆங்கிலேயப் பேரரசின் எல்லைக்குள் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டன.
1858-ஆம் ஆண்டின் ராணியின் பிரகடனம் என அறியப்படும் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம், இந்தப் புரட்சி இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதன் மூலம், இந்தியப் பேரரசின் ஆட்சி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.
2. நான்காவது ஆங்கிலோ-மைசூர் போர்
18-ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் வீழ்த்தியதைத் தொடர்ந்து, நான்காவது ஆங்கிலோ-மைசூர் போர் 1799-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஸ்ரீரங்கப்பட்டணம் போரில் தனது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் பாதுகாப்பதற்காக நடத்திய போரில் திப்பு வீரமரணமடைந்தார் .
திப்புவின் மறைவுக்குப் பிறகு, மீண்டும் அரியணையில் அமர்த்தப்பட்ட உடையார் மன்னர் மீது வெல்லஸ்லி பிரபு துணைப்படைத் திட்டத்தை (Subsidiary Alliance) செயல்படுத்தினார். இதன் மூலம் மைசூர், கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு சார்பு நாடாக மாறியது.
துணைப்படைத் திட்டம் (Subsidiary Alliance)
கவர்னர் ஜெனரல் லார்ட் வெல்லெஸ்லி (1798–1805) இந்தத் துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருமைக்குரியவர் ஆவார். இந்த உடன்படிக்கையின் விதிகளின்படி, இந்திய ஆட்சியாளர்கள் தங்களுக்கு என்று சொந்தமாகத் தனிப்படைகளை வைத்திருக்க அனுமதி இல்லை. அவர்களுக்குக் கிழக்கிந்திய நிறுவனம் பாதுகாப்பு வழங்கும்; ஆனால், அந்தப் பாதுகாப்பிற்காக நிறுவனம் பராமரிக்கும் "துணைப் படைகளுக்கான" செலவை இந்திய ஆட்சியாளர்களே ஏற்க வேண்டும். ஒருவேளை இந்திய ஆட்சியாளர்கள் அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், அதற்குத் தண்டனையாக அவர்களின் நாட்டின் ஒரு பகுதி பறிமுதல் செய்யப்படும்.
மைசூர் உடையார் மன்னரின் படையில் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் 1761-ஆம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு தொழில்முறைப் போர்வீரரான ஹைதர் அலியின் மகனே திப்பு ஆவார். 1750-ஆம் ஆண்டில் பிறந்த திப்பு, தனது 17-வது வயதில் நடைபெற்ற முதல் ஆங்கிலோ-மைசூர் போரிலும் (1767–69), அதனைத் தொடர்ந்து மராட்டியர்களுக்கு எதிராகவும், இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போரிலும் (1780–84) பங்கேற்றார். இந்தப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ஹைதர் காலமானார். அவரைத் தொடர்ந்து 1782-ஆம் ஆண்டில் திப்பு ஆட்சிப் பொறுப்பேற்றார்.
திப்பு தனது படையை ஐரோப்பிய நாடுகளின் இராணுவப் பாணியில் மறுசீரமைத்தார். இதற்காக, அவர் உலகின் முதல் போர் ஏவுகணை எனக் கருதப்படும் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினார். விரிவான நில அளவீடுகள் மற்றும் வகைப்பாடுகளின் அடிப்படையில் ஒரு நில வருவாய் முறையை உருவாக்கினார். இந்த முறையின்கீழ், வரி நேரடியாக உழவர்களின் மீது விதிக்கப்பட்டதுடன், ஊதியம் பெறும் முகவர்கள் வாயிலாகப் பணமாகவே வசூலிக்கப்பட்டது. இது அரசின் வருவாய் ஆதாரத்தை பெருமளவு உயர்த்தியது.
அவர் வேளாண்மையை நவீனப்படுத்தினர். தரிசு நிலங்களை மேம்படுத்துவதற்கு வரிச்சலுகைகள் வழங்கினார். நீர்ப்பாசன உள்கட்டமைப்பை அமைத்து பழைய அணைகளை தூர்வாரினார். மேலும், வேளாண் சார்ந்த உற்பத்தித் தொழில்களையும், பட்டுப்புழு வளர்ப்பையும் ஊக்குவித்தார்.
வர்த்தகத்திற்கு ஆதரவாக ஒரு கடற்படையை உருவாக்கினார், மேலும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக ஒரு "அரசு வர்த்தகக் கழகத்தை" உருவாக்க ஆணையிட்டார். மைசூர் அரசு முக்கியமாகச் சந்தனக்கட்டை, பட்டு, மசாலாப் பொருட்கள், அரிசி மற்றும் கந்தகம் (Sulphur) ஆகியவற்றை வர்த்தகம் செய்ததால், திப்புவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் சுமார் 30 வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டன.
3. அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்
மே மாதம் 3-ஆம் தேதி, 1939-ஆம் ஆண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களை ஒன்றிணைப்பதற்காக, கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் (All India Forward Bloc (AIFB)) என்ற புதிய பிரிவைத் தொடங்குவதாக அறிவித்தார். இதற்கான விதை இதற்கு முன்பே விதைக்கப்பட்டுவிட்டது.
1938-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போஸ் முதன்முறையாக இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். ஒரு காங்கிரஸ்காரராக அவரது அரசியல் ஆளுமையை வடிவமைப்பதிலும், காந்தி மற்றும் நேருவுடனான பிளவு ஏற்பட்டதாலும், இந்தத் தருணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
1938-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸின் ஹரிபுரா மாநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய முக்கியமான மற்றும் நீண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க உரை, நிபந்தனையற்ற முழுமையான தன்னாட்சிக்கான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை உலகிற்கு உணர்த்தியது.
இந்த அமர்வில், போஸ் தன்னாட்சியை ஒரு “தேசிய கோரிக்கையாக” (National Demand) முன்னிலைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆங்கிலேய ஆட்சியின்கீழ் ஒரு இந்திய கூட்டாட்சி என்ற கருத்தை எதிர்த்தார். அவர் 1939-ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, காந்தியால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளரான டாக்டர் பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்தார்.
போஸ் மற்றொரு செயற்குழுவை அமைக்க முயன்றார். ஆனால், அதில் தோல்வியடைந்ததால், அவர் பதவி விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குள், அவர் “ஃபார்வர்ட் பிளாக்” அமைப்பை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.
காங்கிரஸ் தலைமைக்கு மாற்றாக ஒரு புதிய தலைமையை உருவாக்கும் நோக்கில், மார்ச் மாதம் 1940-ஆம் ஆண்டில் ராம்கர் என்ற இடத்தில் "அகில இந்திய சமரச எதிர்ப்பு மாநாட்டை" (All India Anti-Compise Conference) கூட்டினார். காலம் கடந்து போவதற்குள் மக்கள் விழித்தெழுந்து செயல்பட வேண்டும் என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
காங்கிரஸை ஒத்துழையாமை இயக்கத்திற்கு (Civil disobedience) சம்மதிக்க வைக்கத் தவறியதால், போஸ் அவர்கள் கல்கத்தாவின் டல்ஹவுசி சதுக்கத்தில் இருந்த 'ஹோல்வெல்' (Holwell monument) நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்காகப் பெரிய அளவிலான மக்கள் போராட்டங்களை நடத்தினார். (இந்தச் சின்னம் கல்கத்தா இருட்டறை துயர சம்பவத்தில் இறந்தவர்களின் நினைவாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது). இந்தப் போராட்டத்திற்காக ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்தது, ஆனால் அவர் மேற்கொண்ட ஏழு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
1943-ஆம் ஆண்டில் போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் (Indian National Army (INA)) பொறுப்பை ஏற்றார். அந்த இராணுவம், இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக 1944-ஆம் ஆண்டில் “டெல்லி சலோ” (Delhi Chalo) இயக்கத்தைத் தொடங்கியது.
4.ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர், 1861-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி, வங்கத்தைச் சேர்ந்த ஒரு அரச குடும்பத்தில் கொல்கத்தாவில் பிறந்தார். இந்தியா என்பது வெறும் பாம்பாட்டிகள் மற்றும் மூடநம்பிக்கைகள் நிறைந்த நாடு என்றும், கலாச்சார ரீதியாகப் பின்தங்கிய நாடு என்றும் நிலவிய பொதுவான கருத்தை, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் எதிர்த்த முக்கியப் போராளிகளில் தாகூரும் ஒருவர் ஆவார்.
1913-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் அல்லாதவரும், முதல் ஆசியரும் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். அந்த விருதுச் சான்றிதழ், "அவரது ஆழ்ந்த உணர்வுமிக்க, புதிய மற்றும் அழகான கவிதைகளின் மூலம், தனது கவித்துவ சிந்தனையைத் தனக்கே உரிய ஆங்கில வார்த்தைகளில் அதிக திறமையுடன் வெளிப்படுத்தி, அதை மேற்கத்திய இலக்கியத்தின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டது.
மகாத்மா காந்திக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் தாகூர் தான். இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் தேசிய கீதங்களின் உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பெருமை இவரையே சேரும்.
ஜாலியன்வாலா பாக் (Jallianwala Bagh massacre) படுகொலைக்குப் பிறகு, ரவீந்திரநாத் தாகூர் தனது 'நைட்ஹுட்' (Knighthood) பட்டத்தைத் துறப்பதன் மூலம் நமது நாட்டின் ஒட்டுமொத்த வலியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
தாகூரின் முக்கியமான படைப்புகள்: சண்டலிகா (குறுநாடகம்), சார் அத்யாய் (நாவல்), கரே பைரே (நாவல்), கீதாஞ்சலி (கவிதை), போஸ்ட் ஆபீஸ் (நாடகம்) மற்றும் பல படைப்புகள் உள்ளன.
5.மகாராணா பிரதாப்
மேவார் (Mewar) பகுதியின் முடிசூடா மன்னரான மகாராணா பிரதாப் அவர்கள், 1540-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி பிறந்து, 1597-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவர் மிகச்சிறந்த, வீரமிக்க ராஜபுத்திர வீரார்களில் ஒருவராகக் கருதப்பட்டார். குறிப்பாக, முகலாயர்களுக்கு எதிராக அவர் நடத்திய மறக்கமுடியாத போர்களுக்காக அவர் வரலாற்றில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
‘Cultural India’ ஆய்வறிக்கையின்படி, 1572-ஆம் ஆண்டில் மகாராணா பிரதாப் தனது தந்தையின் அரியணையை ஏற்று மேவாரை ஆட்சி செய்யத் தொடங்கினார். அவருக்கு முன்னிருந்த மற்ற ராஜபுத்திர பேரரசர்களைப் போலல்லாமல், மகாராணா பிரதாப் தனக்கு முன்னால் நின்ற பிரமாண்டமான முகலாயப் படையை எதிர்த்துத் துணிச்சலுடன் நின்றார். மேலும், தனது இறுதி மூச்சு வரை முகலாயர்களை எதிர்த்து மிக வீரமாகப் போரிட்டார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (National Council of Educational Research and Training (NCERT)) வரலாற்றுப் புத்தகத்தின்படி, 1576-ஆம் ஆண்டில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள ஹல்திகாட் கணவாயில் (Haldighati pass) முகலாயர்களுக்கு எதிரான ஒரு புகழ்பெற்ற போர் நடைபெற்றது. இப்போரில் முகலாயப் படையின் கை ஓங்கியிருந்த போதிலும், மகாராணா பிரதாப் அங்கிருந்து தப்பியோடினார். அதன் பிறகு பல ஆண்டுகள் ஆரவல்லி மலைகளிலிருந்து முகலாயர்களுக்கு எதிராகக் கொரில்லா போர்முறையை தொடர்ந்தார். மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வாழ்ந்தபோதிலும், தனது சுதந்திரத்தில் அவர் உறுதியாக இருந்தார்.
தொழிலாளர் தினம் (Labour Day)
1. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் மே மாதம் 1-ஆம் தேதி "மே தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது. இது "சர்வதேச தொழிலாளர் தினம்" (International Workers' Day) மற்றும் "தொழிலாளர் தினம்" (Labour Day) என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்களின் பங்களிப்புகளையும், அவர்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட தொழிலாளர் இயக்கங்களையும் பாராட்டும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
2. 1886-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி, அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அங்கு காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசப்பட்டதை அடுத்து, இருதரப்பிலும் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டன. தொழிலாளர் உரிமைகளுக்கான உலகளாவிய போராட்டத்தில் இந்தத் துயரச் சம்பவம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் உயிரிழந்த தொழிலாளர்கள் "ஹேமார்க்கெட் தியாகிகள்" (Haymarket Martyrs) என்று போற்றப்பட்டனர்.
3. கடந்த 1889-ஆம் ஆண்டு, சோசலிச மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச கூட்டமைப்பான ‘Second International’ என்ற அமைப்பு, ஹேமார்க்கெட் தியாகிகளையும் தொழிலாளர் இயக்கத்தையும் கௌரவிக்கும் விதமாக மே மாதம் 1-ஆம் தேதியை "சர்வதேச தொழிலாளர் தினமாக" பிரகடனப்படுத்தியது.
4. இந்தியாவில் முதன்முதலாக 1923 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. சாதி ஒழிப்பு இயக்கத்துடன் தொடர்புடைய ஆரம்பகால கம்யூனிசத் தலைவரும், சிறந்த தேசியவாதியுமான ம. சிங்காரவேலு செட்டியார் அவர்களின் முயற்சியால்தான் இந்தியாவில் இந்தத் தொடக்கம் சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.
Original Link: 5 Important events in Indian history that happened in May.