தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)) இந்த கிரேட் நிக்கோபார் திட்டம் குறித்த முடிவு, கட்டுப்பாடற்ற உத்திமுறை காரணங்களுக்காகச் சுற்றுச்சூழலின் சமநிலையைத் தியாகம் செய்யக்கூடிய ஒரு ஆபத்தான எதிர்காலத்திற்கு வழிவகை செய்கிறது.
கிரேட் நிக்கோபார் தீவை இந்தியாவின் சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் போன்ற நாடுகளின் தரத்திற்கு இணையாக மாற்றும் நோக்கில், அங்கு ஒரு சர்வதேச சரக்கு மாற்று முனையம் (International transhipment port), ஒரு விமான நிலையம் மற்றும் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு புதிய நகரத்தை உருவாக்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் அங்குள்ள ஒட்டுமொத்த இயற்கைச் சூழலையும் பேரழிவிற்கு உள்ளாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பிராந்திய அளவிலான போட்டி நாடுகளைவிடச் சிறந்த ஆழ்கடல் துறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் பல்வேறு தளவாடப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது.
கிழக்குக் கடற்கரையில் உள்ள ஏழு வருவாய் கிராமங்களைத் (Revenue villages) தவிர, இந்தத் தீவு முற்றிலும் இரண்டு பூர்வீகப் பழங்குடியின சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வெறும் 229-நபர்களை மட்டுமே கொண்ட, மிகவும் நலிவடைந்த பழங்குடி குழுவான (Particularly Vulnerable Tribal Group (PVTG)) 'Shompen' பழங்குடியினர் மற்றும் சுமார் 1,200 நபர்களைக் கொண்ட பட்டியல் பழங்குடியினரான (Scheduled Tribe) 'தெற்கு நிக்கோபாரிஸ்' (Southern Nicobarese) சமூகத்தினர் ஆவர். இவர்களது முன்னோர்களின் பாரம்பரியக் காடுகளை அழிப்பது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், இவர்களது வாழ்விடம், கலாச்சாரம் மற்றும் எதிர்காலத்தையே முழுமையாக அழித்துவிடும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
கிரேட் நிக்கோபார் தீவு இந்தியாவின் வெறும் நான்கு பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்றான 'சுந்தாலாந்து பல்லுயிர் பெருக்க மையத்தின்' (Sundaland Biodiversity Hotspot) ஒரு பகுதியாகும். இது 2013-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) "உயிர்க்கோளக் காப்பகமாக" அறிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்தத் தீவு, பூக்கும் தாவரங்கள், பெரணிகள் (Ferns), பூவா விதைத் தாவரங்கள் (gymnosperms), பாசித் தாவரங்கள் (bryophytes) மற்றும் லைக்கன்கள் என 650-க்கும் மேற்பட்ட தாவர வகைகளின் தாயகமாக விளங்குகிறது. மேலும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய ஆமையான 'லெதர்பேக் கடல் ஆமைகள்' முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மிகப்பெரிய இடங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. தென்மேற்குப் பருவமழைக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த வெப்பமண்டலக் காடுகளில், தற்போது சுமார் பத்து லட்சம் மரங்கள் வெட்டுவதற்காகக் குறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிரேட் நிக்கோபார் தீவு உலகின் மிக அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் அமைந்துள்ளது. ஆனால், அங்கு திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டம் இந்த புவியியல் ஆபத்து குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை. இந்தத் தீவு இந்தோனேசியாவின் பான்டா அச்சே (Banda Aceh) பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இங்குதான் சுமத்ராவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. இந்திய புவித்தட்டு (Indian Plate) தென்கிழக்கு ஆசியாவின் கீழ்நோக்கி நகரும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 15 முதல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்து, புவித்தட்டுகளின் எல்லையில் 1,200 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்திற்குப் பிளவை ஏற்படுத்தியதுடன், கடலுக்கு அடியில் பில்லியன் கணக்கான டன் எடையுள்ள பாறைகளையும் நகர்த்தியது. இந்த நகர்வு பெரும் அளவிலான கடல்நீரை இடமாற்றம் செய்து, ஒரு மிகப்பெரிய சுனாமியை (Tsunami) உருவாக்கியது. இதன் விளைவாக, கிரேட் நிக்கோபார் தீவே திடீரென 3 முதல் 4 மீட்டர் வரை கடலுக்குள் மூழ்கியது. இது ஏதோ தற்செயலாக நடந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வு அல்ல, மாறாக புவித்தட்டுகள் நகரும் தொடர்ச்சியான இயற்கை சுழற்சி ஆகும்.
‘Bulletin of the Seismological Society of America’ போன்ற சக விஞ்ஞானிகளால் சரிபார்க்கப்பட்டு புகழ்பெற்ற இதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், இப்பகுதி தொடர்ந்து நில அதிர்வு அழுத்தம் அதிகரிப்பதும், பின்னர் அது வெளியாவதுமான ஒரு நிலையான சுழற்சியைப் பின்பற்றுகிறது என்பதைக் காட்டுகின்றன. புவி நிலைநிறுத்த அமைப்பு (Global Positioning System (GPS)) தரவுகளின்படி, பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் புவித்தட்டுகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது, நிலப்பரப்பு மெதுவாக மேல்நோக்கி உயர்கிறது. இந்த அழுத்தம் பின்னர் பெரிய நிலநடுக்கங்களின் போது ஒரேடியாக வெளிவிடப்படுகிறது. தற்போது நிக்கோபார் பகுதி இரண்டு நிலநடுக்கங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் நுழைந்துள்ளதால், அடுத்த பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வரை நிலமும் கடல் படுக்கையும் மீண்டும் மெதுவாக மேல்நோக்கி உயர்ந்து வருகின்றன.
சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் போன்ற நிலையான புவியியல் அமைப்பைக் கொண்ட நாடுகளைப் போலல்லாமல், கிரேட் நிக்கோபார் பகுதி தொடர்ந்து மெதுவாக உயர்வதும், திடீரென உள்வாங்குவதுமான சுழற்சிகளை எதிர்கொள்கிறது. இத்தகைய நிலையற்ற நிலப்பரப்பில் பெரிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது, வெறும் பொறியியல் தொழில்நுட்பத்தால் மட்டுமே புவித்தட்டுகளின் அசைவுகளை வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரம் கோடி ரூபாயைப் பணயம் வைப்பதற்குச் சமமாகும்.
இந்தப் பிராந்தியத்தில் எதிர்பார்க்கப்படும் பருவநிலை மாற்றம் மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகியவற்றின் காரணமாக, இந்த நிலநடுக்க அபாயம் இன்னும் தீவிரமானதாக மாறுகிறது. முன்மொழியப்பட்டுள்ள இந்த பெரிய அளவிலான திட்டம், கடல்மட்ட உயர்வும் மற்றும் நிலம் உள்வாங்குதலும் சந்திக்கக்கூடிய மிகச்சரியான இடத்தில் அமையவிருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் (Defence Research and Studies (DRaS)) அமைப்பின் கட்டுரையில் சுதிர் பிள்ளை கூறுகையில், நிலவியல் ரீதியாக மிகவும் ஆபத்தான மற்றும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ள இந்தத் தீவில், ஒரு பெரிய துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் அமைப்பது என்பது பொறியியல் ரீதியான ஆபத்து மட்டுமல்ல, அது ஒரு இராணுவத் தந்திரோபாய ரீதியான ஆபத்தும் கூட என்று எச்சரிக்கிறார். ஏனெனில், நிலநடுக்கத்தால் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் போகும் உள்கட்டமைப்புகள், எதிரிகளை எதிர்கொள்ளும் ஒரு பாதுகாப்பு முன்கள தளமாக இருக்காது என்றும் மாறாக, அது சுமையாகவே முடியும் என்று குறிப்பிடுகிறார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) ஒரு தெளிவான பொறுப்பைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை தொடர்பான வழக்குகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்வதே அதுவாகும். ஆனால், கிரேட் நிக்கோபார் தீவு வழக்கில், தீர்ப்பாயம் தன் பொறுப்பிலிருந்து தவறிவிட்டது. கிடைக்கக்கூடிய பெருமளவிலான நிபுணர்களின் ஆய்வுகளைக் கவனமாக ஆராய்வதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் வாதங்களைச் சரியான கேள்விகள் ஏதுமின்றி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) அப்படியே ஏற்றுக் கொண்டது. இந்தத் திட்டத்திற்கு “உத்திமுறையிலான முக்கியத்துவம்" இருப்பதாகவும், "போதிய பாதுகாப்பு வழிமுறைகள்" இருப்பதாகவும் கூறி இதற்கு ஒப்புதல் அளித்தது; ஆனால், இந்த வாதங்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது பரிசீலிக்கவில்லை.
இதைச் செய்வதன் மூலம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) ஒரு ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில், எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதற்கு, உத்திமுறையிலான முக்கியத்துவம் வாய்ந்தது, நாட்டின் பாதுகாப்பு அல்லது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று பெயரிட்டாலே போதும், அது எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதற்கு நீதிமன்றத்தின் ஆதரவு கிடைத்துவிடும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றமும் இதே காரணத்தைக் காட்டித்தான் உத்தரகாண்டில் உள்ள 'சார் தாம்' (Char Dham) சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அதன் விளைவாக இமயமலைப் பகுதியில் நடந்தவை எதிர்பார்த்த ஒரு சோகமான முடிவுதான்: தொடர் பேரிடர்கள், மனித உயிரிழப்புகள் மற்றும் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய மலைப்பகுதி சுற்றுச்சூழல் அமைப்புகள் மிக வேகமாக அழிந்து வருவதுமே அதன் முடிவாக அமைந்தது.
கிரேட் நிக்கோபார் திட்டம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு, ஆராயப்படாத நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்காக, ஒரு பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பை தியாகம் செய்யக்கூடிய ஒரு மோசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சி பி ராஜேந்திரன், புவி அறிவியல் விஞ்ஞானி மற்றும் அறிவியல், அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் கல்வி ஆகிய துறைகள் குறித்து பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த அறிவியல் தொடர்பாளர் ஆவார்.
Original Link: Is the Great Nicobar Project a strategic asset or a liability?