அரசாங்கம் கவனக்குறைவாக இருந்துவிட்டது -ப. சிதம்பரம்

பிரதமருக்கு தற்பொழுது செய்ய வேண்டிய வேலைகள் மிக அதிகமாக உள்ளன. அவர் நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; 1991-ஆம் ஆண்டின் தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலகட்டத்தைப் போன்றே தற்போது அடக்குமுறையாக மாறியுள்ள தற்போதைய கட்டுப்பாட்டு முறைகளை அவர் திரும்பப் பெற வேண்டும். மேலும், புலனாய்வு அமைப்புகளைக் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்; வெளிநாட்டுச் சந்தைக்கு நிகரான இந்தியப் பணத்தின் மாற்று விகிதத்தை நிலைப்படுத்த வேண்டும் மற்றும் வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும்.


இவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகக் குவிந்து வருகின்றன. சுங்க வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் சீர்குலைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியில் இந்தியா பின்தங்கியும் வருகிறது. ஈரான் மோதல் நிலவும் இந்த நேரத்தில் நாம் ஒரு பெரிய எரிசக்தி இறக்குமதியாளராக இருக்கிறோம், மேலும் எல் நினோவையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது. தேர்தல்களைப் பற்றி சிந்திப்பதைப் போலவே, வெளிநாட்டு மூலதனத்தை — ஒருவேளை வரிக் குறைப்புகள் மூலம் — திரும்பப் பெறுவது குறித்தும் அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். ஒழுங்குமுறை மற்றும் புலனாய்வு அமைப்புகளால் கள அளவிலான வணிகச் சூழல் கடினமாக இருப்பதால், தனியார் முதலீடு தேக்கமடைந்துள்ளது. இந்தியா, நம்பிக்கையாளர்களையும் அவநம்பிக்கையாளர்களையும் தொடர்ந்து ஏமாற்றுகிறது. உலகில் இரண்டாவது அல்லது மூன்றாவது அதிக விலையுள்ள பங்குச் சந்தையாக நாம் இன்னும் இருக்கிறோம், இது ஒரு எச்சரிக்கை மணியாகும். (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 12, 2026).


இந்த வார்த்தைகளைக் கூறியது நான் அல்ல, எனவே இணையதள விமர்சகர்கள் நிம்மதியடையலாம். இது ருசிர் சர்மா (‘The Rise and Fall of Nations, What Went Wrong with Capitalism’ போன்ற புத்தகங்களின் ஆசிரியர்) கூறிய கூற்றாகும். இது பொருளாதாரத்தை பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் கையாள்வதை மறைமுகமாகக் குற்றம்சாட்டும் ஒரு அறிக்கையாகும். ஆனால் இதே போன்ற கருத்துக்களை — குறிப்பாக அமெரிக்காவுடனான விரிசல் ஏற்பட்ட உறவுகள், வெளிநாட்டு மூலதனத்தை மீண்டும் கொண்டு வருவது, வணிகத்திற்கு ஏற்றதாக இல்லாத விதிமுறைகள், புலனாய்வு அமைப்புகளின் பங்கு போன்றவற்றை நானும் வெளிப்படுத்தியிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த விவகாரங்கள் பொதுமக்களின் பார்வைக்குச் செல்லாமல் மறைக்கப்பட்டு, நாடாளுமன்ற மற்றும் பொதுவிவாதங்களின்போது மிகவும் சாதுரியமாகத் திசைதிருப்பப்பட்டன.


ஒரு மூலையில்


நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கழித்து, மூலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு குறிப்பிடத்தக்க ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார். அரசாங்கம் செய்யத் தவறிய தவறுகளுக்காகவும், தவறாகச் செய்த காரியங்களுக்காகவும்...


பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் நலனுக்காகத் தியாகங்களைச் செய்ய மக்களிடம் கேட்டுக்கொண்டார்.


இதன் தெளிவான மற்றும் உண்மையான விவரங்கள் வருமாறு:


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிற்கும், ஈரானுக்கும் இடையே நடக்கும் போர், வரவிருக்கும் மே 31 தேதியுடன் 3 மாதங்களை நிறைவு செய்யவுள்ளது; ஆனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை.


  • அனைத்து மேற்கு ஆசிய நாடுகளும் ஏதோ ஒரு வகையில் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளன.


  • இதன் காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெயின் (Brent crude) விலை ஒரு பேரலுக்கு சுமார் 107 அமெரிக்க டாலராக உயர்ந்து காணப்படுகிறது.


  • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாக 95.70 ரூபாயை எட்டியுள்ளது.


  • அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் (Consumer Price Index Inflation) 3.5%-ஆகவும், உணவுப் பொருட்களின் பணவீக்கம் (Food Inflation) 4.3%-ஆகவும் உள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலை 913 ரூபாயாகவும், 

  • வணிக ரீதியிலான சிலிண்டரின் விலை 3,071 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் (Wholesale Price Index  Inflation) 8.3%-ஆக அதிகரித்துள்ளது.


  • கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், நிகர வெளிநாட்டு முதலீடு மிகவும் குறைவாகவே உள்ளது: இதில் அந்நிய நேரடி முதலீடு வெறும் 3 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் -4.3 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்துள்ளன.


  • 2025-26-ஆம் நிதியாண்டில் தனியார் மூலதன முதலீட்டுக்கான நோக்கங்கள் (மதிப்பீடுகள்) மொத்தம் 6.6 லட்சம் கோடி முதல் 6.8 லட்சம் கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது.


  • மேலும், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதியின் மதிப்பு 72 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

ஆண்டுக்குச் சராசரியாக 50 நாட்கள் வேலை வாய்ப்பை வழங்கிய (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) ஒழிக்கப்பட்ட பிறகு, ஏழை எளிய மக்களுக்கென்று ஊதியத்துடனான வேலைவாய்ப்பை வழங்கும் எந்தவொரு திட்டமும் தற்போது இல்லை.


பிரதமரின் கருத்து முற்றிலும் சரியானது


பிரதமர் நாட்டு மக்களைப் பல விஷயங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய அமைச்சர்கள் தங்களது கடமைகளில் இருந்து தவறி உறங்கிக் கொண்டிருப்பதை பிரதமர் கவனிக்காததால், அவர் நேரடியாக மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும்; சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; எரிபொருள், சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் பயன்பாட்டில் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்; தேவையற்ற இறக்குமதிகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பட்டியல் நீள்கிறது. ஆனால், உண்மையில் பிரதமர் செய்ய வேண்டியது என்னவென்றால், தனது அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு விமர்சனப் பூர்வமான ஆய்வு ஆகும்.


எரிபொருள் பயன்பாட்டில் பிரதமர்தான் மிகவும் ஆடம்பரமாகச் செயல்படுகிறார்: அவர் தொடக்க விழாக்கள் மற்றும் புதிய அரசாங்கங்களின் பதவியேற்பு விழாக்களுக்காகக்கூட நடைமுறையில் ஒவ்வொரு நாளும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வெளியே சென்று வருகிறார். அவருடைய பாதுகாப்பு வாகன அணிவகுப்புதான் மிக நீளமானதாக இருந்தது, அதை அவர் இப்போது சற்றே குறைத்துள்ளார். அவருடைய நிதி அமைச்சர், நாட்டின் இன்றைய பலவீனமான நிதி நிலைமையைப் பற்றி ஒருமுறைகூட பேசவில்லை (அதே நேரத்தில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், முதலீட்டு வங்கி ஒன்று இந்தியாவை மற்ற நான்கு நாடுகளுடன் சேர்த்து 'பலவீனமான பொருளாதாரம்' என்று வர்ணித்ததை அவர் இன்னும் சுட்டிக்காட்டி மகிழ்கிறார்). கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ‘Taper tantrum’ (அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை மாற்றத்தால் உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி) உலகளாவிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதையோ, அல்லது அதற்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது என்பதையோ அவர் ஒப்புக்கொள்வதில்லை. அதன் பிறகுதான் நிலைமை சீரமைக்கப்பட்டது. ஒரு செயலின் உண்மைத் தன்மையை அதன் முடிவை வைத்தே அறிய முடியும் என்பதற்கேற்ப, மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) வளர்ச்சி விகிதம் இதற்கான சான்றாகும். மற்றொரு புறம், வர்த்தக அமைச்சர் தொடர்ச்சியாகப் பல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் (Free Trade Agreement (FTA)) கையெழுத்திட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர் 9 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை முடித்துள்ளார். ஆனால், இதற்குப் பிறகுதான் முதன்மை பொருளாதார ஆலோசகரிடமிருந்து (Chief Economic Adviser (CEA)) ஒரு எச்சரிக்கை வந்தது: வர்த்தக ஒப்பந்தங்கள் எதை உறுதியளிக்கின்றனவோ, அதற்கும் நாட்டின் தற்போதைய ஒழுங்குமுறை விதிமுறைகள் உண்மையில் எதை அனுமதிக்கின்றனவோ, அதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. 


செய்யவேண்டிய பணிகளின் பட்டியல்


பிரதமர் அவர்கள் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் (CAD) குறைக்கவும், அந்நியச் செலாவணி இருப்பை (Foreign exchange reserves) அதிகரிக்கவும், மற்றும் மாற்று விகிதத்தை (Exchange rate) நிலைப்படுத்தவும் விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் எடுக்கும் இந்த முடிவு முற்றிலும் சரியானது.


எனவே, மீண்டும் ருசிர் சர்மாவின் கருத்திற்கு வருவோம். பிரதமருக்கு தற்போது செய்ய வேண்டிய வேலைகள் மிக அதிகமாக உள்ளன. அவர் நாட்டின் ஒழுங்குமுறை அமைப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), வர்த்தக அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் போன்றவற்றை) மறுபரிசீலனை செய்யவேண்டும்; தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலத்தைப் போலவே தற்போதும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அச்சுறுத்தும் வகையில் இருக்கும் தற்போதைய விதிமுறைகளை பிரதமர் திரும்பப் பெற வேண்டும். மேலும், புலனாய்வு அமைப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டும், அவற்றை அரசியல் அல்லது மறைமுக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது; மாற்று விகிதத்தை நிலைப்படுத்த வேண்டும் மற்றும் வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும். இந்த விஷயங்களைச் செய்து முடித்தவுடன், அந்நிய முதலீடு (Foreign capital) மீண்டும் இந்தியாவிற்குள் வரத் தொடங்கும். சந்தை பொருளாதாரத்தின்மீது சந்தேகம் கொண்ட தற்போதைய அமைச்சர்களை வைத்துக் கொண்டு பிரதமரால் இதைச் செய்யமுடியாது. அவர் நல்லெண்ணம் கொண்ட, புத்திசாலித்தனமான நிபுணர்களின் உதவியைப் பெறவேண்டும்.


பிரதமர் அவர்கள் சந்தைப் பொருளாதாரத்தை நன்கு அறிந்த ஒரு நிபுணரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், அந்தத் தலைவரே தனது குழுவின் பிற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அத்துடன் 15 நாட்களுக்குள் அவசர நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன்.


Original Link: Govt lost sight of the ball


Share: