கிரேட் நிக்கோபார் மெகா திட்டத்திற்காகவும், அதனுடன் தொடர்புடைய வன அனுமதி ஒப்புதல்களுக்காகவும் பழங்குடியினர் மற்றும் வன பகுதிகளில் வசித்து வரும் மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டனவா? என்பதே இந்த வழக்கின் முக்கியப் பிரச்சினையாகும்.
மே மாதம் 8-ஆம் தேதியன்று, 'கிரேட் நிக்கோபார்' உள்கட்டமைப்புத் திட்டத்திற்காகப் பழங்குடியினரின் ஒப்புதலைப் பெறும் பணியில், 2006-ஆம் ஆண்டின் 'வன உரிமைகள் சட்டத்தை' (Forest Rights Act) மீறியதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் ஒன்றிய அரசுச் செயலாளர் மீனா குப்தா தாக்கல் செய்த பொதுநல வழக்கைக் விசாரிக்க, கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் போர்ட் பிளேர் அமர்வு ஒப்புக்கொண்டது.
ஒன்றிய அரசும் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகமும், இந்த பொதுநல வழக்கு மற்றும் இது தொடர்பான மற்ற இரு விவகாரங்களின் சட்டபூர்வத்தன்மைக்கு எதிராக ஆரம்பக்கட்ட எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. அந்த மற்ற இரு விவகாரங்கள்: கலாத்தியா தேசிய பூங்கா (Galathea National Park) மற்றும் கேம்ப்பெல் பே தேசிய பூங்காவின் (Campbell Bay National Park) பாதுகாக்கப்பட்ட இடைவெளிப் பகுதியை குறைப்பது தொடர்பானவை ஆகும்.
இருப்பினும், நீதிமன்றம் அந்த எதிர்ப்புகளை நிராகரித்தது. சுமார் 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கிரேட் நிக்கோபார் தீவு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு ஒருங்கிணைந்த நகரமைப்பு, ஒரு சர்வதேச சரக்குக் கொள்கலன் முனையம் (Transshipment container port), சூரியசக்தி மற்றும் எரிவாயு சார்ந்த மின்உற்பத்தி நிலையம், மற்றும் ராணுவம் மற்றும் பொதுமக்களின் இருதரப்பு பயன்பாட்டிற்கான ஒரு புதிய விமான நிலையம் ஆகியவற்றை உருவாக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன் தற்பொழுது நிலுவையில் உள்ள வழக்கு என்ன?
2024-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கில், குப்தா அவர்கள், 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்கீழ் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகளையும், அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் சட்டவிரோதமானவை என்ற குற்றசாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக, கேம்ப்பெல் பே தாலுகாவிற்கான துணைப்பிரிவு அளவிலான குழு (sub-divisional level committee (SDLC)) அமைக்கப்பட்டதும், ஆகஸ்ட் 12, 2022 அன்று கேம்ப்பெல் பே, லட்சுமி நகர் மற்றும் கோவிந்த் நகரில் கூட்டப்பட்ட கிராம சபைகளும், வனப் பகுதியை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இதில் அடங்கும்.
மேலும், வன உரிமைகளுக்கான அங்கீகாரச் சான்றிதழ் (Recognition of Forest Rights Certificate (RoFR)), 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதியன்று நிக்கோபார் மாவட்ட துணை ஆணையரால் வழங்கப்பட்டது. இதில், அனைத்து வன உரிமைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழும் தற்போது நீதிமன்ற வழக்கில் உட்படுத்தப்பட்டுள்ளது. மனுவில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் நிர்வாகம் கிரேட் நிக்கோபார் உள்கட்டமைப்பு திட்டத்திற்காக நிலத்தை மாற்றுவது தொடர்பான “சட்டவிரோதமான” கிராம சபை தீர்மானங்கள், வன உரிமைகள் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள வன உரிமைகள் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் துணை மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட ‘ஒப்புதல்’ ஆகியவற்றை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து வன அனுமதி பெற்று தவறாகப் பயன்படுத்தியதாக வாதிடப்பட்டுள்ளது.
கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு, பழங்குடியினர் உரிமைகள் மற்றும் 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்கீழ் நடந்ததாகக் கூறப்படும் நடைமுறை மீறல்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட ஒரு மனுவில் குப்தாவும் கையொப்பமிட்டிருந்தார். இருப்பினும், அந்த மனுவுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
வன உரிமைகள் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஒப்புதலின் சட்டபூர்வத்தன்மையை தாக்கல் செய்யப்பட்ட மனு ஏன் எதிர்க்கிறது?
இந்த மனுவின் முக்கிய வாதம், திட்டத்திற்காக நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற, பழங்குடியினரின் ஒப்புதலைப் பெறுவதற்காக 2006-ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின்கீழ் (Forest Rights Act (FRA)) பின்பற்றப்பட்ட முழு செயல்முறையும் குறைபாடுடையதாகவும், சட்டவிரோதமானதாகவும் உள்ளது. ஏனெனில், இந்தச்சட்டத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளை இந்தச் செயல்முறை பின்பற்றவில்லை. கிரேட் நிக்கோபார் தீவில், வன உரிமைகள் தொடர்பான ஒரு கோரிக்கைகூட இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்று இந்த மனு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டம், அதன் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் 2009-ஆம் ஆண்டு உத்தரவின்படி, ஒரு திட்டத்திற்காக வன நிலத்தைத் மாற்றுவதற்கு முன்னர், வன உரிமை கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிர்வாகம், வன உரிமைக் கோரிக்கைகளை அடையாளம் கண்டு அவற்றை முழுமையாக தீர்த்து வைக்க வேண்டும். 2006-ஆம் ஆண்டு பழங்குடியினர் விவகார அமைச்சகம் நிர்வகிக்கும் வன உரிமைகள் சட்டம், பல காலங்களாக நிலவி வந்த உரிமைகளை அங்கீகரிக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், குறைந்தது மூன்று தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினருக்கும் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கும் இந்த உரிமைகள் வழங்கப்படுகின்றன. இந்த உரிமைகளில், வசிப்பதற்கான உரிமை, சாகுபடி, மேய்ச்சல், மீன்பிடித்தல், அணுகல், சிறிய வனப்பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து அறுவடை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் முதல், வனப்பகுதிகளைப் பாதுகாத்து நிர்வகிப்பதற்கான உரிமைகள் தொடர்பான தனிநபர் மற்றும் சமூக உரிமைகளும் அடங்கும்.
குறிப்பிட்ட சில சட்டவிரோதச் செயல்கள் எனக் கருதப்படுபவற்றைச் சுட்டிக்காட்டி, கிராம சபையின் தீர்மானங்களை ஆய்வு செய்யும் துணைப் பிரிவு குழுவானது (SDLC), வன உரிமைச் சட்டத்தின்கீழ் வகுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என்று மனு குறிப்பிடுகிறது. மூன்று துணைப் பிரிவு குழுவானது உறுப்பினர்களில் குறைந்தது இரண்டு நபர்கள் பட்டியல் பழங்குடியினர்களாக இருக்க வேண்டும். இரண்டு நபர்களில் ஒரு பெண் உறுப்பினரும் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால், தீவு நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட துணைப் பிரிவு குழுவில், நிக்கோபார் இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
இரண்டாவதாக, இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் கிராம சபைகள், பழங்குடியினர் அல்லாத குடியேறிகளுக்காக அந்தமான் மற்றும் நிக்கோபார் பஞ்சாயத்து ஒழுங்குமுறையின்கீழ் அமைக்கப்பட்ட குடியேற்றப் பஞ்சாயத்துகள் (கேம்ப்பெல் பே, கோவிந்த் நகர் மற்றும் லட்சுமி நகர்) ஆகும். இந்தத் திட்டத்திற்காக 166.10 சதுர கிலோமீட்டர் நிலத்தை மாற்றுவது தொடர்பாக இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 121.87 சதுர கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், 8.88 சதுர கிலோமீட்டர் காடுகளாகக் கருதப்படும் நிலங்களும் (deemed forest) உள்ளது.
சட்டப்படி பார்த்தால், இந்த அமைப்புகள் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) அல்லது காடுகளில் வசிப்பவர்களின் கிராம சபைகள் அல்ல என்பதால், இந்தத் தீர்மானங்களுக்கு எந்தவொரு சட்டபூர்வமான அங்கீகாரமும் இல்லை என்று அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது. "வன நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான ஒப்புதலை, வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகள் பெற்றுள்ள மற்றும் அந்த உரிமைகள் முறைப்படி தீர்க்கப்பட்ட மக்கள் மட்டுமே வழங்க வேண்டும்; மாறாக, இந்தச் சட்டத்தின்கீழ் எந்தவொரு உரிமையும் இல்லாத அரசு அதிகாரிகள், பழங்குடியினர் அல்லாதவர்கள் அல்லது காடுகளில் வசித்திடாத நபர்கள் போன்றவர்கள் இத்தகைய ஒப்புதலை வழங்க முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டப்படுவதற்கு முன்பு, வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகோரல்களைக் கோரும் செயல்முறையைத் தொடங்கும் வன உரிமைக் குழு தொடர்பான எந்தப் பதிவும் கிடைக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழங்குடியினச் சபையின் தலைவரின் வாயிலாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிகோபார் சமூகத்தின் ஒப்புதலானது, பழங்குடியினச் சபையின் தலைவரால் ஒட்டுமொத்தச் சமூகத்தின் சார்பாக ஒப்புதல் அளித்ததாக கருதப்படாது என்பதன் அடிப்படையில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில், சபையின் தலைவர் அளித்த ஒப்புதலைத் திரும்பப் பெற்றார். உலகத்தோடு பெரும்பாலும் தொடர்பில்லாத பழங்குடியினக் குழுவாக விளங்கும் ‘ஷோம்பென்’ (Shompen) பழங்குடியினரைப் பொறுத்தவரை, அவர்களிடமிருந்து நேரடியாக ஒப்புதல் பெறப்படாமல், ஒரு அரசு அமைப்பான 'அந்தமான் ஆதிம் ஜன்ஜாதி விகாஸ் சமிதியின்' (Andaman Adim Janjati Vikas Samiti (AAJVS)) அதிகாரி ஒருவரின் வாயிலாகவே ஒப்புதல் பெறப்பட்டதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மனுவில், குறிப்பாக மிகவும் நலிவடைந்த பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ‘ஷோம்பென்’ (Shompen) பழங்குடி மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து என்ன வாதிடப்பட்டுள்ளது?
இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள மேம்பாட்டுப் பகுதிக்குள் உள்ள மூன்று ஷோம்பென் பழங்குடியினரின் குடியிருப்புகள், அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் பகுதிகள் உட்பட முற்றிலும் அழிக்கப்பட்டு, சீரழிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கிரேட் நிக்கோபார் தீவில் வாழும் தெற்கு ஷோம்பென் மக்களின் உணவு, நீர் மற்றும் இருப்பிடத்திற்கான உரிமைகளைப் பறிக்கும் என்றும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், தோட்டக்கலைக்கு பயன்படுத்தப்படும் வனப்பகுதிகள் மற்றும் சுத்தமான குடிநீர் ஆதாரங்களை இந்தத் திட்டம் இடமாற்றம் செய்யும் என்றும் வாதிடப்படுகிறது.
1972-ஆம் ஆண்டில் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 330 முன்னாள் ராணுவ வீரர்களுக்காகக் குடியிருப்புகள் அமைக்கப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, அச்செயல் ஷோம்பென் மக்களின் வாழ்விடத்தைச் சீர்குலைத்ததாகவும், அதன் காரணமாக அவர்கள் வனப்பகுதிகளின் உட்புறத்திற்கு இடம்பெயர நேர்ந்ததாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாடோடிகளாகவும், வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களாகவும் வாழும் ஷோம்பென் போன்ற பழங்குடியினருக்கு, தற்போதைய வன உரிமைச் சட்டம் (FRA) போதுமான பாதுகாப்பை வழங்குகிறதா என்ற கேள்வியையும் இந்த மனு எழுப்பியுள்ளது. ஷோம்பென் மக்களுக்குத் தங்களின் சுயநிர்ணய உரிமை (Right to self-determination) மற்றும் அவர்கள் விரும்பியபடி வாழ்வதற்கான உரிமை உள்ளது என்றும், எனவே அவர்களின் வாழ்விடத்தை அரசாங்கம் பறிக்க முடியாது என்றும் அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
ஷோம்பென் மக்களுக்கு இந்தி, ஆங்கிலம், நிக்கோபாரிஸ் அல்லது நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் வேறு எந்த மொழியையும் படிக்கவோ எழுதவோ தெரியாது. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை அவர்களால் புரிந்து கொள்ளவோ அல்லது அதற்குச் சம்மதம் தெரிவிக்கவோ முடியாது. காடுகளை மாற்றுப் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக, தங்களுடைய உரிமைகளைத் தீர்த்துக் கொள்வதும், அதற்குச் சம்மதம் தெரிவித்து உரிமைகளை விட்டுக் கொடுப்பதும் அவர்களுக்கு முற்றிலும் புதிய மற்றும் புரியாத ஒரு விஷயமாகும் என்று அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
Original Link: Forest Rights and the Great Nicobar Mega-Project: The case before the Calcutta High Court.