Showing posts with label Forest Rights. Show all posts
Showing posts with label Forest Rights. Show all posts

ஈடுசெய் காடு வளர்ப்பு என்றால் என்ன? -விக்னேஷ் பி. வெங்கடேஷ்

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் நிலையான வளர்ச்சியை (Sustainable Development) பாதுகப்பதற்கும் ஈடுசெய் காடு வளர்ப்பு (Compensatory Afforestation) ஒரு பயனுள்ள முறையாக இருந்தாலும், அதில் உள்ள முக்கியக் குறைபாடு, புதிதாக உருவாக்கப்படும் மரத் தோட்டங்கள் (Plantations) இயற்கையான காடுகளுக்கு (Natural Ecosystems) சமமானவை அல்ல என்பதாகும்


நாடு முழுவதும் வனவிலங்குகள் மற்றும் பசுமைப் பரப்பைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளுடன், ஆற்றுப் படுகையில் உள்ள டால்பின்கள், பனிச்சிறுத்தைகள், இந்திய காண்டாமிருகங்கள் மற்றும் காட்டு நீர் எருமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நான்கு திட்டங்களுக்கு 'தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்' (National Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 2016-ஆம் ஆண்டு 'ஈடுசெய் காடு வளர்ப்பு நிதிச் (Compensatory Afforestation Fund Act) சட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட தேசிய ஈடுசெய் காடுவளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம், ஈடுசெய் காடு வளர்ப்பு நிதியைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படுகிறது. இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமும் உள்ளூர் அளவிலான திட்டங்களை மேற்கொள்ளத் தங்களது மாநிலங்களுக்கென ஒரு தனி CAMPA அமைப்பைக் கொண்டுள்ளன. அதேவேளையில் தேசிய அளவிலான CAMPA அமைப்பு விரிவான கொள்கை வழிகாட்டுதல்களையும் தொழில்நுட்ப மேற்பார்வையையும் வழங்குகிறது.


ஈடுசெய் காடு வளர்ப்பு என்றால் என்ன?


பெயர் குறிப்பிடுவது போல, பசுமையைப் பராமரிப்பதற்காக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மாற்றப்பட்ட வன நிலங்களுக்குப் பதிலாக புதிய காடுகளை உருவாக்கும் நடைமுறையே ஈடுசெய் காடு வளர்ப்பு (compensatory afforestation) ஆகும். ஒரு பிராந்தியத்தின் சூழல் மண்டலத்தை மாற்றும் பெரிய அளவிலான திட்டங்களுக்கு இந்த நடைமுறையை ஒரு காரணமாகக் கூற முடியாது என்றாலும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்போது நீடித்த நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு ஈடுசெய் காடு வளர்ப்பு ஒரு சிறந்த வழியாகும். இந்தியாவில், வன நிலத்தை வனம் தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும் அனுமதி பெறுவதற்கும் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக 'ஈடுசெய் காடு வளர்ப்பு' (compensatory afforestation) இருந்து வருகிறது. இது 'நிலத்திற்குப் பதிலாக நிலம்' மற்றும் 'மரங்களுக்குப் பதிலாக மரங்கள்' என்ற அடிப்படையில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதை நோக்கம் கொண்டுள்ளது. 1980-ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் (Forest (Conservation) Act (FCA)) கீழ், மத்திய அரசின் முன் அனுமதியைக் கோரிச் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு முன்மொழிவும், சம்பந்தப்பட்ட மாநில அல்லது யூனியன் பிரதேச நிர்வாகத்தின் சமந்தப்பட்ட அதிகாரியால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட, ஈடுசெய் காடு   வளர்ப்புக்கான விரிவான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.


ஈடுசெய் காடு  வளர்ப்பு நிதிச் (Compensatory Afforestation Fund Act) சட்டத்திற்கு நிதி எங்கிருந்து வருகிறது?


ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி சட்டத்திற்க்கான முதன்மை நிதி  ஆதாரம், வன நிலங்களை பிற பயன்பாடுகளுக்காக மாற்றும் (Diversion of Forest Land) எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது அரசு துறையிடமிருந்து வசூலிக்கப்படும் இழப்பீட்டு கட்டணங்கள் (Compensatory Charges) கட்டணங்களாகும். இந்தக் கட்டணங்களில், வன நில இழப்பை ஈடுசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஈடுசெய் காடு வளர்ப்புக்கான (Compensatory Afforestation) செலவுகளும் அடங்கும். இந்த நிதி காலாவதியாகாத (Non-lapsable) தன்மை கொண்டது. ஒரு நிதியாண்டின் முடிவில் பயன்படுத்தப்படாத தொகை காலாவதியாகாமல், அடுத்த நிதியாண்டிற்கும் பயன்ப்படுத்தபடும். மேலும், இந்த நிதி வட்டி ஈட்டும் (Interest-bearing) தன்மை கொண்டது. இந்த நிதி தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்' (National Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) மற்றும் மாநிலம்/ஒன்றியப் பிரதேச தேசிய ஈடுசெய் காடுவளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் நிதிகளுக்கு 10 : 90 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் நிதி இந்தியாவின் பொதுக் கணக்கில்  பராமரிக்கப்படுகிறது. அதேபோல், மாநிலம்/ஒன்றியப் பிரதேச தேசிய ஈடுசெய் காடுவளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதிகள், அந்தந்த மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பொதுக் கணக்கில் (Public Account) பராமரிக்கப்படுகின்றன.


தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதிகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?


தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதிகள் நிதிகளின் முக்கியப் பயன்பாடானது, மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளை நீடித்த முறையில் மேம்படுத்துதல், வளங்களைப் பாதுகாத்தல், வனப்பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் வாழ்விடங்களை மேம்படுத்துதல் ஆகும்.


தேசிய ஈடுசெய் காடு  வளர்ப்பு நிதி மேலாண்மை திட்டத்தின்கீழ் உள்ள சமீபத்திய திட்டங்கள் என்னென்ன?

தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை திட்டத்தின் (CAMPA) நிர்வாகக் குழு, ஜூலை 10 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், ஆற்றுப் படுகையில் டால்பின்களுக்கான பாதுகாப்பு மற்றும் மீட்பு செயல் திட்டம், பனிச்சிறுத்தை திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள்தொகை மதிப்பீட்டுடன் கூடிய ஆய்வு, இந்திய காண்டாமிருகத்திற்கான பாதுகாப்பு செயல் திட்டம் மற்றும் காட்டுப் பகுதியில் உள்ள நீர் எருமைக்கான அகில இந்திய பாதுகாப்பு அணுகுமுறை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், மணிப்பூரின் புருவக் கொம்பு மான் (Sangai) பாதுகாப்பிற்கான தொடர் ஆதரவிற்கும் ஒப்புதல் அளித்ததுடன், அதன் முதன்மை சதுப்புநில மறுசீரமைப்புத் திட்டமான மிஷ்டி (Mangrove Initiative for Shoreline Habitats and Tangible Incomes (MISHTI)) திட்டத்தை ₹600 கோடி திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன்  மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்தது.


தேசிய ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்' (National Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) குறித்து எழுப்பப்பட்டுள்ள கவலைகள் யாவை?


ஒரு வளரும் பொருளாதாரம் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கு ஈடுசெய்யும் காடு வளர்ப்பு தேவையானதாக இருந்தாலும், அதன் முக்கிய குறைபாடுகளில் ஒன்று, காடு வளர்ப்புப் பகுதிகள் இயல்பாகவே இயற்கைச் சூழல் அமைப்புகளிலிருந்து வேறுபட்டவை என்பதாகும். வளர்ச்சி முயற்சிகளால் சீர்குலைந்த ஒரு பகுதியின் சூழலியல் சமநிலையைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்படும் வெறும் காடு வளர்ப்பு, பசுமைப் போர்வையை மீட்டெடுக்கும். ஆனால், அது சூழல் அமைப்பை மீண்டும் உருவாக்குவதில் தோல்வியடையும். ஈடுசெய்யும் காடு வளர்ப்பு ஒப்பந்தத்தில் (CAF) குறிப்பிடப்பட்டுள்ளபடி, காடுகள் அல்லாத பகுதிகளில் இல்லாமல் வன நிலங்களில் ஈடுசெய்யும் காடு வளர்ப்புப் பகுதிகள் மேற்கொள்ளப்படுவது, அந்த இழப்பீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் ஒரு   பிரச்சினையாகும் என்று காலநிலை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Original Link: What is compensatory afforestation? 


Share:

சட்டப்பூர்வப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரிடையே நிலத் தகராறுகள் ஏன் தொடர்கின்றன? -ஷ்ரியா முர்மு

பழங்குடியின மக்களின் நில உரிமைகள் மற்றும் தன்னாட்சியைப் பாதுகாப்பதற்காகவே சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் (Chota Nagpur Tenancy Act (CNT Act)), சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (Santhal Parganas Tenancy Act (SPT Act)) மற்றும் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (Provisions of the Panchayats (Extension to Scheduled Areas) Act (PESA Act)) ஆகியவை உருவாக்கப்பட்டன. இருப்பினும், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் சுரங்கத் திட்டங்கள், சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனமான அமலாக்கம் ஆகியவற்றின் காரணமாக நிலத் தகராறுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.


இதே காலகட்டத்தில், சுமார் 170 ஆண்டுகளுக்கும் முன்பு, தற்போதைய கிழக்கு ஜார்க்கண்டின் காடுகள் நிறைந்த 'தாமின்-இ-கோ' (Damin-i-Koh) பகுதியில் சந்தால் பழங்குடியின மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர். 1855-ஆம் ஆண்டின் இந்த சந்தால் பழங்குடியினரின் புரட்சி  (Hul) போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்கள், உயர்சாதியினர், ஜமீன்தார்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து தாங்கள் எதிர்கொண்ட பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்த மக்கள் துணிச்சலுடன் போராடினர்.


சில வரலாற்றுப் பதிவுகளின்படி ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய 'சந்தால் பழங்குடியினரின் புரட்சி' (Hul) இயக்கத்தின் ஒரு நிரந்தரமான முடிவு, 1876-ஆம் ஆண்டின் சந்தால் பர்கானா குத்தகை (SPT) சட்டம் ஆகும். பழங்குடி சமூகத்தினர் தங்களது நிலங்களை இழப்பதில் இருந்தும், கந்துவட்டிக்காரர்களின் சுரண்டல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.


பழங்குடியினரின் நிலங்களைப் பாதுகாக்கும் ஒரே சட்டம் இந்த சந்தால் பர்கானா குத்தகை (SPT) சட்டம் மட்டுமல்ல. சோட்டா நாக்பூர் குத்தகை (CNT) சட்டம் மற்றும் பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA Act) ஆகியவை இதர முக்கியமான சட்டங்கள் ஆகும்.


இந்தச் சட்டங்கள் பழங்குடியினரின் நிலங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகின்றன. இருப்பினும், இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தபோதிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலம் தொடர்பான விவகாரங்கள் இன்னும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே நீடித்து வருகின்றன.


சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம்


ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், பழங்குடியின மக்களின் நிலங்களை பழங்குடியினர் அல்லாத மற்றவர்களுக்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி மட்டுமே நிலத்தை வாரிசுரிமையாகப் பெறமுடியும். இதன் மூலம், சந்தால் (Santal) பழங்குடியினர் தங்களது நிலங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ளும் உரிமையைப் பாதுகாக்கிறது. இந்த சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம், தற்போதைய சந்தால் பர்கனா பிராந்தியத்தில் உள்ள தும்கா (Dumka), தியோகர் (Deoghar), கோடா (Godda), பாகுர் (Pakur), சாஹிப்கஞ்ச் (Sahibganj) மற்றும் ஜாம்தாரா (Jamtara) ஆகிய மாவட்டங்களுக்குப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.


சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம்

பழங்குடியின மக்களின் போராட்டங்களின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட ஒரே ஆங்கிலேயர் கால நிலச் சீர்திருத்தச் சட்டம் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களால் 1908-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (CNT Act) என்பது 1899-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற பிர்சா முண்டா அவர்களின் இயக்கப் போராட்டத்தின் விளைவாக உருவானதாகும்.




இச்சட்டம், மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு ஒரே சாதிக்குள்ளும், குறிப்பிட்ட புவியியல் பகுதிகளுக்குள்ளும் நிலங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. இந்தச் சட்டம் பழங்குடியின மக்கள் மற்றும் தலித் மக்களின் நிலங்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஒரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடியின மக்களுக்கு இடையிலும், ஒரே மாவட்டத்திற்குட்பட்ட தலித் மக்களுக்கு இடையிலும் நிலங்களை மாற்றிக்கொள்ள இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.


இந்தச் சட்டம் வட சோட்டாநாக்பூர், தென் சோட்டாநாக்பூர் மற்றும் பலாமு ஆகிய பிரிவுகளுக்குப் பொருந்தும். இதில் ராஞ்சி (Ranchi), ஹசாரிபாக் (Hazaribagh), பலாமு (Palamu), குந்தி (Khunti) மற்றும் கும்லா (Gumla) போன்ற முக்கிய மாவட்டங்கள் அடங்கும்.


பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம்


அரசியலமைப்பின் 9-வது பகுதியில் உள்ள பஞ்சாயத்துகள் தொடர்பான விதிகளை, பட்டியல் பழங்குடியினப் பகுதிகளுக்கும் நீட்டிப்பதற்காக 1996-ஆம் ஆண்டில் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA Act) இயற்றப்பட்டது. இச்சட்டம், பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் கிராம சபைகள் மூலமாகத் தங்களைத்தாங்களே நிர்வகித்துக்கொள்ளும் சுயாட்சி உரிமையை உறுதி செய்கிறது. மேலும், இயற்கை வளங்கள்மீது பழங்குடியின மக்களுக்கு உள்ள உரிமைகளையும் இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய பத்து மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.


இத்தகைய பாதுகாப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் அதிக கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டில், சட்ட குறைபாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் பலவீனமான சட்ட அமலாக்கம் காரணமாக இன்னும் நிலத் தகராறுகள் தொடர்ந்து நடந்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


சுரங்கத் தொழில் மற்றும் வளங்களைப் பிரித்தெடுத்தல்


சுரங்கத் தொழில் மற்றும் இயற்கை வளங்களை எடுப்பதைக் கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டங்கள் மீது ஒரு முக்கிய விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.


பிரிட்டனின் பிரைட்டன் நகரில் உள்ள வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தில் (Institute of Development Studies) ஆலோசகராகப் பணிபுரியும் தீப்தி மேரி மின்ஜ் கூறுகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Mines and Minerals (Development and Regulation) Act, 1957) மற்றும் நிலக்கரி தாங்கும் பகுதிகள் (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம் (Coal Bearing Areas (Acquisition and Development) Act, 1957) போன்ற ஒன்றிய அரசின் சட்டங்கள், பெரும்பாலும் பொது நலன் என்ற பெயரில் பழங்குடியினரின் சட்டங்களைவிடவும் அதிக அதிகாரம் கொண்டு அவற்றை முடக்குகின்றன என்றும் கூறியுள்ளார்.


நிலச் சட்டங்கள் குறித்த கையேட்டின்படி (Handbook on Land Laws) (ஜார்க்கண்ட் நீதித்துறை அகாடமி), சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் (CNT Act) பிரிவு 49, தொடக்கத்தில் மத, கல்வி மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே நிலங்களை மாற்றுவதற்கு அனுமதித்தது. இருப்பினும், 1996-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம், துணை ஆணையரின் ஒப்புதலுடன் தொழில்துறை மற்றும் சுரங்கத் திட்டங்களையும் இந்தச் சட்டப்பிரிவில் சேர்க்கும் வகையில் இந்த விதி விரிவுபடுத்தப்பட்டது.


ராஞ்சியைச் சேர்ந்த சுதந்திர தேசப்பற்று மற்றும் காலனிய ஆதிக்க எதிர்ப்பு ஆராய்ச்சியாளரான ஆகிருதி லக்ரா கூறுகையில், சுரங்கத் தொழில் என்பது சுரங்கம், சுற்றுச்சூழல், காடு மற்றும் நிலக் கையகப்படுத்துதல் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA) மற்றும் அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையின்கீழ் (Fifth Schedule) வழங்கப்படும் பாதுகாப்புகளுடன் ஒன்றோடொன்று முரண்படுகின்றன. இதனால் எந்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நடைமுறையில், மாநில அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளைவிட சுரங்க மற்றும் தொழில்துறை கொள்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.


ராஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அவிரல் ஐந்த் கூறுகையில், நடைமுறையில் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டத்தின் (PESA) விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் இந்தச் சட்டம் மணல், களிமண் மற்றும் கூழாங்கற்கள் போன்ற சிறிய அளவிலான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கே பொருந்தும் என்றாலும், நிறுவனங்கள் சில நேரங்களில் இந்தச் சிறிய கனிமங்கள் பிரிவின்கீழ் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பெரிய அளவிலான முக்கியக் கனிமங்களை வெட்டி எடுக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


நில வங்கிகள் மற்றும் காடு வளர்ப்பு


பழங்குடியினரின் நிலங்கள் பறிபோவதற்குக் கூடுதல் ஒரு காரணம் 'நில வங்கிகள்' (Land banks) ஆகும். இதில் அரசாங்கமோ அல்லது பொது அதிகார அமைப்போ பின்னர் விநியோகிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக நிலங்களை முன்கூட்டியே கையகப்படுத்தித் தன்னிடம் வைத்துக் கொள்ளும். பல நேரங்களில், இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலப்பகுதிகளில் பழங்குடியினரின் நிலங்களும் அடங்கும் என்கின்றனர்.


பழங்குடியின சமூகத்தினரிடம் வேளாண் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத சில பொதுவான நிலங்கள் இருக்கும். அவை கால்நடைகளை மேய்ப்பதற்கும், கதிர் அடிப்பதற்கும், அறுவடை செய்த பயிர்களைச் சேமித்து வைப்பதற்கும், சமூகக் கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டு கனிமப் படிமங்களை ஆராய்வதற்காக வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது (Aerial survey), அரசாங்கம் தங்களது இந்த பொது நிலங்களில் சிலவற்றை பயன்பாடற்ற தரிசு நிலம் (Wasteland) என வகைப்படுத்தியதாக மிஞ்ச் தெரிவித்தார். பின்னர், இந்த நிலங்கள் காடுகள் அழிக்கப்பட்டதற்கு ஈடாக வேறு இடங்களில் மரங்களை நட்டு காடுகளை வளர்க்கும் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன.


இழப்பீட்டு காடுவளர்ப்புத் திட்டம் பெரும்பாலும் விமர்சனத்திற்குள்ளாவதாக மிஞ்ச் கூறினார். இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், அங்கு அந்த மண்ணுக்குச் சொந்தமில்லாத பிற பகுதி மரங்கள் (Non-native trees) நடப்படுகின்றன. இத்தகைய செயற்கைத் தோட்டங்களால் ஒருபோதும் இயற்கை காடுகளுக்கு இணையான இடத்தை ஈடுசெய்ய முடியாது. மேலும், இந்த மரத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டபிறகு, அந்த நிலம் பொதுவாக வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. இது பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய வன நிலங்களையும் அங்கிருக்கும் வளங்களையும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது.


சீரற்ற முறையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்தல் 


சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் (CNT) பிரிவு 71(A)-ன்படி, சட்டவிரோதமாகப் பறிமாற்றம் செய்யப்பட்ட பழங்குடியினரின் நிலங்கள் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்தச் சட்டம் சீரற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


நிரஞ்சன் பாக்வர் எழுதிய 'Land, Law and Power: Unraveling the Legal and Criminal Nexus in Jharkhand’s Land Transactions' என்ற ஆய்வுக் கட்டுரையின்படி, நில அபகரிப்பாளர்கள் பெரும்பாலும் இத்தகைய சட்டவிரோத நிலப் பறிமாற்றங்களை 'தானப் பத்திரம்' (Dan patra) அல்லது 'நிலப் பரிமாற்றப் பத்திரம்' (Badlanama) என்று காட்டி மறைத்துவிடுகின்றனர். இது அவர்கள் சட்டரீதியான சோதனைகளில் இருந்து தப்பிக்கவும், அமைப்பில் உள்ள சட்டக் குறைபாடுகளைப் பயன்படுத்தி சுரண்டவும் உதவுகிறது.


இதுகுறித்து லக்ரா கூறுகையில், “நாங்கள் வளர்ச்சிக்கு அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்காக எங்கள் நிலத்தைக் கொடுப்பதற்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், எங்கள் மக்களுக்குப் பொதுவாகக் குறைந்த ஊதியம் கொண்ட, குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளே வழங்கப்படுகின்றன. மேலும், தலைமைப் பொறுப்புகளிலோ அல்லது முடிவெடுக்கும் பதவிகளிலோ அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது. இது எங்கள் சமூகத்தை இன்னும் விளிம்பு நிலைக்குத் தள்ளுகிறது, என்றும் இதன் விளைவாக, பழங்குடியின சமூகங்கள் அர்த்தமுள்ள வேலைகளோ அல்லது நீண்டகாலப் பொருளாதாரப் பாதுகாப்போ கிடைக்காமலேயே தங்களது நிலங்களை இழக்கின்றனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.  



Share:

வன உரிமைகளும் மற்றும் பெரும் நிக்கோபார் மெகா திட்டமும் : கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கு. -நிகில் கனேகர்

கிரேட் நிக்கோபார் மெகா திட்டத்திற்காகவும், அதனுடன் தொடர்புடைய வன அனுமதி ஒப்புதல்களுக்காகவும் பழங்குடியினர் மற்றும் வன பகுதிகளில் வசித்து வரும் மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டனவா? என்பதே  இந்த வழக்கின் முக்கியப் பிரச்சினையாகும்.


மே மாதம் 8-ஆம் தேதியன்று, 'கிரேட் நிக்கோபார்' உள்கட்டமைப்புத் திட்டத்திற்காகப் பழங்குடியினரின் ஒப்புதலைப் பெறும் பணியில், 2006-ஆம் ஆண்டின் 'வன உரிமைகள் சட்டத்தை' (Forest Rights Act) மீறியதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் ஒன்றிய அரசுச் செயலாளர் மீனா குப்தா தாக்கல் செய்த பொதுநல வழக்கைக் விசாரிக்க, கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் போர்ட் பிளேர் அமர்வு ஒப்புக்கொண்டது.


ஒன்றிய அரசும் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகமும், இந்த பொதுநல வழக்கு மற்றும் இது தொடர்பான மற்ற இரு விவகாரங்களின் சட்டபூர்வத்தன்மைக்கு எதிராக ஆரம்பக்கட்ட எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. அந்த மற்ற இரு விவகாரங்கள்: கலாத்தியா தேசிய பூங்கா (Galathea National Park) மற்றும் கேம்ப்பெல் பே தேசிய பூங்காவின் (Campbell Bay National Park) பாதுகாக்கப்பட்ட இடைவெளிப் பகுதியை குறைப்பது தொடர்பானவை ஆகும்.


இருப்பினும், நீதிமன்றம் அந்த எதிர்ப்புகளை நிராகரித்தது. சுமார் 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கிரேட் நிக்கோபார் தீவு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு ஒருங்கிணைந்த நகரமைப்பு, ஒரு சர்வதேச சரக்குக் கொள்கலன் முனையம் (Transshipment container port), சூரியசக்தி மற்றும் எரிவாயு சார்ந்த மின்உற்பத்தி நிலையம், மற்றும் ராணுவம் மற்றும் பொதுமக்களின் இருதரப்பு பயன்பாட்டிற்கான ஒரு புதிய விமான நிலையம் ஆகியவற்றை உருவாக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.



கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன் தற்பொழுது நிலுவையில் உள்ள வழக்கு என்ன?


2024-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கில், குப்தா அவர்கள், 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்கீழ் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகளையும், அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் சட்டவிரோதமானவை என்ற குற்றசாட்டை  முன்வைத்துள்ளார். குறிப்பாக, கேம்ப்பெல் பே தாலுகாவிற்கான துணைப்பிரிவு அளவிலான குழு (sub-divisional level committee (SDLC)) அமைக்கப்பட்டதும், ஆகஸ்ட் 12, 2022 அன்று கேம்ப்பெல் பே, லட்சுமி நகர் மற்றும் கோவிந்த் நகரில் கூட்டப்பட்ட கிராம சபைகளும், வனப் பகுதியை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இதில் அடங்கும்.


மேலும், வன உரிமைகளுக்கான அங்கீகாரச் சான்றிதழ் (Recognition of Forest Rights Certificate (RoFR)), 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதியன்று நிக்கோபார் மாவட்ட துணை ஆணையரால் வழங்கப்பட்டது. இதில், அனைத்து வன உரிமைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழும் தற்போது நீதிமன்ற வழக்கில் உட்படுத்தப்பட்டுள்ளது. மனுவில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் நிர்வாகம் கிரேட் நிக்கோபார் உள்கட்டமைப்பு திட்டத்திற்காக நிலத்தை  மாற்றுவது  தொடர்பான “சட்டவிரோதமான” கிராம சபை தீர்மானங்கள், வன உரிமைகள் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள வன உரிமைகள் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் துணை மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட ‘ஒப்புதல்’ ஆகியவற்றை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து வன அனுமதி பெற்று தவறாகப் பயன்படுத்தியதாக வாதிடப்பட்டுள்ளது.


கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு, பழங்குடியினர் உரிமைகள் மற்றும் 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்கீழ் நடந்ததாகக் கூறப்படும் நடைமுறை மீறல்கள் தொடர்பாக  குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட ஒரு மனுவில் குப்தாவும் கையொப்பமிட்டிருந்தார். இருப்பினும், அந்த மனுவுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.



வன உரிமைகள் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஒப்புதலின் சட்டபூர்வத்தன்மையை தாக்கல் செய்யப்பட்ட மனு ஏன் எதிர்க்கிறது?


இந்த மனுவின் முக்கிய வாதம், திட்டத்திற்காக நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற, பழங்குடியினரின் ஒப்புதலைப் பெறுவதற்காக 2006-ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின்கீழ் (Forest Rights Act (FRA)) பின்பற்றப்பட்ட முழு செயல்முறையும் குறைபாடுடையதாகவும், சட்டவிரோதமானதாகவும் உள்ளது. ஏனெனில், இந்தச்சட்டத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளை இந்தச் செயல்முறை பின்பற்றவில்லை. கிரேட் நிக்கோபார் தீவில், வன உரிமைகள் தொடர்பான   ஒரு கோரிக்கைகூட இதுவரை தீர்த்துவைக்கப்படவில்லை என்று இந்த மனு  குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.


2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டம், அதன் விதிகள் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் 2009-ஆம் ஆண்டு உத்தரவின்படி, ஒரு திட்டத்திற்காக வன நிலத்தைத்  மாற்றுவதற்கு முன்னர், வன உரிமை கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும்.


சம்பந்தப்பட்ட நிர்வாகம், வன உரிமைக் கோரிக்கைகளை அடையாளம் கண்டு அவற்றை  முழுமையாக தீர்த்து வைக்க வேண்டும். 2006-ஆம் ஆண்டு பழங்குடியினர் விவகார அமைச்சகம் நிர்வகிக்கும் வன உரிமைகள் சட்டம், பல காலங்களாக நிலவி வந்த உரிமைகளை அங்கீகரிக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், குறைந்தது மூன்று தலைமுறைகளாக  வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினருக்கும்  மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கும் இந்த உரிமைகள் வழங்கப்படுகின்றன. இந்த உரிமைகளில், வசிப்பதற்கான உரிமை, சாகுபடி, மேய்ச்சல், மீன்பிடித்தல், அணுகல், சிறிய வனப்பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து அறுவடை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் முதல், வனப்பகுதிகளைப் பாதுகாத்து நிர்வகிப்பதற்கான  உரிமைகள்  தொடர்பான  தனிநபர் மற்றும் சமூக உரிமைகளும் அடங்கும்.


குறிப்பிட்ட சில சட்டவிரோதச் செயல்கள் எனக் கருதப்படுபவற்றைச் சுட்டிக்காட்டி, கிராம சபையின் தீர்மானங்களை ஆய்வு செய்யும் துணைப் பிரிவு குழுவானது (SDLC), வன உரிமைச் சட்டத்தின்கீழ் வகுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என்று மனு குறிப்பிடுகிறது. மூன்று துணைப் பிரிவு குழுவானது உறுப்பினர்களில் குறைந்தது இரண்டு நபர்கள் பட்டியல் பழங்குடியினர்களாக இருக்க வேண்டும். இரண்டு நபர்களில் ஒரு பெண் உறுப்பினரும் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால், தீவு நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட துணைப் பிரிவு குழுவில், நிக்கோபார் இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.


இரண்டாவதாக, இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் கிராம சபைகள், பழங்குடியினர் அல்லாத குடியேறிகளுக்காக அந்தமான் மற்றும் நிக்கோபார் பஞ்சாயத்து ஒழுங்குமுறையின்கீழ் அமைக்கப்பட்ட குடியேற்றப் பஞ்சாயத்துகள் (கேம்ப்பெல் பே, கோவிந்த் நகர் மற்றும் லட்சுமி நகர்) ஆகும். இந்தத் திட்டத்திற்காக 166.10 சதுர கிலோமீட்டர் நிலத்தை மாற்றுவது தொடர்பாக இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 121.87 சதுர கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், 8.88 சதுர கிலோமீட்டர் காடுகளாகக் கருதப்படும் நிலங்களும் (deemed forest) உள்ளது.


சட்டப்படி பார்த்தால், இந்த அமைப்புகள் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) அல்லது காடுகளில் வசிப்பவர்களின் கிராம சபைகள் அல்ல என்பதால், இந்தத் தீர்மானங்களுக்கு எந்தவொரு சட்டபூர்வமான அங்கீகாரமும் இல்லை என்று அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது. "வன நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான ஒப்புதலை, வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகள் பெற்றுள்ள மற்றும் அந்த உரிமைகள் முறைப்படி தீர்க்கப்பட்ட மக்கள் மட்டுமே வழங்க வேண்டும்; மாறாக, இந்தச் சட்டத்தின்கீழ் எந்தவொரு உரிமையும் இல்லாத அரசு அதிகாரிகள், பழங்குடியினர் அல்லாதவர்கள் அல்லது காடுகளில் வசித்திடாத நபர்கள் போன்றவர்கள் இத்தகைய ஒப்புதலை வழங்க முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


கிராம சபை கூட்டப்படுவதற்கு முன்பு, வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகோரல்களைக் கோரும் செயல்முறையைத் தொடங்கும் வன உரிமைக் குழு தொடர்பான எந்தப் பதிவும் கிடைக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பழங்குடியினச் சபையின் தலைவரின் வாயிலாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிகோபார் சமூகத்தின் ஒப்புதலானது, பழங்குடியினச் சபையின் தலைவரால் ஒட்டுமொத்தச் சமூகத்தின் சார்பாக ஒப்புதல் அளித்ததாக கருதப்படாது என்பதன் அடிப்படையில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில்,  சபையின் தலைவர் அளித்த ஒப்புதலைத் திரும்பப் பெற்றார்.  உலகத்தோடு பெரும்பாலும் தொடர்பில்லாத பழங்குடியினக் குழுவாக விளங்கும் ‘ஷோம்பென்’ (Shompen) பழங்குடியினரைப் பொறுத்தவரை, அவர்களிடமிருந்து நேரடியாக ஒப்புதல் பெறப்படாமல், ஒரு அரசு அமைப்பான 'அந்தமான் ஆதிம் ஜன்ஜாதி விகாஸ் சமிதியின்' (Andaman Adim Janjati Vikas Samiti (AAJVS)) அதிகாரி ஒருவரின் வாயிலாகவே ஒப்புதல் பெறப்பட்டதாக இந்த மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த மனுவில், குறிப்பாக மிகவும் நலிவடைந்த பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ‘ஷோம்பென்’ (Shompen) பழங்குடி மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து என்ன வாதிடப்பட்டுள்ளது?


இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள மேம்பாட்டுப் பகுதிக்குள் உள்ள மூன்று ஷோம்பென் பழங்குடியினரின் குடியிருப்புகள், அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் பகுதிகள் உட்பட முற்றிலும் அழிக்கப்பட்டு, சீரழிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கிரேட் நிக்கோபார் தீவில் வாழும் தெற்கு ஷோம்பென் மக்களின் உணவு, நீர் மற்றும் இருப்பிடத்திற்கான உரிமைகளைப் பறிக்கும் என்றும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், தோட்டக்கலைக்கு பயன்படுத்தப்படும் வனப்பகுதிகள் மற்றும் சுத்தமான குடிநீர் ஆதாரங்களை இந்தத் திட்டம் இடமாற்றம் செய்யும் என்றும் வாதிடப்படுகிறது.


1972-ஆம் ஆண்டில்  தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 330 முன்னாள் ராணுவ வீரர்களுக்காகக் குடியிருப்புகள் அமைக்கப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, அச்செயல் ஷோம்பென் மக்களின் வாழ்விடத்தைச் சீர்குலைத்ததாகவும், அதன் காரணமாக அவர்கள்   வனப்பகுதிகளின் உட்புறத்திற்கு இடம்பெயர நேர்ந்ததாகவும் இந்த மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாடோடிகளாகவும், வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களாகவும் வாழும் ஷோம்பென் போன்ற பழங்குடியினருக்கு, தற்போதைய வன உரிமைச் சட்டம் (FRA) போதுமான பாதுகாப்பை வழங்குகிறதா என்ற கேள்வியையும் இந்த மனு எழுப்பியுள்ளது. ஷோம்பென் மக்களுக்குத் தங்களின் சுயநிர்ணய உரிமை (Right to self-determination) மற்றும் அவர்கள் விரும்பியபடி வாழ்வதற்கான உரிமை உள்ளது என்றும், எனவே அவர்களின் வாழ்விடத்தை அரசாங்கம் பறிக்க முடியாது என்றும் அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

 

ஷோம்பென் மக்களுக்கு இந்தி, ஆங்கிலம், நிக்கோபாரிஸ் அல்லது நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் வேறு எந்த மொழியையும் படிக்கவோ எழுதவோ தெரியாது. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை அவர்களால் புரிந்து கொள்ளவோ அல்லது அதற்குச் சம்மதம் தெரிவிக்கவோ முடியாது. காடுகளை மாற்றுப் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக, தங்களுடைய உரிமைகளைத் தீர்த்துக் கொள்வதும், அதற்குச் சம்மதம் தெரிவித்து உரிமைகளை விட்டுக் கொடுப்பதும் அவர்களுக்கு முற்றிலும் புதிய மற்றும் புரியாத ஒரு விஷயமாகும் என்று அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது.


Original Link: Forest Rights and the Great Nicobar Mega-Project: The case before the Calcutta High Court.


Share:

அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது எப்படி? -சி.ஆர். பிஜோய்

 மாவட்ட அளவிலான குழுவின் (District Level Committee (DLC)) முடிவில் நீதிமன்றம் ஏன் தலையிட்டது? கால்நடைகளை வெளியேற்றுவது மற்றும் மேய்ச்சல் உரிமைகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது?


தற்போதைய நிகழ்வு  :


ஏப்ரல் 20 அன்று, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூரில் உள்ள வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான குழுவிற்கு (DLC), அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, பிந்தைய சட்டத்துடன் முரண்பட்டால், முந்தைய நீதிமன்ற உத்தரவு செல்லாததாகிவிடும் என்று கூறியது.


இந்த உத்தரவு ஏன் முக்கியமானது?


மாவட்ட அளவிலான குழுவின் (DLC) மார்ச் 2021 முடிவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த முடிவில், பாலியா கலான் தாலுகாவைச் சேர்ந்த பழங்குடி சமூகமான 'தாரு' (Tharu) அவர்களின் வன உரிமை கோரிக்கைகளை மாவட்ட அளவிலான குழு (DLC) நிராகரித்திருந்தது. மாவட்ட அளவிலான குழு, 2000-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைச் சார்ந்திருந்தது. அந்த உத்தரவு, அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை "காடுகள், சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களின் ஒதுக்கீட்டை நீக்குவதை" நிறுத்தியிருந்தது.


மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இயங்கும் மாவட்ட அளவிலான குழுவில், கோட்ட வன அலுவலர், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மூன்று மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அடங்குவர்.


சட்டம் இயற்றுவதில் உள்ள முக்கிய சட்டக் கோட்பாடு என்னவென்றால், முந்தைய சட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளில் உள்ள, பிற்காலச் சட்டத்தின் விதிகளுடன் முரண்படும் அனைத்து விதிகளும் செல்லாதவை ஆகும். 2006-ம் ஆண்டின் வன உரிமைச் சட்டமே (Forest Rights Act(FRA)), "தற்சமயம் நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் உள்ள எதையும் பொருட்படுத்தாமல் மற்றும் இந்தச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு" வன உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வனமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. மாவட்ட அளவிலான குழு (DLC) இந்த விதியை மீறியுள்ளது, இது தண்டனைக்குரிய குற்றமாகும்.


மாவட்ட அளவிலான குழு (DLC) தண்டிக்கப்பட்டதா?


இந்த நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் நிவாரணத்தை அளித்திருந்தாலும், விதிமீறுபவர்களைத் தண்டிப்பதற்காக வன உரிமைச் சட்டம் (FRA) வழங்கும் வழிமுறையை உயர்நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. வன உரிமைச் சட்டத்தின்கீழ் கிராம சபை (Gram Sabha) ஒரு சட்டப்பூர்வ அதிகார அமைப்பாகும். சட்டத்தை மீறும் அதிகார அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குமுன், அது மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவுக்கு 60 நாட்கள் முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.


இருப்பினும், உயர்நீதிமன்றம் இந்த விதியை புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக மாவட்ட அளவிலான குழுவையே (DLC) தனது குற்றத்தை மறுபரிசீலனை செய்து, தற்போதுள்ள சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க புதிதாக முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டது.


வன உரிமைச் சட்டம் (Forest Rights Act(FRA)) இத்தகைய சலுகைகளை அனுமதிப்பதில்லை.



வன உரிமைச் சட்டம் (Forest Rights Act(FRA)) எவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது?


வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைக் கோரிக்கைகளை அங்கீகரித்து சரிபார்க்கும் செயல்முறை முழுமையாக நிறைவடையும் வரை, அவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள வன நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றவோ அல்லது அகற்றவோ வன உரிமைச் சட்டம் (FRA) அனுமதிக்காது. எடுத்துக்காட்டாக, ஜனவரி 2026-இல், உரிமைக் கோரிக்கைகள் குறித்த இறுதி முடிவு எட்டப்படும் வரை, வனத்துறை எவ்விதமான வற்புறுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில், மனுதாரர்களை வெளியேற்றக்கூடாது என்பதும், அவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தில் அவர்கள் மேற்கொண்டு வரும் அமைதியான உடைமை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்பதும் அடங்கும்.


இருப்பினும், வன உரிமைச் சட்டம் (FRA) தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் மீறப்பட்டும் வருகிறது. உதாரணமாக, செப்டம்பர் 2014-ல், தேனி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தங்களுக்கு வழங்கப்பட்ட வெளியேற்ற அறிவிப்புகளை (eviction notices) எதிர்த்தும், வன உரிமைச் சட்டத்தின்கீழ் தங்களுக்குள்ள உரிமைக் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் அம்மனுவில் கோரியிருந்தனர். அம்மனுதாரர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைகள் பெற அவர்களுக்குத் தகுதி இல்லை என்றும் வன அதிகாரி அளித்த விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்தத் தள்ளுபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


வன உரிமைச் சட்டத்தின்கீழ் உரிமைக் கோரும் நடைமுறைகளை மேற்கொள்வது, அதிகாரிகளின் நேரத்தை வீணடிப்பதாகவே அமையும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது. எனவே, நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.


இதே உயர்நீதிமன்றம், 2017-ல் பெரம்பலூர், 2020-ல் தூத்துக்குடி, 2021-ல் சிவகங்கை மற்றும் 2022-ல் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் வன உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த இதேபோன்ற மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், வன உரிமைச் சட்டத்தால் அத்தகைய உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும், 1882-ம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தின் (Tamil Nadu Forest Act (TNFA)) கீழ் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேற்றும் உத்தரவுகளைப் (eviction orders) பிறப்பித்து வருகின்றனர்.


வன உரிமைச் சட்டம் (FRA) கால்நடைகளை மேய்க்க அனுமதிக்கிறதா?


இந்த ஆண்டு மார்ச் 13 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, "வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும், தமிழ்நாடு வனச் சட்டத்தின் 57-வது பிரிவின்கீழ் வனங்களுக்குள் கால்நடைகள் அத்துமீறி நுழைவதைத் தடைசெய்யும் விதிமுறைகளே" அந்தத் தடைக்கான சரியான சட்ட அடிப்படை என்று குறிப்பிட்டு, மார்ச் 2022 உத்தரவுக்கு எதிரான மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.


உயர்நீதிமன்றம் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் அனைத்து வனப் பகுதிகளிலும் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடை விதித்திருந்தது. பின்னர் அதே மாதத்தில், அந்தத் தடை உத்தரவைப் புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியது. இருப்பினும், புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுடன் ஒருங்கிணைந்துள்ள பகுதிகள் உட்பட அனைத்துக் காடுகளிலும் மேய்ச்சல் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை (FRA) அது குறிப்பிடவில்லை. மேலும், வன உரிமைச் சட்டமும் ஒரு மத்திய சட்டமாகும். எனவே மேய்ச்சலுக்கான தடை மற்றும் அனுமதி ஆகிய இரண்டிலும் அது ஒரு மாநிலச் சட்டத்தை மீறிச் செயல்படும்.


இதனால்தான், பிந்தைய சட்டத்தில் உள்ள விதிகள், முந்தைய சட்டங்களில் உள்ள முரண்பாடான விதிகளையும், ஒன்றுக்கொன்று முரண்படும் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறிச் செயல்படும் என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.


சி.ஆர். பிஜோய் இயற்கை வள முரண்பாடுகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளை ஆராய்கிறார்.


Original article : How Forest Rights Act was reaffirmed by Allahabad HC order? -C.R. Bijoy

Share: