வீட்டிலோ அல்லது மருத்துவர்களின் உதவியின்றியோ பிரசவம் பார்க்க விரும்புவோர், மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் வழங்கவும் அவர்கள், ரெடிட் (Reddit), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய ஆலோசனைகளால் சிலர் ஏற்கனவே தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
தற்போதைய நிகழ்வு : ஜூன் மாத இறுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வயதுப் பெண் ஒருவர் பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு மற்றும் பிற சிக்கல்களால் உயிரிழந்தார். இது காவல்துறையின் தகவலின்படி, வீட்டில் மருத்துவர் உதவியின்றி பிரசவம் பார்த்தபோது அப்பெண் உயிரிழந்தாகக் குறிப்பிடுகின்றனர். பிரசவத்தின்போது வழிகாட்டுதலுக்காக அவரது குடும்பத்தினர் யூடியூப் காணொளிகளைப் பார்த்து அதற்கேற்ப அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இதனால், தனது பச்சிளம் குழந்தை மற்றும் மூத்த மகளை விட்டுச் சென்றுள்ளார். ஆரம்பக்கட்ட காவல் துறை அறிக்கைகளின்படி, அந்தத் தம்பதியினர் "இயற்கை முறையில் பிரசவம்" (natural delivery) நடக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும், மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இன்றி வீட்டிலேயே பிரசவம் பார்க்க விரும்புவோர், மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் வழங்கவும் ரெடிட் (Reddit), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற தளங்களை நாடுகின்றனர். சரிபார்க்கப்படாத, அதிக ஆபத்து நிறைந்த இத்தகைய இணைய உள்ளடக்கங்கள், தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
சமூக ஊடகங்கள் மருத்துவர்கள் இல்லாத பிரசவத்தை ஊக்குவிக்கின்றனவா?
கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்களான Google-க்குச் சொந்தமான YouTube மற்றும் Meta-க்குச் சொந்தமான Instagram ஆகியவை, உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களை அறிவியல் பூர்வமற்ற பிரசவ ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கின்றன. அத்துடன், தாதி (midwife) உதவியுடன் மட்டும் வீட்டில் நடக்கும் பிரசவத்தைப் பதிவு செய்து ஊக்குவிக்கும் காணொளிகள் மூலம் பணம் சம்பாதிக்கவும் அனுமதிக்கின்றன. ரெடிட் தளத்தில், வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பான பெரும்பாலான உள்ளடக்கங்கள் எழுத்துப்பூர்வமான பதிவுகள் (text posts) வடிவில் இருந்தாலும், அவை ஆபத்துகளைக் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, நவம்பர் 2025-ல் பதிவிடப்பட்ட, 1,46,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்ற ஒரு யூடியூப் காணொளியில் (vlog), ஒரு தாய் சிறிய நீச்சல் குளத்தில் "2 மணி நேரத்தில் வலியற்ற வீட்டுப் பிரசவம்!" என்று பெருமையாகக் கூறுவதையும், மதரீதியான பிரசவப் பயிற்சி வகுப்பு மற்றும் செயலியை (app) விளம்பரப்படுத்துவதையும் காண முடிந்தது. 42-வது வாரத்தில் பிரசவம் நடந்ததாகவும், "ஆரோக்கியமான, அதீத ஆற்றல் கொண்ட பிரசவ அனுபவம்" தனக்குக் கிடைத்ததாகவும் அந்தத் தாய் கூறினார். அந்தக் காணொளியில், "குழந்தை பிறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் தாதி (midwife) அங்கு வந்து சேர்ந்தார்" என்றும், பச்சிளம் குழந்தை முதல் முறையாகச் சுவாசிப்பதற்கு அந்தக் குடும்பத்தினர் 90 வினாடிகள் காத்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இது மருத்துவரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலையை விட மிக நீண்டதாகும்.
மற்றொரு "இயற்கை வீட்டுப் பிரசவம்" குறித்த காணொளியில், தாயின் பிரசவ வலி பதிவு செய்யப்பட்டது. ஆனால், பிறப்பதற்கு முன்பே 'மெகோனியம்' (குழந்தையின் மிகவும் பிசுபிசுப்பான முதல் மலம்) வெளியேறியது கண்டறியப்பட்டதால், இறுதியில் அவசர மருத்துவமனைப் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. குழந்தை அம்னியாடிக் திரவத்துடன் (பனிக்குட நீர்) இதைச் சுவாசித்தால் (மெகோனியம் ஆஸ்பிரேஷன்(meconium aspiration)) தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. "நாங்கள் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல, ஆனாலும் என்னையும் குழந்தையையும் பாதுகாப்பாக வைத்திருந்த தேசிய சுகாதார சேவைக்கு (NHS) நன்றி," என்று 420,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருந்த, செப்டம்பர் மாதத்தில் வெளியான அந்தத் தாயின் காணொளியின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோன்ற பல வீட்டுப் பிரசவ காணொளியில் (vlog), இணையவழி கடைகள் மற்றும் பிற சமூக ஊடகங்களுக்கான இணைப்புகள் இடம்பெற்றிருந்தன. அவை தயாரிப்புகள், கூப்பன் குறியீடுகள் மற்றும் வணிக இணைப்புகளை விளம்பரப்படுத்தின. இது வீட்டுப் பிரசவத்தை உருவாக்குபவர்கள் தங்கள் உள்ளடக்கம் மற்றும் அவர்கள் பெறும் பார்வைகளின் எண்ணிக்கையிலிருந்து நேரடியாகப் பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், பிரசவ காணொளிகளைப் (vlog) பணமாக்குவது நெறிமுறை சார்ந்த கவலைகளை எழுப்புகிறது. ஏனெனில், பிரசவக் காணொளிகளில் நிர்வாணமான பச்சிளங்குழந்தை மற்றும்/அல்லது ஆடையின்றி மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள தாயின் காட்சிகள் இடம்பெறுகின்றன.
இன்ஸ்டாகிராமில், பல இலவசப் பிரசவ செல்வாக்கு செலுத்துபவர்கள், தாங்கள் எந்த மருத்துவர் சந்திப்புகளுக்கும் செல்லாமலோ அல்லது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்காமலோ கர்ப்பகாலத்தைக் கடப்பதாகக் கூறுகின்றனர். இன்ஸ்டாகிராமில் உள்ள மற்ற இலவச அல்லது வீட்டுப் பிரசவம் செய்பவர்கள், மருத்துவ அனுமதி இல்லாமல் ஏற்படும் இத்தகைய தாமதங்கள் குழந்தை இறந்து பிறப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்றாலும், கர்ப்பத்தை 41 வாரங்களுக்கு அப்பால் நீட்டிக்கப் பரிந்துரைக்கின்றனர் (மருத்துவமனையில் பிரசவத்தைத் தூண்டுவதைத் தவிர்க்க). இணையத்தில் உள்ள இலவசப் பிரசவ செல்வாக்கு செலுத்துபவர்களும், சில தாதிகளும் கூட, நோயாளிகள் துன்புறுத்தப்படுவது குறித்த பயங்கரமான சம்பவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், வெளிப்புற மருத்துவ உதவி ஏதுமின்றிப் பெண்களின் உடலால் இயல்பாகவே குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
ரெடிட்-இன் 'வீட்டில் பிரசவம்' சமூகத்தில், மருத்துவ ஆலோசனை வழங்குவதை விதிகள் தடை செய்கின்றன. இருப்பினும், மக்கள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமான மருத்துவக் கேள்விகளைக் கேட்பதாலும், மற்ற பயனர்களின் பதில்கள் கருத்துக்களாகவோ அல்லது தனிப்பட்ட கதைகளாகவோ முன்வைக்கப்படுவதாலும் இந்த விதி வெளிப்படையாக மீறப்படுகிறது.
உதாரணமாக, ரெடிட்-இன் 'வீட்டில் பிரசவம்' சமூகத்தில் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண், தனக்கு பலமுறை உயர் இரத்த அழுத்த அளவுகள் இருந்ததாகப் பதிவிட்டார். அவர் அந்த அளவீடுகளைப் புறக்கணித்ததுடன், மருத்துவமனை பரிந்துரைத்த பிரசவத் தூண்டலையும் மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது குறித்து ரெட்டிட் பயனர்களிடம் கேட்டார். அந்த எண்ணெய், குழந்தை பிறப்பதற்கு முன்பே மலம் (மெக்கோனியம்) வெளியேற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அபாயங்களையும் இந்த ரெட்டிட் பதிவர் குறைத்து மதிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில், இலவசப் பிரசவம் குறித்த கருத்துக்களைப் பரப்புபவர்களின் செயல்பாடுகள், நிஜ உலகில் ஏற்கெனவே உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. யூடியூபில் 72,000 சந்தாதாரர்களையும் இன்ஸ்டாகிராமில் 134,000 பின்தொடர்பவர்களையும் கொண்ட 'ஃப்ரீ பர்த் சொசைட்டி' (Free Birth Society) இயக்கத்தை எடுத்துக்கொண்டால், தி கார்டியன் நடத்திய ஒரு விசாரணையின்படி, உலகம் முழுவதும் பல குழந்தைகளின் காயங்கள் மற்றும் இறப்புகளுடன் இது தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அதன் நிறுவனர், முற்றிலும் அறிவியல்பூர்வமற்ற காணொளிகளையும், தனது தொழிலையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறார்.
கோவிட்-19 பெருந்தொற்றின்போது இணையத்தில் பகிரப்பட்ட சுகாதார உள்ளடக்கங்களில் கட்டாய மருத்துவ மறுப்புரைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள வீட்டுப் பிரசவக் காணொளிகளில், ஒருவர் தன் வீட்டில் பிரசவிப்பதாலோ (வீட்டுப் பிரசவம்) அல்லது மருத்துவர்கள் இல்லாமல் பிரசவிப்பதாலோ (சுயப் பிரசவம்) ஏற்படும் ஆபத்துகள் குறித்த முறையான எச்சரிக்கைகள் இல்லை.
மக்கள் ஏன் வீட்டுப் பிரசவங்களையோ அல்லது சுயப் பிரசவங்களையோ தேர்ந்தெடுக்கிறார்கள்?
சிலர் இன்னும் இந்த நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதற்குச் சரியான காரணங்கள் உள்ளன. ரெட்டிட் போன்ற இணைய மன்றங்களில் பல கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவமனைகளில் தாங்கள் அனுபவித்த அதிர்ச்சியூட்டும் பிரசவ அனுபவங்களைப் பற்றிப் பதிவிட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களால் புறக்கணிக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது, சிசேரியன் பிரசவத்திற்கு (caesarean deliveries) வற்புறுத்தப்படுவது, அறுவை சிகிச்சை நிபுணர்கள் முன்னறிவிப்பின்றி தங்களை வெட்டுக்களை ஏற்படுத்தியது, போதுமான வலி நிவாரணம் வழங்கப்படாமல் இருப்பது மற்றும் தங்கள் உடல்களும் குழந்தைகளும் கடுமையாகக் கையாளப்படுவது போன்றவை இதில் அடங்கும்.
வீட்டுப் பிரசவங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள், தங்கள் பிரசவங்களை அமைதியான, நிம்மதியான, ஆடம்பரமான மற்றும் ஆன்மீக அனுபவம் வாய்ந்தவை என்று அடிக்கடி விவரிக்கின்றனர். சமூக ஊடகங்களில் திருத்தப்பட்ட காணொளி (vlog) மற்றும் தொகுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளில், பிரசவிக்கும் பெற்றோர்கள் தங்கள் துணைவர்கள், தாதி மற்றும் பிற குழந்தைகளால் மணிக்கணக்கில் கவனித்துக் கொள்ளப்படுவது காட்டப்படுகிறது. மென்மையான ஒளி, இயற்கை, பிரார்த்தனைகள், இதமான இசை, சிற்றுண்டிகள் மற்றும் புகைப்படக்காரர்களால் சூழப்பட்ட நிலையில், பலர் வெந்நீர்க் குளத்தில் அமர்ந்திருப்பது காணப்படுகிறது. இதுபோன்ற பல காணொளிகளில், பிரசவத்தைத் தூண்டுவதற்காகவோ அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சைக்காகவோ (C-section) மருத்துவமனைக்கு விரைவது, கடைசி நிமிடம் வரை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற நடைமுறைகள் இயல்பாக்கப்படும்போது, மருத்துவமனை மருத்துவர்களும் செவிலியர்களும் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். திட்டமிடப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட பிரசவத்தை நிர்வகிப்பதற்குப் பதிலாக, அவர்கள் பெரும்பாலும் ஒரு மருத்துவ அவசரநிலையைக் கையாள வேண்டியுள்ளது.
உண்மையில், மருத்துவ மேற்பார்வையின்றி நிகழும் பிரசவம் (free birth) மற்றும் வீட்டிலேயே நிகழும் பிரசவம் (home birth) ஆகியவற்றின் புகழ் அதிகரித்து வருவது, கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான தரமான சிகிச்சையை வழங்கப் பல மருத்துவமனைகள் தவறியதையே காட்டுகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் உயிருக்கு ஆபத்தான பிரசவ முறைகளை ஊக்குவிப்பதற்காக, செல்வாக்கு செலுத்துபவர்கள் (influencers) தங்கள் சொந்தப் பிரசவத்தின் கசப்பான அனுபவங்களையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே பயன்படுத்தும்போது, இதுபோன்ற உள்ளடக்கங்கள் மீது நிலவும் அபாயகரமான ஒழுங்குமுறையின்மையே பார்வையாளர்கள் உண்மையில் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
பிரசவ முறைகளைப் பற்றி விவாதிக்கும்போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்:
இலவசப் பிரசவம் (Free Birth) : இந்த நடைமுறையானது மருத்துவ உதவியின்றி நடைபெறும் பிரசவத்தைக் குறிக்கிறது. அதாவது, சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மருத்துவச் சூழல்களுக்கு வெளியே, நிபுணத்துவ சிகிச்சையை வழங்க சான்றளிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் இல்லாமல் பிரசவிக்கும் செயலாகும். இலவசப் பிரசவம் ஆபத்தானது. ஏனெனில், பிரசவத்தின்போது ஏற்படும் அவசரநிலைக்கான எச்சரிக்கை அறிகுறிகளை நிபுணத்துவம் இல்லாதவர்கள் அடையாளம் காணத் தவறக்கூடும் என்பதால், இம்முறை ஆபத்தானது.
வீட்டுப் பிரசவம் (Home Birth) : வீட்டுப் பிரசவம் என்பது வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுப்பதாகும். அது ஒருவரின் சொந்தப் படுக்கையாக இருந்தாலும் சரி அல்லது பிரசவத் தொட்டி (birthing tub)/குளமாக (birthing pool) இருந்தாலும் சரி. இதில் மருத்துவ வல்லுநர்கள் ஈடுபடலாம் அல்லது ஈடுபடாமலும் இருக்கலாம். ஒரு வீட்டுப் பிரசவம் எப்போதும் இலவசப் பிரசவமாக இருப்பதில்லை. ஏனெனில், பிரசவம் மருத்துவமனைக்கு வெளியே நடந்தாலும்கூட, சிறப்பு மருத்துவ சிகிச்சையை வழங்க மருத்துவர்கள், உரிமம் பெற்ற தாதிகள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கலாம்.
நீர் வழிப் பிரசவம் (Water Birth) : சில பெற்றோர்கள் வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட ஒரு சிறிய குளம் அல்லது தொட்டியில் பிரசவிக்கத் தேர்வு செய்கிறார்கள். இது வீட்டிலோ அல்லது பிரசவத்திற்கென அமைக்கப்பட்ட சிறப்பு மையத்திலோ நடைபெறலாம். பிரசவத்தின்போது ஏற்படும் வலியையும் அசௌகரியத்தையும் நீர் வழிப் பிரசவம் குறைப்பதாகக் கருதப்படுகிறது. குழந்தை நீருக்கடியில் பிறந்து, சுவாசிப்பதற்காக விரைவாக மேற்பரப்பிற்குக் கொண்டுவரப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் பராமரிப்பு வழங்க உடனிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இம்முறை, தவறாகச் செய்தாலோ அல்லது நீண்ட நேரம் செய்தாலோ, பிறந்த குழந்தை நீரில் மூழ்கி இறக்க நேரிடலாம். அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களுக்கு நீர் பிரசவம் பாதுகாப்பானது அல்ல.
“சாதாரண” அல்லது “இயற்கையான” பிரசவம் (Normal" or "Natural" Delivery) : இது யோனிவழிப் பிரசவத்தைக் (vaginal delivery) குறிக்கிறது. அதாவது, சிறப்பு மருத்துவத் தலையீடுகள் இல்லாமல் யோனி வழியாகக் குழந்தையைப் பிரசவிப்பதாகும். சிசேரியன் (அறுவை சிகிச்சை) பிரசவம் போன்ற பிற பிரசவ முறைகளை இயற்கைக்கு மாறானவை அல்லது இயல்புக்கு மாறானவை என்று குறிப்பிடுவதன் மூலம், அவற்றைக் களங்கப்படுத்துவதாக இந்தச் சொற்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. துல்லியம் மற்றும் நடுநிலைத்தன்மைக்காக, அதற்குப் பதிலாக “யோனிவழிப் பிரசவம்” (vaginal delivery) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
Original Link : Is social media encouraging dangerous home births? -Sahana Venugopal