மோசமான வானிலை காரணமாகப் பள்ளிகள் மூடப்படுவது ஏழை மாணவர்களைப் பாதிக்கிறது. - திவ்யஸ்ரீ கங்குலி

வெப்ப அலைகள் அல்லது காற்று மாசுபாடு அதிகரிக்கும் காலங்களில், பள்ளிகள் தங்களின் வகுப்புகளை இணையவழி கல்விக்கு மாற்றுகின்றன. இதனால் ஏழைக் குழந்தைகளுக்கு இணைய வசதி கிடைக்காததால், அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.


இன்றைய இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையானது, சிறந்த கற்றல் விளைவுகள், அனைவருக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, மற்றும் நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தேவையான மனித வளம் ஆகியவற்றிற்குச் சரியான முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆனால், லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு இவை அனைத்தையும் சாத்தியமாக்கும் அடிப்படை நிபந்தனையான "தடையில்லாத பள்ளிப்படிப்பு" என்பது தற்போது ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது.


இது பொதுவாகக் கற்றல் பாதிப்பிற்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படும் "பள்ளி இடைநிற்றல்" என்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவில் பள்ளி இடைநிற்றலுக்கு வறுமை அல்லது குழந்தை திருமணம் மற்றும் ஆண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது போன்ற சமூகக் காரணிகள் என பல காரணங்கள் உள்ளன. இது குறிப்பாகப் ஆரம்பக் கல்வியைவிட இடைநிலைக் கல்வியில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், அதிகப்படியான சேர்க்கை விகிதம் இருந்தபோதிலும், மாணவர்களைத் தொடர்ந்து பள்ளியில் தக்கவைப்பது என்பது இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது.


சுற்றுச்சூழல் காரணிகள்


இதனுடன், பள்ளிப்படிப்பில் ஏற்படும் தடைகளும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சமீபகாலங்களில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றைத் (COVID-19) தவிர, பெரும்பாலான தடைகள் சுற்றுச்சூழல் காரணிகளாலேயே ஏற்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகள் மீண்டும் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன. இதேபோல், நாடு முழுவதும் கோடை வெப்ப அலைகள், அடர்ந்த பனிமூட்டம், கனமழை, சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களால் வருடத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் பள்ளிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியன்று, வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் சில நாட்களுக்கு மூடுமாறு ஒடிசா அரசு உத்தரவிட்டது.


தற்போதைய கோடைகாலத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தைவிடக் கடுமையான வெப்ப அலை நாட்கள் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) ஏற்கனவே எச்சரித்துள்ளது. தட்பவெப்ப நிலையால் ஏற்படும் இத்தகைய தடைகள், பள்ளிகள் மூடப்படுவது என்பது பெருந்தொற்று காலத்தோடு முடிந்துவிட்ட ஒரு தற்காலிக விஷயம் அல்ல என்பதைக் காட்டுகிறது. தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தின் அதிர்ச்சிகளுக்கு இடையில், இது மாணவர்களின் கல்வியில் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு வழக்கமான பிரச்சனையாக மாறி வருகிறது.


இங்கு பிரச்சனை என்பது பள்ளிகள் மூடப்படுவது மட்டுமல்ல, அதற்கு மாற்றாக வழங்கப்படும் இணையவழி வகுப்புகள் எவ்வகையிலும் நேருக்கு நேர் கற்கும் வகுப்பறை கல்விக்கு இணையானதாக இல்லை என்பதுதான். பல குழந்தைகளுக்கு, இணையவழி வகுப்புகளுக்கு மாறுவது என்பது தடையற்ற மாற்று வழி அல்ல; மாறாக, அது அவர்களைக் கல்வியில் இருந்து ஒதுக்கி வைப்பதன் தொடக்கமாகவே அமைகிறது. பள்ளிகள் மூடப்படுவது மாணவர்களுக்கிடையேயான கல்வி சமத்துவமின்மையை எவ்வாறு மேலும் அதிகரிக்கிறது என்பதற்கு கொரோனா பெருந்தொற்றுகால அனுபவமே ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.





ஆய்வு முடிவுகள்


2022-2024-ஆம் ஆண்டுகளில் ‘India Human Development Survey-3’ மூலம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், கல்வித் துறையில் நிலவும் இந்த சமநிலையின்மையை (பிரிவினையை) மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகளில் சேர்ந்த 5 முதல் 15-வயதுக்குட்பட்ட குழந்தைகளில், தனியார் பள்ளிகளில் படித்த 52 சதவீத மாணவர்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டன.  ஆனால், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 30 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த வசதி கிடைத்தது.


இதேபோல், தனியார் பள்ளி மாணவர்களில் 45 சதவீதத்தினர் கல்வி சார்ந்த காணொளிகள் அல்லது பிற இணையவழி கற்றல் பொருட்களைப் பெற்றனர்.  ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்த வசதிகளைப் பெற்றனர். மிக அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் படித்த 61 சதவீதக் குழந்தைகள் தங்களுக்குப் பள்ளியிலிருந்து எந்த ஒரு கற்றல் உதவியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். தனியார் பள்ளிகளில் இந்த அளவு 43 சதவீதமாக இருந்தது. இந்த ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்த நாட்டின் நிலவரத்தைப் பிரதிபலிக்கின்றன. பெருந்தொற்று காலத்தில் பல பெரிய மாநிலங்களில் இருந்த 40 முதல் 70 சதவீதப் பள்ளி மாணவர்களிடம் டிஜிட்டல் சாதனங்கள் (கைபேசி, கணினி) இல்லை என்பதை மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றும் உறுதிப்படுத்துகிறது.


இந்த இடைவெளியைக் குறைப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருந்தது என்பதை ‘India Human Development Survey-3’ ஆய்வில் ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் விளக்குகின்றன. மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட அரசுப் பள்ளி ஆசிரியர்களே மின்சாரக் குறைபாடு, பலவீனமான இணைய வசதி மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் இல்லாமை போன்ற தடைகளை அதிகமாக எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். இதே குறைபாடுகளோடுதான் மாணவர்களும் போராட வேண்டியிருந்தது. மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்கள் குறைவாக இருந்ததையும், கற்றலுக்கு இடையூறாக இருந்த வீட்டுச் சூழ்நிலைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இணையவழிக் கல்வி தோல்வியடைந்ததற்குத் தொழில்நுட்பக் குறைபாடுகள் மட்டுமே காரணமல்ல, குடும்பங்களின் சமமற்ற பொருளாதார மற்றும் சமூகச் சூழ்நிலைகளும் ஒரு முக்கியக் காரணியாக இருந்தன.


பள்ளிகள் மூடப்படுவது என்பது அனைத்து மாணவர்களின் கற்றலிலும் ஒரு தற்காலிகமான மற்றும் சமமான இடைநிறுத்தத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக, அது ஒரு சமமற்ற பாதிப்பையே உருவாக்குகிறது. ஏற்கனவே பின்தங்கிய சூழலில் படிக்கும் குழந்தைகள், தங்களின் கற்றல் வாய்ப்புகளை முழுமையாக இழக்க நேரிடுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதும் கடினமாகிறது. எனவே, கல்வியில் ஏற்படும் இத்தகைய தடங்கல்கள் குறுகியகாலப் பாதிப்போடு முடிந்துவிடுவதில்லை. அது மனிதவள மேம்பாட்டில் நீண்டகால அடிப்படையில் பெரும் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடுகிறது.


அதனால்தான், பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு ஆகிய அனைத்தும் முக்கியமானவையாக இருந்தாலும், சிக்கல் என்பது இவற்றைத் தாண்டிப் போகிறது. கல்வி சார்ந்த விவாதங்கள் அனைத்தும் பொதுவாகப் பள்ளிக் கல்வி எந்தத் தடங்கலும் இன்றித் தொடர்வதாகவே எடுத்துக் கொள்கின்றன. ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் குழந்தைகளைத் மீண்டும் மீண்டும் வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி, சமமற்ற வீட்டுச் சூழலில் படிக்கக் கட்டாயப்படுத்தும்போது, அரசின் கொள்கைக்கான முதன்மைக் கேள்வி 'கல்வியின் தொடர்ச்சி' பற்றியதாக மாறுகிறது.  


இணையவழித் திட்டங்கள்


இந்தியாவில் டிஜிட்டல் கல்வித் திட்டங்களுக்குப் பற்றாக்குறை இல்லை. கல்வி கற்பதற்கான பல்வேறு வழிமுறைகளை வழங்குவதற்காக பிரதான் மந்திரி இ-வித்யா (PM eVIDYA) திட்டம் தொடங்கப்பட்டது; அதே நேரத்தில் தீக்ஷா தளம் (DIKSHA) டிஜிட்டல் கற்றல் பாடநெறிகளுக்கான தேசிய தளமாகச் செயல்படுகிறது. சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) திட்டமும் அதன் பள்ளி கல்வி கட்டமைப்பிற்குள் டிஜிட்டல் மற்றும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கையானது 2020 (NEP 2020) அனைவருக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதை தெளிவாக வலியுறுத்துகிறது. ஆனால், திட்டங்கள் இருப்பதனாலேயே கல்வித் தொடர்ச்சிக்கு அது தானாகவே உத்தரவாதம் அளித்துவிடாது. குடும்பங்களில் நிலையான இணைய இணைப்பு, போதிய டிஜிட்டல் சாதனங்கள், ஆதரவான கற்றல் சூழல் இல்லாத இடங்களில், குழந்தைகளால் இந்தத் திட்டங்களின் பலன்களைப் பெற முடிவதில்லை.


சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறி வருவதால், கல்வித் தொடர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனிமேலும் வெறும் 'நெருக்கடி கால மேலாண்மை' ஒன்றாகக் கருத முடியாது. அவை வலுவான டிஜிட்டல் வசதி, எளிய தொழில்நுட்ப மாற்று வழிகள், சமூகம் சார்ந்த ஆதரவு மற்றும் விளிம்புநிலை மாணவர்களையும் சென்றடையும் பயனுள்ள விநியோகம் ஆகியவற்றின் மூலம் முதன்மை கல்விக் கொள்கையிலேயே கட்டமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பள்ளிகள் மூடப்படும்போதும், தொடர்ந்து படிக்க முடிகிற குழந்தைகளுக்கும் படிக்க முடியாத குழந்தைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து, இத்தகைய தற்காலிகத் தடைகள் நிரந்தரமான சமத்துவமின்மையாக மாறிவிடும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.


திவ்யஸ்ரீ கங்குலி, தேசிய தரவு கண்டுபிடிப்பு மையம் - தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழுவின் இணை ஆய்வாளர் ஆவார்.

Original link:

Weather-induced school closures hurt the poor.


Share:

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC) ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியிருப்பது, இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புக்கு எவ்வாறு ஒரு வாய்ப்பை வழங்குகிறது? -டி.பி. சீதாராம்

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (Organization of the Petroleum Exporting Countries (OPEC)) அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு, சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வலுவான காரணங்கள் உள்ளன. எனவே, ஒரு நெருக்கடி காலத்தில் இந்தியாவுக்கு எண்ணெய் கிடைப்பதை வெளிப்படையாக உறுதி செய்யும் வகையில், தற்போது அமீரகத்துடன் உள்ள தற்காலிக ஏற்பாட்டை ஒரு முறையான அவசரகால அணுகல் ஒப்பந்தமாக இந்தியா விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.


கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 15-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புத் திட்டத்தில் (Strategic Petroleum Reserves (SPR)) அமீரகத்தின் தீவிரப் பங்களிப்பைத் தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.


இந்த ஒப்பந்தத்தின்கீழ், இந்தியாவின் சண்டிகோல் (Chandikhol) மற்றும் பாதூர் (Padur) ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிலத்தடி குகைக் கிடங்குகளில் அமீரகம் தனது கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்க முடியும்; அதே நேரத்தில் இந்தியா தனது கச்சா எண்ணெயை அமீரகத்தின் புஜைராவில் (Fujairah) சேமித்து வைக்க அனுமதிக்கப்படும். முன்னதாக 2015-ஆம் ஆண்டில், ‘IL&FS’ நிறுவனம் புஜைராவில் 3,33,484 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்கை உருவாக்கியது, ஆனால் தனது பெரும் கடன்களை அடைப்பதற்காக அந்த நிறுவனம் 2021-ஆம் ஆண்டில் அதனை விற்பனை செய்துவிட்டது.


புஜைராவில் கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எண்ணெயைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கலாம். அமீரகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (OPEC) அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு ஏற்படும் முதல் நேர்மறையான முடிவுகளில் ஒன்றாக இந்த ஏற்பாடு அமையக்கூடும். உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடாகவும், தனது கச்சா எண்ணெய் தேவையில் 87% இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடாகவும் இருக்கும் இந்தியாவிற்கு, இந்த மாற்றம் எண்ணெய் விலை மாற்றங்களையும் தாண்டி மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தியா இதனைத் தனது ஆற்றல் பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த தயார்நிலை ஆகிய இரண்டையும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியேற்றத்தின் மூலம் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு


பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (OPEC) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியேற்றம் என்பது, ஒரு காலத்தில் புவிசார் அரசியல் ரீதியாகச் சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால், இது பல ஆண்டுகளாகவே உருவாகி வந்த ஒரு சூழலாகும். அமீரகத்தின் தலைநகரான அபுதாபி, 2023-ஆம் ஆண்டு முதல் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பு விதித்து வந்த கச்சா எண்ணெய் உற்பத்தி வரம்புகளால் பெரும் அதிருப்தியில் இருந்தது. ஏனெனில், இந்த வரம்புகள் அந்நாட்டின் விரிவாக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுத்தன. தற்போது அமீரகத்தின் எண்ணெய் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 4.85 மில்லியன் பேரல்களுக்கும் (Barrels) அதிகமாக உள்ளது. இந்த வெளியேற்றம் அமீரகத்தின் தெளிவான நீண்டகால உத்தியைக் காட்டுகிறது: அதாவது, உலகளாவிய எரிசக்தி மாற்றம் காரணமாக கச்சா எண்ணெய்க்கான தேவை எதிர்காலத்தில் குறைவதற்கு முன்பாகவே, தனது முழுத்திறனையும் பயன்படுத்தி எண்ணெயை உற்பத்தி செய்துவிட வேண்டும் என்பதே ஆகும். மேலும், உள்நாட்டு முடிவுகளால் மற்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகப் பலன் அளித்து வந்த ஓர் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்க அமீரகம் விரும்பவில்லை. அதன் இறையாண்மை நிதி அமைப்பான அபுதாபி முதலீட்டு வாரியம் (Abu Dhabi Investment Authority (ADIA)), தற்போது ஏறக்குறைய 1.12 டிரில்லியன் டாலர் (சுமார் ₹93 லட்சம் கோடிக்கும் அதிம்) மதிப்பிலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.


ஏமனில் இரு நாடுகளுக்கும் இருந்த வெவ்வேறு இலக்குகள் மற்றும் செங்கடலில் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் என, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வந்த கருத்து வேறுபாடுகள், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து அமீரகம் வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது. கடல்வழி வர்த்தகப் பாதைகளை பெரிதும் நம்பியிருக்கும் அமீரகத்திற்கு இந்தத் தாக்குதல்கள் கடுமையான அச்சுறுத்தலாக இருந்தன. ஆனால், ஹூதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சவுதி அரேபியாவோ, மேலும் மோதல் ஏற்படுவதை விரும்பவில்லை.


முக்கியமாக இந்தியாவைப் பொறுத்தவரை, 2020-ஆம் ஆண்டின் ஆபிரகாம் உடன்படிக்கை (Abraham Accords) மூலம் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் உறவை இயல்பாக்கியது, ஒரு முக்கிய எரிசக்தி பாதுகாப்புப் பலன்களைக் கொண்ட கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இணைய பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புப் பாதுகாப்பு போன்றவற்றில் இஸ்ரேலின் அதிநவீனத் திறன்களை அபுதாபி பெற்றுக் கொண்டது. காசா போர் நடந்த சமயத்திலும்கூட, அமீரகம் இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து ஆதரித்தது. இந்த இருதரப்பு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திரரீதியான ஆர்வம், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திலும் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவளிக்கின்றன. ஈரான் எல்லையிலுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முற்றிலும் தவிர்த்துவிட்டு புதிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவின் திட்ட வகுப்பாளர்கள் இந்த வளர்ந்துவரும் ஒத்துழைப்பைத் தங்களுக்குச் சாதகமாக தீவிரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.





இருதரப்பு வாய்ப்பு


இந்தியா இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, இரு நாடுகளுக்கும் இடையே கிடைக்கக்கூடிய இருதரப்பு வாய்ப்புகள் நமக்குச் சாதகமாக அமையும். ஒதுக்கீட்டுக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் நிறுவனமான ‘Abu Dhabi National Oil Company’, அரசாங்கங்களுக்கு இடையேயான நீண்டகால எண்ணெய் விநியோக ஒப்பந்தங்களை வழங்க முடியும். மேலும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (OPEC) கூட்டமைப்பின் விதிகளுக்குப் பயப்படாமல் விலையையும், எண்ணெயின் அளவையும் நேரடியாகப் பேசித் தீர்மானிக்க முடியும். அபுதாபி இனி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மறைமுகமான, டாலர் அடிப்படையிலான முறையோடு பிணைக்கப்பட்டிருக்காது என்பதால், கச்சா எண்ணெய் வர்த்தகத்தை ரூபாய்-திர்ஹாம் (Rupee-Dirham) மதிப்பில் மேற்கொள்வது குறித்து தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகளும் மிகவும் நடைமுறைக்குச் சாத்தியமானதாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டுப்பாடற்ற அதிக வருவாயைக் கொண்டும், தங்களுக்கென நிலையான நுகர்வோரை உருவாக்கிக் கொள்ளும் தீவிர ஆர்வத்தோடும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிற்கு வெளியே இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்ய வலுவான காரணங்களைக் கொண்டிருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் கச்சா எண்ணெய் இந்தியாவின் உத்திசார் இருப்புப் பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டு, அந்த எண்ணெயை ஓரளவிற்குப் பயன்படுத்த ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் தற்போதைய முறையும் இதில் அடங்கும். நெருக்கடி காலங்களில் இந்த எண்ணெய் முழுவதையும் இந்தியாவே பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், ஒரு தெளிவான அவசரகால அணுகல் ஒப்பந்தமாக இதனை இந்தியா விரைந்து மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும்.





இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு


இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு என்பது, ‘Indian Strategic Petroleum Reserves Limited’ என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் அரபு நாடுகளின் அரசியல் கொந்தளிப்புகள் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பிற நாடுகளை இந்தியா பெரிதும் நம்பியிருப்பது ஆபத்தானது என்ற கவலை எழுந்தது. அதற்குப் பதிலாகவே இந்த உத்திசார் பெட்ரோலிய இருப்பு உருவாக்கப்பட்டது. தற்போது இந்திய அரசாங்கத்திடம் உள்ள மொத்த சேமிப்புத் திறன் 5.33 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளபடி, தற்போதைய நாட்டின் நுகர்வு அளவின் அடிப்படையில், மற்ற சேமிப்பு வசதிகளையும் சேர்த்தால் இந்த உத்திசார் இருப்பு இந்தியாவின் தோராயமாக 74 நாட்களுக்கான தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாகும்.


நெருக்கடி காலங்களில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை விரைவாகப் பெறுவதற்காக, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்தச் சேமிப்புக் கிடங்குகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆசியாவிற்கு வரும் 80%-க்கும் அதிகமான வளைகுடா எண்ணெய் கடந்து வரும் 21 மைல் அகலமுள்ள மிகக் குறுகிய கடல்வழியான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்துடனான இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள வாதம் மிகச் சரியானது என்றாலும், இந்தியாவின் இருப்பு அளவு என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது.


இதற்கு முற்றிலும் மாறாக, ஜப்பான் நாடு தனது நிகர இறக்குமதியில் 254 நாட்களுக்குத் தேவையான உத்திசார் இருப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் தென்கொரியா 210 நாட்களுக்கான இருப்பை வைத்துள்ளது. தனது தரவுகளை வெளிப்படையாக அறிவிக்காத சீனாகூட, முறையாகச் செயல்பட்டு 90 முதல் 100 நாட்களுக்குத் தேவையான இருப்பை உருவாக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கான அடிப்படை விதியாக, சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)) தனது உறுப்பு நாடுகள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கான நிகர இறக்குமதி இருப்பை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்தியா இன்னும் சர்வதேச எரிசக்தி முகமையின் முழுநேர உறுப்பு நாடு அல்ல என்றாலும், அதற்கான விருப்பத்தைக் கொண்டுள்ளது. ஆனால், அந்த விருப்பத்திற்கும் இந்தியாவின் தற்போதைய இருப்பு நிலவரத்திற்கும் இடையே உள்ள இடைவெளி சாதாரணமானது அல்ல; அது நாட்டின் பாதுகாப்பில் உள்ள ஒரு பலவீனத்தைக் காட்டுகிறது. மேலும், அவசர காலத்தில் இந்தியாவின் அணுஉலைகள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட ரக கச்சா எண்ணெய்க்குப் பதிலாக மாற்று ரகங்களை எளிதாகப் பயன்படுத்த முடியாது. ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்துடனான வணிகரீதியான கூட்டுச் சேமிப்பு மாதிரியானது, ஒரு போர்க்கால நெருக்கடியின்போது அந்த எண்ணெயை யார் கட்டுப்படுத்துவது என்பதில் சட்டரீதியான தெளிவின்மையை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்தியாவின் பரந்த வடமாநிலப் பகுதிகளில் இத்தகைய உத்திசார் பெட்ரோலிய இருப்பு கிடங்குகள் எதுவும் இல்லாததால், அவசர காலத்தில் நாட்டின் மையப்பகுதிகளுக்கு எண்ணெயைக் கொண்டு சேர்க்க, குழாய் வழித்தடங்கள் மற்றும் சாலைகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.


ஒடிசாவின் சண்டிகோல் (Chandikhol) பகுதியில் கூடுதல் வசதிகளை உருவாக்குவது மற்றும் கர்நாடகாவின் படூர் (Padur) பகுதியில் வசதியை விரிவாக்கம் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கத் திட்டங்களை அரசாங்கம் வகுத்திருந்தது. இவை இரண்டும் சேர்ந்து நாட்டின் சேமிப்புத் திறனை மேலும் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) அதிகரிக்கும் என்றும், இத்திட்டம் 2023-24-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் முதலீட்டை ஈர்க்க தடுமாறி வரும் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரிகளை நம்பியிருந்ததன் காரணமாக, இந்த காலக்கெடு முடிவடைந்தும் திட்டம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. எனவே, அடுத்த கட்டப் பணிகளுக்குப் பிரத்யேகமான அரசு நிதியைத் தர வேண்டுமே தவிர, மீண்டும் பொது-தனியார் மாதிரிகளை வைத்துப் பரிசோதனை செய்யக்கூடாது.


தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டிய வர்த்தக ரீதியான இருப்புக்கான கட்டாயத்தை, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் உள்ள அளவிற்குக் கூட்ட வேண்டும். ‘Abu Dhabi National Oil Company’ நிறுவனத்துடனான தற்போதைய சேமிப்பு ஒப்பந்தத்தை, இருதரப்பையும் கட்டுப்படுத்தும் ஒரு வலுவான ஒப்பந்தமாக மாற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், ஜப்பானும் பிற நாடுகளும் பல ஆண்டுகளாக நம்பியிருக்கும் கூட்டு அவசரகால பாதுகாப்பு வழிமுறைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள, இந்தியா சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) முழுநேர உறுப்பினராவதற்கான பாதையை விரைவுபடுத்த வேண்டும். பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் வெளியேறியுள்ள நிலையில், இந்த புதிய அணுகுமுறை இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஆற்றல் துறை கூட்டாண்மையை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளுக்கும் லாபகரமானதாக அமையும் என்கின்றனர்.


டி.பி. சீதாராம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்னாள் இந்தியத் தூதர் ஆவார்.

Original link:

How UAE’s exit from OPEC presents an opportunity for India’s strategic petroleum reserves.


Share:

நிரந்தர குடியுரிமை அட்டைக்கான (Green Card) டிரம்பின் புதிய விதிமுறை: அமெரிக்காவில் நுழைவு அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகள் யாவை? -அனகா ஜெயகுமார்

டிரம்பின் புதிய நிரந்தர குடியுரிமை அட்டைக்கான (Green Card) விதிமுறை விளக்கம்: தற்காலிக நுழைவுஅனுமதி சீட்டுகளில் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் யார் பாதிக்கப்படுகிறார்கள், இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?


டிரம்பின் நிரந்தர குடியுரிமைக்கான விதிமுறை விளக்கம்: 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த ஒரு வழக்கத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றி, தற்காலிக நுழைவுஅனுமதி சீட்டுடன் அமெரிக்காவிற்கு வந்தவர்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்கு (Green Card) விண்ணப்பிக்க தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளது. 


அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் (United States Citizenship and Immigration Services (USCIS)) செய்தித் தொடர்பாளர் சாக் காலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனிமேல், விதிவிலக்கான அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர, அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கியிருந்து நிரந்தர குடியுரிமையைப் பெற விரும்பும் ஒரு வெளிநாட்டவர், விண்ணப்பிப்பதற்காகத் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியே ஆக வேண்டும். வெளிநாட்டவர்கள் தங்களது சொந்த நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும்போது, நிரந்தர குடியுரிமை அட்டை நிராகரிக்கப்பட்ட பிறகும் சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே தங்கி தலைமறைவாக வாழ நினைப்பவர்களைக் கண்டறிந்து நாட்டைவிட்டு வெளியேற்றும் சுமை அரசுக்குக் குறைகிறது என்று தெரிவித்துள்ளார். 



அமெரிக்காவில் ஏற்கனவே தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சட்டபூர்வமான குடியேற்ற வாய்ப்புகளைக் குறைப்பதற்காக தற்போதைய அமெரிக்க அரசாங்கம் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விவரங்கள் பின்வருமாறு:


இந்தச் சமீபத்திய உத்தரவு யாரைக் குறிவைக்கிறது?


தற்போது, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் — அதாவது அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்தவர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர் நுழைவுஅனுமதி (Visas) பெற்றவர்கள், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் — அமெரிக்காவை விட்டு வெளியேறாமலேயே தங்கள் நிரந்தரக் குடியுரிமைக்கான முழு செயல்முறையையும் இங்கேயே விண்ணப்பித்து முடித்துக்கொள்ள முடியும்.


இந்த அறிக்கையின்படி, குடியேற்றவாசிகள் அல்லாத தற்காலிக நுழைவுஅனுமதி பெற்ற (Non-immigrant visas) மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போன்றோர் அமெரிக்காவிற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், குறுகிய காலத்திற்காகவும் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புதிய மாற்றமானது "சட்டத்தின் அசல் நோக்கத்திற்குத்" திரும்புவதாகவும், சட்டத்தின் ஓட்டைகளை (Loophole) குறைப்பதாகவும் அந்த முகமை விவரித்துள்ளது.


மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அல்லது சுற்றுலா நுழைவுஅனுமதி பெற்று வருபவர்கள் போன்ற குடியேறாதோர், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அமெரிக்காவிற்கு வருகின்றனர். அவர்களின் வருகை முடிந்ததும் அவர்கள் இங்கிருந்து புறப்படும் வகையில்தான் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் இந்த வருகையானது, நிரந்த குடியுரிமை அட்டையைப் (Green Card) பெறுவதற்கான செயல்முறையின் முதல் படியாக அமைந்துவிடக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இந்த புதிய நடவடிக்கையின் மூலம், அமெரிக்க வெளியுறவுத்துறை இனி வெளிநாடுகளில் உள்ள தனது தூதரக அலுவலகங்களிலேயே பெரும்பாலான வழக்குகளைக் கையாள முடியும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) தெரிவித்துள்ளது. மேலும், இது தனது வரம்பிற்குள் வரும் பிற வழக்குகளைச் செயலாக்குவதில் கவனம் செலுத்த, குறைந்த அளவே உள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) வளங்களை விடுவிக்க உதவும். அந்தப் பிற வழக்குகளில், "வழக்கமான வன்முறை மற்றும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நுழைவுஅனுமதி, குடியுரிமை விண்ணப்பங்கள் மற்றும் பிற முன்னுரிமைகள் அடங்கும் என்று அந்த முகமை தெரிவித்துள்ளது.


இருப்பினும், தற்போதைய விண்ணப்பதாரர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தங்களுக்கு ஏதேனும் "அசாதாரண சூழ்நிலைகள்" இருக்கும் பட்சத்தில் இந்த கடுமையான செயல்முறையிலிருந்து தப்பிக்கலாம்; ஆனால் இந்த அசாதாரண சூழ்நிலை என்றால் என்ன என்பதை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) தற்போது வரை தெளிவாக வரையறுக்கவில்லை. யார் இதற்குத் தகுதியானவர், யார் தகுதியற்றவர் என்பதற்கான தெளிவான அளவுகோல் இல்லாததால், இது அங்குள்ள அதிகாரிகளுக்கு வரம்பற்ற தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.


அமெரிக்காவிற்குப் பொருளாதாரரீதியாகப் பயனளிக்கும் அல்லது நாட்டின் நலனுக்கு ஏற்ற பணிகளைச் செய்யும் நபர்கள் தொடர்ந்து அமெரிக்காவிலேயே தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படலாம். ஆனால், மற்றவர்கள் நுழைவுஅனுமதி விண்ணப்ப செயல்முறைக்காகத் தங்கள் சொந்த நாடுகளுக்கு (வெளிநாடுகளுக்கு) செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க செய்தி நிறுவனமான ‘Associated Press’ நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில் அந்த முகமை தெரிவித்துள்ளது.


சட்டப்பூர்வக் குடியேற்றத்தின் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை


தற்போதைய அமெரிக்க அரசாங்கம், சட்டபூர்வமான குடியேற்ற வழிகளை முடக்குவதற்காகத் தொடர்ந்து எடுத்து வரும் திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மாதம், அமெரிக்கா ஒரு புதிய நுழைவுஅனுமதி பத்திரம் (Visa bond) திட்டத்தை விரிவுபடுத்தியது. இதன்படி, 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 டாலர் (சுமார் ₹12.5 லட்சம்) வரை பிணைத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


ஜனவரி மாதத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security (DHS)), நிரந்தர குடியுரிமை அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அகதிகள், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (Immigration and Customs Enforcement (ICE)) காவலில் வைக்கப்படலாம் என்று அறிவித்தது. குடியேற்றம் மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவைப் பயன்படுத்தி இந்த கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன்படி, அமெரிக்காவிற்கு வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு நிரந்தர குடியுரிமை அட்டைக்கு விண்ணப்பிக்காத அகதிகள், மீண்டும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் காவலில் வைக்கப்படலாம். மேலும், அகதிகள் ஒரு வருடத்திற்குள் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தவறினாலும், அவர்களைச் சட்டபூர்வமாகக் காவலில் வைக்க அது ஒரு காரணமாகாது என்று கூறப்பட்டிருந்த 2010-ஆம் ஆண்டின் அரசாணையை இந்த புதிய கொள்கை ரத்து செய்தது.


அதேபோல, 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் வகையில் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் விரிவுபடுத்தப்பட்ட பயணத்தடை உத்தரவு கடந்த ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வந்தது.


கடந்த நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களைச் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 2021-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குள் நுழைந்து, தனது நுழைவுஅனுமதி (visa) காலத்தை மீண்டும் மீண்டும் புதுப்பித்து வந்தவர் ஆவார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS), நிரந்தர குடியுரிமை அட்டை திட்டத்தை முழுமையாக மறுஆய்வு செய்வதாக அறிவித்தது. இந்த மறுஆய்வின் மூலம், குடியேற்ற முடிவுகளில் விண்ணப்பதாரர்களின் சொந்த நாடுகள் "குறிப்பிடத்தக்க எதிர்மறையான காரணிகளாக" சேர்க்கப்பட்டன. இனி அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் சொந்த நாடு மற்றும் அவர்கள் அமெரிக்காவிற்கு வந்ததற்கான நோக்கம் ஆகியவற்றை கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


அதேமாதத்தில், பைடன் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்ட சுமார் 2,30,000 அகதிகளுக்கான நிரந்தர குடியுரிமை அட்டைகளை வழங்கும் பணிகளை தற்போதைய அரசு முடக்கியது. மேலும், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் சலுகைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் எவருக்கும் நிரந்தர குடியுரிமை அட்டைகளை மறுக்க அதிகாரிகளுக்கு வழிவகை செய்யும் கடுமையான "பொதுப் பொறுப்பு" விதியையும் அரசாங்கம் முன்மொழிந்தது.


கடந்த டிசம்பர் மாதத்தில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்டவர் லொட்டரி மூலம் நுழைவுஅனுமதி பெற்றவர் என அடையாளம் காணப்பட்டார். இதன் விளைவாக அமெரிக்கா தனது "பல்வகைமை நுழைவுஅனுமதி" (Diversity Visa) திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இத்திட்டத்தின்கீழ் குடியேற்றம் குறைவாக உள்ள நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுதோறும் லொட்டரி முறையில் 50,000 நிரந்தர குடியுரிமை அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தத் தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் தற்போதைய சுழற்சி வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.


அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் எடுத்த முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, ட்ரம்ப் நிர்வாகம் "பிறப்புரிமை குடியுரிமையை" (Birthright citizenship) ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை நுழைவுஅனுமதி வைத்திருப்பவர்களின் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் அமெரிக்கக் குடியுரிமையைப் பறித்ததுடன், எதிர்காலத்தில் அவர்கள் மூலம் தங்களது பெற்றோருக்குக் குடியுரிமை பெற்றுத் தரும் வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கியுள்ளது.





இப்போது என்ன நடக்கும்?


அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஏற்கனவே சட்டரீதியான சவால்கள் எழுந்துள்ளன. குடியேற்ற வழக்கறிஞர்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பல விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புவது பாதுகாப்பானது அல்ல என்றும், அல்லது அவர்கள் விண்ணப்பிப்பதற்குக் குறிப்பிட்ட நாடுகளில் அமெரிக்கத் தூதரகம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, ஆகஸ்ட் மாதம் 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது முதல், அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.


இந்த கொள்கையின் மையத்தில் உள்ள ஒரு முரண்பாட்டை விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல நாடுகளில், அமெரிக்கா குடியேற்ற நுழைவுஅனுமதி (Immigrant Visa) விண்ணப்பங்களைச் செயல்படுத்துவது இல்லை. இதனால், பல விண்ணப்பதாரர்கள் தங்களின் குடும்பங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிய நேரிடும், அதேநேரத்தில் அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை (Green Card) கிடைப்பதற்கான வாய்ப்பும் தள்ளிப்போகும்.


‘Cato Institute’ கல்வி நிறுவனத்தின் குடியேற்ற ஆய்வுகளுக்கான இயக்குநர் டேவிட் பியர் தனது கட்டுரை ஒன்றில், இந்த நடவடிக்கை திறமைசாலிகளை மற்ற நாடுகளுக்குச் செல்லத் தூண்டும் என்றும், இது அமெரிக்காவை வணிகரீதியாகப் பின்தங்கச் செய்யும் என்றும் எழுதியுள்ளார்.


இந்தக் கொள்கை எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு டிரம்ப் அவர்களின் பல குடியேற்ற நடவடிக்கைகளை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. எனவே, இதனால் பாதிக்கப்படும் குடியேறிகள் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்குமுன் ஒரு வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசிக்குமாறு சட்ட அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

Original link:

Trump’s green card rule explained: What it means for visa holders in the US.

Share:

வரைபடங்கள், தரவுகள் மற்றும் கண்ணோட்டங்கள்: உயர்ந்துவரும் அரசுப் பத்திர வருவாய்கள் ஏன் ஒரு கெட்ட செய்தி? -உதித் மிஸ்ரா

உலகளவில், அரசாங்கப் பத்திரங்களின் வருவாய் கடுமையாக அதிகரித்து வருகிறது. இது நுகர்வோர் மற்றும் வணிகங்கள் மீதும், அவர்கள் பணம் கடன் வாங்கும் விதம் மீதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்களுக்குப் பணம் கடன் வாங்குவது அதிக செலவு கொண்டதாக மாறி வருகிறது. பல சூழல்களில், கடன் வழங்குநர்கள் அரசாங்கங்களிடம் வசூலிக்கும் வட்டி விகிதங்கள், 2008-ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு மிக உயர்ந்த அளவை எட்டி வருகின்றன.


மேலும், பல்வேறு அரசாங்கங்களிடமிருந்து கோரப்படும் வட்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு ஏற்ற இறக்கதுடன் உள்ளது. வட்டி விகிதங்களின் அளவு எது போன்றதாக இருப்பினும், இந்தத் திடீர் உயர்வு மட்டுமே ஒரு பிரச்சினையாக அமைகிறது. அரசாங்கங்களுக்கான கடன் வாங்கும் செலவுகள் கடுமையாக உயர்கின்றன என்பது, சராசரி நுகர்வோருக்கான கடன் செலவுகளும் உயரும் என்பதையே குறிக்கிறது. கடன் செலவுகள் இன்னும் அதிகமான அளவில் உயரக்கூடும்.

அரசாங்கங்கள் ஏன் கடன் வாங்குகின்றன?


பெரும்பாலான நாடுகளில், வரிகள் மற்றும் பிற வருவாய் ஆதாரங்கள் மூலமாக மட்டுமே தங்கள் செலவினங்களை சரிசெய்ய அரசாங்கங்கள் சிரமப்படுகின்றன. எனவே, அந்த இடைவெளியை குறைக்க அரசாங்கங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்தத் தேவை பொதுவாக வளரும் நாடுகளில் அதிகமாகவும், வளர்ந்த நாடுகளில் குறைவாகவும் காணப்படுகிறது. ஏனெனில், வளர்ந்த நாடுகளின் அரசாங்கங்கள் வரி வருவாயைத் திரட்டுவதில் அதிகத் திறனும் செயல்திறனும் கொண்டவையாக இருக்கின்றன. ஏழை நாடுகளில் வரி விதிப்பதற்குத் தேவையான அளவு வசதி படைத்த மக்கள் இல்லை.


தொடர்ச்சியான நெருக்கடிகளின் காரணமாக, வளர்ந்த நாடுகள்கூட தங்கள் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடையத் திணறி வருகின்றன. இதன் விளைவாக, அவை அதிக அளவில் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன — இது வெறும் முழுமையான தொகையில் மட்டுமல்ல, அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (அல்லது பொருளாதாரத்தின் அளவின்) சதவீத அடிப்படையிலும் ஆகும்.



அரசுகள் எவ்வாறு பணம் கடன் வாங்குகின்றன?


ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், அரசாங்கமே மிகவும் குறைந்த அபாயம்  கொண்ட கடன் வாங்குபவராக இருக்கிறது. ஏனெனில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அது தோல்வியடைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. கடுமையான நெருக்கடி ஏற்பட்டாலும், அரசு பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தை பயன்படுத்த முடியும். ஆனால், இந்த வசதி நிறுவனங்களுக்கும் குடும்பங்களுக்கும் கிடையாது.


இருப்பினும், அரசாங்கங்கள் சற்று வித்தியாசமான முறையில் கடன் வாங்குகின்றன. அவர்கள் ஒரு பத்திரத்தை (Bond) வெளியிடுகிறார்கள் — இது அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்கள் (Treasurys) என்றும், இங்கிலாந்து அரசின் அரசு பத்திரங்கள் (Gilts) என்றும், ஜெர்மனி அரசாங்கத்தின் கடன் பத்திரங்கள் (Bunds) என்றும், இந்திய அரசாங்கம் வெளியிடும் அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) அல்லது அரசாங்கப் பத்திரங்கள் என்றும், ஜப்பான் அரசின் அரசு பத்திரங்கள் (Japan Government Bonds (JGBs)) என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது அடிப்படையில் "நமது நாடு உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறது" (I owe you) என்று கூறும் ஒரு ஆவணமாகும்.


அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை (உதாரணமாக $100) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (உதாரணமாக 10 ஆண்டுகள்) கடனாகப் பெற்று, 10 ஆண்டுகளின் முடிவில் அசலைத் திருப்பிச் செலுத்துவதோடு, ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட வருமானத்தையோ அல்லது கூப்பனையோ (உதாரணமாக $5) செலுத்துவதாக உறுதியளிக்கிறது என்று இது குறிப்பிடுகிறது. வீடு, கார் அல்லது தொழிற்சாலைக் கடன்களுக்கான ஆண்டு வட்டி விகிதத்தைப் (சதவீதத்தில் குறிப்பிடப்படுவது) போல் இல்லாமல், அரசாங்கப் பத்திரங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு துல்லியமான தொகையை வழங்குகின்றன. எல்லாம் சரியாக நடந்தால், இந்த உதாரணத்திற்கான ஆண்டு வட்டி விகிதம் (அல்லது ஈட்டுத்தொகை) 5%-ஆக இருக்கும்.


ஆனால், அரசாங்கம் ஆண்டின் நடுவில் ஒரு போரைத் தொடங்க முடிவு செய்கிறது என்றும், அதன் விளைவாக பணவீக்கம்  அதிகரிக்கத் தொடங்குகிறது. அரசாங்கத்தின் பணத் தேவையும் அதிகரிக்கிறது. அதே, நேரத்தில் நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் குறைகின்றன என்றும் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். அரசாங்கம் அதிகப் பணம் கடன் வாங்க நிர்பந்திக்கப்படலாம். ஆனால், முதலீட்டாளர்களும் கடன் வழங்குபவர்களும் அதிகரித்த அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதால், இப்போது அதிக வருவாய் விகிதத்தைக் கோருவார்கள். அரசாங்கம் புதிய பத்திரங்களுக்கு, உதாரணமாக $10 போன்ற, அதிக வட்டி விகிதத்தை உறுதியளிக்க  வேண்டிய சூழல் ஏற்படும்.


இதன் காரணமாக, வருடத்திற்கு $5 வட்டி (coupon return) தரும் பழைய பத்திரங்கள் (bonds), தற்போது சிறந்த முதலீடாக தெரியாமல் போகும்.  பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்க முயல்வார்கள், $100-க்கும் குறைவான விலையிலேயே அவர்கள் இவற்றை விற்பார்கள். எவ்வளவு குறைவாக? அந்தப் பழைய பத்திரங்களை வாங்கும் ஒரு நபர், அவற்றிலிருந்து 10% ஈட்டுத்தொகையையோ (yield) அல்லது எதிர்பார்க்கப்படும் வருவாயையோ பெற விரும்புவர். எனவே, சந்தையில் அந்தப் பத்திரங்களை விற்பனை செய்ய  வேண்டுமெனில், அவற்றின் விலை $50-ஆகக் குறைய வேண்டிய நிலை உருவாகி இருக்கும்.


அடிப்படையில், உலகம் முழுவதும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது: அரசாங்கப் பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. நாடுகள் டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்பில் கடன் பெறுவதையும்,  பெறபட்ட கடன்களை மறுநிதியளிப்பு செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, வட்டி வருவாய் விகிதங்களின் (yield) மாற்றங்கள் மூன்று தசம இடங்கள் (three decimal places) வரை துல்லியமாகக் கண்காணிக்கப்படுகின்றன.


உங்களுக்கு இதன் தாக்கம் என்ன?


அரசு பத்திரங்களின் (Government Bonds) வருமான விகிதம் (yields) அதிகரிக்கிறது என்றால், பாதுகாப்பான கடன்களுக்குக் அதிக வட்டி வழங்க வேண்டிய நிலை உருவாகும். இதன் விளைவாக, சாதாரண மக்கள் மற்றும் தொழில்களுக்கு கிடைக்கும் கடன்களின் வட்டியும் அதிகரிக்கும்.


மேலும், வருவாய் விகிதங்கள் அதிகரித்தால் அரசுகள் தனது ஆண்டு நீதி நிலை அறிக்கையில் இருந்து பத்திரங்களுக்கான வட்டியை செலுத்த அதிக பணம் ஒதுக்க வேண்டிய  சூழல் ஏற்படும். அதனால், அரசு மற்ற துறைகளில் உதாரணமாக நலத்திட்டங்கள் (welfare schemes) அல்லது பாதுகாப்புத் துறை (defence) செலவுகளை குறைக்க வேண்டியிருக்கலாம் அல்லது வரிகளை அதிகரிக்க  வேண்டிய சூழல் ஏற்படும். மொத்தத்தில், பத்திரங்கள் அதிகமாக விற்கப்பட்டு (bond sell-off), வருவாய் விகிதம் உயர்வது என்பது நல்ல அறிகுறி அல்ல.

Original link:

Graphs, Data and Perspectives: Why rising govt bond yields are bad news. 

Share:

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், முழுமை பெறாத காலநிலை நீதி.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு வெளியே உள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத் தேவைகளையும் கருத்தில் கொண்டு தான் பசுமை ஆற்றல் முறைகளுக்கான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும்.


கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச நீதிமன்றத்தின் (International Court of Justice (ICJ)) நாடுகள் “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பது நீதிமன்றத்தின் கடமை என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு தற்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதிகாரப்பூர்வ ஒப்புதல் (imprimatur) வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்கள்,  மொத்தமாக இருக்கும் 141 நாடுகள் புதன்கிழமை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் ஆதரவளிக்கவில்லை. இந்த தீர்மானம் சர்வதேச காலநிலை விவாதத்தின் போக்கையே மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது. இதுவரை காலநிலை மாற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் நாடுகளின் “தன்னார்வமாக” செயல்ப்பட்டன. ஆனால், இப்போது, ​​அவை கட்டாயப் பொறுப்பாகப் பார்க்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் சிறிய தீவு நாடுகளுக்கு, அதிக அளவில் கார்பன் வெளியேற்றும் பெரிய நாடுகளிடம் நடவடிக்கை கோருவதற்கான வலுவான தூதரக மற்றும் சட்டரீதியான ஆதாரத்தை இந்த தீர்மானம் வழங்குகிறது.


இருப்பினும், இந்தத் தீர்மானம் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கவலைகளை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. சுரண்டல் காலனித்துவத்துடன் கூடிய நீண்டகால தொழில்மயமாக்கல் வரலாற்றைக் கொண்ட நாடுகள், பருவநிலை நெருக்கடியைச் சமாளிப்பதில் அதிகப் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று அந்நாடுகள்  காலம் காலமாக வாதிட்டு வருகின்றன. பசுமை ஆற்றல் அமைப்புகளுக்கு மாறுவது, வளர்ந்த நாடுகளுக்கு வெளியே உள்ள நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தேவையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானம் போதுமான அளவு அங்கீகரிக்கபடவில்லை. குறிப்பாக, இது பருவநிலை நிதி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழில் முன்னேற்றம் பெற்ற நாடுகள் அளிக்க வேண்டிய நிதி உறுதிப்பாடுகளை ஆய்வு செய்யாமல், நாடுகளின் உலக வெப்பமயமாதல் தடுப்பு திட்டங்களை மட்டும் சட்டரீதியாக விசாரணைக்கு உட்படுத்துவது, காலநிலை பேச்சுவார்த்தைகளில் ஏற்கனவே சவால்களை சந்தித்து வரும் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் (embattled principles) என்ற கொள்கையை   பலவீனப்படுத்துகிறது.


இருப்பினும், இந்தியாவின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலைப்பாட்டை, சிறிய தீவு நாடுகளின் கவலைகளுக்கு எதிரான வாக்காக பார்க்கக் கூடாது. இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (Security and Growth for All in the Region (SAGAR)) போன்ற முயற்சிகளும், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு போன்ற திட்டங்களும், கடல் மட்டம் உயர்வால் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான நாடுகளின் கவலைகளுக்கு மதிப்பளித்துள்ளன. இந்தியா தனது பாரிஸ் ஒப்பந்தப் பொறுப்புகளை அடைவதிலும் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியா புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு வளரும் பொருளாதாரங்கள் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளிடையே வளர்ந்து வரும் உணர்வுக்கு அது விழிப்புடன் இருக்க வேண்டும். காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டில் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) நடந்த விவாதங்களும், தற்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், இந்த நிலைப்பாட்டிற்கு மேற்கத்திய நாடுகளில் பலவற்றின் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டுகின்றன. சர்வதேச காலநிலை மன்றங்களில் இந்தியா தனது நியாயமான நிலைப்பாட்டை வலியுறுத்தி வரும் அதே வேளையில், தனது பசுமைப் பரிமாற்ற இலக்குகளை (green-transition targets) அடைவதில் உறுதியுடன் பயணிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, நாட்டு மக்களின் வாழ்விற்கும், தொழில்துறையின் போட்டித்தன்மைக்கும் ஏற்றதாக  இருக்கும்.


Original link:

At UNGA, incomplete climate justice.



Share:

இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் 2022-ம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது. -சந்திரசேகர் கே.

குறிப்பாக கிராமப்புறங்களில், அதிகமான பெண்கள் தொழில்துறையில் இணைந்து வருகின்றனர்.


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoS&PI), ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்திற்கான 'காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு-2025' (Periodic Labour Force Survey (PLFS)) குறிப்பிடத்தக்க முறையியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழ்கிறது. முதல் முறையாக, இந்த மேம்படுத்தப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS), கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா ஆகிய இரண்டையும் ஒவ்வொரு மாதமும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு முன்னர், இக்கணக்கெடுப்பு ஜூலை முதல் ஜூன் வரையிலான சுழற்சி முறையைப் பின்பற்றியதுடன், நகர்ப்புறங்களுக்கான காலாண்டுத் தரவுகளை மட்டுமே வழங்கி வருகிறது. மேலும், இது சமீபத்திய ஆண்டுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர் சந்தை குறித்த, அகில இந்திய அளவிலான மிக விரிவான புள்ளிவிவரத்தை இப்புதிய கணக்கெடுப்பு வழங்குகிறது.


இந்தியாவின் அனைத்து வயதினருக்குமான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) 44.9%-ஆக உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு 10 இந்தியர்களில் சுமார் நான்கு நபர்கள், பணியில் உள்ளனர் அல்லது தீவிரமாக வேலைதேடி வருகின்றனர். 2024-ஆம் ஆண்டில் 44.7 சதவீதமாக இருந்த இத்தொகை, தற்போது ஏறக்குறைய அதே நிலையில் (மாற்றமின்றி) நீடித்து வருகிறது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கான இந்தியாவின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை (LFPR) (சதவீதத்தில்), கடந்த சில ஆண்டுகளின் அடிப்படையில் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.


கிராமப்புறங்களில், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 34.6% ஆக உள்ளது. இது ஆண்களின் பங்கேற்பு விகிதத்தைவிடக் குறைவாக இருந்தாலும், விவசாயம் மற்றும் வீட்டு சார்ந்த பணிகளில் பெண்களின் ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. இருப்பினும், நகர்ப்புறங்களில் பெண்களின் பங்கேற்பு வெறும் 22.2% ஆகக் குறைகிறது. நகர்ப்புற இளம் பெண்களிடையே இந்தச் சவால் இன்னும் தீவிரமாகிறது. இந்த நகர்ப்புற மையங்களில், ஒவ்வொரு 10 பெண்களிலும் ஏறக்குறைய இருவர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்கு மாறாக, நகர்ப்புற ஆண்களின் பங்கேற்பு விகிதம் 59.7% ஆக உள்ளது. இது இந்த விகிதத்தைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். இந்த இடைவெளி, இந்தியாவின் நகர்ப்புற தொழிலாளர் சந்தையில் நிலவும் தொடர்ச்சியான சவால்களைச் சுட்டிக்காட்டுகிறது. 2025-ம் ஆண்டில் பாலினம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களை, கீழே உள்ள வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.



15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 9.9% ஆக உள்ளது. இது, 3.1% என்ற தேசிய சராசரியைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாகும். குறிப்பாக நகர்ப்புற இளம் பெண்களைப் பொறுத்தவரை, இந்த விகிதம் 18.9%-ஆக உள்ளது. இதன் பொருள், நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஐந்து இளம் பெண்களிலும் ஏறக்குறைய ஒருவர் வேலையின்றி உள்ளார் என்பதாகும்.


காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) இதைத் தெளிவுபடுத்துகிறது. வேலையின்மை விகிதம் என்பது, தொழிலாளர் சந்தையின் ஒரு பகுதியாக இருப்பவர்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. இது வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்குக் கூட வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்பதை இது உணர்த்துகிறது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு இந்தச் சவால் மிகவும் கடுமையாக உள்ளது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, பாலினம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் வேலையின்மை விகிதத்தை, கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.


படித்த மற்றும் வேலையில்லாத நிலை குறித்து


இடைநிலைப் பள்ளி அல்லது உயர் கல்வி பெற்ற 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், வேலையின்மை விகிதம் 6.5%-ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். நகர்ப்புறங்களில், படித்தவர்களிடையே வேலையின்மை 7.2%-ஆக உள்ளது. அதேசமயம், கிராமப்புறங்களில் இது 6%-ஆக இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள படித்த தொழிலாளர்கள் வெளிப்படையாக வேலையில்லாமல் இருப்பதைவிட, குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே அதிக வாய்ப்புள்ளது என்பதை இது குறிக்கலாம். 2022 மற்றும் 2025-க்கு இடையில், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.6%-லிருந்து 3.1%-ஆகக் குறைந்துள்ளது. ஆனாலும், படித்தோரிடையே வேலையின்மை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. படித்தவர்களிடையே வேலையின்மை தொடர்ந்து உயர்வாக இருப்பது, படித்த தொழிலாளர் சக்தியின் வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கம் முழுமையாக இல்லை என்பதைக் காட்டுகிறது. கீழே உள்ள விளக்கப்படம், படித்தவர்கள் மற்றும் அனைத்து நபர்களிடையேயான வேலையின்மை விகிதத்தை (சதவிகிதத்தில்) இடங்கள் வாரியாகக் காட்டுகிறது.







கிராமப்புறங்களில், பணிபுரியும் பெண்களில் 70.7% பேர் சுயதொழில் செய்கின்றனர். இந்த வகை, உண்மையான தொழில்முனைவுத் தேர்வைவிட, பெரும்பாலும் வாழ்வாதாரப் பணிகளையே பிரதிபலிக்கிறது. நகர்ப்புறங்களில், பணிபுரியும் பெண்களில் 40.4% பேர் சுயதொழில் செய்கின்றனர். இது தொழில்முனைவு நடவடிக்கை மற்றும் முறைசாரா வேலைகள் ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது. முறைசார்ந்த வேலைவாய்ப்பின் அடையாளமாகக் கருதப்படும் வழக்கமான ஊதியம் அல்லது சம்பள வேலை, கிராமப்புறங்களில் பணிபுரியும் பெண்களில் வெறும் 9.3% பேரை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அதேநேரத்தில் மேலும் 20% பேர் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். நகர்ப்புறங்கள் ஒப்பீட்டளவில் சிறந்த போக்கைக் காட்டுகின்றன. அங்கு பணிபுரியும் பெண்களில் 50.9% பேர் வழக்கமான ஊதிய வேலைவாய்ப்பில் உள்ளனர். கீழேயுள்ள விளக்கப்படம் பெண் தொழிலாளர்களிடையே உள்ள வேலைவாய்ப்பு வகைகளை (சதவிகிதத்தில்) காட்டுகிறது.


அனைத்து நபர்களுக்கான தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் Worker Population Ratio (WPR) 2022-ல் 39.7%-லிருந்து 2025-ல் 43.5%-ஆக அதிகரித்துள்ளது. தற்போது அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் அதிகமான பெண்கள் தொழிலாளர் துறையில் நுழைகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில், இதே காலகட்டத்தில் பெண் தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் 26.9%-லிருந்து 33.8% ஆக உயர்ந்துள்ளது. கீழேயுள்ள விளக்கப்படம், அனைத்து வயதுப் பிரிவுகளிலும் பல ஆண்டுகளாக இந்தியாவின் தொழிலாளர் மக்கள்தொகை விகிதத்தை (சதவிகிதத்தில்) காட்டுகிறது.



கட்டுரையாளர், இந்தியப் புள்ளியியல் சேவை அதிகாரியாக, புள்ளியியல் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் (MoS&PI) இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

Original link:

India’s worker population ratio has climbed since 2022.


Share:

இணையவழிப் போர், உலகளாவிய சட்டப் பொறுப்புடைமையை முந்திக்கொண்டு செல்கிறது. - ஜோதி சிங்

இணையவழி மோதல், படைபலம் மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவற்றை நிர்வகிக்கும் பாரம்பரியக் கோட்பாடுகளுக்குச் சவால்  அளிக்கிறது.


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே பல நாட்களாக நிலவிவரும் போர் பதட்டங்கள், இன்று படைபலம் பயன்படுத்தப்படும் விதத்தில் ஏற்பட்டுள்ள ஒரு தெளிவான மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன. அறிக்கைகள் மற்றும் கொள்கை ஆய்வுகளின்படி, சமீபத்திய தாக்குதல்கள் வழக்கமான இராணுவ நடவடிக்கைகளுடன் மட்டுமல்லாமல், இணையவழிச் செயல்பாடுகளுடனும் சேர்ந்து நடத்தப்பட்டன. இதில், தகவல் தொடர்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் தகவல் தொடர்பில் ஆதிக்கம் செலுத்தவும் செய்தி வலைத்தளங்கள் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயலிகள் முடக்கம் செய்யப்பட்டதும் அடங்கும். இணைய வழிமுறைகள் தனித்து பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, பாரம்பரிய இராணுவ வலிமையுடன் இணைந்து டிஜிட்டல் இடையூறுகளுடன் இணைந்து செயல்படும் ஒரு பகுதியாகும். இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இணையவழி நடவடிக்கைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உடல்ரீதியான தாக்குதல்களுக்கு முன்பாக தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சீர்குலைப்பதற்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.


மோதலின் போது நடந்த சமீபத்திய இணையவழிச் சம்பவங்கள், ஹண்டாலா முடக்கக் குழு போன்ற குழுக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இந்தக்குழு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள், இணையவழிச் செயல்பாடுகள் எவ்வாறு மோதலைப் போர்க்களங்களை தாண்டி விரிவுபடுத்த முடியும் என்பதை சுட்டிக் காட்டினாலும், இந்த மாற்றத்திற்குச் சட்டம் எவ்வாறு பதிலளிக்கும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.


வரம்பை நிர்ணயிப்பது கடினம்


சர்வதேச சட்டத்தில் தொடர்புடைய கொள்கைகள் குறைவாக இல்லை.  ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவு 2(4)-ன்கீழ் உள்ள படைபலத்தைப் பயன்படுத்துவதற்கான தடை, அரசுப் பொறுப்புக்கான கட்டமைப்புடன் சேர்ந்து, கொள்கையளவில் இணைய வழி பயன்பாட்டிற்கும் பொருந்தும். இணையச் செயல்பாடுகள் உள்கட்டமைப்பு அல்லது அத்தியாவசிய சேவைகளைப் பாதிக்கும்போது, ​​கடுமையான சட்டச் சிக்கல்கள் எழக்கூடும். இதுபோன்ற நடவடிக்கைகள் எப்போது ஒரு குறிப்பிட்ட வரம்பைக் கடந்து, சர்வதேச அளவில் தவறான செயலாகவோ  வகைப்படுத்தப்படும் அளவிற்குத் தீவிரமடைகின்றன என்பதைத் தீர்மானிப்பதே மிகவும் சிக்கலான பகுதியாகும். கோட்பாட்டளவில், இது போன்ற நடவடிக்கைகள் ஒரு நாட்டின் மீது பொறுப்பைச் சுமத்தவும், இழப்பீடு கோருவதற்கான கோரிக்கைகளுக்கும் வழிவகுக்கலாம். இருப்பினும், நடைமுறையில், இந்த வரம்பை நிலைநாட்டுவது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது.


சட்டம் அனுமதிப்பதற்கும், உண்மையில் நிகழ்வதற்கும் இடையிலான இந்த இடைவெளி நாளுக்கு நாள் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. வெறும் பாதுகாப்பு (Just Security) உள்ளிட்ட சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, இணையச் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதிலோ அல்லது சட்ட வழிமுறைகள் மூலமாக நிவாரணம் பெறுவதிலோ அரிதாகவே வெற்றி பெறுகின்றனர். இந்தச் சட்டம் பொருந்துமா என்பது மட்டும் இங்குள்ள பிரச்சினை அல்ல, அதை நடைமுறையில் பயன்படுத்த முடியுமா என்பதுதான் பிரச்சனையாக உள்ளது.


இந்த இடைவெளிக்கான ஒரு முக்கியக் காரணம், குற்றத்தை யார் மீது சுமத்துவது என்பதில்  உள்ளது. சர்வதேச சட்ட மீறலை நிலைநாட்ட, அந்தச் செயல் ஒரு நாட்டின் மீது சுமத்தப்பட வேண்டும். இருப்பினும், இணையவழிச் செயல்பாடுகள் இயல்பிலேயே இரகசியமானவை. பல வலையமைப்புகள் மற்றும் அதிகார வரம்புகள் வழியாக வழிநடத்தப்படுகின்றன. ஒரு இணையவழி தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அரசாங்கங்கள் ஓரளவிற்கு தெரிந்தாலும், அதைச் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றாக மாற்றுவது மிகவும் கடினம். இது அரசியல் உறுதித்தன்மைக்கும் சட்டப்பூர்வ ஆதாரத்திற்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்குகிறது.

வழக்கு நடவடிக்கைகளைத் தடுக்கும் கவலைகள்


இத்தகைய நுணுக்கமான இணைய தகராறுகளுக்கு தீர்வுக்கான ஒரு தீர்ப்பாயம் இல்லாததும் ஒரு நடைமுறை சிக்கலை உருவாக்குகிறது. நாடுகளின் சம்மதம் இல்லாமல், இப்படிப்பட்ட முக்கியமான இணையத் தகராறுகளை சர்வதேச நீதிமன்றம் உட்பட சர்வதேச நீதிமன்றங்கள் விசாரிப்பது சாத்தியமற்றதாகும் உள்நாட்டு நீதிமன்றங்களும் இதே போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, வெளிநாடுகள் பெரும்பாலும் இறையாண்மைப் பாதுகாப்பால் பாதுகாக்கப்படுவதால் இது நிகழ்கிறது. இதன் விளைவாக, இணையம் தொடர்பான கோரிக்கைகளைத் திறம்பட விசாரிக்கக்கூடிய தீர்ப்பாயங்கள் குறைவாகவே உள்ளன. நாடுகள் சட்ட செயல்முறைகளைத் தவிர்ப்பதற்கு ஒரு ராஜதந்திரக் காரணமும் உள்ளது. ஒரு வழக்கைக் கொண்டு வருவது நாடுகளுக்கு இடையேயான பதட்டங்களை அதிகரிக்கலாம். மேலும், முக்கியமான உளவுத் தகவல்கள் அல்லது திறன்களை வெளியிட வேண்டிய சுழல ஏற்படலாம். இந்தக் காரணத்திற்காக, பல இணையவழிச் சம்பவங்கள் நீதிமன்றங்கள் மூலம் அல்லாமல், அரசியல்ரீதியாகவோ அல்லது இராஜதந்திரரீதியாகவோ கையாளப்படுகின்றன.


மற்றொரு சவால் ஆதாரமாகும். இணையவழிச் சம்பவங்களில் தொழில்நுட்பத் தரவுகள், இரகசிய உளவுத் தகவல்கள் மற்றும் சிக்கலான காரணங்களை கொண்டுள்ளன. எனவே, ஒரு நீதிமன்றத்தில், ஒரு நடவடிக்கையை யார் மேற்கொண்டார்கள், அது எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் அது எவ்வாறு ஒரு குறிப்பிட்ட பாதிப்பிற்கு வழிவகுத்தது என்பதைக் காட்டுவது மிகவும் கடினமாக இருக்கும். இது சட்ட நடவடிக்கையைச் சிக்கலானதாகவும் நிச்சயமற்றதாகவும் ஆக்குகிறது. இணையக் குற்றங்கள் குறித்த உடன்படிக்கை மற்றும் இணையக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை, இணைய குற்றச்செயல்கள்  சம்பவங்களை சமாளிக்க ஒரு விரிவான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த முயற்சிகள் பெரும்பாலும் இணைய குற்றங்கள் மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகின்றன. நாடுகளுக்கிடையிலான அரசியல் மோதல்களின்  ஒரு பகுதியாக இணைய குற்ற நடவடிக்கைகள் நடைபெறும் போது, அந்தச் செயல்களுக்கு அரசுகள் ஏற்க வேண்டிய பொறுப்பு போன்ற பிரச்சினைகளை சரியாகக் கையாளுவதில் இந்த உடன்படுக்கை குறைபாடுகளைக் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ஒரு வளர்ந்து வரும் பொருத்தமின்மை உருவாகியுள்ளது. இணையவழி குற்ற தாக்குதல் நடவடிக்கைகள் அதிகமாகவும், சில நேரங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடியவையாகவும் மாறி வருகின்றன. ஆனால், அவை அரிதாகவே சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. இதனால் சர்வதேச சட்டம் இனி முக்கியமற்றதாகிவிட்டது என்று அர்த்தமில்லை. ஆனால், இது போன்ற மோதல்களுக்கு தற்போதுள்ள சட்ட அமைப்புகளைப் பயன்படுத்துவது இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.


இணைய வழி  நெறிமுறைகளை வடிவமைப்பதில் இந்தியா உதவ வேண்டும்.


இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு இது ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும். கடந்த சில ஆண்டுகளில், நிதி, எரிசக்தி மற்றும் ஆளுகை போன்ற துறைகளில் இந்தியா டிஜிட்டல் உள்கட்டமைப்பை அதிகளவில் சார்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியா அதிக பாதிப்புக்குள்ளாகும் தன்மையை எதிர்கொள்வதோடு, சர்வதேச விதிமுறைகளை வடிவமைப்பதில் ஒரு முக்கியப் பங்கையும் கொண்டுள்ளது. உள்நாட்டு இணையப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவது முக்கியமானது. ஆனால், இணையவெளியில் பொறுப்புடைமை, குற்றத்திற்குப் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்பான நடத்தை குறித்த சர்வதேச விவாதங்களில் தீவிரமாக கலந்து கொள்வதும் முக்கியமான நடவடிக்கையாகும்.


எனவே, இணையவழிச் செயல்பாடுகள் நவீன மோதல்களின் ஒரு பகுதியாகிவிட்டன என்பதை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், சட்டம் பயனுள்ள வகையில் பதிலளிக்க முடியும் என்பதை உறுதி செய்வதும் சவாலானதாகும். இணையவழி தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் நம்பகமான வழிகள் இல்லாமல் குற்றம் தொடர்ந்து விரிவடைந்தால், சட்டத்துக்கும் உண்மையான நிலைக்கும்  இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும். அதன் விளைவாக, உண்மையான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு வகையான மோதல், சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு  இல்லாதததாகவே இருந்து விடும்.


டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜோதி சிங், இணையவழிப் போர் மற்றும் சர்வதேச சட்டத்தின்கீழ் படைபலத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

Original link:

Cyber warfare is outpacing global legal accountability.


Share: