வெப்ப அலைகள் அல்லது காற்று மாசுபாடு அதிகரிக்கும் காலங்களில், பள்ளிகள் தங்களின் வகுப்புகளை இணையவழி கல்விக்கு மாற்றுகின்றன. இதனால் ஏழைக் குழந்தைகளுக்கு இணைய வசதி கிடைக்காததால், அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இன்றைய இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையானது, சிறந்த கற்றல் விளைவுகள், அனைவருக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, மற்றும் நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தேவையான மனித வளம் ஆகியவற்றிற்குச் சரியான முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆனால், லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு இவை அனைத்தையும் சாத்தியமாக்கும் அடிப்படை நிபந்தனையான "தடையில்லாத பள்ளிப்படிப்பு" என்பது தற்போது ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது.
இது பொதுவாகக் கற்றல் பாதிப்பிற்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படும் "பள்ளி இடைநிற்றல்" என்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவில் பள்ளி இடைநிற்றலுக்கு வறுமை அல்லது குழந்தை திருமணம் மற்றும் ஆண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது போன்ற சமூகக் காரணிகள் என பல காரணங்கள் உள்ளன. இது குறிப்பாகப் ஆரம்பக் கல்வியைவிட இடைநிலைக் கல்வியில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், அதிகப்படியான சேர்க்கை விகிதம் இருந்தபோதிலும், மாணவர்களைத் தொடர்ந்து பள்ளியில் தக்கவைப்பது என்பது இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது.
சுற்றுச்சூழல் காரணிகள்
இதனுடன், பள்ளிப்படிப்பில் ஏற்படும் தடைகளும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சமீபகாலங்களில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றைத் (COVID-19) தவிர, பெரும்பாலான தடைகள் சுற்றுச்சூழல் காரணிகளாலேயே ஏற்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகள் மீண்டும் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன. இதேபோல், நாடு முழுவதும் கோடை வெப்ப அலைகள், அடர்ந்த பனிமூட்டம், கனமழை, சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களால் வருடத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் பள்ளிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியன்று, வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் சில நாட்களுக்கு மூடுமாறு ஒடிசா அரசு உத்தரவிட்டது.
தற்போதைய கோடைகாலத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தைவிடக் கடுமையான வெப்ப அலை நாட்கள் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) ஏற்கனவே எச்சரித்துள்ளது. தட்பவெப்ப நிலையால் ஏற்படும் இத்தகைய தடைகள், பள்ளிகள் மூடப்படுவது என்பது பெருந்தொற்று காலத்தோடு முடிந்துவிட்ட ஒரு தற்காலிக விஷயம் அல்ல என்பதைக் காட்டுகிறது. தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தின் அதிர்ச்சிகளுக்கு இடையில், இது மாணவர்களின் கல்வியில் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு வழக்கமான பிரச்சனையாக மாறி வருகிறது.
இங்கு பிரச்சனை என்பது பள்ளிகள் மூடப்படுவது மட்டுமல்ல, அதற்கு மாற்றாக வழங்கப்படும் இணையவழி வகுப்புகள் எவ்வகையிலும் நேருக்கு நேர் கற்கும் வகுப்பறை கல்விக்கு இணையானதாக இல்லை என்பதுதான். பல குழந்தைகளுக்கு, இணையவழி வகுப்புகளுக்கு மாறுவது என்பது தடையற்ற மாற்று வழி அல்ல; மாறாக, அது அவர்களைக் கல்வியில் இருந்து ஒதுக்கி வைப்பதன் தொடக்கமாகவே அமைகிறது. பள்ளிகள் மூடப்படுவது மாணவர்களுக்கிடையேயான கல்வி சமத்துவமின்மையை எவ்வாறு மேலும் அதிகரிக்கிறது என்பதற்கு கொரோனா பெருந்தொற்றுகால அனுபவமே ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
ஆய்வு முடிவுகள்
2022-2024-ஆம் ஆண்டுகளில் ‘India Human Development Survey-3’ மூலம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், கல்வித் துறையில் நிலவும் இந்த சமநிலையின்மையை (பிரிவினையை) மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகளில் சேர்ந்த 5 முதல் 15-வயதுக்குட்பட்ட குழந்தைகளில், தனியார் பள்ளிகளில் படித்த 52 சதவீத மாணவர்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 30 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த வசதி கிடைத்தது.
இதேபோல், தனியார் பள்ளி மாணவர்களில் 45 சதவீதத்தினர் கல்வி சார்ந்த காணொளிகள் அல்லது பிற இணையவழி கற்றல் பொருட்களைப் பெற்றனர். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்த வசதிகளைப் பெற்றனர். மிக அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் படித்த 61 சதவீதக் குழந்தைகள் தங்களுக்குப் பள்ளியிலிருந்து எந்த ஒரு கற்றல் உதவியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். தனியார் பள்ளிகளில் இந்த அளவு 43 சதவீதமாக இருந்தது. இந்த ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்த நாட்டின் நிலவரத்தைப் பிரதிபலிக்கின்றன. பெருந்தொற்று காலத்தில் பல பெரிய மாநிலங்களில் இருந்த 40 முதல் 70 சதவீதப் பள்ளி மாணவர்களிடம் டிஜிட்டல் சாதனங்கள் (கைபேசி, கணினி) இல்லை என்பதை மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றும் உறுதிப்படுத்துகிறது.
இந்த இடைவெளியைக் குறைப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருந்தது என்பதை ‘India Human Development Survey-3’ ஆய்வில் ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் விளக்குகின்றன. மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட அரசுப் பள்ளி ஆசிரியர்களே மின்சாரக் குறைபாடு, பலவீனமான இணைய வசதி மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் இல்லாமை போன்ற தடைகளை அதிகமாக எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். இதே குறைபாடுகளோடுதான் மாணவர்களும் போராட வேண்டியிருந்தது. மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்கள் குறைவாக இருந்ததையும், கற்றலுக்கு இடையூறாக இருந்த வீட்டுச் சூழ்நிலைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இணையவழிக் கல்வி தோல்வியடைந்ததற்குத் தொழில்நுட்பக் குறைபாடுகள் மட்டுமே காரணமல்ல, குடும்பங்களின் சமமற்ற பொருளாதார மற்றும் சமூகச் சூழ்நிலைகளும் ஒரு முக்கியக் காரணியாக இருந்தன.
பள்ளிகள் மூடப்படுவது என்பது அனைத்து மாணவர்களின் கற்றலிலும் ஒரு தற்காலிகமான மற்றும் சமமான இடைநிறுத்தத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக, அது ஒரு சமமற்ற பாதிப்பையே உருவாக்குகிறது. ஏற்கனவே பின்தங்கிய சூழலில் படிக்கும் குழந்தைகள், தங்களின் கற்றல் வாய்ப்புகளை முழுமையாக இழக்க நேரிடுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதும் கடினமாகிறது. எனவே, கல்வியில் ஏற்படும் இத்தகைய தடங்கல்கள் குறுகியகாலப் பாதிப்போடு முடிந்துவிடுவதில்லை. அது மனிதவள மேம்பாட்டில் நீண்டகால அடிப்படையில் பெரும் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடுகிறது.
அதனால்தான், பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு ஆகிய அனைத்தும் முக்கியமானவையாக இருந்தாலும், சிக்கல் என்பது இவற்றைத் தாண்டிப் போகிறது. கல்வி சார்ந்த விவாதங்கள் அனைத்தும் பொதுவாகப் பள்ளிக் கல்வி எந்தத் தடங்கலும் இன்றித் தொடர்வதாகவே எடுத்துக் கொள்கின்றன. ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் குழந்தைகளைத் மீண்டும் மீண்டும் வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி, சமமற்ற வீட்டுச் சூழலில் படிக்கக் கட்டாயப்படுத்தும்போது, அரசின் கொள்கைக்கான முதன்மைக் கேள்வி 'கல்வியின் தொடர்ச்சி' பற்றியதாக மாறுகிறது.
இணையவழித் திட்டங்கள்
இந்தியாவில் டிஜிட்டல் கல்வித் திட்டங்களுக்குப் பற்றாக்குறை இல்லை. கல்வி கற்பதற்கான பல்வேறு வழிமுறைகளை வழங்குவதற்காக பிரதான் மந்திரி இ-வித்யா (PM eVIDYA) திட்டம் தொடங்கப்பட்டது; அதே நேரத்தில் தீக்ஷா தளம் (DIKSHA) டிஜிட்டல் கற்றல் பாடநெறிகளுக்கான தேசிய தளமாகச் செயல்படுகிறது. சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) திட்டமும் அதன் பள்ளி கல்வி கட்டமைப்பிற்குள் டிஜிட்டல் மற்றும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆதரவை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கையானது 2020 (NEP 2020) அனைவருக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதை தெளிவாக வலியுறுத்துகிறது. ஆனால், திட்டங்கள் இருப்பதனாலேயே கல்வித் தொடர்ச்சிக்கு அது தானாகவே உத்தரவாதம் அளித்துவிடாது. குடும்பங்களில் நிலையான இணைய இணைப்பு, போதிய டிஜிட்டல் சாதனங்கள், ஆதரவான கற்றல் சூழல் இல்லாத இடங்களில், குழந்தைகளால் இந்தத் திட்டங்களின் பலன்களைப் பெற முடிவதில்லை.
சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறி வருவதால், கல்வித் தொடர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனிமேலும் வெறும் 'நெருக்கடி கால மேலாண்மை' ஒன்றாகக் கருத முடியாது. அவை வலுவான டிஜிட்டல் வசதி, எளிய தொழில்நுட்ப மாற்று வழிகள், சமூகம் சார்ந்த ஆதரவு மற்றும் விளிம்புநிலை மாணவர்களையும் சென்றடையும் பயனுள்ள விநியோகம் ஆகியவற்றின் மூலம் முதன்மை கல்விக் கொள்கையிலேயே கட்டமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பள்ளிகள் மூடப்படும்போதும், தொடர்ந்து படிக்க முடிகிற குழந்தைகளுக்கும் படிக்க முடியாத குழந்தைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து, இத்தகைய தற்காலிகத் தடைகள் நிரந்தரமான சமத்துவமின்மையாக மாறிவிடும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
திவ்யஸ்ரீ கங்குலி, தேசிய தரவு கண்டுபிடிப்பு மையம் - தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழுவின் இணை ஆய்வாளர் ஆவார்.
Original link:
Weather-induced school closures hurt the poor.