அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் இருந்தபோதிலும், அது இன்னும் நிலக்கரி மின் உற்பத்தியை சார்ந்திருக்கும் சூழலை மாற்றவில்லை.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களால் சர்வதேச அளவில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, இந்தியாவின் தொடர்ச்சியான ஆற்றல் சார்ந்த இறக்குமதியில் ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் வெளிக் காட்டியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு பல ஆண்டுகளாக கொள்கை முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் (fossil fuel) இறக்குமதிகளில் ஏறக்குறைய பாதி பொருட்கள் இன்னும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே கடந்து வருகின்றன. இதில் சவூதி அரேபியாவில் இருந்து வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் கத்தாரிலிருந்து வரும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Liquefied Natural Gas (LNG)) இறக்குமதிகளும் அடங்கும்.
இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தைப் (clean energy transition) பற்றிய தற்போதைய பொதுவான கருத்துக்கு, இந்த சிக்கல் முரணாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2017-ஆம் ஆண்டிலிருந்து, நாட்டின் புதிய மின் உற்பத்தித் திறன் விரிவாக்கங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களே முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2005-ல் 0.72 சதவீதமாக இருந்த இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் பங்கு, மார்ச் 2026-க்குள் யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்து 42.4 சதவீதத்தை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில், நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் நிலக்கரியின் பங்கு 58.7 சதவீதத்திலிருந்து 42.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வழக்கமான அளவீடுகளின்படி, இந்தியா எரிசக்தி மாற்றத்தில் நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், எரிசக்தி விலை உயர்வுகள் தொடர்வது ஒரு சிக்கலான போக்கைக் காட்டுகிறது. நிறுவப்பட்ட திறன் என்பது உண்மையான மின்சார உற்பத்திக்குச் சமமானதல்ல. தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் நிறுவப்பட்ட திறனில் ஐந்தில் இரண்டு பங்கிற்கும் மேலாக இருந்தாலும், ஏப்ரல் 2026-ல் அவை 15.8% மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்தன. இதற்கு மாறாக, நிலக்கரி மின்சார உற்பத்தி 71.8% பங்கைக் கொண்டிருந்தது. இது மார்ச் 2019-ல் இருந்த 76.2% பங்கைவிட மிகச் சிறிய அளவிலேயே குறைந்து இருந்தது.
திறன் மற்றும் உற்பத்தி இடைவெளி
திறன் மற்றும் மின்உற்பத்தி இடையிலான இடைவெளியே இந்தியாவின் ஆற்றல் அமைப்பைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய அடிப்படையாகும். நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியிருந்தாலும், மின்சார உற்பத்தி கலவையில் நிலக்கரியை முழுமையாக மாற்ற முடியவில்லை. உண்மையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது நிலக்கரியை இடமாற்றம் செய்வதற்குப் பதிலாக, அதன்மீது சேர்க்கப்படுகிறது. இந்தியா தொடர்ந்து நிலக்கரியைச் சார்ந்திருப்பதை தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. 2017-ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் வலுவான வளர்ச்சி இருந்தபோதிலும், 2018-க்குப் பிறகு இந்தியா புதிய புதைபடிவ எரிபொருள் மின் உற்பத்தித் திறன் சிறிதளவும் அதிகரிக்கவில்லை. குறிபிட்ட சில பழைய நிலக்கரி ஆலைகளை மூடும் நடவடிக்கையால் எரிவாயு அடிப்படையிலான திறன் சரிவைக் கண்டுள்ளது. இதன் விளைவாக, மின் அமைப்பில் நிலக்கரியே முதன்மையான மாற்று மற்றும் சமநிலைப்படுத்தும் ஆதாரமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இதற்கான காரணங்கள் கட்டமைப்பு தொடர்பானவை. சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவை முக்கிய மின்சார ஆதாரங்களாகவே இருக்கின்றன. அவற்றின் உற்பத்தி, வானிலை மற்றும் நேரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதே சமயம் மின்சாரத் தேவை தொடர்ச்சியாக உள்ளது. பெரிய அளவிலான மின்கலச் சேமிப்பு, நெகிழ்வான மின்கட்டமைப்புகள் மற்றும் போதுமான சமநிலைப்படுத்தும் திறன் ஆகியவை இல்லாத நிலையில், இந்த அமைப்பு தொடர்ந்து செயல்படுவதற்குத் தேவையான நம்பகத்தன்மையை நிலக்கரியே வழங்கி வருகிறது.
உள்நாட்டு மின்சார விலைகள் உலகளாவிய எரிபொருள் சந்தைகளை இவை ஏன் அதிகமாக சார்ந்துள்ளன என்பதற்கான காரணத்தையும் விளக்குகிறன. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள், இந்திய மின்சார விலைகள் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலைகளுடன் சேர்ந்து நகர்ந்ததை காட்டுகின்றன. உள்நாட்டில் இயங்கும் துறைகள் கூட, எரிபொருள் விலைகளே மின்சாரத்தின் இறுதி விலையை தீர்மானிப்பதால், அவை மறைமுகமாக சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு (external commodity cycles) ஏற்ப மாறுவதாகவே இருக்கின்றன.
கள யதார்த்தம்
இதன் விளைவாக, மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்கள் இந்தியாவை கடுமையாகப் பாதிக்கின்றன. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு, போக்குவரத்து மற்றும் தொழில்துறை செலவுகளை நேரடியாக அதிகரிப்பது மட்டுமல்லாமல், நிலக்கரி விலைகள், மின்சாரக் கட்டணங்கள், பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடிகளையும் அதிகரிக்க செய்கிறது.
இந்தியாவின் எரிசக்தி மாற்றம் குறித்த விவாதம், தவறான கருத்தை கொண்டு அதிகளவில் நடைபெற்று வருகிறது. முன்னேற்றத்தின் அளவீடாக இருப்பதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவப்பட்ட திறன் மீதே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மின்சார அமைப்புகள் வெறும் திறன் அதிகரிப்புகளால் மட்டும் நிலைத்திருக்க முடியாது. அவை உண்மையான மின் உற்பத்தியையும், மின்சாரம் மிகவும் தேவைப்படும் நேரங்களில் அதைத் தொடர்ந்து விநியோகிக்கும் திறனையும் சார்ந்து உள்ளன.
இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில், அது பாதிப்புக்குள்ளாகும் தன்மை குறித்த போக்குகளை வெளிக் காட்டுகிறது. சீனா குறைவான அளவை பாதிப்புக்களை சந்தித்துள்ளது. சீனாவின் மின்சார உற்பத்தியில் எண்ணெய் மற்றும் எரிவாயு 4% மட்டுமே பங்காற்றுகின்றன. மேலும், புதிய கார் விற்பனைகளில் பாதிக்கு மேற்பட்டவை தற்போது மின்சார மற்றும் கலப்பின வாகனங்களாக (hybrids cars) இருப்பதால், தினமும் ஒரு மில்லியன் பேரல்கள் அளவிற்கு எண்ணெய் தேவையை குறைத்துள்ளது. ஸ்பெயின் இதற்கு மாற்று வழியை காட்டுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம், எரிவாயு மற்றும் மின்சாரத்தின் தொடர்பை அந்த நாடு நிறுத்திவிட்டது. இந்தியாவின் எரிசக்தி மாற்றப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அது இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை
அமைப்பு மாற்றத்தை நோக்கி செயல்படுங்கள்
இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்னெடுப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடாது. மாறாக, அதிகரித்துவரும் புவிசார் அரசியல் நிலைத்தன்மை மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, 2010-ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து சூரிய மற்றும் காற்றாலைத் திறனைத் தீவிரமாக அதிகரிக்க இந்தியா எடுத்த முடிவு இப்போது தொலைநோக்குடையதாகத் தெரிகிறது. ஆனால், மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு, திறனை உருவாக்குவதை கடந்து, அமைப்பு முறையை மாற்றுவதை நோக்கிய நகர்வு முக்கியமானதாகும்.
இதன் பொருள் சேமிப்பு உள்கட்டமைப்பு, மின்கட்டமைப்பு நவீனமயமாக்கல், மின்பரிமாற்ற இணைப்பு மற்றும் இடைப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை அதிக அளவில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்ட சந்தை வழிமுறைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும். மேலும், நிலக்கரியின் தொடர்ச்சி என்பது கொள்கை சார்ந்த தோல்வி அல்லது நிறுவன மந்தநிலை மட்டுமல்ல என்பதை அங்கீகரிப்பதும் முக்கியமான நடவடிக்கையாகும். தற்போதைய நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாத ஒரு நிலைப்படுத்தும் பணியை நிலக்கரி மின்கட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறது.
எனவே, இந்தியாவின் இன்றைய ஆற்றல் சவால் என்பது வெறும் அதிகமான பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமல்ல. மின் உற்பத்தியில், புதைபடிவ எரிபொருள்களுக்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்தக்கூடிய ஒரு மின்சார அமைப்பை உருவாக்குவதே முக்கிய சவாலாகும். அது நிகழும் வரை, ஒவ்வொரு புவிசார் அரசியல் நெருக்கடியும் மற்றும் உலகளாவிய எரிசக்தி விலை அதிகரிப்பும், இந்தியாவின் பசுமை மாற்றம் இன்னும் நிலக்கரியைச் சார்ந்தே இயங்குகிறது என்பதை தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.
ஆஷி குப்தா புது டெல்லியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் இணை ஆய்வாளராக உள்ளார். நவீன் குமார் புது டெல்லியில் உள்ள சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் இணை ஆய்வாளராக உள்ளார்.
Originallink:
India’s green transition still runs on coal.