கட்டாய ஒப்புதல்: தேசத்துரோகம் குறித்து…

தேசத்துரோக சட்டம் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.


இந்திய அரசு, இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு 124A-ன்கீழ் குறியிடப்பட்ட காலனித்துவ கால தேசத்துரோகக் குற்ற வழக்கு, எதிர்ப்புகளை அடக்குவதற்கான ஒரு கருவியாக அடிக்கடி பயன்படுத்தி வருகிறது. மே 2022-ல், எஸ்.ஜி. வொம்பட்கெரே  vs இந்திய யூனியன் வழக்கில், உச்சநீதிமன்றம், மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் புதிய முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வதிலிருந்தும், பிரிவு 124A-ன் கீழ் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்தும் விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டது. அதே நேரத்தில், ஒன்றிய அரசு அந்த விதியை "மறுபரிசீலனை" செய்வதாகக் கூறியது. 2024-ல் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) நடைமுறைக்கு வந்தபோது, நாடாளுமன்றம் பிரிவு 124A-க்கு பதிலாக பிரிவு 152-ஐ கொண்டு வந்து, குறைந்தபட்ச தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தியது. அதன் பின்னர்  தேசத்துரோகத்திற்கு ஒரு புதிய பெயர் சூட்டப்பட்டது. பிப்ரவரி 2026-ல், தலைமை நீதிபதி சூர்ய காந்த், 2022-ல் இந்தச் சட்டப்பிரிவை மறுஆய்வு செய்வதாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதி நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டார். நீதிமன்றங்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பது போலவும், அதே நேரத்தில் நாடு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை எளிதாக்குவது போலவும், மே 21, 2026 அன்று, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், பிரிவு 124A தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து பெறப்படும் இத்தகைய ஒப்புதல், பலமான சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் இல்லாதபட்சத்தில் கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஏனெனில், சிறையில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் ஒரே மாற்று வழி முடிவில்லாத காலதாமதம் மட்டுமே. உண்மையில், அவர்கள் இரண்டு கடினமான தெரிவுகளுக்கு இடையே ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.


உண்மையில், அரசியலமைப்புச் சட்ட சவால் நிலுவையில் இருந்தபோது, 2022-ஆம் ஆண்டு தடையாணை பிரிவு 124A-ன் செயல்பாட்டை நிறுத்தி வைத்ததால், மறுப்பு நீண்ட கால தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில், விசாரணைக்கு ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபரின் சம்மதம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பது தெளிவாக இல்லை. எஸ்.ஜி. வோம்பட்கெரே வழக்கும், தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பிணை கோருவதற்கு வழிவகை செய்தது. முடக்கி வைகப்பட்ட விசாரணைகளுக்கு, நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதை விட விடுதலை வழங்குதே முக்கிய தீர்வாக இருந்தது. மே மாத விளக்கம் இதற்கு முற்றிலும் மாறான திசையில் செல்கிறது. மேலும், சமீபத்தில் சையத் இஃப்திகார் அன்ட்ராபி வழக்கில் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்திய “பிணை தான் விதி” என்ற கொள்கைக்கும் இது முரணாக உள்ளது. நீதிமன்றம் விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தை பாதுகாக்க விரும்பியிருந்தால், வழக்குகளைத் தொடர அனுமதிப்பதுடன், பிணையை ஒரு முன்கூட்டிய உரிமையாகவும் கருதியிருக்க வேண்டும். 2022-ஆம் ஆண்டின் தடை உத்தரவு, தேசத் துரோக குற்றச்சாட்டின் காரணமாக கருத்துச் சுதந்திரத்தின்மீது ஏற்பட்ட அச்ச உணர்வை நீக்குவதற்காகவும் கொண்டுவரப்பட்டது. இப்போது, பணக்காரர்கள் அல்லது அரசியல் செல்வாக்குள்ள குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் நீண்டகால வழக்குப் போராட்டத்தின் மூலம் பிணை பெற்று சிறைக்கு வெளியே இருக்க முடியும். அதே நேரத்தில், பிணை பெற முடியாத ஏழை கைதிகள், குறைந்தபட்சம் ஒரு தீர்ப்பைப் பெற வேண்டுமென்ற நோக்கில் விசாரணைக்கு சம்மதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன் விளைவாக, தனிநபர் சுதந்திரம் சட்டக் கொள்கைகளின் அடிப்படையில் இல்லாமல், வழக்கை நடத்தும் பொருளாதார திறனைப் பொறுத்து மாறக்கூடும். இறுதியாக, அரசுக்கு தெரிந்திருந்தும், அரசியலமைப்புச் சட்டரீதியாக சவாலுக்குள்ளான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள்  எந்த விதமான மாற்றமும் இன்றி நீண்ட காலம் நிலுவையில் இருக்கலாம். அதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்ற சூழல் உருவானால் தீய நோக்கத்துடன் செயல்படும் அரசு அமைப்புகளுக்கு அந்த சட்டப்பூர்வ சந்தேகத்தை விரைவாக தீர்க்காமல் தாமதப்படுத்த ஒரு தவறான ஊக்கமாக மாறுகிறது. தேசத்துரோகம் ஒரு குற்றவியல் குற்றமாக அரசியலமைப்புரீதியாக நிலைத்திருக்கக்கூடியதா என்பதை ஒருமுறைக்கு ஒருமுறை தீர்மானிப்பதற்குப் பதிலாக, நீதிமன்றம் அந்தப் பொறுப்பைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது சுமத்திவிட்டு, தனது கடமையைச் செய்ய மறுத்துவிட்டது.


Original link:

Coerced consent: On sedition.


Share: