சாந்தி சட்டத்தில் (SHANTI Act) சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், வெளிநாட்டு அணு உலை உற்பத்தியாளர்களும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்களும் பத்தாண்டு காலமாக அளித்து வந்த அழுத்தத்தின் விளைவாகும்.
இந்தியாவின் புதிய அணுசக்திச் சட்டத்திற்கு எதிராக, விசாரித்து வரும் ஒரு அரசியலமைப்புச் சவாலை, உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மே 19) அன்று “மிகவும் நுட்பமான சட்டமன்றக் கொள்கைப் பிரச்சினை” (very sensitive legislative policy issue) என்று விவரித்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, அணு விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது குறித்து நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஒரு சட்டப்பூர்வ உச்சவரம்பு கட்டுப்படுத்த முடியுமா என்பதைத் தெளிவுபடுத்துவதாக மனுதாரர்களுக்கு உறுதியளித்தது.
அரசியலமைப்பை மீறி, “இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியை நிலையாகப் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (சாந்தி) சட்டம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI) Act), தனியார் துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க அனுமதிப்பதோடு, இந்த நிறுவனங்களின் பொறுப்பை மிகக் குறைந்த அளவில் நிர்ணயிக்கிறது மற்றும் விநியோகர்களுக்கு எந்தப் பொறுப்பிலிருந்தும் விலக்கு அளித்துள்ளது” என்பதால், இந்த விதிகள் அரசியலமைப்பை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் தான் விரும்பும் எந்தக் கொள்கையையும் உருவாக்கலாம். ஆனால், கொள்கையின் பெயரில் குடிமக்களின் சட்டப்பிரிவு 21 உரிமைகளை அது தியாகம் செய்ய முடியாது, என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நீதிபதிகள் அமர்விடம் கூறினார்.
அணுசக்திப் பொறுப்பு எவ்வாறு செயல்படுகிறது? மற்றும் அது எவ்வாறு மாறியது?
சாந்தி சட்டத்திற்கு (SHANTI Act) முன்பு, இந்தியாவின் அணுசக்திப் பொறுப்புக் கட்டமைப்பு-2010 ஆம் ஆண்டின் அணுசக்திச் சேதத்திற்கான குடிமைப் பொறுப்புச் சட்டத்தை (Civil Liability for Nuclear Damage Act) அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தச் சட்டம், தவறு யார் செய்தவர் என்ற அடிப்படையில் ஒரு முறையை நிறுவியது. அணுசக்தி விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அலட்சியத்தை நிரூபிக்கத் தேவையில்லை, சேதத்தை மட்டும் நிரூபித்தால் போதுமானது.
இந்தச் சட்டத்தின்படி, அணுமின் நிலையத்தை இயக்குபவர் பொறுப்பாவார். மேலும், பெரிய அணு உலைகளுக்கு, ஒவ்வொரு இயக்குபவருக்குமான பொறுப்பு உச்சவரம்பு ரூ. 1,500 கோடியாகவும், அதனுடன் "முந்நூறு மில்லியன் சிறப்பு வரைதல் உரிமங்களுக்கு நிகரான ரூபாய் அல்லது மத்திய அரசு அறிவிப்பின் மூலம் குறிப்பிடும் அத்தகைய அதிகத் தொகையும்" அடங்கும்.
2010-ம் ஆண்டு சட்டத்தில் பிரிவு 17(b)-ம் சேர்க்கப்பட்டிருந்தது. இது, உற்பத்தியாளர் குறைபாடுள்ள உபகரணங்களை வழங்கியதன் அடிப்படையில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்கிய நிறுவனம் அந்தத் தொகையை விநியோகர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில், விநியோகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமையை நிறுவனர்களுக்கு வழங்கியது. மேலும், இந்த விதிமுறையானது "வெளிப்படையான அல்லது மறைமுகமான குறைபாடுகள் கொண்ட உபகரணங்கள் அல்லது பொருட்களின் வழங்கல் அல்லது தரம் குறைந்த சேவைகளையும்" உள்ளடக்கியது.
உற்பத்தியாளர்கள் தாங்கள் உருவாக்கிய தயாரிப்புகளுக்கு சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கச் செய்த வழிமுறை இதுவாகும்.
சாந்தி சட்டம்-2010 ஆம் ஆண்டின் சட்டத்தை ரத்து செய்தது. பிரிவு 11-ன் கீழ், அணுசக்தி சேதத்திற்கு அதை செயல்படுத்துபவர் பொறுப்பாவார். ஆனால் பிரிவு 13 ஆனது, இரண்டாவது அட்டவணையுடன் சேர்த்துப் பார்க்கும்போது, அந்தப் பொறுப்பை அணு உலையின் அளவைப் பொறுத்துப் பிரிக்கிறது.
எரிபொருள் சுழற்சி வசதிகள் மற்றும் அணு உலைப் பொருள் போக்குவரத்தை ஆகியவையை உள்ளடக்கிய, 150 மெகாவாட் வரையிலான வெப்ப ஆற்றல் கொண்ட ஒரு அணு உலைக்கு, நிறுவனரின் அதிகபட்சப் பொறுப்பு ரூ.100 கோடியாகும். 150 மெகாவாட்டிற்கும் 750 மெகாவாட்டிற்கும் இடைப்பட்ட அணு உலைகளுக்கு ரூ.300 கோடி விதிக்கப்படுகிறது. 3,600 மெகாவாட்டிற்கும் அதிகமான மிகப்பெரிய அணு உலைகளுக்கு மட்டுமே அதிகபட்சமான ரூ.3,000 கோடி விதிக்கப்படுகிறது. நிறுவனரின் பொறுப்புப் பங்கு தீர்ந்துவிட்டால், மொத்த சிறப்பு வரைதல் உரிமைகள் (Special Drawing Rights (SDR)) உச்சவரம்பு வரையிலான மீதமுள்ள தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனப் பிரிவு 14-ன் படி தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு மேல், யாருக்கும் எதிராக எந்தக் கோரிக்கையும் வைக்க முடியாது.
விநியோகர்களுக்கு எதிரான தீர்வு நடவடிக்கைகளை நிர்வகிக்கும் பிரிவு 16, அந்த உரிமையை இரண்டு சூழ்நிலைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒன்று, ஒரு ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருக்கும்போது, அல்லது "அணுசக்தி சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன்" செயல்பட்ட ஒருவரால் அந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்கும்போது.
புதிய கட்டமைப்பின்கீழ், வடிவமைப்பு குறைபாடுகள், உற்பத்தி சார்ந்த தோல்விகள் மற்றும் தரம் குறைந்த பாகங்கள் ஆகியவை மட்டும் விநியோகர்களுக்கு தானாகவே பொறுப்புடைமையாக்குவதில்லை. ஒரு விநியோகர் ஏதேனும் பொறுப்பை எதிர்கொள்கிறாரா என்பது, கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகச் சார்ந்துள்ளது. இதில் பழைய பிரிவு 17(b) நீக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கும் விநியோகர்களுக்கும் ஏன் பாதுகாப்பு வழங்கப்பட்டது?
சாந்தி சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், வெளிநாட்டு அணு உலை உற்பத்தியாளர்களும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்களும் பத்தாண்டு காலமாக அளித்து வந்த அழுத்தத்தின் விளைவாகும்.
இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின்போது 2010-ம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வேளையில், அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அணு உலை நிறுவனங்கள், பிரிவு 17(b)-ன்கீழ் உள்ள தீர்வு காணும் உரிமை இந்தியாவை ஒரு ஈடுபாடற்ற சந்தையாக ஆக்குகிறது என்று வாதிட்டன. இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பு, விநியோகர்களின் பொறுப்புக்கு வரம்பு விதிக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இந்த அழுத்தம் இருந்தபோதிலும், அந்த விதிமுறை 2010-ஆம் ஆண்டு சட்டத்தில் நீடித்தது. இருப்பினும், சாந்தி சட்டம் பின்னர் இந்த சிக்கலை விநியோகர்களுக்கு சாதகமாக தீர்த்து வைத்தது.
சாந்தியின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் அறிக்கையில், அரசாங்கம் இதை ஒரு பொருளாதாரத் தேவையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது. அதை அடைவதற்காக, தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்றும், அந்த மூலதனத்தைக் கொண்டுவர ஒரு "நடைமுறைக்கு உகந்த குடிமைப் பொறுப்பு" (pragmatic civil liability) கட்டமைப்பு தேவை என்றும் அரசாங்கம் தீர்மானித்தது. இந்தப் பொறுப்புக் கட்டமைப்பு, நிறுவனர்களுக்கான வரம்புகள், விநியோகர்களுக்குச் சட்டப்பூர்வமான பொறுப்பு ஏதுமில்லை மற்றும் எஞ்சிய பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்வது ஆகியவை அந்தப் பங்களிப்பிற்கான விலையாகும்.
அரசியலமைப்பு சவால்
இந்த மனு, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின்கீழ் சாந்தி சட்டத்தை எதிர்த்து சவால் விடுகிறது. மேலும், அச்சட்டத்தின் பொறுப்புக் கட்டமைப்பு, உச்சநீதிமன்றம் ஏற்கனவே விட்டுக்கொடுக்க முடியாதவை என அறிவித்த உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் வாதிடுகிறது.
மேலும், சட்டப்பிரிவு 21 தொடர்பான வாதம் இரண்டு வழிகளில் அமைகிறது. முதலாவது, 1987-ம் ஆண்டு ஸ்ரீராம் ஓலியம் கேஸ் வழக்கில் (Shriram Oleum Gas case) வகுக்கப்பட்ட முழுப் பொறுப்புக் கோட்பாடு ஆகும். அந்தத் தீர்ப்பின்படி, அபாயகரமான அல்லது இயல்பாகவே ஆபத்தான ஒரு செயலில் ஈடுபடும் நிறுவனம், "தவறு, அலட்சியம் அல்லது உரிய கவனம் செலுத்தாத நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அதிலிருந்து எழும் அனைத்து சேதங்களையும் ஈடுசெய்ய முழுப் பொறுப்புடையது" என்று கூறப்பட்டது.
சாந்தி சட்டமானது “பொறுப்புகளுக்கு மாயையான உச்சவரம்புகளை விதிக்கிறது. சில சூழ்நிலைகளில் நிறுவனர்களின் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கிறது மற்றும் விநியோகரின் பொறுப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கிறது” என்றும், நீதிமன்றம் ஒரு அரசியலமைப்பு கடமை என அறிவித்ததை நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் குறைக்க முடியாது என்றும் அந்த மனு வாதிடுகிறது.
இரண்டாவது, சட்டப்பிரிவு-21-ன் கீழ் உள்ள 'மாசுபடுத்துபவரே செலவை ஏற்க வேண்டும்' என்ற கொள்கை தொடர்பானது. இக்கொள்கையை, இந்திய சுற்றுச்சூழல்-சட்ட நடவடிக்கை மன்றம்-1996 (Indian Council for Enviro-Legal Action) மூலம் நீதிமன்றம் வாழ்வதற்கான உரிமையுடன் இணைத்தது. இக்கொள்கையின்படி, பாதிப்பை ஏற்படுத்தியவரே அதற்கான செலவை ஏற்கவேண்டும். சாந்தி சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தின் பொறுப்பு முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டவுடன், மீதமுள்ள செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. அதன் பிறகு அந்தச் செலவு வரி செலுத்துவோர் மீது சுமத்தப்படுகிறது. இந்த மனு, இதை "தனியார் அல்லது வணிக இலாபத்தை நோக்கமாகக் கொண்ட அணுசக்தி நடவடிக்கையின் நிதிச் சுமையை பொதுமக்கள்மீது மாற்றுவது" என்று விவரிக்கிறது. மேலும் அந்தப் பரிமாற்றத்திற்கு நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது என்றும் வாதிடுகிறது.
பிரிவு 14-இன் மீதான இந்த சவால், இரண்டாவது அட்டவணையின் கட்டமைப்பைக் குறிவைக்கிறது. இந்த அட்டவணை, அணு உலையின் அளவைப் பொறுத்து நிறுவனரின் பொறுப்பைப் பிரித்து, சிறிய அணு உலைகளுக்கு ரூ. 100 கோடி வரை குறைந்தபட்ச உச்சவரம்புகளை நிர்ணயிக்கிறது. இந்த உச்சவரம்புகள், ஒரு அணுசக்தி விபத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவோடு எந்தவிதமான பகுத்தறிவு ரீதியான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று அந்த மனு வாதிடுகிறது. அபாயகரமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையில் தன்னிச்சையாக விதிக்கப்படும் உச்சவரம்புகள், பிரிவு 14-இன் கீழ் உள்ள நியாயத்தன்மை சோதனையில் தோல்வியடைகின்றன என்றும் அந்த மனு வாதிடுகிறது.
பிரிவு 19(1)(a)-ன் சவால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறி, அணுசக்தி தகவல்களை கட்டுப்படுத்தப்பட்டதாக வகைப்படுத்தவும், எந்த வடிவத்திலும் அதன் வெளியீட்டைத் தடை செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு 39-ஐ இலக்காகக் கொண்டுள்ளது.
தகவல் பெறும் உரிமை என்பது அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவிலிருந்து பெறப்படும் ஒரு அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கக்கூடிய விபத்துகளை ஏற்படுத்தும் வசதிகள் பற்றிய தகவல்களை அடக்குவதற்கான ஒரு முழுமையான அதிகாரம் அரசியலமைப்புச் சட்ட ஆய்வில் நிலைத்து நிற்க முடியாது என்று இந்த மனு வாதிடுகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அர்த்தமுள்ள எந்தவொரு இழப்பீட்டுக் கோரிக்கையையும் முன்வைப்பதற்கு அந்தத் தகவல்களை அணுகுவதே முன்நிபந்தனையாகும்.
விசாரணையின்போது, ஒரு தனியார் நிறுவனத்தின் பொறுப்பு வரம்பை நிர்ணயிப்பது என அரசு தனது கொள்கையின் ஒரு பகுதியாக முடிவெடுக்கும்போது, அரசின் அந்த அகநிலை சார்ந்த கொள்கை முடிவை கேள்விக்குள்ளாக்குவதற்கு நீதிமன்றம் இல்லை என்று நீதிபதி பாக்ஜி குறிப்பிட்டார்.
இந்தியத் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் கவலையை இன்னும் குறுகிய கண்ணோட்டத்தில் முன்வைத்தார். அதாவது, பொறுப்பு வரம்புகள் இருக்க வேண்டுமா என்பது இங்குள்ள பிரச்சினையல்ல, மாறாக, இழப்பீடு வழங்குவதற்கான நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவற்றால் கட்டுப்படுத்த முடியுமா என்பதே இங்குள்ள உண்மையான பிரச்சினையாகும்.
இச்சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த இழப்பீட்டு வரம்பு (அணுசக்தி நிலையத்தை இயக்குபவர் மற்றும் அரசு ஆகிய இருவரின் பொறுப்புகளையும் சேர்த்து), ₹4,000 கோடிக்கும் குறைவாகவே உள்ளது என்று மூத்த வழக்கறிஞர் பூஷன் சுட்டிக்காட்டினார். நீதிமன்றம் இதைவிட அதிகமாக வழங்கினால், அதைச் செலுத்துவதற்கு சட்டத்தில் எந்த வழிமுறையும் இல்லை.
பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் என்ன கோரலாம்?
சாந்தி சட்டத்தின்கீழ், அணுசக்தி விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழப்பு அல்லது தனிப்பட்ட காயம், சொத்து சேதம், அரசாங்கம் அறிவித்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செலவுகள் மற்றும் விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் செலவுகள் ஆகியவற்றுக்கு இழப்பீடு கோரலாம். கோரிக்கைகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உரிமைகோரல் ஆணையரிடம் அல்லது பரந்த அளவிலான சேதங்கள் ஏற்பட்டால் அணுசக்தி சேத உரிமைகோரல் ஆணையத்திடம் (Nuclear Damage Claims Commission) தாக்கல் செய்யப்படுகின்றன. உரிமையியல் நீதிமன்றங்களுக்கு இதில் அதிகார வரம்பு இல்லை.
இந்த இழப்பீட்டு உரிமை நடைமுறையில் உண்மையில் எவ்வளவு மதிப்புடையது என்பதை நிதி வரம்புகள் தீர்மானிக்கின்றன. நிறுவனரின் பொறுப்பு, சிறிய அணு உலைகளுக்கு ரூ. 100 கோடியிலிருந்து மிகப்பெரிய அணு உலைகளுக்கு ரூ. 3,000 கோடி வரை உள்ளது. அதற்கு மேல் உள்ள தொகையை, மொத்தமாக சுமார் ரூ. 3,900 கோடி வரை அரசாங்கம் ஈடுசெய்கிறது. இந்த மனு, அந்தத் தொகையை வரலாற்றுப் பதிவுகளுடன் ஒப்பிடுகிறது. அதாவது, 1980-ம் ஆண்டு டாலர் மதிப்பில் மூன்று மைல் தீவின் (Three Mile Island disaster) கட்டுமானச் செலவு 970 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும்; செர்னோபில்லின் செலவு 235 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 700 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும்; ஃபுகுஷிமாவின் செலவு தோராயமாக 440 முதல் 445 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும் இருந்தது. சாந்தி சட்டத்தின் வரம்பு "ஏறக்குறைய ஆயிரம் மடங்கு" குறைவாக இருப்பதாக அந்த மனு குறிப்பிடுகிறது.
கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான கால வரம்புகள் மற்றொரு பிரச்சினையாகும். பிரிவு-67 இன்படி, சம்பவம் நடந்த தேதியிலிருந்து, “சொத்து சேதம் ஏற்பட்டால் பத்து ஆண்டுகளுக்கும்”, “தனிநபருக்கு தனிப்பட்ட காயம் ஏற்பட்டால் இருபது ஆண்டுகளுக்கும்” இழப்பீடு கோரும் உரிமை காலாவதியாகிறது.
கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் புற்றுநோய்கள், மரபணு பாதிப்புகள் மற்றும் பிறவிக் குறைபாடுகள், கதிர்வீச்சுக்கு ஆளான பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தோன்றக்கூடும். மேலும், அந்தக் காலக்கட்டத்திற்குள் அவற்றைக் கண்டறிய முடியாமல் போகலாம்.
2010-ம் ஆண்டு சட்டத்தின் 35-ம் பிரிவு, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிப்பேராணை அதிகார வரம்பை இறுதி முயற்சியாக வெளிப்படையாகப் பாதுகாத்தது. சாந்தி சட்டத்தின் 81-ம் பிரிவு உரிமையியல் நீதிமன்றங்களைத் தடை செய்கிறது மற்றும் 39-ம் பிரிவு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறி, அணுசக்தித் தகவல்களைக் கட்டுப்படுத்தப்பட்டவையாக வகைப்படுத்தவும், அவற்றை எந்த வடிவத்திலும் வெளியிடுவதைத் தடை செய்யவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இதனால், என்ன தவறு நடந்தது என்பதை நிலைநாட்டத் தேவையான பதிவுகளை அணுக முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் தவிக்கின்றனர்.
"இழப்பீட்டை நிர்ணயிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டரீதியான இழப்பீட்டு உச்சவரம்புகள் கட்டுப்படுத்தாது" என்ற தலைமை நீதிபதியின் உறுதிமொழியில்தான் தற்போதைக்கு இந்த விவகாரம் நிலை கொண்டுள்ளது. அந்த அதிகாரம் எவ்வாறு, யாருக்கு எதிராக, மற்றும் எந்த வழிமுறையின் மூலம் பயன்படுத்தப்படும் என்பதைத்தான் நீதிமன்றம் ஜூலை மாதம் முடிவு செய்ய வேண்டும்.
Original link:
Why SHANTI Act’s nuclear liability limits are under Supreme Court scrutiny?.