இந்தியப் பொருளாதாரம் சிறந்த காலகட்டத்தை நோக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் அந்தச் சூழல் உருவாகவில்லை. -உதித் மிஸ்ரா

 

தனது வாராந்திர “Graphs, Data, Perspectives” எனும் கட்டுரையில், பழைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகள் இன்னும் முக்கியமானவை என்று உதித் மிஸ்ரா கூறுகிறார். ஏனெனில், புதிய மொத்த  உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையானது இந்தியாவின் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவை உண்மையில் குறைத்துக் காட்டியுள்ளதாகக் குறிபிட்டுள்ளார்.


        பொருளாதாரத்தில் ‘Goldilocks period’ (அல்லது Goldilocks economy) என்பது, பொருளாதாரம் "இன்னும் கொஞ்சம் சரியாக" (just right) இருக்கும் ஒரு சிறந்த காலகட்டத்தைக் குறிக்கிறது. இது குழந்தைக் கதையான Goldilocks and the Three Bears-லிருந்து வந்த பெயர். இது "மிகவும் சூடாகவும் இல்லை, மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லை — சரியாக இருக்கிறது" என்ற நிலையாகும். இத்தகைய காலம் பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுவாக பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. 


கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய நிதிநிலைத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது, இந்தியப் பொருளாதாரம் ஒரு "கோல்டிலாக்ஸ் காலக்கட்டத்தில்" (Goldilocks period) இருப்பதாகப் பலர் நம்பினர். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதனை விவரித்திருந்தார். "கோல்டிலாக்ஸ் காலம்" என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் மிகச்சரியான நிலையில் இருப்பதைக் குறிக்கும். அதாவது, நிலையான வளர்ச்சி, குறைவான பணவீக்கம் மற்றும் குறைவான வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைத் தடையின்றிப் பெற்றிருக்கும் ஒரு சிறந்தகாலமாகும்.


அதன் பிறகு, நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.


முதலாவதாக, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் (GDP) கணக்கிடும் முறையை மாற்றியது; இதற்காக 2022–23-ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாக (Base Year) பயன்படுத்தியது. இதன் மூலம், 2011–12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட பழையமுறை, இந்தியப் பொருளாதாரத்தின் உண்மைநிலை அளவைவிட அதிகமாகக் காட்டியிருந்தது  தெரியவந்தது.


அதைத் தொடர்ந்து, ஈரானில் அமெரிக்கா நடத்திய போர் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது போன்ற காரணங்கள் சிக்கல்களை மேலும் அதிகரித்தன. கடந்த வாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியாவைவிட முன்னேறிச் சென்றன.

ஈரானில் மோதல் தொடர்ந்து வருவதால், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்காக ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக மேற்கொள்ளப்படும் இறக்குமதியை பெரிதும் நம்பியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.


உண்மையிலேயே இந்தியா ஒரு பொற்காலத்தை (Goldilocks moment) நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததா? போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவின் வளர்ச்சி போதுமானதாக இருந்ததா? அப்படி இருந்திருந்தால், அது எவ்வளவு வேகமான வளர்ச்சியாக இருந்தது?


சிந்திக்க வைக்கும் ஒரு கசப்பான உண்மை


பழைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகளை நாம் கவனித்தால் (அதில் கடந்த கால விவரங்கள் உள்ளதால்), இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, உண்மை நிலையானது சிந்திக்க வைப்பதாகவே உள்ளது.




இந்த அட்டவணை, குறிப்பிட்ட சில முக்கிய ஆண்டுகளுக்கான பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (நடப்பு விலையில் - Nominal GDP) மற்றும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டது - Real GDP) ஆகியவற்றைக் காட்டுகிறது.



இந்த வரைபடமானது, கடந்த 12 ஆண்டுகால (2014-லிருந்து), கடந்த 7 ஆண்டுகால (2019-லிருந்து), மற்றும் கடந்த 22 ஆண்டுகால (2004-லிருந்து) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (Compounded Annual Growth Rate (CAGR)) வழங்குகிறது.


இதன் இரண்டு முக்கியமான சாராம்சங்கள் பின்வருமாறு:


ஒன்று, கடந்த 12 ஆண்டுகளில் (ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2026 வரை) பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Nominal GDP) கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) ஆண்டுக்கு 10%-க்கும் சற்றே அதிகமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த 22 ஆண்டுகளில் இது சுமார் 12.3%-ஆக இருந்தது. இது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் காலப்போக்கில் குறைந்து வருவதையும், அந்த மந்தநிலை மேலும் மோசமடைந்து வருவதையும் காட்டுகிறது. குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு வெறும் 9.5% என்ற விகிதத்தில் மட்டுமே அதிகரித்துள்ளது.


இரண்டாவதாக, பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சியைப் பார்த்தால், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா ஆண்டுக்கு 6.2% என்ற அளவிலேயே மிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது கடந்த 22 ஆண்டுகால சராசரி வளர்ச்சியைவிடக் குறைவானதாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி ஆண்டுக்கு 5.5%-க்கும் குறைவாகவே இருந்துள்ளது.


சுருக்கமாகச் சொன்னால், கடந்த 12 ஆண்டுகளில் பதிவான 6%-க்கும் சற்று அதிகமான மற்றும் கடந்த 7 ஆண்டுகளில் பதிவான 5.5%-க்கும் குறைவான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி விகிதம், அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு போதுமானதல்ல என்று தரவுகள் தெரிவிக்கின்றன.




தீவிரமாக ஆராய வேண்டும்


2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்த பிறகு வந்த ஆண்டுகளை மட்டும் நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது. அந்த ஆண்டுகளில் காணப்பட்ட அதிகப்படியான வளர்ச்சி விகிதங்கள் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அவை பெரும்பாலும் 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினால் உருவான 'குறைந்த அடிப்படை' (low base effect) காரணமாகவே நிகழ்ந்தவை ஆகும்.


எனவே, நீண்டகால வளர்ச்சிப் போக்குகளைக் கவனிப்பது மிகவும் முக்கியம்; ஏனெனில் அவற்றைப் புறக்கணிப்பது பொதுமக்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் தவறாக வழிநடத்தக்கூடும். உதாரணமாக, கடந்த 2-3 ஆண்டுகளில் காணப்படும் வலுவான வளர்ச்சி, உண்மையாக இல்லாவிட்டாலும் கூட, ஒருவேளை மிகச் சிறப்பானது போலத் தோன்றலாம் என்கின்றனர்.


கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 5.5% கூட அதிகரிக்கவில்லை என்றால், கொள்கை வகுப்பாளர்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும், உண்மையான வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான சீர்திருத்தங்களையும் தீவிரமாக ஆராய வேண்டும். இந்தியாவால் 6% வளர்ச்சியைக்கூடத் தக்கவைக்க முடியவில்லை என்றால், நிறுவனங்களின் வருவாய் ஏன் குறைவாக இருக்கிறது என்பதும், வெளிநாட்டு நேரடி முதலீடு (Net Foreign Direct Investment (Net FDI)) ஏன் எதிர்மறையாக மாறி, உலகளாவிய முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.


இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு, வெளிநாட்டு மூலதன முதலீடுகள் (Foreign Capital Inflows) குறைவாக வருவதும் ஒரு முக்கியமான காரணமாகும். மற்ற நாடுகளின் பணத்திற்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்து வரும் நிலையிலும், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக ஏன் தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.


பழைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) புள்ளிவிவரங்களின் தரவுகள் மிகவும் முக்கியமானவை ஆகும்.  ஏனெனில், புதிய புள்ளிவிவரக் கணக்கீட்டு முறை இந்தியாவின் பொருளாதார அளவை முன்பு மதிப்பிட்டதைவிடக் குறைத்துக் காட்டியுள்ளது. எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் பொருளாதாரம் முன்பு கருதப்பட்டதைவிட இப்போது சிறியதாகக் கருதப்படுகிறது.

Original link:

The Indian economy’s goldilocks scenario that wasn’t.



Share:

H-1B நுழைவு அனுமதி குறித்த விரிவான புதிய சட்ட மசோதா, எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? -விதிஷா குண்டமல்லா

 தற்போதைய நிலையில் உள்ள இந்த மசோதா, தகுதியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் குடியேற்ற முறையையே முழுமையாக மாற்றக்கூடும் என்று குடியேற்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இது சட்டமாக மாறினால், இந்தியர்களை இது பெரிய அளவில் பாதிக்கக்கூடும் என்கின்றனர். 


பல ஆண்டுகளாக, இந்திய மாணவர்களும் பணியாளர்களும் அமெரிக்காவிற்குச் செல்வதற்கு ஒரு பொதுவான முறையைப் பின்பற்றி வருகின்றனர். முதலில் கல்வி பயிலுவதற்காக F-1 நுழைவு அனுமதியைப் (F-1 Visa) பெற்று அங்கு செல்வது, படிப்பு முடிந்ததும் விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (Optional Practical Training) திட்டத்தின்கீழ் பணிபுரிவது, அதனைத் தொடர்ந்து H-1B நுழைவு அனுமதி (H-1B Visa) என்ற தற்காலிகப் பணியாளர் முறைக்கு மாறுவது, இறுதியாக நிரந்தரக் குடியுரிமை அட்டை பெறுவதற்காகக் காத்திருப்பது என இந்த வரிசை முறையையே பின்பற்றுகின்றனர்.


இன்று, இந்தியர்களே ‘மாணவர் நுழைவு அனுமதி’ (Student Visa) வைத்திருப்பவர்களிலும் மற்றும் H-1B நுழைவு அனுமதி பெறுபவர்களிலும் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். இருப்பினும், ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எலி கிரேன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மசோதா, இந்த செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.


இந்த மசோதா எதனை முன்மொழிகிறது, மேலும் வழக்கறிஞர்கள் ஏன் இதனை முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று கூறுகிறார்கள்?


2026-ஆம் ஆண்டின் எச்-1பி நுழைவு அனுமதி முறைகேடு தடுப்புச் சட்டம்" (End H-1B Visa Abuse Act of 2026) என்று அழைக்கப்படும் இந்த முன்மொழிவு, புதிய எச்-1பி (H-1B) நுழைவு அனுமதி வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப் பரிந்துரைக்கிறது. மேலும், ஆண்டு நுழைவு அனுமதி வரம்பை 25,000-ஆகக் குறைக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை 200,000 டாலராக (சுமார் 1.6 கோடி ரூபாய்) நிர்ணயிக்கவும், விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்தை நிறுத்தவும் மற்றும் நிரந்தரக் குடியுரிமை அட்டை  (Green Card) பெறும் முறையைத் தடுக்கவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. குடியேற்ற வழக்கறிஞர்களின் கருத்துப்படி, இந்தச் சட்டம் தற்போதைய நிலையில் அமல்படுத்தப்பட்டால், அது தகுதியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் குடியேற்ற முறையையே முற்றிலும் முடக்கிவிடும் என்று கூறுகின்றனர்.


கடந்த காலங்களில், பெரும்பாலான குடியேற்ற மசோதாக்கள் (Immigration Bills) நுழைவு அனுமதி உச்சவரம்புகள் (Visa Caps), ஊதியங்கள் அல்லது முதலாளிகளுக்கான விதிகள் போன்ற ஒன்று அல்லது இரண்டு அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தின. ஆனால், இந்தத் திட்டம் முற்றிலும் மாறுபட்டது.  ஏனெனில், இது ஒட்டுமொத்த குடியேற்ற முறையையும் ஒரேநேரத்தில் மாற்றியமைக்க முயல்கிறது.

வாஷிங்டன் மாகாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் ராஜீவ் கன்னா  கூறுகையில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரம் நம்பியிருக்கும் "திறமையான பணியாளர் விநியோகச் சங்கிலியை" முற்றிலும் சிதைத்துவிடும் என்று தெரிவித்தார்.


டல்லாஸைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் கூறுகையில், தற்போதைய H-1B (தற்காலிகப் பணியாளர் நுழைவு இசைவு) நுழைவு அனுமதி முறையானது 1990-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றார். இன்றைய குடியேற்ற விவாதங்கள் பலவும், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் உலகளாவிய இடப்பெயர்வு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப இந்த நுழைவு அனுமதி முறை இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்ற கருத்திலிருந்தே எழுகின்றன. அந்த வகையில், இந்த மசோதாவானது குடியேற்றச் சட்டத்தில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் தேவை என்கிற கோரிக்கையை வெளிப்படுத்துகிறது.

கிரேனின் மசோதா தனது கலவையான அணுகுமுறையின் காரணமாக தனித்து நிற்கிறது. தற்போதைய குடியேற்ற அமைப்பை உடனடியாக அகற்றுவதற்குப் பதிலாக, இந்த மசோதா ஒரு தற்காலிக இடைநிறுத்தத்தையும், அதைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பையும் பரிந்துரைக்கிறது. அதே நேரத்தில், இது மற்ற பெரும்பாலான முன்மொழிவுகளைவிட ஒருபடி மேலே சென்று, விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி, நிரந்தரக் குடியுரிமை அட்டைகள் (Green Cards) மற்றும் சார்ந்திருப்பவர்களையும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.


இதனை ஒரு பேச்சுவார்த்தை தந்திரமாகவே கன்னா கருதுகிறார். சட்டமியற்றுபவர்கள் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்மொழிவதன் மூலம் விவாதத்தின் போக்கை மாற்றுகிறார்கள். இதன் விளைவாக, ஒப்பீட்டளவில் குறைவான கடுமையான மாற்றங்கள் கூட மக்களுக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்திய மாணவர்களுக்கும், H-1B நுழைவு அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன ?


அரசியல் ரீதியாக மக்களிடம் கொண்டு செல்லப்படும் கருத்துக்களுக்கும், உண்மையில் சட்டமாக மாற்றப்படுபவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிக அவசியம்.

இத்தகைய திட்டங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட வாக்காளர் குழுக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை சட்டமாக நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் கொண்டு வரப்படுவதில்லை என்று ஹூஸ்டனைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞர் ராகுல் ரெட்டி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், பெரும்பாலான குடியேற்றச் சட்டங்கள் நிறைவேற அமெரிக்க செனட் சபையில் 60 வாக்குகள் தேவை, ஆனால் தற்போதைய சூழலில் அத்தனை வாக்குகளைப் பெறுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.


டல்லாஸைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், இந்த மசோதாவை ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். சமீபகாலமாக H-1B நுழைவு அனுமதி நடைமுறைகளைக் கட்டுப்படுத்த அல்லது மாற்றியமைக்க பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இந்தத் திட்டங்களின் முக்கியத்துவம் என்பது அதன் கொள்கைகளைப் பற்றியது மட்டுமல்ல, அதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கத்தைப் பற்றியதுமாகும். அதாவது பல அரசியல்வாதிகள் இந்த H-1b திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது.


உதாரணமாக, அமெரிக்கத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் ஸ்டீப் கொண்டு வந்த 'எக்ஸைல் சட்டம்' (EXILE Act), H-1B நுழைவு இசைவு முறையையே முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கோரியது.


கோட்பாட்டு ரீதியாக, இதற்குப் பதில் மிகவும் எளிமையானது: ஆம், காங்கிரஸ் கட்சிக்கு அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் உள்ளது. ஒரு நுழைவு அனுமதி (Visa) வகையை முடக்க நாடாளுமன்றம் முடிவு செய்தால், அதை அரசு நிர்வாகம் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று ரெட்டி குறிப்பிட்டார். இதற்கு ஆதாரமாக, குறிப்பிட்ட சில நாடுகளைப் பாதிக்கும் தற்போதைய கட்டுப்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.


ஆனால், நடைமுறையில் இதன் விளைவுகள் மிகவும் சிக்கலானவை. ஒருவேளை இந்தத் தடை விதிக்கப்பட்டால், H-1B நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது வேறு முறைக்கு மாற வேண்டும் என்று அவர் கூறினார். பலரைப் பொறுத்தவரை, இது ஒரு மாணவர் நுழைவு அனுமதி முறைக்கு மாறுவதையோ அல்லது அமெரிக்காவைவிட்டே முற்றிலும் வெளியேறுவதையோ குறிக்கலாம் என்கின்றனர். 


டல்லாஸைச் சேர்ந்த வழக்கறிஞர், இந்த சட்ட மசோதாவை அதன் தற்போதைய வடிவத்தை மட்டும் வைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், நாட்டின் பொருளாதார தாக்கம், தொழிலாளர் தேவைகள் மற்றும் அரசியல் உடன்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதன் இறுதி வடிவம் வேறுபடும் என்றும் குறிப்பிட்டார்.


வேலைவாய்ப்பு அடிப்படையிலான நிரந்தரக் குடியுரிமை அட்டையைக் (Green Card) கோரி நீண்டகாலமாக காத்திருக்கும் இந்தியர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கன்னா  சுட்டிக்காட்டினார். இதில் சிலர் 10 முதல் 20 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இவர்களுக்கான 'தகுதிநிலை மாற்றத்தை' (Status Adjustment) தடுக்கும் விதிகள் அமல்படுத்தப்பட்டால், அவர்கள் சட்டப்பூர்வமாகப் பெற்று வந்த பலன்களை இழக்க நேரிடும் என்றும் இது கடுமையான அரசியலமைப்புச் சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.


அமெரிக்காவில் விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்தை ரத்து செய்வதும், நிரந்தரக் குடியுரிமை அட்டை (Green Cards) வழங்குவதைத் தடுப்பதும் இந்திய மாணவர்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?


இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, இந்த சட்ட மசோதாவின் மிக முக்கியமான பகுதி, தற்போது, விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) என்பது கல்விக்கும் வேலைக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்படுகிறது. இது பட்டதாரிகள் தங்களது படிப்பை முடித்த பிறகு, H-1B நுழைவு இசைவு சீட்டைப் பெற முயற்சிக்கும் அதே வேளையில், பணி அனுபவத்தைப் பெறவும் அனுமதிக்கிறது.


இது இந்தியர்களை மிகவும் மோசமாகப் பாதிக்கும் என்று ரெட்டி கூறினார். அதேசமயம்,  விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) மற்றும் நிரந்தரக் குடியுரிமைக்கான வழிமுறை இல்லையென்றால், மாணவர்கள் நீண்டகாலம் தங்குவதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு கல்வி முறையில் முதலீடு செய்யுமாறு அமெரிக்கா கூறுவதுபோல் ஆகிவிடும் என்று கன்னா வாதிட்டார்.


அதே திறமையுள்ள மாணவர்களை ஈர்க்க முயற்சிக்கும் கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனி போன்ற பிற நாடுகளைக் கருத்தில் கொள்வதே இயல்பான எதிர்வினையாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அமெரிக்கக் கல்வியின் அதிகப்படியான செலவை எதிர்கொள்ளும் இந்தியக் குடும்பங்களுக்கு, இந்த நிலைமை அவர்களின் முடிவை மாற்றுகிறது. கல்வி நிறுவனத்தில் இடம் கிடைப்பது மட்டுமே இப்போது முக்கியமல்ல; படிப்பை முடித்த பிறகு என்ன நடக்கும் என்பதே இப்போது முதன்மையானதாக மாறியுள்ளது.


சம்பள விதிகள் மற்றும் ஊதிய அடிப்படையிலான முறை இந்தியப் பணியாளர்களை எவ்வாறு பாதிக்கும்?


இந்த மசோதா, தற்போது நடைமுறையில் உள்ள குலுக்கல் முறைக்கு (lottery) பதிலாக, குறைந்தபட்சம் 200,000 டாலர் ஊதியம் பெறும் முறையை அடிப்படையாகக் கொண்ட புதிய அமைப்பைக் கொண்டுவரப் பரிந்துரைக்கிறது.


ஆரம்பத்தில், இந்த முடிவு அதிகத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு (Highly skilled workers) சாதகமாக இருப்பது போல் தோன்றும். ஆனால், இது பெரிய அளவிலான சமமின்மையை உருவாக்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். டல்லாஸைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குறிப்பிடுகையில், ஊதிய அளவுகள் ஏற்கனவே மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வளவு அதிகமான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது கல்வித்துறை, இடைநிலை பணிகள் மற்றும் பல மருத்துவப் பணிகளில் உள்ள தொழிலாளர்கள் உட்பட பலரை இந்தப் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கும் என்றும் தெரிவித்தார்.


இந்த அமைப்பானது, மிகவும் திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அதிக வசதி படைத்த முதலாளிகளின் ஆதரவைப் பெற்றவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் என்று கன்னா வாதிட்டார். உதாரணமாக, ஒரு புத்தொழில் நிறுவனம் அதிகத் திறமை கொண்ட பொறியாளர் ஒருவருக்கு 130,000 டாலர் சம்பளம் தருவதாக முன்வந்தாலும், ஒரு பெரிய நிதி நிறுவனம் 300,000 டாலர் சம்பளம் தருவதாகக் கூறினால், அந்தப் பொறியாளர் பெரிய நிறுவனத்தையே தேர்வு செய்வார். இதில் உண்மையான தேவை எது என்பது முக்கியமல்ல, அதிக பணம் வழங்கும் நிறுவனமே வெற்றி பெறும் நிலை உருவாகும் என்கின்றனர்.


இந்தியத் தொழில்முறை வல்லுநர்களுக்கு, குறிப்பாகத் தங்கள் பணியின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு, இது அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தைக்கான வாய்ப்புகளைப் பெருமளவு குறைக்கும். இது அவர்களின் திறமைக் குறைபாட்டினால் அல்ல, மாறாகப் பல்வேறு துறைகளில் நிலவும் ஊதிய அளவுகள் வெவ்வேறாக இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.


இந்த மசோதா உண்மையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்குமா அல்லது அந்த வேலைகளை அமெரிக்காவிற்கு வெளியேயுள்ள நாடுகளுக்கு அளிக்குமா?


நிறுவனங்கள் தகுதியான அமெரிக்கத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கின்றன என்ற இந்த மசோதாவின் முக்கிய கருத்தை கன்னா மறுக்கிறார். நிறுவனங்கள் உண்மையில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், அதனால் அவை நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படும் என்றும் அவர் கூறுகிறார். அமெரிக்காவில் தகுந்த திறமையாளர்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் பணிகளை பெங்களூரு, டொராண்டோ, லண்டன் அல்லது சிங்கப்பூர் போன்ற திறமையாளர்கள் எளிதாகக் கிடைக்கக்கூடிய இடங்களுக்கு மாற்றிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.


டல்லாஸை மையமாகக் கொண்டு செயல்படும் வழக்கறிஞர், இந்த மாற்றத்தை பரந்த பொருளாதாரக் கவலைகளுடன் தொடர்புபடுத்திப் பேசினார். செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence (AI)) வளர்ச்சி மற்றும் சமீபகால வேலை இழப்புகள் காரணமாக, H-1B  நுழைவு அனுமதி முறை வேலையின்மையை அதிகரிக்கின்றன என்று பலர் நம்புவதாகவும், ஆனால் இதற்குத் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இரண்டாவது முறையாக டிரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு, குடியேற்றக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியப் பணியாளர்கள் மற்றும் H-1B நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் சோதனைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் இனவாதக் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிறப்புரிமை குடியுரிமைக்கு எதிராக வாதிடும்போது, இந்தியாவையும் சீனாவையும் "நரகங்கள்" என்று விமர்சித்த ஒரு சமூக ஆர்வலரின் வீடியோவை டிரம்ப் பகிர்ந்திருந்தார். இந்த கருத்துகள் போதிய விவரம் இல்லாதவை, பொருத்தமற்றவை மற்றும் மிகவும் தரம் தாழ்ந்தவை என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs) கண்டனம் தெரிவித்துள்ளது.


டிரம்ப் ஆதரவாளர்கள் உட்பட H-1B நுழைவு அனுமதி முறையை எதிர்ப்பவர்கள், இந்த நுழைவு அனுமதி முறை அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகக் கூறுவது மட்டுமல்லாமல், நுழைவு அனுமதி நடைமுறைகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவது குறித்தும் தங்களது கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.


இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா?


நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதில் தெளிவான அரசியலமைப்புச் சிக்கல் இருந்தால் ஒழிய, நீதிமன்றங்கள் பொதுவாக அதில் தலையிடாது என்று ரெட்டி விளக்கினார். அரசின் நிர்வாக முடிவுகளை எளிதில் எதிர்த்து கேள்வி கேட்க முடியும், ஆனால் இயற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்வது என்பது மிகவும் கடினமான  விஷயமாகும்.


இருப்பினும், இதில் உள்ள சாத்தியமான பலவீனங்களை கன்னா சுட்டிக்காட்டினார். ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைப் பாதிக்கும் வகையில் பின்னோக்கிய தேதியிட்டுச் சட்டங்களைக் கொண்டு வருவது, தகுந்த சட்ட நடைமுறை உரிமைகளை மீறுவதாக அமையலாம் என்று அவர் கூறினார். மேலும், சார்ந்திருப்பவர்கள் மீதான கட்டுப்பாடுகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற சம பாதுகாப்பு கோட்பாடுகளின்கீழ் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.


இந்த மசோதா தற்போதுள்ள வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், அது உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் பல நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும் என்று கன்னா குறிப்பிட்டார். 


H-1B மற்றும் விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் குறைந்தால், இந்தியர்களுக்கு எஞ்சியிருக்கும் நடைமுறைக்குச் சாத்தியமான வழிகள் என்ன?


இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவும், சீரற்ற நிலையிலுமே இருக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


ரெட்டி O-1 நுழைவு அனுமதி (O-1 Visa) குறித்துக் குறிப்பிடுகையில், இது மிகச்சிறந்த திறமை கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுபவை என்று கூறினார். அதாவது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளைப் பெற்றவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர்கள் அல்லது ஒரு துறையில் பெரும் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, இது மிகவும் குறைந்த அளவிலான சாதனையாளர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. மாறாக, பெரும்பாலான மாணவர்கள் அல்லது H-1B நுழைவு அனுமதி கோருவோருக்கு இது ஒரு நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றாக இருக்காது என்பதையும் தெரிவித்துள்ளார்.


மற்றொரு வழி என்னவென்றால், மாணவர் நுழைவு அனுமதி முறை (Student Visa) மூலம் மீண்டும் அந்நாட்டிற்குச் சென்று பிறகு முயற்சிப்பதாகும்; ஆனால், விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) நீக்கப்பட்டால், இந்த முயற்சி நிச்சயமற்றதாகிவிடும். மேலும் அவர் கூறுகையில், இது போன்ற கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டால், சுமார் 90% மக்கள் தகுதி பெற வாய்ப்பில்லை என்றும், எனவே மற்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளைத் தேடுவது சாத்தியமான வழிமுறைகளாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


சர்வதேச அளவில் திறமையான பணியாளர்களுக்கான போட்டி அதிகரித்து வருவதாகவும், அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் தங்களை சிறந்த மாற்று இடங்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதாகவும் கன்னா சுட்டிக்காட்டியுள்ளார்.


Original link:

A sweeping new H-1B Bill has raised alarm. What does it mean for Indian students and working professionals?


Share:

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தபின், அவர்கள் தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்வார்களா? -விகாஸ் பதக்

மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இப்போது இந்த உறுப்பினர்கள் எதிர்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்ன?


ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சதா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, ஸ்வாதி மாலிவால் மற்றும் விக்ரம்ஜித் சாஹ்னி ஆகிய ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள்  கடந்த வெள்ளிக்கிழமையன்று பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தனர். இவர்களின் இந்த முடிவால், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் வெறும் மூன்று உறுப்பினர்களாகக் குறைந்துள்ளது. இப்போது இந்த உறுப்பினர்களும் ஆம் ஆத்மி  கட்சியினரும் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் யாவை ?

ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை எதிர்கொள்வார்களா?


PRS சட்ட ஆய்வாளர் சக்ஷு ராய் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் கூறுகையில், கடந்தகால உதாரணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.


ஆம் ஆத்மி கட்சி இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், மாநிலங்களவை தலைவர், தாம் தலைமை வகிக்கும் அவையை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைந்துவிட்டதால், அவர்கள் இனி பாஜக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என்றும், தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளமாட்டர்கள் என்று தலைவர் அறிவிக்கக்கூடும் என்று ராய் தெரிவித்தார். வெங்கையா நாயுடு தலைவராக இருந்தபோது, ​​தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சி.எம். ரமேஷ், கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடன் அக்கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அந்த இணைப்பிற்குத் அவைத் தலைவரும் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்.


இருப்பினும், முன்னாள் மக்களவை பொதுச்செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி இதனை மறுக்கிறார். ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் மட்டுமல்ல, பல்வேறு சட்டமன்றங்களிலும் உறுப்பினர்கள் உள்ளனர். 1985-ஆம் ஆண்டின் 52-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டு, 2003-ஆம் ஆண்டின் 91-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால் வலுப்படுத்தப்பட்ட 10-வது அட்டவணையின் பத்தி 4-ஐ அவர் சுட்டிக்காட்டினார். அதன் படி,  ஒரு அவையில்  அவரது கட்சி மற்றொரு அரசியல் கட்சியுடன் இணைந்தால் அவர் மற்றும் அவரது கட்சியின் பிற உறுப்பினர்களும் புதிய கட்சியின் உறுப்பினர்களாகவோ அல்லது அந்த இணைப்பால் உருவான புதிய அரசியல் கட்சியுடன் இணைந்து, அதன் ஒரு பகுதியாக மாறினால் மட்டுமே தகுதி நீக்கத்திலிருந்து தப்ப முடியும் என்று விளக்கினார்.


அதாவது, அரவிந்த் கெஜரிவாலே முன்வந்து ஆம் ஆத்மி கட்சியை பாஜகவுடன் இணைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆச்சாரி கூறுகிறார். ஆம் ஆத்மி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் கட்சி மாறியுள்ளதால், மாநிலங்களவை தலைவரிடம் தற்போது எந்தவொரு உறுப்பினரும் தகுதி நீக்க மனுவைச் சமர்ப்பிக்கலாம் என்றும், தலைவர் ஒன்று அந்த 'இணைப்பை' அங்கீகரிக்கலாம் அல்லது அந்த ஏழு ஆம் ஆத்மி உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த முடிவை, எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் ஆச்சாரி தெரிவித்தார்.


சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கட்சியைப் பிளவுபடுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தபோது, ​​சட்டமன்றப் பெரும்பான்மையைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையம்  உண்மையான கட்சிச் சின்னங்களைப் பிரிந்து சென்ற குழுக்களுக்கே வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின்கீழ் உள்ள 4-வது பத்திக்கு முரணானது என்று ஆச்சாரி கருதுகிறார்.



ராகவ் சதா பாஜகவுடன் இணைந்துவிட்டதாகக் கூறப்படுவதால், தேர்தல் ஆணையம் (EC) முடிவு செய்வதற்கு ஆம் ஆத்மியில் (AAP) இப்போது பிளவுகள் ஏதுமில்லை என்று ஆச்சாரி கூறினார். இருப்பினும், மாநிலங்களவைத் தலைவர் தீர்ப்பு வழங்கும் வரை, கட்சி மாறிய அந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். பத்தாவது அட்டவணையின் (10th Schedule) பிரிவு 2(1)(a)-ஐ அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர், அவரைத் தேர்தலில் நிறுத்திய கட்சியைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்.


இருப்பினும், மாநிலங்களவைத் தலைவரின் தீர்ப்பு நிலுவையில் இருக்கும்போது, ​​ஏதேனும் ஒரு சட்ட விவகாரத்தில் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்தால், அவர்கள் சட்டப்படி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்களுடைய 7 வாக்குகள் பாஜகவின் 106 வாக்குகள் எண்ணிக்கையுடன் சேர்க்கப்படும். மாநிலங்கவையில் உள்ள நடைமுறையிலிருந்து  மாறுபட்டு, ஒரு விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின்  வாக்குகளின் எண்ணிக்கை இப்போது 148-ஆக இருக்கும். மேலும், இது ஒரு இணைப்பு என்று தலைவர் அங்கீகரித்தால், பாஜகவின் இடங்களின் எண்ணிக்கை 113 ஆக உயரும்.


தகுதிநீக்க மனு நிலுவையில் இருக்கும்போது இது ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்குகிறது என்றும் ஆச்சாரி குறிப்பிட்டார். 10-வது அட்டவணைப்படி, கட்சி உத்தரவை மீறிச் செயல்படுவதும் தகுதி நீக்கத்திற்கு (disqualification petition) வழிவகுக்கும். ஆம் ஆத்மி கட்சி இன்னும் சதா குழுவினருக்கு கொறடா உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும், அவர்கள் அதைத் தொடர்ந்து புறக்கணித்தால், அதன் அடிப்படையிலும் தகுதி நீக்க மனுக்கள் மீது தலைவர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.


மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவான உறுப்பினர்கள் கட்சி மாறியிருந்தால் என்னவாகியிருக்கும்?


அத்தகைய சூழலில், ஒரு  சட்டமன்றத்திலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். கட்சி மாறிய அதிருப்தியாளர் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு, சபையின் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் மாநிலங்களவைத் தலைவரிடம் மனுவைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.


இருப்பினும், கட்சி மாறுவதற்காகவோ அல்லது கட்சியின் உத்தரவை மீறியதற்காகவோ ஒரு உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க, அவைத் தலைவருக்கு 10-வது அட்டவணை எந்தவொரு கால வரம்பையும் நிர்ணயிக்கவில்லை.





அவைத்தலைவரின் தீர்ப்பின் மீதான நீதித்துறை மறுஆய்வும், அவைத்தலைவர் தனது தீர்ப்பை வழங்கிய பின்னரே நடைபெறுகிறது. இதனால், தகுதிநீக்கம் செய்யப்படக்கூடிய ஒரு உறுப்பினர் சபையின் உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், சபாநாயகர் ஒரு மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். சபாநாயகர்கள் ஒரு  மனுவின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தபோதிலும், நடைமுறையில் இந்தத் தாமதம் நீடிக்கிறது..


கட்சித் தாவல் தடைச் சட்டம் (anti-defection law) என்ன சொல்கிறது?


2003-ஆம் ஆண்டின் 91-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இரண்டு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.


முதலாவதாக, தகுதிநீக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு, அவையில் உள்ள ஒரு கட்சியின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பேர் மற்றொரு கட்சியில் இணைந்தால் மட்டுமே, அது ஒரு இணைப்பு எனக் கருதப்படும் என்றும் கூறியது. அந்த எண்ணிக்கை, அவையில் அந்தக்கட்சியின் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவாக இருந்தால், கட்சி மாறும் உறுப்பினர்கள் தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.


இரண்டாவதாக, அமைச்சரவையின் அளவை மக்களவை அல்லது மாநிலச் சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கையில் அதிகபட்சம் 15%-ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தியது. மிகச்சிறிய மாநிலங்களில் குறைந்தபட்சம் 12 அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்றும் வரையறுத்தது.


1985-ஆம் ஆண்டின் 52-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 10-வது அட்டவணையை, இந்தச் சட்டம் மேலும் வலுப்படுத்தியது. இருப்பினும், 1985-ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த 10-வது அட்டவணையானது, ஒரு அவையில் உள்ள கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பிரிந்து செல்வதை (split) சட்டபூர்வமான நடவடிக்கையாக அங்கீகரித்திருந்தது. இந்த விதி அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், 91-வது திருத்தம் அந்த விதியை நீக்கி, கட்சித் தாவலைத் தடுக்கும் விதமாக, கட்சி இணைப்பிற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்டாயம் தேவை என்ற கடுமையான நிபந்தனையை விதித்தது.


கட்சித் தாவல் தடைச் சட்டம் முதலில் எதற்காக இயற்றப்பட்டது?


1960-கள் மற்றும் 1970-களில் நடந்த பெரிய கட்சித் தாவல்கள் காரணமாக இது  முக்கியமானதாகக் கருதப்பட்டது. அடிக்கடி கட்சிகள் மாறுவதைக் குறிக்க, "ராம் வந்தார், ராம் போய்விட்டார்' (Aaya Ram Gaya Ram) என்ற சொற்றொடர் 1960-களின் பிற்பகுதியில் வழக்கத்திற்கு வந்தது. PRS சட்ட ஆய்வகத்தின் தகவல்படி,, "1967-ஆம் ஆண்டில் ஹரியானா சட்டமன்ற உறுப்பினர் கயா லால் ஒரே நாளில் மூன்று முறை தனது கட்சியை மாற்றினார்.


‘International Journal for Legal Research and Analysis’ என்கிற இதழில் ரித்விக் ஜெயின் எழுதிய ஒரு கட்டுரையின்படி, “1967 மற்றும் 1972-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 4-வது மற்றும் 5-வது பொதுத் தேர்தல்களுக்கு இடையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றங்களின்  4,000 உறுப்பினர்களிடையே, 2,000 கட்சித் தாவல் மற்றும் எதிர்-கட்சித் தாவல் வழக்குகள் பதிவாகியுள்ளன. மார்ச் 1971-ஆம் ஆண்டில் இறுதியில், ஏறக்குறைய 50% சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியிருந்தனர். அவர்களில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை, சிலர் ஐந்து முறை வரை கூட கட்சி மாறியிருந்தனர்.


கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் எதிர்மறை அம்சங்கள் என்னென்ன?


குதிரை பேரங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட கட்சித் தாவலுக்கு எதிரான விதிகள், சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களின் கட்சி நிலைப்பாட்டிற்கு கட்டுப்பட்டவர்களாக மாற்றியுள்ளன. ஏனெனில், ஒரு விஷயத்தில் கட்சியின் உத்தரவை மீறினால் அவர்கள் தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். இதன் விளைவாக, மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி அல்லது மாநிலத்தின் நலன்களுக்காகச் செயல்படும் சுதந்திரத்தை இழந்து, கட்சித் தலைவர்களின் முடிவுகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுபவர்களாக மாறிவிட்டனர். இது அரசியல் கட்சிகளுக்குள் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Original link:

Will AAP Rajya Sabha MPs face disqualification after joining BJP?


Share:

நடப்புக் கணக்கு, மூலதனக் கணக்கு மற்றும் ரூபாயின் இயக்கவியல் செயல்முறை பற்றி… - குஷ்பூ குமாரி

 மேற்கு ஆசிய நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளும், வலுவிழந்து வரும் ரூபாயும் இந்தியாவின் வரவுச்செலவு சமநிலை  (BoP) மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வரவுச்செலவு சமநிலை (BoP) என்றால் என்ன? அதன் முக்கியக் கூறுகள் யாவை?


தற்போதைய செய்தி :


இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, வரவுச்செலவு சமநிலை (BoP) விவரங்கள் ஒரு முக்கிய மாற்றத்தைக் காட்டுகின்றன: ஏப்ரல்-டிசம்பர் 2024 காலகட்டத்தில் $36.6 பில்லியனகவும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம்) இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit (CAD)), ஏப்ரல்-டிசம்பர் 2025 காலகட்டத்தில் $30.1 பில்லியன்களாகவோ அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதமாகவோ  குறைந்துள்ளது.


வரவுச்செலவு சமநிலை (BoP), அதன் கூறுகள் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொள்வோம். 1991-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை நெருக்கடியையும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.


முக்கிய அம்சங்கள்:


1. வரவுச்செலவு சமநிலை (Balance of Payments (BoP)) என்பது அடிப்படையில், ஒரு நாடு உலகின் பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்யும் ஒரு 'பற்று வரவு கணக்குப் பதிவேடு' (ledger) ஆகும். இந்தியர்கள் உலகின் பிற பகுதிகளுடன் வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, ​​பணம் நாட்டிற்குள்ளும் வெளியேயும் செல்கிறது.


2. நாட்டிலிருந்து எவ்வளவு பணம் வெளியேறியது என்பதையும், நாட்டிற்குள் எவ்வளவு பணம் வந்தது என்பதையும் வரவுச்செலவு சமநிலை (Balance of Payments (BoP)) காட்டுகிறது. நாட்டிற்குள் வரும் அனைத்துப் பணமும் 'நேர்மறையாகக்’ (positive) குறிக்கப்படுகிறது. நாட்டிலிருந்து வெளியேறும் அனைத்துப் பணமும் 'எதிர்மறையாகக்’ (negative) குறிக்கப்படுகிறது. அந்நியச் செலாவணிகளுக்கான தேவைக்கு எதிராக, ரூபாய்க்கான சார்புத் தேவையை (relative demand) இது துல்லியமாகப் பிரதிபலிப்பதால், வரவுச்செலவு சமநிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


3. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் புரிந்துகொள்வோம். உலகில் இந்தியா மற்றும் அமெரிக்கா என இரண்டு நாடுகள் மட்டுமே இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். ஒரு இந்தியர் அமெரிக்கப் பொருளையோ அல்லது சேவையையோ வாங்க விரும்பும்போதோ அல்லது அமெரிக்காவில் முதலீடு செய்ய விரும்பும்போதோ, அந்தப் பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்குத் தேவையான டாலர்களை முதலில் வாங்குவதற்காக, அவர் குறிப்பிட்ட அளவு ரூபாயை வழங்க வேண்டும்.


4. இறுதியில், அந்த இரண்டு நாணயங்களுக்கான சார்புத் தேவையின் அடிப்படையில் அவற்றின் மாற்று விகிதம் (exchange rate) தீர்மானிக்கப்படும். அமெரிக்கர்கள் ரூபாயை விரும்புவதைவிட, இந்தியர்கள் டாலர்களை அதிகம் விரும்பினால், ரூபாய்க்கு எதிரான டாலரின் 'விலை' அல்லது மாற்று விகிதம் உயரும்.


5. வரவுச்செலவு சமநிலையின் (Balance of Payments (BoP)) கூறுகள்: இது இரண்டு முக்கிய 'கணக்குகளைக்' கொண்டுள்ளது. அவை நடப்புக் கணக்கு (Current Account) மற்றும் மூலதனக் கணக்கு (Capital Account) ஆகும். 


(i) நடப்புக் கணக்கு: இது 'தற்போதைய' சூழலில் நடைபெறும்  பரிவர்த்தனைகளைப் பதிவு செய்கிறது. நடப்புக் கணக்கில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன: அவை பொருட்களின் வர்த்தகம் (trade of goods) மற்றும் சேவைகளின் வர்த்தகம் (trade of services) ஆகும். 


(அ) வர்த்தக அல்லது சரக்குக் கணக்கு (merchandise account) என்பது பொருட்களின் (கார்கள், கோதுமை, கருவிகள் போன்றவை) ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைக் குறிக்கிறது. இது 'வர்த்தக இருப்பை' நிர்ணயிக்கிறது.  நமது  நாடு ஏற்றுமதி செய்வதைவிட அதிகப் பொருட்களை இறக்குமதி செய்வதால், வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இது ஒரு எதிர்மறைக் குறியீட்டால் வெளிக்காட்டப்படுகிறது.


வர்த்தகப் பற்றாக்குறை (trade deficit) என்பது ஒரு நாடு விற்பனை செய்வதைவிட (ஏற்றுமதி) அதிகமாக வாங்கும் (இறக்குமதி செய்யும்) ஒரு நிலையாகும். வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இந்தியா ஏற்றுமதியிலிருந்து  பயணம்  ஈட்டுவதை விட இறக்குமதிக்காக அதிக டாலர்களை வாங்க வேண்டியிருக்கும். டாலர்களுக்கான தேவை அதிகரிப்பது ரூபாயின்மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் மதிப்பை இழக்கச் செய்கிறது.


(ஆ) சேவைகளின் வர்த்தகம் (Trade of services): இது 'கண்ணுக்கு தெரியாத' வர்த்தகத்தை கொண்டுள்ளது. ஏனெனில், இது பொருட்களின் வர்த்தகத்தைப் போல பொதுவாக 'கண்ணுக்கு தெரியாத' சேவைகள் மற்றும் பிற பரிவர்த்தனைகளைக் குறிக்கிறது. இதில் சேவைகள் (எ.கா., வங்கி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா போன்றவை); பரிமாற்றங்கள் (எ.கா., வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது) மற்றும் வருமானங்கள் (முதலீடுகள் மூலம் ஈட்டப்படும் வருமானம் போன்றவை) அடங்கும்.


(ii) மூலதனக் கணக்கு: மூலதனக் கணக்கு (Capital Account) என்பது நடப்பு நுகர்வை விட முதலீடுகளைப் பற்றிய பரிவர்த்தனைகளை அதிகம் கொண்டுள்ளது. அவை அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI) மற்றும் அந்நிய நிறுவன முதலீடுகள் (Foreign Institutional Investments (FII)) ஆகும்.


வரவுச்செலவு சமநிலை (Balance of Payments (BoP)) = நடப்புக் கணக்கு (வர்த்தக இருப்பு + கண்ணுக்குப் புலப்படாத வர்த்தகம்) + மூலதனக் கணக்கு ஆகும்.


6. நடப்புக் கணக்கு மற்றும் மூலதனக் கணக்கைக் கழித்த பிறகு, வரவுச்செலவு சமநிலை உபரி இருக்கும்போதும், பில்லியன் கணக்கான டாலர்கள் நாட்டிற்குள் வரும்போதும், இந்திய ரிசர்வ் வங்கி இந்த டாலர்களை அதிகமாக வாங்கி அந்நிய செலாவணிக் கையிருப்பில் சேர்க்கிறது. ரிசர்வ் வங்கி இதைச் செய்யாவிட்டால், ரூபாயின் பரிமாற்ற விகிதம் உயர்ந்து, இந்தியாவின் ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையைக் குலைத்துவிடும்.


7. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஹரிஷ் தாமோதரன், இந்தியாவின் வரவுசெலவு சமநிலை (BOP) பரிவர்த்தனைகளில் ஒரு கட்டமைப்பு சார்ந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) சிக்கல் இருப்பதாக எழுதியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில், நடப்புக் கணக்கில் உபரி (ஏப்ரல்-மார்ச்) நான்கு மட்டுமே: 2001-02 ($3.4 பில்லியன்), 2002-03 ($6.3 பில்லியன்), 2003-04 ($14.1 பில்லியன்) மற்றும் 2020-21 ($23.9 பில்லியன்) இந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே கிடைத்துள்ளது. மற்ற அனைத்து ஆண்டுகளிலும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலேயே இருந்துள்ளது.


8. வரவுச்செலவு சமநிலை (BOP) சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கையில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியதில்லை. 2024-ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் $25.3 பில்லியனாக இருந்த பற்றாக்குறை, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் $15.1 பில்லியனாகக் குறைந்துள்ளது.


9. கடந்த ஓராண்டாக ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும், மேற்கு ஆசிய மோதலின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அச்சம் மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றிற்க்கு இடையே ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும், வரவுச்செலவு சமநிலை நடப்புக் கணக்கினால் ஏற்பட்டதல்ல. மாறாக, அது மூலதனக் கணக்கினால்  மட்டுமே ஏற்ப்பட்டது  என்று தாமோதரன் குறிப்பிடுகிறார்.


10. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 13, 2026 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு $709.75 பில்லிய ஆக இருந்தது. இந்தக் கையிருப்பு  12 மாதங்களுக்கும்  மேல் இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகும். இது மிகவும் திருப்திகரமான ஒரு நிலையாகக் கருதப்படுகிறது. உலகளாவிய தரநிலைகளின்படி பார்த்தால், 8 முதல் 10 மாதங்களுக்கு மேலான கையிருப்பு அளவே பொதுவாக வலுவான நிலையாகக் கருதப்படுகிறது.


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது, அந்நியச் செலாவணிச் சொத்துக்கள் (foreign currency assets (FCA)), தங்கம், சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDRs) மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தில் (International Monetary Fund (IMF)) உள்ள இருப்புப் பங்கு நிலை (reserve tranche position (RTP)) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


1991-ஆம் ஆண்டின் வரவுச்செலவு சமநிலை நெருக்கடி (BoP Crisis)


1. தற்போது மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல் சூழல், இந்திய ரூபாயின் மீதும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதும் அழுத்தம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. 1991-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை நெருக்கடிக்குப் பிறகு, நாடு இது போன்ற அழுத்தங்களை பல சூழல்களில் எதிர்கொண்டுள்ளது.


2. 1991-ஆம் ஆண்டில், வரவுச்செலவு சமநிலை நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, ​​இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும்   குறைந்துவிட்டது. இது 2 முதல் 3 வாரங்களுக்கான இறக்குமதிச் செலவுகளை ஈடுகட்ட மட்டுமே போதுமானதாக இருந்தது. அதன்பிறகு, ஆசிய நிதி நெருக்கடி, உலகளாவிய நிதி நெருக்கடி, அமெரிக்காவில் ஏற்பட்ட 'படிப்படியான குறைப்புப் பதற்ற' (Taper Tantrum) நிகழ்வு, கோவிட் பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை இந்திய ரூபாயின் மீதும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.


3. ஆகஸ்ட் 1990-ல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. இது வரவுச்செலவு சமநிலைச் சூழலை எதிர்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளியதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பைக் குறைத்தது, அதிக அளவிலான மூலதன வெளியேற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்தியா தனது கடன் கடமைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறும் (default) அபாயத்திற்கு  தள்ளியது.


4. 1991-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள், ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை நெருக்கடியானது, நாட்டின் வரவுச்செலவு சமநிலையை நிர்வகிக்கும் திறனின் மீதே நம்பிக்கையின்மை ஏற்படும் ஒரு நெருக்கடியாக உருவெடுத்தது. வளைகுடாப் போரின் காரணமாக எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தபோது, ​​1990–91 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்தச் செலுத்துநிலை நெருக்கடியின் அறிகுறிகள் தெளிவாகத் தென்படத் தொடங்கின.

5. அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தை, புதிய தொழிற்கொள்கைத் தீர்மானம், பெரும்பாலான வர்த்தக உரிமங்களை ரத்து செய்தல், நடப்புக் கணக்கில் ரூபாயின் முழுமையான மாற்றத்தக்கத்தன்மை மற்றும் நாட்டை நேரடி அயல்நாட்டு முதலீட்டிற்காகத் திறந்துவிடுதல் ஆகியவற்றை அறிவிக்க  ஏற்பட்ட நெருக்கடி கட்டாயப்படுத்தியது.


Original link:

Current account, capital account and rupee dynamics.


Share:

இந்தியாவில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் (arsenic) மற்றும் ஃபுளூரைடு (fluoride) மாசுபாட்டிற்கான முதன்மைக் காரணங்கள் யாவை? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள் :


தாமாக முன்வந்து தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) முதன்மை அமர்வானது, செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் நிலத்தடி நீர் மாசுபடுதல் பிரச்சினையை ஆராய்ந்து வருகிறது. மேலும், அது அனைத்து 28 மாநிலங்களையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளதுடன், மாவட்டங்கள், கிராமங்கள் மற்றும் வட்டாரங்கள் முழுவதும் உள்ள ஆர்சனிக் (arsenic) மற்றும் ஃபுளூரைடு (fluoride) மாசுபடுதல் குறித்த தரவுகளைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் முழுவதும் மேற்கொள்ளப்படும் தணிப்பு நடவடிக்கைகளை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (Central Ground Water Authority (CGWA)) தவறாமல் கண்காணித்து, உரியமுறையில் சரிசெய்யும் நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த பசுமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணர் உறுப்பினர்களான ஏ. செந்தில் வேல், அஃப்ரோஸ் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சரிசெய்யும் நடவடிக்கைகளைப் பதிவுசெய்து, ஏப்ரல் 17 அன்று பிறப்பித்த உத்தரவில் இந்நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் உத்தரவிட்டது.


ஆர்சனிக் கலந்த குடிநீரைக் குடிப்பது, ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகும். இது ஆர்சனிகோசிஸ் நோயை (arsenicosis disease) ஏற்படுத்துகிறது. இது, தோல் புண்கள் மற்றும் அசாதாரண தோல் நிறமாற்றம் போன்ற அறிகுறிகளுடன், நீண்டகால வெளிப்பாட்டின்போது புற்றுநோயையும்கூட இது ஏற்படுத்தக்கூடும். இதற்கிடையில், ஃபுளூரைடு (Fluoride) வெளிப்பாடு எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது.


கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ஆர்சனிக் அதிக அளவில் இருப்பதும், மத்திய, கிழக்கு மற்றும் தென், மேற்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஃபுளூரைடு அதிக அளவில் இருப்பதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் தெரியவந்துள்ளது.


நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில வாரியான தரவுகளும் ஒரு மோசமான சூழ்நிலையைக் காட்டுகின்றன. நீதிமன்ற உத்தரவில், பீகாரில் 4,709 வார்டுகளில் ஆர்சனிக்கும், 3,789 வார்டுகளில் ஃபுளூரைடும் இருப்பதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில், ஆர்சனிக் எட்டு மாவட்டங்களையும், ஃபுளூரைடு ஏழு மாவட்டங்களையும், உத்தரப் பிரதேசத்தில் தலா 16 மாவட்டங்களையும் பாதித்துள்ளன. இதேபோல், கர்நாடகாவில் 20 கிராமங்களில் ஆர்சனிக் நிலத்தடி நீரையும், 2,083 கிராமங்களில் ஃபுளூரைடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொழிற்சாலை மாசுபாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மற்றும் பாறைகள் சிதைதல், மண் அரிப்பு போன்ற இயற்கை செயல்முறைகள் ஆகியவை இந்த மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களில் அடங்கும் என்று மத்திய நீர் ஆணையம் (Central Ground Water Authority(CGWA)) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பீகார், மேற்கு வங்கம், அசாம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில், ஆர்சனிக்கின் இருப்பு முதன்மையாக கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகளில் காணப்படும் வண்டல் பாறை அமைப்புகளுடன் தொடர்புடையது என்று ஆணையம் குறிப்பிட்டிருந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியா உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீர் நுகர்வோராகும். இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 230 கன கிலோமீட்டர் நீரை உறிஞ்சி எடுக்கிறது. இந்த அளவு, உலகின் மொத்த ஆண்டு நிலத்தடி நீர் பயன்பாட்டில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானதாகும். மேலும், இந்தியாவின் குடிநீர் தேவைகளில் ஏறத்தாழ 85 சதவீதம் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன.



மத்திய நிலத்தடி நீர் வாரியமும் (Central Ground Water Board(CGWB)) மாநில அரசுகளும் இணைந்து, நாட்டின் மாறும் நிலத்தடி நீர் வளங்களை ஆண்டுதோறும் மதிப்பிடுகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 6,762 மதிப்பீட்டு அலகுகளாக (வட்டாரங்கள்/வட்டங்கள்/மண்டலங்கள்) பிரிக்கப்பட்டு இம்மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது. அவற்றின் 2025-ம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, நாட்டின் ஆண்டு நிலத்தடி நீர் மறுஊட்டம் (recharge) மொத்தம் 448.52 பில்லியன் கன மீட்டர்களாக (BCM) உள்ளது. இது 2017-ம் ஆண்டில் இருந்த 432 பில்லியன் கன மீட்டர் அளவிலிருந்து அதிகரித்த ஒன்றாகும். மேலும், அதே ஆண்டில் 247.22 பில்லியன் கன மீட்டர் அளவிலான நீர் நிலத்தடியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Original link:

What are the primary causes of arsenic and fluoride contamination in groundwater in India?


Share:

உயர்கல்வியில் உண்மையான சமத்துவ இடைவெளி (equity gap) குறித்து . . . -அனிஷ் குப்தா

 உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவமானது, மாணவர் சேர்க்கையில் உள்ள இடைவெளிகளைவிட, வேலைவாய்ப்பில் உள்ள பிரதிநிதித்துவ இடைவெளிகளால் அதிகமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) விதிமுறைகள் பெரும்பாலும் பாகுபாடு எதிர்ப்பு மற்றும் புகார்களைக் கையாளுவதிலும் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், இந்தக் கட்டமைப்பு இடைவெளிகளைப் போதுமான அளவு நிவர்த்தி செய்வதில்லை.


புதிய பல்கலைக்கழக மானியக் குழுவின் (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறைகள்-2026 (The new University Grants Commission (Promotion of Equity in Higher Education Institutions (HEIs)) Regulations), கல்வியாளர்கள் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் ஆதரவாகவும் எதிராகவும் கணிசமான விவாதங்களையும் எதிர்ப்புகளையும் தூண்டியுள்ளது. இந்த விதிகள் தெளிவற்றவை என்றும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் அவற்றின் அமலாக்கத்திற்குத் தடை விதித்திருந்தபோதிலும், இந்த விவகாரம் பல முக்கியமான கல்விசார் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக சமத்துவம், பாகுபாடு மற்றும் சாதி அடிப்படையிலான குற்றங்களின் அனுபவப்பூர்வச் சான்றுகளின் தேவை குறித்தும் இவை தொடர்புடையவையாக உள்ளது.



உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவம்


உயர்கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பல்வேறு சமூகக் குழுக்களின் பிரதிநிதித்துவம் இருப்பதே சமத்துவத்தின் மிக முக்கியமான அளவீடுகளில் ஒன்றாகும். பல்கலைக்கழக மானியக் குழுவின் 2023 ஆண்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட அட்டவணை 1-ஐப் பார்க்கும்போது, ​​மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள நான்கு முக்கியப் போக்குகள் தெரியவருகின்றன.


முதலாவதாக, பட்டியல் சாதியினர் (15%), பழங்குடியினர் (7.5%), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (27%) அரசியலமைப்புச் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, ​​அனைத்து நிலைகளிலான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளிலும் இந்த சமூகக் குழுக்களின் பங்கு குறைவாக உள்ளது. இரண்டாவதாக, கீழ்நிலைப் பணிகளைவிட உயர்நிலை வேலைவாய்ப்புகளில் இந்த இடைவெளி அதிகமாக உள்ளது. மூன்றாவதாக, வேலைவாய்ப்புகளைப் போலல்லாமல், அனைத்து சமூகக் குழுக்களுக்குமான சேர்க்கைகளில் (இளநிலை, முதுநிலை, எம்.ஃபில், மற்றும் முனைவர் பட்டம்) பிரதிநிதித்துவம், அரசியலமைப்புச் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு ஏறக்குறைய நெருக்கமாக உள்ளது. நான்காவதாக, ஊக்கமளிக்கும் விதமாக, இளநிலைப் பட்டப் படிப்பைத் தவிர, மற்ற சேர்க்கைகளில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்ட அளவை விட 1.5 முதல் 2.7 மடங்கு அதிகமாக உள்ளது. இளநிலைப் பட்டப் படிப்பில் இது சற்று குறைவாக உள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், மாணவர் சேர்க்கையைவிட வேலைவாய்ப்பில்தான் சமத்துவமின்மை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.


மாணவர் சேர்க்கைகளில் ஏற்படும் இடைவெளிகளை ஓராண்டுக்குள் நிரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இது சாத்தியமில்லை. இப்போது, இட ஒதுக்கீட்டைக் கடுமையாக அமல்படுத்தினாலும், இந்த இடைவெளியைக் குறைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஏனெனில், இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாதபோது நியமிக்கப்பட்ட பணியாளர்களின் ஓய்வைப் பொறுத்தே இந்த இடைவெளிஅமைகிறது.


உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) பாகுபாடு குறித்த தரவுகள்


உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து சமூகக் குழுக்களிடமும் பாகுபாடு தொடர்பான புகார்கள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்காததால், புறநிலை மற்றும் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு தடைபடுகிறது. இருப்பினும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒரு நாடாளுமன்றக் குழு மற்றும் உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2023-24-ஆம் ஆண்டில் 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளில் சம வாய்ப்பு மையங்கள் (Equal Opportunity Cells (EOC)) மற்றும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் மையங்களால் 378 புகார்கள் பதிவாகியுள்ளன.


சமூகக் குழுக்களின் அடிப்படையில், சம வாய்ப்பு மையங்கள் (EOC) புகார்களின் விரிவான பகுப்பாய்வு கிடைக்காததால், ஒரு முழுமையான மதிப்பீடு செய்வது கடினமாக உள்ளது. இருப்பினும், அனைத்து சம வாய்ப்பு மையங்கள் (EOC) புகார்களும் சாதி அடிப்படையிலானவை என்று வைத்துக்கொண்டாலும், அத்தகைய வழக்குகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சம் மாணவர்களுக்குச் சுமார் 3.7 ஆகவும், ஒரு கல்வி நிறுவனத்திற்குச் சுமார் 0.16 ஆகவும் உள்ளது (ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் சராசரியாக 4,000 மாணவர்கள் சேர்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்). மேலும், பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் தொடர்பான புகார்களின் தீர்வு விகிதம் 90% ஆக இருந்தது. இது ஒரு முக்கியமான மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாத அம்சமாகும்.


சாதி அடிப்படையிலான குற்றங்கள் குறித்த தேசிய குற்ற ஆவணக் காப்பகத் (NCRB) தரவுகள்


பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் குறித்த தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau(NCRB)) வெளியிடுகிறது. இந்த அமைப்பு, இந்த சமூகத்தினருக்கு எதிராக 'மற்றவர்களால்' (Others) இழைக்கப்படும் அனைத்துக் குற்றங்களையும் சாதி அடிப்படையிலான குற்றங்களாக வகைப்படுத்துகிறது. இது முழுமையாக சரியானதாக குறிப்பிடமுடியாது. மேலும், இந்தச் சமூகங்களுக்கு வெளியே உள்ள தனிநபர்களால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களை மட்டுமே தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கையிடுகிறது. அது, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களுக்குள் நிகழும் குற்றங்கள் குறித்த பிரித்தறியப்பட்ட தரவுகளையோ அல்லது பிற சமூகக் குழுக்களுக்கான ஒப்பீட்டுத் தரவுகளையோ வழங்குவதில்லை. இது ஒப்பீட்டுப் பகுப்பாய்வின் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது.


2023-ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக 'மற்றவர்களால்' இழைக்கப்படும் குற்றங்கள், பதிவுசெய்யப்பட்ட மொத்தக் குற்றங்களில் முறையே சுமார் 0.9% மற்றும் 0.2% ஆகும். இருப்பினும், தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளின் வரம்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​பல்வேறு சமூகக் குழுக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களின் பரவலானது, மக்கள்தொகையில் அவர்களின் பங்கைப் பெருமளவில் பிரதிபலிக்கிறது என்று கருதலாம்.


குற்றங்களின் பரவல் ஏறக்குறைய மக்கள்தொகைப் பங்குகளைப் பிரதிபலிக்கிறது என்று கொண்டால், ஒவ்வொரு 100 குற்றங்களிலும், பட்டியல் சாதியினர் (16.6%) மற்றும் பழங்குடியினர் (8.6%) முறையே 16.6 மற்றும் 8.6 குற்றங்களுக்குக் காரணமாக இருப்பார்கள். மீதமுள்ள 74.8 குற்றங்கள் மற்ற குழுக்களால் செய்யப்பட்டிருக்கும்.


இந்த விகிதாசாரக் கணக்கீட்டின்படி, பட்டியல் சாதி/பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவர், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகக் குற்றம் புரிவதற்கான சாத்தியக்கூறு, மற்ற குழுக்களைச் சேர்ந்த ஒருவரைக் காட்டிலும் ஏறக்குறைய 52 மடங்கு அதிகமாக உள்ளது. அதேபோல், பட்டியல் சாதி/பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவர், பழங்குடியினரைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகக் குற்றம் புரிவதற்கான சாத்தியக்கூறு, மற்ற பிரிவினரைச் சேர்ந்த ஒருவரைக் காட்டிலும் ஏறக்குறைய 125 மடங்கு அதிகமாக உள்ளது.


பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களின் பங்கு, அவர்களின் மக்கள்தொகைப் பங்கை விட அதிகமாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் நாம் கருத்தில்கொண்டால், அத்தகைய அதிகப்படியான குற்றமானது பட்டியல் சாதியினர்/பழங்குடியின சமூகங்களுக்குள் நிகழும் குற்றங்களிலும் கட்டாயம் பிரதிபலிக்கும். ஏனெனில், மற்ற பிரிவினரால் இழைக்கப்படும் குற்றங்களின் விகிதமானது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதாகவும், அறியப்பட்டதாகவும் உள்ளது.


குறைவாகப் பதிவு செய்தல் தொடர்பான பிரச்சினை


ஒரு முக்கியமான வரம்பு என்னவென்றால், மற்ற பிரிவினரால் செய்யப்படும் குற்றங்கள், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள், குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், முற்றிலும் அனுமானத்தின் அடிப்படையில், அத்தகைய குற்றங்களின் உண்மையான எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட 100 மடங்கு அதிகம் (இது ஒரு மிக அதிகப்படியான அனுமானம்) என்று வைத்துக்கொண்டாலும்கூட, மற்ற பிரிவினரால் செய்யப்படும் குற்றங்களைவிட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களால் செய்யப்படும் குற்றங்களுடன் ஒப்பிடும்போது முறையே 3.2 மற்றும் 14.3 மடங்கு அதிகமாகவே இருக்கும்.


மேலும், ஒட்டுமொத்த சராசரி விகிதம் 72.7% உடன் ஒப்பிடுகையில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் விகிதங்கள் முறையே 81.2% மற்றும் 79.5%-ஆக உள்ளன. இது, மற்ற பிரிவினரைக் காட்டிலும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நடைமுறைச் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது.


இந்த முடிவுகள் ஆச்சரியமானவை அல்ல. ஏனெனில், குற்றங்கள் பொதுவாக அருகருகே வசிக்கும் அல்லது சமூக மற்றும் புவியியல் அருகாமையில் உள்ள நபர்களிடையே நிகழ்கின்றன. இதற்கு மாறாக, சராசரியுடன் ஒப்பிடும்போது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவிற்கு எதிரான மிகக் குறைந்த குற்ற விகிதம், உண்மையான நல்லிணக்கத்தைக் காட்டிலும் சமூகப் பிரிவினையையே சுட்டிக்காட்டக்கூடும்.


விதிமுறைகளில் உள்ள சிக்கல்கள்


இந்த ஒழுங்குமுறைகள் மூன்று முக்கிய குறைபாடுகளைக் கொண்டுள்ளன. முதலாவதாக, உயர்கல்வி நிறுவனங்களில் (HEI) உள்ள முக்கியப் பிரச்சினையானது, மாணவர் சேர்க்கையிலோ அல்லது புகாரளிக்கப்பட்ட பாகுபாட்டிலோ இல்லாமல், வேலைவாய்ப்பில் (குறிப்பாகத் தலைமைப் பதவிகளில்) சமத்துவத்தை அடைவதில்தான் உள்ளது என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


இரண்டாவதாக, இந்த விதிமுறைகள் சமத்துவத்தையும் பாகுபாடு எதிர்ப்பையும் குழப்பிக்கொள்வதாகத் (confuse equity with anti-discrimination) தோன்றுகின்றன.


சமத்துவம் என்பது நியாயமான விளைவுகளை உறுதி செய்வதற்காக இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்குவதை உள்ளடக்கியது, அதேசமயம் பாகுபாடு எதிர்ப்பு என்பது, பொதுவாகப் புகார்-தீர்க்கும் வழிமுறைகள் மூலம், பாகுபாடு காட்டும் நடத்தையைக் கண்டறிந்து தண்டிப்பதில் கவனம் செலுத்துகிறது. சுவாரஸ்யமாக, தலைப்பு "சமத்துவத்தை மேம்படுத்துதல்" என்பதைக் குறிப்பிடுகிறது மற்றும் முன்னுரை சமத்துவம் மற்றும் பாகுபாட்டை ஒழித்தல் ஆகிய இரண்டையும் வலியுறுத்துகிறது, ஆனால் செயல்பாட்டு விதிகள், குறிப்பாகப் புள்ளிகள் 4 (சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான கடமை), 6 (சமத்துவ உதவி எண்), மற்றும் 7 (சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்), பெரும்பாலும் பிந்தையதற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவதாக, இந்த ஒழுங்குமுறைகள் அடையாளங்களின் அடிப்படையிலான குற்றங்களை முழுமையாக ஒழித்துவிடும் என்று கருதுவதாகத் தெரிகிறது. இது விரும்பத்தக்கதாக இருந்தாலும், ஒட்டுமொத்தக் குற்றங்களில் பரந்த அளவிலான குறைப்பு இல்லாமல் இது யதார்த்தமற்றது. மிகவும் கடுமையான நடவடிக்கைகள் சமூகப் பிரிவினையை வலுப்படுத்தும் அபாயத்தைக்கூட ஏற்படுத்தக்கூடும்.


என்ன செய்ய முடியும்?


உயர்கல்வி நிறுவனங்களில், குறிப்பாக உயர்மட்டப் பதவிகளில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வேலைவாய்ப்புப் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலம் சமத்துவத்தை மேம்படுத்துவதிலும், சமூகக் குழுக்களிடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். காலப்போக்கில், இந்தக் குழுக்களுக்கு இடையேயான தொடர்புகள் அதிகரிப்பதன் மூலம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்ற விகிதத்தை சராசரி குற்ற விகிதத்துடன் ஒன்றிணைக்க வழிவகுக்கலாம். இது ஆரம்பத்தில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, குற்றங்களைத் தனித்தனியாகக் கையாள்வதைவிட, ஒட்டுமொத்த குற்ற விகிதத்தைக் குறைப்பது, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்கவும் அவசியமாகும்.


உயர்கல்வி நிறுவனங்கள் (Higher Educational Institutions (HEI)) சமூக நெறிமுறைகளை வடிவமைப்பதால், பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை மேம்படுத்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு, குழுவாதத்தை ஊக்குவித்து, குறுகிய அல்லது அற்பமான ஆதாயங்களுக்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ள இளம் மனங்களுக்குக் கற்பிக்கும் மாணவர் அரசியலையும் கட்டுப்படுத்த வேண்டும்.


அனிஷ் குப்தா டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பொருளியல் கற்பிக்கிறார். நொய்டாவில் உள்ள IEDS-ஐச் சேர்ந்த பிரேரோனா பருவாவிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளுக்கு நூலாசிரியர் நன்றி தெரிவிக்கிறார்.


original link:

The real equity gap in higher education.


Share: