தேர்தல் முறையின் ‘சீர்திருத்தங்கள்’ (reforms) இந்திய நகரங்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையைப் (universal adult voting rights) பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
அரசியலமைப்பை உருவாக்கியவரான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், அரசியலமைப்பை முன்வைத்தபோது, “ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பதிலிருந்து, ஒரு நபருக்கு ஒரு பொருளாதார அலகு என்ற நிலைக்கு அது வழிவகுக்க வேண்டும்” (From one person, one vote, it should lead to one person, one economic unit) என்று குறிப்பிட்டார். இருப்பினும், இந்தக் கருத்து முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை, மாறாக, இது மக்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.
ஏழைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் இன, சமூக, மத சிறுபான்மையினர் ஆகியோர் மக்கள்தொகையின் பெரும்பகுதியினர் தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டுவரும் நிலையில், மக்களுக்கான முதல் மற்றும் மிக அடிப்படையான கட்டமைப்பு சார்ந்த கருவியாக 'வயது வந்தோர் வாக்குரிமை' திகழ்கிறது.
உலகளாவிய வயது வந்தோர் நகர்ப்புற உரிமம்
இவ்வுண்மையை ஏற்றுக்கொள்வது சற்று சங்கடமாகத் தோன்றலாம். இருப்பினும், இதுவே நிதர்சனம். அதாவது, கடந்த சில பத்தாண்டுகளாக நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாக்குரிமையை இழப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை.
சமகாலத்தில் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) குறித்த விவாதம், நகர்ப்புற வாக்காளர்களின் ஓரங்கட்டப்படுதலையும், நகர்ப்புற வாக்காளர்களில் பலர் தொடர்ந்து வாக்களிக்கும் வாய்ப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், “ஒரு முகவரி என்பது ஒரு ஆடம்பர வீட்டைக் குறிக்காது; மாறாக, ஒரு நபர் வசிக்கும் இடம், அது ஒரு மரத்தின் அடியிலோ அல்லது நடைபாதையிலோ இருந்தாலும் சரி, அதுவே அவருக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதாகும்” (an address did not mean a luxury home, but merely a place where the person resided, even if that was under a tree or on the pavement, ensuring they had the right to vote) என்று குறிப்பிட்டார். எனினும், வயது வந்தோர் வாக்குரிமைக்கான நிலைமையானது, பல்வேறு புறக்கணிப்பு செயல்முறைகள் மற்றும் நிர்வாகரீதியான தடைகள் மூலம் மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் ஒரு நிலையை எட்டியுள்ளது.
இந்தியாவின் நகர்ப்புறங்களில், 18 வயதுக்குட்பட்டவர்கள் மக்கள்தொகையில் சராசரியாக சுமார் 28% ஆகும். இந்த சதவீதத்தை அட்டவணையில் உள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டால், தகுதியான வாக்காளர் பட்டியலிலிருந்து ஏராளமான மக்கள் விலக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும். குடிசைப் பகுதிகளிலும் (slums) முறைசாரா குடியிருப்புகளிலும் வசிப்பவர்களில் பெரும்பாலானோரும் வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களில் அடங்குவர். உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகையில் சுமார் 40% பேர் தற்போது குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
வயது வந்தோர் வாக்குரிமைக்கு உள்ள மற்றொரு முக்கிய சவால், தேர்தல் செயல்முறையின் வாக்களிக்கும் இரகசியத்தன்மை பாதிக்கப்படுவதாகும். தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அமைப்பில், வாக்குச்சாவடி வாரியாக வாக்குகளை வெளிப்படுத்துவது, வாக்குரிமையின் இரகசியத் தன்மைக்கு ஒரு கடுமையான சவாலாக அமைகிறது. சிறிய நகரங்களில், ஒரு வாக்குச்சாவடியில் பெரும்பாலும் சில நூறு வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கும். இதன் காரணமாக, பல்வேறு மக்கள் பிரிவினர் வாக்குப்பதிவு முறைகளை தேர்தல் அமைப்பாலும் அரசியல் கட்சிகளாலும் எளிதாக ஊகித்துவிட முடியும்.
நகர்ப்புற ஏழைகள் விலக்கப்படுதல்
சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) ஏன் நகர்ப்புற ஏழைகளை மிகவும் பாதிக்கும்? பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் அமைப்புசாரா துறை தொழிலாளர்களைத் தவிர, தலித்துகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் இன, மத சிறுபான்மையினர் ஆகியோர் நகர்ப்புற இந்தியாவில் மிக அதிக அளவில் வாக்காளர் பதிவுகள் நீக்கப்பட்ட குழுக்களில் இவர்களும் அடங்குவர். இந்த செயல்முறை இன்றும் தொடர்கிறது. இது இந்தப் பிரிவினருக்கு ஒரு இரட்டைச் சுமையை உருவாக்குகிறது. ஒருபுறம், அவர்களால் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ள முடியவில்லை. மறுபுறம், ஏற்கெனவே பதிவு செய்திருந்தவர்கள்கூட இப்போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
மிகப்பெரிய அளவில் வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் நடைபெற்ற சில நகரங்களை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். பீகாரில் உள்ள பாட்னாவில், வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 16.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, மிக அதிக அளவிலான நீக்கங்கள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில், அதன் நகர்ப்புற மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் அதிக இடப்பெயர்ச்சியின் காரணமாக, சுமார் 36.67% நீக்கங்கள் காணப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோவில், சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் (SIR) பிறகு 30.88% வாக்காளர் பட்டியலில் நீக்கம் நிகழ்ந்துள்ளன. பீகாரில் உள்ள பூர்னியாவில், 2.73 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற தொழில்துறை நகரமான கான்பூரில், முக்கியமாக அமைப்புசாரா துறை தொழிலாளர்களிடையே, 25.62% பெயர்கள் நீக்கப்படுவதற்காகக் குறிக்கப்பட்டன. கொல்கத்தாவில், குல்ஷன் காலனி என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில், 90% வாக்காளர்கள் விடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. மும்பையில், 2025 சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பதிவேட்டின் கீழ், 14 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், முறைசாரா வீடுகளில் வசிக்கும் மக்களில் சுமார் 50% பேர் பதிவு செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) வாக்காளர் கணக்கெடுப்பு செயல்முறையானது மிகவும் பிரத்தியேகமானதாகவும், அதிகாரத்துவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பரவலான மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, இந்த செயல்முறை நகர்ப்புற ஏழைகளை வாக்காளர்களாகப் பதிவு செய்வதிலிருந்தே தடுப்பதாகத் தோன்றுகிறது. இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில், குடியேற்றம் என்பது நகர்ப்புற வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். இதன் காரணமாக, 2002 அல்லது 2005 ஆம் ஆண்டைச் சேர்ந்த வாக்காளர் பதிவுக்கான சான்றுகளைச் சமர்ப்பிப்பது பலருக்கும் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
தேர்ந்தெடுத்து பிரித்தல்
நகர்ப்புறங்களில் வயது வந்தோர் வாக்குரிமையைப் பெறுவதற்கான போராட்டம் ஒரு நீண்ட போராட்டமாகும். இருப்பினும், சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) மூலம், இப்போராட்டம் பின்வாங்கியுள்ளது. சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்பது வெறும் ஒரு நிர்வாக நடவடிக்கை மட்டுமல்ல, அது ஜனநாயக அடித்தளத்தின் மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதலாகும். நகர்ப்புற இந்தியாவில் மிகுந்த கவலைக்குரிய விஷயமாக இருப்பது, கடுமையான ஆவணங்கள் மற்றும் நிலையான வசிப்பிடத்திற்கான சான்றுகளை அது சார்ந்திருப்பது, உழைக்கும் வர்க்க மக்களைப் பெருமளவில் புறக்கணிக்க வழிவகுக்கிறது. வாக்காளர் தொகுதியில் தேர்ந்தெடுத்து பிரித்தல் முறை நடைபெறுகிறது. இதில், ஆளும் கட்சி நலன்களுக்குப் பொருந்தாதவர்கள் அல்லது மூலதன முதலீட்டிற்கு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர்கள் விலக்கப்படுகிறார்கள்.
டிகேந்தர் சிங் பன்வார் ஒரு எழுத்தாளர், நகர்ப்புற செயல்முறை நிபுணர், சிம்லாவின் முன்னாள் துணை மேயர் மற்றும் கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினர் ஆவார்.
Original link:
The crisis of urban electoral disenfranchisement.