H-1B நுழைவு அனுமதி குறித்த விரிவான புதிய சட்ட மசோதா, எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? -விதிஷா குண்டமல்லா

 தற்போதைய நிலையில் உள்ள இந்த மசோதா, தகுதியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் குடியேற்ற முறையையே முழுமையாக மாற்றக்கூடும் என்று குடியேற்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இது சட்டமாக மாறினால், இந்தியர்களை இது பெரிய அளவில் பாதிக்கக்கூடும் என்கின்றனர். 


பல ஆண்டுகளாக, இந்திய மாணவர்களும் பணியாளர்களும் அமெரிக்காவிற்குச் செல்வதற்கு ஒரு பொதுவான முறையைப் பின்பற்றி வருகின்றனர். முதலில் கல்வி பயிலுவதற்காக F-1 நுழைவு அனுமதியைப் (F-1 Visa) பெற்று அங்கு செல்வது, படிப்பு முடிந்ததும் விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (Optional Practical Training) திட்டத்தின்கீழ் பணிபுரிவது, அதனைத் தொடர்ந்து H-1B நுழைவு அனுமதி (H-1B Visa) என்ற தற்காலிகப் பணியாளர் முறைக்கு மாறுவது, இறுதியாக நிரந்தரக் குடியுரிமை அட்டை பெறுவதற்காகக் காத்திருப்பது என இந்த வரிசை முறையையே பின்பற்றுகின்றனர்.


இன்று, இந்தியர்களே ‘மாணவர் நுழைவு அனுமதி’ (Student Visa) வைத்திருப்பவர்களிலும் மற்றும் H-1B நுழைவு அனுமதி பெறுபவர்களிலும் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். இருப்பினும், ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எலி கிரேன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மசோதா, இந்த செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.


இந்த மசோதா எதனை முன்மொழிகிறது, மேலும் வழக்கறிஞர்கள் ஏன் இதனை முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று கூறுகிறார்கள்?


2026-ஆம் ஆண்டின் எச்-1பி நுழைவு அனுமதி முறைகேடு தடுப்புச் சட்டம்" (End H-1B Visa Abuse Act of 2026) என்று அழைக்கப்படும் இந்த முன்மொழிவு, புதிய எச்-1பி (H-1B) நுழைவு அனுமதி வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப் பரிந்துரைக்கிறது. மேலும், ஆண்டு நுழைவு அனுமதி வரம்பை 25,000-ஆகக் குறைக்கவும், குறைந்தபட்ச ஊதியத்தை 200,000 டாலராக (சுமார் 1.6 கோடி ரூபாய்) நிர்ணயிக்கவும், விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்தை நிறுத்தவும் மற்றும் நிரந்தரக் குடியுரிமை அட்டை  (Green Card) பெறும் முறையைத் தடுக்கவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. குடியேற்ற வழக்கறிஞர்களின் கருத்துப்படி, இந்தச் சட்டம் தற்போதைய நிலையில் அமல்படுத்தப்பட்டால், அது தகுதியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் குடியேற்ற முறையையே முற்றிலும் முடக்கிவிடும் என்று கூறுகின்றனர்.


கடந்த காலங்களில், பெரும்பாலான குடியேற்ற மசோதாக்கள் (Immigration Bills) நுழைவு அனுமதி உச்சவரம்புகள் (Visa Caps), ஊதியங்கள் அல்லது முதலாளிகளுக்கான விதிகள் போன்ற ஒன்று அல்லது இரண்டு அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தின. ஆனால், இந்தத் திட்டம் முற்றிலும் மாறுபட்டது.  ஏனெனில், இது ஒட்டுமொத்த குடியேற்ற முறையையும் ஒரேநேரத்தில் மாற்றியமைக்க முயல்கிறது.

வாஷிங்டன் மாகாணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் ராஜீவ் கன்னா  கூறுகையில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரம் நம்பியிருக்கும் "திறமையான பணியாளர் விநியோகச் சங்கிலியை" முற்றிலும் சிதைத்துவிடும் என்று தெரிவித்தார்.


டல்லாஸைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞர் கூறுகையில், தற்போதைய H-1B (தற்காலிகப் பணியாளர் நுழைவு இசைவு) நுழைவு அனுமதி முறையானது 1990-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றார். இன்றைய குடியேற்ற விவாதங்கள் பலவும், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் உலகளாவிய இடப்பெயர்வு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப இந்த நுழைவு அனுமதி முறை இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்ற கருத்திலிருந்தே எழுகின்றன. அந்த வகையில், இந்த மசோதாவானது குடியேற்றச் சட்டத்தில் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் தேவை என்கிற கோரிக்கையை வெளிப்படுத்துகிறது.

கிரேனின் மசோதா தனது கலவையான அணுகுமுறையின் காரணமாக தனித்து நிற்கிறது. தற்போதைய குடியேற்ற அமைப்பை உடனடியாக அகற்றுவதற்குப் பதிலாக, இந்த மசோதா ஒரு தற்காலிக இடைநிறுத்தத்தையும், அதைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பையும் பரிந்துரைக்கிறது. அதே நேரத்தில், இது மற்ற பெரும்பாலான முன்மொழிவுகளைவிட ஒருபடி மேலே சென்று, விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி, நிரந்தரக் குடியுரிமை அட்டைகள் (Green Cards) மற்றும் சார்ந்திருப்பவர்களையும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.


இதனை ஒரு பேச்சுவார்த்தை தந்திரமாகவே கன்னா கருதுகிறார். சட்டமியற்றுபவர்கள் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்மொழிவதன் மூலம் விவாதத்தின் போக்கை மாற்றுகிறார்கள். இதன் விளைவாக, ஒப்பீட்டளவில் குறைவான கடுமையான மாற்றங்கள் கூட மக்களுக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.


இந்திய மாணவர்களுக்கும், H-1B நுழைவு அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன ?


அரசியல் ரீதியாக மக்களிடம் கொண்டு செல்லப்படும் கருத்துக்களுக்கும், உண்மையில் சட்டமாக மாற்றப்படுபவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிக அவசியம்.

இத்தகைய திட்டங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட வாக்காளர் குழுக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை சட்டமாக நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் கொண்டு வரப்படுவதில்லை என்று ஹூஸ்டனைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞர் ராகுல் ரெட்டி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், பெரும்பாலான குடியேற்றச் சட்டங்கள் நிறைவேற அமெரிக்க செனட் சபையில் 60 வாக்குகள் தேவை, ஆனால் தற்போதைய சூழலில் அத்தனை வாக்குகளைப் பெறுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.


டல்லாஸைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், இந்த மசோதாவை ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். சமீபகாலமாக H-1B நுழைவு அனுமதி நடைமுறைகளைக் கட்டுப்படுத்த அல்லது மாற்றியமைக்க பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இந்தத் திட்டங்களின் முக்கியத்துவம் என்பது அதன் கொள்கைகளைப் பற்றியது மட்டுமல்ல, அதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கத்தைப் பற்றியதுமாகும். அதாவது பல அரசியல்வாதிகள் இந்த H-1b திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது.


உதாரணமாக, அமெரிக்கத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் ஸ்டீப் கொண்டு வந்த 'எக்ஸைல் சட்டம்' (EXILE Act), H-1B நுழைவு இசைவு முறையையே முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கோரியது.


கோட்பாட்டு ரீதியாக, இதற்குப் பதில் மிகவும் எளிமையானது: ஆம், காங்கிரஸ் கட்சிக்கு அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் உள்ளது. ஒரு நுழைவு அனுமதி (Visa) வகையை முடக்க நாடாளுமன்றம் முடிவு செய்தால், அதை அரசு நிர்வாகம் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று ரெட்டி குறிப்பிட்டார். இதற்கு ஆதாரமாக, குறிப்பிட்ட சில நாடுகளைப் பாதிக்கும் தற்போதைய கட்டுப்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.


ஆனால், நடைமுறையில் இதன் விளைவுகள் மிகவும் சிக்கலானவை. ஒருவேளை இந்தத் தடை விதிக்கப்பட்டால், H-1B நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது வேறு முறைக்கு மாற வேண்டும் என்று அவர் கூறினார். பலரைப் பொறுத்தவரை, இது ஒரு மாணவர் நுழைவு அனுமதி முறைக்கு மாறுவதையோ அல்லது அமெரிக்காவைவிட்டே முற்றிலும் வெளியேறுவதையோ குறிக்கலாம் என்கின்றனர். 


டல்லாஸைச் சேர்ந்த வழக்கறிஞர், இந்த சட்ட மசோதாவை அதன் தற்போதைய வடிவத்தை மட்டும் வைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், நாட்டின் பொருளாதார தாக்கம், தொழிலாளர் தேவைகள் மற்றும் அரசியல் உடன்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதன் இறுதி வடிவம் வேறுபடும் என்றும் குறிப்பிட்டார்.


வேலைவாய்ப்பு அடிப்படையிலான நிரந்தரக் குடியுரிமை அட்டையைக் (Green Card) கோரி நீண்டகாலமாக காத்திருக்கும் இந்தியர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கன்னா  சுட்டிக்காட்டினார். இதில் சிலர் 10 முதல் 20 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இவர்களுக்கான 'தகுதிநிலை மாற்றத்தை' (Status Adjustment) தடுக்கும் விதிகள் அமல்படுத்தப்பட்டால், அவர்கள் சட்டப்பூர்வமாகப் பெற்று வந்த பலன்களை இழக்க நேரிடும் என்றும் இது கடுமையான அரசியலமைப்புச் சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.


அமெரிக்காவில் விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்தை ரத்து செய்வதும், நிரந்தரக் குடியுரிமை அட்டை (Green Cards) வழங்குவதைத் தடுப்பதும் இந்திய மாணவர்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?


இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, இந்த சட்ட மசோதாவின் மிக முக்கியமான பகுதி, தற்போது, விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) என்பது கல்விக்கும் வேலைக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்படுகிறது. இது பட்டதாரிகள் தங்களது படிப்பை முடித்த பிறகு, H-1B நுழைவு இசைவு சீட்டைப் பெற முயற்சிக்கும் அதே வேளையில், பணி அனுபவத்தைப் பெறவும் அனுமதிக்கிறது.


இது இந்தியர்களை மிகவும் மோசமாகப் பாதிக்கும் என்று ரெட்டி கூறினார். அதேசமயம்,  விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) மற்றும் நிரந்தரக் குடியுரிமைக்கான வழிமுறை இல்லையென்றால், மாணவர்கள் நீண்டகாலம் தங்குவதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு கல்வி முறையில் முதலீடு செய்யுமாறு அமெரிக்கா கூறுவதுபோல் ஆகிவிடும் என்று கன்னா வாதிட்டார்.


அதே திறமையுள்ள மாணவர்களை ஈர்க்க முயற்சிக்கும் கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனி போன்ற பிற நாடுகளைக் கருத்தில் கொள்வதே இயல்பான எதிர்வினையாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். அமெரிக்கக் கல்வியின் அதிகப்படியான செலவை எதிர்கொள்ளும் இந்தியக் குடும்பங்களுக்கு, இந்த நிலைமை அவர்களின் முடிவை மாற்றுகிறது. கல்வி நிறுவனத்தில் இடம் கிடைப்பது மட்டுமே இப்போது முக்கியமல்ல; படிப்பை முடித்த பிறகு என்ன நடக்கும் என்பதே இப்போது முதன்மையானதாக மாறியுள்ளது.


சம்பள விதிகள் மற்றும் ஊதிய அடிப்படையிலான முறை இந்தியப் பணியாளர்களை எவ்வாறு பாதிக்கும்?


இந்த மசோதா, தற்போது நடைமுறையில் உள்ள குலுக்கல் முறைக்கு (lottery) பதிலாக, குறைந்தபட்சம் 200,000 டாலர் ஊதியம் பெறும் முறையை அடிப்படையாகக் கொண்ட புதிய அமைப்பைக் கொண்டுவரப் பரிந்துரைக்கிறது.


ஆரம்பத்தில், இந்த முடிவு அதிகத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு (Highly skilled workers) சாதகமாக இருப்பது போல் தோன்றும். ஆனால், இது பெரிய அளவிலான சமமின்மையை உருவாக்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். டல்லாஸைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குறிப்பிடுகையில், ஊதிய அளவுகள் ஏற்கனவே மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வளவு அதிகமான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது கல்வித்துறை, இடைநிலை பணிகள் மற்றும் பல மருத்துவப் பணிகளில் உள்ள தொழிலாளர்கள் உட்பட பலரை இந்தப் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கும் என்றும் தெரிவித்தார்.


இந்த அமைப்பானது, மிகவும் திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அதிக வசதி படைத்த முதலாளிகளின் ஆதரவைப் பெற்றவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் என்று கன்னா வாதிட்டார். உதாரணமாக, ஒரு புத்தொழில் நிறுவனம் அதிகத் திறமை கொண்ட பொறியாளர் ஒருவருக்கு 130,000 டாலர் சம்பளம் தருவதாக முன்வந்தாலும், ஒரு பெரிய நிதி நிறுவனம் 300,000 டாலர் சம்பளம் தருவதாகக் கூறினால், அந்தப் பொறியாளர் பெரிய நிறுவனத்தையே தேர்வு செய்வார். இதில் உண்மையான தேவை எது என்பது முக்கியமல்ல, அதிக பணம் வழங்கும் நிறுவனமே வெற்றி பெறும் நிலை உருவாகும் என்கின்றனர்.


இந்தியத் தொழில்முறை வல்லுநர்களுக்கு, குறிப்பாகத் தங்கள் பணியின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு, இது அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தைக்கான வாய்ப்புகளைப் பெருமளவு குறைக்கும். இது அவர்களின் திறமைக் குறைபாட்டினால் அல்ல, மாறாகப் பல்வேறு துறைகளில் நிலவும் ஊதிய அளவுகள் வெவ்வேறாக இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.


இந்த மசோதா உண்மையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்குமா அல்லது அந்த வேலைகளை அமெரிக்காவிற்கு வெளியேயுள்ள நாடுகளுக்கு அளிக்குமா?


நிறுவனங்கள் தகுதியான அமெரிக்கத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கின்றன என்ற இந்த மசோதாவின் முக்கிய கருத்தை கன்னா மறுக்கிறார். நிறுவனங்கள் உண்மையில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், அதனால் அவை நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படும் என்றும் அவர் கூறுகிறார். அமெரிக்காவில் தகுந்த திறமையாளர்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் பணிகளை பெங்களூரு, டொராண்டோ, லண்டன் அல்லது சிங்கப்பூர் போன்ற திறமையாளர்கள் எளிதாகக் கிடைக்கக்கூடிய இடங்களுக்கு மாற்றிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.


டல்லாஸை மையமாகக் கொண்டு செயல்படும் வழக்கறிஞர், இந்த மாற்றத்தை பரந்த பொருளாதாரக் கவலைகளுடன் தொடர்புபடுத்திப் பேசினார். செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence (AI)) வளர்ச்சி மற்றும் சமீபகால வேலை இழப்புகள் காரணமாக, H-1B  நுழைவு அனுமதி முறை வேலையின்மையை அதிகரிக்கின்றன என்று பலர் நம்புவதாகவும், ஆனால் இதற்குத் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இரண்டாவது முறையாக டிரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு, குடியேற்றக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியப் பணியாளர்கள் மற்றும் H-1B நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் சோதனைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் இனவாதக் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிறப்புரிமை குடியுரிமைக்கு எதிராக வாதிடும்போது, இந்தியாவையும் சீனாவையும் "நரகங்கள்" என்று விமர்சித்த ஒரு சமூக ஆர்வலரின் வீடியோவை டிரம்ப் பகிர்ந்திருந்தார். இந்த கருத்துகள் போதிய விவரம் இல்லாதவை, பொருத்தமற்றவை மற்றும் மிகவும் தரம் தாழ்ந்தவை என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs) கண்டனம் தெரிவித்துள்ளது.


டிரம்ப் ஆதரவாளர்கள் உட்பட H-1B நுழைவு அனுமதி முறையை எதிர்ப்பவர்கள், இந்த நுழைவு அனுமதி முறை அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகக் கூறுவது மட்டுமல்லாமல், நுழைவு அனுமதி நடைமுறைகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவது குறித்தும் தங்களது கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.


இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா?


நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதில் தெளிவான அரசியலமைப்புச் சிக்கல் இருந்தால் ஒழிய, நீதிமன்றங்கள் பொதுவாக அதில் தலையிடாது என்று ரெட்டி விளக்கினார். அரசின் நிர்வாக முடிவுகளை எளிதில் எதிர்த்து கேள்வி கேட்க முடியும், ஆனால் இயற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்வது என்பது மிகவும் கடினமான  விஷயமாகும்.


இருப்பினும், இதில் உள்ள சாத்தியமான பலவீனங்களை கன்னா சுட்டிக்காட்டினார். ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைப் பாதிக்கும் வகையில் பின்னோக்கிய தேதியிட்டுச் சட்டங்களைக் கொண்டு வருவது, தகுந்த சட்ட நடைமுறை உரிமைகளை மீறுவதாக அமையலாம் என்று அவர் கூறினார். மேலும், சார்ந்திருப்பவர்கள் மீதான கட்டுப்பாடுகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற சம பாதுகாப்பு கோட்பாடுகளின்கீழ் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.


இந்த மசோதா தற்போதுள்ள வடிவத்திலேயே நிறைவேற்றப்பட்டால், அது உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் பல நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும் என்று கன்னா குறிப்பிட்டார். 


H-1B மற்றும் விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் குறைந்தால், இந்தியர்களுக்கு எஞ்சியிருக்கும் நடைமுறைக்குச் சாத்தியமான வழிகள் என்ன?


இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவும், சீரற்ற நிலையிலுமே இருக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


ரெட்டி O-1 நுழைவு அனுமதி (O-1 Visa) குறித்துக் குறிப்பிடுகையில், இது மிகச்சிறந்த திறமை கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுபவை என்று கூறினார். அதாவது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளைப் பெற்றவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர்கள் அல்லது ஒரு துறையில் பெரும் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, இது மிகவும் குறைந்த அளவிலான சாதனையாளர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. மாறாக, பெரும்பாலான மாணவர்கள் அல்லது H-1B நுழைவு அனுமதி கோருவோருக்கு இது ஒரு நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றாக இருக்காது என்பதையும் தெரிவித்துள்ளார்.


மற்றொரு வழி என்னவென்றால், மாணவர் நுழைவு அனுமதி முறை (Student Visa) மூலம் மீண்டும் அந்நாட்டிற்குச் சென்று பிறகு முயற்சிப்பதாகும்; ஆனால், விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) நீக்கப்பட்டால், இந்த முயற்சி நிச்சயமற்றதாகிவிடும். மேலும் அவர் கூறுகையில், இது போன்ற கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டால், சுமார் 90% மக்கள் தகுதி பெற வாய்ப்பில்லை என்றும், எனவே மற்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளைத் தேடுவது சாத்தியமான வழிமுறைகளாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


சர்வதேச அளவில் திறமையான பணியாளர்களுக்கான போட்டி அதிகரித்து வருவதாகவும், அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் தங்களை சிறந்த மாற்று இடங்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதாகவும் கன்னா சுட்டிக்காட்டியுள்ளார்.


Original link:

A sweeping new H-1B Bill has raised alarm. What does it mean for Indian students and working professionals?


Share: