கட்டுப்பாடற்ற விவேகத்தின் ‘அச்சுறுத்தலை’ மீட்டெடுத்தல் -ஸ்ருதிசாகர் யமுனன் மற்றும் கே. வெங்கடரமணன்

16-வது குடியரசுத் தலைவர் குறிப்பில் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டம் இயற்றும் நடைமுறையில் ஆளுநரின் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஒரு 'சமநிலையை'விட ஒரு 'தடையாக'வே அதிகம் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் 2025-ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க தாமதிக்கும் நடைமுறையை இந்திய உச்சநீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது. மாநில அரசுக்கு எதிராக தமிழக ஆளுநர் வழக்கில், ஆளுநர்கள் செயல்பட வேண்டிய தெளிவான காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயித்ததுடன், இந்தக் காலக்கெடுவை அவர்கள் மீறினால், நீதிமன்றங்கள் தலையிட்டு, மசோதாக்கள் மீதான விளக்கப்படாத செயலற்ற தன்மையை ஒப்புதலாகக் கருதலாம் என்றும் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் இடையூறு நீண்டகால சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில், சட்டமன்றத்தின் உயர் அதிகாரத்தை உறுதிப்படுத்திய இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய வெற்றியாக அமைந்தது. ஆளுநர்களின் அதிகார மீறல்களால் ஏற்பட்ட கொள்கை முடக்கத்தை இது முடிவுக்குக் கொண்டுவந்து, மாநிலங்களின் முன்னுரிமைகளை தாமதப்படுத்திய நிலையை நீக்கி நம்பிக்கை அளித்ததாகத் தெரிவிக்கின்றனர்.


ஆனால், மாநிலங்கள் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுப்பயனையும் பெறுவதற்கு முன்பே, உச்சநீதிமன்றம் அதை மாற்றியமைத்துவிட்டது. குடியரசுத் தலைவரின் ஒரு சிறப்புக் குறிப்புக்கு (சிறப்புக் குறிப்பு எண் 1, 2025) பதிலளிக்கும் வகையில், நீதிமன்றம் ஏற்கனவே உறுதிசெய்த அரசியலமைப்பு நடைமுறையை பலவீனப்படுத்தியது. அதாவது, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பதற்கு அரசியலமைப்பில் தெளிவான அடிப்படை இல்லை என்றும், 'தானாக ஒப்புதல்' (deemed assent) என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், மசோதாக்களை ஒப்புதல் செய்வதில் தாமதப்படுத்த ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் விருப்ப அதிகாரங்கள் போதுமான அளவு நெகிழ்வுத்தன்மை கொண்டவை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அரசியல் சட்ட அமர்வுக்கு தலைமை தாங்கினார். ஒரு நேர்காணலில், ஆலோசனைத் தீர்ப்பு எந்த வழக்கின் தீர்ப்பையும் மாற்றாது என்று அவர் கூறினார். ஆனால், குறிப்பாக அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான விவகாரங்களில், அந்த அமர்வின் ஆலோசனைத் தீர்ப்பு சட்டத்தைத் “தெளிவுபடுத்துவது” மிகுந்த வற்புறுத்தல் விளைவை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


ஒருதலைபட்சமான பேச்சு


ஜனாதிபதியின் குறிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஆளுநர்களுக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 200-ஐ, அதிகாரிகளுக்கு இடையில் ஒரு அரசியலமைப்பு ரீதியான உரையாடலை உருவாக்க உருவாக்கப்பட்ட ஒரு செயல்முறையாக நீதிமன்றம் விவரித்தது. இருப்பினும், அத்தகைய உரையாடல் இருதரப்பினரும் சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் பதிலளித்தால் மட்டுமே செயல்படமுடியும் என்பதை அமர்வு அங்கீகரிக்கவில்லை என்கின்றனர்.


ஆளுநர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால் அவர்கள் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைத் தடுக்க, மசோதாக்களைத் தாமதப்படுத்தும் தந்திரமாக இந்த முறையைச் செயல்படுத்துகின்றனர். தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தப் பிரச்சினையை நேரடியாகத் தீர்த்தது. மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட வேண்டிய தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்து, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் இனி அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ஐப் பயன்படுத்தி மாநில சட்டமன்றங்களைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது என உறுதிப்படுத்தியது.


பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, ஆளுநரின் நீண்ட மௌனம் அல்லது மசோதாக்களைத் தடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகள் அரசியல் சட்டப்படி செல்லாது என்று அந்தத் தீர்ப்பு தெளிவாகக் கூறியது. ஆளுநர் மாளிகை காலக்கெடுவை மீறினாலோ அல்லது இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்தினாலோ, அந்த மசோதா தானாக ஒப்புதல் பெற்றதாகக் கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


சிறப்புக் குறிப்பு எண் 1-ல் நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்ட உரையாடலை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டு, ஆளுநர்களின் வேண்டுமென்றே செய்யும் தாமதத்தை மிகவும் மென்மையாகக் கையாள்கிறது. நீண்ட தாமதங்களுக்குப் பிறகும், ஆளுநருக்கு முடிவெடுக்கச் சொல்லும் அறிவுரை மட்டுமே நிவாரணமாகக் கொடுக்கப்படுகிறது. அதேசமயம், இந்தத் தீர்ப்பு தமிழ்நாடு வழக்கில் ஆளுநரின் அதிகாரங்களுக்கு விதிக்கப்பட்ட முக்கியக் கட்டுப்பாடுகளை நீக்கிவிடுகிறது. மசோதா முதலில் சமர்ப்பிக்கப்படும்போதும், மறுபரிசீலனைக்குப் பின் மீண்டும் அனுப்பப்படும்போதும் ஆளுநர் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கான விதிகளை இது பலவீனப்படுத்துகிறது. முதல் சூழலில், காரணத்துடன் கூடிய காலவரம்பை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர், இரண்டாவது சூழலில், ஆளுநர்கள் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமலோ மறுக்காமலோ காலாவதியாக்க அனுமதிக்கின்றனர். இது எல்லையற்ற தாமதங்களுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.


தெளிவின்மை 


சட்டப்பிரிவு 200-ன் முதல் நிபந்தனையின்படி, ஆளுநர் ஒரு மசோதாவை மறுபரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம். ஆனால், சட்டமன்றம் அந்த மசோதாவை (திருத்தங்களுடன் அல்லது இல்லாமல்) மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநருக்கு வேறு வழியில்லை — அவர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுவே அந்த நிபந்தனையின் தெளிவான பொருள் என்கின்றனர்.


சிறப்புக் குறிப்பானது (Special Reference) இந்த நிலைப்பாட்டை பலவீனப்படுத்துகிறது. ஏனெனில், சட்டப்பேரவை ஒரு மசோதாவை மறுபடி அனுப்பியபிறகு, ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது விதிவிலக்கான சூழல்களில் மட்டுமே நடக்க வேண்டும் என்று 'மாநிலம் vs தமிழ்நாடு அரசு' வழக்கில் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பு, எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆளுநருக்கு அதை அனுப்ப அனுமதி அளிக்கிறது. இதனால், சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்குப் பிறகு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அரசியலமைப்பின் தெளிவான விதியை பலவீனப்படுத்துகிறது. மேலும், ஆளுநருக்கு சட்டப்பிரிவு 361-ன்கீழ் வழங்கப்பட்ட அதிகார விலக்கு  காரணமாக நீதித்துறை ஆய்வைத் தடுக்கும் என்ற நீதிமன்றத்தின் மூலப்பொருள் வாதத்திற்கே (originalist reasoning) இந்தத் தீர்ப்பு முரண்பட்டுள்ளது என்கின்றனர்


நீதிமன்றம், ஆளுநர்கள் மசோதாக்களைக் கையாள்வதில் ஏற்படும் நீண்ட தாமதத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கண்டித்தாலும், மறுபுறம், சட்டசபையால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவையும் ஆளுநர்கள் தடையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அனுமதிப்பதன் மூலம், "நேரடியாகச் செய்ய இயலாததை மறைமுகமாகச் செய்யலாம்" என்ற நிலையை உருவாக்குகிறது. இதனால், நேரடியாகத் தடுக்க முடியாததை மறைமுகமாகத் தடுக்கும் வாய்ப்பை ஆளுநர்கள் பெறுவதாகக் கூறப்படுகிறது. 


இந்த வழக்கு, மாநில ஆளுநர்கள் மசோதாக்களை குடியரசுத் தலைவரிடம் அனுப்பும் அதிகாரத்தை ஆராய்வதற்கு நீதிமன்றத்துக்கு ஒரு சிறந்த வாய்ப்பை அளித்தது. இது, பல மாநிலங்கள் சர்க்காரியா ஆணையத்தில் முன்பே எழுப்பிய பிரச்சனைதான் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தீர்ப்பு அதற்கு நேர் எதிராக அமைந்துள்ளது. எந்தச் சூழலிலும், ஆளுநர்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் இயற்றப்பட்ட மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வரம்பற்ற அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தவறான சமநிலை


நீதிமன்றம், 'கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள்' (checks and balances) என்ற கருத்தைப் பயன்படுத்தி தனது விரிவான விளக்கத்தை நியாயப்படுத்துகிறது. சட்டமன்றம் அரசியலமைப்புக்கோ ஒன்றிய அரசின் சட்டங்களுக்கோ முரணான மாற்றங்களைச் செய்யலாம் என்ற அச்சத்தால், மறுபரிசீலனை செய்யப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு முக்கியமான விதியைத் தவிர்க்கிறது. சட்டங்கள் சரியானவையா என்பதை நீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் சோதிக்கலாம், ஆனால், ஒப்புதல் கொடுக்க மறுத்தால் இதற்கு எந்தத் தீர்வும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


அரசியலமைப்பில் “கட்டுப்பாடுகளும்  சமநிலைகளும்” (checks and balances) இருந்தாலும், அவை எந்த அரசாங்க அங்கத்தின் செயல்பாட்டையும் முழுவதுமாகத் தடுக்கும் விதிகள் அல்ல என்று கூறப்படுகிறது. ஆளுநரின் “அரசியலமைப்பைப் பாதுகாக்கும்” கடமை, சட்டமன்றத்தின் மீது அவருக்கு அதிகாரம் அளிக்கிறது என்று சொல்வது வினோதமானது. ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது என்பது சட்ட இயற்றுதலின் ஒரு இயல்பான நடைமுறைப்படியே தவிர, முன்கூட்டிய நீதித்துறை மறுஆய்வு அல்ல என்கின்றனர். இதை அப்படிக் கருதினால், அது உண்மையான “சமநிலை”யைவிட (balance) அதிகப்படியான “கட்டுப்பாடாக” (check) மாறிவிடும் என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்


இறுதியில், இந்தத் தீர்ப்பு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.  ஆளுநரின் அதிகாரத்திற்கு உள்ள கொள்கை அடிப்படையிலான வரம்புகளை இது பலவீனப்படுத்துகிறது. அதேநேரம், மாநிலங்களின்மீது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.


ஸ்ருதிசாகர் யமுனன், வியன்னாவில் உள்ள மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆவார். கே. வெங்கடரமணன், ஒரு முன்னாள் பத்திரிகையாளர்.

Original link:

Restoring the ‘menace’ of unfettered discretion 


Share: