பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு, ஒரு பின்னணியும் கடந்துவந்த கடினமான பயணமும் உள்ளது. -பிரியங்கா சதுர்வேதி

 இந்தியாவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம், 2023-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam (NSVA)) எனப்படும் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தோடு தொடங்கிவிடவில்லை. இது இந்தியத் தேசியப் போராட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து நடந்துவருகிறது. 1931-ஆம் ஆண்டில், பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகளைக் கோருவது என்பது, 'அரசியலில் முழுமையான சமத்துவம் வேண்டும்' என்ற பெண்களின் கோரிக்கைக்கு எதிராக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டனர். தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சலுகைகள் தேவையில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல், 1947-ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ரேணுகா ராய், சுதந்திரம் கிடைத்தவுடன் பெண்களுக்கான உரிமைகளும் சுதந்திரமும் உறுதிசெய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டாலும், இந்தியக் குடிமக்களாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படும் என்பதால், அப்போது அது தேவையற்ற ஒன்றாகவே கருதப்பட்டது.


அடுத்தடுத்த ஆண்டுகளில், பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவது தெளிவாகத் தெரிந்தது. 1951-ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பெண்களாக இருந்தனர். பல ஆண்டுகள் கடந்தும், 2024-ஆம் ஆண்டில்கூட இந்த எண்ணிக்கை வெறும் 14 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.


இதன் விளைவாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது கொள்கை விவாதங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. 1971-ஆம் ஆண்டு கல்வி மற்றும் சமூக நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, புல்ரேணு குஹா தலைமையிலான இந்தியப் பெண்களின் நிலை குறித்த குழு (Committee on the Status of Women in India), பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நிலையை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டது. இக்குழு 1974-ஆம் ஆண்டில் சமர்ப்பித்த 'சமத்துவத்தை நோக்கி' (Towards Equality) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை, குறைந்து வரும் பாலின விகிதம், நலிவடைந்த கல்வி மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை வெளிக்காட்டியது. இது பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், அது மாநிலங்களவையில் தோல்வியடைந்ததாகவும், பின்னர் 1992 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில், 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக இன்று 14.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க 1996, 1998, 1999 மற்றும் 2008-ஆகிய ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


2023-ஆம் ஆண்டில், சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (NSVA) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தியதா? என்ற கேள்விக்கு, 'இல்லை' என்றே புள்ளிவிவரங்கள் பதில் கூறுகின்றன. அரசியல் கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தாலும், அதன் உண்மையான நோக்கத்தை அவை பின்பற்றவில்லை என்று விமர்சிக்கின்றனர். இதற்கு அடுத்ததாக கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தல்களில், மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களில் 14.4 சதவீதம் பேரும், தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களில் 11.8 சதவீதம் பேரும் மட்டுமே பெண்களாக இருந்தனர். சுமார் 27.6 சதவீதத் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே போட்டியிடவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் உள்ள மொத்தம் 4,666 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 464 பேர் மட்டுமே பெண்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms (ADR)) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 


140 தொகுதிகளைக் கொண்ட கேரளா மாநிலத்தின் இந்த தேர்தல்களில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - 12 பெண் வேட்பாளர்களையும், இந்தியத் தேசிய காங்கிரஸ் - ஒன்பது பேரையும், பாரதிய ஜனதா கட்சி - 14 பேரையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - ஐந்து பேரையும் களம் இறக்கியுள்ளன. இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி முதன்முறையாக இரண்டு இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது 291 வேட்பாளர்களில் 52 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம், தான் போட்டியிடும் 164 இடங்களில் 18 இடங்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தனது 167 இடங்களில் 20 இடங்களையும் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


2023-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இருப்பினும், 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பே இது கொண்டு வரப்பட்டதால், அதனை நடைமுறைபடுத்துவதற்கான காலம் குறித்துப் பலத்த சந்தேகங்கள் எழுந்தன. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இருந்துதான் நடைமுறைக்கு வரும் என்பதால், பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் இணைப்பதில் உள்ள சிக்கல்களையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.


தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ஏனெனில், பல தாமதங்களுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, 2029-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகத் தொகுதி மறுவரையறை பணிகளை முடிப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக உயர்த்தவும், அதேபோல் மாநிலச் சட்டமன்ற இடங்களை விரிவுபடுத்தவும் அரசு இப்போது பரிந்துரை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

நிதிநிலை கூட்டத்தொடரை நீட்டிக்கும் முடிவு, அதன் காலநேரம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. முக்கிய சட்டங்களைக் கொண்டுவரும்போது வழக்கமாக நடப்பதைப் போலவே, இப்போதும் எதிர்க்கட்சிகளுடன் முறையான ஆலோசனை நடத்தப்படவில்லை என்கின்றனர். அரசியல் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மட்டுமே தொடர்பு கொள்ளப்பட்டது. தற்போதும் கூட, பெரும்பாலான தகவல்கள் ரகசியத் தகவல்கள் அல்லது ஊடகக் கசிவுகள் மூலமாகவே வெளிவருகின்றன. எனவே, இந்தியத் தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (INDIA bloc), அரசாங்கத்தின் திட்டம் என்ன மற்றும் திருத்தப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரியுள்ளது. இருப்பினும், அரசாங்கம் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. மாறாக, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்குச் சற்று முன்பாகவும், தேர்தல் நடந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இந்தச் சட்டத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்றும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்றும்  ரகசியத் தகவல்கள் மூலம் அறிவித்துள்ளது.


மற்றவர்களுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் பாரதிய ஜனதா கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்பதை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. இந்தத் திட்டத்தின் நோக்கம் மற்றும் அது கொண்டு வரப்பட்ட நேரம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினால், எதிர்க்கட்சிகள் 'பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்' என்ற ஒரு பிம்பத்தை பாஜக உருவாக்கிவிடும் என்றும் மாறாக, அவர்கள் இதற்கு உடன்பட்டால், அவர்கள் பணிந்து போவது போலத் தோன்றும் என்கிற சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது


இரு தரப்பினரும் இதை நினைவில் கொள்ள வேண்டும்: இந்திய நாட்டுப் பெண்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடஒதுக்கீடு சட்டத்தை ஆதரித்தோம். இந்தச் சட்டத்தைத் திருத்தம் செய்ததற்கான முழுப் பெருமையையும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பது என்பது நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு வாக்குறுதி என்பதை நாட்டின் பெண்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும்.  இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


பிரியங்கா சதுர்வேதி, மாநிலங்களவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தற்போது சிவசேனா கட்சியில் உள்ளார்.


Original article : The Women’s Reservation Bill has a backstory and an arduous journey -Priyanka Chaturvedi

Share:

கந்தகம் என்றால் என்ன மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அது ஏன் முக்கியமானது? -ரோஷ்னி யாதவ்

 மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்புகள் வெறும் உடனடி விளைவுகளோடு முடிந்துவிடாது. எஃகு, அலுமினியம், ஜவுளி மற்றும் மதுபானத் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய உற்பத்தியாளர்கள், சரக்குக் போக்குவரத்து செலவு அதிகரிப்பு, சரக்குகள் வந்து சேருவதில் ஏற்படும் தாமதம், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகப் பெரும் செயல்பாட்டுத் தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், உரங்களின் இறக்குமதி பாதிக்கப்படக்கூடும் என்பதால், இந்தியாவின் வேளாண் துறையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


போர் தொடங்கியதிலிருந்து இது குறித்துப் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், இதில் மிக முக்கியமான வேதியியல் தனிமமான கந்தகம் (Sulphur) மீது கவனம் செலுத்துவது அவசியமாகிறது. மேற்கு ஆசியா மோதல் என்பது வெறும் கச்சா எண்ணெய் சார்ந்தது மட்டுமல்ல; இது ஒரு மூலப்பொருள் தட்டுப்பாட்டை உருவாக்கி, இந்திய நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பாகவே பதினேழு வெவ்வேறு வேதியியல் உற்பத்திச் சங்கிலிகள் வழியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.


முக்கிய அம்சங்கள்:


1. கந்தகம் (Sulphur (S)) என்பது ஒரு உலோகமற்ற வேதிப்பொருள் ஆகும். இது மிகவும் மதிப்புமிக்கது மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது.


2. தங்கம், பிளாட்டினம் மற்றும் மந்த வாயுக்கள் (Noble Gases) ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து தனிமங்களுடனும் கந்தகம் நேரடியாக வினைபுரிகிறது. இயற்கையில், கந்தகம் ஒரு மஞ்சள் நிறப் படிகத் திடப்பொருளாகக் (Yellow Crystalline Solid) காணப்படுகிறது. இது தூய தனிமமாகவோ அல்லது சல்பேட்டு (Sulphate) மற்றும் சல்பைடு (Sulphide) தாதுக்களாகவோ கிடைக்கிறது.


3. கந்தகம் என்பது இயற்கையில் தானாகவே கிடைக்கிறது, மேலும் இது  பூமியின் மேலடுக்குகளில் மிக அதிக அளவில் காணப்படும் பதின்மூன்றாவது தனிமம் ஆகும். பெரும்பாலான கந்தகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியின்போது ஒரு துணைத் தயாரிப்பாகவே (By-product) பெறப்படுகிறது.


கந்தக விநியோகம்


1. 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி (Indian Minerals Yearbook 2023), ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே (Leh) மாவட்டத்தின் புகா பள்ளத்தாக்கில் (Puga Valley) இயற்கையான கந்தகப் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் படிவுகளில் கந்தகத்தின் தரம் 9% முதல் 24% வரை உள்ளதாகக் கூறப்படுகிறது.


2. வங்காள விரிகுடாவில் உள்ள பேரன் தீவிலிருந்தும் சிறிய அளவிலான இயற்கையான கந்தகப் படிவுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் மற்றும் குமாவுன் பிரிவுகளில் உள்ள சமோலி (Chamoli), ருத்ரபிரயாக் (Rudraprayag), உத்தரகாசி (Uttarkashi) போன்ற மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளுடன் கந்தகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.


3. ஆந்திரப் பிரதேசத்தில், கிருஷ்ணா மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் களிமண் மற்றும் வண்டல் மண்ணுடன் கலந்த துகள்களாக இயற்கை கந்தகம் காணப்படுகிறது. இது தவிர, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலும், இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா (Kangra) மாவட்டத்திலும் கந்தகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


4. 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி, 2022-23-ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையேயான மொத்த கந்தகம் (Sulphur) உற்பத்தியில் ஒடிசா 25% பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா 20%, ஹரியானா 17%, குஜராத் 16%, மேற்கு வங்காளம் 9%, உத்தரப் பிரதேசம் 6%, மகாராஷ்டிரா 5% ஆகிய மாநிலங்கள் உள்ளன. மீதமுள்ள உற்பத்தி பீகார் மற்றும் அசாம் மாநிலங்களால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


5. இந்தியாவில் தனிம கந்தகத்தின் (Elemental Sulphur) உள்நாட்டு உற்பத்தியானது, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கும் துணைக் தயாரிப்புகள் மற்றும் உரங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து மட்டுமே கிடைக்கிறது.





கந்தகத்தின் பயன்பாடுகள் மற்றும் நுகர்வு


1. பல இரசாயனத் தொழிற்சாலைகளுக்கு ஒரு முக்கியமான மூலப்பொருளாக கந்தகம் பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக கந்தக அமிலம் (Sulphuric Acid (H2SO4)) தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


2. கந்தக அமிலம் (Sulphuric acid) என்பது ஒரு வலிமையான கனிம அமிலமாகும், இது அனைத்து செறிவுகளிலும் (Concentrations) தண்ணீரில் கரையக்கூடியதாயாகும். இது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது; தண்ணீரைத் தவிர உலகில் மற்றெந்த வேதிப்பொருளைவிடவும் இதுவே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் முக்கியப் பயன்பாடுகளில் தாதுக்களைப் பதப்படுத்துதல், உர உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வேதியியல் தொகுப்பு (Chemical synthesis) ஆகியவை அடங்கும் என்கின்றனர்.


3. தாமிரம் (Copper), நிக்கல் (Nickel) மற்றும் கோபால்ட் (Cobalt) போன்ற உலோகங்களைப் பதப்படுத்துவதில் கந்தகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாடு எந்த அளவிற்கு இந்த அமிலத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறது என்பதை வைத்து அந்த நாட்டின் தொழில்முறை முன்னேற்றத்தை அறியலாம் என்கின்றனர். மேலும், இது பாஸ்பேட் உரங்கள் (Phosphatic Fertilizers) தயாரிப்பதில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.


4. பதங்கமாதல் (sublimation) செயல்முறை மூலம் தயாரிக்கப்படும் கந்தகத் தூள், சுமார் 30% வரை உருவமற்ற கந்தகத்தைக் (amorphous sulphur) கொண்டிருக்கலாம் என்கின்றனர். இது பொதுவாக ரப்பர் உறுதிப்படுத்துதல் (Vulcanisation), வேளாண் துறையில் பூச்சிக்கொல்லித் தூளாக, மருந்துப் பொருட்கள் மற்றும் கால்நடைத் தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.


5. கந்தகம், கந்தக விளக்குகள் (Sulphur Lamps) எனப்படும் சிறப்பு ஒளி சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்குகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. இவை நுண்ணலை கதிர்வீச்சினால் (Microwave Radiation) தூண்டப்பட்ட கந்தக பிளாஸ்மாவை (Sulphur Plasma) பயன்படுத்தி, சூரிய ஒளியைப் போன்ற முழு நிறமாலை ஒளியை (Full-spectrum light) உருவாக்குகின்றன.


பிளாஸ்மா என்பது பொருளின் நான்காவது நிலை. இது மிக அதிக வெப்பநிலையில் அணுக்கள் மற்றும் மின்னணுக்கள் பிரிந்து, மின்னூட்டம் கொண்ட கலவையாக (ionized gas) இருக்கும். மைக்ரோவேவ் மூலம் உற்சாகப்படுத்தப்படும் போது ஒளி உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.


6. கந்தகச் சேர்மங்கள் சலவைக்கலவைகள், பூஞ்சைக்கொல்லிகள், சாயங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி அடிப்படையிலான புகைப்படக்கலையில், சோடியம் மற்றும் அம்மோனியம் தையோ-சல்பேட் ஆகியவை “நிலைநிறுத்தும் காரணிகளாக” பயன்படுத்தப்படுகின்றன. கந்தகத்தை எரிப்பதன் மூலம் பெறப்படும் சல்பைட்டுகள், காகிதத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இவை உலர்ந்த பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழப் பொருட்களில் கெட்டுப்போகாமல் தடுக்கும் பாதுகாப்புப் பொருட்களாகவும் (preservatives) பயன்படுத்தப்படுகின்றன.


7. பயிர்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்  ஆகிய சத்துக்கள் மிகவும் அவசியமாகிறது. ஆனால், சிறந்த விளைச்சல் மற்றும் ஊட்டச்சத்தைப் பெற கந்தகம் சத்தும் மிக முக்கியமானதாகும். இது விதைகளில் உள்ள புரதம் மற்றும் எண்ணெய் அளவை மேம்படுத்துகிறது; தானியங்களை அரைப்பதற்கும் வேகவைப்பதற்கும் (Baking) ஏற்ற வகையில் அவற்றின் தரத்தை உயர்த்துகிறது. மேலும், தேங்காய் பருப்பின் (Copra) சந்தை மதிப்பையும், புகையிலையின் தரத்தையும் அதிகப்படுத்துகிறது. அத்துடன், கால்நடை தீவனங்களின் ஊட்டச்சத்து மதிப்பையும் மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.


8. நடைபாதைகள், நடைமேடைகள் மற்றும் கட்டிட அடித்தளங்கள் அமைப்பதற்கு, வழக்கமான சிமெண்டிற்கு பதிலாக கந்தகம் சார்ந்த கான்கிரீட் ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக அமைகிறது.


தாமிரம் என்றால் என்ன?


1. தாமிரம் என்பது மிகவும் மென்மையானது, எளிதில் வளைந்து நீளும் தன்மையுடையது மற்றும் வெப்பத்தையும் மின்சாரத்தையும் மிகச்சிறப்பாகக் கடத்தக்கூடிய ஒரு உலோகமாகும். இயற்கையிலேயே நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய உலோக வடிவில் கிடைக்கும் ஒரு சில உலோகங்களில் இதுவும் ஒன்றாகும்.


2. இது பரந்த அளவிலான தொழில்துறைப் பயன்பாடுகளைக் கொண்ட ஒரு முக்கியமான இரும்பு சாரா (Non-Ferrous) உலோகமாகும். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் முதல் மின்சாரக் கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பாதுகாப்புத் துறை வரை நவீன பொருளாதாரத்திற்குத் தாமிரம் இன்றியமையாதது ஆகும். இதனால், இது பொருளாதார ஆரோக்கியத்தைக் அளவிடும் ஒரு அளவுகோலாக கருதப்படுகிறது.


3. தாமிரத்தின் விலை உயர்வு வலுவான பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியாகக் கருதப்படுகிறது, அதே சமயம் விலை வீழ்ச்சி பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளை எழுப்புகிறது.


4. 2022-ஆம் ஆண்டுக்கான இந்தியக் கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி (Indian Minerals Yearbook 2022), தாமிர தாது (Copper ore) உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் உள்நாட்டுத் தாது மற்றும் அதன் செறிவூட்டப்பட்ட பொருள்களின் உற்பத்தியோடு கூடுதலாக, உருக்கு ஆலைகளின் தேவைக்காக, இந்தியா செறிவூட்டப்பட்ட தாமிரா தாதுக்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வதாகக் கூறப்படுகிறது.


5. மேலும், இந்தியாவில் தாமிர தாது இருப்பு அதிகப்படியாக ராஜஸ்தான் மாநிலத்தில் (52.25%) உள்ளன. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (23.28%) மற்றும் ஜார்க்கண்ட் (15.14%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


Original article : Understanding Sulphur: what it is and why it matters to the global economy? -Roshni Yadav

Share:

இந்தியத் தேர்தல்கள் செல்வந்தர்களின் ஆதிக்கமாக (plutocratic) மாறிவிட்டனவா? - வி. நிவேதிதா

 தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் ஜனநாயகம் மீண்டும் ஒருமுறை முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், தேர்தல் பேரணிகள் மற்றும் வீதிப் பிரச்சாரங்களுக்குப் பின்னால், ஒரு தீவிரமான கவலை வளர்ந்து வருகிறது. தேர்தல்கள் நாளுக்கு நாள் அதிக செலவுமிக்கவையாக மாறி வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் மக்களைச் சென்றடைவதற்கான முயற்சிகளில் பெருமளவு பணத்தைச் செலவிட்டு வருவதால், தேர்தல் போட்டியை வடிவமைப்பதில் பணத்தின் பங்கு குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய 93% பேர் கோடீஸ்வரர்கள் என்று தரவுகள் காட்டுகின்றன. இது, அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான வாய்ப்பு மேலும் சமத்துவமற்றதாக மாறி வருகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? மேலும், இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? வி. நிவேதிதா நெறிப்படுத்தும் ஒரு கலந்துரையாடலில், எம்.ஆர். மாதவன் மற்றும் ஆர். ரங்கராஜன் ஆகியோர் இந்தக் கேள்விகள் குறித்து விவாதிக்கின்றனர். அதன் தொகுக்கப்பட்ட பகுதிகள் கீழே குறிப்பிட்டுள்ளன.


இந்தியத் தேர்தல்கள் எந்த அளவுக்குச் செலவு பிடிப்பவையாக உள்ளன?


எம்.ஆர். மாதவன் : உண்மையில் நமக்கு அது சரியாகத் தெரியாது. அதிகாரப்பூர்வமாகப் பார்த்தால், ஒரு மக்களவை (Lok Sabha) வேட்பாளர் செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பு ₹95 லட்சம் ஆகும். இருப்பினும், தேர்தலில் போட்டியிட்டவர்கள், தாங்கள் இந்த வரம்பைவிட மிக அதிகமான தொகையைச் செலவிடுவதாகக் கூறுகின்றனர். இதற்கென எந்த அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரமும் இல்லை, ஆனால் சில மதிப்பீடுகள் உள்ளன. அவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகின்றன. சில இடங்களில், ஒவ்வொரு வேட்பாளரும் ₹50 கோடி முதல் ₹100 கோடி வரையிலான தொகையைச் செலவிடுவதாக நம்பப்படுகிறது. நாம் கேள்விப்படும் செலவின் அளவு அந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் இதற்கென உண்மையான தரவுகள் ஏதும் இல்லை. ஏனெனில், இந்தச் செலவுகள் எதுவும் கணக்கில் காட்டப்படுவதில்லை, தணிக்கை செய்யப்படுவதில்லை அல்லது அதிகாரப்பூர்வமாகப் புகாரளிக்கப்படுவதில்லை. எனவே, இது பெரும்பாலும் 'கேள்வி ஞானம்' (hearsay) சார்ந்த தகவல்களே என்றாலும், அதில் கணிசமான அளவு உண்மை இருக்கவே செய்கிறது. இந்தியாவில் தேர்தல்கள் மிகவும் அதிக செலவு பிடிக்கும் நிகழ்வுகளாகவே உள்ளன.


வேட்பாளர்கள் சில லட்சங்களை மட்டுமே செலவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (EC) விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், வேட்பாளர்களோ அதைவிட அதிகமான தொகையைச் செலவிடுகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் இதை எப்படி அனுமதித்து வருகிறது?


ஆர். ரங்கராஜன் : இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினையாகும். நான் இது குறித்து ஆய்வு செய்திருக்கிறேன், பாடம் நடத்தியிருக்கிறேன். ஏன், நானே ஒரு தேர்தலில் போட்டியிட்டும் இருக்கிறேன். அப்போது ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்காக நான் வெறும் ₹20 லட்சம் மட்டுமே செலவிட்டேன். ஆனாலும், 1.35 லட்சம் வாக்குகளைப் பெற்று, அத்தொகுதியின் மொத்த வாக்குகளில் சுமார் 12 சதவீதத்தை ஈட்டினேன்.


ஆனால், அது தேர்தலில் வெறும் பங்கேற்பாளராக இருக்க விரும்பும் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே பொருந்தும். வெற்றி பெறுவதற்கு, மாதவன் குறிப்பிட்டது போல, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ₹95 லட்சமும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ₹40 லட்சமும் என அதிகாரப்பூர்வ வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், தேர்தல் செலவுகள் பல கோடி ரூபாயைத் தொடுகின்றன.


உதாரணமாக, தமிழ்நாட்டில், தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டுமே குறைந்தது ₹10 கோடி தேவைப்படுவதாகப் பேசப்படுகிறது. அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு வரம்பு ஏதுமில்லை. ஆனால், வேட்பாளர்கள் செய்யும் செலவுகளுக்கு மட்டுமே வரம்பு உள்ளது. ஒரு அரசியல் கட்சி செய்யும் செலவுகள் அனைத்தும் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அச்செலவுகள் நேரடியாக அந்தத் தொகுதிக்குள்ளேயே செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அவை கணக்கில் சேர்க்கப்படுகின்றன.


இது ஒரு சமமற்ற போட்டி களமாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களை அனுப்பினாலும், அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை மட்டுமே அங்கு பணியில் இருக்கிறார்கள். அந்த 20 நாட்களில், அவர்களால் எத்துணை செலவுகளைக் கண்காணிக்க முடியும்? பெரும்பாலான செலவுகள், கணக்கில் வராத ரொக்கப் பணத்தின் மூலமே செய்யப்படுகின்றன. தேர்தல் செலவுகள் வரம்பு மீறி, மிக அதிக அளவிலும், விகிதாச்சாரத்திற்குப் பொருத்தமற்ற வகையிலும் பெருகிவிட்டன.


அதிகப்படியான தேர்தல் செலவுகள் காரணமாக, சிறிய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் களத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்களா?


ஆர். ரங்கராஜன் : ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் பணம் மட்டுமே போதுமான நிபந்தனை அல்ல. ஆனால், அது ஒரு 'அவசியமான' நிபந்தனையாக மாறிவிட்டது. மக்கள் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிட்டாலும், இறுதியில் தோல்வியையே தழுவுகிறார்கள். ஆனால், 2014-ம் ஆண்டில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி (AAP) பெற்ற வெற்றியைப் போல மிக அரிதாகவே நிகழும் ஒரு நிகழ்வாகவே அமைகிறது. சில சமயங்களில், ஏதேனும் ஒரு தலைவர் மீதோ அல்லது ஒரு மக்கள் இயக்கம் மீதோ மக்கள் மத்தியில் ஒரு வலுவான அலை வீசினால் மட்டுமே நிலைமை மாறுபடும். தேசிய மற்றும் மாநில அளவிலான பெரிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த பெரும்பாலான தேர்தல்களில், நல்லெண்ணம் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களும் சிறிய கட்சிகளும் வெறும் 'போட்டிக்கு வந்தவர்கள்' என்ற நிலையிலேயே நின்றுவிடுகிறார்கள். பெரிய கட்சிகள் கொண்டுள்ள பண பலத்துடன் அவர்களால் ஒருபோதும் போட்டியிட இயலாது.


எம்.ஆர். மாதவன் : பல ஜனநாயக நாடுகளில் இத்தகைய சூழல் சாதாரணமாகக் காணப்படுகிறது. 50 மாகாணங்களைக் கொண்ட ஒரு பெரிய நாடான அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அங்கு நடைமுறையில் இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.


இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. இருப்பினும், மாநில அளவிலான தேர்தல்களைப் பார்த்தால், பொதுவாக இரண்டு முக்கிய போட்டியாளர்கள் இருப்பார்கள், சில சமயங்களில் மூன்று பேர் இருப்பார்கள், அவர்கள் இறுதியில் கூட்டணிகளை அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கூட்டணிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஒரு கட்சி வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடும். கேரளாவிலும் இரண்டு கூட்டணிகள் உள்ளன. இது சில இடங்களில் பாஜக மூன்றாவது சக்தியாக இருக்கலாம். ஆனாலும் பாஜக மாநிலத்தில் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது 'முதலில் வருபவருக்கே வெற்றி' என்ற தேர்தல் முறையில் வழக்கமானதுதான், இங்கு 1-2% வாக்கு வித்தியாசம்கூட வெற்றியாளரைத் தீர்மானித்துவிடும். எனவே கட்சிகள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முனைகின்றன. அரிதான சில நிகழ்வுகளைத் தவிர, சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் பொதுவாக ஆட்சியில் நீடிப்பதில்லை.


தனிப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களுக்கு வரம்பு விதிக்கப்பட வேண்டுமா?


எம்.ஆர். மாதவன் : இதில் பிரச்சனை என்னவென்றால், நம்மிடம் உள்ள தொகுதிகளின் அளவிற்கு, பேரணிகளை நடத்துவதற்கும், மக்களைச் சென்றடைவதற்கும் நாம் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. மக்கள் உங்களுக்கு வாக்களிப்பதற்காக நீங்கள் பணம் கொடுக்காவிட்டாலும்கூட, சட்டப்பூர்வமாகப் பிரச்சாரம் செய்ய உங்களுக்கு அதிக பணம் தேவைப்படும். தற்போதைய வரம்புகள் மிகவும் குறைவாக உள்ளன.


ஒரு வழி என்னவென்றால், வரம்பை அதிகரிப்பதுதான். அதன்மூலம், கறுப்புப் பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கும் வேட்பாளர்கள், பணத்தைத் திரட்ட முடிந்தால், போட்டியிட முடியும். இன்று, ஒருவர் வெளிப்படையாக நிதி திரட்டினாலும், தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் இல்லாமல் அவர்களால் வரம்பைத் தாண்டி செலவழிக்க முடியாது. எனவே, வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள்.


ஆர். ரங்கராஜன் : இது ஒரு சிக்கலான நிலை. வரம்புகள் அதிகரிக்கப்பட்டால், வேட்பாளர்கள் கள்ளப் பணத்தை அதிகமாகச் செலவழிக்கக்கூடும். ஏனெனில், பெரிய கட்சிகளில் திறமையான வேட்பாளர்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த வரம்பை இந்த அளவில் வைத்திருப்பதில் ஒரு தர்க்கம் இருப்பதாக நான் நினைக்கிறேன். உண்மையில், இதுவே ஒரு மிக அதிகமான தொகை என்று பலர் கூறுவார்கள்.


சமூக ஊடகங்களும் நகரமயமாக்கலும் தேர்தல் பிரச்சாரங்களை மாற்றியுள்ளன. இதன் காரணமாக, ஒரு வேட்பாளரால் தற்போதுள்ள செலவின வரம்புகளுக்குள் ஒரு அர்த்தமுள்ள பிரச்சாரத்தை நடத்த முடிகிறது. இருப்பினும், 'முதலில் வருபவருக்கே வெற்றி' என்ற தேர்தல் முறையின் காரணமாக, வேட்பாளர்கள் பண விநியோகம் உட்பட, வெற்றி பெறுவதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.


தேர்தல்களுக்கு அரசு நிதியளிப்பது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. இந்த வரம்புகள் நியாயமானவை, ஆனால் இவற்றைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம்.


ஐக்கிய இராச்சியத்தின் நடைமுறையைப் போலவே, கட்சிகளின் மொத்தச் செலவினமானது வேட்பாளர்களின் எண்ணிக்கையோடு இணைக்கப்படும் வகையில், கட்சி நிதி திரட்டுவதற்கும் ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படலாம். 'கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை'யானது (mixed-member proportional representation system) சிறிய கட்சிகளும் பிரதிநிதித்துவத்தைப் பெற உதவக்கூடும். எனினும், இதற்குப் பெரும் அளவிலான மாற்றங்கள் தேவைப்படும்.


தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் செலவினங்களுக்கு வரம்புகள் விதிப்பது, அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்துமா?


எம்.ஆர். மாதவன் : வரம்புகளை விதிக்கலாம், ஆனால் அது செலவினங்களை மறைமுகமாகச் செய்யத் தூண்டும். கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம் மூலம்  செலவுகள் அதிகரிக்கும். கணக்கில் காட்டப்படும் தொகை வரம்புக்குள் இருக்கும். நம் நாடு செயல்படும் விதத்தைக் கருத்தில்கொண்டு, இதை எப்படிச் சமாளிப்பது?


ஒரு சாத்தியமான வழி, வரம்புகளை நீக்கிவிட்டு வெளிப்படைத்தன்மையில் கவனம் செலுத்துவதாகும். அதாவது, வேட்பாளர்கள் பணம் செலவழித்து அதைத் துல்லியமாகக் கணக்கில் காட்ட அனுமதிக்க வேண்டும்.


ஆர். ரங்கராஜன் : அப்படியிருந்தாலும், கறுப்புப் பணத்தின் பயன்பாடு தொடரும். கட்சிச் செலவினங்களுக்கு ஏற்கனவே வரம்பு எதுவும் இல்லை, ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உண்மையான மதிப்பீடுகளைவிட மிகவும் குறைவாகவே உள்ளன.


2024 பொதுத் தேர்தலில், பாஜக ₹1,500 கோடியும், காங்கிரஸ் சுமார் ₹600 கோடியும் செலவிட்டதாகத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து செலவின அறிக்கையில் கூறியுள்ளன. அனைத்து பெரிய தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் மொத்த அதிகாரப்பூர்வ செலவினம் சுமார் ₹3,300-3,400 கோடியாகும். ஆனால், ஊடக ஆய்வுகளுக்கான ஒன்றியம் கிட்டத்தட்ட ₹1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாக மதிப்பிடுகிறது.


சமமான போட்டிச் சூழல் சாத்தியமா?


ஆர். ரங்கராஜன் : அதற்கு வலுவான அரசியல் உறுதிப்பாடு தேவை. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அரசு நிதியுதவி பெறும் விளம்பரங்களைத் தடை செய்வது ஒரு எளிய சீர்திருத்தமாக இருக்கலாம். தற்போது, தேர்தலுக்கு 35-40 நாட்களுக்கு முன்பு வரை, அதாவது தேர்தல் அறிவிக்கப்படும் வரை, அரசாங்கங்கள் விளம்பரங்களுக்காகச் செலவிடலாம். இதை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பே இந்தத் தடை தொடங்கினால், பெருமளவு பொதுப் பணத்தைச் சேமிக்க முடியும். விகிதாசாரப் பிரதிநிதித்துவம் போன்ற பிற சீர்திருத்தங்களும் உள்ளன. ஆனால் இந்தச் சீர்திருத்தங்கள் அனைத்திற்கும் அரசியல் உறுதிப்பாடு தேவை. தற்போது, இந்த அரசியல் உறுதிப்பாடு இல்லை.


எம்.ஆர். மாதவன் : தேர்தல் முடிவுகளுக்குப் பணம்தான் முதன்மைக் காரணியா என்பதுதான் கேள்வியாக உள்ளது. வாக்காளர்களை நம்பவைக்கத் தவறினால், கட்சிகள் பெருமளவில் செலவு செய்தாலும் கூடத் தோற்கின்றன என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய செயல்பாடுகளிலும் நான் கவனம் செலுத்துவேன். அவர்கள் பிரதமரையோ அல்லது முதலமைச்சரையோ தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைத் தவிர, கட்சி உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறார்கள். அங்குதான் நமக்கு உண்மையான சீர்திருத்தங்கள் தேவை.


இந்திய உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை நீக்கியது. ஆனால் வெளிப்படைத்தன்மை இன்னமும் நிலவுகிறது. 


ஆர். ரங்கராஜன் : உச்சநீதிமன்றம் அதைச் சரியாகவே ரத்து செய்தது என்று நான் நினைக்கிறேன். மேலும், நன்கொடையாளர்களின் விவரங்களை வெளியிடுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதால், அவை நமக்குத் தெரியவந்தன. யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்றும், எந்தத் தொழிலதிபர்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தாராளமாகப் பங்களித்தார்கள் என்றும் தெரியவந்தது. மேலும், அனைத்துக் கட்சிகளும் இந்த நன்கொடைகளைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டன. ஆனால், அது மிகவும் தவறாகத் திட்டமிடப்பட்ட ஒரு திட்டம் என்று நான் நினைக்கிறேன். அது தீர்க்க முயன்ற சிக்கலைவிட அதிக பிரச்சனைகளை உருவாக்கியது.


இந்த அமைப்பு முற்றிலும் வெளிப்படையற்றதாக இருந்திருக்கும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள்கூட பங்களிக்கலாம் என்று கூறும் வகையில் நிறுவனங்கள் சட்டம் (Companies Act) திருத்தப்பட்டது. இது பங்குதாரர்களின் நலன்களுக்கு எதிரானது.


நிறுவனங்கள் தாங்கள் யாருக்கு நன்கொடை அளித்தன என்பதை வெளியிட வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. அவர்கள் மொத்தத் தொகையை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. இதுவும் சரியானதல்ல. தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படைத்தன்மையையோ அல்லது பொறுப்புணர்வையோ கொண்டு வந்திருக்காது.


பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய இரண்டையும் கொண்ட ஒரு அமைப்பை நாம் எப்படி உருவாக்குவது?


எம்.ஆர். மாதவன் : வெளிப்படைத்தன்மையாக இருப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், அது பொறுப்புணர்வைக் கொண்டுவருகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு கட்சிக்கு ‘X’ நிதியளித்திருப்பதையும், அந்தக் கட்சி ‘X’- க்கு பயனளிக்கும் முடிவுகளை எடுத்தால், அது புலப்படும். அது குறைந்தபட்சம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருக்கும். அந்த வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வைக் கொண்டுவரும். இந்தச் சூழலில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. அது ஒரு சரியான நடவடிக்கையும்கூட.


இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அது உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஜனநாயக நாடுகளில் இது விவாதிக்கப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தேர்தல்களுக்கு நிதியளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா? நிறுவனங்கள் வாக்களிப்பதில்லை. பெருநிறுவனங்கள் வாக்களிப்பதில்லை. அவற்றுக்கு வாக்குரிமை இல்லை. குடிமக்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள்.


அப்படியானால், அத்தகைய ஒரு அமைப்பு தேர்தல்களுக்கு நிதியளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா? உண்மையில், 1960-களின் பிற்பகுதியில் பெருநிறுவனங்கள் தேர்தலுக்கு நிதியளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனுமதித்தோம். இரண்டுமே சில அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்பட்டன. ஆனால், இதன் அடிப்படைப் கேள்வி குறித்து இன்றும் தீவிரமான விவாதம் தேவைப்படுகிறது.


ஆர். ரங்கராஜன் : அது ஒரு நியாயமான கருத்து. உலகெங்கிலும் உள்ள மக்களாட்சிகள், பெரும் பெருநிறுவன நலன்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான ஒரு இணைப்பு நிலவுவதாக இருக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் இணக்கமாகச் செயல்படுகிறார்கள். சட்டத்தை மாற்றுவதற்கு அரசியல் உறுதிப்பாடு தேவைப்படும். ஆனால், தற்போதைய நிலையில், அத்தகைய விருப்பம் தென்படவில்லை.


இந்த அமைப்பைச் சரிசெய்வதில் குடிமைச் சமூகம், அழுத்தக் குழுக்கள் மற்றும் ஊடகங்கள் என்ன பங்கு வகிக்கின்றன?


ஆர். ரங்கராஜன் : விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் அவர்களின் மிக முக்கியமான பங்கு என்று நான் நினைக்கிறேன். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms), ஊடக ஆய்வுகளுக்கான மையம் (Centre for Media Studies), பி.ஆர்.எஸ் சட்டமன்ற ஆராய்ச்சி (PRS) போன்ற அமைப்புகள் அனைத்தும் இந்தப் பகுதியில் பங்களிக்கின்றன. பல அமைப்புகள், குறிப்பாக ஏ.டி.ஆர் (ADR), பொதுநல வழக்குகள் மூலம் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகுகின்றன. மேலும், நோட்டா (NOTA) மற்றும் குற்றப் பின்னணி வெளிப்படுத்தல் போன்ற எண்ணற்ற தேர்தல் தொடர்பான தீர்ப்புகளைப் பெற்றுள்ளன.


விழிப்புணர்வைப் பரப்புவதில் அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அதன்பிறகு, குடிமக்கள் அதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது அவர்களின் பொறுப்பு. நீதித்துறை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சாத்தியமான இடங்களில் எல்லாம் அழுத்தத்தை உருவாக்குவதிலும் அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.


எம்.ஆர். மாதவன் : ஊடகங்களும், குடிமைச் சமூகக் குழுக்களும் செய்யக்கூடிய முக்கியப் பங்கு, தேர்தலின் போது என்ன நடக்கிறது? என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான். ஆனால், மக்களுக்குப் பல விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதையும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். உண்மையில், மிலன் வைஷ்ணவ் எழுதிய ‘குற்றம் ஏன் பலனளிக்கிறது?’ (Why Crime Pays?) என்ற ஒரு அருமையான புத்தகம் தெளிவாக விளக்குகிறது. அதில், குற்றப் பின்னணி கொண்ட சில அரசியல்வாதிகளுக்கு மக்கள் தீவிரமாக வாக்களிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையில் தேர்தலில் அவர்களுக்குப் பயனளிக்கிறது. எனவே, மக்களுக்கு அவர்களின் குற்றப் பின்னணிகள் தெரியாது என்பதல்ல, மாறாக அவர்கள் பல்வேறு காரணங்களுக்காகவே அவர்கள் தெரிந்தே அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.


ஆகவே, நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் அதையும் தாண்டி, மக்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறார்கள் என்பதற்கான அடிப்படைக் காரணங்களை நாம் கவனிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு உண்மையில் மேலும் செழிப்பான ஒரு மக்களாட்சி கிடைக்கும்.


எம்.ஆர். மாதவன், பிஆர்எஸ் சட்டமன்ற ஆராய்ச்சியின் இணை நிறுவனர் மற்றும் தலைவர். ஆர். ரங்கராஜன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் Courseware on Polity Simplified என்ற நூலின் ஆசிரியர்.


Original article : Have elections in India become plutocratic? -V. Nivedita

Share:

கல்வி உதவித்தொகைகளை இந்திய கல்வி அமைப்பின் முக்கிய அங்கமாக மாற்றுதல் -பிரமத் ராஜ் சின்ஹா

 கல்வி உதவித்தொகைகள் சமத்துவம், தரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் முக்கிய நிலையாக அமைகின்றன. உயர்கல்வியில் யார்?, எத்தனை பேர் நுழைகிறார்கள்?, யார் தொடர்ந்து படிக்கிறார்கள்? என்பதில் அவை செல்வாக்கு செலுத்துகின்றன.


இந்தியா தனது உயர்கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio (GER)) 50% ஆக உயர்த்த வேண்டுமானால், நாடு எத்தனை கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும் என்பது மட்டுமல்ல கேள்வி, உண்மையில் இந்த நிறுவனங்களில் யார் நுழைய முடிகிறது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும்.


கல்வித் திறன்களை விரிவுபடுத்துவதில் இந்தியா படிப்படியாக முன்னேறி வருகிறது. 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-2015-ல் 51,534-லிருந்து கடந்த ஆண்டில் 70,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 2022-2023-ல் 29.5 சதவீதமாக உள்ளது. இத்தகைய வரையறுக்கப்பட்ட பங்கேற்பு விகிதம், கல்வி இடங்கள் மட்டுமே மாணவர்களை உருவாக்குவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. கல்விக்கான அணுகல், குறைந்த விலை மற்றும் கல்வித் தரம் ஆகியவை ஒன்றிணையும்போது கல்வி வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இந்தியாவில் உள்ள பல இளைஞர்களுக்கு, குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிப்பவர்களுக்கு, முக்கியப் பிரச்சனை லட்சியமின்மை அல்ல. உண்மையான சவால் என்பது கல்வியின் செலவும், அதைப் பின்தொடர்வதில் உள்ள அபாயங்களுமே ஆகும். இதனால்தான் கல்வி உதவித்தொகைகள் கல்வி அமைப்பின் ஒரு சிறிய அல்லது விருப்பத் தேர்வாகக் கருதப்படக்கூடாது. அவை உயர்கல்விக்கான ஒரு ஒருங்கிணைந்த மற்றும் நம்பகமான பாதையாக வடிவமைக்கப்பட்டு, அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.



ஒரு அவசரத் தேவை


நாடு ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று சவால்களை எதிர்கொள்கிறது. முதலாவதாக, பிராந்தியங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் முழுவதும் கல்விக்கான அணுகல் சவால்; இரண்டாவதாக, உயர்கல்வியை குடும்பங்களுக்கு ஒரு நீண்டகால முதலீடாக மாற்றும் கல்விக்கான செலவுத் திறன் சவால்; மற்றும் மூன்றாவதாக, மாணவர் சேர்க்கையானது உண்மையான கற்றல் மற்றும் வேலைகளுக்கு வழிவகுப்பது எந்த அளவிற்கு மாறுகிறது என்பதைத் தீர்மானிக்கும் கல்வித் தரச் சவால் ஆகும். தகுதியுள்ள மாணவர்கள் கல்விக்கான செலவை ஏற்க வசதி இருக்கும்போதும், பன்முகத்தன்மையும் தகுதியும் கல்வி வாழ்க்கையை நீர்த்துப்போகச் செய்யாமல் வலுப்படுத்தும் என்று கல்வி நிறுவனங்கள் நம்பும்போது அது உயர்கிறது.


இந்தியா இந்த நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறது. திறமையாளர்கள் நாடு முழுவதும் பரவலாக உள்ளனர். இருப்பினும், பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது என்பது, ஏற்கனவே வசதி படைத்த குடும்பங்களைச் சம்மதிக்க வைப்பதைவிட, அதிக செலவு, தூரம் மற்றும் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த நிச்சயமற்றத் தன்மை ஆகியவற்றால் தற்போது பின்தங்கியுள்ள திறமையான மாணவர்களை வெளிக்கொணர்வதைப் பொறுத்தே அமையும். கல்வி உதவித்தொகைகள் இங்கு ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை நிதி உதவிக்கான கருவிகள் மட்டுமல்ல; பொருள்சார் உதவிகளுக்கு அப்பாற்பட்ட தலைமைத்துவ மேம்பாடு, பரந்த அளவிலான ஆர்வங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் போன்ற ஏற்பாடுகள் மூலம், ஒரு மாணவரின் கல்வி நிறைவையும் ஒட்டுமொத்த தனிப்பட்ட மேம்பாட்டையும் உறுதிசெய்து, அவரது வாழ்க்கையை வடிவமைக்கவும் அவை உதவுகின்றன.


உயர்கல்வித் துறை மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகைகள், கல்விக் கடன்களுக்கான வட்டி மானியங்கள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம், மாநிலத் திட்டங்களுக்கான ஒரு பொதுவான தளமாகச் செயல்படுகிறது. மேலும், அமைச்சகங்கள், துறைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் முழுவதும் உள்ள கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது. அத்தகைய ஒரு திட்டம்தான் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய கல்வி உதவித்தொகைத் திட்டம் ஆகும். இது இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் ஆண்டுதோறும் 82,000 வரையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. இதனுடன், பெருநிறுவன அறக்கட்டளைகள், அறக்கட்டளைகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களும், பொறியியல் மற்றும் மேலாண்மை போன்ற துறைகளில் தகுதி மற்றும் வசதி ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்ட நன்கு அறியப்பட்ட திட்டங்களை உருவாக்கியுள்ளன.


இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், பெரும்பாலான கல்வி உதவித்தொகைகள் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. மேலும், அவை இன்னும் ஒரு நிதிச் சுமையாகவே கருதப்படுகின்றன. கல்வி உதவித்தொகைகள், மாணவர்கள் நிதி காரணங்களுக்காக மட்டுமல்லாமல், கல்விச் சமூகம் மற்றும் வழிகாட்டுதலுக்காகவும் தாங்களாகவே விரும்பித் தேர்ந்தெடுக்கும் ஒரு பாதையாக மாற முடியுமா என்பதே வலுவான கேள்வியாகும்.


வரலாற்றிலிருந்து பாடங்கள்


இந்தியாவின் சொந்த வரலாறே உத்வேகத்தின் முதல் ஆதாரமாக இருக்கவேண்டும். பண்டைய உயர்கல்வி நிறுவனமான தக்ஷசீலாவில், மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த ஐந்து வழிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அவை முன்கூட்டியே செலுத்துதல்; ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது; பட்டப்படிப்பை முடித்து பின்னர் செலுத்துவதற்காக ஒத்திவைப்பது; சொந்தப் பகுதிகளிலிருந்து கல்வி உதவித்தொகை பெறுவது அல்லது பின்தங்கிய மாணவர்களுக்கான ஒரு தொண்டு சமூகத்தின் ஆதரவை நம்பியிருப்பது. அதன் கொள்கை எளிமையானது. வசதியின்மைக்காகத் மாணவர்களின் திறமை நிராகரிக்கப்படக்கூடாது. மேலும், கல்வி நிறுவனங்கள் திறமையான மாணவர்களை ஆதரிப்பதற்கும் அவர்களை உள்ளடக்குவதற்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.


கல்வி உதவித்தொகைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு கல்வி உதவித்தொகை எதைக் குறிக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதே இந்தியாவுக்கு முன்னால் உள்ள வாய்ப்பாகும். ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுவதற்குப் பதிலாக, பல ஆண்டுகால ஒப்பந்தங்களாக வடிவமைக்கப்படும் கல்வி உதவித்தொகைகளை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம். அவை மாணவர்கள் தங்கள் கல்வியைத் திட்டமிடுவதில் அதிக நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் அளிக்கும். பின்தங்கிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கவனம் செலுத்தும் பிராந்திய அடிப்படையிலான கல்வி உதவித்தொகைகளை வடிவமைப்பதற்காக, கல்வி நிறுவனங்களின் இருப்பு மற்றும் மாணவர் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்யலாம். மேலும், தேசிய மற்றும் பிராந்தியத் தேவைகள் உள்ள பகுதிகளுடன் கல்வி உதவித்தொகைகளை இணைக்கும் திட்டத்திற்கென பிரத்யேகமான வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். மாணவர் பங்கேற்பு குறைவாகவும், அதே சமயம் அதற்கான தேவை அதிகமாகவும் உள்ள மாவட்டங்களில், இத்தகைய திட்டங்கள் அமைந்திருக்கலாம். இத்தகைய அணுகுமுறை மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவும். மேலும், இது மாணவர்களின் திறன்களையும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தவும் வழிவகுக்கும்.


பொதுக் கொள்கையும் ஒழுங்குமுறையும் இந்த மாற்றத்தை மெதுவாக ஆதரிக்க முடியும். அறக்கட்டளைகளுக்கான வரிச் சலுகைகள் அல்லது தனியார் அறக்கொடைகள் மூலமான ஈட்டும் நிதிகள் போன்ற ஊக்கத்தொகைகள், வளரவும் நிலைத்திருக்கவும் வடிவமைக்கப்பட்ட கல்வி உதவித்தொகைகளுக்கு நீண்டகால மூலதனத்தை ஈர்க்க முடியும். செயல்திறன் சார்ந்த கட்டமைப்புகள், தகுதி, தேவை மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்த விளைவுகளை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்க முடியும். இத்தகைய சிந்தனை எப்படி நிலைத்திருக்கும் என்பதற்கு இந்தியாவில் ஏற்கனவே ஆரம்பகால எடுத்துக்காட்டுகள் உள்ளன. அசோகா பல்கலைக்கழகம், கல்வி மாணவர் சேர்க்கையிலிருந்து தனித்து நிதியுதவியை மதிப்பிடுகிறது. இதில், மாணவரின் பணம் செலுத்தும் திறன் மாணவர் சேர்க்கை முடிவிலிருந்து தனியாக மதிப்பிடப்படும் ஒரு தேவை சார்ந்த செயல்முறையைப் பின்பற்றுகிறது. சுமார் 20% மாணவர்கள் 100% கல்வி உதவித்தொகை காரணமாக இலவசக் கல்வி பெறுகின்றனர். மேலும், ஏறக்குறைய பாதி மாணவர்கள் வலுவான கல்வித் தரத்தைப் பராமரிக்கும் அதேவேளையில், ஏதேனும் ஒரு வகையான நிதியுதவியைப் பெறுகின்றனர். இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (Indian School of Business (ISB)), ஆயுதப் படைகளில் இருந்து வருபவர்கள் மற்றும் வளர்ச்சித் துறைக்குத் திரும்புபவர்களுக்கான ஆதரவு உட்பட, தகுதி மற்றும் தேவையைப் பிரதிபலிக்கும் பிரிவுகளில் நன்கொடையாளர் ஆதரவுடனான கல்வி உதவித்தொகை அமைப்பை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) தனது திட்டங்கள் முழுவதும் 250 முதல் 280 வரையிலான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. குறிப்பாக, சமீபத்தில் தொடங்கப்பட்ட PGP-இளம் தலைவர்கள் திட்டத்தின் (PGP-Young Leaders programme) தொடக்கக் குழுவில் 40% பேர் கல்வி உதவித்தொகைகள் மூலம் ஆதரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு நிறுவனங்களிலும், உதவித்தொகைகள் ஒரு இரண்டாம் நிலை அம்சமாகக் கருதப்படுவதில்லை. அவை ஒரு வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்விச் சமூகத்தை உருவாக்குவதில் ஒரு மையப் பகுதியாகும்.


சர்வதேச அனுபவம் இந்தக் கருத்தை ஆதரிக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள பல்துறை கல்வி உதவித்தொகைத் திட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளூர் வளர்ச்சி முன்னுரிமைகளுடன் இணைந்த சீனாவின் மாகாண மற்றும் நகர அளவிலான கல்வி உதவித்தொகைகளாக இருந்தாலும் சரி, மிகவும் திறமையான அமைப்புகள் கல்வி உதவித்தொகைகளைத் தங்களின் கல்விப் பண்பாடுகளின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுகின்றன.


விளிம்பு நிலையிலிருந்து மையத்திற்கு


இந்தியா தனது உயர்கல்வி அமைப்பை இன்னும் விரிவுபடுத்திப் பன்முகப்படுத்த வேண்டும். இருப்பினும், விரிவாக்கம் மட்டுமே கற்றலையும் சமூக நகர்வையும் வலுப்படுத்தும் 50% மாணவர் சேர்க்கை விகிதத்தை அடையாது. திறமையான மாணவர்கள் எங்கிருந்து வந்தாலும், அவர்கள் ஆதரிக்கப்பட்டு, அவர்களின் பின்னணி அல்லது பூர்வீகத்தைப் பொருட்படுத்தாமல் வழங்குவதால் உண்மையான முன்னேற்றம் நிகழ்கிறது.


இது வெறும் நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதம் மட்டுமல்ல. இது ஒரு முழுமையான சூழலமைப்பை உருவாக்குவது பற்றியது. கல்வி உதவித்தொகைகள் சமத்துவம், தரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் முக்கிய புள்ளியாக அமைகின்றன. உயர்கல்வியில் யார்?, எத்தனை பேர் நுழைகிறார்கள்?, யார் தொடர்ந்து படிக்கிறார்கள்? என்பதில் அவை செல்வாக்கு செலுத்துகின்றன. கல்வி உதவித்தொகைகள் கல்வி வளாக வாழ்க்கையை (campus life) சமூக ரீதியாகவும் அறிவுசார் ரீதியாகவும் வடிவமைக்கின்றன. மேலும், ஒரு நாட்டின் திறமை எவ்வாறு கண்டறியப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது மற்றும் வளர்க்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம், அந்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் அவை பங்களிக்கின்றன.


நமது குறிக்கோள் வெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதும், தேசியத் திறனை வலுப்படுத்துவதும் நோக்கமாக இருந்தால், கல்வி உதவித்தொகைகள் உயர்கல்விக் கொள்கையின் விளிம்பிலிருந்து மையத்திற்கு நகர்த்தப்படத் தகுதியானவையாகும்.


பிரமத் ராஜ் சின்ஹா, டெல்லி-என்சிஆர்-ல் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுவின் தலைவர் ஆவார்.  

Original article : Making scholarships integral to India’s academic culture -Pramath Raj Sinha

Share:

நாரி சக்தி : அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியாவின் முக்கியச் சீர்திருத்தம் -சங்கீதா ரெட்டி

அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெண்கள் தேர்தல்ரீதியாக மட்டுமல்லாமல், நிறுவனரீதியாகவும் தலைமை தாங்குவதற்கு அவர்களைத் தயார்படுத்துவதில் இந்தியா முதலீடு செய்யவேண்டும்.


கடந்த பத்தாண்டுகளில், மிகச் சில நாடுகள் மட்டுமே பெரிய அளவில் சாதித்த ஒன்றை இந்தியா செய்துள்ளது. அது பெண்களின் அதிகாரமளித்தலை வெறும் ஒரு கருத்தாக்க நிலையிலிருந்து, ஒரு வலுவான உள்கட்டமைப்பு நிலைக்கு அமைப்புரீதியாக நகர்த்தியுள்ளது. இந்த மாற்றம் இயல்பாக நிகழ்ந்துவிடவில்லை. இது மிகக் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், முன்னேற்றம் அடையும்போது, ஒட்டுமொத்தப் பொருளாதாரங்களும் வேகமெடுக்கும் என்பதை உணர்ந்து, கொள்கைகள் பெண்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.


அதன் விளைவுகள் தெளிவாகவும், அளவிடக்கூடியதாகவும் உள்ளன. பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின்கீழ் 57 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 55%-க்கும் அதிகமானவை பெண்களின் வசம் உள்ளன. இது லட்சக்கணக்கான பெண்களுக்கு முறையான நிதி அமைப்பில் முதல் அடியை எடுத்துவைக்க உதவியுள்ளது. ஏறக்குறைய 10 கோடி பெண்கள், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களாக (self-help groups) ஒருங்கிணைந்து, தற்போது அடித்தளத்தில் தொழில்முனைவு மற்றும் உள்ளூர் பொருளாதார மீள்திறனை முன்னெடுத்துச் செல்கின்றனர். பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) 10.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்து, சுகாதார பாதிப்புகளைக் குறைத்து, அதிக நேரம் எடுக்கும் வேலையிலிருந்து பெண்களை இந்த திட்டம் விடுவித்துள்ளது. மேலும், கடன் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன்களில் ஏறக்குறைய 70% பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக இருந்துவந்த வீழ்ச்சியை மாற்றியமைத்து, பெண் தொழிலாளர்களின் பங்களிப்பும் கிட்டத்தட்ட 37% ஆக உயர்ந்துள்ளது.


சுகாதாரத் துறையில், தூய்மை இந்தியா (Ayushman Bharat) மற்றும் பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கம் (Pradhan Mantri Surakshit Matritva Abhiyan) போன்ற திட்டங்கள், வாழ்க்கையின் முக்கிய காலகட்டங்களில் அணுகலை விரிவுபடுத்தி, பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் குறைத்துள்ளன. பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao) திட்டம் போன்ற முன்னெடுப்புகள், சமூகத்தில் வலுவாக வேரூன்றிய மனப்பான்மைகளை மாற்றத் தொடங்கியுள்ளன.


தனித்தனியாகப் பார்க்கும்போது, இவை வலுவான திட்டங்கள் ஆகும். ஆனால், இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுபவர்களாக அல்லாமல், அவர்களுக்கான வளர்ச்சியை மேம்படுத்துபவர்களாக இந்தியாவின் பார்வையில் ஒரு கட்டமைப்பான மாற்றத்தைக் குறிக்கின்றன. கொள்கை வகுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இது ஒரு தெளிவான பாடத்தை வழங்குகிறது. இது வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை சீரமைக்கப்படும்போது, பெரிய அளவிலான திட்டங்கள் வெற்றிபெறுகின்றன.


ஆசிரியரின் நிபுணத்துவத் துறையான சுகாதாரத் துறையில், கோட்பாட்டு மாதிரிகளைச் சார்ந்து இல்லாமல், உண்மையான தேவைகளை மையமாகக் கொண்டு அமைப்புகள் கட்டமைக்கப்படும்போது விளைவுகள் மேம்படுகின்றன. இந்த திட்டத்திற்கான அணுகல் எளிமையாக்கப்பட்டு, செயல்பாடு சீராக இருந்து, விளைவுகள் கண்காணிக்கப்படும்போது, உண்மையான தாக்கம் ஏற்படுகிறது. இருப்பினும்கூட, அடுத்த கட்டத்திற்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படும். ஏனெனில், நமக்கு முன்னால் உள்ள சவால் இனி கொள்கை உருவாக்கம் அல்ல, கொள்கைகள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே ஆகும்


இறுதி கட்டம்


திட்டங்கள் பெரிய அளவில் இருந்தாலும், அதற்கான விழிப்புணர்வு குறைந்தளவே நீடிக்கின்றன. பலருக்கு இந்தத் திட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. மேலும், பிராந்தியங்கள் முழுவதும் இந்த திட்டத்திற்கான சேர்க்கையும் சீரற்றதாகவே உள்ளது. மேலும் இறுதிகட்ட செயல்பாடு உள்ளூர் திறனைச் சார்ந்தே தொடர்கிறது. வாய்ப்பைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும், அணுகல் இல்லாததால் பெண்களில் பலர் விளிம்புநிலையில் உள்ளனர். இங்குதான் வலுவான நிர்வாகத் தலைமை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்தியா திட்டங்களை அறிவிப்பதிலிருந்து முழுமையடைவதை உறுதி செய்வதற்கும், வெளியீடுகளை அளவிடுவதிலிருந்து விளைவுகளைக் கண்காணிப்பதற்கும், காகிதத்தில் உள்ள தகுதியிலிருந்து நடைமுறையில் உண்மையான அணுகலைப் பெறுவதற்கும் மாற வேண்டும். மாவட்ட அளவிலான உரிமை, தரவு சார்ந்த கண்காணிப்பு மற்றும் துறைகள் முழுவதும் ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமானதாக இருக்கும். மேலும், தொழில்நுட்பம் இதை விரைவுபடுத்த முடியும் என்றாலும், அது களத்தில் உள்ள பொறுப்புணர்வுக்கு மாற்றாக அமையாது. எனவே, ஒவ்வொரு கொள்கை வகுப்பாளருக்குமான கேள்வி எளிமையானது. இவை தகுதியுள்ள எந்தப் பெண்ணும் விடுபடாமல் இருப்பதை நாம் எப்படி உறுதி செய்வது?


இங்குதான் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) நமது காலத்தின் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாக மாறக்கூடும். சட்டமன்ற அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதன் மூலம், கொள்கை வடிவமைப்பை வாழ்க்கை அனுபவத்துடன் சீரமைப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்குகிறது. பெண் தலைவர்கள், சமூக யதார்த்தங்களால் வடிவமைக்கப்பட்ட தங்கள் நுண்ணறிவுகளைக் கொண்டு, திட்டங்களையும், அவற்றின் செயலாக்கம், இலக்கு நிர்ணயம் மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றையும் வலுப்படுத்த முடியும்.


கூடுதலாக, நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தை நோக்கத்துடன் செயல்படுத்தப்படும்போது, தலைமைப் பதவிகளில் அதிக பெண்கள், அதிகளவில் பதிலளிக்கக்கூடிய கொள்கைகள், அதிக பங்கேற்பு மற்றும் வலுவான தலைமைத்துவ வரிசைகள் ஆகியவற்றுடன் ஒரு அதிகப்படியான விளைவைத் தூண்ட முடியும். இது சீர்திருத்தத்தை தன்னைத்தானே வலுப்படுத்திக்கொள்ளும் ஒன்றாக மாற்றும்.


உலகளவில், அறிவு, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு பத்தாண்டில் நாம் நுழைகிறோம். உலக அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, technology, engineering, and mathematics (STEM)) கல்வியில் அதிக விகிதத்தில் பெண்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதால், இந்தியா ஏற்கனவே ஒரு வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இந்த முன்னேற்றத்தை, காலம் தாழ்த்தாமல் சுகாதாரம், அறிவியல், தொழில் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் தலைமைத்துவமாக மாற்றுவதற்கு இது ஒரு உகந்த தருணமாகும்.


நல்ல கொள்கை வடிவமைப்புடன் அரசியல் உறுதிப்பாடு இணையும்போது என்ன சாதிக்க முடியும் என்பதை கடந்த பத்தாண்டுகள் காட்டியுள்ளன. இன்று, இந்தியா ஒரு வலுவான அடித்தளத்துடன், நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், அதிகாரமளித்தலை அணுகல் என்ற நிலையையும் கடந்து, அது நிர்வாகம் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.


முன்னோக்கிய பாதை


பிரதிநிதித்துவம் மட்டும் போதாது, அது உண்மையான திறனுக்கு வழிவகுக்க வேண்டும். இந்தத் திறன், வலுவான நிறுவன ஆதரவின் மூலம் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான், இத்திட்டத்தைச் செயல்படுத்துவது உண்மையான பலன்களைத் தரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா பெண்களைத் தேர்தல்ரீதியாக மட்டுமல்லாமல், நிறுவன ரீதியாகவும் தலைமை தாங்குவதற்குத் தயார்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டும். இதன் பொருள், கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல், கொள்கை வெளிப்பாடு மற்றும் திறமையான நிர்வாகத்தை செயல்படுத்தும் நிர்வாக ஆதரவு அமைப்புகள் தேவை.


நாடு கொள்கைகளை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதையும் இது குறிக்கிறது. திட்டங்களை அணுகுவது எளிதாகவும், அவற்றை விரைவாகச் செயல்படுத்தவும் வேண்டும். தேவைக்கேற்ப கொள்கைகள் உருவாகும் வகையில் கருத்துப் பின்னூட்ட அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மேலும், எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பதை மட்டும் கொண்டு வெற்றியை அளவிடப்படாமல், பல்வேறு துறைகளில் ஏற்படும் உண்மையான விளைவு மாற்றங்களைக் கொண்டும் அதை அளவிட வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறும் தனது தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா நகரும்போது, இந்தப் பயணத்தில், இந்தப் பிரச்சினை இரண்டாம் பட்சமானதல்ல. இது வெற்றிக்கு மிகவும் முக்கியமானதும் மையமானதுமாகும். பெண்களின் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சி, சமூக நிலைத்தன்மை மற்றும் நிறுவன செயல்திறன் ஆகியவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.


இந்தியா அனைவருக்கும் முழுமையான அணுகலை உறுதிசெய்து, பங்களிப்பை வலுப்படுத்தி, தலைமைத்துவத்தை செயல்படுத்த முடிந்தால், அது தனது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சிப் பாதையையும் மறுவரையறை செய்யும். கொள்கை வகுப்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிக்கை தெளிவாக உள்ளது. செயல்படுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இதுவே சரியான நேரம்.


சங்கீதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநர் ஆவார்.

Original article :  Nari Shakti, India’s defining reform for the next decade -Sangita Reddy

Share: