மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்புகள் வெறும் உடனடி விளைவுகளோடு முடிந்துவிடாது. எஃகு, அலுமினியம், ஜவுளி மற்றும் மதுபானத் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய உற்பத்தியாளர்கள், சரக்குக் போக்குவரத்து செலவு அதிகரிப்பு, சரக்குகள் வந்து சேருவதில் ஏற்படும் தாமதம், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகப் பெரும் செயல்பாட்டுத் தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், உரங்களின் இறக்குமதி பாதிக்கப்படக்கூடும் என்பதால், இந்தியாவின் வேளாண் துறையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து இது குறித்துப் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், இதில் மிக முக்கியமான வேதியியல் தனிமமான கந்தகம் (Sulphur) மீது கவனம் செலுத்துவது அவசியமாகிறது. மேற்கு ஆசியா மோதல் என்பது வெறும் கச்சா எண்ணெய் சார்ந்தது மட்டுமல்ல; இது ஒரு மூலப்பொருள் தட்டுப்பாட்டை உருவாக்கி, இந்திய நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பாகவே பதினேழு வெவ்வேறு வேதியியல் உற்பத்திச் சங்கிலிகள் வழியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.
முக்கிய அம்சங்கள்:
1. கந்தகம் (Sulphur (S)) என்பது ஒரு உலோகமற்ற வேதிப்பொருள் ஆகும். இது மிகவும் மதிப்புமிக்கது மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது.
2. தங்கம், பிளாட்டினம் மற்றும் மந்த வாயுக்கள் (Noble Gases) ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்து தனிமங்களுடனும் கந்தகம் நேரடியாக வினைபுரிகிறது. இயற்கையில், கந்தகம் ஒரு மஞ்சள் நிறப் படிகத் திடப்பொருளாகக் (Yellow Crystalline Solid) காணப்படுகிறது. இது தூய தனிமமாகவோ அல்லது சல்பேட்டு (Sulphate) மற்றும் சல்பைடு (Sulphide) தாதுக்களாகவோ கிடைக்கிறது.
3. கந்தகம் என்பது இயற்கையில் தானாகவே கிடைக்கிறது, மேலும் இது பூமியின் மேலடுக்குகளில் மிக அதிக அளவில் காணப்படும் பதின்மூன்றாவது தனிமம் ஆகும். பெரும்பாலான கந்தகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியின்போது ஒரு துணைத் தயாரிப்பாகவே (By-product) பெறப்படுகிறது.
கந்தக விநியோகம்
1. 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி (Indian Minerals Yearbook 2023), ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே (Leh) மாவட்டத்தின் புகா பள்ளத்தாக்கில் (Puga Valley) இயற்கையான கந்தகப் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் படிவுகளில் கந்தகத்தின் தரம் 9% முதல் 24% வரை உள்ளதாகக் கூறப்படுகிறது.
2. வங்காள விரிகுடாவில் உள்ள பேரன் தீவிலிருந்தும் சிறிய அளவிலான இயற்கையான கந்தகப் படிவுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் மற்றும் குமாவுன் பிரிவுகளில் உள்ள சமோலி (Chamoli), ருத்ரபிரயாக் (Rudraprayag), உத்தரகாசி (Uttarkashi) போன்ற மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளுடன் கந்தகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
3. ஆந்திரப் பிரதேசத்தில், கிருஷ்ணா மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் களிமண் மற்றும் வண்டல் மண்ணுடன் கலந்த துகள்களாக இயற்கை கந்தகம் காணப்படுகிறது. இது தவிர, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலும், இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா (Kangra) மாவட்டத்திலும் கந்தகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
4. 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி, 2022-23-ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையேயான மொத்த கந்தகம் (Sulphur) உற்பத்தியில் ஒடிசா 25% பங்களிப்பை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா 20%, ஹரியானா 17%, குஜராத் 16%, மேற்கு வங்காளம் 9%, உத்தரப் பிரதேசம் 6%, மகாராஷ்டிரா 5% ஆகிய மாநிலங்கள் உள்ளன. மீதமுள்ள உற்பத்தி பீகார் மற்றும் அசாம் மாநிலங்களால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
5. இந்தியாவில் தனிம கந்தகத்தின் (Elemental Sulphur) உள்நாட்டு உற்பத்தியானது, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கும் துணைக் தயாரிப்புகள் மற்றும் உரங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் எரிபொருள் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து மட்டுமே கிடைக்கிறது.
கந்தகத்தின் பயன்பாடுகள் மற்றும் நுகர்வு
1. பல இரசாயனத் தொழிற்சாலைகளுக்கு ஒரு முக்கியமான மூலப்பொருளாக கந்தகம் பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக கந்தக அமிலம் (Sulphuric Acid (H2SO4)) தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. கந்தக அமிலம் (Sulphuric acid) என்பது ஒரு வலிமையான கனிம அமிலமாகும், இது அனைத்து செறிவுகளிலும் (Concentrations) தண்ணீரில் கரையக்கூடியதாயாகும். இது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது; தண்ணீரைத் தவிர உலகில் மற்றெந்த வேதிப்பொருளைவிடவும் இதுவே அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் முக்கியப் பயன்பாடுகளில் தாதுக்களைப் பதப்படுத்துதல், உர உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வேதியியல் தொகுப்பு (Chemical synthesis) ஆகியவை அடங்கும் என்கின்றனர்.
3. தாமிரம் (Copper), நிக்கல் (Nickel) மற்றும் கோபால்ட் (Cobalt) போன்ற உலோகங்களைப் பதப்படுத்துவதில் கந்தகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாடு எந்த அளவிற்கு இந்த அமிலத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறது என்பதை வைத்து அந்த நாட்டின் தொழில்முறை முன்னேற்றத்தை அறியலாம் என்கின்றனர். மேலும், இது பாஸ்பேட் உரங்கள் (Phosphatic Fertilizers) தயாரிப்பதில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
4. பதங்கமாதல் (sublimation) செயல்முறை மூலம் தயாரிக்கப்படும் கந்தகத் தூள், சுமார் 30% வரை உருவமற்ற கந்தகத்தைக் (amorphous sulphur) கொண்டிருக்கலாம் என்கின்றனர். இது பொதுவாக ரப்பர் உறுதிப்படுத்துதல் (Vulcanisation), வேளாண் துறையில் பூச்சிக்கொல்லித் தூளாக, மருந்துப் பொருட்கள் மற்றும் கால்நடைத் தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
5. கந்தகம், கந்தக விளக்குகள் (Sulphur Lamps) எனப்படும் சிறப்பு ஒளி சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்குகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. இவை நுண்ணலை கதிர்வீச்சினால் (Microwave Radiation) தூண்டப்பட்ட கந்தக பிளாஸ்மாவை (Sulphur Plasma) பயன்படுத்தி, சூரிய ஒளியைப் போன்ற முழு நிறமாலை ஒளியை (Full-spectrum light) உருவாக்குகின்றன.
6. கந்தகச் சேர்மங்கள் சலவைக்கலவைகள், பூஞ்சைக்கொல்லிகள், சாயங்கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி அடிப்படையிலான புகைப்படக்கலையில், சோடியம் மற்றும் அம்மோனியம் தையோ-சல்பேட் ஆகியவை “நிலைநிறுத்தும் காரணிகளாக” பயன்படுத்தப்படுகின்றன. கந்தகத்தை எரிப்பதன் மூலம் பெறப்படும் சல்பைட்டுகள், காகிதத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இவை உலர்ந்த பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழப் பொருட்களில் கெட்டுப்போகாமல் தடுக்கும் பாதுகாப்புப் பொருட்களாகவும் (preservatives) பயன்படுத்தப்படுகின்றன.
7. பயிர்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் மிகவும் அவசியமாகிறது. ஆனால், சிறந்த விளைச்சல் மற்றும் ஊட்டச்சத்தைப் பெற கந்தகம் சத்தும் மிக முக்கியமானதாகும். இது விதைகளில் உள்ள புரதம் மற்றும் எண்ணெய் அளவை மேம்படுத்துகிறது; தானியங்களை அரைப்பதற்கும் வேகவைப்பதற்கும் (Baking) ஏற்ற வகையில் அவற்றின் தரத்தை உயர்த்துகிறது. மேலும், தேங்காய் பருப்பின் (Copra) சந்தை மதிப்பையும், புகையிலையின் தரத்தையும் அதிகப்படுத்துகிறது. அத்துடன், கால்நடை தீவனங்களின் ஊட்டச்சத்து மதிப்பையும் மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
8. நடைபாதைகள், நடைமேடைகள் மற்றும் கட்டிட அடித்தளங்கள் அமைப்பதற்கு, வழக்கமான சிமெண்டிற்கு பதிலாக கந்தகம் சார்ந்த கான்கிரீட் ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக அமைகிறது.
தாமிரம் என்றால் என்ன?
1. தாமிரம் என்பது மிகவும் மென்மையானது, எளிதில் வளைந்து நீளும் தன்மையுடையது மற்றும் வெப்பத்தையும் மின்சாரத்தையும் மிகச்சிறப்பாகக் கடத்தக்கூடிய ஒரு உலோகமாகும். இயற்கையிலேயே நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய உலோக வடிவில் கிடைக்கும் ஒரு சில உலோகங்களில் இதுவும் ஒன்றாகும்.
2. இது பரந்த அளவிலான தொழில்துறைப் பயன்பாடுகளைக் கொண்ட ஒரு முக்கியமான இரும்பு சாரா (Non-Ferrous) உலோகமாகும். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் முதல் மின்சாரக் கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பாதுகாப்புத் துறை வரை நவீன பொருளாதாரத்திற்குத் தாமிரம் இன்றியமையாதது ஆகும். இதனால், இது பொருளாதார ஆரோக்கியத்தைக் அளவிடும் ஒரு அளவுகோலாக கருதப்படுகிறது.
3. தாமிரத்தின் விலை உயர்வு வலுவான பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியாகக் கருதப்படுகிறது, அதே சமயம் விலை வீழ்ச்சி பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளை எழுப்புகிறது.
4. 2022-ஆம் ஆண்டுக்கான இந்தியக் கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி (Indian Minerals Yearbook 2022), தாமிர தாது (Copper ore) உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் உள்நாட்டுத் தாது மற்றும் அதன் செறிவூட்டப்பட்ட பொருள்களின் உற்பத்தியோடு கூடுதலாக, உருக்கு ஆலைகளின் தேவைக்காக, இந்தியா செறிவூட்டப்பட்ட தாமிரா தாதுக்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வதாகக் கூறப்படுகிறது.
5. மேலும், இந்தியாவில் தாமிர தாது இருப்பு அதிகப்படியாக ராஜஸ்தான் மாநிலத்தில் (52.25%) உள்ளன. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (23.28%) மற்றும் ஜார்க்கண்ட் (15.14%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Original article : Understanding Sulphur: what it is and why it matters to the global economy? -Roshni Yadav