இந்தியாவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம், 2023-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam (NSVA)) எனப்படும் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தோடு தொடங்கிவிடவில்லை. இது இந்தியத் தேசியப் போராட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து நடந்துவருகிறது. 1931-ஆம் ஆண்டில், பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகளைக் கோருவது என்பது, 'அரசியலில் முழுமையான சமத்துவம் வேண்டும்' என்ற பெண்களின் கோரிக்கைக்கு எதிராக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டனர். தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சலுகைகள் தேவையில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல், 1947-ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ரேணுகா ராய், சுதந்திரம் கிடைத்தவுடன் பெண்களுக்கான உரிமைகளும் சுதந்திரமும் உறுதிசெய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டாலும், இந்தியக் குடிமக்களாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படும் என்பதால், அப்போது அது தேவையற்ற ஒன்றாகவே கருதப்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவது தெளிவாகத் தெரிந்தது. 1951-ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பெண்களாக இருந்தனர். பல ஆண்டுகள் கடந்தும், 2024-ஆம் ஆண்டில்கூட இந்த எண்ணிக்கை வெறும் 14 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
இதன் விளைவாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது கொள்கை விவாதங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. 1971-ஆம் ஆண்டு கல்வி மற்றும் சமூக நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, புல்ரேணு குஹா தலைமையிலான இந்தியப் பெண்களின் நிலை குறித்த குழு (Committee on the Status of Women in India), பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நிலையை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டது. இக்குழு 1974-ஆம் ஆண்டில் சமர்ப்பித்த 'சமத்துவத்தை நோக்கி' (Towards Equality) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை, குறைந்து வரும் பாலின விகிதம், நலிவடைந்த கல்வி மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை வெளிக்காட்டியது. இது பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், அது மாநிலங்களவையில் தோல்வியடைந்ததாகவும், பின்னர் 1992 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில், 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக இன்று 14.5 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க 1996, 1998, 1999 மற்றும் 2008-ஆகிய ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2023-ஆம் ஆண்டில், சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (NSVA) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தியதா? என்ற கேள்விக்கு, 'இல்லை' என்றே புள்ளிவிவரங்கள் பதில் கூறுகின்றன. அரசியல் கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தாலும், அதன் உண்மையான நோக்கத்தை அவை பின்பற்றவில்லை என்று விமர்சிக்கின்றனர். இதற்கு அடுத்ததாக கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தல்களில், மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களில் 14.4 சதவீதம் பேரும், தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களில் 11.8 சதவீதம் பேரும் மட்டுமே பெண்களாக இருந்தனர். சுமார் 27.6 சதவீதத் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே போட்டியிடவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் உள்ள மொத்தம் 4,666 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 464 பேர் மட்டுமே பெண்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms (ADR)) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
140 தொகுதிகளைக் கொண்ட கேரளா மாநிலத்தின் இந்த தேர்தல்களில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - 12 பெண் வேட்பாளர்களையும், இந்தியத் தேசிய காங்கிரஸ் - ஒன்பது பேரையும், பாரதிய ஜனதா கட்சி - 14 பேரையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி - ஐந்து பேரையும் களம் இறக்கியுள்ளன. இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி முதன்முறையாக இரண்டு இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது 291 வேட்பாளர்களில் 52 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம், தான் போட்டியிடும் 164 இடங்களில் 18 இடங்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தனது 167 இடங்களில் 20 இடங்களையும் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
2023-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இருப்பினும், 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பே இது கொண்டு வரப்பட்டதால், அதனை நடைமுறைபடுத்துவதற்கான காலம் குறித்துப் பலத்த சந்தேகங்கள் எழுந்தன. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இருந்துதான் நடைமுறைக்கு வரும் என்பதால், பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் இணைப்பதில் உள்ள சிக்கல்களையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ஏனெனில், பல தாமதங்களுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, 2029-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகத் தொகுதி மறுவரையறை பணிகளை முடிப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக உயர்த்தவும், அதேபோல் மாநிலச் சட்டமன்ற இடங்களை விரிவுபடுத்தவும் அரசு இப்போது பரிந்துரை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
நிதிநிலை கூட்டத்தொடரை நீட்டிக்கும் முடிவு, அதன் காலநேரம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. முக்கிய சட்டங்களைக் கொண்டுவரும்போது வழக்கமாக நடப்பதைப் போலவே, இப்போதும் எதிர்க்கட்சிகளுடன் முறையான ஆலோசனை நடத்தப்படவில்லை என்கின்றனர். அரசியல் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மட்டுமே தொடர்பு கொள்ளப்பட்டது. தற்போதும் கூட, பெரும்பாலான தகவல்கள் ரகசியத் தகவல்கள் அல்லது ஊடகக் கசிவுகள் மூலமாகவே வெளிவருகின்றன. எனவே, இந்தியத் தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (INDIA bloc), அரசாங்கத்தின் திட்டம் என்ன மற்றும் திருத்தப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரியுள்ளது. இருப்பினும், அரசாங்கம் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. மாறாக, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்குச் சற்று முன்பாகவும், தேர்தல் நடந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இந்தச் சட்டத்தின் மீதான விவாதம் நடைபெறும் என்றும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் ரகசியத் தகவல்கள் மூலம் அறிவித்துள்ளது.
மற்றவர்களுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் பாரதிய ஜனதா கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்பதை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. இந்தத் திட்டத்தின் நோக்கம் மற்றும் அது கொண்டு வரப்பட்ட நேரம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினால், எதிர்க்கட்சிகள் 'பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்' என்ற ஒரு பிம்பத்தை பாஜக உருவாக்கிவிடும் என்றும் மாறாக, அவர்கள் இதற்கு உடன்பட்டால், அவர்கள் பணிந்து போவது போலத் தோன்றும் என்கிற சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது
இரு தரப்பினரும் இதை நினைவில் கொள்ள வேண்டும்: இந்திய நாட்டுப் பெண்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடஒதுக்கீடு சட்டத்தை ஆதரித்தோம். இந்தச் சட்டத்தைத் திருத்தம் செய்ததற்கான முழுப் பெருமையையும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்கள் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பது என்பது நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு வாக்குறுதி என்பதை நாட்டின் பெண்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பிரியங்கா சதுர்வேதி, மாநிலங்களவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தற்போது சிவசேனா கட்சியில் உள்ளார்.
Original article : The Women’s Reservation Bill has a backstory and an arduous journey -Priyanka Chaturvedi